in

இனியொரு விதி செய்வோம்… (சிறப்புச் சிறுகதை)

இனியொரு விதி செய்வோம்...(சிறுகதை)

“இட்லி வெச்சுக்கறீங்களா? இல்ல பூரி போடவா?” என சீதா கணவனிடம் கேட்க

“எதுக்கு ரெண்டு ஐட்டம் பண்ற? அதுவும் நைட் நேரம் பூரி எதுக்கு?” என்றார் கதிரவன்

“அது…” என தயங்கியவர், “அகிலனுக்கு இட்லி புடிக்காதுங்க… அதான்” என்று சீதா இழுக்க, மனைவியை முறைத்தார் கதிரவன்

“அவனுக்குன்னா மட்டும் ஸ்பெஷல், இதே நான் ஏதாச்சும் புடிக்கலைனு சொன்னா உங்க வொய்புக்கு மூக்குக்கு மேல கோவம் வரும்” என தந்தையின் கோபத்தை மேலும் தூண்டினாள், அவரின் செல்ல மகள் யாழினி

“யாழினி கண்ணா, என்னடா இது? அம்மாவை இப்படியா மரியாதை இல்லாம பேசறது” என செல்லமாக கடிந்து கொண்டார், கதிரவனின் தாய் மீனாட்சி

“அவ சொல்றதுல என்னம்மா தப்பிருக்கு? உங்க பேரன் என் பேச்சை மதிக்காததுக்கு காரணமே உங்க மருமக தான். இப்ப கூட பாருங்க, மணி ஒம்பதாச்சு, அஞ்சு மணிக்கு ஆபிஸ் முடிஞ்சுருக்கும், இன்னும் இவனக் காணோம் “என கதிரவன் கோபமாய் பேசவும்

“விடுப்பா, சின்ன வயசு தானே, நாளானா எல்லாம் சரியாயிடும்” என சமாதானம் செய்தார் கதிரவனின் தந்தை வேலாயுதம்

“போன் அடிச்சு எங்க இருக்கானு கேளு யாழினிம்மா” என்ற கதிரவனை இடைமறித்த சீதா

“இல்ல… அது… பிரெண்ட் யாருக்கோ பிரச்னைனு, லேட்டாகும்னு சொன்னான்” என தயக்கமாய் கூறியவளை முறைத்தவர்

“ஊர் சுத்தறதுக்கு இது ஒரு சாக்கு, இவன் என்ன கலெக்டரா, ஊர் பிரச்சனை எல்லாம் தீக்க போறானாமா? மொதல்ல போன் பண்ணி எங்க இருக்கான்னு கேளு” எனவும், வேறு வழியின்றி மகனுக்கு அழைத்தார் சீதா

சிறிது நேர காத்திருப்புக்கு பின், மகனின் குரல் கேட்க, “ஹலோ… அகில், எங்கப்பா இருக்க?”

“….”

“ஓ மெரினாகிட்ட டிராபிக் ஜாம் ஆயிடுச்சா? லைட் ஹவுஸ் வழியா வர்றியா? அங்க ஏதோ ரகளைனாங்களே, பேசாம ராதாகிருஷ்ணன் ரோடு வழியா வந்துட்டேன்”

“….”

“லஸ்’கிட்ட மறியலா? சரிப்பா, பார்த்து வா, வெக்கறேன்” என்றபடி

“அஞ்சு நிமிசத்துல வந்துருவான்” என்றாள் கணவனிடம்

“உன் மகன் என்ன ஹெலிகாப்டரலையா வரான், மெரினால இருந்து மயிலாப்பூருக்கு அஞ்சு நிமிசத்துல வர. அதுவும் இப்ப எங்க பாத்தாலும் டிராபிக் ஜாம் ச்சே…” என அலுத்துக் கொண்டார் கதிரவன்

அதன் பின் மௌனமாய் உணவு நேரம் முடிய, முன்னறையில் குழுமி தொலைக்காட்சி செய்திகளில் மூழ்கினர்

சற்று நேரத்தில், “ம்மா….” என்றபடி வீட்டினுள் நுழைந்தான் அகிலன்

“இவ்ளோ நேரம் எங்க ஊர் சுத்திட்டு வர்ற?” என கதிரவன் சண்டைக்கு தயாராக

“பசிக்குதுப்பா சாப்டுட்டு வந்து சொல்றேன் ” என்றவன், “பாட்டி தாத்தா சாப்டீங்களா?” என தன் பசியிலும் விசாரிக்கத் தவறவில்லை அகிலன்

“நாங்கெல்லாம் ஆச்சு ராஜா, நீ போய் சாப்பிடு” என்றனர் முதியவர்கள் இருவரும் வாஞ்சையாய்

“ஆமா, போய் நல்லா கொட்டிக்கோ. உங்கம்மா உனக்காக பூரி சுட்டு அடுக்கி வெச்சிருக்காங்க” என அண்ணனை கேலி செய்தாள் யாழினி

“எங்கம்மா அடுக்கி வெச்சாங்க சரி, நம்ம வீட்டு குண்டோதரி எனக்கு எதுனா மிச்சம் வெச்சுருக்கா?” என அகிலன் அவளை வம்பு செய்ய

“பாருங்கப்பா” என வழக்கம் போல் தந்தையிடம் சிணுங்கினாள் யாழினி

கதிரவன் ஏதோ சொல்ல வாயெடுக்க, “அகில் கண்ணா” என்ற அன்னையின் அழைப்பில், தப்பித்து உள்ளே சென்றான்

அடுத்த இருபதாவது நிமிடம், முன்னறையில் வந்து அமர்ந்தான் அகிலன்

தன் வீட்டினரிடம் பேச வேண்டியதை ஒரு கணம் ஒத்திகை பார்த்தவன், முதலில் தொலைக்காட்சியை நிறுத்தினான்

அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல், எல்லாரின் பார்வையின் அவன் மீது படிந்தது, கதிரவனின் முறைப்பும் கூட சேர்ந்தது

“உங்க எல்லார்கிட்டயும் நான் ஒரு விஷயம் பேசணும்” என்றவன்

“அம்மா நீயும் வா” என சமையல் அறையில் இருந்த அன்னையை அழைத்தான்

“டேய் அண்ணா, என்ன விஷயம்? யாரையாச்சும் லவ் பண்றியா?” என யாழினி சிரித்தபடி கேட்க

“யாழினி…” என சீதா முறைக்க

“அதெல்லாம் இல்ல” என சிரித்த அகிலன், “நான் நாளைல இருந்து ஆபிஸ் போகப் போறதில்ல” என அதிரடியாய் கூறினான்

“என்னது?” என அதிர்ச்சி குரல்கள் எதிரொலித்தன

“வேலைய விட்டுட்டு மாடு மேய்க்க போறியா?” என கதிரவன் கோபமாய் கேட்க

“கிட்டத்தட்ட அதான்” என்றான் அகிலன், தன் தந்தையின் முறைப்பை பொருட்படுத்தாமல்

“கண்ணா, நீ சொல்றது எங்களுக்கு புரியலப்பா” என்றார் தாத்தா வேலாயுதம்

“தாத்தா, மூணு வருஷம் முன்னாடி 2017ல பிரெண்ட்ஸ் கூட சேந்து ஜல்லிக்கட்டு போராட்டத்துல கலந்துகிட்டப்ப, மனசுல விழுந்த பொறி இது. அந்த சமயத்துல, விவசாய குடும்பத்தை சேர்ந்த என் தலைமுறை இளைஞர்கள் நிறைய பேரை சந்திக்கற வாய்ப்பு கிடைச்சது, நிறைய விஷயங்களை ஷேர் பண்ணிக்கிட்டோம். அப்பத்தான் எனக்கு தோணுச்சு, ஜல்லிக்கட்டு நடக்கறது மட்டுமே நம்ம பரம்பரியத்த காப்பாத்திடாதுனு. ஜல்லிக்கட்டும் முக்கியம் தான், ஆனா அதையும் தாண்டி ஏதாச்சும் செய்யணும்னு  மனசுல பட்டுச்சு

ஆனா, அப்ப நினைச்சதை செயல்படுத்தக் கூடிய சூழ்நிலைல நான் இல்ல. ஏன்னா அப்போ  நான் வேலைக்கு சேந்து ரெண்டு  வருஷம் தான் ஆகி இருந்தது. அப்போதைய என்னோட சேமிப்பை  வெச்சு பெருசா எதையும் செய்ய முடிஞ்சுருக்காது. அதுக்கப்புறம் நான் போன ரெண்டு வருஷ அமெரிக்க ப்ரோஜெக்ட் கூட இந்த காரணத்துக்காகத் தான்.  இந்த சேமிப்பை வெச்சு, எங்க இலட்சியத்தை அடைய முடியும்னு நம்பறேன்”

“மாடு மேய்க்கறது தான் உன்னோட லட்சியமா?” என கோபத்துடன் வினவிய தந்தையை இடைமறித்தவன்

“ப்ளீஸ்ப்பா, நான் சொல்லி முடிச்சுடறேன்” என்றவன்

“விவசாயம்’ன்னா என்னனு என் பேரனோட தலைமுறைக்கு மியூசியத்துல தான் காட்டணுமோனு பயமா இருக்கு. நாமளே நம்ம பாரம்பரியத்த அழிச்சுடக்கூடாதுனு தோணுது

அதான், இந்த போராட்டத்துல கலந்துக்கிட்ட ஐ.டி இளைஞர்கள் நாங்க நூறு பேர் சேந்து, நம்ம சொந்த ஊரான திருவள்ளூர்ல, கோ-ஆபரேட்டிவ் பார்மிங் முறைல விவசாயம் செய்யலாம்னு இருக்கோம்”

 “அதென்ன கோ-ஆபரேட்டிவ் பார்மிங்?” என யாழினி கேள்வியாய் நிறுத்த

“எல்லாரும் அவங்கவங்க சக்திக்கு தகுந்த மாதிரி இன்வெஸ்ட் பண்ணி, ஒரே இடத்துல எல்லாரும் சேந்து இடம் வாங்கி, ஒண்ணா சேந்து விவசாயம் பண்றது தான் கோ-ஆபரேட்டிவ் பார்மிங். லாபத்த அவங்கவங்க இன்வெஸ்ட் பண்ணின அளவுல பிரிச்சுக்கறதுனு பிளான். இப்படி கூட்டா விவசாயம் பண்றதால, நிறைய நன்மைகள் இருக்கு.

ஒண்ணா விதை, இயற்கை உரம், மற்ற மூலப் பொருட்கள நிறைய வாங்கறப்ப கம்மி விலைல வாங்க முடியும். இதனால லாபமும் அதிகரிக்கும். அது மட்டுமில்லாம, தனி அங்காடி போல ஆரம்பிச்சு, நாங்க  நிரணயிக்கற விலைக்கு விக்கவும் முடியும்

அதோட நாங்க இயற்கை முறைல விவசாயம் பண்ணலாம்னு இருக்கோம். அதுல, ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டப்பட்டாலும், பின்னாடி நல்ல லாபம் வரும். கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போல நாடுகள்ல இது போல ஆரம்பிச்சு நல்லா செஞ்சுட்டு இருக்காங்க, நம்ம நாட்ல இன்னும் அதிகம் இல்ல” என்றவன், தங்கையிடமிருந்து பார்வையை மீட்டு தந்தையை பார்த்தவன்

“உங்க ஆசிர்வாதத்தோட இதை செய்யணும்னு நினைக்கிறேன்’ப்பா, உங்கள மீறி போய் நான் செஞ்சதா இருக்க வேண்டாம் ப்ளீஸ்” என கெஞ்சுதலாய் மகன் பார்க்க

அவன் சொன்னதே காதில் விழாதவர் போல், “உன் புள்ளைய ஒரு நல்ல டாக்டர்கிட்ட கூட்டிட்டு போ சீதா, பைத்தியம் புடிச்சுடுச்சுனு நெனைக்கறேன்” என கதிரவன் கோபமாய் கத்த, செய்வதறியாமல் விழித்தாள் சீதா

“கதிர், கொஞ்சம் பொறுமையா இருப்பா” என சமாதானம் செய்தார் அவர் தாய் மீனாட்சி

“எப்படிம்மா பொறுமையா இருக்கச் சொல்ற? திருவள்ளூர்ல இருந்து முதல் தலைமுறை பட்டதாரியா கஷ்டப்பட்டு படிச்சு, இன்னைக்கி நூறு பேர் வேலை செய்யற இந்த பவுண்டரிய உருவாக்கி இருக்கேன். மைலாப்பூர்ல நாலு கிரவுண்டு இடத்துல வீடு கட்டி, இவங்க ரெண்டு பேரையும் படிக்க வெச்சு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்திருக்கேன். இவன் அதே திருவள்ளூர்ல மாடு மேய்க்கறதுக்கா நான் இத்தனை கஷ்டப்பட்டேன்?”

“மாடு மேய்க்கறது மாடு மேய்க்கறதுனு ஏன்ப்பா அதை கேவலம் மாதிரி சொல்றீங்க?” என கோபமாய் கேட்டான் அகிலன்

“இங்க பாரு… இந்த பேச்ச இதோட விட்ரு. போய் ஒழுங்கா வேலையப் பாரு. உனக்கு இந்த வருஷம் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன், மாடு மேய்க்கறவனுக்கு எவனும் பொண்ணு தர மாட்டான்”

“இல்லப்பா, என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல” என, உன் பிள்ளை உனக்கு சளைத்தவனல்ல என அகிலனும் பிடிவாதமாய் நின்றான்

“அப்ப இனிமே என் மூஞ்சில முழிக்காத” என கதிரவன் எழுந்து உள்ள செல்ல கிளம்ப

“கதிரவா… ஒரு நிமிஷம் உக்காருப்பா. நான் பேசணும்” என அவர் தந்தை வேலாயுதம் கூற, விருப்பமின்றி அமர்ந்தார் கதிரவன்

“கதிர், உனக்கு ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன். முப்பது வருசத்துக்கு முன்னாடி இன்னைக்கி அகிலன் மாதிரி தான் நீயும் என்கிட்ட ஒரு முடிவோட வந்து நின்ன…”

“அப்பா… “, என கதிரவன் இடைமறிக்க

“நான் பேசி முடிச்சுடறேன்” என்றவர் தொடர்ந்தார் வேலாயுதம்

“அப்ப நான் ஒரு விவசாயி. நீ இன்ஜினியரிங் முடிச்சுட்டு சென்னைல போய் பிசினஸ் செய்யணும்னு சொன்ன. அதுக்கு மூலதனம் வேணும், விவசாய நிலத்த விக்கணும்னப்ப, எனக்கு உசுரு போற மாதிரி தான் இருந்தது. ஆனா, என் ஒத்த புள்ளயோட சந்தோஷமும் லட்சியமும் தான் முக்கியம்னு பரம்பரை நிலத்த வித்துட்டு உன் பின்னாடி நானும் உங்கம்மாவும் வந்தோம்

இப்ப உன் புள்ள நீ தொலச்ச பாரம்பரியத்த தேடி போறேங்கறான், ஏம்ப்பா தடுக்கற? அதுவும் உன்னை மீறிப் போகாம, உன் ஆசிர்வாதத்தோட ஆரம்பிக்கணும்னு நினைக்கற புள்ளய நீ நோகடிக்கலாமா? முப்பது வருசத்துக்கு முன்னால நான் உன்னை தடுத்துருந்தா இன்னைக்கி நீ சந்தோசமா இருந்துருப்பியா?” என கேள்வியாய் நிறுத்த, வாயடைத்து நின்றார் கதிரவன்

எல்லோரின் பார்வையும் அவரையே நாடி இருக்க, ஒன்றும் பேசாமல் தன் அறைக்குள் சென்றார்

அகிலன் ஏமாற்றத்துடன் தன் தாத்தாவை பார்க்க, பொறுமையாய் இரு என்பது போல் கண்ணசைவில் உணர்த்தி எழுந்து சென்றார்

அன்றிரவு வீட்டில் யாரும் உறங்கவில்லை

காலை ஏழு மணிக்கு அறையை விட்டு வெளியே வந்த கதிரவன், தன் பிள்ளை இரவு இருந்த அதே இடத்தில் தூக்கமின்றி சிவந்த கண்களில் எதிர்பார்ப்பை தேக்கி “அப்பா…” எனவும்

“ஒரு நிமிஷம்…” என்றவர், “யாழினி, அம்மா தாத்தா பாட்டி எல்லாரையும் வரச் சொல்லு” என்றார்

அடுத்த ஐந்து நிமிடத்தில் எல்லாரும் முன்னறயில் குழும, “அகில், இந்தா?” என அவன் பெயருக்கு இருபத்தி ஐந்து லட்ச ரூபாய்க்கு, ஒரு காசோலையை நீட்டினார்

“அப்பா… இது?” என அவன் விழிக்க

“என்னையும் உங்க கோ-ஆபரேட்டிவ் பார்மிங்ல ஒரு பார்ட்னரா சேர்த்துக்க மாட்டீங்களா?” என சிரிப்புடன் கேட்டார் கதிரவன்

கண்ணில் நீர் கோர்க்க,  “அப்பா…” என ஒரே எட்டில் தந்தையை நெருங்கி, அணைத்துக் கொண்டான் அகிலன்

எப்போதும் கேலி பேசும் யாழினியின் கண்கள் கூட, அந்த காட்சியில் உணர்ச்சி மேலீட்டால் கசிந்தது

கண்ணில் நீருடன் காதலும் கசிய, தன் கணவனை மகிழ்வுடன் பார்த்தாள் சீதா. அந்த பார்வையை உணர்ந்தவராய், அதே பார்வையை பதிலாய் அளித்தார்

“அப்பா, இன்னொரு விஷயமும் நான் சொல்லணும்…” என்ற அகிலனை முடிக்க விடாமல்

“தெரியும் தெரியும்… லவ் மேட்டர் தானே? அண்ணி போட்டோ இருக்கா அண்ணா” என யாழினி ஆர்வமுடன் கேட்க

“ஏய் அவசர குடுக்க, மனுசன முழுசா பேச விடமாட்டியா? அதென்ன எப்ப பாத்தாலும்  லவ் மேட்டர் தானேங்கற? அதை விட்டா இந்த வயசுல வேற ஒண்ணுமில்லயா?” என அகிலன் கேலி செய்ய

“பின்ன, இந்த வயசுல லவ் பண்ணாம, நம்ம தாத்தா வயசுலயா லவ் பண்ணுவ?” என யாழினியும் வம்பு செய்ய

“அம்மா, எனக்கென்னமோ இது பக்கத்து இலை பாயசம் கதை மாதிரி தோணுது” என பெற்றவளிடம் தங்கையை கோர்த்து விட்டான் அகிலன்

“என்னது?” என சீதா அதிர்வுடன் மகளைப் பார்க்க

“ஐயோ அம்மா… அண்ணா சொல்றத நம்பாத. நான் பாட்டுக்கு நான் உண்டு என் காலேஜ் உண்டுனு இருக்கேன்” என்றவள்

“அண்ணா தெய்வமே, நான் இனி உன் வம்புக்கே வரல, ஆள விடு” என கும்பிடு போட்டாள் யாழினி

“அப்படி வா வழிக்கு” என செல்லமாய் தங்கையின் தலையில் கொட்டினான் அகிலன்

பிள்ளைகளின் செல்ல சண்டையை ரசித்த கதிரவன், “நீ ஏதோ விஷயம் சொல்லணும்னியே, என்ன அகில்?” என  வினவ

“அது… நாங்க நூறு பேரும் சேர்ந்து திருவள்ளூர்ல இயற்கை விவசாயம் மட்டுமில்லாம, ஒரு ஐ.டி கம்பெனியும் ஆரம்பிக்கப் போறோம். அந்த ஊர்ல இருக்கற படிச்ச இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர்றதோட, அதுல வர்ற வருமானத்தை வெச்சு, நல்லா படிக்கற வசதி இல்லாத பிள்ளைகளுக்கு கல்வி பெற  உதவியும் செய்யற எண்ணமிருக்கு” என்ற அகிலனை பெருமையுடன் பார்த்தார் கதிரவன்

“ஆனா இதெல்லாம் சினிமால வர்ற மாதிரி ஒரே பாட்டுல பணக்காரன் ஆகுற விஷயமில்லை. நிச்சயம் நிறைய தடைகளையும் கஷ்டங்களையும் நாங்க பாக்க வேண்டி இருக்கும்னு தெரியும். எல்லாத்துக்கும் தயாரா தான் நாங்க இதுல இறங்கறோம்” என நிதர்சனத்தை அகிலன் எடுத்துரைக்க

“எப்படியும் ஐ.டி’ல இருக்கத் தானே போற?  அப்ப  பேசாம இப்ப போயிட்டு இருக்கற வேலைய கண்டினியூ பண்ணிட்டே கூட்டு விவசாயம் பண்ணலாமே அண்ணா?” என யாழினி கேட்க

“அது கஷ்டம் யாழ், விவசாயம் நேரம் காலம் பாத்து செய்யற வேலை இல்ல. ஆனா ஐ.டி பீல்டுல டெட்லைன் மேல டெட்லைன் வரும்.  ரெண்டையும் ஒரே நேரத்துல செய்யறது கஷ்டம். அது ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் வெச்ச கதை ஆய்டும்” என தங்கைக்கு நிதர்சனத்தை எடுத்துரைத்தான் அகிலன்

“அப்போ, நீங்க ஐ.டி கம்பெனி ஆரம்பிச்சா மட்டும் எப்படிண்ணா சமாளிக்க முடியும்?”

“அது உடனே செய்யப் போறதில்லடா. கூட்டு விவசாயம் நல்லா ஸ்தாரமானதும், சரியான ஆட்களை மேற்பார்வைக்கு வெச்சுட்டு, அதுக்கப்புறம் ஐ.டி கம்பெனி ஆரம்பிக்கலாம்னு இருக்கோம்”

“எதுக்கு கண்ணா அத்தனை சிரமம்? ஐ.டி சரியான மனஅழுத்தம் தர்ற துறைனு சொல்றாங்களே?” என வேலாயுதம் பேரன் மேல் கொண்ட அக்கறையுடன் கூற

“தாத்தா, எல்லா துறைலையும் அது இருக்கு. அப்படி பாத்தா, விவசாயிக்கு இல்லாத மன அழுத்தமா? ஐ.டி துறை தப்புனு நாங்க இதை விட்டுட்டு போகல. இப்ப, இந்த மாற்றத்தை கொண்டு வர கொஞ்சம் அவகாசம் வேணும்னு ஒரு இடைவெளி எடுக்கறோம், அவ்ளோ தான்

எந்த துறையும் நல்ல துறை தான், நம்ம அணுகுமுறை (Attitude) சரியா இருந்தா, எந்த துறையிலயும் நம்மால சாதிக்க முடியும். இது சரியில்ல அது சரியில்லைனு குறை சொல்றதை விட்டுட்டு, அந்த குறையை சரி செய்ய நாம என்ன செய்யலாம்னு யோசிக்க ஆரம்பிச்சா போதும், நம்ம முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது”

“சந்தோஷம் ராஜா, ஆனா இதுல நிறைய ரிஸ்க் இருக்கு. நல்லா சம்பளம் வர்ற வேலைய விட்டுட்டு போறீங்க,  பாத்து செய்யணும்” என அன்னையாய் சீதா தன் பிள்ளைக்கு பத்திரம் கூறினார்

“நீ சொல்றது கரெக்ட் தாம்மா. ஆனா,  எதுல தான் ரிஸ்க் இல்ல, ரோட்ல நடந்து போறது கூட ரிஸ்க் தான், அதுக்காக வீட்லயேவா இருக்கோம். அது போல தான் விவசாயத்துலயும் ரிஸ்க் இருக்கு, அதனால தான் நாங்க தாத்தாவை போல முந்தின தலைமுறையை சேர்ந்த விவசாயிகளை கூட வெச்சுகிட்டு, அவங்க அனுபவ அறிவையும் எங்க தலைமுறை விவசாய பட்டதாரிகளின் புத்தக அறிவையும், எங்க நூறு பேரோட மூலதனத்தையும் சேர்த்து இந்த முயற்சியை முன்னெடுக்கறோம்” என்ற அகிலனின் கூற்றில், தன் பிள்ளையின் தொலை நோக்கு பார்வையும், திட்டமிடலும் கண்டு வியந்து நின்றார் கதிரவன்

“தாத்தாவை எங்க காணோம்?” என யாழினி வினவ, எல்லோரும் தாத்தாவை தேடி அவரின் அறைக்குள் சென்றனர்

அங்கு அவர், தன் துணிகளை பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தார்

அதைக் கண்டு, “என்னப்பா பண்றீங்க? அதான் நான் உங்க பேரன் இஷ்டப்படி செய்ய ஒத்துக்கிட்டனே” என கதிரவன் பதற

“அட என்னடா நீ, கோவிச்சுட்டு பெட்டி கட்றேனு நெனச்சியா? நான் என் பேரன் கூட விவசாயம் செய்ய போறதுக்கு பெட்டி கட்டறேண்டா” என வேலாயுதம் பொக்கை வாய் சிரிப்புடன் கூற, வீடே  சிரிப்பால் நிறைந்தது

“நிஜமா சொல்றேன் கதிரவா, நீ கம்பெனி ஆரம்பிச்சு லட்ச லட்சமா சம்பாரிச்சப்ப விட, இப்பத்தாண்டா நீ என் புள்ளனு சொல்லிக்கறதுல பெருமைப்படறேன்” என தன் பேரனை தோளோடு அணைத்து நின்ற மகனை, பெருமையுடன் பார்த்தார் வேலாயுதம்

“உங்க அளவுக்கு எல்லாத்தையும் விட்டுட்டு என்னால என் பையன் பின்னாடி போக முடியாதுப்பா. எனக்கு அவ்ளோ பெரிய மனசெல்லாம் இல்ல, என்னால முடிஞ்சதை செய்யறேன். அதோட, நம்ம கம்பெனிய நம்பி நூறு குடும்பங்கள் இருக்கு, அதையும் யோசிக்கணுமே” என கதிரவன் கூற

“அச்சச்சோ…. என்னதிது? நம்ம வீடு விக்ரமன் படத்து கிளைமாக்ஸ் மாதிரி ஒரே அழுவாச்சியா இருக்கு. டேய் அண்ணா, போதும் எங்கப்பாவ விடு. நீ என்ன ஐஸ் வெச்சாலும் எப்பவும் அப்பாவுக்கு நான் தான் செல்லம், இல்லப்பா?” என தன் தமையனை ஒதுக்கிவிட்டு, சலுகையுடன் அப்பாவின் தோள் சாய்ந்தாள் அந்த வீட்டின் இளவரசி யாழினி

வழக்கம் போல் அவளின் குறும்புத்தனம், அந்த சூழ்நிலையின் இறுக்கத்தை குறைத்து, எல்லோரின் முகத்திலும் சிரிப்பை வரவழைத்தது

“ஏய் வாலு, நான் வீட்ல இருக்கமாட்டேனு ஓவரா ஆடாத. இங்க இருக்கற திருவள்ளூர், ரெண்டு மணி நேர ட்ரைவ் தான். வாரா வாரம் வந்துடுவேன், ஞாபகம் வெச்சுக்கோ” என செல்லமாய் மிரட்டிய அகிலன்

அவனே தொடர்ந்து, “பாருங்கப்பா…” என்ற யாழினி போல் சிணுங்கிக் காட்ட, அனைவரும் வாய்விட்டு சிரித்தனர். வீடே மகிழ்ச்சியில் திளைத்தது

அகிலனை போன்ற இளைஞர்கள் இருந்தால், வீடு மட்டுமல்ல, நாடே மகிழ்ச்சியில் திளைக்கும் என்பதில் ஐயமில்லை

இத்தகைய இளைஞர்கள், கதையில் மட்டுமல்ல, நிஜத்திலும் நம்மிடையே இருக்கத் தான் செய்கிறார்கள்.

“இனியொரு விதி செய்வோம், அதை எந்த நாளும் காப்போம்” என்ற பாரதியின் வரிக்கேற்பஇளைய சமுதாயத்தினர் நினைத்தால்எந்த மாற்றத்தையும் கொண்டு வர இயலும்

எல்லோருக்கும் இனிய சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள்!!!

ஜெய் ஹிந்த் !!!

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

குறுக்கெழுத்துப் புதிர் – ஆகஸ்ட் 2020

பிட்ஸ்பர்க், அமெரிக்கா (Pittsburgh, America) – பயணக்கட்டுரை