in

காக்க! காக்க! ❤ (பகுதி 11) – ✍ விபா விஷா, அமெரிக்கா

காக்க! காக்க! ❤ (பகுதி 11)

செப்டம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8   பகுதி 9 

பகுதி 10

காசய போராளியை நோக்கி வானில் பறந்து கொண்டிருக்கும் வேளையிலே, அதிரூபன் வாசுவிடம் கேட்டான். “எப்படி வாசு உனக்கு இந்த மாதிரி ஒரு இடம் இருக்குன்னு தெரிஞ்சுது?”

“எங்க கிரகத்துல, ரொம்பப் பணம், காசு, புகழோட இருக்கற பணக்காரத் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள் இவங்க எல்லாரும் வெளியுலகத்துக்கு… குறிப்பா மீடியாக்கு தெரியாம எங்கயாவது வந்து பொழுது போக்கணும்னா, அவங்க வர முதல் இடம் மகாசய போராளி தான்”

“அப்படி அந்த மகாசயப் பேராளியில என்ன தான் இருக்கு?” என்று சிருஷ்டி கேட்க

“அதான் சொன்னேனே… பேராளின்னு. அப்படினா… மிகப் பெரிய கடல்னு அர்த்தம். அங்க வெறும் கடல் தான் இருக்கு. ஆனா அந்தக் கடலுக்கு அடியில் ஒரு பெரிய, செயற்கை உலகத்தையே உருவாக்கி வச்சுருக்காங்க. அந்தப் பணம் இருக்கற யார் வேணாலும் போய், நிம்மதியா தங்களோட காலத்தைக் கழிக்கலாம். அல்லது அங்கேயே முழு வாழ்க்கையும் வாழலாம். கடலுக்கு அடியில் சுரங்கம் அமைத்து அங்கு இயற்கையா கிடைக்கிற எல்லா விஷயங்களையும் வச்சுருக்கறாங்க.

ஆனால் அங்க போனா யாராலயும் செல்போன், லேப்டாப் இந்த மாதிரி எதையும் உபயோகிக்க முடியாது. அதுமட்டுமில்லாம வெளியுலகத் தொடர்பே இல்லாம, வெளிஉலகத்துல என்ன நடக்குதுன்னு எதுவுமே தெரிஞ்சுக்க முடியாம, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள நினைக்கிறவங்களும், இயற்கையோடு இணைந்து வாழ ஆசைப்படறவங்களும் தான் அங்க போய்த் தங்குவாங்க. அப்படியும் இல்லைன்னா, தங்களுடைய வேலை அழுத்தத்துல மனம் சோர்ந்து போயிருக்கற பெரிய ஆளுங்க, கொஞ்சநாள் அவங்களோட மனஅமைதிக்காக அங்க வந்து தங்கிவிட்டு போவாங்க.

அது முதல்ல எல்லாம் நிறையக் காசு கொடுத்து தங்கற மாதிரியான இடமா இருந்துச்சு. ஆனா காலம் செல்ல செல்ல, அப்படி இயற்கையோட இயைந்து வாழ எந்த ஒரு மனுஷங்களுக்குமே பிடிக்கல. அதையும் விட நேரம் இல்ல. அதனால இப்போ அந்தத் தங்கற இடத்தை இலவசமாக வந்து தங்கிக்கற மாதிரி வச்சுருக்காங்க. இருந்தும் கூட அப்பப்போ யாராவது சுற்றுலாத்தளம் மாதிரி பார்த்துட்டுப் போறாங்களே தவிர, அங்கேயே தங்கி இருக்க விரும்பல” என்று கொஞ்சம் வருத்தம் கலந்த குரலில் கூறினான் வாசு.

“அப்படினா இப்போ அங்க யாருமே இருக்க மாட்டாங்களா வாசு?” என்று அதிரூபன் கேட்க

“இருப்பாங்க இருப்பாங்க… ஏன் இல்லாம போகப் போறாங்க? நான் தான் ஏற்கனவே சொன்னேனே… ரொம்பப் பணம் இருக்குறவங்க, நிறையச் சம்பாதிச்சு மனசு சலிச்சு போனவங்க யாராவது கொஞ்சம் பேரு அங்க இருக்கலாம். ஆனா இப்போதைக்குச் சிருஷ்டியோட அந்தச் சென்சார் ட்ராக்கிங் டிவைஸ் செயலிழக்கற வரைக்கும் நாம தங்கி இருக்குறதுக்கு வேற பாதுகாப்பான இடம் எதுவும் இல்லை” என்று பதிலளித்தான் வாசு.

பிறகு இறுதியாக அவர்கள் அனைவரும் சரியாக அந்த மகாசய போராளிக்கு சென்று பார்க்கையில், அது மேற்பரப்பில் வழமை போன்றதொரு பெரும் சமுத்திரமாகவே காட்சி அளித்தது. ஆனால் அந்தக் கடலுக்கு அடியில் இருக்கும் அந்தத் தீவு போன்றதொரு இடத்திற்குச் செல்ல, பற்பல கட்டுப்பாடுகளும் பல காவலர்களும் இருந்தனர்.

அதைக் கண்ட வாசு, “அச்சச்சோ அதிருபா, இந்த அளவுக்கு இங்க கட்டுப்பாடோட, பாதுகாப்போட இந்த இடம் இருக்கும்னு நான் நெனைக்கல. இப்போ நாம எப்படி இங்க போகப் போறோம்?” என்று சற்றுப் பதட்டமாகக் கேட்கவும், ஒரு மந்தகாச சிரிப்பு அதிரூபனிடம்.

“அந்த வ்ரித்ராவோட அரண்மனைக்குள்ளேயே போய் பொண்ணைத் தூக்கிட்டு வந்த நமக்கு, இந்த இடத்துக்குள்ள போறது தானா கஷ்டம்?” என்று கூற, அந்நிலையிலும் அவர்களுக்குள் சன்னமான சிரிப்பு.

முன்பு சிருஷ்டியைப் பார்க்க அல்லது தூக்க, அதிரூபனும், வாசுவும், வ்ரித்ராவின் வீட்டிற்குச் சென்றபொழுது செய்த சாகசத்தை இங்கும் செய்யலானார்கள். என்ன… இங்கே எந்த மின்காந்த அலைகளும் வேலை செய்யாது என்பதால், வாசுவிற்குப் பெரிதாய் எந்தவொரு வேலையும் இருக்கவில்லை.

அதைக் கண்ட சிருஷ்டிக்கும் அவர்கள் எப்படி அவ்வளவு பாதுகாப்பு நிறைந்த வரித்ராவின் வீட்டில் தன்னைக் காண வந்திருப்பார்கள் என்ற விஷயம் புரிந்துவிடக், கண்கள் விரிய அதிரூபனின் அசகாயச் சூரத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு சிருஷ்டியின் உடம்பில் எங்குத் தான் அந்த ட்ராக்கர் வைத்திருக்கிறார்கள் என்று அதிரூபனும், வாசுவும் பார்த்துக் கொண்டிருக்க, அவளது மணிக்கட்டில் பெரிதாய் ஒரு காயத்தின் தழும்பு இருப்பதைப் போலத் தெரிந்தது.

அது என்னவென்று வாசு, சிருஷ்டியின் கைகளைப் பிடித்துப் பார்க்க, “அதிருபா, இங்க தான் பா அந்த ட்ராக்கர் வச்சுருக்கறாங்க” என்று கூவினான்.

உடனே அங்கு அவர்கள் தங்கியிருந்த அந்த இடத்தில் சமைக்கும் பகுதி போன்றதொரு இடத்திற்கு ஓடிச்சென்ற வாசு, ஒரு கத்தியை எடுத்து வர, அதை வாங்கிய சிருஷ்டியே தன் கை மணிக்கட்டை கீறி அந்த ட்ராக்கர் டிவைஸை வெளியே எடுத்தாள்.

உடனே அதை வாங்கிய அதிரூபன், அவர்கள் இருக்கும் இடத்திற்கு மறுகோடிக்கு பறந்து சென்றான். சென்றவன், மகாமேரு போன்றதொரு இடத்தில் அந்த டிவைஸை தூக்கி எறிந்துவிட்டு, மீண்டுமாய் அவன் அந்த மகாசய போராளிக்கு வந்தபோது, நிலைமை மிகவும் மோசமாகி விட்டிருந்தது.

முகமெல்லாம் அப்பிக் கிடந்த சோகத்துடன், என்னவென்று புரியாத கவலையுடனும் வாசு இருக்க, அவனைப் பார்த்த அதிரூபனுக்கும் உச்சபட்ச பதட்ட நிலை.

“என்ன ஆச்சு வாசு? ஏன் இப்படிப் பதட்டமா இருக்க?” என்று அவன் வாசுவை பார்த்துக் கேட்க, வாசு கூறிய செய்தி அதிரூபனின் தலையில் இடியை இறக்கியது போலானது.

ஏனென்றால், அதிரூபனின் உள்ளம் பறித்தவள்… அவனின் இன்னுயிரான சிருஷ்டி… அனைத்து உயிர்களையும் படைப்பவள், இப்பொழுது மூர்ச்சையாகி தரையில் கிடந்தாள்.

“அவ நல்லா தான் பேசிட்டு இருந்தா ரூபா, ஆனா திடீர்னு ஏதோ நெஞ்செல்லாம் வலிக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னா. நான் அவளுக்குத் தண்ணி எடுத்துட்டு வரதுக்குள்ள இப்படிக் கீழே விழுந்துட்டா. நானும் அவளுக்கு முகத்தில் தண்ணீ தெளிச்சு, எல்லா முதலுதவியும் செய்து பாத்துட்டேன். ஆனா அவ எழுந்துக்கவே மாட்டேங்கறா. எனக்குப் பயமா இருக்கு அதிரூபா” என்று அவன் கூற, அப்படியே உடைந்து போய் அமர்ந்து விட்டான் அதிரூபன்.

அவனும் என்ன தான் யுவா கிரகித்து மக்களுக்காக, அவர்களின் துயர் போக்கும் நோக்கோடு இங்கு வந்திருந்தாலும், அவனது அவளை மீட்டு விட வேண்டும் என்ற வெறியும் அதற்கு முக்கியக் காரணமாய் அமைந்திருந்தது. மேலும் சிருஷ்டியின் காதலினாலே தான், அவளைப் பிரிந்த பொழுதும் கூடத் தனது உயிரை காத்துக் கொண்டிருந்தான். ஆனால் இப்போது இப்படி அவள் உணர்வற்று கீழே விழுந்து கிடப்பதை பார்க்கவும், அவனுக்கு உயிரே அற்று விட்டதைப் போல் ஆனது.

அந்த நேரம் பார்த்து சரியாய் கைக்கணினி ஒலியெழுப்ப, மீண்டும் அதிரூபனை அழைத்திருந்தது சில்வானஸ். இம்முறை அவரது அழைப்பினை அவன் சிறிதும் கண்டுகொள்ளவே இல்லை. ஏன்… அவனது கைக்கணினி அப்படி அலறிக் கொண்டு இருப்பதும் கூடக் காதில் விழவில்லை. அதை கவனித்த வாசு தான், அதிரூபனை உலுக்கி, சுயநினைவிற்கு மீட்டு அவனது கைகணினியை கவனிக்கச் சொன்னான்.

அவன் உள்ளுக்களில் வாசுவைத் திரும்பிப் பார்த்த அதிரூபனோ, சிறிதும் தன்னுணர்வின்றி அவனது கை கணினியை இயக்கினான். மறுபுறம் சில்வானஸ் பேசியது கூட முதலில் அவனுக்கு அரைகுறையாகத் தான் அவன் காதில் விழுந்து, மூளையைத் தொட்டது. ஆனால் அவர் எப்பொழுது சிருஷ்டியின் பெயரை குறிப்பிட்டாரோ, அப்பொழுதே அவனது மூளை விழித்துக் கொண்டது.

“அதிரூபா… நான் பேசறது கேட்குதா? இங்க பாரு நான் சொல்வதைக் கவனமா கேட்டுக்கோ. கொஞ்சம்கூட அதிர்ச்சி ஆகாம கேட்டுக்கோ. இந்த விஷயம் உன்னோட நிதானத்தை இழக்க வைக்கவே கூடாது” என்று பலத்த பீடிகையுடன் அந்தச் செய்தியைக் கூற ஆரம்பித்தவர், மீண்டும் கனமாய் ஒரு பேரிடியை அவன் தலையில் இறக்கினார்.

அந்த இடி, அவர் வாய் மொழியாகவே.. “கவனி அதிரூபா, இங்க சிருஷ்டியோட உயிர்சக்தில முக்கால்வாசி பாகம் சிதைஞ்சுடுச்சு. எங்களால அந்த உயிர்சக்தியை எவ்வளவு போராடியும் மீட்க முடியல, மீதி இருக்கிற அந்தக் கொஞ்சம் உயிர் சக்தியும் கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சிட்டு வருது. நாங்களும் முடுஞ்ச அளவுக்குப் போராடுறோம், எதுக்கும் நீ அவளைச் சீக்கிரம் கண்டுபிடிக்கறது நல்லது” என்றார்.

இதைக் கேட்டதும் மின்னலால் தாக்குண்டார் போன்றதொரு மின்னதிர்வு அதிரூபனுக்கு. என்ன செய்வதென்றே தெரியாத முற்றிலுமான திகைப்பு அவன் முகத்தில்.

அவன் அங்குச் சில்வானஸஸுக்கு பதிலேதும் கூறாது போகவும், மறுமுனையில் அவர், அதிரூபனுக்கு இந்தத் தகவலெல்லாம் போய்ச் சேர்ந்ததா என்ற குழப்பத்தில், மீண்டும் மீண்டும் அதிரூபனை அழைத்துக் கொண்டிருக்க, இம்முறை அவரிடம் பேசியது வாசு.

தற்பொழுது யுவா இருக்கும் நிலையையும், யுவாவின் மக்களின் நிலையையும், மேலும் சிருஷ்டியின் உணர்வற்ற நிலை, அதைக்கண்ட அதிரூபனின் அதிர்ச்சிநிலை என இவை எல்லாவற்றையும் அவருக்கு விளக்கி கூறினான்.

அதிரூபனோ அடுத்து எது செய்யவும் தோன்றாது, சிருஷ்டியை தூக்கிக் கொண்டு வெளியே கடற்பரப்பிற்குள் வந்து அதன் மணல் திட்டில் அவளைப் படுக்க வைத்து விட்டு அமைதியாய் கடலை மட்டுமே சிலையின் நிலையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

வாசுவும் எவ்வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாது… என்ன செய்வதென்று புரியாத நிலையில் அமைதியாகவே நின்றிருந்தான். இருவரும் எவ்வளவு நேரம் அப்படியே நின்று இருந்தார்களோ தெரியவில்லை.

ஒரு மிகப்பெரிய ஏவுகணை அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதை முதலில் கவனித்தது வாசுதான். அவன் அதனை பார்த்து அதிர்ந்து காட்டு கத்தலாய் கத்தியும் அலறியும் கூட, அதிரூபன் எதையும் உணரும் நிலையில் இல்லை.

இறுதியாக, மிக அருகில் அந்த ஏவுகணை வந்துவிட, அவ்வளவு தான் எல்லாம் முடிந்து விட்டது என்று உடல் சோர்ந்து, மனம் சோர்ந்து, இரண்டு கைகளாலும் காதுகளை அடைத்துக் கொண்டு, திரும்பி நின்று குனிந்து கொண்டான் வாசு.

ஆனால் வெகுநேரம் வரையிலும் கூட எதுவும் நிகழ்ந்ததற்கான அறிகுறி ஏதுமின்றி இருந்தது. ஆழ்கடல் போல, அப்படி ஒரு பேரமைதி. அப்பொழுது வாசு அங்குத் திரும்பிப் பார்த்தால், அந்த அவ்வளவு பெரிய ஏவுகணையை இரண்டு கைகளாலும் சுற்றிப் பிடித்திருந்தான் அதிரூபன்.

பின்பு அதனைப் பற்றியது பற்றியபடியே, தான் இருந்த இடத்திலிருந்தே சுழன்று சுழன்று சென்று வான் நோக்கி பறந்து, பறந்து, பறந்து, பறந்து, வந்த ஏவுகணைகளை.. திரும்பவும் அவை புறப்பட்ட இடத்திற்கே செலுத்துவது போல மிகுந்து ஆத்திரத்துடன், திரும்பி வீசி எறிந்தான். அந்த ஏவுகணையோ எவ்வளவு தூரம் போனதஎன்று தெரியவில்லை. ஆனால் பலநூறு மைல்கள் தாண்டிப் போய் வெடித்துச் சிதறி, அது சிதறிய அதிர்வு அவர்கள் நின்றிருந்த அந்த மகாசய பேராளியிலும் எதிரொலித்தது.

அப்பொழுது தான் வாசுவுக்கு அதிரூபனின் உண்மை சொரூபம் முழுமையாகத் தெரியத் தொடங்கியது.

அதிரூபனோ… உடலெல்லாம் செந்தழலாய், பற்றி எரிகின்ற பெரு நெருப்பாய்… மதம் கொண்ட பெருங்களிராய், பொங்கி பிரவாகித்துப் பெருக்கெடுக்கும் பெருவெள்ளமாய்… பற்றிக்கொண்ட காட்டுத் தீயாய்… சினந்து எரிந்து கொண்டிருப்பவனின் முழு உருவையும் பார்ப்பதற்கு வாசுவுக்கே மிகவும் பயமாக இருந்தது.

இப்படித் திகைத்தும், பயந்தும், அதிர்ச்சியில் உறைந்தும் போய் வாசு நின்றிருக்க… அடுத்தடுத்ததாய் மேலும் பற்பல ஏவுகணைகள் அவர்களை நோக்கி வந்துகொண்டு இருந்தன. ஆனால் அவை ஒவ்வொன்றும் அவை வந்த திசையிலேயே மீண்டும் மீண்டுமாய்த் திருப்பித் திருப்பி அனுப்பப்பட.. இன்னும் இன்னுமாய்க் கோபம் ஏறியது அதிரூபனின் செயல்களில்.

இப்படிப் பலநூறு ஏவுகணைகள் வானிலிருந்து மழையாய் பொழிந்து கொண்டிருக்க, அவை ஒவ்வொன்றையும் சிதறி தூள் தூளாக்கி கொண்டிருந்தான் அதிரூபன். அதே சமயத்தில் வான்வழியே ஹெலிகாப்டரில் இருந்து பற்பல ரோபோ மனிதர்கள் வந்து குதிக்க, இன்னும் அபரமேயர்கள் எனப்படும் மகிந்தனால் உருவாக்கப்பட்ட அந்த மரபணு மாற்றப்பட்ட கொடூர மனிதர்கள் வந்திறங்கினர்.

அவர்களைப் பார்த்து ஒரு கணம் அதிர்ந்து விட்ட திகைப்பு அதிரூபனிடம். ‘இவர்கள் யார்? இப்படிப்பட்ட ஒரு பிறவிகளை இந்த யுவாவில் மட்டுமல்ல, வேறு எந்தக் கிரகத்திலும் கூட அதிரூபன் பார்த்ததே இல்லையே’ என்று திகைப்புடன் இருக்க அவனுக்கு இறுதியாக, இதுவும் கூட வ்ரித்ராவின் வேலை தான் என்பது புரிந்து போனது.

அதுமட்டுமில்லாமல், கடல்புறமிருந்து பலப்பல போர்க் கப்பல்களும்.. இன்னும் பலநூறு கப்பல்களில் போர் ஆயுதங்களும் வந்து குவிந்து கொண்டிருந்தன. இவை எல்லாம் அந்த ஒற்றையாளான அதிரூபனை அழிப்பதற்காக.

நடுவில் அதிரூபன் நின்றிருக்க, எந்திரமனிதர்கள் ஒருபுறமும், அகங்காரம் கொண்ட வ்ரித்திரனால் உருவாக்கப்பட்ட அழிக்க இயலாத அபரமேயர்கள் ஒருபுறமும்.. முழுக்க முழுக்கப் பீரங்கி, வெடிகுண்டுகள், போன்ற கொலை ஆயுதங்கள் ஒருபுறமும், துப்பாக்கி ஏந்திய வீரர்கள் ஒருபுறமும், வானிலிருந்து வழியும் எரிமலையாய், இடைவிடாமல் தாக்கும் ஏவுகணைகள் ஒருபுறமும்.

இப்படியானதொரு நிலையில், நாற்புறமும் சுழன்று சுழன்று தீயவைகளை அழிக்கும் சக்ராயுதம் போல வேகவேகமாகத் தன்னை அழிக்க முயன்று கொண்டிருக்கும் அனைவரையும் அடியோடு அழித்து… காற்றோடு காற்றாய் கரைத்துக் கொண்டிருந்தான் அவன்.

அதிரூபனுக்கு இப்போது இருக்கும் கோபாவேச வெறியில், ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையே அழித்து விடத்தான் தோன்றியது. ஆனால் அவன் அப்படிபட்டவன் அல்ல, அவனுக்கு வேண்டியதெல்லாம் வ்ரித்ரா ஒருவன் மட்டுமே.

அந்த வ்ரித்ராவே நேரடியாக அவனை நோக்கி வரும் நேரம் எதிர்பார்த்து உடலெங்கும் பற்றி எரியும் ஆத்திரம் அடங்காது கண்முன் தன்னைத் தாக்க முயலும் ஒவ்வொருவரையும் மட்டுமின்றி, கடல் மேல் மிதந்து கொண்டிருக்கும் போர்க் கப்பல்கள்.. வானவெளியில் பறந்து கொண்டிருக்கும் போர் விமானங்கள்.. என அனைத்தையுமே அடித்து நொறுக்கி, தூள் தூளாக்கி கொண்டிருந்தான். அதுவும் அவனது எந்தவொரு சிறப்பு ஆற்றலையும் பயன்படுத்தாது தனது வெற்றுக் கையால் போரிட்டு அனைத்தையுமே வென்று கொண்டு இருந்தான்.

இப்படி இவன் இங்கு இத்தனை ஆத்திரத்துடன் போரிட்டுக் கொண்டிருக்க, அதை எல்லாம் எங்கோ ஒரு மூலையில் யாகூசாவில் உட்கார்ந்து கொண்டு தனது கணணியில் பார்த்துக் கொண்டிருக்கும் வ்ரித்ராவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தான்.

அதிரூபனது ஆவேசம் கண்டு அத்தனை பயமம் தான். ஆனால் அதையெல்லாம் வெளிக்காட்டிக் கொண்டிருப்பது தனது பெருமைக்கும் செல்வாக்குக்கும் இழுக்கு என்று தான் அமைதியாக இருப்பதாய் காட்டிக் கொண்டான் அவன். சுற்றிலும் அவனது கையாட்கள் வேறு.

இதில் பற்பல நாட்டு தலைவர்களும் அதிபர்களும் அவனுக்கு ஆறுதல் கூறுவதற்காக அங்கு வந்திருந்தனர். ஆனால் அங்கு நடக்கும் அனைத்தையுமே ஒருவித கையறு நிலையில் பார்த்துக் கொண்டிருந்த அவர்கள், இறுதியாக வ்ரித்ரா எடுத்த முடிவில் திகைத்து திணறி விட்டனர்.

ஏனென்றால் வ்ரித்ரா அடுத்ததாக அதிரூபனை நோக்கி ப்ரக்ட்டானை நோக்கி செலுத்துமாறு கூறிக் கொண்டிருந்தான். அந்த ஒற்றை வார்த்தையில் அனைவருமே பதறி விட்டனர் என்று கூறினால், அது மிகவும் சாதாரணமாக இருக்கும்.

அதிலும் அங்கிருந்த ஒரு நாட்டு அதிபர், “சார் நீங்க என்ன சொல்றீங்கன்னு உங்களுக்குத் தெரிஞ்ச தான் சொல்றீங்களா? அந்த ப்ரக்ட்டான உபயோகிச்சா, அந்த அதிரூபன் மட்டும் இல்லாம உங்க பொண்ணும் கூட அழிஞ்சுடுவா. அவ்வளவு ஏன் நாம கூட இருக்கிற இடம் கூடத் தெரியாம அழிந்துடுவோம். கொஞ்சமாவது யோசிச்சு பேசுங்க” என்று அவர் கூற, தன் கையில் வைத்திருந்த ஒரு சிறு குச்சி போன்ற ஆயுதத்தால் அவரின் கருத்தில் ஒரே ஒரு கோடு.

கழுத்து நரம்பு அறுபட்டு அப்படியே அவர் கீழே விழுந்து விட்டார். அதைப் பார்த்த மற்ற அதிபர்களுக்கும் பெரும் பயம் ஆட்கொண்டது. அவர்கள் அனைவரும் அவனை மிகுந்த பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, அவனது மற்றொரு அப்ரமேய காவல்படை மூலம் அவர்கள் அனைவரையும் சிறை செய்தான்.

பிறகு அவனே தனக்குத் தானே, தான் செய்த செயலை எண்ணி ஆத்திரத்துடன் கத்தியவாறே, “அவசரம் அவசரம்… இந்த அவசரம் தான் வேண்டாம்னு சொல்றது” என்று மனநலம் பிழன்றவன் போல, கண்ணில் தென்பட்ட பொருட்களெல்லாம் காலால் எட்டி உதைத்துக் கொண்டும், கைகளில் சிக்கிய பொருளை எல்லாம் தூக்கி வீசிக்கொண்டும் இருந்தான்.

பிறகு சற்று நேரத்தில் தன்னிலை அடைந்தவன், மேலும் வேறு என்ன திட்டம் வகுத்து அந்த அதிரூபனை அழிக்கலாம் என்று சிந்திக்கலானான். உடனே அவனுக்கு மற்றொரு யோசனை அப்போதைக்கு உதித்தது. உடனே தனது கைபேசியை எடுத்து அடுத்தகட்ட தாக்குதலுக்கான வழிமுறையை அந்த அபரமேயர்களின் தலைவனுக்குக் கூறினான்.

இங்கு மகாசய பேராளியில் ஏற்கனவே ஆவேசத்தால் அரண்டு போயிருந்த அந்த மகாசமுத்திரம், மேலும் கொதி நிலையை அடைந்தது. ஏனென்றால், அப்பொழுது ஒரு மிகச் சக்தி வாய்ந்த போர்ப்படை அதிரூபனை நோக்கி செலுத்தப்பட்டிருந்தது.

அங்கு மற்றொரு கப்பலில் இருந்து வந்திறங்கிய போர் படையைப் பார்த்த வாசு நெஞ்சை பிடித்துக் கொண்டு சாய்ந்து விட்டான். ஏனெனில் அந்தக் கப்பலில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தது சிங்கத்தினைக் காட்டிலும் வீரம் பொருந்திய, களிரினைக் காட்டிலும் பலம் பொருந்திய, பண்டைய காலத்து யாளிகள். புராணக் கதைகளிலும், கட்டுரைகளிலும் மட்டுமே கேள்விப்பட்டிருந்த அத்தகைய கொடூர மிருகங்களை இப்பொழுது கண்முன்னே காணவும், வேறு என்ன தான் செய்வான் அவன்.

ஒவ்வொரு யாளியும் 40 யானைகளை விடப் பெரிதாக இருந்தது. இதில் அப்பொழுதுதான் பிறந்த குட்டி யாளியே ஒரு பெரிய யானையை விழுங்கும் என்றால், முழு வளர்ச்சியடைந்த யாளிகள் என்ன தான் செய்யாது?

ஆனால் அதைப்பற்றியெல்லாம் சிந்தை கொள்ளாது, அவற்றைக் கூர்மையான கண்களுடன் பார்த்த அதிரூபனுக்கு, பயம் என்பது சிறிதும் இல்லை போலத் தான் தெரிந்தது.

எவ்வித உயிரையும் தனது சுயநலத்திற்காக வருத்தப்பட வைக்கக் கூடாது என்பது தான் அதிரூபனின் கொள்கை. ஆனால் ஒருவர் தன்னைக் கத்தியால் குத்த வருகையில் அதனைத் தற்காத்துக் கொள்வதும், அந்தத் தற்காத்துக் கொள்ளும் செய்கையில் எதிராளிக்குக் காயம் அடைவதும் கூட இயல்பான ஒன்று என்பதை உணர்ந்தே இருந்தான் அவன்.

ஆனாலும் கூட இப்படியா அந்த வ்ரித்ராவின் பேராசைக்காக இத்தனை ஆயிரம் உயிர்களைப் பலி கொடுத்துக் கொண்டிருப்பது? இதெல்லாம் அவனுக்கு மேலும் மேலும் ஆத்திரத்தை வரவழைத்தது.

அவன் இவ்வளவு நேரம் தனது தனிப்பட்ட ஆற்றலை பயன்படுத்தாதது, அந்த ப்ரக்ட்டான் வெடிபொருளும், பிரக்யான் வெடிபொருளும் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிய தான். ஆனால் அதற்கான வழிமுறை தான் எதுவென இதுவரை தெரியவில்லை. இருந்தாலும் கூட இப்பொழுது தன் முன்னே தன்னை ருசி பார்த்து விடக் காத்துக் கொண்டிருக்கும் இந்த யாளிகளையும் சும்மா விட முடியாது. முதலில் இவற்றைக் கவனிப்போம் என்று அதிரூபன் முடிவெடுக்கையில், மிகுந்த வெறியுடன் அவனை நோக்கி வந்தது ஒரு மகர யாளி.

வந்த அதன் வாலைப் பிடித்துத் தூக்கி வானிலேயே வீசி விட்டான் அதிரூபன். ஆனால் இப்பொழுது வந்ததே சிறிது தான் என்று கருதுவைதை போல அதனை விடப் பன்மடங்கு பலசாலியாக, முன்னதை விடப் பன்மடங்கு வேகத்துடனும், மூர்க்கத்துடனும் அண்டப் பேரண்டமெல்லாம் அதிரும் கர்ஜனையுடன் வந்து கொண்டிருந்தது அந்தச் சிம்ம யாளி.

அந்தச் சிம்ம யாளியை நிறுத்துவதற்காக அதிரூபன் வான் நோக்கி எழுந்த அந்த நேரம் வானில் இருந்து வந்தது அது. அதிரூபனின் ஆத்ம நண்பன்… சிருஷ்டியின் செல்ல கோபத்திற்கு ஆளாகும் செந்தூரன்.

அதைக் கண்ட ஆனந்த அதிர்ச்சியில் அதிரூபனோ, “மூக்கா” என்று கூற, அதுவும் ஆவலுடன் விரைந்து வந்து அவன் தோள்களில் நின்று கொண்டது. உடனே அது வந்த திசையை அதிரூபன் இன்னும் கூர்ந்து பார்க்க, வானில் புழுத்துளை தோன்றியதற்கான தடையம் தோன்றவும் மீண்டும் செந்தூரனை திரும்பிப் பார்த்து மறுபடியும் வானைப் பார்க்க, மீண்டும் ஒரு புழுத்துளை அங்கு.

அந்தப் புழுத்துளையிலிருந்து இப்பொழுது வந்து கொண்டிருந்தவர்கள் பாலை நிலத் தலைவர் சேத்தும், மருத நிலத் தலைவன் அரிமாவும்.

அதற்கு, “அது என்ன இடம்ன்னா, அது மகாசய போராளி” என்று அவன் கூற, அடுத்த கணம் மூவரும் மகாசயத்தை நோக்கி வானில் பறந்து கொண்டிருந்தனர்.

(தொடரும் – புதன்தோறும்) 

பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8   பகுதி 9 

பகுதி 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வல்லபி ❤ (பகுதி 8) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    மச்சக் குப்பனும் பிசாசுகளும் (சிறுவர் கதை) – ✍ கே.என்.சுவாமிநாதன், சென்னை