எழுத்தாளர் பாத்திமா ஜெமீனா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அன்று ரயில் தரிப்பிடத்தில் சனம் சற்று அதிகமாகவே இருந்தது. ஸ்டேஷன் சுவர்க் கடிகாரம் மணி ஐந்தை காட்டுகிறது. பயணிகள் அங்குமிங்குமாக நடமாடிக் கொண்டிருக்க மூதாட்டியொருத்தி தட்டுத்தடுமாறியப்படி அங்கு வந்தாள். சன நெரிசலுக்கு மத்தியில் அங்கிருந்த வாங்கொன்றில் போய் அமர்ந்துக் கொண்டாள்.
முதுமையின் கோலங்கள் அவள் முகத்தில் தெரிந்தன. காலணி அணியாத அவள் பாதங்கள் வறண்ட வயல்நிலமாய் தோன்றமளித்தது. அவளை கண்ணுற்ற ஸ்டேஷன் காவலாளி இன்னுமொரு காவலாளியை சைகையால் அழைத்தான்.
என்னவென அவன் கேட்க “அங்கே பாரு…” என அம்முதாட்டியை அவன் காட்டவும் மற்றவன் “என்னடா ..” என்றான் சற்று காரமாக.
“இந்த வயசான கிழவி யாரை தேடுதோ தெரியல. எப்போதுமே இங்க வந்து உட்காந்தட்டு இருக்கு . அதுமட்டுமில்ல கோச்சிலிருந்து இறங்குறவர்களை உத்து பார்த்தட்டு இருக்குது” என சொன்னான் அந்த காவலாளி.
“உனக்கு என்ன …உன் வேலையை மட்டும் பாரு . இங்க ஆயிரம்பேர் வருவாங்க போவாங்க” என அலட்சியமாக பதிலளித்தான் மற்றவன்.
“டேய் சுரேஷ். ஒரே இடத்தில ஐந்தாறு வருவுமா வந்து உட்கார்ந்து இருக்கு” என்றதும் மற்றைய காவலாளி ஆச்சரியமாக அம்மூதாட்டியை பார்த்தான்.
“ஆனா இன்னும் கூட யாரும் வந்ததா தெரியல” என சொல்லிவிட்டு அங்கிருந்து போய் விட்டான் முன்பு பேசியவன். சுரேஷ் அவளருகே போனான்.
“அம்மா யாருக்காக கார்த்துக்கிட்டு இருக்கீங்க…” என பணிவாக அவளை வினவினான்.
“பாலா…பாலா..” என அவள் உதடுகள் முணுமுணுக்க அவன் அங்கிருந்து நகர்ந்தான். அதற்கு அவள் உச்சரித்த பெயருடைய நபருக்காக தான் கார்த்துக் கொண்டிக்கிறாள் என்பதை அவன் புரிந்தமையே காரணம்.
“நெஞ்சுக்குள்ளளே தீ மூட்டி உள்ளங்கையில் சோறாக்கி வைச்சிருந்தேன் . ஏ மகன மட்டும் காணல்லையே” என ஏக்கத்தோடு சுமதியென்ற பெயருடைய அம்மூதாட்டி இவ்வாறு அவள் ஒவ்வொரு நாளும் தன் ஆசைமகனை எதிர்பார்த்து கார்த்திருப்பது வழக்கம்.
இந்த ரயில் ஸ்டேஷனுக்கு பல ரயில்கள் வரும் . அதில் வெவ்வேறு அலுவல்களுக்கு செல்பவர்கள் வருவார்கள் போவார்கள் . ஆனால் அவள் மகன் மட்டும் இன்னும் வரவில்லை .
சுமதியின் நினைவுகள் பின்நோக்கி சுழன்றன . சுமதிக்கு இரு புதல்வர்கள் . மூத்தவன் பாலா அப்போது சாதாரண தர பரிட்சைக்கு தோற்றி பரிட்சை முடிகளுக்காக கார்த்திருந்தான். இளைவன் சக்தி தரம் ஒன்பதில் கற்றுக்கொண்டிருந்தான்.
கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடாத்தும் தன் கணவருக்கு மிகவும் பக்கபலமாய் இருந்தாள் சுமதி. இதனால் அவர்களது குடும்பவாழ்க்கை சந்தோஷமாக பயணித்தது. ஆனால் வெகுசீக்கிரத்தில் சுமதியின் வாழ்க்கையில் விதிவிளையாடியது.
திடீரென ஒருநாள் அவள் கணவர் மாரடைப்பினால் இறந்துப்போனார். விதவையான சுமதியோ பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் தன் புதல்வர்களை படிக்க வைத்தாள் .
அவளது உழைப்பு வீண்போகவில்லை. பாலா இராணுவ பல்கலைகழத்திற்கு தெரிவு செய்யப்பட்டான், ஆனால் சுமதிக்கோ தன் மகன் இராணுவத்தில் சேர்வதில் இஷ்டமில்லை.
“பாலா… அப்பாவுக்கு பிறகு நீதான் இந்த குடும்பத்தை பார்க்கணும். இந்த படிப்பு வேணாம்ப்பா. நீ வேலைக்கு சேர்ந்தா பிறகு ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கும். குடும்பத்தை பிரிஞ்சி ரொம்ப தூரம் கண்காணாத இடத்தல வேலைக்கு போகணும் கண்ணு …” என செல்லமாக அறிவுரை பகர்ந்தாள் சுமதி.
“நீ இன்னும் எத்துணை நாளைக்கு கஷ்டப்பட போற. ஆமிலயில சேர்ந்தா சீக்கிரம் வேலை கிடைச்சிடும். உன்னையும் தம்பியும் நல்லா பாத்துக்குவன்” என்றான் பாலா .
“இல்ல பாலா … ” என அவள் ஏதோ சொல்ல முற்பட்டாள்.
“அம்மா நீ என்ன சொன்னாலும் என் முடிவு மாறாது. இந்த நாட்டுக்கும் உனக்கும் சேவை செய்யனும், அதனால் பிளீஸ் மறுபடியும் இதை பத்தி பேச வேணாம்” என சொல்லி விட்டு சுமதியை பார்த்தான். சுமதி மௌனமானாள் .
பின் புன்னகைத்து அவனுக்கு சம்மதம் தெரிவித்தாள். பாலா இராணுவ பல்கலைகழகத்தில் இணைந்து தன் பட்டப்படிப்பை நிறைவு செய்தான். அதற்கிடையே தம்பி சக்தி பொறியில் பல்கலைகழத்தில் அனுமதி கிடைத்தது. இதனால் சுமதிக்கு சந்தோஷம் இரட்டிப்பானது.
பாலா ஆர்மியில் சேர்ந்து அங்கு பணி புரியத்தொடங்கினான். அன்றிலிருந்து வீட்டு செலவுகளை பாலாவே கவனித்துக் கொண்டான்.
இது சுமதிக்கு நிம்மதியை கொடுத்தாலும் வருடத்தில் நாற்பதுநாள் லீவில் மட்டுமே தன் மகனை காணமுடிவதால் சற்று வருந்தவே செய்தாள் .
சிலமாதங்கள் உருண்டோடின. சுமதியின் வாழ்வில் மீண்டும் விதி விளையாடியது. அன்று அந்த ஒற்றை தொலைபேசி அழைப்பு அவள் வாழ்வை புரட்டிப்போட்டது. காரணம் அது பாலாவின் வீரமரணச்செய்தி சொன்னது. இதை கேட்ட சுமதி அடியற்ற மரமாய் சாய்ந்தாள்.
சக்தி ஒடிப் போய் அவளை தாங்கிப்பிடித்துக் கொண்டான். தன் அண்ணனின் மரணசெய்தி அறிந்திருந்ததும் அவனும் ஒருகணம் ஆடிப்போனான்.
அடுத்த நாளே பாலாவின் இராணுவ சீருடையும் இலட்சினையும் சுமதியின் கைகளில் வழங்கப்பட்டன. அதனை சுமக்கக் கூட முடியாமல் தள்ளாடினாள்.
பல நாட்கள் உண்ணாமலும் உறங்காமலும் வாடி வதங்கி சீக்கிரத்திலே வயோதிப தோற்றத்தை கொண்டாள் சுமதி. காலையும் மாலையும் சித்தப்பிரமை பிடித்தவள் போல் பாலா விடுமுறையில் வரும் இதே ஸ்டேஷனில் வந்து அமர்ந்திருப்பாள்.
இவள் நிலை அறியாத சிலர் நிஜமாக இவளுக்கு சித்தபிரமைதான் பிடித்திருக்கிறதென பேசிக் கொண்டனர். பாலா ஐந்து மணி கோச்சியில் வருவதே வழமை .வரும் ஒவ்வொரு முறையும் “அம்மா ஐஞ்சுமணி கோச்சியில் வரேன், தம்பியையும் அழைச்சிட்டு வந்தடு” என்பான்.
அவன் சொன்னவை இன்னும் அவள் காதுகளில் ரீங்காரிக்கின்றன. தன் மகன் மேல் கொண்ட அதீத அன்பின் காரணமாக இன்று வரை அவனுக்காக கார்த்திருக்கிறாள் சுமதி.
தூரத்தே புகையை கக்கியபடி கோச்சி வருவது தெரிகிறது. மெதுமெதுவாக அது ஸ்டேஷனை அடைய அதிலிருந்து பயணிகள் இறங்கினர். அவர்களுக்கு மத்தியில் இராணுவ சீருடையில் ஓர் வாலிபன் ரயிலிருந்து குதித்து கீழிறங்கினான், சுமதியின் உள்ளம் பூரித்துப் போனது.
“என் எதிர்பார்ப்பு வீண் போகல்ல பாலா வந்துட்டான்… பாலா…” என தன் மனதுக்குள்ளே குமுறினாள் சுமதி.
தன் வேலைப்பையை சுமந்தப்படி அவன் தன்னை நோக்கி வருவதை கண்டாள். சுமதியின் கண்களிலிருந்து வழிகின்ற கண்ணீரை தன் சேலைநுனியால் துடைக்கிறாள்.
உணர்ச்சி வெள்ளம் ததும்ப “பாலா …”என வாய்விட்டே அவனை அழைத்தாள். வந்தவன் நேரே போய்விட்டான், சுமதிக்கு பலத்த ஏமாற்றம். குழந்தையாய் தேம்பித்தேம்பி அழுகின்றாள்.
பின்னாலிருந்து ஒருகரம் அவள் தோளை தொட்டது. நப்பாசையில் “பாலா” என முணுமுனுத்தப்படி பின்னால் திரும்பினாள் சுமதி. அங்கே பாலாவை ஒத்த உருவில் சக்தி நின்றிருந்தான் .
“என்னம்மா நீ இன்னைக்கும் இங்க வந்துட்டியா… ஒவ்வொரு நாளும் வேலை விட்டதோடு இங்குதான் வரவேண்டி இருக்கு” என்றான் சக்தி .
“இல்லடா… பாலா நினைவு…” என்றப்படி அவனோடு புறப்பட்டு போக ” சக்தி…” என மெதுவாக அவனை அழைத்தாள்.
“என்னம்மா சொல்லு” என்றான்.
“நாளைக்கு பாலா வருவானாடா?”
சக்தி மௌனமானான். பின் சமதியை பார்த்து சிறு புன்னகையுடன் அவளை அணைத்துக் கொண்டான் சக்தி. காரணம் அவளது கேள்விக்கு அவனால் பதிலளிக்க முடியவில்லை.
வாழக்கையின் யதார்த்தம் அறிந்தும் அறியாதவளாய் தன் அன்புமகனை எண்ணி ஒவ்வொரு நாளும் மெழுகாய் உருகும் அவன்தாய் முன்னே சக்தியின் வார்த்தைகளுக்கு வலிமையில்லை என்பதை அவன் அறிவான். இது காலத்தால் அழியாத காயங்கள். ஆகவே சக்தி மௌனமானான்.
பின் சிறுபுன்னகை உதிர்த்தப்படி அவளுடன் வீடு நோக்கி செல்கின்றான்.
எழுத்தாளர் பாத்திமா ஜெமீனா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings