பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
வேகமாக வந்த மாலினி, மருத்துவமனை முன்பு இருந்த கண்ணாடிக் கதவின் வழியாகப் பார்க்க, யாரோ குண்டாக யானை போல் ஆசைந்து வருவது தெரிய, பின்னால் திரும்பிப் பார்த்தாள்.
அவளுக்கு பின்னால் வேறு சிலர் வந்து கொண்டிருந்தனர். ஆனால் அதில் கண்ணாடியில் பார்த்தது போல் யாரும் இல்லை
‘வேறு யார் இவ்வளவு குண்டாக?’ யோசித்தபடியேப் பார்த்தவள் அதிர்ந்து போனாள் !
அது அவளே தான்
நானா?
இது நிஜம் தானா?
கைகளைத் திருப்பிப் பார்த்தாள் மீண்டும். ஆம்… அது அவளே தான்.
வழுவழுவென்று மூங்கில் போன்றக் கைகள் எங்கே? சங்கு போன்ற கழுத்து, இன்று சதைத் தொங்கிக் கொண்டு?
கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக குழந்தை பாக்கியம் பெறத் தின்ற மாத்திரைகளின் விளைவுகள் என்று புரிந்தது அவளுக்கு. கண்ணாடியில் அவளை, அவளேப் பார்த்து இரண்டு வருடங்கள் ஆயிற்று,
மாமியார், நாத்தனாரின் குத்தல் பேச்சுக்களால் பேருக்கு தலை சீவி, பொட்டிடுவதோடு சரி, பிறகு கண்ணாடியின் முன் நிற்பது கூடக் கிடையாது
இந்த ஆறு வருடங்களில் வாழ்க்கை எவ்வளவு மாறிப் போயிற்று என்று நினைக்கும் போதே அவளின் கண்கள் கரித்தது, அழுகையைத் தொண்டைக்குள் இறக்கிக் கொண்டாள் மெதுவாக.
திருமணமான புதிதில் சுதாகரன் மாலி, மாலி என்று அவள் பின்னேயே சுத்துவான். இன்றோ பெயரை உச்சரிப்பதே இல்லை.
மருத்துவமனை வாயிலில் அவள் நிற்பது கண்டு வந்த சுதாகரன், ‘ஏன்?’ என்று புருவத்தை உயர்த்தி பார்த்தான்.
மாலினி சமாளிப்பாக, “நீங்கள் வரட்டும் என்று….” முடிக்காமல் நிறுத்தியவளை, சைகையால் வாவென்று கூறி முன்னே நடந்தான்.
இன்று அவளுக்கு எந்த பரிசோதனைகளும் இல்லை எனவே, நேராக மருத்துவரிடம் சென்றனர்.
மருத்துவர் அரவிந்த், சுதாகரனின் பள்ளிப் பருவத்தில் இருந்து நண்பன். இன்று மாலினியை வைத்துக் கொண்டு அவன் நண்பனிடம் பேசினான்.
“இதுவரை மாலினிக்கு எல்லா விதமான பரிசோதனைகளும் செய்தாயிற்று, எந்த பிரச்சினையும் இல்லை. நீ அம்மா சொல்வதைக் கேட்டு பரிசோதனை செய்யாமல் இருக்க குழந்தை இல்லை சுதா. புரிந்து கொள்ள முயற்சி செய், நீயும் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்” என்று கூறி விளக்கம் தர பரிசோதனை மேற்கொள்ள ஒத்துக் கொண்டான் சுதாகரன்.
பரிசோதனை முடிவுகள் அடுத்த இரண்டு நாட்களில் வந்துவிடும் என்று கூறி அரவிந்த் வீட்டிற்கு அனுப்ப, வீட்டில் மாமியார் சுமித்ராவோ சுட்ட அப்பளம் போல் பொரிந்து தள்ளி, கடைசியில் மாலினி கடைவாயில் ஒரு இடியும் இடித்துச் சென்றாள்.
திருமணமாகி வீட்டோடு தங்கி விட்ட நாத்தனார் கார்த்திகா, ‘கடம்’ வாசிக்க, மாமியார் காலைத் தூக்கிக் கொண்டு நாட்டியம் ஆட, “ஆட்டத்தை என்னவென்று சொல்வது அப்பப்பா….”
சுதாகரன் என்னவென்று கூடக் கேட்கவில்லை. பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் மாலினி சாப்பிடவோ, தூங்கவோ, ஏன் கழிவறை செல்லக் கூட விடாமல் பேச்சாலும், செயலாலும் படாதபாடு படுத்தி விட்டனர்.
இரண்டு நாட்கள் கழித்து இருவரையுமே மருத்துவமனை வர அழைத்தான் மருத்துவர் அரவிந்த். இருவரும் சேர்ந்து சென்றாலும் முடிவை நினைத்து பெரும் கலக்கத்துடன் சென்றாள் மாலினி
அரவிந்த் பெரும் பீடிகையோடு தான் ஆரம்பித்தான்
“நிறை குறைகளைக் கண்டு கொள்ளாமல் இருவரும் மனம் ஓத்து வாழ வேண்டும்” என்று அவன் பேசிய எதுவுமே மாலினிக்கு மனதில் ஏறவில்லை
ஆனால், கடைசியில் அவன் கூறிய பரிசோதனை முடிவு, “சிறு வயதிலே சுதாகரனுக்கு ஏற்பட்ட அம்மைநோயின் விளைவாக, அவன் ஒரு குழந்தைக்கு தந்தையாகும் பாக்கியத்தை இழந்து விட்டான்” என்பது தான்
இருவருமே அதிர்ந்து போய் அமர்ந்திருந்தனர்
மெதுவாக சோர்ந்து போய் வெளியே வந்த சுதாகரன், மாலினியைத் திரும்பிப் பார்த்தான். அவளோ, யோசனையோடு திசைதெறியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
காரில் ஏறி அமர்ந்த பிறகு, அது வீடு நோக்கி செல்லாமல் பூங்காவில் நுழைந்தது. அவளது கையை ஆதரவாய் பற்றி அழைத்துக் கொண்டு சென்றான் சுதாகரன். ஆச்சரியமாக இருந்தது மாலினிக்கு
திருமணமான புதிதில் மட்டுமே அவள் கையை ஆசையோடு பற்றி இருக்கிறான். இந்த ஆறு வருடங்களில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக ஒரு குற்றவாளி போல் நடத்தப்பட்ட மாலினிக்கு, இன்று சுதாகரனின் இந்த திடீர் பாசம் புரியாமல் விழித்தாள்.
உட்கார இடம் தேடி அமர்ந்தவன், அவளைத் தன்னருகே அமர்த்திக் கொண்டு பேச்சை ஆரம்பித்தான்.
“குழந்தை இல்லாதது பெரும் குறை அல்ல மாலினி, எத்தனையோ தம்பதிகள் ஒருவருக்கொருவர் குழந்தையாக உள்ளனர் அதுபோல் நீயும் நானும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம், இனி இதைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம்” என்று அவன் கூறியது கேட்டு பெரும் ஆச்சர்யத்தில் அமர்ந்திருந்தாள் மாலினி.
‘இத்தனை நாளாய் இது தெரியவில்லையா இவருக்கு, எனக்குப் பிரச்சினை என்றால் நான் தான் குற்றவாளி! இவருக்கு பிரச்சினை என்றால் இருவரும் சேர்ந்து பிரச்சினையை எதிர்கொள்வோம் வா; என்று அழைக்கும் சுயநலக்காரனை என்ன செய்யலாம் என்று யோசித்தாள்.
சுதாகரன் தன் குறை வெளியே தெரியக் கூடாது என்ற கோணத்தில் பேசியது அவளின் மனதிற்கு ஏற்புடையதாக இல்லை. அமைதியாக அவன் பேச்சுக்களுக்கு செவி மடுத்தவள் எதுவுமே பேசவில்லை.
மேற்க்கொண்டு அவளை உணவகத்திற்கு அழைத்துச் சென்று பலவிதமான உணவுகளை தருவித்து சாப்பிட சொன்ன கணவனின் புதுப் பாசத்தில் மனது ஒட்டவில்லை மாலினிக்கு.
‘ஆளுக்கொரு நியாயமா? அல்லது ஆண்டுக்கொரு நியாயமா?’ என்ற கேள்வி அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
இருவரும் வீட்டிற்குச் சென்று சேர்ந்ததும், மாமியார் சுமித்ரா நடுக் கூடத்தில் நிற்க வைத்து, “இவளைத் இத்தோடு அத்து விடு, இவளால் தானே உனக்கு இந்த அவமானம் என்று காட்டுக் கத்தல் கத்த”
“தாராளமாக” என்ற மாலினியின் பதிலில் அதிர்ந்து போனாள் மாமியார் சுமித்ரா .
காரத்திகா ஏதோ பேச வாயெடுக்கும் முன், சுதாகரனின் “எல்லாரும் வாயை மூடுங்க” என்ற சத்தம், அனைவருக்கும் புரியாத ஒன்றைப் புரிய வைத்தது
இனி மாலினிக்கு உண்டான நியாயம் கிடைக்குமோ இல்லையோ, அவளுக்கு எதிரான அநியாயம் நடக்காது.
(முற்றும்)
‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings