in ,

அல்வா நாட்கள் 😂(சிறுகதை) – ✍ இந்துமதி கணேஷ்

அல்வா நாட்கள் 😂
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 31)

ன்று காலையில் எழும் போதே அம்மா எதோ பரபரப்பாய் செய்து கொண்டிருப்பது போல தெரிந்தது எனக்கு. எதிர்த்த வரிசையில் இருக்கும் ஆச்சி வீட்டுக்கு போய் விட்டு அரைமணி நேரம் கழித்து வந்தாள் அம்மா

‘ஆஹா இன்னைக்கு எதோ சிறப்பான சம்பவம் நடக்க போறது உறுதி’ என்று நினைத்து கொண்டு அம்மாவிடம் போய், “எம்மா நீ ஆபீஸ் போலியா இன்னைக்கு, என்ன விசேஷம்?” என்றேன்.

“எடி நாளைக்கு தீபாவளி, நீ என்னடான்னா என்ன விசேஷம்ங்க. இந்த மட்டம் உங்க அப்பாவோட கேசரி வேண்டாம், அம்மா அல்வா செய்ய போறேன்” என்றாள்.

“சரிம்மா நல்ல வருமா?” என்றேன்

“கருநாக்கு துக்கிரி எதையாச்சும் சொல்லி வைக்காத, அதெல்லாம் ஒழுங்கா வரும். எதிர்த்த நெய் கடைக்கு போய் அரை லிட்டர் நெய் வாங்கிட்டு வா, டிபன் செஞ்சிட்டு நான் அல்வாவை ஆரம்பிக்க போறேன்” என்றாள் அம்மா

நானும் கடைக்கு போய் சமத்தாய் வாங்கி குடுத்தேன். ஆனாலும் எனக்கு மனதிற்குள் ஒரு ஏக்கம். ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு என் அப்பா செய்யும் கேசரி மிகவும் பிரபலம்

ஏன் என்றால் அதை நானும் அப்பாவும் மட்டுமே செய்வோம். என்ன தான் அம்மா ருசியான அல்வா கிண்டி தந்தாலும், நாங்கள் செய்யும் கேசரி போல வருமா?

அதை செய்யும் போது அப்பாவுக்கும் எனக்கும் ஏதோ மலையை நகர்த்தியது போன்ற பெருமையும் இன்ப பரபரப்பும் வந்து ஒட்டிக் கொள்ளும்.

டிவி பார்த்து கொண்டிருந்த அப்பாவிடம் போய்,“எப்பா நாம கேசரி  செய்யலையா? அம்மா தான் அல்வா செய்ய போறாளாம்” என்றேன் வருத்தமாய்.

“அட நீ வேற பாப்பா… இந்த மட்டம் தான் மொத செய்ய போறா. நம்ம ஹெல்ப் இல்லாம தனியா எல்லாம் செய்ய முடியாது, கரெக்டான நேரத்துல என்ட்ரி குடுத்து தூள் கிளப்பிறலாம் விடு” என்றார்

நானும் அப்பாவும் டிவியில் ஆழ்ந்து விட்டோம். கொஞ்ச நேரத்தில் அம்மாவுக்கு அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது

லீவு போட்டிருந்தாலும் அவசியம் போயாக வேண்டிய நிலைமை. அம்மாவுக்கு அப்படி ஒரு கடுப்பு. இன்னும் அல்வாவை தொடங்கவில்லை

‘ஒரு நாளும் கிழமையும் ஒரு வேலை வீட்டுக்காக செய்ய முடியுதா? எப்போ பாரு இவங்க பாடையே பாக்க வேண்டி இருக்கு. ஏன் ஏதாவது ஆம்பளைங்களை வச்சு செஞ்சு தொலைச்சா என்னவாம்?’ என்று வாய்க்குள்ளேயே முனகியவள்

“போயிட்டு வந்து செய்யுறேன்” என்று கிளம்பினாள்

எனக்கும் அப்பாவுக்கும் அப்படி ஓரு குஷி, “ஹை ஜாலி இன்னைக்கு நாம தான் அல்வா செய்ய போறோம்” என்று ஹை பை கொடுத்து கொண்டோம், அம்மாவுக்கு தெரியாமல்

‘இதுக முழியே சரி இல்லையே’ என்று அம்மா சரியாய் கண்டு பிடித்து

“நீங்க ரெண்டு பேரும் கேசரி மாதிரி அல்வாவை ஈஸியா செய்யலாம்னு நினைக்காதீங்க. சொதப்பி வைக்காதீங்க, நானே செஞ்சிப்பேன்” என்று போற போக்கில் சொல்லி விட்டு விரைந்தாள்

அம்மா அந்த பக்கம் கிளம்பின உடன் நாங்க ரெண்டு பேரும் அல்வாவை கிண்ட கிளம்பினோம்

“எப்பா அம்மா சொல்லுற மாதிரி கொஞ்சம் கஷ்டமோ? பேசாம விட்ரலாமா?” என்றேன் நான்

“நோ நோ உங்க அம்மா பேரு வாங்கிக்கிறதுக்காக சும்மா அப்படி சொல்லுறா. என்ன பெரிய இந்த கோதுமை பாலை அப்படியே கிண்டனும், சர்க்கரை நெய் விடணும், அம்புட்டு தான். நீ கவலை படாத பாப்பா, நம்ம தான் செய்யுறோம்” என்று தீர்மானமாய் சொன்னார் அப்பா

முதலில் எதில் செய்வது என்று தீர்மானம் எடுத்தோம். அம்மாவின் ஆஸ்தான இருப்புச்சட்டியை (வடைச்சட்டி) எடுத்து, அதில் கோதுமை பாலை ஊத்தி அடுப்பில் வைத்தோம்

அந்த சட்டியை தேர்ந்தெடுத்தற்காய் நாங்கள் பின்னாளில் வருந்த போவது தெரியாமல் ஆரம்பித்தோம்.

மேற்படி சம்பவம் நடக்கும் போது, நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்

90களில் கம்ப்யூட்டர் என்பதே எங்களுக்கு ஒரு புத்தகத்தில் மட்டுமே தெரிந்த வார்த்தை. இப்போது போல அந்த நாட்களில் யூ.டியூப் எல்லாம் கிடையாது

தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது அல்லது புத்தகத்தில் கற்று கொள்வது, இது ரெண்டும் இல்லாமல் குருட்டு தைரியத்தில் ஆரம்பித்தோம். அப்பா தான் சீஃப் குக், நான் அசிஸ்டன்ட், தூய தமிழில் எடுபுடி

கொஞ்ச நேரத்தில் கட்டியாக ஆரம்பித்தது கோதுமை பால், “சரி இப்ப அதுல ஜீனிய போட்றலாம்” என்றார் அப்பா

கூடவே கொஞ்சம் நெய்யை விட்டார் “சூப்பர்ப்பா கலக்குறீங்க….” என்று அப்பாவை உற்சாகப்படுத்தினேன்

கிண்டி கொண்டே இருந்தோம், “எனக்கு பயங்கரமான சந்தேகம்ப்பா, லாலா கடைல எல்லாம் அல்வா பிரவுன் கலர்லலா இருக்கும், நம்ம அல்வா வெள்ளை கலர்ல இருக்கே” என்றேன்

“குட்! இந்த மாதிரி தான் கேள்வி கேக்கணும். அது ஒண்ணுமில்லை பாப்பா, கொஞ்சூண்டு கேசரி பவுடர் போட்டா போதும், அது அந்த கலர்ல வந்திரும்” என்றார் அப்பா

‘எங்கப்பாக்கு என்னா அறிவு?’ என்று வியந்து போய் பார்த்துக் கொண்டிருந்தேன்

அப்பா கொஞ்சம் கேசரி பொடியை, கூட கொஞ்சம் நெய்யை விட்ட உடன், பார்க்க நன்றாகவே இருந்தது

“இதுக்கு தான் அம்மா இம்புட்டு பில்டு அப் குடுத்தாளா?” என்று நான் கேட்டதும்

எங்க அப்பா ரொம்ப பீத்தலாய், “அவளுக்கே கல்யாணம் ஆன புதுசில் நான் தான் சமைக்க சொல்லி குடுத்தேனாம், பெருசா பேசுறா. இன்னைக்கு அவ முகத்தை எங்க கொண்டு போய் வைக்கிறான்னு பாக்குறேன்” என்றார்.

இதற்குள் நெய்யை விட்டு விட்டு அரை லிட்டர் நெய்யும் தீரும் அபாயத்தில் இருந்தது. ஆனால் அல்வா பதத்திற்கு வரவில்லை

“இன்னும் கொஞ்சம் நெய் தேவைப்படும் போல பாப்பா, போய் இன்னும் கால் லிட்டர் நெய் வாங்கி வா” என்றார் அப்பா. நானும் ஓடி போய் வாங்கி வந்தேன்.

இப்படி சில பல கால் லிட்டர்களை முழுங்கி கொண்டு, பதத்திற்கு வராமல் சண்டித்தனம் செய்தது அல்வா. ஓடி ஓடி போய் நெய் வாங்கியே களைத்து விட்டேன் நான்.

“முடிஞ்சுது இல்லையாப்பா?” என்று தீனமான குரலில் கேட்டேன். பின்ன ஒவ்வொரு முறை நெய் வாங்கவும் ரோடை கிராஸ் பண்ணி போய் வருவதற்குள் நாக்கு வெளியில் தள்ளியது, அந்த சின்ன ஊரில் அம்புட்டு வண்டிகள்

“முடிஞ்சிரும்ன்னு நினைக்கிறேன் பாப்பா, எனக்கு கூட கிண்டி கிண்டி கை வலிக்குது” என்றார் அப்பா

 “எப்பா ஒரு சேஞ்சுக்கு நீங்க போய் நெய் வாங்கிட்டு வாங்க, நான் அல்வாவை கிண்டுறேன்” என்றேன் நான். அப்பாவுக்கும் இந்த ஐடியா பிடித்திருந்தது

பாவம் அவரும் கிண்டி கிண்டி டய்ட் ஆகி விட்டார். ஆனால் மிகவும் தப்பான முடிவை எடுக்கிறோம் என்று அவருக்கு அப்போது புரிந்திருக்க நியாயம் இல்லை.

அப்பா நெய் வாங்க போனார். நான் முதலில் ஒழுங்காய் தான் கிண்டி கொண்டிருந்தேன். ஒரு கரண்டி நெய்யை கூட ஊத்தி கிண்டினேன்

திடீர் என்று எனக்கு ஒரு ஞானோதயம். ‘எதுக்கு குட்டியா அடுப்பை வைத்து விடிய விடிய கிண்டனும், பெருசா வச்சா டப்பு டிப்புன்னு முடிஞ்சிரும்ல. இந்த அப்பாக்கு இது கூட தெரியலை பாரேன்’னு மனதிற்குள் சொல்லி கொண்டு, அடுப்பை பெரிதாக்கினேன்.

கிண்டவே முடியாமல் கட்டியாகி கொண்டே போனது அல்வா. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பூரா நெய்யையும் கொட்டியாகி விட்டது, அப்பா சீக்கிரம் நெய்யோடு வந்தால் பரவாயில்லை, என்னால் கிண்டவே முடியவில்லை.

அப்போதாவது அடுப்பை குறைக்க தோன்றியதா என்றால், அது தான் காரணம் என்று புரியவே இல்லையே, நான் முழித்து கொண்டு கையை பிசைந்தபடி நின்ற போது அல்வா கொஞ்சம் கொஞ்சமாய் இறுக்கி கொண்டே வந்தது.

அப்பா கதவை திறக்கும் சத்தம் கேட்டதும் அவசரமாய் ஓடி, “அப்பா என்னமோ ஆகிட்டு சீக்கிரம் வாங்க” என்றேன்.

பதறி அடித்து நெய் கிண்ணத்துடன் ஓடி வந்து அல்வாவை பார்த்த அப்பா, அது தீய்ந்துவிடும் முன் அடுப்பை நிறுத்தினார்

ஆயிற்று அல்வா கிண்டும் படலம்

“ஜஸ்ட் எ மிஸ்ஸு என்னப்பா…. அல்வா தீஞ்சு போகாம தப்பிச்சிருச்சு” என்றேன்

ஆனால் என் முகத்தில் இருந்த மகிழ்ச்சி அப்பா முகத்தில் கிஞ்சித்தும் இல்லை.

“அல்வா தீஞ்சு போகல, ஆனா அது சட்டில இருந்து வருமான்னு தெரியலை” என்றார் அப்பா

அது கிண்ட பயன்படுத்திய அகப்பையை கூட அல்வாவில் இருந்து பிரிக்க முடியவில்லை எங்களால்.

சோகம் அப்பிய முகத்துடன் நானும் அப்பாவும் மறுபடியும் பட்டாசலில் அமர்ந்து டிவி பார்க்க தொடங்கினோம்

தன் வேலையை முடித்து கொண்டு வீடு திரும்பிய அம்மா, ‘இவங்க ரெண்டு பேரும் அமைதியவே உக்காந்திருக்க மாட்டாங்களே, நெய் வாசம் பயங்கரமா வருது, என்னமோ நடந்திருக்கு’ என்று வேகமாய் சமயலறைக்கு போய் பார்த்தாள்

பார்த்ததுமே தெரிந்து போனது. ‘ஆஹா அல்வாவை சொதப்பிட்டாங்களே’ என்று தலையில் கையை வைத்தாள்.

“போகும் போதே சொல்லிட்டு தானே போனேன். இது கேசரி மாதிரி இல்லை, நீங்க ரெண்டு பேரும் தலையிடாதீங்கன்னு. கேட்டிங்களா, இப்போ என்ன நடந்திருக்கு, ஒழுங்கா ரெண்டு பெரும் சட்டியில் இருந்து அல்வாவை எடுத்து தாங்க. எனக்கு வடை சுட அந்த சட்டி வேணும்” என்றாள் அம்மா இரக்கமே இல்லாமல்

‘லெட்ஸ் ஸ்டார்ட் தி மியூசிக்’ என்று நானும் அப்பாவும் சட்டியுடன் ஆஜர் ஆனோம்

முதலில் அப்பா பலாப்பழம் வெட்ட பயன்படுத்தும் பெரிய கத்தியை வைத்து ஓரத்தில் கீறி பார்த்தோம், ம்ஹும் துளி கூட வரவில்லை. அந்த கத்தி வளைந்தது தான் மிச்சம், அல்வா பெயரவில்லை

“அப்பா சூப்பர் ஐடியா, இந்த சட்டியை அப்படியே தூக்கி கீழ போட்டா அல்வா வெளில வந்திராது?” என்றேன் நான்

கொலைவெறியுடன் நின்று கொண்டிருந்த என் அம்மா, “சட்டிக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சு, உங்க ரெண்டு பேருக்கும் சோறே கிடையாது” என்று விட்டாள்

சரி அது வேணாம் என்று, கரண்டியை வைத்து அல்வாவை சுரண்ட ஆரம்பித்தோம் அது பொடி பொடியாய் உதிர்ந்து வந்தது

நாம் செய்ய பார்த்தது அல்வா தான் என்பதை மறந்து சுவாரஸ்யமாய் சுரண்டினோம். ஆனால் இந்த ரீதியில் சுரண்டினால் சட்டி காலியாக நாளை வரை ஆகும் என்று, அம்மா ஒரு அருமையான யோசனை சொன்னாள்.

“அல்வாவின் மேல் தேங்காய் கீரியை வைத்து, அதற்கு மேல் குழவிகல்லால் அடித்தால் பெயர்ந்து வரும்” என்றாள்

“ஆஹா இது நல்லா வேலை செய்யும் போல” என்று, அப்பா தலையில் துண்டை தலைப்பாகை போல கட்டிக் கொண்டு, குழவிகல்லும் அதுவுமாய் கிளம்பி விட்டார்

“இதெல்லாம் உங்களுக்கு தேவையா?” என்று என் அம்மா வாயை மூடிக் கொண்டு சிரித்தாள், இடைஇடையே வந்து சட்டி பத்திரம் என்று வேறு சொல்லிக் கொண்டாள்

ஒரு கட்டத்தில் அப்பா கடுப்பாகி, “நானுனக்கு வேற நல்ல சட்டி வாங்கி தரேன்மா, ப்ளீஸ் எங்களை விட்டுரு” என்றார் பாவம் போல

“நோ நோ எனக்கு அதே தான் வேணும். என்ன செஞ்சாலும் அதுல செஞ்சா தான் எனக்கு ஒரு திருப்தியா இருக்கும்” என்றாள் அம்மா

 “பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?” என்று கேட்டு நொந்து போய் கொத்த ஆராம்பித்தார் எங்கப்பா

இந்த கொத்தலின் + சுரண்டலின் பயனாய், அந்த சட்டியிலிருந்து அல்வா வந்து விட்டது. ஆனால் மூன்று பெரிய துண்டுகளாகவும் கொஞ்சம் பொடியாகவும் உதிர்ந்து கிடந்தது.

இப்போ இந்த மூணு துண்டையும் எப்படி உடைக்க என்று, நானும் அப்பாவும் களைத்து போனோம். ஒரு அல்வா செஞ்சது தப்பா, இதுக்கு இப்படி கொடுமையை அனுபவிக்க வேண்டி இருக்கே

ஜில்லென்று எலுமிச்சை சாறு கலந்த ஜுஸை எங்களுக்கு கொடுத்தாள் அம்மா.

“வி நீடட் திஸ்” என்று அவசரமாய் வாங்கி குடித்தோம்

“இதை உடைக்க ஒரு ஐடியா சொல்லவா” என்றாள் அம்மா

எனக்கும் அப்பாவுக்கும் வயிற்றில் புளியை கரைத்தது, ‘இப்போ என்னத்த சொல்ல போறாளோ’ என்று

எங்கள் ஆச்சி வீட்டில் தரையோடு உரலை பதித்து இருப்பார்கள். அதில் இதை போட்டு உலக்கையால் குத்த சொன்னாள் அம்மா. உதிர்ந்த பொடியை என்ன செய்வது என்பதை அப்புறம் பாத்துக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது

இப்போ தான் ஸ்டேப் ஒன் முடிஞ்சிருக்கு, அடுத்ததாய் ஸ்டப் 2  பார்க்கலாம். இந்த உலக்கையால் குத்தும் விஷயம் எனக்கு ரொம்ப பிடித்தது

என்னுடைய சின்ன சித்திகள் அக்கா வயதுடைய அத்தைகள் எல்லாம், பாட்டி வீட்டில் இருந்ததால் எங்களுக்கு இது சுவாரஸ்யமான பொழுது போக்காய் இருக்கும் என்று, சந்தோஷமாய் அதை எடுத்து கொண்டு எதிர் வீட்டுக்கு ஓடினேன்

“ஐயையோ இவ பாட்டுக்கு ஓடுறாளே, நம்ம மானம் காத்துல பறக்க போகுது” என்று என் அப்பா தலையில் துண்டுடன் உக்கார்ந்து விட்டார்

எதிர் வீட்டுக்கு போய் ஆச்சியிடம், “உரலை கழுவி தாங்க ஆச்சி, நான் ஒன்னு பண்ணனும்” என்று சொன்னவுடன்

“நீ என்னடி உரல்ல பண்ணப் போற?” என்று கேட்ட போதும் கழுவி தந்தார் ஆச்சி

 அதற்குள் என் அருகில் வந்த என்னோட சின்ன சித்தி மற்றும் அத்தைகள் எல்லாரும் சேர்ந்து, “என்னடி இது சிவப்பு கலரல்ல கல்லு மாதிரி இருக்கு?” என்றார்கள்

“அது ஒரு வித்யாசமான ஸ்வீட், உடைச்சு தான் சாப்பிடணும், உடைக்கலாமா?” என்று கேட்டவுடன், எல்லாரும் உற்சாகமாய் உலக்கையுடன் கோதாவில் இறங்கினோம்.

எல்லாரும் மாறி மாறி குத்தி ஒரு வழியாய் பூரா அல்வாவையும் பொடியாக்கினோம்.

அது பொடியானவுடன் அதை சாப்பிட்டு பார்த்த அனைவரும், “வித்தியாசமான டேஸ்ட்டா இருக்கே, இதுக்கு பேர் என்னடி? அத்தான் ஊர்ல இருந்து வாங்கிட்டு வந்தாங்களா?” என்று ஒரே கேள்வி.

அது அல்வா தானென்று எப்படி சொல்வேன், சோறு வச்சோம் பேரு வச்சோமாங்கிற கதையா, அய்யகோ இதுக்கு பேரை முடிவு பண்ணாம வந்துட்டோமே என்று கொஞ்சம் முழித்து விட்டேன்

என்னுடைய முழியை பார்த்து சந்தேகப்பட்ட சின்ன சித்தி என்னை தனியாய் கடத்தி கொண்டு போய், “ஏ பிள்ள உண்மைய சொல்லு, அது என்ன?” என்றாள்

அவள் என்னை போட்டு படுத்தியதில், “அது அல்வா தான் இப்படி ஆகி கிடக்கு” என்று நான் திருத்திருத்தபடி சொல்லவே, அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ப்ளீஸ் இதை எல்லார்ட்டையும் சொல்லிராத” என்று நான் கெஞ்சி கேட்டு, அதற்கு லஞ்சமாய் ஒரு கௌதமி பட பாட்டு புத்தகம் வாங்கி தந்தால் சொல்லாமல் இருப்பேன் என்றாள்

எல்லாவற்றுக்கும் சரி சொன்ன போதும், அவளால் சிரிப்பை மட்டும் அடக்கவே முடியவில்லை.

“எனக்கு பாட்டு புத்தகம் கூட வேணாம் பிள்ள, ஆனா சிரிக்காம இருக்க முடியலை” என்று வந்து எல்லாரிடமும் சொல்லி, “அத்தான் செய்த அல்வா” என்று உறவுகள் அனைவருக்கும் போஸ்டர் ஒட்டி விட்டாள்

அந்த தீபாவளிக்கு நாங்கள் கிண்டிய அல்வாவின் பெருமைகளை பேசி எல்லாரும் மகிழ்ந்திருந்தார்கள்

சரி இப்போ Step 3, உதிர்ந்த பொடியை எப்படி காலி செய்வது?

பக்கத்து வீடு, அண்டை அயலார் வீடு என்று எல்லாருக்கும் தீபாவளி பட்சணங்களோடு இதையும் சேர்த்து ஒரு கவரில் போட்டு கொடுத்தோம். இதற்குள் அதற்கு ஒரு பெயர் வைத்தோம்

பக்கத்து வீட்டு செங்கமலத்தக்கா வந்து, “அது என்னக்கா கவர்ல போட்டிருக்க ஸ்வீட், மில்க் ஸ்வீட் மாதிரி இருக்கே” என்ற போது, அதற்கு ‘மில்க் மெய்டு புட்டு’ என்று ஒரு பெயரை இன்ஸ்டன்ட்டாக வைத்து என் அப்பாவிடம் பாராட்டு பெற்றதுடன்

‘அல்வா என்றால், அது லாலா கடையில் வாங்கி சாப்பிட கூடிய பொருள். அதெல்லாம் போய் எவனாச்சும் வீட்டுல செய்வானா? நமக்கு இன்னைக்கும் என்னைக்கும் கேசரி தான்’ என்று முடிவெடுத்தேன்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads – Best Deals in Amazon 👇


 

#ads  தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

 

             

                         

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. ஹாஹாஹாஹா! எங்க மாமியாருக்கும் ஒரு தரம் இப்படித் தான் வந்தது. அல்வாவைக் கதவு இடுக்கில் வைத்து நசுக்கிச் சாப்பிடுவோம். ::)))))

  2. ஹாஹாஹா.. நான் மைசூர்பாகு செஞ்ச கதை போலவே இருக்கு.. ரொம்ப சுவாரஸ்யமா எழுதிருக்கீங்க.. அல்வாவைவிட ருசியா இருக்கு கதை..

நிவாரணம் (சிறுகதை) – ✍பெரணமல்லூர் சேகரன், திருவண்ணாமலை

என்று தணியும் இந்த…? (சிறுகதை) – ✍ தாழை. இரா. உதயநேசன், அமெரிக்கா