2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
தன் எதிரில் நின்றிருந்த அந்த இளைஞன் அப்படிக் கேட்டதும் தர்மசங்கடத்திற்கு ஆளானார் சிதம்பரம்.
“த பாரு தம்பி படிச்சவன்‘னு சொல்றே! ஏதாச்சும் வேலை போட்டுக் குடுங்கனு கேட்கறே, இந்த பங்களாவுல உனக்கு ஏத்த வேலைன்னு பாத்தா எதுவுமே இல்லையேப்பா!, இருந்ததுன்னா குடுக்கறதுக்கென்ன?” சிதம்பரம் தாடையைத் தேய்த்தவாறே சொல்ல
“அய்யா! உங்க பங்களா முன்னாடி, பசியால மயங்கிக் கெடந்த என்னைத் தூக்கிட்டு வந்து சாப்பாடு போட்டீங்க, அத்தோட நில்லாம கைல கொஞ்சம் பணத்தையும் கொடுத்து ‘ரெண்டு மூணு நாளைக்கு சாப்பாட்டுக்கு வெச்சுக்கப்பா”ன்னும் சொன்னீங்க!. அய்யா! ரோட்டுல ஒருத்தன் மயங்கிக் கெடந்தா அதைப் பார்த்தும் பார்க்காத மாதிரிப் போற ஜனங்க வாழுற இந்தக் காலத்துல இப்படியொரு மனிதரானு உங்களைப் பார்த்து வியந்து போய், உங்க காலடியிலேயே கெடந்து உங்களுக்கு சேவை செய்யணும்னுதான் வேலை கேட்டேன்! ப்ச்! பரவாயில்லைங்கய்யா! .நான் வர்றேன்!” அந்த இளைஞன் எழுந்து தள்ளாட்டமாய் நடந்து கதவு வரை சென்றதும் சிதம்பரம் அழைத்தார்.
“தம்பீ”
திரும்பினான்.
“இங்க வாப்பா!… உன் பேரு என்ன சொன்னே?”
“நடராஜன்” சொல்லியவாறே அவன் திரும்பி வர.
“ஆஹா! .இந்த சிதம்பரத்துகிட்ட வந்து சேர்ந்த நடராஜனை நான் திருப்பியனுப்பினா அது தெய்வக்குத்தம்! அதனால நான் உனக்கொரு வேலையை உருவாக்கித் தர்றேன்… !”
முகமலர்ச்சியுடன் அந்த நடராஜன் அவர் முகத்தைப் பார்த்து, “சொல்லுங்க அய்யா… நீங்க என்ன வேலை செய்யச் சொன்னாலும் செய்வேன்” என்றான்.
“அந்த வேலையொண்ணும் அவ்வளவு பெரிய வேலை இல்லை!… ஆன்லும் படிச்சவனான உனக்கு… அது சரியான வேலைதான்!” என்றவர், “என் கூடவா!”என்றபடி எழுந்து முன்னே நடக்க, அவன் பின் தொடர்ந்தான்.
அவன் மனதிற்குள் இந்த உலகமக்கள் அனைவருமே அவன் பக்கம் திரும்பி, ஒரு மரியாதையோடு புன்னகைப்பது போலிருந்தது.
வீட்டின் இடது புறத்திலிருந்த அந்தக் கடைசி அறை முன் வந்து நின்ற சிதம்பரம் கதவை லேசாய்த் திறந்து உள்ளே புகுந்தார். நடராஜன் வெளியிலேயே நிற்க, உள்ளே சென்ற அவர் மீண்டும் வெளியே வந்து, “ம்… உள்ளார வாப்பா” என்றழைத்த பின் உள்ளே சென்றான்.
உள்ளே! பழுத்த முதியவரொருவர் கட்டிலில் படுத்திருந்தார். நடராஜனின் கணிப்பில் அந்த முதியவருக்கு எப்படியும் எண்பத்தி ஒன்பது…தொண்ணூறு வயதிருக்கும்.
“தம்பி! .இவரு என்னோட தகப்பனார்! இவருக்கு பக்திக் கதைகள்…புராணக் கதைகள்…ஆன்மீகக் கட்டுரைகள்னா ரொம்ப இஷ்டம்! ஒரு காலத்துல புத்தகங்களை வாங்கிக் குவிச்சு, அதுகளுக்குள்ளாரவே விழுந்து கெடப்பாரு! தூங்காம, சாப்பிடாம அதுகளை வாசிச்சிட்டே இருப்பாரு!. சரியான புத்தகப்புழு…. இப்ப சுத்தமா படிக்க முடியறதில்லை! கண் பார்வை மங்கிடுத்து!… அதுவே அவருக்கு மிகப்பெரிய வருத்தம்!… அந்த வருத்தத்தைத் தீர்க்க நீதான் இனிமே இவருக்கு தெனமும் அந்த புத்தகங்களை வாசிச்சுக் காட்டப் போறே!. அதுதான் உன்னோட வேலை!… என்ன ஒத்துக்கறியா?”
நடராஜன் அவனையுமறியாமல் கை கூப்பினான். “ரொம்ப சந்தோஷமா ஒத்துக்கறேன் சார்!… உண்மையில் சொல்லப் போனா… நீங்க எனக்கு கரும்பு தின்னக் கூலி குடுக்கறீங்க!”
“என்னென்ன புத்தகங்கள் வேணுமோ அதுகளை நீயே போய் கடைவீதில வாங்கிக்க!…. ம்ம்ம்… இன்னிக்கு என்ன கிழமை?… புதன்…. வெள்ளிக்கிழமையிலிருந்து நீ உன் வேலைய ஆரம்பி!.. அப்புறம் இந்த வீட்டிற்குப் பின்புறம் தோட்டத்தையொட்டி சின்னதா ஒரு போர்ஷன் இருக்கு!… அது விருந்தாளிக வந்தா தங்கறதுக்குன்னு வெச்சிருக்கோம்!… நீ இப்போதைக்கு அதுல தங்கிக்க!… என்ன திருப்திதானே?”
கண்களில் நீர் மல்க நின்றவனின் முதுகில் தட்டிக் கொடுத்து, “ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசை பண்ணிக்கிட்டு வாழ்ந்தா… இந்த வாழ்க்கை ரொம்ப ஈஸிப்பா!” சொல்லியபடியே நகர்ந்தார் சிதம்பரம்.
எந்தவொரு இலக்குமின்றி, எந்தவொரு பிடிப்புமின்றி, எங்கோ போய்க் கொண்டிருந்த தன் வாழ்க்கை வீணாகிப் போய் விடுமோ என்கிற அச்சத்தில் இதுநாள் வரை உழன்று கொண்டிருந்த நடராஜனுக்கு அந்த வேலை மிகவும் திருப்திகரமாய் அமைந்து விட, மகிழ்ச்சியில் திளைத்தான்.
தினமும் அதிகாலையிலேயே எழுந்து, வாய்க்காலுக்குச் சென்று சின்னதாய் ஒரு குளியல் போட்டு விட்டு, சாமி கும்பிட்டு விட்டு, நெற்றி நிறைய திருநீருடன் பெரியவர் அறைக்குச் சென்று, அவர் நெற்றியிலும் விபூதியைப் பூசி விட்டு, ஏதாவதொரு ஆன்மீக புத்தகத்தை எடுத்து மனமொன்றி வாசிப்பான்.
முதல் சம்பளத்தை சிதம்பரத்தின் கால்களில் விழுந்து ஆசியுடன் பெற்றுக் கொண்டான். ஆனால், அந்த முதல் சம்பளமே தனது கடைசி சம்பளமாகவும் ஆகிவிடும் என்று அவன் கனவில் கூட நினைக்கவில்லை.
ஒரு துரதிர்ஷ்ட விடியலில், அறைக்குள் படுத்துக் கிடந்த சிதம்பரத்தின் தகப்பனார் தன் சுவாசத்தை நிறுத்திக் கொண்ட போது, நடராஜனுக்கு இருதயமே நின்று விட்டதைப் போலானது.
“கடவுளே! சோதனைகளை மட்டும் எனக்குச் சொந்தமாக்கி, வேதனைகளை மட்டும் வரமாக்குகின்றாயே… நான் எந்தப் பிறவியில் என்ன பாவத்தை செய்து தொலைத்தேன்?… இருட்டிலேயே இருந்த என்னுடைய வாழ்க்கையில் இப்பத்தான் லேசா ஒரு வெளிச்சம் வந்தது… அதையும் உடனே அணைச்சிட்டியே… இது என்ன கொடுமை?”
ஒரு சாவு வீட்டிற்கு அவ்வளவு கூட்டம் வந்திருப்பதை அன்றுதான் கண்டான் நடராஜன். “அடேங்கப்பா… சிதம்பரம் அய்யா ஊருக்குள்ளார ரொம்பப் பெரிய புள்ளி போலிருக்காரே?”
சாவுக் கூட்டத்தில் ஒரு மூலையில் இடிந்து போய் உட்கார்ந்திருந்த நடராஜன் காதுகளில் அங்கிருந்த இருவர் பேசிக் கொண்டது அப்படியே விழ, அதிர்ச்சிக்குள்ளானான்.
“காது கேட்காமலேயே இருபது, இருபத்தியஞ்சு வருஷத்தை மனுசன் ஓட்டியிருக்கார்ன்னா உண்மையிலேயே பெரிய விஷயம்தான்யா!” யாரோ ஒருவன் சொல்ல,
“அப்படியா?… இறந்து போன பெரியவருக்கு காது கேட்காதா?” இன்னொருவன் கேட்டான்.
“பின்னே… அவருக்குத்தான் அறுபது… அறுபத்தியஞ்சிலேயே காது டமாரம் ஆயிடிச்சில்ல?”
நெகிழ்ந்து போனான் நடராஜன்.
“அப்படின்னா….எனக்கு ஏதோ ஒரு வேலை போட்டுக் குடுக்கணும், சம்பளம் குடுத்து உதவணும்கற ஒரே நல்லெண்ணத்துல அந்த வேலைய எனக்குக் குடுத்திருக்காரா சிதம்பரம் அய்யா!”
எழுந்தான். சிதம்பரத்தைத் தேடிச் சென்று வாய் விட்டே கேட்டான்.
“அய்யா… நான் இப்பத்தான் கேள்விப்பட்டேன்… நம்ம பெரியய்யாவுக்கு இருபது வருஷமாகவே காது கேட்காதாமே?”
மெலிதாய் முறுவலித்தவர், “ஆமாம் தம்பி நீ கேள்விப்பட்டது உண்மைதான்!… அன்னிக்கு நீயும் வேலை வேணும்னு வாய் விட்டுக் கேட்டுட்டே… எனக்கும் உனக்கு உதவணும், சாப்பாட்டுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணித் தரணும்னு தோணிடுச்சு! அதான் பார்த்தேன் படிச்ச பையனுக்கு வேற வேலையைக் கொடுத்து அவனை ஒரு எடுபிடி ஆக்கி… அவனோட எதிர்காலத்தைப் பாழாக்கிடக் கூடாதுன்னு உனக்கு அந்தப் புத்தகம் வாசிக்கற வேலையைக் குடுத்தேன்!… இப்ப அதுலேயும் வில்லங்கம் ஆயிடுச்சு! ப்ச்… பரவாயில்லை! நீ கவலைப்படாதே! நிச்சயம் உனக்குத் தகுந்த இன்னொரு வேலையைப் போட்டுக் குடுப்பேன்” பெருந்தன்மையோடு சொல்ல,
கடந்த ஒரு மாதத்தில் தான் வாசித்த ஆன்மீக கதைகளில் தான் வாசித்தறிந்த தெய்வங்களின் வரிசையில் சிதம்பரம் அய்யாவையும் கொண்டு நிறுத்தினான் நடராஜன்.
மனிதனும் தெய்வமாகலாம், தன் நடத்தையினால்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings