in ,

விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 10) – முகில் தினகரன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7    பகுதி 8    பகுதி 9

“அதில்லை வித்யா… இந்த மகிழ்ச்சிகரமான கொண்டாட்டத்தை பார்க்கும் போது இதையெல்லாம் பார்க்க உங்க அப்பா இல்லையென்பது எனக்கே சங்கடமா இருக்குது” மீண்டும் கோமதி அதையே பேச

“ச்சூ… சும்மா தொண தொணக்காதடி!” எரிந்து விழுந்தாள் வித்யா.

“ஹும்…. நாம ஒண்ணு நினைக்க விதி வேற ஒண்ணை நினைக்கும்னு சும்மாவா சொன்னாங்க?” கோமதி சொல்ல

“விதியும் இல்லை ஒரு மண்ணும் இல்லை, எல்லாம் நான் நினைச்ச மாதிரி தான் நடந்துட்டிருக்கு” என்று சொல்லி விட்டு சட்டென நாக்கை கடித்துக் கொண்டாள் வித்யா.

திடுக்கிட்டுத் திரும்பி, அவளை கூர்ந்து பார்த்த கோமதி, “ஏய் வித்யா… நீ இப்ப என்ன சொன்னே?…. எங்கே மறுபடியும் திருப்பி சொல்லு” கேட்டாள்.

“இல்லையே… நான் ஒண்ணும் சொல்லலையே!… நான் ஒண்ணும் சொல்லலையே” பதட்டமான வித்யாவின் வார்த்தைகளில் நிறைய கள்ளத்தனம் தெரிந்தது.

“இல்ல வித்யா!… நான் உன்னை நம்ப மாட்டேன்!.. நீ அர்த்தம் இல்லாமல் எதையும் பேச மாட்டே. இப்ப நீ சொன்னதில் கூட ஏதோ உள்ளர்த்தம் இருக்கிற மாதிரிதான் என் மனசுக்கு படுது!” கோமதிக்குள் சந்தேக விதை விழுந்திருந்தது.

“அட ஏண்டி… அதெல்லாம் ஒண்ணும் இல்லை!… பந்தி போட்டுட்டாங்க போலிருக்கு போய் சாப்பிட்டுட்டு வாங்க” அவளை அங்கிருந்து நகர்த்துவதிலேயே குறியாய் இருந்தாள் வித்யா.

“வி…த்…யா” அதிர்ந்த குரலில் அவள் அழைக்க மிரண்டு போனாள் வித்யா.

“ஏய்… கோமதி.. கொஞ்சம் மெதுவா பேசுடி… எல்லோரும் நம்மளை பார்க்கிறாங்க” என்று சொன்ன வித்யாவின் வாயைப் பொத்தி, கையைப் பற்றி இழுத்துக் கொண்டு வேகமாய் நடந்தாள் கோமதி. வேறு வழியின்றி அவளுடன் ஓட்டமும் நடையுமாய் சென்றாள் வித்யா.

யாருமில்லாத அந்த அறைக்குள் சென்று கதவை சாத்திய கோமதி, வேகமாய் திரும்பி “இங்க பாரு எதுக்கும் ஒரு எல்லை இருக்கு!… இப்ப நான் கேட்கிற கேள்விகளுக்கு உண்மையான பதிலைச் சொல்லு!.”

நெற்றியைச் சுருக்கிக் கொண்டு வித்யா பார்க்க, “சொல்லு வித்யா!… உங்கப்பா எப்படி இறந்தார்?”

“மாடியிலிருந்து….”

“நோ.. மாடியில் இருந்து தவறி விழுந்துட்டாருன்னு சொல்லாதே! நான் நம்ப மாட்டேன்” கோமதியின் முகத்தில். பாறாங்கல்லின் இறுக்கம்.

வித்யா எங்கோ பார்த்துக் கொண்டு நிற்க, அவளது இரு தோள்களையும் பற்றி நேருக்கு நேர், கூர்ந்து பார்த்தபடி,  “சொல்லு வித்யா உங்க அப்பா உண்மையிலேயே அவராகவே தவறி விழுந்தாரா?… சொல்லு… சொல்லு” என்று கோமதி உலுக்க, பொசுக்கென்று அழுது விட்டாள் வித்யா.

அதைக் கண்டதும் அவள் தோள்களின் மீதிருந்த தன் கைகளை எடுத்து விட்டு, அவள் அழுது ஓயட்டும் எனக் காத்திருந்தாள் கோமதி. வித்யா அழுது ஓய்ந்த பின் நிதானமாக கேட்டாள் கோமதி. தான் செய்த காரியத்தை அழுதபடியே சொன்னாள் வித்யா.

“த்தூ…. நீயும் ஒரு பெண்ணா? பெத்த தாயை விதவைக் கோலத்தில் பார்க்க ஆசைப்பட்டேன்னு கூசாம சொல்றியே உனக்கு மனசாட்சியே இல்லையா?” பொரிந்து தள்ளினாள் கோமதி.

“ஐயோ கோமதி… ப்ளீஸ் என்னைப் புரிஞ்சுக்கோடி, நான் சொல்றதை கொஞ்சம் கேளுடி. அந்த மாதிரி சமயங்களில் நான் என்ன செய்கிறேன்னு எனக்கே தெரிய மாட்டேங்குதுடி. யாராச்சும் ஒருத்தர் சந்தோஷமா இருக்கிறதைப் பார்த்தா… அவங்களை அழ வெச்சுப் பாக்கணும்னு தோணுதடி. என்னோட மனசுக்குள்ளார ஒரு அரிப்பு ஏற்பட்டு என்னைத் துரத்துதடி கோமதி. இது இன்னிக்கு நேத்திக்கு இல்லைடி… கடந்த பதினைந்து… பதினாறு வருஷமா எனக்குள்ளார இருக்கு. கோழிக்கடைக்கு எங்கப்பா கூடப் போய் துடிக்கற கோழிகளை சந்தோஷமாய்ப் பார்த்து ரசிப்பேன்…. அதுதான் ஆரம்பம்” குமுறினாள் வித்யா.

“அப்போ ஒண்ணு செய். இப்பவே இந்தக் கல்யாணத்தை .நிறுத்திட்டு… உடனே ஒரு மனோதத்துவ டாக்டரைப் போய்ப் பாரு, பாவம்டி அந்த சுந்தர்.. ஏகப்பட்ட ஆசைக்கனவுகளோட உன்னைக் கைப்பிடிக்க காத்திட்டு இருக்காருடி, அவரோட கனவுகளை உடைத்து அவரோட வாழ்க்கையை நாசமாக்கிடாதேடி”

சட்டென்று தன் காலில் விழுந்த வித்யாவைப் பார்த்து அதிர்ந்து போய்ப் பேச்சை நிறுத்திக் கொண்டாள் கோமதி.

“ப்ளீஸ் எனக்குள்ளார இப்படி ஒரு சைக்கோ குணம் இருப்பது உனக்கு மட்டும்தான் தெரியும், தயவுசெய்து அதை உனக்குள்ளேயே வெச்சுக்கடி. வெளிய சொல்லிடாத கோமதி, என்னுடைய எதிர்காலத்தை இருட்டாக்கிடாதே கோமதி!… நான் வேணா என்னை மாத்திக்க முயற்சி பண்றேன்!… வாய்ப்புக் குடு… ப்ளீஸ்!” கோமதியின் இரு கைகளையும் பற்றிக் கொண்டு கெஞ்சினாள் வித்யா.

நீண்ட நேரம் யோசித்த கோமதி,  “அப்ப நீ எனக்கு ஒரு அஷ்யூரன்ஸ் கொடு!… கல்யாணத்துக்கு அப்புறம் இந்த மாதிரிக் காரியங்களை செய்ய மாட்டேன்!னு உறுதி கொடு!…. சத்தியம் பண்ணிக் குடு” கையை நீட்டிக் கேட்டாள்.

சற்றும் யோசிக்காமல் அவள் கையைப் பிடித்து, சத்தியம் செய்தாள் வித்யா. அந்தச் சத்தியத்தை முழுவதுமாய் நம்ப முடியாமல் போனாலும், அரைகுறையாய் நம்பி, சமாதானமானாள் கோமதி.

இருவரும் அந்த அறையை விட்டு வெளியேற கதவருகே வந்த போது அதுவரை வெளியே நின்று உள்ளே நடந்த உரையாடல்களை முழுவதுமாய் கேட்டுக் கொண்டிருந்த அந்த உருவம் மெல்ல நகர்ந்தது.

முதலிரவு அறை பூக்கள் மற்றும் கனிகளின் வாசத்தில் கமகமத்தது.

மலர்கள் தூவப்பட்ட மெத்தையில் கனவுகளைத் தேக்கிய கண்களோடு காத்திருந்தான் சுந்தரராமன்.  சினிமாக்களில் பார்த்து  ரசித்த முதல் இரவு காட்சி இன்று அவன் வாழ்க்கையில்.  “இதெல்லாம் நிஜம்தானா?” என்று தன்னைத்தானே ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.    “அட… நிஜம்தான்”.

பொறுமை இழந்தவனாய் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தை பார்த்தான் மணி 11.05.

“ஹும்…. என்னதான் பண்ணி தொலையறாங்களோ… இந்நேரம்?… சட்டுப்புட்டுன்னு பொண்ணை அனுப்பி வைக்க வேண்டியது தானே… இங்க ஒருத்தன் காத்துக் கெடக்கறான்’ங்கற இங்கிதமே இல்லாம இப்படி இழுத்தடிச்சா எப்படி?” கதவு திறக்கப்படும் ஓசை கேட்க, தலையை தூக்கிப் பார்த்தான்.

ஆனிப் பொன் தேர் கொண்டு…. மாணிக்க சிலை என்று வந்தாள் வித்யா.  கையில் பால் சொம்பு. எழுந்து சென்று அவளை கையைப் பிடித்து அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்து, குளோஸ்–அப்பில் ஒரு காந்தப் பார்வை வீசினான். அவளோ கண்ணால் கதவைக் காட்டினான்.

“ஓ… டோரை லாக் பண்ணலையா?” என்றபடி எழுந்தோடி கதவை லாக்கிட்டான்.

அவனை நோக்கி பால் செம்பை நீட்டிவளிடம்,  “இதெல்லாம் பழைய சம்பிரதாயம்” வெடுக்கென்று அதை வாங்கி, டீப்பாவின் மேல் வைத்து விட்டு, அவள் இதழ்களை ஆட்காட்டி விரலால் மிருதுவாய்த் தொட்டு, “இந்தத் தேனமுது இருக்கையில்… அந்தப் பாலமுது ஏனோ?” என்றான்.

“அடேங்கப்பா கவிதையெல்லாம் பிச்சுக்கிட்டு வருது போலிருக்கு?” சிரித்தாள்.

“நீயே ஒரு கவிதை.. உன்னை விடவா இன்னொரு கவிதை?”

“அய்யோ.. சாமி விடிய விடிய கவிதை பாடியே என்னை கொன்னுடுவீங்க போலிருக்கே!” சட்டென்று அவளை இழுத்து இதழ்களை கவ்வினான். அந்த புது அனுபவம் அவளுக்கும் இனித்தது. தொடர்ந்து அவன் ஒவ்வொரு அங்குலமாய் முன்னேறி அவளை முழுவதுமாய் சுவைக்க முனைந்த போது, அவளுக்குள் ஒரு அமிலக் குடுவை உடைந்து மனதின் சுவரெங்கும் விகாரம் ஒட்டிக் கொண்டது.

கோமதிக்கு செய்து கொடுத்திருந்த உறுதிமொழியை மறந்தாள்.   “இத்தனை சந்தோசமாய் இருக்கும் இவனை சோகப்படுத்தினால் என்ன? ஏமாற்றத்தைக் கொடுத்து இவனை நோகடித்தால் என்ன?” மனதிற்குள்ளிருந்து சாத்தான் கேட்டது.

“ஏய்… இவன் உன் புருஷன்டி” என்றது நல்ல மனசு.

“அடேய் முட்டாள்… அப்பனையே நான் அப்பான்னு நினைக்கல… அப்புறம் புருஷன் என்ன புருஷன்?” சாத்தானும் வேதம் ஓதியது.

“வேண்டாம்… வேண்டாம்… தப்பு செய்யாதே” நல்ல மனம் கூவியது.

“இதுதான் நல்ல சந்தர்ப்பம்…. யோசிக்காதே… சீக்கிரமா இவனைச் சோகப்படுத்து… அந்த சோகத்தைப் பார்த்து சுகத்தை அனுபவி” இது சாத்தான் குரல்.

நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு சாத்தான் வெற்றி பெற்ற போது, வித்யாவை இறுக்கி அணைத்திருந்தான்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காமராஜர் காட்டிய வழியிலே (சிறுகதை) – மலர்மைந்தன், கல்பாக்கம்

    தாயுள்ளம் (சிறுகதை) – பிருந்தா ரமணி, சென்னை