in ,

அனுபவி ராஜா (சிறுகதை) – வெங்கடரமணி ராமமூர்த்தி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

என்ன செய்வது எங்கே போவது என்று குழம்பியபடி சென்னை தரமணி பறக்கும் இரயில் நிலையத்துக்கு வந்த சரவணன், யோசனை செய்த வண்ணம் காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தான்.

கடற்கரை செல்லும் இரயிலும் வேளச்சேரி செல்லும் இரயிலும் எதிரும் புதிருமாக சென்று கொண்டிருந்தன. அது போல சரவணனின் மனமும் அங்கும் இங்குமாய் அலை பாய்ந்து கொண்டிருந்தது.

சுமார் பதினைந்து நிமிடங்கள் கழித்து கடற்கரை செல்லும் இரயில் வந்து நடைமேடையில் நின்றது.

மதியம் மூன்று மணி என்பதால் ஒவ்வொரு பெட்டியிலும் வெகுசிலரே அமர்ந்திருந்தனர். ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாய் ஒரு பெட்டியில் ஏறிய சரவணன் ஓரிருக்கையில் போய் அமர்ந்தான்.

ஒருவர் பின் ஒருவராக, ஸ்டிக்கர் பொட்டு விற்பவன், புத்தகங்கள் விற்பவன், நிலக்கடலை விற்பவன், பூ விற்கும் பெண்மணி எனப் பல சிறு வியாபாரிகள் அவனைக் கடந்து போனார்கள்.

ஆனால், இதை உணராதவனாய் வேறு ஏதோ ஒரு உலகத்தில் இருப்பது போல் சன்னலின் வழியே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

தன்னை இப்படி படைத்துவிட்டானே என்ற எல்லை மீறிய கோபத்தில் ஆண்டவனை மனதிற்குள் திட்டியபடி அமர்ந்திருந்தான்.

திருநங்கை ஒருத்தி இவன் காதருகே வந்து கைகளைத் தட்டி ஓசை எழுப்ப திரும்பிப் பார்த்தான்.

‘என்ன தம்பி வீட்ல கோச்சிக்கினு வந்த்ட்டயா?’ என்று அந்தத் திருநங்கை சொல்ல அவளையே சற்று நேரம் உற்றுப் பார்த்தவன், அவளுக்கு ஏதோ பணத்தைக் குடுத்து அனுப்பிவிட்டு அவள் அவனது கண்ணிலிருந்து மறையும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு கடவுள் மேல் கோபம் கோபமாக வந்தது.

‘திருநங்கைகள் என்ற ஆணும் பெண்ணுமற்ற ஒரு இனத்தைப் படைத்து அவர்களை எல்லோரும் ஏளனம் செய்யும்படி செய்து…. அவனுக்கென்ன கருணையே இல்லாமல் போய்விட்டதா?’ என்று ஒரு கணம் கோபப்பட்டாலும், மறுகணம், ‘இத்தனை பேரின் ஏளனத்தையும் தாங்கிக்கொண்டு எப்படி அவர்களால் வாழ முடிகிறது’ என்ற சந்தேகமும் அவனுள் எழாமலில்லை.

‘இதே இரயிலில் பயணம் செய்யும் போது, எத்தனை முறை எத்தனை பேர் இவர்களை பற்றி அசிங்கமாகப் பேசியிருக்கிறார்கள்? பாவம் இவர்கள்’ என்று நினைத்தான்.

 இந்திரா நகர் இரயில் நிலையத்தில் இரயில் நின்று சென்றது.

இளம் வயதுப் பெண்கள் கூட்டமாய் ஏறினார்கள்.  சரவணனின் எதிர்இருக்கையில் வந்து அமர்ந்தவர்கள் அவனைப் பார்த்து குசுகுசு என்று பேசிச் சிரித்தனர். சரவணன் அவர்களை பார்த்த உடனே அவர்களது சிரிப்பு நின்றது.

சரவணன் தன்னைத்தானே குனிந்து பார்த்துக் கொண்டான்.  அவனுடைய சட்டையில் ஒரு பொத்தானுக்கும் இன்னொரு பொத்தானுக்கும் இடையே சட்டை வாயைப் பிளந்து உள்ளேயிருந்த உள்ளாடையைக் காட்டியது.

அவனது உடல் பருமனைப் பார்த்துத்தான் அந்தப் பெண்கள் சிரித்தார்கள் என்று அவனுக்குப் புரிய வெகு நேரமாகவில்லை.

சரவணன் ரெடிமேட் கடைக்குப் போனால், அவனுடைய உடல் அளவிற்கு எந்த உடையும் கிடைக்காது.

அவனுடைய நண்பர்கள் எல்லாரும் நல்ல அழகழகாக விதவிதமாக உடை அணியும் போது, தான்மட்டும் எப்போதும் இதே டைலர் தைக்கும் ஒரே விதமான உடையை அணிந்து போக வேண்டும் என்று கடவுள் அவன் தலையில் எழுதி விட்டானே என்று மனதிற்குள் நொந்து போவான்.

‘தினம் வாக்கிங் போகிறாயா?’ என்று கேட்பவர்களையும் உடல்பருமன் குறைய அவரவர் வாய்க்கு வந்த வைத்தியத்தைச் சொல்பவர்களையும் ஆத்திரம் தீர அடிக்க வேண்டும் போல இருந்தது.

சரவணன் உடல் பருமனாக இருப்பதால், அவனுடைய நண்பர்கள் யாரும் அவனை அவர்களுடைய வண்டியில் ஏற்ற மாட்டார்கள்.

அவனுக்குப் பிடித்த உணவு வகைகளை உண்பதை நிறுத்தி பல வருடங்களாயிற்று. கேக், ஐஸ்கிரீம், சாகலேட் இவற்றையெல்லாம் பார்த்தால் நாக்கில் எச்சில் ஊறும். ஆனால் இதற்கு மேல் உடல் பருமன் ஏறினால் அவனுக்கே அவனைப் பார்க்க அருவருப்பாக இருக்கும் என்று அவன் உணவின் மீதான ஆசைகளைத் துறந்தான்.

அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ என்கின்ற பயத்திலேயே, வெளியிலே செல்வதைத் தவிர்த்தான்.

நண்பர்கள் பேசி சிரித்தால் இவனைத்தான் கேலி செய்கிறார்கள் என்று இவனே நினைத்துக் கொள்வான். இதனால் நண்பர்களுடன் கூடுவதையும் பேசுவதையும் தவிர்த்தான். உறவுக்காரர்கள் வீடுகளுக்கும் செல்வதைத் தவிர்த்தான்.

அவனுக்குப் பின்புறம் இருந்து வந்த சலசலவென்று சத்தம் அவனை இரயில் பெட்டிக்குள் இழுத்து வந்தது.

ஆணின் குரலும் கூடவே சிரிப்பொலியுடன் கூடிய பெண்ணின் குரலும் கேட்க அவர்களுடைய பேச்சிலிருந்து அவர்கள் புதுமணத் தம்பதியினர் என்று தெரிந்து கொண்டான்.

அப்போது பார்வை இழந்த ஒருவர் அந்தக் காலத்து பாடல் ஒன்றை பாடிக் கொண்டு வந்தார்.

‘ஆண்டவன் படைச்சான், என்கிட்டே கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான் என்ன அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்’ என்ற அந்தப் பாடல் வரிகளை அழகாக பாடி டி.எம். எஸ்ஸையும் சிவாஜி கணேசனையும் நினைவுபடுத்தினார்.

‘இவனுக்கே கண்ணு தெரியல, இவன் உலகத்தை அனுபவிக்கப் போறானா?’ என்று ஏதோ ஒரு  ஓட்டை வாய்  எல்லாருடைய வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டது

‘நல்ல குரலைக் குடுத்த ஆண்டவன் அவனோட கண்ணைப் பறிச்சுட்டான். பாவம் இப்படி பாடிப் பாடி பிச்சை எடுக்கறான்’ என்று அந்தப் பெட்டியிலிருந்து யாரோ ஒருவர் சொன்னது சரவணன் காதில் விழுந்தது.

‘பார்வை இல்லைன்னு சோர்ந்து போகாம எவ்வளவு அழகாய் பாடறான் பாரு, இவனும் அந்த நொச்சம்பட்டி திருமூர்த்தி மாதிரி நல்ல வருவான்’ என்று பின்னாலிருந்த இளம் கணவன் மனைவியிடம் சொன்னான்.

‘மற்றவர்கள் சொல்வது போல் பாவம் என்று சொன்னால் அவன் அதே நிலையிலிருந்து பாடிக் கொண்டிருப்பான். அவன் அதிலிருந்து மீண்டு தன் திறமையை உணர்ந்து பாட வேண்டும் பிச்சை எடுப்பதற்காக இல்லாமல், திறமைக்காக பாடினால்’ என்று அந்தக் கணவன் சொன்னான்.

சரவணன் திரும்பி அந்தப் பார்வையற்றவரைப் பார்த்தான். கன்னங்கரிய உருவம். இதுவரையிலும் எண்ணையே காணாத வாரப்படாத தலைமுடி. கண் கரிய இமையுடன் சேர்ந்து உள்ளே போயிருந்தது. அங்கங்கே கிழிந்த கால் சட்டையும், குட்டையான சட்டையும் அணிந்திருந்தான்.

திரும்பி அந்த இளம் சோடியைப் பார்த்தான். மூக்கும் முழியுமாய் அழகான பெண். அவளுக்கு… இப்படி ஒரு கணவனா?  அவனைப் போலவே பருத்த உடல். தொட்டால் ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு கன்னங்கரிய நிறம்.  இப்படிப்பட்ட ஒரு கோர உருவத்திற்கு இப்படி ஒரு அழகான மனைவியா?

கடவுளின் படைப்பை முதன் முதலாய் வியந்தான்.

கண் தெரியாத ஒருவர் எதை அனுபவிப்பார்? பாவம் என்று நினைக்கும் போது தன் குறையை நினைக்காமல் ஆண்டவன் படைத்த இந்த உலகத்தை அனுபவிக்கப் பிறந்தவன் போல அந்தப் பாடலை அனுபவித்துப் பாடுகிறாரே!

குறை படைப்பில் இல்லை என்று உணர்ந்தான்.  அவரவர் மனதிலே உள்ள குறையே என்று புரிந்தவனாய் அடுத்த இரயில் நிலையத்தில் இறங்கி தரமணி செல்லும் இரயிலைப் பிடிக்க விரைந்தான்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மகா மார்பிள்ஸ் (அத்தியாயம் 18) – தி.வள்ளி, திருநெல்வேலி

    வாசி… வாசியென்று… (சிறுகதை) – முகில் தினகரன், கோவை