அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13
உலகின் அழகெல்லாம் அவள் கொள்ளும் திமிரென்றால் –
அவளின் திமிரிலக்கணம் நான்!!
அவளருகே வந்தவன், “இப்பவும் கூட உனக்கு என் மேல காதல் இருக்குன்னு என்னால உணர்த்த முடியும்” என்று கூறி விட்டு, அவளுக்கு இன்னும் அருகே… மிக நெருக்கமாக வந்து அவள் முகத்தைத் தனது கைகளில் ஏந்தினான்.
வெண்பனி பொழிகின்ற வேளையிலே, உடல் சிலிர்த்துக் குளிரில் துவண்டாலும் மனமெங்கும் அந்தப் பனியின் ஸ்பரிசம் தேடியே அதை ஸ்பரிசித்தே நிற்கும். அப்படியான ஒரு மனநிலையில் தான் இருந்தாள் அபி.
என்ன தான் வம்சி கிருஷ்ணா வேண்டாம் வேண்டாமென ஒதுக்கினாலும், அவள் மனம் அவனின் இதயக்கூட்டிலேயே தஞ்சமடைய விழைந்தது.
அதனாலேயே அதுவரை அவனுடன் வாய்ச் சண்டை போட்டுக் கொண்டிருந்தவள், இப்பொழுது அவன் இதம் தேடி, அவன் இதழ் தேடி கண் மூடி நின்றிருந்தாள். இந்த நிலையில் வம்சிக்கும், உள்ளுக்குள் மயக்கும் மதுவொன்று பொலிந்து கிறங்கவே செய்தது, அவளது அந்த மோன நிலை.
இருந்தாலும் தன்னைச் சிரமத்துடன் சமனப்படுத்தியவன்… மெதுவே அவள் மூக்கோடு மூக்குரசி… காது மடல்களில் தனது இதழுரசி, மென்மையாக, சரசமாக, ரகசியம் பேசும் குரலில், “இதெல்லாம் செஞ்சு தான் நீ என்ன காதலிக்கறத உனக்கே நான் உணர்த்தணும்ன்னு அவசியம் இல்ல அபி. நீ எனக்கானவ, அத நீயே ஒத்துக்கிடவும் செஞ்சவ. ஆனா அதுக்கப்பறம் ஏதோ நடந்துருக்கு. அது என்னன்னு கண்டுபிடுச்சு, நீயே உன் மனசார என்னை ஏத்துக்க வச்சதுக்கப்பறம் இதெல்லாம் பார்த்துக்கறேன்” என்று கூறிவிட்டு அவளிடமிருந்து விலகினான்.
அவள் விழி திறந்து அதிசயமாய் அவனை நோக்க, அவளை நோக்கி தனது மாயச் சிரிப்பின் மூலம் மன்மத பாணத்தை எறிந்துவிட்டு அந்த அறையில் இருந்து வெளியேறினான் கிருஷ்ணா.
அவன் சென்று வெகுநேரம் வரையிலும் கூட அபிக்கு அவனது நினைவும், அந்த நினைவின் ஸ்பரிசமும், அவன் குரலும், குரலின் கிறக்கமும் அகலவில்லை.
யாரிவன்? என்னையும் அறியாது என் உள்ளம் நுழைந்து என்னைக் களவாடியவன்? நானே மறுத்தாலும் எனை எனக்கே உணர்த்திடுபவன்.
இவன் முன்னே தன் தைரியமும், வைராக்கியமும் நிலைத்திருக்குமா? என்ற கேள்வி அவள் மனதுள் விஸ்ரூபமெடுத்து மிரட்டியது.
ஆனாலும், ஒரு முடிவெடுக்க இயலாத குழப்பத்தில் வெகுநேரம் அந்த அறைக்குள்ளேயே தனித்திருந்த அபி, வெளியே தோட்டத்திலாவது சென்று அமர்ந்திருக்கலாம் என்ற முடிவுடன் வந்தாள்.
ஆனால் அங்கு, “…………. நீ செஞ்சது சரி தான் வம்சி. எப்படியோ இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு” என்று அரங்கநாதன் வம்சி கிருஷ்ணாவிடம் கூறிக் கொண்டிருந்தார்.
மேலும் வம்சியோ, “எனக்குத் தெரியும் தாத்தா.. எப்படி இருந்தாலும் உங்களுக்கு யார் முக்கியம்ன்னு. அதனால தான் நானும் துணிஞ்சு இத செஞ்சேன். எப்படியும் என் கருத்துக்கு உங்ககிட்ட மாற்று கருத்து இருக்காதுன்னும் எனக்கு நல்லாவே தெரியும்” என்று சிரித்தபடி அவன் கூற, அதற்கு அரங்கநாதனும் அவனை நோக்கி ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு மீசையை நீவி விட்டுக் கொண்டே சென்று விட்டார்.
அதைக் கண்ட அபியோ, ‘அப்போ வம்சி எனக்குத் தாலி கட்டினது, இப்போ என்கிட்ட இப்படி நடந்துக்கறது எல்லாம் இவங்க ரெண்டு பேரோட திட்டம் தானா? ச்சே.. என்ன மனுஷங்க இவங்கல்லாம்?’ என்று எண்ணிய பொழுதே, சூடான கண்ணீர் அவள் கன்னம் தொட்டது.
ஆனால், மறுகணமே அதை அழுந்த துடைத்து எறிந்தவள், ‘கிருஷ்.. கிருஷ்ணா யாரு? அந்த அரங்கநாதனோட ரத்தம் தான? அவர் யாரு? தன்னோட பையனுக்கு ஒரு சட்டம், பொண்ணுக்கு ஒரு சட்டம்னு இருந்தவர்… இருக்கறவர் தான? அவர் என் அம்மாக்கு செஞ்ச பாவத்துக்கும், இப்போ எனக்குச் செஞ்ச, செஞ்சுட்டு இருக்கற பாவத்துக்கும்… இனி என் கையால தான் அனுபவிக்கப் போறார்” என்று வன்மத்துடன் மனதோடு சூளுரைத்துக் கொண்டாள் .
அப்பொழுது அவள் அங்கு இருப்பதைப் பார்த்துவிட்ட வம்சி, எதுவுமே நடக்காததைப் போல, “என்ன அபி… ஏதாவது வேணுமா?” என்று கரிசனையாகக் கேட்டவனிடம்
முதலில் முறைத்தவள்… பின், “ஒன்னும் இல்ல கிரிஷ்.. சும்மா கொஞ்ச நேரம் வெளில இருக்கணும்னு தோணுச்சு. அதான்…” என்று சகஜமான பார்வையுடன் கூற, கிருஷ்ணாவிற்கோ ஆச்சர்யமாகிப் போனது.
‘நாம என்ன கேட்டாலும், எத கேட்டாலும் அதுக்கு எதுவுமே பேசாம வெறும் முறைப்ப மட்டுமே பதிலா தர்றவ, இப்ப என்னடானா சாதாரணமா பேசறாளே? இது தான் மஞ்சக்கயிறு மாஜிக்கா?’ என்று முதலில் குதூகலத்துடன் எண்ணியவன்
பிறகு… ‘அப்படியே இருந்தாலும் முதல்ல எதுக்கு நம்மள பார்த்து முறைச்சாளாம்? அதுக்கு என்ன அர்த்தமாம்?’ என்று மனதோடு நீயா? நானா? போல, கேள்விகள் கேட்டு பதில் கிடைக்காது விழித்தபடி நின்றான்.
‘இருந்தாலும் இன்னொரு பால் போட்டுப் பார்க்கலாம்… அவ சிக்ஸர் அடிக்காட்டியும் கூட, சிங்கிள் அடிச்சாள்’ன்னா கூடப் பரவாயில்ல. ஆனா நோ பாலா மட்டும் போயிடக் கூடாதுடா பழனியாண்டி’ என்று மீண்டுமாய் ஒரு சூப்பர் ஓவருக்குத் தயாராகி…
அவளிடம்… “அபி, உனக்கு வீட்டுக்குள்ளயே இருக்கறதுக்கு ஒரு மாதிரி இருக்கா? நாம வேணா.. எங்கயாவது.. வெளில போயிட்டு வரலாமா?” என்று தயங்கித் தயங்கி கேட்டான்.
அதற்கு எந்தப் பதிலும் கூறாது, முகத்தில் எவ்வித உணர்ச்சியும் காட்டாது, அவனது கண்ணோடு கண் நோக்கி வெறுமையாகப் பார்த்தவளை, எந்தக் கணக்கில் எடுப்பது என்று புரியாமல் நின்றிருந்தவனுக்குத் திடீரென்று தன்னந்தனியாக, அவனுக்கு மட்டுமேயாக, மின்னல் வெட்டி… மென்சாரல் மழை தூறியது.
ஏனென்றால், அவன் அப்படி “வெளியே போலாமா?” என்று கேட்ட கேள்விக்கு, வெறுமையான பார்வைக்குப் பின்னே மென்மையான சிரிப்பொன்றை பதிலாய்த் தந்தவள் அது போதாதென்று, “ஹ்ம்ம்.. போலாம் க்ரிஷ்” என்று வாய் திறந்து பதில் கூறியதும் எப்படி இருக்கிறதாம் அவனுக்கு.
அந்த ஒற்றைச் சிரிப்பிலும், சிறுபேச்சிலுமாக முழுதாய் தொலைந்தவன், அவள் ஆழ் மனஉணர்வினை கணக்கிலெடுக்க மறந்தான். அதன் விளைவுகள் ஒவ்வொன்றாக வெளிவரும் பொழுது தானே அவளது வலி, அவனுக்குக் கடத்தப்படும்.
இப்பொழுது காதலை மட்டுமே கடத்த முயன்று ஓடிச் சென்று கார் சாவியை எடுத்துக் கொண்டு, போகிற போக்கில் நளினியிடம்…”அம்மா நானும், அபியும் வெளில போயிட்டு வர்றோம்” என்று சொல்லி விட்டு, அவரது பதிலையும் கூட எதிர்பாராது சென்று விட்டான்.
அபியும் கூட, அவரைப் பார்த்து ஒரு சின்னச் சிரிப்புடன் தலையை மட்டும் ஆட்டிவிட்டு கிளம்பி விட்டாள்.
அதைப் பார்த்து வாயடைத்துப் போன நளினி, அவருக்கு அருகில் நின்றிருந்த தன்யாவிடம், “என்னடி நடக்குது இங்க?” என்று ஆச்சர்யத்தில் வாய் பிளந்து கேட்க
அவளோ, “ஹ்ம்ம்.. இவ்வளவு நாள் எலியும் பூனையும் அடிச்சுக்கிட்டும், கடிச்சுக்கிட்டும் இருந்தவங்க… இப்போ காதோல் பண்றங்களாம் காதோல்” என்று கிண்டலாகக் கூறவும்
அவள் கூறியது புரியாத துளசி, “என்னடி சொல்ற?” என்று கேட்க
தலையில் அடித்துக் கொண்ட தன்யா, “ஐயோ லூசு அம்மா.. அவங்க இப்போ தான் காதலிக்க ஆரம்பிச்சிருக்காங்கன்னு சொன்னேன். ஆனா… உங்கள எல்லாம் வச்சுக்கிட்டு ஒரு கொலை கூடப் பண்ண முடியாதும்மா” என்று கமல் பாணியில் சொல்ல, அவளை முறைத்தார் துளசி.
மறுபுறமோ, காரில் அபியும் கிருஷ்ணாவும்… ஒருவருக்கொருவர் பேசாமல், செல்லும் பாதையையே வெறித்தபடி அமர்ந்திருந்தனர்.
சற்று நேரம் பொறுத்த கிருஷ்ணா, பின்னர் மெதுவே… “நாம எங்க போலாம் அபி? உனக்குக் கோயம்புத்தூர்ல எங்கயாவது போகணும்னு இருக்கா?” என்று கேட்க
“எங்கயும் போக வேணாம்” என்று பதில் தந்தாள் அபி.
அவள் பதிலைக் கேட்டுப் புருவத்தைச் சுருக்கிய கிருஷ்ணா, “ஏன் அபி? நீ தான வெளில போலாமானு கேட்டதுக்குச் சரினு சொன்ன? இப்போ என்னடான்னா எங்கயும் போக வேணாம்னு சொல்ற?” என்று அவன் கேட்டான்.
“எங்கயும் போக வேணாம்னு தான் சொன்னேன். ஆனா, இப்படியே கார்ல போலாம்” என்று கூறிவிட்டு மீண்டும் சாலையை வெறிக்கத் துவங்கினாள். அவள் சிந்தை செல்லும் திசையினை அறிய இயலாமல் தவித்தான் கிருஷ்ணா.
ஆனால் அவனுக்கு உதவி புரியும் நோக்கோடு, அந்தக் கார் பயணத்தையே மேலும் இனிப்பாக்குவது போல, அந்த மாலைப் பொழுதில் சிறுமழையும் சேர்ந்து கொள்ள, அவனது கார் பண்பலை “புது வெள்ளை மழை இங்குப் பொழிகின்றது” என்று பாடி அவர்களை ஒருவரோடொருவர் பிணைக்க எண்ணியது.
அந்த அனுபவம், அவர்களுக்கு அதே போன்றதோர் ஒரு முன் அனுபவத்தை நினைவுறுத்த, இருவரும் சத்தமின்றி அவர்களது கடந்த காலத்தில் விழுந்தனர்.
அப்பொழுது அபி கல்லூரியில் சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகி இருந்தது. அப்பொழுதுதான் அபிக்கும், வம்சிக்கும் காதல் தீ சுடர் விட ஆரம்பித்திருந்த தருணம். அவளுக்கு முதல் செமஸ்டர் பரீட்சை அன்றோடு முடிய, கிருஷ்ணாவும் அவனது பரிட்சை முடிந்து ஹாஸ்டலிலிருந்து வீடு திரும்பும் நேரம்.
கிருஷ்ணாவிற்கு இன்னும் ஒரு செமஸ்டர் பாக்கி இருந்தாலும், இப்பொழுது விடுமுறைக்கு அவளைப் பிரிவதையே சகிக்க முடியவில்லை அவனுக்கு. அதுவும் இன்னமும் அவளிடம் காதல் சொல்லாத நிலையில், மனம் அவளது காதலுக்காக, காதலியின் சம்மதத்துக்காகத் துடித்துக் கொண்டிருந்தது.
அதனால் நண்பனின் காரை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு வெளியே வந்தவன், அங்குப் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த அபியிடம் சென்று காரை நிறுத்தினான். அவன் அவளுக்காகத் தான் அங்கு வந்திருக்கிறான் என்று உணர்ந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாது, அவன் வந்ததையும் உணராதது போன்றதொரு பார்வையுடன் நின்றிருந்தாள் அபி.
அவளது அந்தப் பாவனையையும், அதிலிருந்த திமிரையும் உள்ளூர ரசித்தவன், “நான் வந்தது தெரிஞ்சும், கண்டுக்காம என்ன மதிக்காம நிக்கற பாரு.. இந்தத் திமிரு தாண்டி என்னையே உன் காலடில விழ வைக்குது” என்று அவளருகே சென்று, அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில் கூறினான்.
அதையும் சட்டை செய்யாமல், அவளது பேருந்து வரும் வழியையே பார்த்துக் கொண்டிருந்தவளை கண்டு கடுப்பாகி, அவள் கையைப் பிடித்து இழுத்து காரில் ஏற்றி தானும் உடன் ஏறினான்.
ஆனால் இதற்கெல்லாம் அசருவாளா அவள்? அவள் பாட்டிலும் அந்தக் காரை நோண்டி FMஐ இயக்கினாள். அதுவும் மதுரக் குரலில்… “புது வெள்ளை மழை இங்குப் பொழிகின்றது” என்று காதல் பொழிந்தது. அந்நேரம் சரியாக வானம் கறுத்து, வெய்யோன் மறைத்து, மேகம் சூழ்ந்து, மின்னல் வெட்டி, பொன் மழையும் எட்டிப் பார்த்தது.
அதைக் கண்ட இருவரும் ஆனந்தத்துடன் ஒருவரை ஒருவர் நோக்க, அழகு சிரிப்பை பரிமாறிக் கொள்ள, அந்தச் சிரிப்பினூடே கிருஷ்ணா கேட்டான், “நான் வந்ததே தெரியாத மாதிரி அப்படிச் சீன போட்டுட்டு இருந்த, இப்போ என்னடான்னா இவ்வளவு சகஜமா என் கூடக் கார்ல வந்துட்டு இருக்க?” என்றான்.
அதற்கு அபி, “ஆமாம் அப்படித்தான், அதுக்கென்ன?” என்று கேட்கவும், ஒரு பெருமூச்சொன்றை வெளியிட்டான் கிருஷ்ணா.
அதற்கும், “போதும்.. போதும்.. காருக்குள்ளேயே AC போட்டுருக்கு. இன்னும் காத்து சேர்க்க வேணாம்” என்று கூறினாள்.
உடனே அவளைத் திரும்பிப் பார்த்து கிருஷ்ணா முறைக்கவும், “ரோட பார்த்து வண்டிய ஓட்டு மேன், என் மூஞ்சிலயா ரோடு மேப் இருக்கு?” என்று கேட்கவும்
இதற்கு மேலும் தாங்க முடியாதென்று எண்ணிய கிருஷ்ணா, “அடிங்க… ஆள பாருடா.. அவளைப் பாரு டா.. வாயி.. கொஞ்சமாச்சும் இந்த வாய் அடங்குதானு பாரேன்? நான் உன்னை, உன் விருப்பம் இல்லாம இந்தக் கார்ல ஏத்தி கூட்டிட்டு போயிட்டு இருக்கேன். நான் எங்க உன்ன கூட்டிட்டு போறேன்னு உனக்குத் தெரியாது? என்ன பண்ணுவேன்னு தெரியாது? ஆனா இதையெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காம நீ பாட்டுக்கு என்னை கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்க? நான் உன்னை எங்கயாவது கடத்திட்டு போய்ட்டா என்னடி பண்ணுவ?” என்று அவன் கேட்கவும், கலகலவென நகைத்தாள் அபி.
“எதுக்குடி இப்ப சிரிக்கற?” என்று கிருஷ்ணா கேட்டதற்கு
“ஹ்ம்ம்… நீ என்னை தூக்கிட்டுப் போய்ட்டாலும்… அப்படியே இந்த மழைகொட்டோ கொட்டுன்னு கொட்டி, வேலூரையே மூழ்கடிச்சுடும் போ” என்று நக்கலாகக் கூற, அவளை முறைத்தான் கிருஷ்ணா.
“ஆமா.. பின்ன என்ன? என்னை கடத்திட்டு போய் மிஞ்சி மிஞ்சி என்ன செய்வ? குறுகுறுன்னு முறைச்சு முறைச்சு பார்த்துட்டு, மறுபடியும் எங்க வீட்டுலையே பத்தரமா அலுங்காம குலுங்காம விட்டுடுவ. இதுக்கு இவ்ளோ சீனு. பொண்ண கடத்தற மூஞ்சிய பாருங்கடா” என்று அவள் அவனை மேலும் வாரு வாரென்று வாரினாள்.
அதைக் கேட்ட அவன் முகமெல்லாம் சினமேற, ஏதோ கூறப் போனவன், பின்பு கொஞ்சம் நிதானித்தான்.
‘இவ இப்படித் தான். ஏதாவது சம்மந்தமே இல்லாம பேசி பேசியே நான் சொல்ல வர்ற விசயத்த சொல்ல விடாம செஞ்சுடுவா. இன்னைக்கு விடக் கூடாது, என் மனசுல உள்ளதை சொல்லியே ஆகணும்’ என முடிவெடுத்தவன், தன்மையாக, “அப்ப என்னைக் கண்டா உனக்கு பயமில்லையே அபி?” என்று கேட்டான்.
அதற்கு ஸ்டைலாகத் தலைமுடியைச் சிலுப்பியவாறே, “அதெல்லாம் ஒரு ஆனியனும் இல்ல” என்றாள்.
“அப்போ நான் ஒன்னு சொல்லட்டுமா?” என்று கேட்க
“நீ என்ன சொல்லுவனு எனக்குத் தெரியும் க்ரிஷ்” என்று கூறி அவனை அதிர வைத்தாள்.
அப்பொழுது அவனது திடுக்கிடலில் கார் சட்டென நின்றது.
“என்ன சொல்ற? நான் என்ன கேட்க போறேன்னு உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.
அதற்கு அவளோ, “நீ எதுக்கு என்னை தனியா இப்படிக் கார்ல கூட்டிட்டு வந்தேன்னு தெரியாம தான் நான் இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கேன்னு நினைக்கறியா க்ரிஷ்?” என வினா எழுப்ப, அவனுக்குள் ஆயிரம் மின்மினிகள் ஒருசேர பறந்தது.
(தொடரும் – சனிக்கிழமை தோறும்)
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13
GIPHY App Key not set. Please check settings