in ,

ஏழு சகோதரர்கள் (சிறுகதை) – ✍ முத்துச்செல்வன், ஆலமரத்துப்பட்டி, முசிறி, திருச்சி

ஏழு சகோதரர்கள்
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 1)

முன்னாள் வீரர்களான எங்களைப் பற்றி பேச என்ன இருக்கிறது. நீங்கள் தொடர்ந்து கட்டாயப்படுத்தியதால் தான் ‘பேசுவோமே’ என்று தோன்றியது

யூ.டியூப்’ல அவ்வளவு சம்பாத்தியம் உண்டா?  நீங்க சொல்லி தான் தெரியும். எப்படி எப்படி எல்லாம் காலம் மாறி கிடக்கு. ஏன் லைட்டை இப்படி முகத்தில் படும் படி திருப்புகிறீர்கள்… கண்கள் கூசுகின்றன

“பளிச்’னு டாகுமென்ட்ரி படத்தில் நீங்கள் தெரிய வேண்டும் அல்லவா?!”

என்னவோ சொல்றீங்க.. ஆனா எனக்கு காது மந்தம். மாவட்ட அளவில் நடந்த கபடி விளையாட்டின் போது கடுமையான போட்டியில் அடிபட்டு செவிடாகி விட்டது. அப்ப எனக்கு வயசு இருபத்தியாறு. மத்தவங்களுக்கு முன்ன தான் இருக்கும் பின்ன இருக்காது.

நாங்க ஏழு பேரும் உடன் பிறந்த சகோதரர்கள் இல்லை. விளையாட்டு ஆர்வத்துல ஒன்று சேர்ந்தோம். எல்லாரும் ஒரே ஊரு தான். அது ஒரு பசுமையான காலம். விளையாட விளையாடத் தான் எங்களுக்குள் மன நெருக்கம் அதிகப்பட்டது. எங்கே விளையாட்டு போட்டி நடந்தாலும் எங்கள் கபடி டீம் முதலில் போய் நிற்கும். விளையாட்டுன்னா அவ்வளவு உசிரு எங்களுக்கு.

ஊர் பேரை தான் முதலில் வைத்து விளையாடினோம். வெற்றிமாறன் தான் ‘எதுக்கு ஊர் பேரு’னு ‘ஏழு சகோதரர்கள் கபாடி குழு’ என்று வைத்தான். விளையாட விளையாட சுத்துபட்டு ஊருக்கெல்லாம் நாங்க ‘செவன் பிரதர்ஸ்’னு ஆகிப் போனோம்.

அம்பத்தொன்பது வயசாயிடுச்சு இப்ப. நான் தான் அந்த டீம்ல ரொம்ப சின்ன வயசுக்காரன். இரு… இரு… ஒவ்வொருத்தரை பத்தியும் சொல்றேன். ஒவ்வொருத்தரிடமும் ஏதோ ஓரு விஷயம் சொல்ல இருக்கத் தான் செய்கிறது.

ரொம்ப சாதாரணமா ஒரு ஆர்வத்துல ஆரம்பிச்சோம். எங்க ஈடுபாடு உழைப்பு சுத்தியுள்ள ஏழெட்டு மாவட்டங்களுக்கு பிரபலமானதா ஆக்கிடுச்சு.

எல்லாம் ஒரு காலகட்டம் தான். நடை போயி மாட்டு வண்டி வந்து அதுவும் போயி சைக்கிளு வந்து அப்புறம் பெட்ரோல்ல ‘சர்’னு போற வண்டினு என்னமா மாறிக் கிடக்கு. மனுசனுக்கு இன்னும் றெக்கை தான்யா முளைக்கனும்.

நாகேந்திரன் போட்டியில் ஜெயிக்கிற பணத்தை சேமிப்போம்னு திட்டம் போட்டுக் கொடுத்தான். வருசக் கணக்குல வெவ்வேறு போட்டிங்கள்ல விளையாண்டதில அது கொஞ்சம் அதிகமாகவே சேர ஆரம்பிச்சது. எங்க ஆரம்பிச்சு எப்படி முடிக்கிறதுன்னு எனக்கு தெரியாது. மனசுல பட்டதை ஞாபகத்துல இருக்கிறதை சொல்லிட்டு வரேன். ஒரு பிடிமானம் கிடைக்கும்.

நாகேந்திரனிடமிருந்து பேச ஆரம்பிப்போம். ரொம்ப வசதிக்காரன் எல்லாம் இல்லை, விவசாயம் தான். நெல்லு வாழை அப்படின்னு. விவசாயத்தை பார்க்காமல் வெட்டி விளையாட்டுன்னு சுத்தறானேன்னு அவன் அப்பனுக்கு கோபம்.

பத்தாவதுல வேற பெயிலாயிட்டான். விவசாயம் தான் இனி சோறு போடும். இரண்டு ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்து தான் விவசாயம் அவன் அப்பாரு பாத்தாரு. இழுத்துக்கோ பறிச்சுக்கோ அப்படின்னு தான் வருமானம். அப்படி இருக்கும் போது அதுலயும் ஈடுபடாம விளையாட்டு விளையாட்டுன்னு கிளம்பி விடுவான், கிளப்பியும் விட்டுடுவான். எதிர்க்க அவனோட அப்பா வந்துட்டாருன்னா தலை தெறிக்க ஓடிடுவோம்.

ரயில்வேயில விளையாட்டு கோட்டாவுல யாரோ சொன்னாங்கன்னு ஒரு கட்டத்துல அப்ளிகேஷன் போட்டான், செலக்ட் ஆகிட்டான். எல்லோருக்கும் ஆச்சரியமா ஆகிடுச்சு, அன்னையிலேர்ந்து அவனோட வாழ்க்கையே மாறிப் போயிடுச்சு. அவனோட அப்பாவுக்கு கண்ணுல தண்ணீரா கொட்டுது, ஆனந்த கண்ணீர். அதைக் கண்ணால பாத்த நாங்க ஒவ்வொருத்தரும் சும்மாயிருப்போமா? வெறி பிடிச்ச மாதிரி கபடியில் உழைப்பை கொட்டினோம்.

அப்ப ஏது டி.வி? எங்க ஊரில டி.வி யார்கிட்டேயும் இல்லையப்பா. இடையில ஏதாச்சும் குறுக்க கேட்டீங்கன்னா எனக்கு சொல்ல வந்த விஷயம் தடம் மாறி போயிடும். எங்கே விட்டேன்?

ஆங்.. ரயில்வே அணி சார்பா நாகேந்திரன் இந்திய அளவுல திறமையை காட்ட ஆரம்பிச்சான். பேப்பர்ல படிச்சு சந்தோஷப்பட்ட காலம். ஆசிய அளவுல  நடந்த போட்டியில் அணித் தலைவனாக வர வேண்டியவன். அரசியல், சாதி காய் நகர்த்தலில் வாய்ப்பு நழுவி விழுந்துடுச்சுன்னு சொல்லிகிட்டாங்க.

இப்பவும் ரயில்வே டீம்ல அவன் விளையாண்ட காட்சி எல்லாம் பசுமையா மனசுல இருக்கு. போட்டோ எல்லாம் இருக்கு. பேர பய புள்ள வரட்டும், எடுத்து காமிக்க சொல்றேன்.

பணம் சேர்த்தோம்’னு சொன்னோம்லியா, அதை வைச்சு டூரிங் சினிமா கொட்டகை ஆரம்பிக்கலாம்னு கொடியரசன் திட்டம் போட்டான். அணியில் உள்ள அனைவரும் பங்குதாரர்கள். பழைய படங்களும் புது படங்களுமாக அப்போதைய தேதிக்கு சுத்து பக்க ஊரு ஜனங்களுக்கு பொழுது போக்காக இருந்தது.

நல்ல மனுசன், அதுல வந்த வருமானத்தை வைச்சு தான் என் பிள்ளைங்களை படிக்க வைச்சு கண்ணாலமும் கட்டிக் கொடுத்தேன். வீளையாட்டு தான் ஒரு வகையில என்னை கரை சேர்த்தது.

கொடியரசன் நல்ல உயரம். ஆத்துல ஓடுற தண்ணியில எதிர்த்த திசையிலே வேகமாக ஓடி பயிற்சி எடுப்பான். அது அவ்வளவு எளிதான விஷயமில்லை. அகில இந்திய கபாடி போட்டியை நம்ம ஊருல வைக்கணும் நம்ம டீமும் விளையாடனும்னு மெனக்கெட்டான். அதுவும் அவ்வளவு எளிதான விஷயமில்லை.

காலமும் ஒருநாள் மாறுச்சு, அவன் நல்லா படிச்சான். காலேஜ் எலெக்சன்ல நின்னான், ஜெயிக்க வைச்சோம். நாங்க சில பேரு தொடக்க பள்ளியை கூட தாண்டவில்லை. அவன் காலேஜ் டீமை வைச்சு பல பேரோட கவனத்தை தன் பக்கம் திரும்ப வைச்சான்.

மாவட்ட கபடி கழக தலைவர்னு ஒருநாள் ஆர்ப்பாட்டமா வந்து நின்னான். ஊரே வாய் பிளந்து நின்னுச்சு. யார் யாரையோ பார்த்து முட்டி மோதி ‘அகில இந்திய கபாடி போட்டி’யை இந்த சின்ன கிராமத்துல நடத்தி காட்டினான்.

 ஒரு முறை இல்லை, இரண்டு முறை. மூணு நாட்கள் இந்தியாவின் பல மாநில அளவுல உள்ள டீமுங்க வந்து போட்டியில கலந்து விளையாடியது இந்த கிராமத்து வரலாற்றின் இன்பமான சில பக்கங்கள்.

வெவ்வேறு மாநிலத்து முகங்களை நடை உடை பாவனைகளை ஊரே வியப்பா பார்த்துச்சு. நெசவு விவசாயம்னு ஒரு கூட்டுக்குள்ளே மட்டுமே வாழ்க்கையை ஓட்டுகிற மக்கள்.  பரிசளிப்பு விழாவிற்கு முதல் வருசம் அப்ப பிரபலமாகியிருந்த கதாநாயக நடிகரையும் அதற்கு அடுத்த வருசம் பிரபல வில்லன் நடிகரையும் வரவழைச்சு பரிசு கொடுக்க வைச்சான்.

டெல்லி அணி, பஞ்சாப் அணி, என்று வந்த வரிசையில எங்க ‘செவன் பிரதர்ஸ் அணி’யும் கலந்து கட்டியது. ஆடுகளமே துள்ளி புரண்டுச்சுன்னு தான் சொல்லனும்.

கொடியரசன் இப்ப என்ன பண்றானா? பல வருசமா இந்த கிராமத்துக்கு பஞ்சாயத்து தலைவரா இருக்கான்..

டூரிங் கொட்டகையை வெற்றிமாறன் தான் பொறுப்பெடுத்து நடத்திக் காட்டினான். அந்த ‘விநாயகனே வினை தீர்ப்பவனே’ பாடல் கேட்டு தான் சாயங்கால பொழுதே சந்தோஷத்தோட நுழையும்னு கூட சொல்லலாம். இப்ப ஏதுய்யா அந்த ‘கல்ல மிட்டாய்…முறுக்கேய்ய்… குண்டு ச்சோடாய்ய்…’ எல்லாம். மாறிப் போயிடுச்சு.

பட இடைவேளையில பொழைப்பு நடத்தினவங்க ஏழெட்டு பேராவது இருப்பாங்க. விளையாடப் போனால் சொந்த பந்தங்கள் பாத்துக்கும். அப்புறம் வீட்டுக்கு வீடு டி.வின்னு தலைதூக்க ஆரம்பிச்சதும், எல்லாம் மாறிப் போயிடுச்சு.  

டூரிங் கொட்டகை பாழடைஞ்சு தான் கிடக்கு. அப்புறம் வெற்றிமாறன் அரசியலுக்கு போயிட்டான். போன முறை ஆளுங்கட்சியா இருந்த ஆட்சியில முக்கிய பொறுப்புக்கு வந்தான். டி.வி. பேப்பர்ல எல்லாம் அடிக்கடி செய்தியா வருவான், பார்த்திருப்பீங்களே.

அரசியல்வாதியா ஆகனும்னு திட்டம் போட்டு செயல்பட்டவங்க அப்படியெல்லாம் ஆகலை. நினைச்சதெல்லாம் நடந்துட்டா வாழ்றதுல என்ன சுவாரசியம் இருந்துடப் போகுது.

நாங்க சின்ன வயசுல படிச்ச பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு டிபார்ட்மெண்டுக்கும் ஒரு லீடர் போடுவாங்க… லீடரை ‘அமைச்சர்’னு பொறுப்பாத் தான் நாதன் சார் நியமிச்சாரு. மத்தியான சாப்பாட்டு பொறுப்பை எடுத்துக்கிறவன் உணவு அமைச்சர். பைப்படியை ஏத்துக்கிறவன் குடிநீர் அமைச்சர் இப்படின்னு இருக்கும். நியமிக்கிற முறை இருக்கே ரொம்ப கலகலப்பா இருக்கும்.

நான் விளையாட்டு துறை அமைச்சராக ஆகிறதுக்கு முன்மொழியறது வழிமொழியறது எல்லாம் சொன்னது குமரனும் ராஜலிங்கமும். இரண்டு நிமிஷம் கழிச்சு எனக்கு போட்டியாக நின்னவங்கள்ல இவனுங்க ரெண்டு பேரும் வந்து நிக்கிறானுங்க. ஒரே சிரிப்புதான்.

இத்தனை வருசங்கழிச்சு அந்த சின்ன வயசு கலாட்டா நேத்து நடந்த மாதிரி மனசுல இருக்கு. என்னை பொண்ணுங்க தான் ஜெயிக்க வைச்சதுங்க. ‘நான் விளையாட்டு துறை அமைச்சராக ஆனால் மைதானத்தை சுத்தப்படுத்தறது, புல் பூண்டு பிடுங்கிறது, கற்களை பொறுக்குவது’னு மட்டும் இருக்க விடமாட்டேன். பெண்கள் கபடி டீமை உருவாக்குவேன்’ அப்படின்னு ஒவ்வொருத்தர் கிட்டேயும் ரகசியமாக வாக்குறுதி கொடுத்திருந்தேன். அதுக்காகத்தான் ஜெயிக்க வைச்சதுங்க.

டவுசர் போட்டு திரிஞ்ச காலமது. சொன்ன மாதிரி பொண்ணுங்களை கபடி விளையாட வைச்சேன். அதிலே இருந்த நான்கு பெண்கள் மாவட்ட டீம் வரை பேரெடுத்து விளையாண்டாங்க. அப்புறம் கல்யாணம் காட்சின்னு வாழ்க்கை அவங்களை நகர்த்தி விட்டுடுச்சு.

சின்ன வயசுல வாக்குறுதி கொடுத்து ஜெயிச்சதால நாதன் சார் ‘நீ பெரிய அரசியல்வாதியா ஆகிடுவேடா’ என்றார். ஆனா காலம் என்னை ஆத்துல மீன் பிடிக்க வைச்சிடுச்சு.

மீன் பிடிக்கிறது பத்தி பேசும் போது ஒண்ணு ஞாபகத்துக்கு வருது. மீனை விதவிதமா வறுத்து ருசியாக்குறவன் ஆறுமுகச்சாமி. எங்க டீம் விளையாட போகிற ஊர்ல எல்லாம் பெருமையா பேச ஏதாச்சும் ஒரு விஷயத்தை செஞ்சு வைச்சிடுவான்.

மீன் வறுவல்ல அப்படி ஒரு ஊரையே திரும்பி பார்க்க வைச்சான். போற பக்கம் ஆறோ குளமோ வாய்க்காலோ கண்டிப்பா இருக்கும். கிடைக்கிற மீனை சுத்தபடுத்தி மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு அவ்வளவு தான். நெருப்புல வாட்டி சூடு ஆறி தின்னோம்னா அவன் கை பக்குவம் நாக்கை சுழட்டி போட்டுடும்.

மின்சார வாரியத்துல வேலை கிடைச்சு சேர்ந்த ஆறுமுகச்சாமி ‘ஜக ஜோதியா வாழ்வான்’னு நினைச்சோம். காலம் அது ஒரு கணக்கு போட்டு வைச்சுகிட்டு சுத்திக்கிட்டு இருக்கு சாமிகளா!  

ஒரு நாள் காலைல அவனை ஆத்துல யாரோ வெட்டி போட்டுட்டாங்கன்னு சொன்னாங்க. என்ன காரணம்னு இதுவரையிலும் தெரியாது. பல பத்து வருசம் ஓடிப் போயிடுச்சு. ஓடிப் போய் பார்த்து அதிர்ச்சியில உறைஞ்சு போயிட்டோம்.

அடிதடின்னு சர்வ சாதாரணமா இறங்கினது வினையாக போயிடுச்சா? எதுவும் தெரியலை. அடிக்கடி வம்பு தும்புக்குன்னு போறவன் தான். ஆனா அதுல ஒரு நியாயம் இருக்கும்.  ஒரு சமயம் தன்னை லேசா மோதிட்டான்னு ஒருத்தனை அடிக்கப் போயிட்டான். நல்ல போதை.

அப்போ சாராயக்கடைன்னு தான் பேரு. பாட்டில்ல வரும். ஒரு பாட்டிலை எதிரிகாரன் உடைச்சு ஆறுமுகச்சாமியின் நெஞ்சில கிழிச்சு விட்டுட்டான். இவன் அசராம சட்டையை கிழிச்சு கட்டு போட்டுகிட்டு ரோட்டுல இருந்து காரகட்டான் கோயிலு வரை ரத்தம் வழிய தெம்பா நடந்து வந்தான். அப்படிப்பட்டவன்.

தன்ராஜ் தான் ஆத்து மணல் மேல சத்தியமும் சபதமும் போட்டான். உன்னை வெட்டினவனை இதே ஆத்துல வெட்டுவேன்டா’ன்னு. ஆறமுகச்சாமியோட இழப்பை நாங்க கிரகிச்சு பழகிகிட்டாலும் தன்ராஜால அது முடியலை.

தன்ராஜ் பத்தி சொல்லனும்னா வேறொரு மாநிலத்துக்கு ஏழு சகோதரர்கள் கபடி டீமை ஒரு கட்டத்துல அழைச்சுட்டு போயி விளையாட வைச்சவன். அவனுக்கு ‘கபடி தன்ராஜ்’னே பேரு. அவனா பிரியமாக வச்சுகிட்டது தான்.

காதல் விஷயத்துல மாட்டிகிட்டு கடைசியில காதல் தோல்வி. எத்தனையோ முறை விளையாட்டுல தோத்து திரும்பியிருக்கோம். ஒருமுறை கூட சலனமோ கலக்கமோ பட்டதில்லை. அவனும் அப்படி தான். ஆனா காதல் அவனை குப்பற கவுத்துடுச்சு. தூக்கு போட்டுகிட்டு செத்துப் போயிட்டான்யா. சின்ன வயசுல நானும் அவனும் தான் பயங்கர தோஸ்த். அவனோட இழப்புல தான் எனக்கு மனசு சுக்கு நூறா உடைஞ்சது.

எங்க டீம்ல இருந்த வெங்கடாசலத்தோட தங்கச்சியை தான் தன்ராஜ் லவ் பண்ணினான். வெங்கடாசலத்துக்கு சம்மதம் தான். அவன் அப்பாவுக்கு தான் சம்மதமில்லை. பெரிய பிரச்சனையாயிடுச்சு. சாதி பிரச்னை தான். விளையாட்டுல ஏது தம்பி சாதி கருவேப்பிலை எல்லாம்.

வாழ்க்கையில தான் தன் கோரமுகத்தை காட்டுது. சகோதரர்கள்னு பேரை வைச்சுக்கிட்டு என்னடா வேலை பண்றீங்கன்னு சம்பந்தமில்லாம விதண்டாவாதம் பண்ணினார் வெங்கடாச்சலத்தோட அப்பா.. தன்ராஜ் படக்’னு ஒரு முடிவை எடுத்து போய் சேர்ந்துட்டான்.

வெங்கடாசலம் அதற்கு பிறகு எங்க டீம்ல சில வருசம் இல்லை. நான் தான் பேசி இழுத்துட்டு வந்தேன். ஆறுமுகச்சாமி தன்ராஜ் இடத்துக்கு ராஜலிங்கமும் குமாரும் வந்தாங்க. சுமாரா விளையாடுவானுங்க. பள்ளிக்காலத்து பழக்கம் கடைசி வரை எங்களுக்குள்ளே இருந்தது.

எங்கள்ல சிலபேரு இப்ப உயிரோட இல்லை. அவங்க ஆயுசு அவ்வளவு தான். இரண்டு பேரு ஊரைவிட்டு போயி பல வருசங்களாவுது. இங்க பிழைக்க வழி இல்லாமல் தான் அவங்களுக்கு கிடைச்ச பாதையில ஊரை விட்டு போயிட்டாங்க.

ஒருத்தரு படுத்த படுக்கையா கிடக்காரு. இது மட்டும் கூடாதுய்யா. படுக்கும்போதே பட்னு உயிர் பறந்துடனும். அது சிலருக்கு தான் வரமாக கிடைக்கும்.

ஆத்துல தண்ணீர் வராதப்ப அங்கங்கே ஊர் பசங்க அணி பிரிச்சு மணல் பறக்க விளையாடுவானுங்க. நாங்க எல்லாம் ஒரு கட்டத்தை தாண்டி வந்துட்ட பின்னே மத்தவங்களுக்கு கபடி மேலே இருந்த ஈர்ப்பு குறைஞ்சிட்ட மாதிரி உணர்ந்தேன்.

வெங்கடாசலத்தோட பையன்தான் மெனக்கெட்டு ஆர்வமா போட்டிகளை நடத்தி காட்டினான். ஊர்காரங்களும் ஆர்வமா வசூலுக்கு போனா பணம் தருவாங்க. நாலைஞ்சு வருசம் அப்படி நடந்துச்சு. அப்புறம் அவன் வேலை தேடி வெளியூர் போயிட்டான்.

கபடிக்குன்னே பேர் போன ஊர்ல சொல்லிக்கிற மாதிரி இன்னைக்கு எதுவுமில்லை. எடுத்து செய்ய ஆள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் துடிப்புள்ள இளம் ரத்தம் கொண்ட பையன்கள் கபடியை மேல் கொண்டு போயிகிட்டுதானிருக்காங்க.

  “உங்க அணி சகோதரர்கள் கபடியை வளர்க்க எதுவுமே செய்யலையா?”

காது மந்தம்னு சொன்னனே, கொஞ்சம் பலக்க பேசுங்க. வளர்க்கிறது என்ன தம்பி.. அதான் சொன்னேனே.. காலம் மாறிப்போயிடுச்சு. போட்டிங்க நடந்துகிட்டு தான் இருக்கு. அடுத்த வாரம் இந்த தலைமுறையை சேர்ந்த செவன் பிரதர்ஸ் அணி மாவட்ட அளவிலான கபாடி போட்டியை நடத்த இருக்குது. நிச்சயம் அதையும் கவர் பண்ணுங்க.

முப்பது வருசத்துக்கு முந்தி நாகேந்திரனும் நானும் ஆத்துல குளிச்சிட்டு வந்திட்டு இருந்த போது அடகு கடைக்காரர் பையன் கைக்கு அடக்கமா ஒரு பந்து அதை அடிக்க ஒரு மட்டையோடு எதிர்பட்டான்.

அவன் பக்கத்துல அப்பத்திய பம்பாயில இருந்து வந்த அவனோட மாமா. ‘கிரிக்கெட் விளையாட்டுண்ணே’ என்றான். அவங்க ரெண்டு பேரும் ஊர் பசங்களுக்கு கத்துக் கொடுக்க ஆரம்பிச்சாங்க. ஆத்துல தண்ணீ குறைஞ்சு மணல் மேடா இருந்தது. ஒரு பக்கம் கபடின்னா எதிர் பக்கம் கிரிக்கெட்னு மணல் பறக்க விளையாட்டு பயிற்சி நடக்கும்.

கபடியில ஏழுபேர் ஒருத்தரோடு ஒருத்தர் கை கோத்துகிட்டு நீரலையா அங்கிட்டும் இங்கிட்டும் நகர்ந்து எதிரணி வீரனை பிடிக்க முயற்சிக்கிற அழகில் இருக்கிற நேசம், பிரியம், வேகம், துடிப்பு… அதை எல்லாம் அனுபவிச்சு பார்த்தாத்தான் தெரியும்.

ஒவ்வொருத்தரோட தனிபட்ட விருப்பங்களை பற்றி என்ன சொல்றது? பல பேரு மாறிப்போயிட்டாங்க.

இப்ப எங்கேயேனும் கபடி போட்டின்னு கேள்விப்பட்டால் சட்டையை மாட்டிகிட்டு கிளம்பிடுவேன். ஒரு ரசிகனா! நடுவராக இருக்க சில இடங்களில் கூப்பிடுவார்கள். காது கேட்காதது தான் பிரச்னை.

ஆனால் எங்க காலத்து வேகம் துடிப்பு ஆர்வம் எல்லாம் குறைஞ்சிட்ட மாதிரி தான் சில சமயம் தோன்றும்.

நீங்க வந்துருக்கீங்க… கபடி மேல இருக்கிற ஆர்வத்துல. என்ன ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கிறீங்க…ஒரு டாக்குமெண்ட்ரிக்கான விஷயமாத் தான் ‘கபடி’யை எடுத்துக்கிட்டீங்களா?

தலையாட்டுறீங்க, ஆமாம்னு எடுத்துக்கவா இல்லைன்னு எடுத்துக்கவா? டி.வி’ல.. சரி யூ.டியூப்ல இந்த டாக்குமெண்ட்ரி வரும் போது சேனல் மாத்தாமல் பொறுமையா பார்ப்பாங்களா?

என்னப்பா சிரிக்கிறீங்க? பெரும்பாலும் கிர்க்கெட்டுக்கு தான் மவுசு. மனசுல அதை ஏத்துக்கிறதில் என்ன தயக்கம். உண்மை பல வேளைகளில் சுடத்தான் செய்யும்.

இந்தா வராங்க பாருங்க என் தங்க கட்டிகள். கேட்டை திறந்துகிட்டு வரும் இந்த சின்ன பசங்க கூட ஜாலியாக விளையாடறதுண்டு. எங்க சின்ன வயசு ஆர்வத்தை இவங்க கண்களில் பார்க்குறேன்.

கண்டிப்பா கபடிக்குன்னு ஒரு வட்டம் இருக்குது. அதை சுடரா ஏத்திவிடத் தான் நீங்க நான் ஆர்வமுள்ள மத்தவங்கன்னு காலம் நிர்ணயம் பண்ணியிருக்கு.  அன்பு தொந்தரவு தான். வாங்களேன்… அவங்களோட கொஞ்ச நேரம் விளையாடுவோம். வாருங்கள்.

என்ன? நேரம் இல்லையா? அப்ப கிளம்பிட்டிங்களா?

அனைவருக்கும் நன்றி நண்பர்களே… சென்று வாருங்கள்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ad

      

        

#ad ‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஆகஸ்ட் 2021 போட்டி முடிவுகள் – ‘சஹானா’ இணைய இதழ்

    அம்புஜத்தின் ஜம்பம் (சிறுகதை) – ✍ ஆர். ஸ்ரீப்ரியா, சென்னை