sahanamag.com
தொடர்கதைகள்

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 6) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

காவி மனிதன் கண்ட காட்சி

கிருஷ்ணன் சென்னையிலிருந்து ஊருக்குத் திரும்பிய தினத்திலிருந்து, அப்பா பழனியின் உடல்நிலை கண்முன்னேயே குறைந்து கொண்டு வந்தது. வீட்டிலிருந்தபடி படிக்க முடிவு செய்தான் கிருஷ்ணன். பழையபடி கட்டு ஒட்டும் வேலையைத் தொடர்ந்தான்.

ராதா முன்னை விட, கொஞ்சம் அதிகமாகச் சம்பாதித்தான். அவன் ஜோசிய காசுதான் கிருஷ்ணனின் படிப்புக்கு வித்திட்டது. மதராஸ் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்பில் சேர்ந்தான். வீட்டில் அம்மாவிற்கு உதவிக்கொண்டும், நைனாவின் உடல்நிலையைக் கவனித்துக்கொண்டும், நாட்களை ஓட்டினான். 

பார்வதி, தன் கணவன் பழனியின் உடல்நிலையை உணர்ந்து, தானே முன்நின்று, கிருஷ்ணனின் அக்காவின் திருமணத்தை, அதாவது தனது ஒரே மகளின் திருமணத்தை நடத்தி வைத்தாள்.

அந்த நிகழ்வு தான் ‘துன்பத்திலும் இன்பம்’ என்று நினைக்க ஒரு வாய்ப்பாக இருந்தது. அவளைத் திருமணம் செய்து கொண்டவர்க்குத் தாராள மனம்; கிருஷ்ணனின் வீட்டு நிலைமையைப் புரிந்து நடந்தார். வெகு விரைவிலேயே கிருஷ்ணன் மாமாவிடம் ஒட்டிக்கொண்டான்.

‘பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிடுவது போல’ காலம் அவன் கையிலிருந்து கனவைப் பிடுங்கி, உறவைத் தந்தது. அவன் மாமா தான், இனிமேல் அவன் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கப்போகிறார் என்றும் அவரால் தான் அவன் வாழ்வில் திருப்பம் வரப் போகிறதென்றும் அப்போது அவன் அறிந்திருக்கவில்லை…..! 

அக்காவின் திருமணத்திற்குப் பிறகு, மாமாவுடனே தான் அவன் நேரம் சென்றது. ஏனோ? மாமா வந்த பிறகு மகிழ்ச்சியும் உடன் வந்துவிட்ட நினைப்பு அவனுக்கு. அதே மகிழ்ச்சியோடு தன் தூரத்துப் படிப்பையும் முடித்தான்.

ஆனால், அவன் மனதுக்குத் தெரியும், ‘அந்த சந்தோஷம் நிரந்தமானது இல்லை; அது, அவன் சோகத்திற்கும் ஏக்கத்திற்கும் மேல் பூசப்பட்டிருக்கும் வெறும் நிறம் மட்டுமே’ என்று. அவன் மனம் நினைத்தது போலவே தான் நடந்தது. 

நைனாவிற்கு உடல்நிலை மோசமடைந்து கொண்டே வந்தது. சர்க்கரை அளவு இதற்கு மேல் அதிகமானால், கால்கள் எடுக்கப்பட வேண்டிய நிலையை எட்டிவிடும் என டாக்டர்கள் எச்சரித்தனர். இவை எல்லாம் நடக்கும் போது, மாமா உடன் தான் இருந்தார். கிருஷ்ணனுக்கு ஆறுதல் சொன்னார். 

டாக்டர் சொல்கிற அறிவுரைப்படி சாப்பிடச் சொல்லி, பழனியை வற்புறுத்தினான் கிருஷ்ணன். ஆனால், பழனி எங்கே மகன் சொல்வதைக் கேட்டார்? முன்பு வேலைக்குப் போய், மிச்சமான நேரத்தில் செய்த சித்து வேலையை இப்போது முழுநேர வேலையாக அல்லவா ஆக்கிக்கொண்டார்? டாக்டர் சொன்ன மருந்தையெல்லாம் சாப்பிட மறுத்தார்.

ஒரு கட்டத்தில் கிருஷ்ணனும் அதைப்பற்றி சொல்வதை நிறுத்திக் கொண்டான். “அவரு இஷ்டப்படி இருக்கட்டும். குடும்பத்துக்காக இவளோ நாள் ஒழச்சிருக்காரு.. நம்ம விருப்பத பூர்த்தி செஞ்சாரு. இப்போ அவரு விருப்பப்படி உட்ருவோமே..!” என்று குடும்பத்தினருக்கும் அறிவுரை சொன்னான். 

அவன் குடும்பத்திற்கு ஆறுதல் சொன்னாலும், தன் ஆறுதலுக்கு மாமாவிடம் புலம்பத் தொடங்கினான்.

“மாமா..! வூட்டுக்கு பெரியவரு கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்டாரு. அக்காக்கு தங்கமா நீங்க கிடைஸ்டீங்க. எனக்கும் ராதாவுக்கும் உங்களுக்கு தெரிஞ்ச இடத்துல எங்கியாச்சும் வேல போட்டு குடுங்களேன்” என்று குரல் தழுதழுக்கக் கேட்டான்.

மாமாவிடம் “உம்…” என்பது போல தலையசைப்பு. என்றும் இல்லாதது போல, கிருஷ்ணனிடம் ஒரு கனத்த மௌனம். “நா வரேன் மாமா” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குக் கிளம்பினான். 

ஆடிக்காற்று “உஸ்…” என்று வண்டியில் போகிறவர் வருகிறவர்களைக் கூட தன் பக்கம் இழுத்துத் தள்ளியது. கிருஷ்ணனின் மனம் கூட ஏனோ ஆடியது. அப்பாவின் நினைவு வரவே நேரே கட்டிலருகில் போய் உட்காருகிறான்.

அப்பாவின் பார்வையிலேயே கேள்விக்குறி தவழ்கிறது. அதைப் புரிந்துகொண்டு, பதிலுக்கு கேள்வி கணையைத் தொடுக்கிறான் கிருஷ்ணன்.

“நைனா.. நீ சொன்ன மாறியே படிப்புல தட வந்துச்சு. படிப்புக்கு சம்மந்தமில்லாத வேலை கெடக்கும்னு சொன்னியே. நா வேலையே இல்லாமல்ல சுத்திட்டு இருக்கேன். இப்போ இருக்க நிலமைக்கு அந்த வேல கூட எப்போ வரும்னு இருக்கு?” என்று சலித்துக் கொண்டான். 

அவனை ஒரு முறை தன் பார்வையாலேயே ஊடுருவி, “இங்க பாரு கிருஷ்ணா… காலம் உன்ன வெரட்டிடுச்சுனு நினைக்காத..! அது உன்ன சரியான இடத்துல கொண்டு போய் விடத்தான் அப்டி செஞ்சிருக்குது..! இனிமே உனக்கு நல்ல காலந்தான்… எனக்கு தா கொஞ்ச கேடு காலம்.. சனி மூணாவது முறை வருதுல… அதான்…” என்று சூசகமாக முடித்தார். 

கிருஷ்ணன் புதிரோடுப் பார்த்து, “அது என்ன மூணாவது சனி?” என்று கேட்டான்.

பழனி ரொம்ப நாள் கழித்து உற்சாகத்துடன் பேசினார். “ஒரு ஜாதகத்துல சனி வலுவா இருந்தா தான் ஆயுள் கெட்டியா இருக்கும். சனிங்குற கிரகம் மூன்று முறை ஒரு ஜாதகத்தை வலம் வருவார். மொத முப்பது வயசுக்குள்ள ஒரு முறை; அடுத்து.. அறுபது வயசுக்குள்ள ஒரு முறை; அதுக்கடுத்து… 90 வயசுக்குள்ள ஒரு முறைன்னு மூணு முறை. நா 70 தாண்டிட்டேன்ல. இப்போ மூணாவது சனி. இத போக்கு சனினு சொல்றதுண்டு. இதுல உடல் உறுப்புகள்லாம் செயலிழந்துட்டே வரும். தோராயமா ரெண்டு வருஷந்தா என் உடம்பு தாங்கும். சந்திரன், அங்காரகன்  கூட வலுவான  நிலையில இல்ல. என் ரத்தமே இப்போ பாதி நல்லா இல்ல” என்று சூசகமாக முடித்தார். 

கிருஷ்ணன் அவர் பதிலில் அதிர்ந்து போனாலும், ஓரிரு நிமிடங்களில் தெளிவு பெற்று, “நைனா.. கிரகத்துக்கு நம்ம உடல்ல ஓடுற ரத்தத்துக்கு கூட சம்மந்தம் உண்டா? நீ என்ன டாக்டர் மாறி ரத்தம் நல்லா இல்லேன்னு சொல்ற. படிச்சது எட்டாங் கிளாஸ்..” என்று கேலியடித்தான்.

அதற்குப் பழனி தனது தோல் துண்டை சரிசெய்தவராய், “அட என்னடா நீனு..? நம்ம உடல்ல ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு பாகத்துல ஆதிக்கம் செலுத்தும். உதாரணத்துக்கு சனி எடுத்திக்கிட்டா, காலு, பாதம் இதெல்லாம் மெயின். நா மொதல்ல சொன்ன மாறி, எனக்கு சனி வலுவிழந்து இருக்கிறதால, கால்ல பிரச்சனை. அங்காரகன் ரத்தம் சம்பந்தபட்டவர். அவர் நல்ல இடத்துல இல்லாததுனால, சுகருங்குற ரத்த சம்பந்தப்பட்ட பிரச்சனை. சந்திரன் வந்து, திரவ சம்பந்தபட்ட கிரகம். அது மனசு சார்ந்த கிரகமும் கூட. எனக்கு உண்மையாலுமே இப்போ மனசு ஒருநிலையில இல்ல. எப்போ அந்த ஈசனை அடைவோம்னே இருக்கு” என்று தனது பேச்சில் ஒரு மருத்துவரையே பிரதிபலித்தார் பழனி. 

கிருஷ்ணன் வாயடைத்துப் போனான். “நைனா..! ஆஸ்பத்திரில ரத்தத்துக்கு, சுகருக்குன்னு தனித்தனியா ஸ்கேன் எடுத்து, ரெண்டு மூணு நாளைக்கு பொறவு, சொல்றதெல்லாம் நீ ஒரு கட்டத்த போட்டு புட்டுப்புட்டு வெஸ்டியே. உன்கிட்ட ஏதோ ஒரு பவர் இருக்கு நைனா..” என்று உற்சாகம் பொங்கக் கூறினான்.

வெகு நாட்களுக்குப் பிறகு, வெகுமதியாய் இனித்த அவன் அப்பாவுடனான உரையாடல், இறுதியில் கசந்தது. “நா போய்ட்டா சும்மா புதைக்கிற கிதைக்கிறேன்னு செலவு பண்ணாதீங்க.. உடம்ப அப்டே கொண்டு போய் சுடுகாட்டுல போட்டு வந்துருங்க..” என்று பேச்சோடு பேச்சாகச் சொன்னார் பழனி.

கிருஷ்ணன் அமைதியாக எழுந்து சென்று விட்டான். அவன் கண்களில் உண்மையில் ஏதோ மின்னின. அது கண்ணீர் தான். அதில், ‘நைனா.. இப்டி பேசாத நைனா.. ஒன்னுல.. பாதுக்கலாம்’ என்று எழுத்துக்கள் வழிந்து கொண்டிருந்தன.

அப்போது ராதா வந்தான். கன்னங்களிலிருந்த நீரை துடைத்துக்கொண்டு, “மாமாகிட்ட உனக்கும் சேத்து தா வேல கேக்க சொலிருக்கேன். எங்க சொல்றாங்களோ அங்க போய் பொழச்சி நாலு காசு பாத்துட்டு வருவோம்” என்று சைகை செய்து உரக்கப் பேசினான். 

மாமா, கிருஷ்ணனுக்கு வேலை தேடுவதில் மும்மரமாக இருந்தார். அதுவரையில் தான் சும்மா இருக்க வேண்டாம் என்று கிருஷ்ணன் யோசித்துக் கொண்டிருத்தான். ‘வேலை எப்போது வேண்டுமானாலும் வரட்டும். படிப்பை ஒழுங்காக முடித்துவிடுவோம்’ என்ற எண்ணத்தில், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பி.எட் சேர்ந்தான். அதுவும் தொலைதூரக்கல்வி.

இந்த முடிவை ஆமோதித்ததாய், அந்தக் காற்று காலத்திலும், விசித்திரமாய் வருண பகவான் வரவு தந்தான். வருணனின் வரவு, கிருஷ்ணனின் வரண்ட மனதிலும் கூட  ஈரத்தைத் தெளித்திருந்தது.

பி.எட் படிக்கும் போது, அவன் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. ஒன்பது ஆனாலும் தூங்குகிறவன், நாலு ஐந்து மணிக்கு எழுந்து, அப்பாவின் முன் உட்கார்ந்து கொள்ளும் வழக்கத்தை வைத்துக் கொண்டான்.

முதலில் வீட்டில் உள்ள அனைவரும் “ஏன் எதற்கு?” என்று கேள்விகள் கேட்டார்கள். அவனிடம் மௌனம் தான் பதிலாக வந்தது. அதற்குப் பிறகு யாரும் அதைக் கேட்பதில்லை. 

அவன் மனம் என்ன நினைத்திருக்கும்? காலையில் எழுந்து ஏன் அப்படி அப்பாவின் முன் உட்கார்ந்து கொள்கிறான். ஒருவேளை…. எத்தனை கம்பீரமாக இருந்தவர் இப்படி உடைந்து போய்விட்டாரே என்ற கவலையா? அப்படி கவலை இருந்தால் தான் அதில் என்ன தவறு? அந்தக் கவலையில் இருந்து விடுபடும் போது, கிடைக்கப் போவது மகிழ்ச்சி தானே.

மகிழ்ச்சியை உணர, மனிதனுக்கு கவலை அவசியமாய் இருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் கூட, முற்போக்குள்ள மனஅழுத்தம் நம்மை முன்னேறச் செய்யும் என்றே குறிப்பிடுகிறார்கள். இப்போது கிருஷ்ணனுக்கு வந்திருக்கும் கவலை எந்த வகை. உண்மையில் இது அவன் தகப்பனுக்கு வந்திருக்கும் கஷ்டமா? இல்லை…. இதில் கிருஷ்ணனுக்குத் தான் நஷ்டமா? அவன் ஒரு நல்ல தகப்பனை இழந்து விடப்போகிறானா? இல்லை….!

‘பழனி பையன் கிருஷ்ண’ என்கிற அடையாளத்தை மாற்றி, ‘கிருஷ்ணனோட அப்பன்தா பழனி’ என்று பிறந்ததற்கு அர்த்தம் சேர்க்கப் போகிறான்

நாகப்பட்டினம், காயாரோகணேஸ்வரர் கோயில்..!

மாலை 4 மணி இருக்கும். கோவிலில் தரிசனம் முடித்த பெரியவர் ஒருவர், தனக்கென ஒரு இடம் தேடி, பொது மக்களுக்குத் தொந்தரவு இல்லாதபடி போய் படுத்துக் கொண்டார். அவரையும் அதற்குப் பிறகு யாரும் தொந்தரவு செய்யவில்லை.

வானந்தான் ஏனோ முணுமுணுத்துக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் “ஓ..” என்ற ஆர்ப்பரிப்புடன் மழை பெய்யத் தொடங்கிற்று. கோயிலுக்கு வந்தவர்கள் ஆங்காங்கே மழை நீர் படாதபடி நின்று கொண்டார்கள். 

உறங்கிக் கொண்டிருந்த பெரியவர் லேசாக மழை நீர் பட்டு எழுந்தார். சட்டென்று அவர் மனதில் ஓர் காட்சி. அதை முழுமையாக உணர்ந்த பின், அவரிடம் ஏக மாற்றம்.

பேசத் தெரியாதவன் பேசிய மொழி போல, “ஓ.. அ.. ஓ..அ” என்று அலறிக்கொண்டே தன் கைத்தடியை எடுத்துக்கொண்டு, தன்னால் இயன்ற வேகத்திற்கு நடந்தார். இல்லையில்லை ஓடினார்.

ஊர் ஜனங்களில் ஒருத்தி, “என்ன ஆயிடுத்தோடி இப்போ? அவர் காவி வேட்டி விலகிறது கூட தெரியாம என்ன ஓட்டம்..? அவர் கண்ண பாத்தியோடி சிவகாமி..? அப்பா எத்தனை வெண்மை..! பளிச்சுன்னு டிட்டெர்ஜெண்ட் போட்டு அலம்புன மாதிரில இருக்கு. அவர் முகம் கழுவி எத்தன நாளாயிடுத்தோ..? ஆனா, முகம் பிரகாசிக்கிறது..!” என்று தானே முன்வந்து விமர்சித்தாள்.

இன்னும் ஒரு சிலர், “பைத்தியக்காரன்..! மழைல ஏன் இப்படி ஓடுறான்..?” என்று தங்களுக்குள் பேசி ஆதங்கபட்டுக் கொண்டனர். 

அந்தக் காவி உடை பெரியவர் அங்கிருந்து நேரே ஒரு மரங்கள் நிறைந்த பகுதிக்குச் சென்று அமர்ந்தார். தன் பைக்குள் இருந்த நீரை அருந்திவிட்டு, “ஈசனே.. உன் திருவிளையாடல் கண்டேன். என் மனம் தனில் தோன்றிய காட்சி நிசமாயின், நாடுகள் நாசமாகும். உயிர்க் கொடுக்கும் நீர் உயிரைப் பறிக்கும்” என்று கத்திவிட்டு அங்கேயே தியானம் செய்ய உட்கார்ந்து கொண்டார்.

(தொடரும் – வெள்ளி தோறும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!