குறுநாவல்

நினைக்கத் தெரிந்த மனமே ❤ (குறுநாவல் – பகுதி 2) – ✍ சுஸ்ரீ, சென்னை 

பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

இந்த குறுநாவலின் மற்ற பகுதிகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“அது வந்து… நீ என்னோட ஏஞ்சல்”

“ஓஹோ… அப்படி போகுதோ கதை. மூணு வருஷம் நினைப்பு கூட இல்லை, ஏஞ்சலாமில்ல”

“இல்ல மாலு…”

நான் ஆரம்பிக்கும் முன் யாரோ தெருமுனைல திரும்பி வர சத்தம் கேக்க, “மீனாட்சி காலேஜ்”னு சொல்லிட்டே உள்ள ஓடிட்டா. என்னையும் மடிச்சு தூக்கிட்டு போய்ட்டா.

உள்ள திரும்பின என் நடைல என்னை அறியாம ஒரு துள்ளல், பாட்டு கூட வந்தது. கிணத்து பக்கம் ரஜினி நடைல போன என்னை, அகிலா மாமி அதிசயம் போல பாத்தா. 

திரும்ப ஒரு தரம் குளிச்சேன். வீபூதி வச்சிண்டு, ஸ்வாமி படங்களுக்கு பொதுவான ஒரு கை கூப்பி நமஸ்காரம். வாசலுக்கு வந்தா, அம்மா வந்துட்டா.

அம்மாவை மறிச்சு தோளை பிடிச்சேன், “நான் காபி கலக்கட்டுமா?”ன்னேன்.

“என்னடா கண்ணா ஆச்சு உனக்கு, ஏதாவது கழிப்பு சுழிப்பை மிதிச்சிட்டு வந்துட்டையான்”றா

“போம்மா… உன் மேல எனக்கு பாசம் இருக்காதா?”

“இருக்கும் இருக்கும், இன்னிக்கு அதிசயமா பொத்துட்டு வெளில வருதே, அதான் கேட்டேன். யாரு அவ, டிகிரி முடிச்சு வேலை தேடிக்கோ, அப்புறம் எல்லாத்துக்கும் நேரம் வரும்”னு சொல்லிண்டே உள்ள போறா. 

எப்படி என் முகத்தை வச்சே மனசை பாத்தா. என்னோட யதாஸ்தான திண்ணைக்கு வந்து தெருவை பாத்து உக்காந்துண்டேன். தெருன்னு சொன்னேன், ஆனா கண்ணு எதுத்தாப்ல இருந்த அந்த ரெண்டு திண்ணைக்கு நடுவில இருக்கற 5 படிய தாண்டி, பித்தளை குமிழ் பதிச்ச பர்மா தேக்கு கதவையும் தாண்டி, உள்ளே எதையோ தேடுதே.

அம்மா பின்னால வந்தது கூட தெரியல்ல. ரெண்டு டம்ளர்ல காபியோட வந்த அம்மா, தானும் திண்ணைல உக்காந்தா.

“முதல்ல இதை குடி, சூடு ஆறிடும்” 

காபி டம்ளர் காலி ஆற வரை பேசாம இருந்த அம்மா, திரும்ப நான் பயந்துண்டிருந்த கேள்வியையே கேட்டா

“யாரு அவ?”

“என்னம்மா?”

“சொல்லலாம்னா சொல்லு, தோளுக்கு மேல வளந்துட்டே. ஆனா ஒண்ணு சொல்வேன், நீ படிச்சு டிகிரி வாங்கி ஒரு நல்ல உத்யோகம் சம்பாரிச்சுக்கோ. அப்புறம் நீ யாரை இழுத்துண்டு வந்தாலும் இந்த அம்மாவுக்கு பயமில்லை. உங்கப்பா மட்டும் இருந்திருந்தா இதைக் கூட நான் சொல்ல வேண்டி இருந்திருக்காது”

கண்ணை துடைச்சிண்டே காலி டம்ளர் ரெண்டையும் உள்ளுக்கு தூக்கிண்டு போனா அம்மா

இரவு கனவு. பூவால அலங்காரம் பண்ணின காஷ்மீர் போட் ஹவுஸ், நானும் மாலுவும் திண்டுல சாஞ்சிண்டு டால் லேக்கோட அழகில் மயங்கியபடி கை கோத்துண்டு உக்காந்திண்டிருக்கோம். திரைச்சீலையை விலக்கிண்டு அம்மா டீ கெட்டில, பனிக்குல்லா போட்டு மூடி எடுத்துண்டு வரா

கூடவே தங்க கோடு போட்ட பீங்கான் கோப்பைகளும். “இதர் ரக்கே ஜாவ்”னு மாலு கொஞ்சம் அதிகாரத் தொனில, சின்ன டீ டேபிள காட்டறா. 

நான், “ஏ அது என் அம்மா” பலமா சொல்றேன். 

“என்னடா அம்மாவுக்கு”னு அம்மா எதுத்தாப்பல நின்னா தூக்கம் கலைஞ்சு

நான் “ஒண்ணும் இல்லைம்மா”னு சொல்லிண்டே கிணத்தடிக்கு போனேன்.

பின்னால அம்மா மெதுவா பாடறது கேட்டது 

“எந்து போதுனே, ஏமி சேயுதுனே, ஏ சோட்லனே முறை பெட்டுதுனு” 

அம்மாவோட பழக்கம் அது, சமயத்துக்கு தகுந்த மாதிரி ஏதாவது பாடிட்டே இருப்பா.

இன்னிக்கு சீக்கிரம் குளிச்சிட்டு, கிரே கலர் டீ ஷர்ட், புளூ ஜீன்ஸ், ரேபான் சகிதம் தயாராயிட்டேன். எப்பவும் 10 மணி காலேஜுக்கு 9 மணி இல்லேன்னா 9.15 க்கு கிளம்புவேன். இன்னிக்கு 8.30 க்கு ரெடி.

அம்மா தான் இன்னும் லஞ்ச் டப்பா கொடுக்கணும். வாசல் கதவுகிட்ட நின்னு தெருவ வேடிக்கை பாத்தேன். கண்ணு என்னமோ காந்தத்தாலே இழுபட்ட மாதிரி எதுத்த வீட்டு கதவுக்கு தான் போச்சு.  கடைசியா காட்சி கிடச்சது

மாலுவும் அவ அப்பாவும் கதவை திறந்து வெளியே வந்தார்கள். மாலு காலேஜ் போக தயாராக பை சகிதம். முதல் நாள் என்பதால், அப்பா கூட என நினைக்கிறேன். அவள் அப்பாவை முன்னால் விட்டு பின்னால் வந்தாள். கையை தூக்காமல் உள்ளங்கை மட்டும் உயர்த்தி எனக்கு டாடா காட்டினாள்.

அனேகமாக சந்தை ஸ்டாப்பில் பஸ் ஏறுவார்கள்னு நினைக்கிறேன். உள்ளே திரும்பி அம்மாவை அவசரப்படுத்தி லஞ்ச் டப்பாவை பையிலே திணிச்சிட்டு சைக்கிள்ல தாவி ஏறி புறப்பட்டேன், திரும்பி பாக்காமலேயே 

அம்மா வாசலுக்கு வந்து அதிசயத்தோட பார்ப்பதை உணர்ந்தேன்.

7ம் நம்பர் பஸ் நமக்கு வேணும்னா நாம நிக்கறதுக்கு எதுத்த பக்கத்தில 2,3 பஸ் வரிசையா போகும். வேணாம்னா ரெண்டு பக்கத்திலயும் சத்தியத்துக்கு கட்டுப்பட்ட மாதிரி நிக்கும். 

இன்னிக்கு என்னோட நாள், நான் சைக்கிளை திருப்பி சந்தைக்கு எதுத்தாப்பல வந்தப்ப, மாலுவோட அப்பா பஸ் ஸ்டாப்புக்கு பக்கத்திலிருந்த வாழைப்பழ வியாபாரியோட மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார். மாலு பஸ் வர திசைல நோட்டம் விட்டிட்டிருந்தா

நான் சைக்கிள ஹோட்டல் வாசல்ல நிப்பாட்டி காலை ஊன்றிய படி, பெட்டிக் கடை பையனோட சுகதுக்கம் விசாரித்தேன். மாலு என்னை கவனித்து விட்டாள் என்பது அவள் முகத்தில் கூடிய மிடுக்கே காட்டிக் கொடுத்தது. 

மாலுவை பாத்து, ‘என் கூட சைக்கிள்ல வரயா’ங்கற மாதிரி ஜாடை காட்டினேன்

அவள் தன் கட்டை விரலை மட்டும் நாசூக்காக திருப்பி ‘அப்பாவை கேளு’ங்கற மாதிரி காட்டிட்டு ஸ்டைலா தலை முடியை கையால் ஒதுக்கிக் கொண்டாள். அப்படியே என்னை மயக்கதில் ஆழ்த்திய அந்த அனுபவம் எனக்கு புதுசு. 

கடைப் பையன், “என்னண்ணே… லவ் பண்றீங்களா?”ன்னான்

“போடா உளறாதே”ன்னேன்

“அந்த அக்கா உங்களை டாவ் அடிக்குது தெரியுதுண்ணே” ன்னான். எனக்கு நெஞ்சு பூரா வனிலா ஐஸ்கிரீம்.

பஸ் வந்தது, மாலுவும், மாமாவும் (எனக்கு இனிமே மாமா தானே) பஸ் ஏறினார்கள். என் கண்களும் நாய்க்குட்டியாய் பின்னாலேயே. பெண்கள் பக்கம் ஜன்னல் ஓரம் மாலு, நான் தெருவில் இருந்து பார்க்க சவுகரியமா. மாமா எங்கே உக்காந்தா நமக்கென்ன. அவள் எனக்காகவே ஒரு பிரத்யேக புன்னகை பூக்க, என் இதயம் 7ம் நம்பர் பஸ் கூட புகை விட்டுக்கிட்டே போயிருச்சு.

அப்புறம் சைக்கிளை விக் விக்னு மிதிச்சிட்டு காலேஜ் போனது, மாலு ஜபத்தோட கல்லூரி மணிகளை கரைத்தது, இதுல உங்களுக்கென்ன இன்ட்ரஸ்ட். 

இரண்டு மூன்று நாட்கள் இப்படியே போச்சு. சனிக்கிழமை ரிகார்டு நோட்டுகளை பரப்பிக் கொண்டு திண்ணைல உக்காந்தேன. ஒரு அரை மணி நேரம் ரிகார்டு புக்ஸ் கூட போராடி இருப்பேன்.

வாசல்ல நிழலாடியது, திரும்பினா மாலு ஒரு சீரியஸ் முகத்தோட நிக்கறா. என்னை பதற்றம் தொற்றிக் கொண்டது. 

“என்னாச்சு மாலு என் தேவதையே” கேட்டுட்டே கதவை திறந்தேன்

எனக்கு தெரிஞ்சு மாலு எங்க வீட்டுக்கு வர்றது முதல் தடவை. ஒருவேளை அக்கா இருந்தப்ப எப்பவாவது வந்திருக்கலாம்.

உள்ளே வந்த மாலு “உங்கம்மாவை பாக்கணும்”னா

“ஏன் என்கிட்ட சொல்லு”ன்னேன்

“இல்லை உங்கம்மாகிட்ட சொல்ல சொல்லி தான் எங்கம்மா சொன்னா” என்றாள், இன்னும் சீரியஸான முகத்தோட. என்னை பயம் தொற்றிக் கொண்டது. 

“என்ன மாலு, நீயா பேசினதால தானே”ன்னு இழுத்தேன்

“சும்மா விசாரிச்சா… தினம் பஸ் ஏத்தி விட, இறங்கினா பின்னாலயே சைக்கிள்ல, ரோட்ல பாக்கறவா என்னைத் தானே பேசுவா. உனக்கென்ன தேவதை , தேவையில்லாத பைன்னு , ஏதாவது சொல்லிட்டு கழண்டுக்குவே”

“இல்லை மாலு… இனிமேல”னு நான் நடுக்கத்தோட ஆரம்பிக்கறப்ப, அம்மாவே வெளில வந்துட்டா. 

மாலுவை பாத்து, “வாடிம்மா குழந்தை, பக்கத்தில பாத்து யுகாந்திரம் ஆச்சு. அம்மாவை திரிஷ்டி சுத்தி போடச் சொல்லு. அழகா சூப்பரா வளந்துட்டே, யார் கொத்திண்டு போப்போறாளோ. என்ன… மூர்த்திகிட்ட ஏதாவது டவுட் கேக்க வந்தயா?”

“ஐயே இவன்கிட்ட டவுட்டா?”னு முகத்தை கோணிண்டு வக்கணை காட்டறா. எனக்கு உள்ளுக்குள்ளே நடுக்கம்.

“இல்லை எங்கம்மா உங்ககிட்ட தான் அனுப்பினா”ன்னா. 

“சொல்லுடிம்மா, என்ன சமாச்சாரம்?” இது எங்க அம்மா. 

“உள்ளே வாங்கோ”ன்னு அம்மா கைய பிடிச்சு உள்ளே கூட்டிண்டு போயிட்டா. எனக்கு மனசு பயத்தில வெட வெடத்தது. அம்மா கேட்டா எப்படியெல்லாம் பதில் சொல்லணும்னு யோசிச்சேன்

பத்து நிமிஷம் கழித்து மாலு வெளியே வரப்போ, “இப்பப் போ, அம்மாக்கு பதில் சொல்லு. ஆளைப்பாரு பயந்தாங்குள்ளி, காதலிக்க வந்துட்டாரு, தேவதையாம்”னு முகத்தை தோள்பட்டையில் இடிச்சிண்டு ஓடியே போயிட்டா.

நானும் பயத்தை முழுங்கிண்டு அம்மா வருவான்னு காத்திருந்தேன். இருபது நிமிஷம், முப்பது நிமிஷம், அம்மா வரவேயில்லை. இந்த மாலு குரங்கு சரியா போட்டுக் கொடுத்திருக்கும்

மெதுவா நல்ல பிள்ளையாட்டம் உள்ளே போனேன், அம்மா இருந்த சமையலறை பக்கம். அம்மா ஏதோ சமையல் வேலைல பிஸியா இருந்தா, என்னை திரும்பி கூட பாக்கலை

“அம்மா”னு மெதுவா கூப்பிட்டேன்

சடக்னு திரும்பின அம்மா, “நானே உன்னை கூப்டணும்னு இருந்தேன். கிணத்தடிக்கு போயி கொஞ்சம் முருங்கை இலை பறிச்சிண்டு போய் எதுத்தாத்தில கொடுத்துட்டு வா. மாலு நானே பறிக்கிறேனு தான் சொன்னா.  ஆனா உயரத்தில இருக்குனு வந்துட்டா, நான் தான் மூர்த்திட்ட கொடுத்தனுப்பறேன்னு சொன்னேன். இப்ப மாலு ரொம்ப அழகா வளர்ந்துட்டா இல்ல?” னா அம்மா 

அப்பா… ஒரு அரைமணி நேரத்திலே கலக்கிட்டாளே என்னோட தேவதை, இருக்கட்டும் அப்புறம் பாத்துக்கறேன். முருங்கை கீரையோட நல்ல இளம் முருங்கை காயா நாலஞ்சு பறிச்சு எடுத்துண்டு எதுத்தாத்து கதவை தட்டினேன். 

“மாலுஊஊ… யாருன்னு பாரு” அவ அம்மா குரல் கேட்டது. 

பதிலுக்கு, “போம்மா நான் படிச்சிண்டிருக்கேன், நீயே கதவை திற” மாலுவோட பதிலும் கேட்டது. 

மாமி தான் கதவை திறந்தா, “வாடா அம்பி , பார்வதி பையன் தானே. இப்பல்லாம் எங்காத்துப் பக்கம் வரதே இல்லே, எல்லோரும் பெரிசாயிட்டேள்”

“அம்மா கொடுத்துட்டு வரச் சொன்னா” கீரை, காயை நீட்டினேன். 

“உள்ளே வாடா அம்பி, ஒரு வாய் தீர்த்தம் சாப்பிட்டுப் போ”

இந்த வீடு அவா சொந்த வீடு. பரந்து விரிந்து இருந்தது. நடுஹாலில் பெரிய மர ஊஞ்சல், தாராளமா 4 பேர் உக்காரலாம். ஒரு திறந்த வெளிமுற்றம், கீழே 3 ரூம், கிச்சன், பின்னால ஒரு குட்டி தோட்டம், பெரிய கிணறு. ஹாலில் இருந்து வளைஞ்சு ஏறின மாடிப்படி. மேலே அமைப்பா 2 பெரிய அறைகள்.

மாலுவோட தாத்தா கட்டின வீடு, குறைஞ்சது 100 வருஷ பழசு, ஆனா அமைப்பான வீடு. உள்ளே ஹாலுக்கு போனேன், மாலு ஊஞ்சல்ல குப்புற படுத்துண்டு ஏதோ வாரப் பத்திரிகைய மேஞ்சிண்டிருந்தா. என்ன நடிப்பு என்னை பாக்காத மாதிரி.

அவ அம்மா, “ஏண்டி மாலு… ஆத்துக்கு யாராவது வந்தா மரியாதை தெரிய வேண்டாமோ? எதுத்தாத்து அம்பி வந்துருக்கான் பாரு, உக்காரச் சொல்லி ஒரு டம்ளர் தீர்த்தமாவது குடு” மாலு விருட்னு எழுந்தா

ஸ்டீல் சேரை நகர்த்தி போட்டு, “உக்காரு அம்பி”னு நக்கலா சொல்லிட்டு நாக்கை துருத்தி காட்டி தலையை அழகா ஆட்டினா. கோபத்துக்கு பதில் எனக்கு அவளை அப்படியே கட்டிக்கணும் போல தோணித்து. ஒரு டம்ளர்ல உப்பு கரிவேப்பிலை, பெருங்காயம் கலந்த மோர் கொண்டு வந்து கைல கொடுத்தாள்

வாங்கின உடனே என்னோட முன்னங்கைல நறுக்னு ஒரு கிள்ளு. “ஆ”ன்னு நான் சத்தம் போடு முன், தன் தந்தக் கையால சட்னு என் வாயை மூடிட்டு, “என்ன அம்பி… மோர் ரொம்ப சூடோன்றா”

“அடி ராட்சசி… இப்படி கிள்றயே”ன்னா

“காலைல தேவதை… இப்ப ராட்சசியா? போடா அம்பி, இந்த ராட்சசியோட சாவகாசம் உனக்கு வேண்டாம்”னு மூஞ்சியை தூக்கி வச்சிண்டா.

நான் சட்னு எழுந்து அவளை ஒரு கையால் இடுப்பை வளைத்து கன்னத்தில் முத்தமிட்டு விலகினேன். 

கிணத்தடியிலிருந்து அப்ப தான் திரும்பிய அவ அம்மா, “என்னடா அம்பி நன்னா படிக்கறயோன்னோ, சரி அம்மாவை வேளை இருந்தா வரச் சொல்லு (அதுக்கு அர்த்தம் இப்ப நீ போகலாம்)”

மாலுவை பாத்து, “கன்னத்தில என்னடி பவுடரா வெள்ளையா?”னு அவ அம்மா கேக்க, நான் மாலுவை பாத்து சிரிச்சதை அவ அம்மா பாக்கலை

கன்னத்தில இருந்த மோர் கரைய வெக்கத்தோட துடைச்சிண்டு எனக்கு உதட்டை சுழிச்சு வக்கணை காட்டினா.

நாட்கள் போனது தெரியவில்லை, காத்திருந்து பார்த்தது, பாக்க முடியாமல் தவித்தது, கண்களால் பேசியது, சைகைகள், விஷமங்கள், பிணக்குகள், சமாதான கொஞ்சல்கள் இவை எல்லாம் எல்லா இளம் காதலர்கள் போல எங்களுக்குள்ளும் நடந்தது.

நானும் மாலுவும் திருட்டுத்தனமாய், பஸ்ஸில் ஒன்றாய் உட்கார்ந்து பயணித்தோம். திண்டுக்கல் பஸ் ஏறி திண்டுக்கல் போனோம். திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டை ஒட்டிய ஹோட்டலில் ஏதோ சாப்பிட்டோம், மறுபடி பஸ் ஏறி மதுரை, பின் தனித் தனியே வீட்டுக்கு. 

அந்த ஒரு வருட வாழ்க்கையை மறக்க முடியாது, பொக்கிஷமாய் புதைந்திருக்கும், என்றென்றும் என் மனதில். எங்கள் காதல் ரகசியம், யாருக்கும் தெரியாமல் சாமார்த்தியமாக சமாளிக்கிறோம் என்பது எங்கள் கணக்கு.

அப்பா வழி சொந்தம் ரவி சித்தப்பா எப்பவாவது வருவார். காபியோ டிபனோ கொடுக்கறத சாப்ட்டு சுக துக்கம் விசாரிச்சிட்டு கிளம்புவார்.

அன்னிக்கு என் கூட தின்ணைல உக்காந்துண்டு காபி சாப்பிட்டபடி என் காலேஜ் படிப்பு மத்தபடி பொதுவா பேசிண்டிருந்தவர், திடீர்னு “திண்டுக்கல் புவனா கஃபே, காரட் அல்வாவும், நெய் ரவா தோசையும் சூப்பரா இருக்கும் இல்லை”னு சாதாரணமாக கேட்டுட்டு, அம்மாகிட்ட சொல்லிண்டு கிளம்பிட்டார். 

போறப்ப என்னைப் பாத்து நமட்டு சிரிப்பு சிரிச்ச மாதிரி தெரிஞ்சது. முதல்ல எனக்கு வித்யாசமா படல்ல, ஏதோ சொல்றார் போலன்னு விட்டேன். அப்புறம் யோசிக்கறப்ப அவர் சொல்லலை, கேள்வி மாதிரின்னா விசாரிச்சார்னு பட்டது. 

சட்னு பொரி தட்டியது. ஓ நானும் மாலுவும் திண்டுக்கல்லில் போன ஹோட்டல் பேரு கூட ‘புவனா கஃபே’ தானே. யோசிச்சப்ப நாங்க சாப்பிட்டது, கேரட் ஹல்வாவும் நெய்ரவா தோசையும் தான்னு நினைவுக்கு வந்தது 

அடப்பாவி மனுஷா, எங்கே இருந்து இவ்வளவு டீடெயிலா பாத்தே.

இன்னொரு நாள் என் ஸ்கூல் பிரண்ட் சுரேஷ், நான் பழனிசாமி நாடார் கடைல உளுத்தம்பருப்பு வாங்கிண்டுருக்கேன், பின்னாலே தோளை பலமா தட்டினான்

“என்ன சார்… இப்பல்லாம் சினி பிரியா தியேட்டர்ல ஹிந்தி படம் மட்டும் தான் பாப்பீங்க போல இருக்கு”னு கேட்டுட்டே, நரசூஸ் காபி பாக்கெட் வாங்கிட்டு போய்ட்டான். 

(தொடரும் – நான்கு வார குறுந்தொடர் – திங்கள் தோறும் வெளியிடப்படும்)

‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!