இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
இரயில் பயணத்தில்.. கலிவரதனின் வருமானம் வளர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தோம், இப்போது சொந்தமாக கடைக்கானப் பெரிய இடத்தைப் பேருந்து நிலையத்திற்கு எதிரில் வாங்கி விட்டார். மொத்த வியாபாரமும், கேட்பவர்களுக்குச் சில்லறை வியாபாரமுமாக நடந்தது பழக்கடை.
ஏற்கெனவே சைக்கிள் வாங்கியிருந்தார். இப்போது இருசக்கர வாகனமும் வாங்கி ஓட்டப் பழகிக் கொண்டார். கடையில் உதவிக்கு இரண்டு ஆட்களைச் சம்பளத்திற்கு வைத்துக் கொண்டார்.
கோபாலன் பத்தாவது படிக்கும்போது நகருக்கு உள்ளே பெரிய மாடி வீட்டைக் கட்டிக் குடியேறினார். அந்தக் குடிசை வீட்டைக் கடையில் வேலைசெய்யும் ஒருவர் குடும்பத்தோடு வசிக்க விட்டுவிட்டார்.
கோபாலன் பள்ளியில் மேல்நிலை மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதற்காக வைத்திருந்த கணினிகள் ஐந்து காணாமல் போயின. அதைப்பற்றி விசாரிப்பதற்காகக் காவல்துறை வந்தது. பத்து நாட்களில் கணினிகள் மீட்கப்பட்டன.
அதற்கடுத்து நடந்த பள்ளி ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராகக் காவல் ஆணையர் அழைக்கப்பட்டிருந்தார். அவரது மிடுக்கானத் தோற்றமும், துரிதமான செயல்பாடும், அவர் மாணவர்களுக்கு ஆற்றிய உரையும் கோபாலனை வெகுவாகக் கவர்ந்தது. காவல்துறை உயர் அதிகாரி ஆகவேண்டும் என்ற இலட்சியம் தலைதூக்கியது.
இவரது தங்கை அல்லி இவரை விட ஐந்துவயது இளையவள் நர்சிங் படிக்க வேண்டுமென விரும்பினாள்.
.கலிவரதன் ஊரிலிருந்து நாகைக்கு வந்து ஆண்டுகள் பல ஓடிவிட்டன. பங்காளிகள் ஏற்பாடு செய்யும் குலதெய்வ விழாவில் கலந்து கொள்வதோடு சரி. இப்போது திக்குத் தெரியாமல் தவித்த தன்னை உயர்த்தி வாழவைத்த காடளந்த தேவி ஆலயத் திருப்பணியை முன்னின்று நடத்தி சகோதரிகள் குடும்பம், பங்காளிகள் எனச் சொந்தபந்தம் அனைவரையும் அழைத்துச் சென்று குடமுழுக்கு விழாவைச் சிறப்பாகச் செய்தார்..
கோபாலனும் பொறுப்புணர்ந்த பிள்ளையாக நன்றாகப் படித்து கொண்டிருந்தான். மேல்நிலைப் பொதுத்தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தான்
‘தம்பி இஞ்சினியருக்குப் படிக்கறியா, இல்ல டாக்டருக்குப் படிக்கறியா”
‘அப்பா இந்த ரெண்டும் வேணாம், நான் ஐ.பி.எஸ். படிச்சு போலீஸ் அதிகாரி ஆகணும்’
“சரிப்பா, எங்கே, என்ன படிக்கணும்னு நீயே சொல்லு”
“இங்கே நம்ம ஊருல இருக்கற கல்லூரியில பி.எஸ்ஸி. கெமிஸ்ட்ரி படிக்கறேன்பா.”
அவனது விருப்பப்படி வேதியியல் இளங்கலை பயில நாகையிலிருந்த கல்லூரி ஒன்றில் சேர்த்தார் கலிவரதன். இளங்கலை மூன்றாமாண்டு பயிலும்போது இந்திய அரசுப்பணி உயர்தேர்வு எழுதுவதற்கான ஓராண்டுப் பயிற்சி வகுப்பிலும் சேர்ந்தான் கோபாலன்.
ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் இந்த வகுப்பிற்குச் சென்று வந்தான். மகன் கடின உழைப்பை விதைப்பது பற்றி கலிவரதனுக்கும், கமலத்திற்கும் பெருமையாக இருந்தது. அவனை முன்பு போல் கடைக்கு உதவி செய்ய வரவேண்டாமென்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார் கலிவரதன். வெயில் காலங்களில் தகிக்கும் வெப்பம் தாக்காமலிருக்க மகனுடைய அறைக்கு குளிர் சாதனம் பொருத்தினார்.
‘அப்பா, என்ன இது, எதுக்கு ஏ.சி போட்டீங்க?’
‘ராத்திரிப் பகலாப் படிக்கற ஒனக்கு உடம்பு நல்லா இருக்கணும் தம்பி அதுக்குதான்.’
‘நீங்களும், அம்மாவும் படாத கஷ்டம் எதுவும் நான் படலை,அதனால இங்க நீங்க படுங்க,உங்க அறையை நான் எடுத்துக்கறேன்’
இதற்குமேல் என்ன சொல்வது?
இளங்கலைப் பட்டப்படிப்பிலும் முதல்மாணவராகத் தேர்ச்சிபெற்று முதுகலை வேதியியல் பயிலச் சென்னை வந்தான்.
பேராசிரியர்களின் அன்புக்குப்பாத்திரமானான் கோபாலன். முதுகலை இரண்டாமாண்டுப் பயின்று கொண்டிருந்தான். தான் நாகையில் பெற்ற ஓராண்டுப் பயிற்சி அந்த இந்திய அரசுப்பணி தேர்வுக்குப் போதுமானதாகத் தெரியவில்லை.அதனால் முதுகலை முடித்த பின் சென்னையில் ஒரு பயிற்சி வகுப்பில் சேர நினைத்தான்
அவனுடையப் பேராசிரியர், ‘கோபால் நீ ஐ.பி.எஸ் தேர்வுக்குப் படி, அதோடு இங்கேயே பி.எச்.டி யிலும் சேர்ந்துடு’ என்றார்.
அதேபோல் சேர்ந்தான் ,கோபால் பி.எச்.டி இரண்டாம் ஆண்டில் இருக்கும்போது, முதுகலை இயற்பியல் முதலாம் ஆண்டு மாணவியாகக் கோகிலா வந்து இதே கல்லூரியில் சேர்ந்தாள்.
தோழியர் விமலாவும் சகுந்தலாவும் கூட இங்குதான் சேர்ந்தனர் சகுந்தலாவின் கணவன் நிறைய மாறிவிட்டான். தந்தைக்கு உதவியாக விவசாயத்தைப் பார்த்துக் கொள்கிறான். சகுந்தலா மீது உயிரையே வைத்திருக்கிறான் .குழந்தையைப் பெற்றோரின் உதவியுடன் கவனித்துக்கொண்டு இவளை மேலே படிக்க அனுப்பியிருக்கிறான்.
அந்த ஆண்டில் வேதியியல் மற்றும் இயற்பியல் ஆராய்ச்சி மாணவர்களுக்கும், முதுகலை மாணவர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அந்த மும்பைச் சுற்றுலா. கோபாலன். எளிமையான, சுத்தமான உடை, அறிவுக் கூர்மை,ஆசிரியர்களின் அன்புக்கு ஏகபோக உரிமையாளராக இருந்தவரை அனைவரும் பாராட்டி வந்தனர்.
எவரிடமும் தேவையின்றிப் பேச மாட்டார், பெண்களிடம் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்வார். அத்தனை மாணவர்களிலும் முதன்முதலான இரயில் பயணமாக அமைந்தது இருவருக்கு மட்டும்தான். .இந்தப் பயணம் புதிய உற்சாகமும் ஆர்வமும் தந்தது. மற்றவர்கள் பேசிக்கொண்டு, விளையாடிக் கொண்டும் வர இவர்கள் மட்டும் ஜன்னலோரத்தில் அமர்ந்து இரசித்துக்கொண்டு வந்தார்கள். இரயில் பயணத்திற்கான உணவுப்பொட்டலங்களை கல்லூரி விடுதி தயார் செய்து தந்திருந்தது,விநியோகிக்க உதவியாள் ஒருவரும் வந்திருந்தார்.
விமலா ‘ கோகி வா சாப்பிடலாம்,’
‘இரு இந்த மலையெல்லாம் போயிடும், பார்த்துட்டு வரேன்’
‘ஏண்டி மலை எங்கேயும் போகாது, இந்தா பார்த்துக்கிட்டே சாப்பிடு’
இந்த நேரத்தில் அங்கு வந்த சிவா , ‘ அட நீயும் இப்படிதானா, எங்களோட கோபாலனும் இப்படிதான் ரயில் ஏறினதுல இருந்து வேடிக்கை பார்த்துட்டு வரான்’
‘ ஆமாம் சிவா, இவ முதல் முறையா ரயில்ல வரா’
‘ கோபாலும் முதல்முறையா ரயில்ல வரான், நல்ல ஒற்றுமைதான்’
‘ சிவா இவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா உட்கார வச்சிடலாம்’
‘இதோ அழைச்சிட்டு வரேன்’ என்று சென்றான் சிவா.
‘விமலா என்ன இது, யாரு அந்த கோபால்’
‘ போனவாரம் செமினார் வகுப்பு நமக்கு எடுத்தாரே அவர்தான்’
‘ ரொம்ப அருமைன்னு எல்லாரும் பாராட்டினாங்களே அவரா?’
‘ஏய் நீயே புகழ்ந்து தள்ளினே,’
சரிடி, அவரா, ஆச்சரியமா இருக்கு,’
இந்த நேரத்தில் சிவா கோபாலனை அழைத்து வந்தான்.
வாங்க என்று இருவருக்கும் இடம் தந்துவிட்டு கோகிலாவின் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
விமலாவும்,சிவாவும் கோகிலாவையும், கோபாலனையும் அறிமுகம் செய்து வைத்தனர்.
சிவா கோபாலனோடு பி.எச்.டி செய்துகொண்டிருக்கிறான். இரண்டு மாதங்களாக விமலாவோடு நெருக்கமாகப் பழகிவருகிறான்.
சிவா விமலாவைத் தன் இடத்திற்கு அழைத்துக்கொண்டு நகர்ந்தான். சகுந்தலா மற்ற தோழியரோடு அளவளாவிக் கொண்டிருந்தாள்.
‘சிவா நீ எங்கே போற’
‘நானும் விமலாவும் நம்ம இடத்துக்குப் போறோம். நீங்க ரெண்டு பேரும் ரயில் பயணத்தை இங்க என்ஜாய் பண்ணுங்க’
இப்படி ரயில் பயணத்தில் ஆரம்பிக்கிறது இவர்கள் வாழ்க்கைப் பயணமும்.
வழியி்ல் வரும் ஊரின் பெயர்ப்பலகைகளைப் பார்க்க ஆர்வமானாள் கோகிலா.
விஜயவாடாவில் ரயில் நின்றபோது நண்பர்கள் வடையும், தேனீரும் வாங்கி வந்தனர்.
அங்கிருந்து ரயில் கிளம்பியது, கிருஷ்ணா நதியின் பெரிய பாலம் கண்டு வியந்தார்கள்.
‘ கோகிலா பாருங்க எத்தனைப் பெரிய பாலம்!’
‘ஆமாம், எத்தனை உறுதியா கட்டி இருக்காங்க’
‘இராமேஸ்வரத்திலும் இப்படிப் பெரிய இரயில் பாலம் இருக்கிறதாம்.’
‘ஆனால் அதில் ஒரு சிறப்பு இருக்கு பா’ சொல்லிவிட்டு ,ஏதோ சிவாகிட்டப் பேசறமாதிரி சொல்லிட்டேன், சாரி’
‘பரவாயில்ல, நீங்க அப்படியே பேசுங்க’ என்ற கோகிலா. ‘சொல்லுங்க இராமேஸ்வரம் பற்றி’
‘அந்தப் பாலம் கடலின் மீது கட்டியது,இரயில் வரும்போது இணைந்து இருக்கும்’
‘கப்பல் வரும்போது’ திறந்து வழி விடும் இதுதானே’
‘ஆமாம்’
‘நானும் படித்திருக்கிறேன், நேரில் பார்க்கணும்’
‘ சரி பா , நாம் ஒரு முறை சென்று பார்த்து வரலாம்.’
ஏனோ தெரியவில்லை, கோகிலாவின் அமைதியும், அடக்கமும், நிதானமாகப் பேசும் விதமும், ஏதாவது கேட்டால் மெலிதாகத் தலையசைத்துச் சிரிப்பதும். வெளிர் மஞ்சள் நிறமும், ஆற்றோர மணல்வெளி போல் நெளிநெளியான அடர்ந்த கூந்தலும், ஓவல் வடிவ முகமும், அதில் துருதுருவெனச் சுழலும் விழிகளும், சரியான உயரமும் அவனுக்குப் பிடித்துப்போனது.
அதற்கப்புறம் வந்த நாட்களில் எல்லாம் ஏதாவது ஒரு காரணத்தை ஏற்படுத்திக்கொண்டு கோகிலாவைப் பார்த்துப் பேசலானான். கோபாலன் கருப்பு நிறமும் , அன்னையின் அன்பில் வளர்ந்த திடமான உடலும், அறிவுக்களை வீசும் கண்களும் கொண்ட அரும்பு மீசை இளைஞனாக இருந்தான்.
கோகிலாவிற்கும் கோபாலனைப் பிடித்துப் போனது. ஆனாலும் அவள் காதல், கல்யாணம் என்று எதையும் கோட்டை கட்டி மனதைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை.ஒரு நாளும் வரம்பு மீறி அவளிடம் உரிமை எடுத்துக்கொண்டு பேசமாட்டான்.விடுமுறைக்கு அவளை அழைத்துச்செல்ல சித்தார்த்தன் வரும்போது கோபாலனைச் சந்தித்துப் பேசுவான். சொல்லப்போனால் இருவரும் நண்பர்களாகி விட்டார்கள்.
இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings