in ,

கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 20) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அத்தியாயம் 1     அத்தியாயம் 2     அத்தியாயம் 3     அத்தியாயம் 4

அத்தியாயம் 5    அத்தியாயம் 6     அத்தியாயம் 7     அத்தியாயம் 8

அத்தியாயம் 9   அத்தியாயம் 10    அத்தியாயம் 11    அத்தியாயம் 12

அத்தியாயம் 13   அத்தியாயம் 14   அத்தியாயம் 15   அத்தியாயம் 16

அத்தியாயம் 17   அத்தியாயம் 18   அத்தியாயம் 19

“முப்பது பேரை நீங்க செலக்ட் பண்ணிக் குடுத்தீங்க… விளையாட்டுத்துறை ஆட்கள் அதுல வெறும் அஞ்சே பேரைத்தான் செலக்ட் பண்ணினாங்க!… நீங்க செலக்ட் பண்ணிய நம்ம சத்தியவேந்தனும்… காந்தியும் இங்கியே புட்டுக்கிட்டாங்க!… மீதி இருக்கற அஞ்சு பேர் அடுத்த கட்டமா பெங்களூர்…. மும்பை… டெல்லின்னு போகப் போறாங்க… அங்க போய்… வேற வேற மாநில ஆட்கள் கூடப் போட்டி போடப் போறாங்க…!… அதுல சாதிச்சால்தான் பாரீஸ் போக முடியும்” சரஸ்வதி சொல்ல,

 “சரஸ்வதி இப்ப நீ என்ன சொல்ல வர்றே?” கோபமானார் ஆறுமுகம்.

“ஒண்ணுமில்லை சார்!… நம்ம பசங்க உங்க எதிர்பார்ப்பையும்… அந்தப் பெரிய மனிதரோட எதிர்பார்ப்பையும் நிறைவேற்றாமல் போயிடுவாங்களோனு மனசுக்கு பயமாயிருக்கு சார்” தன் மனதில் உள்ளதை அப்படியே போட்டுடைத்தாள் சரஸ்வதி.

“வேண்டாம் சரஸ்வதி…. இப்ப எங்ககிட்ட பேசின மாதிரி அந்தப் பசங்ககிட்டேயும் நெகடிவ்வா பேசிடாதே… நான் அவனுகளை பாஸிட்டிவ் திசைல கூட்டிட்டுப் போயிட்டிருக்கேன்!… அதை மாத்திடாதே” ஆறுமுகம் பேச்சில் லேசான கடுமை தெரிய

“இல்ல சார்… உங்ககிட்டேதான் என்னோட ஆதங்கத்தைச் சொன்னேன்!… அவங்ககிட்டேயெல்லாம் சொல்ல மாட்டேன்” என்றாள் அவசரமாய்.

****

மாத இறுதியில் கோகுல்தாஸ் ஆறுமுகத்தைப் போனில் அழைத்து அந்தத் தகவலைச் சொன்னார்.  

“மிஸ்டர் ஆறுமுகம்… பெங்களூர் செலக்‌ஷன் போட்டிகள் வர்ற ஐந்தாம் தேதி ஸ்டார்ட் ஆகுது…. நாங்க ஒரு சொகுசு பஸ் ஏற்பாடு பண்ணியிருக்கோம்… அதுல தமிழ்நாட்டு வீரர்களைக் கூட்டிட்டுப் போறோம்… ரெண்டாம் தேதி பஸ் உங்க ஊருக்கு வரும்!… செலக்ட் ஆகியிருக்கற ஐந்து பேரையும் தயாரா இருக்கச் சொல்லுங்க!…” என்றார்.

“சார்…. பசங்க கூட நாங்க யாராவது வரலாமா சார்?” ஆறுமுகம் கேட்க,

“ம்ம்ம்ம்… வரலாம் ஆனா… இந்த பஸ்ல வர முடியாது… தனியாய்த்தான் வரணும்!… அப்படியே வந்தாலும்… அங்க பசங்க தங்கற இடத்துல தங்க முடியாது… வெளிய எங்காச்சும் தான் தங்கணும்!… எல்லாத்துக்கும் மேலே… செலக்‌ஷன் போட்டிகளை நேரில் பார்க்க யாருக்கும் அனுமதி கிடையாது”

“ஓ… அப்படின்னா சரி சார்” என்றார் ஆறுமுகம் சோகமாய்.

“கவலைப்படாதீங்க ஆறுமுகம்!… எங்க ஆளுங்க கூடவே இருப்பாங்க… அவங்களை பத்திரமாப் பார்த்துக்குவாங்க” என்றார் கோகுல்தாஸ்.

 “ஓ.கே.சார்”

****

ஐந்தாம் தேதி.

காலை ஏழு மணி வாக்கில் இல்லத்தின் முன்புற மைதானத்தில் வந்து நின்ற சொகுசு பஸ்ஸில் ஏற்கனவே சில மாற்றுத் திறனாளிகள் அமர்ந்திருந்தனர். முருகன், சுந்தரம், ராஜா, மாரி முத்து, ஈஸ்வரன் ஆகிய ஐந்து பேரும் பெட்டி படுக்கையோடு தயாராய்க் காத்திருந்தனர்.

பஸ்ஸிலிருந்து இறங்கிய ஒரு புது நபர், நேரே ஆறுமுகத்திடம் வந்து, “சார்… இங்க ஆறுமுகம்?” கேட்க

“யெஸ்… நான்தான்”

தன்னிடமிருந்த அந்தக் கடிதத்தை அந்த நபர் ஆறுமுகத்திடம் தந்தார்.  அது அந்த ஐந்து வீரர்களையும் அனுப்பி வைக்கச் சொல்லி விளையாட்டுத் துறையிடமிருந்து வந்த கடிதம்.

அதைப் படித்து முடித்த ஆறுமுகம், “அவங்கெல்லாம் தயாராய் இருக்காங்க சார்” என்றார்.

வாட்ச்மேன் வடிவேலு, வேன் டிரைவர் டேவிட், கோபி மற்றும் அவன் சகாக்கள், இல்லத்தில் உல்ள மற்ற மாற்றுத் திறனாளிகள் அனைவரும் வழியனுப்பி வைக்க, எல்லோருக்கும் கட்டை விரலை உயர்த்தி வெற்றி சிம்பலைக் காட்டியபடி விடை பெற்றனர் அந்த ஐந்து பேரும்.

கண் பார்வையிலிருந்து அந்த பஸ் மறைந்ததும், விழியோரம் துளிர்த்திருந்த கண்ணீர்த் துளியை சுண்டு விரலால் நாசூக்காய் சுண்டிக் கொண்டார் ஆறுமுகம்.

ஆனாலும், அதைக் கண்டுபிடித்து விட்ட சரஸ்வதி, “சார்… அழறீங்களா?” என்று கேட்க

“இது அழுகையில் வந்த கண்ணீர் இல்லைம்மா!… ஆனந்தத்தில் வந்த கண்ணீர்… என் பசங்க ஜெயிச்சிட்டுத்தான் வருவாங்க… எனக்கு முழு நம்பிக்கையிருக்கு” என்றார்.

பெங்களூருவில் செலக்‌ஷன் போட்டிகள் நடைபெறும் அந்த நாளில் இந்த மாற்றுத் திறனாளிகள் இல்லம் மித மிஞ்சிய டென்ஷனில் இருந்தது. அந்தப் போட்டி சம்மந்தமான செய்திகளைப் பார்ப்பதற்கென்றே தன் அறையிலிருந்த தொலைக்காட்சியை ஹாலில் கொண்டு வந்து வைத்திருந்தார்.

“சார்… அந்தப் போட்டிகளை நேரடியாகக் காட்டுவாங்களா சார்?” இந்த முறை வாய்ப்பிழந்து போன முதுகுப்புடைப்பு காந்தி ஆர்வமாய்க் கேட்டான்.

“காட்டுவாங்க காந்தி!…ம்ம்ம்…. காலை பத்து மணிக்கு போட்டிகள் ஆரம்பிக்கும்… அநேகமா… நம்ம பசங்களோட ஈவெண்ட் மதிய வாக்குல வரும்”

மதிய உணவிற்குப் பின் இல்லவாசிகள் அனைவரும் ஹாலில் அமர்ந்து ஆர்வமாய் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களோடு ஆறுமுகம், சரஸ்வதி, கோபி, வாட்ச்மேன், வேன் டிரைவர் எல்லோருமே அமர்ந்திருந்தனர்.

மூன்றாம் பிரிவில் முதல் போட்டியாக தலை மட்டும் பெரிதாகவும், உடல் சிறிதாகவும் இருக்கும் மாரிமுத்து கலந்து கொள்ளும் நடுத்தர தூர ஓட்டப்பந்தயம் துவங்கியது.

ஓடத் தயாராக நின்று கொண்டிருக்கும் வீரர்களின் முகத்தைக் குளோஸ் அப்பில் காமிரா காட்ட, மாரிமுத்துவைக் கண்டதும், ஹாலில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் “ஹேய்ய்ய்ய்ய்ய்” என்று கத்தி தங்கள் உற்சாகத்தைக் கொட்டினர்.

“ஒன்…. டூ…. த்ரீ…” மேல் நோக்கித் துப்பாக்கி சுடப்பட, வீரர்கள் ஓடத் துவங்கினர்.

அதன் பின் ஹாலில் கடும் நிசப்தமே நிலவியது.  எல்லோரும் “திக்…திக்”கென்று அதிரும் முகத்துடன், கண்களைக் கூட இமைக்காமல் தொலைக்காட்சியையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆரம்பத்திலிருந்தே அந்த மாரிமுத்து பின் தங்கியே ஓட, எப்படியும் இறுதியை எட்டுவதற்குள் மாரிமுத்து பிக்அப் செய்து விடுவான், என்று நம்பினார் ஆறுமுகம்.

அதே நேரம், மாரிமுத்துவுடன் ஓடிக் கொண்டிருக்கும் மற்ற வீரர்கள் அனைவரும் அதீத பயிற்சி பெற்றவர்களைப் போல் ஓடுவதைக் கண்ட கோபி எடுத்த எடுப்பிலேயே நம்பிக்கை இழந்தான்.

“ஆண்டவா… முதல் போட்டியிலேயே தோல்வி என்கிற ரிசல்ட் வந்து விட்டால், நம்ம பசங்க எல்லோரும் மொத்தமா நம்பிக்கையிழந்து விடுவார்களே!… அப்படியொரு சூழ்நிலையை ஏற்படுத்தி விடாதே… ஆண்டவா” கீழே குனிந்து கண்களை மூடிக் கொண்டு இறைவனை வேண்டினாள் சரஸ்வதி.

திடீரென்று ஹாலில், “ஹேய்ய்ய்ய்ய்ய்…. கமான்!… கமான்… மாரிமுத்து” என்று ஓசையெழ, கண்களைத் திறந்து பார்த்தாள் சரஸ்வதி.

சற்று முன் வரை இறுதியாய் வந்து கொண்டிருந்த மாரிமுத்து பலரைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தான். அதைக் கண்டதும் சரஸ்வதியும் அவளையேயறியாமல், “கமான்… கமான்” கத்தினாள்.

இப்போது மாரிமுத்து ஐந்தாவது இடத்திற்கு வந்திருந்தான். இன்னொருவரையும் பின்னுக்குத் தள்ளி விட்டு நான்காவது இடத்திற்கு வந்தான். ஹாலில் கெட்டியான அமைதி.

டேவிட் நெஞ்சுப் பகுதியில் சிலுவையிட்டுப் பிரார்த்தித்தான். மூன்றாவது இடத்திற்கு வந்தான் மாரிமுத்து. மெய் சிலிர்த்தார் ஆறுமுகம். இரண்டாம் இடத்தில் மாரி முத்து. இதோ…. முதலிடத்தில் மாரிமுத்து.

“இன்னும் சில அடிகள் மட்டுமே ஓடிக் கடந்து விட்டால் போதும், நம்ம பையன்தான் வின்னர்…” மனதிற்குள் தவித்தார் வாட்ச்மேன் வடிவேலு.

அந்த வினாடியில்தான் அது நடந்தது. சற்று முன் வரை தள்ளட்டமாகவும், மிதமான வேகத்திலும் ஓடிக் கொண்டிருந்த மாரிமுத்துவின் சக வீரர்கள், சாவி கொடுக்கப்பட்டது போல் திடீரென்று சீறிக் கொண்டு ஓடத் துவங்க, மாரிமுத்து கொஞ்சம் கொஞ்சமாய் பின் வரிசைக்குத் தள்ளப்பட்டு, போட்டி முடியும் போது, ஏழாவது இடத்திலிருந்தான்.

ஹாலில் அமர்ந்திருந்த மாற்றுத் திறனாளிகள் கண்ணீர் விட்டுக் கதறி விட்டனர். சிலர் மனம் தாளாமல் அங்கிருந்து நகர்ந்தனர்.

ஆறுமுகம் தலையில் கையை வைத்துக் கொண்டு குனிந்து அமர்ந்தார்.  “என்ன தப்பு?… எந்த இடத்தில் மிஸ்டேக் ஆச்ச்?… மாரிமுத்து முதலிடத்திற்கு வந்தானே?… அப்புறம் ஏன் பின்னாடி போனான்?…”

“சார்… என்ன சார் இப்படி ஆகிப் போச்சு?” வாட்ச்மேன் வடிவேலும் வருத்தமாய்ச் சொல்ல,

“நானும் இதை எதிர்பார்க்கலை!… என்ன பண்றது?…. ஏத்துக்கிட்டுத்தானே ஆகணும்?” என்றார் ஆறுமுகம் இயல்பாய்.

வேகமாய் வந்த சரஸ்வதி கேட்டள்., “அப்ப இந்த மாரிமுத்துவைத் திருப்பி அனுப்பிடுவாங்களா?” 

“சேச்சே… மொத்தம் மூணு போட்டிக இருக்கு… அடுத்த போட்டி மும்பைல நடக்குமல்ல… அங்க மாரிமுத்து ஜெயிப்பான்”

ஏனோ அன்று முழுவதும் அந்த மாற்றுத் திறனாளிகள் இல்லம் சோகத்திலேயே ஆழ்ந்து கிடந்தது.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இது எந்த வகைக்காதல் (சிறுகதை) – மைதிலி ராமையா

    மறுமணம் (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்