in ,

அபலையின் ஆசை (சிறுகதை) – ✍ செல்வா ச.பார்த்திபன், திருப்பூர்

அபலையின் ஆசை
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 33)

 ந்த கிராமத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பின் ஓரமுள்ள அந்த சிறிய ஓட்டு வீட்டின் முன்பு, அக்குடியிருப்புவாசிகள் சிலர் குழுமியிருந்தனர்

அந்த வீட்டின் உள் அறையிலிருந்து, “என் ராசா, என்ன விட்டுட்டு போயிட்டியே. இனி நீ இல்லாம நான் என்ன செய்வே? உன் கூட நாங்களும் வந்திருந்தா ஒண்ணா போயிருக்காலமே. எங்கள இருக்கச் சொல்லிட்டு நீ மட்டும் போனியே, இப்ப ஒரே அடியா போயிட்டியே. என் கடவுளேஎன்று நெஞ்சு நெஞ்சாக அடித்துக் கொண்டு அழுத சின்னத்தாயின் அழுகுரல், வெளியில் இருந்த பஞ்சவர்ணத்திற்கு நன்றாக கேட்டது.    

முருகாத்தா, என்ன வேடிக்கை பார்த்திட்டு உட்கார்ந்திருக்க? போய் சின்னத்தாய சமாதானப்படுத்து. இப்படியே அவ சாப்பிடாம அழுதிட்டு இருந்தால் வெடி விபத்துல போன உசுரு திரும்பி வந்துடவா போகுது?” என்று மெதுவாக முருகாத்தாவின் காதில் கிசுகிசுத்தாள் பஞ்சவர்ணம்.

சரிக்கா”, என்று உள்ளே சென்ற முருகாத்தா, சுவற்றில் மாலை அணிவித்து சிரித்த முகத்துடன் காணப்பட்ட தனது கணவனின் போட்டோவுக்கு கீழயே தலை வைத்து தேம்பி அழுது கொண்டிருந்த சின்னதாயின் தோளைத் தொட்டாள் முருகாத்தா

சின்னத்தாயி அழாதம்மா. வாம்மா, நீ சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு.எந்திரிச்சு வந்து ஒரு வாய் சாப்பிடு, வா தாயிஎன்றாள்

இல்ல முருகாத்தா, எனக்கு வேணாம். எனக்கு சாப்பிட பிடிக்கல.”

இப்பிடி சொல்லி என்ன பண்றது தாயி. நீ இப்படியே அழுதுட்டு சாப்பிடாம இருப்பதனால எதுவும் மாறிடவா போகுது? உன் புருஷனை கூட்டிட்டுப் போன கடவுள், உன்னையாவது விட்டுட்டு போயிருக்கானே,அத நெனச்சு சந்தோஷப்பட்டுக்க. வழக்கம் போல நீயும் கூடப் போயிருந்தா உன் ஐந்து வயசு மகளின் நிலமை என்னவாயிருக்கும்? வயசாகிப் போன உன் மாமனார் பாவம் என்ன செய்வாரு? யோசுச்சு பாரு தாயி

நல்லா கேளுமா முருகாத்தா. வயசாகி போன எனக்கு இனி என்ன ஆனா என்னமா? எனக்கு எல்லாம் முடுஞ்சு போச்சு, ஆனா எம் பேத்தி, அவள யாரு கவனிச்சுக்குவா? இவளும் போயிருந்தா தாத்தா தாத்தானு எம் மேல உசுரா இருக்குற எம் பேத்தி கூட கொஞ்ச நேரம் விளையாடக் கூட முடியாத என்னால, என்ன செய்ய முடியும்? எம் பேத்திக்கு துணையே இனி இவ மட்டும் தானஎன்று பேத்தி மேல் உள்ள பாசத்தாலும் வாழுற வயசுல மகன் போயிட்டானே என்ற ஆதங்கத்திலும் பேசினார் கயிற்றுக்கட்டிலில் படுக்கையில் இருந்த சின்னத்தாயின் மாமனாரான பொன்னுச்சாமி.

இருவரும் பேசுவதிலும் நியாயம் இருக்கத் தான் செய்தது. மூன்று நாட்களுக்கு முன் எப்போதும் போல் அன்று மாரனேரியில் உள்ள ஒரு பட்டாசு ஆலைக்கு வேலைக்குச் செல்ல புறப்பட்ட சின்னத்தாயும் அவள் கணவன் மாரிமுத்துவும், தூங்கி கொண்டிருந்த மகளை தூக்கச் செல்லும் போது அவளுக்கு லேசான காய்ச்சல் இருப்பதைக் கண்டு, மகளை டவுனில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் காட்டச் சொல்லி விட்டு சென்ற கணவனை, ஆலையில் நடந்த வெடி விபத்தினால் கரிக்கட்டையாகத் தான் மீண்டும் பார்க்க முடிந்தது.

‘கணவனுடன் தானும் போயிருக்கக் கூடாதா?’ என்று வேதனையில் சின்னத்தாயிக்கு தோன்றினாலும், அப்பிடி போயிருந்தால் தனது மகளின் கதி என்னவாயிருக்கும் என்று யோசிக்கும் போதே மனதில் ஒருவித கலக்கம் வரத் தான் செய்தது அவளுக்கு

அவள் அவ்வாறு கலக்கத்தில் உட்கார்ந்திருந்த அந்த சமயம், அம்மா அம்மாஅப்பா எங்கம்மா போயிருக்கார்? எப்பம்மா வீட்டுக்கு வருவார்? ஏன் இன்னைக்கு அப்பா கூட நாம போகல?” என்று கத்திக் கொண்டே ஓடி வந்தாள் பிள்ளை

என் தங்கமே, இங்க வாடா, வந்து உட்கார். அப்பாவுக்கு நிரம்ப வேல இருக்கு, அதனால டவுனுக்கு போயிருக்கார்டா. அப்பா வரும் போது தீபாவளிக்கு புது துணி இனிப்பு எல்லாம் உனக்கு வாங்கிட்டு வர்றேனு சொல்லிட்டு போயிருக்கார்டா செல்லம்என்று நா தழுதழுக்க முட்டிக் கொண்டு வரும் அழுகையை அடக்கிக் கொண்டு சமாளித்தாள் சின்னத்தாயி.

போம்மாஇதத்தானமா மூணு நாளா சொல்லிட்டே இருக்க. எனக்கு புது துணியெல்லாம் வேணாம், அப்பா தான் வேணும். சீக்கரம் அப்பாவ வரச் சொல்லும்மாஎன்று வருத்தத்துடன் கேட்டது குழந்தை

அவ்வளவு தான், சின்னத்தாயால் அதற்கு மேல் அடக்க முடியவில்லை. தனது சேலை நுனியால் வாயை பொத்திக் கொண்டு கதற தொடங்கி விட்டாள்

கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென்று கொட்ட ஆரம்பித்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த முருகாத்தாவும் துக்கம் தாளாமல் அழத் தொடங்கினாள். இந்த பரிதாபகரமான நிலமையை பார்த்துக் கொண்டிருந்த குழந்தையும், என்னவென்று புரியாமலயே அதுவும் அழ ஆரம்பித்தது.

குழந்தை அழ தொடங்கியதும் உடனே சின்னத்தாயி தனது கண்ணீரை துடைத்துக் கொண்டு, குழந்தையை தூக்கி அணைத்தாள்

அழாதடி செல்லம், அழாதே. அப்பா சீக்கிரம் வந்திருவார். இல்லேன்னா நான் போய் கூட்டிட்டு வந்தர்றேன், சரியாடா தங்கம் என்று வெடிபொருட்களின் நெடிபடிந்த தனது சேலையினால் குழந்தையின் கண்களை துடைத்து விட்டாள்.

இதைக் கேட்ட குழந்தை, அப்பாவை காணப் போகும் மகிழ்ச்சியில், “ஐ ஜாலி, ஜாலிஎன்று கவலையை மறந்து குதிக்க ஆரம்பித்தது. பின்னர் முருகாத்தாள் குழந்தையை வெளியே சென்று விளையாடப் பணித்தாள்

குழந்தை சென்றதும் சின்னத்தாயை பார்த்த முருகாத்தாள், இங்க பார் சின்னத்தாயி, இதற்கு மேலும் கவலைப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்ல. இந்தா கொஞ்மாது சாப்பிடுஎன்று தனது கையில் இருந்த சாப்பாட்டு தட்டை சின்னத்தாயின் முன் நகர்த்தி வைத்தாள்

தனக்கு எதிரே உள்ள சாப்பாட்டுத் தட்டையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சின்னத்தாயி, சிறிது நேரம் கழித்து வேண்டா வெறுப்பாக சாப்பிட தொடங்கினாள்.

நேரம் செல்ல செல்ல வீட்டிற்கு துக்கம் விசாரிக்க வந்த அனைவரும் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினர்

அப்போது சின்னத்தாயின் கைகளை பிடித்த முருகாத்தாள், “கவலைப்படாம சாமத்தில நல்லா தூங்கு. உன் மக என் வீட்ல தான் விளையாடிட்டு இருக்கா. இன்னைக்கும் அவள் அங்கயே இருக்கட்டும். அந்த மண்சட்டில உனக்கும் அய்யாவுக்கும் சோளக்கூழும் கொள்ளுச் சட்டினியும் வைச்சிருக்கேன். உன் மகளுக்காகவாது கொஞ்சம் சாப்பிடு. நாளைக்கு முதலாளிய போய் அப்படியே பார்த்துட்டு வந்துரு. அவர் எழவுக்கு கூட வரல, என்ன ஏதுனு கேட்டுப் பாருஎன்று கூறி விட்டு, சின்னத்தாயின் தலையை ஆதரவாக தடவி விட்டு தனது வீட்டிற்கு செல்லத் தொடங்கினாள் முருகாத்தாள்

இரவு நெருங்கியது. சின்னத்தாயி தனது மாமனாரை எழுப்பி மண்குவளையில் கூழை ஊற்றிக் கொடுத்து, தானும் பெயருக்கு கொஞ்சம் குடித்துக் கொண்டாள். பின்னர் மாமனாரின் கட்டிலுக்கருகில் ஒரு சிறிய குவளையில் தண்ணீரை வைத்து விட்டு, எரிந்து கொண்டிருக்கும் மண்ணெண்ணெய் விளக்கின் திரியை உள்இழுத்து வெளிச்சத்தை குறைத்து விட்டு, தனது கணவனின் போட்டோவையே சிறிது நேரம் கவலையுடன் பார்த்து கொண்டிருந்தவள், பின் அதன் அடியில் சுருண்டு படுத்துக் கொண்டாள்.        

மறுநாள் விடியல் பொழுதின் தொடக்கத்திலேயே எங்கோ வெளியில் செல்ல கிளம்பிக் கொண்டிருந்த தனது மருமகளை பார்த்த பொன்னுசாமி, “எங்கம்மா இவ்வளவு சீக்கிரம் கெளம்பிட்ட? என்றார்

எந்திருச்சிட்டிங்களா மாமா? தூங்கிட்டிருங்களோனு சொல்லாம கிளம்பிட்டேன். முதலாளி என்ன ஆனார்னே தெரியல? ஏன் இவ்வளவு நாளா இங்க வரலேனும் தெரியல? அதான் போய் பார்த்துட்டு, இழப்பீடா எதாவது கெடைக்குமானு கேட்டுப் பார்க்கலாம்னு கெளம்புறேன் மாமா. இழப்பீடு கேட்க மனசு இல்ல தான்

அவரே போன பிறகு அவர் செத்ததுனால வர்ற பணத்தை வாங்க மனசும் இல்ல எனக்கு. நமக்குத் தான் இப்படியே வாழ்ந்து இங்கேயே சாகனும்னு விதி இருக்கு. ஆனா உங்க பேத்தியையாவது கொஞ்சம் நல்லா படிக்க வைக்கலாம்னு தோணுது மாமா. இழப்பீடா கொஞ்சமா பணம் கெடச்சாலும் அது உதவியா இருக்குமல்ல மாமா. ஏதோ அவள் வாழ்க்கையாவது மாற இது ஒரு சின்ன வாய்ப்பா இருக்காதா?அதான் நான் போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்தறேன் மாமாஎன்று செல்ல தொடங்கினாள்.

ஒருவழியாக பேருந்தை பிடித்து டவுனில் உள்ள தனது முதலாளியின் மெத்தை வீட்டை அடையும் போது நண்பகலாகி விட்டது. ஆனால் கேட்டில் தொங்கி கொண்டிருந்த பெரிய பூட்டைப் பார்த்த அவளுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது

பக்கத்து வீட்டில் விசாரிக்கையில், வெடிவிபத்து நடந்தே அன்றே அவர் ஊரை விட்டு சென்று விட்டார் என்றும், விதிமுறைகளை சரியாக கடைபிடிக்காமல் மீறி செயல்பட்டதால் தான் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து நிகழ்ந்ததாக கூறி, ஆலைக்கு சீல் வைத்துவிட்டனர் என்றும், ஆலைக்குண்டான உரிமமும் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிய வந்தது.

தான் ஒன்று நினைத்து வந்தால் அதற்கு முற்றிலும் மாறாக இங்கு நடப்பது கண்டு மிகவும் மனச்சோர்வுடன் திரும்பி வந்த பாதையிலேயே நடக்கத் தொடங்கினாள் சின்னத்தாயி. என்ன செய்வது என்று தெரியாமல் யோசனையுடன் பஸ்ஸ்டாண்டில் உட்கார்ந்திருந்த சின்னத்தாயின் கண்களில், எதிரே உள்ள பெரிய ஓட்டல் முன்பு நின்று கொண்டிருந்த காரினுள் இருப்பது முதலாளி போல் தெரிய, சட்டென எழுந்து அருகில் சென்றாள்

திடீரென சின்னத்தாயை அங்கு கண்ட முதலாளிக்கு சற்று அதிர்ச்சியாகவே இருந்தது.

 உடனே தன்னை சாமளித்துக் கொண்ட முதலாளி, “என்ன சின்னத்தாயி டவுன் பக்கம் நடமாடிட்டு இருக்க. என்ன எப்படி கண்டுபுடுச்ச? உங்கள பார்க்க நானே வரலாம்னு தான் நெனச்சிட்டு இருந்தேன். ஆனா நம்ம ஆலைக்கு சீல் வச்சுட்டதுனால அது சம்பந்தமா கொஞ்சம் அலைஞ்சுட்டு இருந்தேன்.அதான் வர முடியலஎன்றார்.

ஐயா பரவாயில்லிங்கய்யா. அதான் நீங்க வராததுனால உங்கள பார்க்கலானு உங்க வீட்டுக்குப் போனேன். அங்க வீடு பூட்டியிருந்துச்சு, அதான் என்ன பன்றதுனு தெரியமா சரி வீட்டிற்கே திரும்பி போவோம்னு பஸ் ஸ்டாண்டல உட்கார்ந்திருந்தேன். அப்ப தான் உங்கள எதேச்சையா இங்க பார்த்து ஒடி வந்தேனுங்கஎன்றதும்

முதலாளி சற்று கோணலான முகபாவனையில், “சரி சரி சொல்லு சின்னத்தாயி, என்ன விசயமா வந்த?”

என்னங்கய்யா இப்படி கேட்டுடிங்க. உங்க ஆலையில நடந்த விபத்துல அங்க வேலை செஞ்சுட்டிருந்த எம் புருசன் இறந்திட்டாரு. நீங்க தான் எட்டிக் கூட பாக்கல. நானா வந்து கேட்டால் என்ன விசயமா வந்தேனு கேட்கிறிங்களே, இது நியாயமாங்கய்யா?” என்றாள் அழுகை முட்ட

சரி சரி விடு சின்னத்தாயி, அழுகாம நீ சொல்ல வந்தத சொல்லுஎன்று சமாளித்தார்

என் கணவர் வெடி விபத்துல இறந்ததுனால அதற்கு இழப்பீடு கேட்டு வந்திருக்கேன்யா என்று மென்று முழுங்கிய சின்னத்தாயை

ஒரு மாதிரியாக பார்த்த முதலாளி, சற்று கனத்த குரலில், “எவ்வளவு வேண்டுமாம் என்றார் விரக்தியாக

 முதலாளியின் குரல் மாறுவதை உணர்ந்த சின்னத்தாயி, சற்று நெளிந்து கொண்டே, “ஐயா, என் பொண்ணு படிப்பு செலவுக்கு பயன்படுற மாதிரி நீங்களே பார்த்து கொடுங்கய்யா

என்னது, உன் பொண்ணு படிப்பு செலவுக்கா? அப்ப, உம் பொண்ண படிக்க வைக்க போறயாக்கும் என்றார் சற்று ஏளனமாக

முதலாளின் இந்த கேள்வியை கேட்ட சின்னத்தாயி கோபத்துடன், “ஏங்கய்யா எம் பொண்ணல்லாம் படிக்கக் கூடாதா என்ன? எங்க தலையில தான் வேற பொழப்புக்கு போக கூடாதுனு எழுதியிருக்கு. அவளாது படிச்சு வேறு பக்கம் போய் வாழட்டுமேஎன்று வெடுக்கென்று பதில் சொன்ன சின்னத்தாயை பார்த்த முதலாளி தொண்டையை கணைத்துக் கொண்டே,

ம்ம்நீ ஆசைப்படுறதுலயும் அர்த்தம் இருக்கத் தான் செய்யுது சின்னத்தாயி. நான் தான் மடையன், புரியாம கேட்டுட்டேன். சரி சின்னத்தாயி, நீ ஒண்ணு பண்ணு. கவலைப்படாம இப்ப திரும்பி வீட்டுக்குப் போ. நான் நாளைக்கே பணத்தோடு உன்வீட்டுக்கு வரேன். அதனால இப்ப தைரியமா நீ போஎன்ற முதலாளியை சந்தேகமாக பார்த்தாள் சின்னத்தாயி

சின்னத்தாயின் சந்தேகத்தை புரிந்து கொண்ட முதலாளி, “இதப் பார் சின்னதாயி, நீ என்ன சந்தேகப்படுறேனு நல்லாப் புரியுது. என் மேல கொஞ்சம் கூட சந்தேகப்பட வேணாம், என்னை மனப்பூர்வமா நம்பலாம் என்று நயமாகப் பேசி சின்னத்தாயை அனுப்பி வைத்தார்

முதலாளி என்ன சொன்னலும் சந்தேகம் அகலாத சின்னத்தாயி, ஒருவித தயக்கத்துடனேயே வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

நாளைக்கே பணத்துடன் வருவதாக சொல்லி அனுப்பிய முதலாளி, பதினைந்து நாட்களாகியும் வரவில்லை. தான் நினைத்தது போலேயே நடந்துவிட்டது என்று சின்னத்தாயி உள்ளம் வெதும்பி கொண்டிருந்தாள்

சின்னத்தாயின் இந்த நிலையை பார்த்துக் கொண்டிருந்த முருகாத்தாள், பொறுக்க முடியாமல் வெடிக்கத் தொடங்கினாள்

இந்தாப் பாரு சின்னத்தாயி, இப்படியே உட்கார்ந்து யோசுசிட்டுருந்தா எதுவும் நடக்காது. பேசாம தாசில்தார் ஆபிஸ்ல போய் ஒரு மனு கொடுத்துட்டு வந்திரு. அப்பவாது எதாவது நடக்குக்குமானு பார்க்கலாம்

ஆனால் முதலாளிக்கு எதிராக மனு அளிக்க சின்னத்தாயிக்கு துளி கூட விருப்பமில்லை. மனுகொடுக்க மட்டுமல்லாது, இழப்பீடு கேட்கவும் மனசு இல்லாமல் தான் இருந்தாள் சின்னத்தாயி

சின்னத்தாயின் யோசனையை கண்ட முருகாத்தாவுக்கு கோபம் வந்தாலும் அதை மறைத்துக் கொண்டு வாஞ்சையுடன், “சின்னத்தாயிஉன் நிலைமை நல்லா புரியுது எனக்கு, முதலாளி மேல இருக்க விசுவாசம் உன்னை தடுக்குதுனு. ஏன்னா நீ நல்லவ. இங்க நல்லவங்களா இருந்தா எதுவுமே கெடைக்காது.

சில விசயங்கள் விருப்பம் இல்லேனாலும் செஞ்சு தான் ஆகனும். உனக்காகவா செய்யப் போறா? உன் பொண்ணுக்காகத் தான இத செய்யப் போற. தயங்காம போய் மனுவ கொடு. என்ன நடக்குதுனு தான் பார்ப்போம். நாளைக்கு உன் கூட காமராஜ் மாமாவையும் வரச் சொல்ற, மனு எழுத படிக்க உனக்கு சற்று ஒத்தாசையா இருக்கும் என்ற முருகாத்தாவின் வார்த்தைகளை காதில் வாங்கி கொண்டாலும், விருப்பமில்லாமல் உட்கார்ந்தே இருந்தாள் சின்னத்தாயி

அப்போது வெளியிலிருந்து தனது மகளின், எ பார் ஆப்பிள்.பி பார் பால்என்று படிக்கும் குரல் கேட்டதும், ஒரு முடிவுக்கு வந்தவளாக மாறினாள்

மறுநாள் காலை, மனுவுடன் வட்டாட்சியர் அலுவலகம் சென்ற சின்னத்தாயி, நீண்ட நேர காத்திருப்பிக்கு பின்னர், அலுவலகத்தின் கடைசி மேஜையில் உட்கார்ந்திருந்த ஒரு பெண் அதிகாரியை அணுகி மனுவை அளிக்க அனுமதிக்கப்பட்டாள்

கலைந்த கூந்தலுடனும் கசங்கிய சேலையுடனும் காணப்பட்ட சின்னத்தாயை பார்த்துக் கொண்டே அந்த பெண் அதிகாரி பல மடிப்புகளாக மடிக்கப்பட்டு வியர்வையில் சற்று நனைந்து நிலையில் சின்னத்தாயி வழங்கிய மனுவை ஒரு ஓரமாக பிடித்து வாங்கி படிக்கத் தொடங்கினார்

முழுதும் படித்தவுடன் சின்னத்தாயைப் பார்த்து, சரிம்மாநீ போய் அந்த நாற்காலில உட்கார், இந்த மனுவை உயர் அதிகாரிட்ட காட்டிட்டு வந்தர்றேன்என்று சுவரோரம் இருந்த நாற்காலியை சுட்டிக் காட்டினார் அந்த அதிகாரி

சின்னத்தாயும் காமராஜ் மாமாவுடன் அமர்ந்து காத்திருக்க தொடங்கினாள். சின்னத்தாயி அமர்ந்திருந்த அறைக்குப் பக்கத்திலேயே இருந்த அடுத்த அறையின் கதவை திறந்த அந்த பெண் அதிகாரி அனுமதி பெற்று உள்ளே சென்றார்.

என்னம்மா என்ன கையில அது? எதாவது கையெழுத்து போடனுமா? நான் தான் முக்கியமான வேலையில இருக்கன்னு தெரியுமல்ல, பின்ன ஏன் தொந்தரவு பண்ணிட்டிருக்க என்று கடுகடுத்தார் உள்ளிருந்த உயரதிகாரி

அவரின் கடுகடுப்பான பேச்சையும் பொருப்படுத்தாமல், “மன்னிச்சிடுங்க சார், இதுவும் முக்கியமானது தான். இத வாங்கி கொஞ்சம் படிச்சுப் பாருங்கஎன்று சின்னத்தாயின் மனுவை உயர்திகாரியிடம் நீட்டினார்.

வேண்டா வெறுப்புடன் வாங்கி படித்த அந்த உயரதிகாரியின் கண்கள் ஆச்சியத்தில் விரிந்தது. பின் அந்த பெண் அதிகாரியை பார்த்து, “மனுவுக்கு நம்பர் போட்டாச்ச்சாமாஎன்றார்.

இன்னும் இல்லீங்க சார்

நல்லது, சரி நீங்க போங்க நான் பாத்துக்கறேன்என்றார் சற்று யோசனையுடன்

திரும்பி சென்ற அந்த பெண் அதிகாரி, கதவை சரியாக சாத்தாமல் சென்று விட்டார்.

உள்ளே அமர்ந்திருந்த வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருந்தவர் உயரதிகாரியின் யோசனையைப் பார்த்து, “என்ன சார்? என்னாச்சு? அந்த பேப்பர படிச்சதும் ஒரு மாதிரி ஆகிட்டீங்க

எல்லாம் உங்களப் பற்றி தான், இந்தாங்க படிச்சுப் பாருங்கஎன்று மனுவை அந்த வெள்ளை உடை நபரிடம் நீட்டினார்

மனுவைப் பெற்ற அந்த வெள்ளை உடைக்காரர் படிக்க படிக்க கோபத்தின் உச்சிக்கே சென்றார்

பின், சின்னத்தாயி இந்த லெவல் வரை வந்துட்டாளா?அவள…” என்று கோபத்தில் கத்தினார்.

சார்…. கத்தி எந்த பிரயோஜனமும் இல்ல. இழப்பீடு வரலேனா கமிஷ்னர்டவும் கலெக்டர்டயும் போவேனு சொல்லாம சொல்றாங்க. இதுக்கு என்ன பதில் சொல்லப்போறிங்க?”

அத நான் பார்த்துக்கிறேன். இப்ப என் ஆலைக்கு சீல் வச்சாச்சு. அதுக்கு முதல்ல என்ன செய்யப் போறார்னு அவர்கிட்ட கேட்டு சொல்லுங்க என்று அருகில் அமர்ந்திருந்த மூக்குகண்ணாடி போட்ட நபரை சுட்டிக் காட்டினார்.

உடனே அந்த மூக்கு கண்ணாடி போட்டிருந்தவரும் தன்னிடம் கேள்வி கேட்ட வெள்ளை உடைக்காரை நோக்கி, “சார் அதான் எங்கள எல்லாம் நல்ல கவனிச்சுட்டிங்க. பின்ன எதுக்கு கவலப்படுறிங்க. SRV-னு இருந்த ஆலைக்கு தான் சீல் வச்சோம். அத RVS-னு பேர மாத்தி லைசன்சுக்கு அப்பளை பண்ணிடுங்க. உடனே லைசன்சுக்கு அப்ரூவல் தந்தறோம். என்ன சார் ஓகே தான? என்று கூறி புன்னகைத்தார்.

இதைக் கேட்டு சந்தோசத்தில் திளைத்த வெள்ளை உடைக்காரரையும் மூக்குகண்ணாடி அணிந்திருந்தவரையும் பார்த்து முறைத்தனர் உள்ளிருந்த உயரதிகாரியும் காக்கியுடைக்காரரும்.

பண்ணுவிங்கய்யா, எல்லாம் பண்ணுவீங்க. எங்களுக்கு அள்ளி கொடுத்த மாதிரி அந்த அம்மாவுக்கும் ஒண்ணோ ரெண்டோ கொடுத்து ஆஃப் பண்ண வேண்டியது தான. அந்தம்மா இப்ப கலெக்டர்டவும் கமிசனர்டவும் போச்சுன்னு வைங்க, இழப்பீடு வழங்கியாச்சுனு சொன்ன எங்க நிலைமை என்ன ஆகும்னு கொஞ்சம் யோசுச்சு பாருங்க. உங்களுக்கு உதவப் போய் நாங்க மாட்டிகிருவோம் போல என்று கடுகடுத்தார் அந்த உயரதிகாரி.

சார் நீங்க சொல்றபடி தான் நானும் பாவம் அவ புருஷன் செத்துட்டானே ஏதோ கொஞ்சம் கொடுக்கலாம்னு முதல்ல நெனச்சேன். ஆனா அவ சொன்ன காரணம் என்ன அப்படி கொடுக்க விடாம பண்ணிடுச்சு

அப்படி என்ன காரணம் தான் சொல்லுச்சாமாம் அந்தம்மாஎன்று எரிச்சலுற்றார் காக்கி சட்டைக்காரர்

அவ பிள்ளைய படிக்க வைக்கனுமாம். அவ பிள்ளையும் அவ புருஷன மாதிரி செத்திடக் கூடாதாம். அதுக்காகத் தான் இழப்பீடு கேட்கிறாளாம்.”

இதுல என்ன இருக்கு? அந்தம்மா கேட்டதில என்ன தப்பிருக்கு. அந்தம்மா ஆசைப்படுறதும் நியாயம் தானஎன்ற உயரதிகாரியை வித்தியாசமாக பார்த்த வெள்ளை உடைக்காரர்

என்ன சார் இப்பிடி சொல்லிட்டிங்க. இப்படி கூலிக்காரங்க எல்லாரும் தம் பிள்ளைங்கள படிக்க வைக்க ஆரம்பிச்சுட்டா, எங்க பிள்ளைங்க நடத்துற ஆலைக்கு கூலிக்கு வர யாரு இருப்பாங்க சார்?” என்றவர்

“புருசன் செத்து ஒரு மாசம் கூட முடியல, பொம்பளையா அடக்க ஒடுக்காம வீட்ல இருக்காம, இழப்பீடு பணம்னு அலையுதுங்க பாருங்க. இதையெல்லாம் எதுல சேர்த்தறதுனே தெரியல என்றார் ஒரு வித குரோதத்துடன்.

உள்ளே சென்று திரும்ப வந்த அந்த பெண் அதிகாரி அந்த அறையின் கதவை நன்றாக மூடிவிட்டுச் செல்லாத காரணத்தினால், அறைக்குள் நடந்து கொண்டிருந்த இந்த உரையாடல்களைனைத்தையும் ஒன்று விடாமல் கேட்டுக்கொண்டிருந்த சின்னத்தாயி, தனது முதலாளியின் அந்த கடைசி வார்த்தையை கேட்டதும் தனது கலைந்த கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு கண்கள் சிவக்க அந்த அறைக்குள் ஆவேசத்துடன் பிரவேசித்தாள்

சின்னத்தாயின் இந்த எதிர்பாராத பிரவேசத்தை கண்டு அதிர்த்து போய் எழுந்த முதலாளி, உயரதிகாரி, ஆலை விபத்து நடந்த அன்று பார்த்த மூக்கு கண்ணாடிக்காரர், காக்கியுடைக்காரர் என்று ஒவ்வொருவராக ஒரு பார்வை பார்த்து விட்டு இறுதியில் தனது முதலாளியை நோக்கி கோபத்துடன்

நீங்க சொன்னதெல்லாம் சரி தான்யா. புருசன் செத்து அடக்கமா இருக்காம இப்படி அலையுறது தப்பு தான். அது மட்டுமா தப்பு, இந்த மண்ணுல நாங்க பொறந்தது தப்பு. அப்படியே பொறந்தாலும் வேற வேலைக்கு போக கூட வக்கில்லாம இருக்கோமே அது பெரிய தப்பு.

நீங்க பேசியத எல்லாம் கேட்டு இன்னும் உசுரோட இருக்கேனே அது இன்னும் மிகப் பெரிய தப்பு. ஐயாநான் ஏன் இழப்பீடு இழப்பீடுனு அலையுறேன் தெரியுமா? நல்லா கேட்டுகங்க, நீங்க கொடுக்கற பணத்தை வாங்கி நக நட்டு எடுக்கவோ, இல்ல மெத்த வீடு சொகுசு காருனு பகட்டா வாழந்துக்கவோ இல்லங்கய்யா. இங்க இருந்து எங்கள மாதிரி இதே வேலை செஞ்சு செத்திடாம எம் பொண்ணு நாலு எழுத்து நல்லா படிச்சி வேறு பக்கம் போய் வேற வேல செஞ்சு வசதியா வாழணும்னு கூட இல்லங்கய்யா, உயிரோட வாழ்ந்தாலே போதும்னு தான் ஆசைப்பட்டேன். அதுக்கு தான் இழப்பீடுனு அலையுறேன். ஆனா அந்த ஆசை கூட மன்னிக்க முடியாத பெரிய தப்புனு இப்ப நல்லா புரிஞ்சுட்டேங்கய்யாஎன புயலைப் போல் பேசிவிட்டு கண்களில் ஆறாய் வடியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே விருட்டென்று திரும்பி நடந்து சென்றாள் சின்னத்தாயி

சில மாதங்கள் கடந்தன

சின்னத்தாயினால் வேறு வேலைக்கு எங்கும் செல்ல இயலவில்லை. வேறு பட்டாசு ஆலைக்கு செல்லலாம் என்றால், அவளை வேலைக்கு சேர்த்த யாரும் முன் வரவுமில்லை

ஊர் முழுக்க வேலை வேண்டி அலைந்து திரிந்த சின்னத்தாயி ஓய்ந்து ஒடிந்து விட்டாள். மகளின் வாழ்க்கை நன்றாக அமையவேண்டி ஆசைப்பட்டு முதலாளியை எதிர்த்ததன் விளைவு, அவளை புரட்டி போட்டு விட்டது

இப்படியே போனால் மூன்று வேளை சோற்றுக்கு கூட அல்லல்பட வேண்டி வரும். ‘நன்றாக பிழைக்க வழியில்லாத விதியற்றவர்களால், காலில் விழவும் கண்ணீர் வடிக்கவும் மட்டும் தானே முடியும், ஆசைப்படவா முடியும்என்று நினைத்த சின்னத்தாயி, இறுதி முயற்சியாக வேலைக்கு தன்னை மீண்டும் சேர்த்துக் கொள்ள தனது முதலாளியின் கால்களில் விழுந்து கண்ணீர் வடித்தாள்.

அதற்கு அடுத்த நாள் காலை, “அம்மா நீ போயிட்டு திரும்ப வரும் போது, எனக்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்கிட்டு வாம்மாஎன்ற தனது குழந்தையிடம்

அம்மா திரும்பி வந்தால் கண்டிப்பா உனக்கு மறக்காம ஐஸ்கிரீம் வாங்கிட்டு வர்றேன்மாஎன்று தனது குழந்தையை அனைத்து நெற்றியில் முத்தமிட்டு, தனது கணவனை காவு வாங்கிய அதே ஆலைக்கு வேலைக்குச் செல்ல நடக்கத் தொடங்கினாள் சின்னத்தாயி

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads – Best Deals in Amazon 👇


 

#ads  தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

 

             

                         

  

 

                                    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

8 Comments

  1. ஹூம்,இப்போது நடப்பவை தான் கதையாக வந்திருக்கு. மனசை வேதனைப் படுத்தறது.

  2. யதார்த்தமான வரிகள். உழைக்கும் வர்க்கத்தின் வலிகள். இன்னும் திறக்காத வழிகள். அருமையான பதிவு.

  3. இந்த வலியையும் கடந்து போக வேண்டிய வாழ்க்கை முறை தான் மக்கள் வாழ வேண்டியது இருக்கிறது

  4. பட்டாசு ஆலைத்தொழிலாளர்களின் இன்றைய நிலையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு நல்ல முயற்சி 👏

  5. ஏழை ஏழையாகவே இருக்க வேண்டும் என எண்ணும் தற்போது உள்ள பல முதலாளிகளின் மனநிலையையும், நீதி கேட்டு கூட போராட முடியாத ஏழை மக்களின் நிலையையும் உணர்த்தும் சிறந்த கதை. மிக அருமை

என்று தணியும் இந்த…? (சிறுகதை) – ✍ தாழை. இரா. உதயநேசன், அமெரிக்கா

உணர்வாயோ உயிர்க் காதலை… ❤ (சிறுகதை) – ✍ ஷேஹா ஸகி, ஸ்ரீலங்கா