எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
வண்ண வண்ணப்பூக்களும் மாலைகளும் அழகூட்ட அலங்கார விளக்குகளும் தோரணங்களும் பளிச்சிட அம்பிகை வீற்றிருந்தாள். ஒன்பது படிகளிலும் கலைநயம் மிக்க பலவித பொம்மைகள் கலை ரசனையுடன் அடுக்கப்பட்டு இருந்ததை ரசித்தபடி அமர்ந்திருந்தாள் பவானி.
இருபது வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடத்தில் வசிக்கும் எல்லோருமே இந்த மாதிரி சந்தர்ப்பங்களில்தான் பார்த்துக் கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படும். மற்றபடி எப்போதாவது பிறந்த நாள் திருமண நாள் விழாக்களில் பார்ப்பதுதான். அதனால் மாதவியின் வீட்டுக் கொலுவை அவர்கள் எல்லோருமே வரவேற்பார்கள்.
நவராத்திரி என்றாலே நங்கையருக்கு ஒரு உற்சாகம் வந்துவிடுகிறது. தங்களையும் அழகூட்டிக் கொண்டு கோலங்கள் பாடல்கள் என்று எல்லாம் பங்கேற்றுக் கொண்டு வீட்டையே ஒளிமயமாக்கிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். ரசனையில் ஈடுபட்டிருந்த பவானியின் சிந்தனையை கலைத்தது ஒரு குரல்.
‘சமூக சேவகி அம்மா ! எப்படி இருக்கீங்க!’, ரம்யாவின் கேலியான வார்த்தைகளில் திகைப்புற்றவளாக நிமிர்ந்து பார்த்தாள் பவானி.
“என்ன சொல்றே!”
“ஆமாம் ! உங்களை மாதிரி ஆளுங்களை பார்க்கிறது அபூர்வமாச்சே!”
மேலும் கிண்டல் தொனிக்க அவள் பேசியதும் மாதவி குறுக்கிட்டாள்.
“எதுக்காக இப்போ இப்படி வம்பு வளர்க்கிற!”
“வம்பா! நானா! மேடம் தேவகிக்கு அவசரத் தேவைக்கு பணம் கொடுத்திருக்காங்க. அதுதான் சொன்னேன்.”
“அதனால் என்ன! அவ குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கு .அவசரமா வேணும்னு கேட்டாள். அதுதான் கொடுத்தேன்.” பதிலிறுத்த பவானிக்கு மனதில் கசப்பு ஏற்பட்டது. என் பணத்தைத்தானே நான் கஷ்டப்படுகிறவளுக்கு கொடுத்தேன். இதில் இவளுக்கு எதற்கு விளக்கம் சொல்ல வேண்டும்!
“அதான், ஒரு வீட்டுவேலை செய்கிறவ உங்ககிட்ட வந்து பணம் வாங்கிட்டுப் போறான்னா அது பெரிய விஷயம் இல்லையா?”
“அவ கண்டிப்பா திருப்பித் தரப் போவதில்லை. கேட்டீங்கன்னா தெருவில் நின்று கத்துவாள். தேவையா உங்களுக்கு!”
“அவ திருப்பித்தராம வர வேதனையை விட ஒருகுழந்தைக்கு உடம்பு சரியில்லாத போது கொடுக்க மறுத்தேன் என்ற வருத்தம் பெரிசு. அதனால் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. “
“பார்த்தீங்களா ! அதான் சமூக சேவகின்னு சொன்னேன்.” நக்கலுடன் சொல்லிய ரம்யா சுற்றியிருந்த எல்லோரையும் பார்த்தாள்.
பெரிய தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு அடுக்கிக் கொண்டிருந்த ரஞ்சனியும், பூச்சரத்தை சின்ன சின்னத்துண்டுகளாக கத்தரித்துக் கொண்டிருந்த ரமாவும், பரிசுப் பொருட்களை அடுக்கிக்கொண்டிருந்த பிரபாவும் அவர்கள் வேலையை விட்டு விட்டு இவர்களையே பார்ப்பது தெரிந்தது.
பவானி ஒரு நிமிடம் நிதானித்தாள். வந்த போது இருந்த அமைதியும் ஆனந்தமும் மறைந்துவிட மெதுவாக. எழுந்து நின்றாள்.
“நம்மகிட்ட ஆயிரம் கண்டிஷன் போட்டு பணம் வாங்குற அந்த தேவகி பாதி நாள் மட்டம் போட்டு ஏமாத்துறா. அந்த தேவகி எப்படி போனால் இவங்களுக்கு என்ன!” நிஷ்டூரமாக பேசினாள் ரம்யா.
“தெருவில் ஒரு குழந்தைக்கு பிரச்சினை வந்தால் எத்தனையோ பேர் ஓடி வந்து உதவுவார்கள் பார்த்திருக்கிறாயா! ஒரு ஆத்திரம் அவசரத்துக்கு கை கொடுக்க மனசில்லாம செஞ்சவங்களையும் குறை சொல்றே!”. சொன்ன பாரதி “நவராத்திரி கொலுவில் பாட்டு பாடுறதை விட்டுட்டு அநாவசியமா நல்லசூழலைக் கெடுக்கிறயே ! இது உனக்கே நல்லா இருக்கா!” என்று சுடச்சுட கேட்டாள்.
“இரு பாரதி ! நான் பதில் சொல்றேன்.”அவளைத் தடுத்தாள் பவானி.
“இந்த ஒன்பது படிகளிலும் ஓரறிவு ஈரறிவு என்று வரிசைப்படுத்தி பொம்மைகளை அடுக்கியிருக்கிறார்கள் இல்லையா! அது மாதிரி வாழ்க்கையிலும் எல்லா தரத்திலும் மனிதர்கள் இருக்கத்தான் செய்வார்கள். நான்சமூக சேவகியாக இல்லை, சமுதாயத்தில் ஒரு அங்கமாக கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவுகிற ஒரு நபராகத்தான் இருந்தேன் இருக்கிறேன். செய்தித்தாளில் பல விஷயங்களை படித்துவிட்டு ஐயோ பாவம் என்று அனுதாபபடுவதை விட நம்மால் முடிந்ததை செய்யலாம்!
சுதா மூர்த்தி மாதிரி பெரிய செல்வந்தர்கள் தங்களுக்காக வாழ்வதை விட நலிந்த மக்களின் தேவையை பூர்த்தி செய்வதை பெரிதாக நினைக்கிறார்கள். வறுமையும் நோயும் புரட்டி எடுத்து முட்டுச் சுவரில் நிறுத்தி பாடாய் படுத்தும் போது அவர்கள் என்னதான் செய்வார்கள்? எங்கே போவார்கள்! நாமும் சேர்ந்து படுத்த வேண்டும் என்கிறாயா!”நம்மால் முடிந்த உதவிகளை செய்தால் அது தப்பு என்கிறாயா? நீங்கள் பிறந்தநாள் திருமணநாள் என்று அனாதை இல்லங்களுக்கு கொடுப்பதை நான் அநாதரவாக அவதிப்படுபவர்களுக்கு கொடுக்கிறேன். இது தப்பா?”
தொடர்ந்து பேசியதில் அவளுக்கு மூச்சு இரைத்தது. ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் மேலும். தொடர்ந்தாள்.
“வசதியானவங்க பலபேர் அவங்களுக்கு முடிந்த விதத்தில் உதவி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஏன் இங்கே மாதவியே நம் ப்ளாட்டில் வேலைபார்க்கும் ஏழைப் பெண்களுக்கு நவராத்திரியை ஒட்டி நல்ல கைத்தறிப்புடவை ஒரு பாத்திரம் ஐநூறு ரூபாய் என்று கொடுக்கத்தான் செய்கிறாள். அதை அவள் வெளிப்படுத்திக் கொள்வதே இல்லை.
வறுமையில் கஷ்டப்பட்டவங்களுக்குத் தான் பணத்தோட அருமை தெரியும். தென் ஆப்பிரிக்க நாட்டுக்கால்பந்தாட்ட வீரர் ‘சாடியோ மானே’ கோடிகளில் புரளுபவர் செல்லின் டிஸ்பிளே உடைந்ததை மாற்றிக் கொள்வேன் என்று சொன்னதற்கு நீங்கள் புதிதே வாங்கிக் கொள்ளலாமே என்று நிருபர்கள் கேட்டார்களாம். அதற்கு அவர் என்னால் என்ன வேண்டுமானாலும் வாங்க முடியும் .ஆனால் நான் இளமையில் மிகவும் வறுமையில் வாடியிருக்கிறேன். ஒரு ஷு கூட இல்லாமல் ஓடியிருக்கிறேன். என் நாட்டு மக்களுக்கு கல்விக்கூடங்களும் வசதிகளும் செய்வதுதான் என் விருப்பம் என்று சொன்னாராம் .கஷ்டப் பட்டவர்களுக்குத்தான் கஷ்டத்தின் வலி தெரியும்.
நானே சின்ன வயதில் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறேன். என் அம்மா மூன்று பையன்களும் நானும் படிப்பதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் தெரியுமா! உறவு நட்பு சொந்தம் பந்தம் எதுவுமே உதவி செய்யவில்லை. மாறாக எதற்காக கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாய் என்றுதான் கேலி செய்தார்கள். ஒரு கல்யாணம் விசேஷத்துக்கு போனும்னா கூட கையில் வளையல் கூட இல்லாமல் அக்கம் பக்கத்து வீடுகளில் இரவல் வாங்கிப் போட்டுக் கொண்டு போவாள். அந்த நிலையிலும் அவள் மன உறுதியை கைவிட்டதே இல்லை. இன்றைக்கு நாங்கள் எல்லோருமே மிகவும் நன்றாக இருக்கிறோம்.
யாராவது கை கொடுத்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். ஆனால் ரம்யா மாதிரி ஆட்கள்தான் அன்றைக்கும் இன்றைக்கும் இருக்கிறார்கள். தடைகள் வாராத கொடையும் என்று அபிராமி பட்டர் பாடினாரே! அதுமாதிரி நல்லதை செய்ய கற்றுக்கொள்வோம் . நமக்கு வசதியையும் வளத்தையும் கொடுத்த இறைவன் சகல ஜீவராசிகளிடமும் அன்பாக இருங்கள் என்று தானே வலியுறுத்துகிறார்! நவராத்திரி போன்ற பண்டிகைகளும் அதைத்தானே போதிக்கிறது.”
“நன்றாக சொன்னாய்.”
சுற்றியிருந்த அனைத்துப் பெண்களும் பாராட்ட ரம்யா தலை கவிழ்ந்து நின்றாள்.
“உன்னை வருத்தப்படுத்த நான் நினைக்கவே இல்லை. ஆனால் யோசிக்காம யாரையும் எதுவும் பேசாதே!” சாதாரணமான குரலில் சொன்ன பவானி எல்லோரையும் பார்த்து புன்முறுவலித்துவிட்டு தாம்பூலத்துடன் வெளியேறினாள்.
எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings