sahanamag.com
சிறுகதைகள்

ஆள(அ)ரவம் (சிறுகதை) – ✍ தி. வள்ளி, திருநெல்வேலி

பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“ஒயிங்… ஒயிங்…” என்ற ஆம்புலன்ஸ் சத்தம் காதில் விழ, அரைகுறை தூக்கத்திலிருந்த சந்தியா தூக்கம் தொலைத்து, பக்கத்தில் படுத்திருந்த கணவனை எழுப்பினாள்

“என்னங்க… சைரன் சத்தம் கேட்குது. என்னாச்சுன்னு தெரியல… எழுந்திருங்க!”

தூக்கம் கலைந்து எழுந்த மகேஷ் பதட்டமானான். மொத்தமே பத்து பங்களாக்களை உள்ளடக்கிய தெரு அது.

பெரிய பங்களா, சுற்றிச்சூழ பெரிய தோட்டம், ஆளுயர கேட்… என ஒவ்வொன்றும் தனித்தனி தீவாய், வீட்டு வேலை பார்ப்பவர்கள், செக்யூரிட்டி, தோட்டக்காரர்கள் என்று குறிப்பிட்ட சில பேர் மட்டுமே நடமாடக் கூடிய அமைதியான தெரு

மாடி பெட்ரூமில் படுத்திருந்த சந்தியாவும், மகேஷும் கதவை திறந்து கொண்டு மாடி சிட் அவுட்டுக்கு வந்தனர். 

எதிர் பங்களா, தயாரிப்பாளர் தணிகாசலத்தினுடையது. வி.வி. புரொடக்க்ஷன்ஸ் முதலாளி. பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். திரையுலகின் முக்கிய பிரபலம்.

மனைவியை இழந்த தணிகாசலத்திற்கு இரண்டு பிள்ளைகள். மகன் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்க, மகள் கல்யாணமாகி பிள்ளைகளோடு உள்ளூரில் வசித்து வருகிறாள்.

தணிகாசலத்துக்கு வலதுகரமாக, பக்கபலமாக, அவர் தம்பி ராஜசேகர் மட்டுமே அவருடன் வசித்து வந்தார்

சந்தியாவும், மகேஷும்  சிட்அவுட்டுக்கு வர, வெளியே நிறைய கார்கள், போலீஸ் ஜீப்புகள், ஆம்புலன்ஸ் என பெரிய அமளியாக இருந்தது.

போலீஸ் ஜீப் நிற்க, அதன் அருகே நின்றிருந்த இன்ஸ்பெக்டர் தீபன் அண்ணாந்து அவர்கள் இருவரையும் பார்க்க, இருவரும் அவசரமாக உள்ளே வந்து கீழே இறங்கினர்

மகேஷ், செக்யூரிட்டியை இன்டர்காமில் கூப்பிட, செக்யூரிட்டி உள்ளே வந்ததும், “என்ன ஆச்சு எதிர் பங்களாவில்?” என்றான்

“சார் அந்த பங்களாவில தயாரிப்பாளர் தணிகாசலம் அவரு ரூம்ல செத்து கிடந்திருக்கிறாரு. காலைல வேலைக்கு வந்த அம்மா காப்பி கொடுக்க கூப்பிட்டிருக்காங்க. ரூம் திறக்காததால மகளுக்கு போன் பண்ணி அந்தம்மா வந்து திறந்து பாத்திருக்காங்க”  என்று கூற, சத்யாவும் மகேஷும் அதிர்ந்து போனார்கள்.

இன்ஸ்பெக்டர் தீபன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். தணிகாசலம் திரையுலகின் மிகப் பெரிய புள்ளி என்பதால், வெளியில் தெரிந்து கூட்டம் சேரும் முன் பார்மாலிட்டிகளை முடிக்கும் தீர்மானத்தில் இருந்தார்.

கட்டிலில் படுத்த நிலையில் இறந்து கிடந்த தணிகாசலத்தின் உடலில் எந்த காயமும் இல்லை. விழிகள் மட்டும் சற்று பயத்தில் உறைந்தார் போல இருந்தது

பாரன்சிக் டிபார்ட்மெண்ட் விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அவர்கள்  வேலைகளை முடித்துக் கொண்ட பின், உடலை ஆம்புலன்சில் ஏற்ற ஆம்புலன்ஸ்ஸை உள்ளே கொண்டு வர சொன்னார் தீபன்

அழுது கொண்டிருந்த தணிகாசலத்தின் மகள் ராகினியின் அருகில் போன தீபன், “மேடம் பாடியைப் போஸ்ட்மார்ட்டம் பண்ணனும், மற்ற பார்மாலிட்டிஸ் இருக்கு…” என்றதும் ராகினி பெரும் குரலில் அழ, அவளைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் அவள் கணவன் ஸ்ரீராமை நெருங்கினார்

“மிஸ்டர் ஸ்ரீராம்!  பாடியை போஸ்ட்மார்ட்டத்துக்கு ஜி.ஹெச் அனுப்பணும்”

தலையசைத்த ஸ்ரீராம், “சார்… என் மாமா எப்படிச் செத்தார்கள்? என்னாச்சு? ராத்திரி கூட பேசினாரே”

“இனிமேல் தான் விசாரணையை ஆரம்பிக்கணும் மிஸ்டர் ஸ்ரீராம். உங்க மனைவி ரொம்ப உடைஞ்சு போயிருக்காங்க. இப்ப அவங்கள தொந்தரவு பண்ண விரும்பல, மத்தவங்கள விசாரிச்சுட்டு அவங்ககிட்ட வர்றேன். போஸ்ட்மார்ட்டம் முடிந்ததும் தகவல் சொல்றோம், வந்து பாடியை வாங்கிக்கோங்க. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தா தான் அவர் திடீர் மரணத்திற்கான காரணம் தெரியும். அவர் தனியாகத் தான் இருந்தாரா?”

“இல்லை சார், என் சின்ன மாமா, அதான் மாமாவோட தம்பி ராஜசேகர் மாமா அவர் கூட இருந்தார். அவர் தான் மாமாவை கவனிச்சுக்கிட்டார்”

“இப்ப உங்க சின்ன மாமா எங்க?”

“மாமாவோட அடுத்த படத்துக்கு லொக்கேஷன் பார்த்து அப்ரூவ் பண்ண டைரக்டர் உதயச்சந்திரன் கூட சிங்கப்பூர் போயிருக்காரு. அவருக்கு தகவல் சொல்லியாச்சு, அவரும் கிளம்பிட்டாரு. அனேகமா மத்தியானம் வந்துடுவாரு. பாவம் போனிலேயே ரொம்ப அழுதாரு. அவருக்கும் எங்க மாமாவுக்கும் 15 வயசு வித்தியாசம், அதனாலேயே  மாமா அவர தன் தம்பியா பார்க்காம மகனாகத் தான் பார்த்தாரு”

தணிகாசலத்தின் பாடி ஆம்புலன்சில் ஏற்றப்பட்டதும், ஆம்புலன்சும் மற்ற வண்டிகளும் கிளம்ப, தன் விசாரணையை ஆரம்பித்தார் தீபன்.

கான்ஸ்டபிளை அழைத்து,”105…. இந்த வீட்டில் வேலை பார்க்கும் எல்லோரையும் கூப்பிடுங்க” என்றார்

முதலில் அமுதா வந்து நிற்க, “ஏம்மா! நீ தான் முதலில் வந்தியா?”

“ஐயா… நான் தினமும் காலையில அஞ்சு மணிக்கு வந்திடுவேன். வரும் போதே பெரியய்யா எழுந்திரிச்சுடுவாங்க. சின்னவரு 6 மணிக்குத் தான் எந்திரிப்பாரு. ஐயாவுக்கு காபி சீக்கிரம் வேணும். காப்பி குடிச்சுட்டு வாக்கிங் கிளம்பிடுவாரு. இன்னைக்கு காலைல காபி போட்டுட்டு காத்திருந்தேன், ஐயா வரல. நேரமாகியும் வரலைனதும் ராகினி அம்மாவுக்கு போன் போட்டேன். அவுக வந்ததும், கதவை திறந்தோம்” என்றவள் அழ ஆரம்பிக்க

“சரி சரி… நீ போம்மா” என்றவர், அடுத்து செக்யூரிட்டியை கூப்பிட்டார். அவரும் அதே கூற, புதிதாக மேலும் எந்த விபரமும் கிடைக்கவில்லை.

வெளியே வந்த தீபனுக்கு எதிர் பங்களா கண்ணில் பட, “105… வாங்க எதிர் பங்களாவிலேயும்  விசாரிச்சுட்டு வந்துடுவோம்”

சந்தியாவும், மகேஷும் தீபனை வரவேற்று அமரச் செய்தனர்

“நீங்க தணிகாச்சலம் வீட்டிற்கு நேர் எதிர் பங்களா, அதனால விசாரிக்க வந்தோம். மிஸ்டர் மகேஷ், நீங்க என்ன பண்றீங்க? எத்தனை வருஷமா இந்த பங்களாவில் இருக்கிறீங்க? இந்த இரண்டு நாள்ல ஏதாவது வித்தியாசமா நோட் பண்ணுணீங்களா?”

“சார்… நான் கார்மெண்ட்ஸ் எக்ஸ்போர்ட் பண்ணுறேன். நாங்க இந்த பங்களாவ வாங்கி குடி வந்து எட்டு வருஷமாகுது”

“வீட்ல நீங்க ரெண்டு பேர் மட்டும் தான் இருக்கீங்களா?”

“இல்ல சார்… அம்மா, அப்பாவும் ரெண்டு பிள்ளைகளும் என் தம்பி வீட்டுக்கு போயிருக்காங்க”

“ஓகே சார்! உங்க வீட்ல சிசிடிவி கேமரா பார்தேன்”

“ஆமாம் சார்! ரோட்டைப் பார்த்து ஒன்று உண்டு, எதிர் பங்களா கேட் வியூ அதுல நல்லா தெரியும்”

“வெரிகுட், நான் அந்த  சிசிடிவி புட்டேஜ் பார்க்கலாமா?” என்றார் தீபன்.

மகேஷ் சிசிடிவி புட்டேஜ் முழுவதும் காண்பிக்க, இரவு முழுவதும் எந்த நடமாட்டமின்றி சலனமற்றிருந்தது தெரு.  யாரும் உள்ளே வரவும் இல்லை, வெளியே போகவும் இல்லை

இது கொலையாக இருக்க வாய்ப்பே இல்லை, இயற்கை மரணமாகத் தான் இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார் தீபன்

“மிஸ்டர் மகேஷ்… இந்த சிசிடிவி கேமராவின் மூணு நாள் புட்டேஜ் எனக்கு வேணும். 105… நீங்க இருந்து அந்த சிசிடிவி புட்டேஜ் காப்பிய வாங்கிட்டு வாங்க, நான் ஸ்டேஷனுக்கு கிளம்புறேன்” எனக் கிளம்பினார்

போஸ்ட்மார்ட்டம் முடிந்ததும், தணிகாசலத்தின் உடல்  குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சோகமாக உடைந்து போன நிலையில் இருந்தாலும், தணிகாசலத்தின் தம்பி ராஜசேகர் எல்லா ஏற்பாடுகளையும் முன்னின்று செய்து கொண்டிருந்தார். ஸ்ரீராம் அவருக்கு  உதவி செய்து கொண்டிருந்தார்.

திரையுலகமே திரண்டு வந்தது. 50 வருடங்களாக திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த தணிகாசலத்தின் இறுதி சடங்குகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது

திரையுலகத்தினருடன் ராஜசேகரே தொடர்பில் இருந்ததால், எல்லோரும் அவரிடமே துக்கம் கேட்க அலை மோதினர்

ராகினி தலைமாட்டில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள்.

திரையுலகினர் பெரிய ஊர்வலமாக வந்தனர். தணிகாசலத்தின் தகனம் முடிய, வீடு அமைதியானது. ராகினியும், ராஜசேகரும் ஆளுக்கு ஒரு மூலையில் சோகத்தோடு அமர்ந்திருந்தனர்.

“சித்தப்பா… முதநாள் ராத்திரி 10 மணிக்கு  என்கிட்ட  சந்தோஷமாகத் தான் பேசினார். உடம்பு சரியில்லைன்னா சொல்லியிருப்பாரு. என்ன தான் நடந்திருக்கும்? ஒருவேளை திடீரென ஹார்ட் அட்டாக் எதுவும் வந்திருக்குமோ?”

“தெரியலையே ராகினி! என்னாச்சோ? எப்படி துடிச்சாரோ? பாவி நானும் எப்போதும் கூட இருக்கிறவன் சிங்கப்பூர் போய் தொலஞ்சிட்டேன்”

துக்கம் தாங்காமல் உடைந்து போய் அழுதார் ராஜசேகர். ராகினியும் அவருடன் சேர்ந்து கொள்ள வீடே சோகத்தில் ஆழ்ந்தது.

மறுநாள் காலை போலீஸ் ஜீப் வர, தீபன் உள்ளே வந்தார். அவரைப் பார்த்ததும் ராகினி, ஸ்ரீராம், ராஜசேகர் அனைவரும் பரபரப்பாக வந்தனர்.

“ஏதாவது தெரிஞ்சுதா? எங்கப்பா எப்படி இறந்தாங்கன்னு தெரிஞ்சுதா?” என்றாள் ராகினி படபடப்பாக .

“சார் என்னாச்சு! ஏதாவது தெரிந்ததா?” என்றார் ராஜசேகரும்

“மிஸ்டர் ராஜசேகர்! இப்ப தான் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது. உங்க அண்ணன் இறந்தது பாம்பு கடித்ததால். அவர் உடம்பில் பாம்பு விஷம் இருக்கு. பாம்பு கடிச்ச காயமும் இருக்கு”

அதைக் கேட்டு அனைவரும் உறைந்து போய் நின்றனர். ராகினி அலறினாள்.

“என்ன சார் சொல்றீங்க! எங்க அப்பா பாம்பு கடிச்சு  இறந்தாரா? நாங்க இந்த பங்களா கட்டி இருபது வருஷமா குடியிருக்கிறோம்.  நான் இந்த பங்களாவிலேயே வளர்ந்தவ. எந்த பாம்பையும் கண்ணால் கூட கண்டதில்லை.அப்புறம் எப்படி சார் பாம்பு கடிச்சு இறந்திருக்க முடியும்?”

“மிஸஸ் ராகினி…. இத நான் சொல்லல போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லுது. இத நீங்க நம்பித் தான் ஆகணும்” என்றார் தீபன்.

“அம்மா ராகினி! உன் துக்கத்தைக் கட்டுப்படுத்திக்கோ. அவர் தான் சொல்றாரே, அப்படித் தான் நடந்திருக்கும். தோட்டத்தில்  பாம்பு  இருந்ததான்னு தெரியல ” என்றார் ராஜசேகர்

வாரங்கள்  இரண்டு ஓடிவிட, அன்று பதினாறாம் நாள் காரியம்.

நெருங்கிய சொந்த பந்தங்கள், திரையுலக நண்பர்கள் என்று 500 பேர் வரை கூடியிருந்தனர். சந்தியாவும், மகேஷும் கூட காரியத்தில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.

ஐயர் முறைப்படி காரியங்களை செய்விக்க தணிகாசலத்தின் மகன் வெளிநாட்டில் இருந்து வர முடியாததால் இறுதி காரியத்தை செய்த ராஜசேகரே 16ஆம் நாள் காரியத்தையும் சிரத்தையாக செய்து கொண்டிருந்தார்.

 முடியும் தருவாயில், போலீஸ் ஜீப் உள்ளே வர, தீபன் இறங்கி உள்ளே வந்தார். அவருடன் சில  காவலர்களும்  வந்தனர்.

தீபன் நேராக ஸ்ரீராமிடம் போனவர், “என்ன மிஸ்டர் ஸ்ரீராம்! ஸ்டேஷனுக்கு போகலாமா?” என்றார்.

“என்ன சார் சொல்றீங்க? ஸ்டேஷனுக்கு நான் ஏன் வரணும்? எங்க மாமா சாவைப் பற்றி ஏதேனும் தகவல் கிடைத்ததா?”

“நடிக்காதீங்க மிஸ்டர் ராம்!  உங்க மாமாவ  நீங்களே ஆள் வைச்சு கொலை பண்ணிட்டு இப்ப ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிறீங்களா?”

“என்ன சார் சொல்றீங்க! இவரா? கொலையா?” நம்ப முடியாதவளாக உறைந்து  போய் நின்றாள் ராகினி.

ராஜசேகர் நம்ப முடியாதவராய் அதிர்ச்சியோடு, “சார்! அவர் இந்த வீட்டு மாப்பிள்ளை. அவர் எப்படி சார் எங்க அண்ணனை கொல்லுவாரு? நீங்க தானே பாம்பு கடித்து எங்கண்ணன் செத்ததா சொன்னீங்க”

“இப்பவும் சொல்றேன்  ராஜசேகர், அவர் பாம்பு கடித்ததால் தான் செத்தாரு. ஆனால் அந்த பாம்பு தானாக கடிக்கலை, இவரால கடிக்க வைக்கப்பட்டது.  நான் விளக்கமா சொல்றேன்…

கேளம்பாக்கத்தில தணிகாசலத்துக்கு பத்து கிரவுண்டு இடம் ஒன்று இருந்துருக்கு.. அதை அவர் வெளிநாட்டில் படிக்கிற தன் மகன் திரும்பினதும், அவருக்கு ஒரு கம்பெனி கட்ட வைத்திருந்தார். அந்த இடத்தை ஸ்ரீராம் தன்னுடைய சிரமிக் பேக்டரிக்கு கேட்டிருக்கிறார்.

தணிகாசலம்  மகள் பெயரில வேற சொத்து இருக்குறதால இது மகனுக்குன்னு சொல்லிட்டாரு. அதே போல இருக்கிற வேற ஒரு இடத்தையாவது தர சொல்லி கேட்டிருக்காரு. அந்த இடத்தை தன் மகன் போல தான் நினைக்கும் ராஜசேகருக்கு வேணும்ன்னு சொல்லிட்டாரு தணிகாசலம்

அது ஸ்ரீராமுக்கு பெரிய ஏமாற்றத்தையும், மிகப்பெரிய வேகத்தையும் கிளப்பி விட்டிருக்கு. அதனால துல்லியமா பிளான் போட்டு இந்த கொலையை பண்ணியிருக்காரு.

தணிகாசலத்தின் ஒரு படத்தில் அறிமுகமான பாம்பாட்டிய வரவழைச்சிருக்காரு ஸ்ரீராம். பாம்பாட்டியும் அவரைக் கொத்த அவர் சட்டைய பாம்புகிட்ட மோப்பம் பிடிக்க கொடுத்தா போதும் அவரை சரியாக கொத்திடும்ன்னு சொல்லி இருக்கான். அதே போல தணிகாசலம் சட்டைய எடுத்துட்டு போய் கொடுத்திருக்காரு

சட்டையை எடுப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை, ஏன்னா  அவர் தினசரி இங்க வந்துட்டுப் போற ஆளு தானே. ஆனா இவருக்கு உடந்தையா இருந்தது யாருன்னு தெரியுமா?”

மெதுவாக நழுவ முயன்ற அமுதாவை இரு காவலர்கள் பிடித்துக் கொள்ள, “சம்பவம் நடந்த அந்த நாள்ல பின் கதவை தாழ் போடாம, சும்மா சாத்தி வைச்சுட்டு போனாங்க இந்தம்மா. தணிகாசலம் அறைக்கதவை உள்தாழ் போடற பழக்கமில்லை என்பது இவங்களுக்கு வசதியா போச்சு

அந்த பாம்பாட்டி சப்தமில்லாமல் பின் கதவு வழியே உள்ளே நுழைந்து காரியத்தை முடிச்சிட்டு போனதும், ஸ்ரீராம் வந்து ஏற்கனவே தயார் பண்ணி வச்சிருந்த பத்திரத்தில்  தணிகாசலத்தினுடைய விரல் ரேகையை பதிவு பண்ணிட்டு போயிட்டாரு.

போற போக்குல பெருவிரல் மையை சரியா அழிக்கல. அன்னைக்கு பார்த்தப்ப  அந்த கறை பெருசா எனக்கு உறுத்தலை. ஆனா ராகினி இந்தப் பகுதியில் பாம்பே கிடையாதுன்னு அடிச்சு சொன்னது தான் என்னை யோசிக்க வைத்தது. எவ்வளவு திட்டமிட்டு ராஜசேகர் சிங்கப்பூர் போயிருந்த சமயத்தை பயன்படுத்தி இருக்காரு” என முடித்தார் தீபன்

பிறகு எதிர் பங்களாவில் வசிக்கும் சந்தியா, மகேஷை பார்த்து, “சார் குற்றவாளியை பிடிச்சதுல்ல உங்க பங்கு முக்கியமானது. நீங்க குடுத்த சிசிடிவி பிரதியை திரும்பத் திரும்ப பார்க்கும் போது சம்பவத்தன்று, ஒரு புதியவன் பகலில் கையில் கூடையுடன் காய்கறி விற்பவன் போல, அந்த வீட்டைத் தாண்டி இருமுறை போய் வருவதை பார்த்தேன்.

மேலும் சந்தியா இந்தத் தெருவுக்குள் எந்த வியாபாரியும் வர மாட்டார்கள் என்று சொன்னதும் நினைவுக்கு வந்தது. அவன் கையில் வைத்திருந்த கூடை வித்தியாசமாக இருக்க, அதை பற்றி விசாரித்தேன். அது பாம்பு பிடிப்பவர்கள் பயன்படுத்தும் கூடை என்ற தகவல் கிடைத்தது.  விசாரணை சரியான பாதையை எட்டியது.

அப்புறம் அந்த பாம்பாட்டியைப் பிடித்து எங்கள் பாணியில் விசாரிக்க, அவன் உண்மையை ஒத்துக் கொண்டான். எவ்வளவு அழகாக இயற்கையான மரணமாக காண்பிக்க பிளான் பண்ணியிருக்காரு, இது யாருக்குமே தோணாத யுக்தி”

ஸ்ரீராமையும் அமுதாவையும் காவலர்கள் ஜீப்பில் ஏற்ற, ராகினியின் அழுகை வாசல் வரை கேட்டது.

அதிர்ச்சியில் உறைந்து போய் அழும் ராகினியை அணைத்துக் கொண்ட ராஜசேகர், “அழாதடா… இனிமேல் அப்பா இடத்தில் நான் உன்னை நன்றாக கவனிச்சுக்கறேன்” என்று ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்.

(முற்றும்)

‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!