வெற்றி… இத சீக்ரமா தயார் பண்ணுடா… ரெண்டு நாள்ல டெலிவரி கொடுக்கனும்… என்று சொல்லிக்கொண்டே வேகமான நடையில் தன்னுடைய அலுவலகத்திற்குள் நுழைகிறான் சக்தி.
உள்ளே நடந்தபடியே இந்த பெட்டியை சரியா வெய்யுங்கள் அண்ணா… என்று தன்னிடம் வேலை பார்ப்பவரிடம் சொல்லிவிட்டு உற்சாகமாக குட் மார்னிங்… ! சொல்லி உள்ளே சென்றான்.
சக்தி ஒரு உத்வேகமுள்ள இளைஞன். சுயமாக சுவரொட்டிகள், வெட்டு உருவங்கள், கம்ப்யூட்டர் டிசைனிங் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறான். தன்னுடன் படித்த நண்பன் வெற்றி உள்பட சில இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி நடத்தி வருகிறான்.
அலுவலகத்திற்குள் வேகமாக உள்ளே சென்று தன்னுடைய இருக்கையில் அமர்கிறான். சில நொடிகளில் தொலைபேசி அடிக்க, எடுத்தவுடன் வணக்கம்..! உங்கள் சக்தி பிரிண்டர்ஸ் ..! என்று சொல்லி பேச தொடங்குகிறான்.
பத்தாயிரம் சுவரொட்டிகள் வேணுமா… சிறப்பா பண்ணிரலாம்… மற்ற தகவல்களை அலுவலக மின்னஞ்சலுக்கு அனுப்பி விடுங்கள் என்று சொல்லி தொலைபேசியை வைத்தான்.
உடனே தன்னிடம் வேலை செய்யும் குமாரை அழைக்கிறான். குமார் .. இப்ப கொஞ்ச நேரத்தில் ஒரு மின்னஞ்சல் வரும். அதை செக் பண்ணி வேலையை ஆரம்பித்து விடு என்று சொல்லி தன்னுடைய அடுத்த வேலையை தொடங்குகிறான்.
சக்தி இது எல்லாம் சரியா என்று ஒரு தடவை பார்த்து விடுடா என்று ஒரு மடிகணினியை கொண்டு வந்து காட்டுகிறான் வெற்றி.
அதை சரி பார்த்து விட்டு எல்லாம் சரியாக இருக்கு நண்பா.. நீ செய்தால் எல்லாம் சரியாக தான் இருக்கும் என்று சொன்னான். புன்னகையுடன் மடிகணினியை எடுத்து சென்றான் வெற்றி.
சிறுது நேரத்தில், சார் ! டெலிவரிக்கு எல்லாம் தயார்… என்று சொல்லி உள்ளே வருகிறான் பாபு.
அப்படியா .. வா.. என்று சொல்லி அதை சரிபார்த்து உடனே வண்டியில் ஏற்றுங்கள் என்று சொல்லி முழுவதும் ஏற்றும் வரை இருந்து சரிபார்த்துவிட்டு பாபு ! டெலிவரி செய்து விட்டு சீக்கிரம் வா … என்று சொல்லி உள்ளே சென்றான்.
இப்படி எப்பவும் தன்னுடைய தொழிலில் கவனமாகவும் வேகமாகவும் செயல்படுவான் சக்தி. அணைத்து வேலைகளையும் முடித்துவிட்டு இரவு அலுவலகத்தை மூடிவிட்டு அவனும் அவனுடைய நண்பன் வெற்றியும் ஒன்றாக ஒரே வண்டியில் வீட்டிற்கு செல்வார்கள். சக்தி வெற்றியை அவன் வீட்டில் விட்டுவிட்டு தன் வீட்டிற்கு செல்வான்.
அன்று ஒரு நாள் இருவரும் இதே போன்று வீட்டிற்கு செல்லும் பொழுது சாலை ஓரத்தில் ஒரு வயதான பெண் ஒருவர் மயங்கி விழுந்து கிடப்பதை பார்த்ததும் வண்டியை நிறுத்துகிறான் சக்தி.
மச்சி அங்க பாருடா.. ஏதோ ஒரு அம்மா விழுந்து கிடக்கிறாங்க.. வா போய் பாக்கலாம் என்றான் சக்தி…
உடனே இருவரும் வேகமாக ஓடி சென்று பார்கிறார்கள். சக்தி.. இந்த அம்மாவுக்கு விபத்து நடந்துதிருக்கிறது… பார் தலையில் கையில் எல்லாம் ரத்தம் வருகிறது… என்றான் வெற்றி.
வா… உடனே மருத்துவமனைக்குக் கூட்டிட்டு போலாம்டா.. என்கிறான் சக்தி.
இங்க பக்கத்துல அரசு மருத்துவமனை ஏதும் இல்லையே, வேண்டாம் டா அதுக்கு 25 கிலோ மீட்டர் போகணும் … என்றான் வெற்றி.
அப்படியா.. சரி வா.. தனியார் மருத்துவமனையில் சேர்த்து விடலாம்… என்று சொல்கிறான் சக்தி.
அதுக்கு நிறைய செலவு ஆகுமே..! இந்த அம்மா யாருனும் தெரியல இவங்ககிட்ட காசு இருகானும் தெரியல.. என்றான் வெற்றி.
சின்ன காயம்தான் ரொம்ப செலவு ஆகாது.. வா பாத்துக்கலாம்.. என்று சொல்லி கையை பிடி.. தூக்கு.. என்று சொல்லி வண்டியில் அமரவைத்து அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர்.
மருத்துவமனையில் நோயாளியின் பெயர் முகவரி கேட்க
தெரிலைங்க சாலையில் மயங்கி கிடந்தாங்க என்று சொல்லி தன்னுடைய பெயர் முகவரி அலைபேசி எண்ணை சொன்னான்.
சிறுது நேரம் கழித்து வெளியே வந்த மருத்துவர் இந்த அம்மாவுக்கு கையில் மிதமான எலும்பு முறிவு ஏற்பட்டிருகிறது உடனே ஸ்கேன் செய்து கட்டு போடவேண்டும். மேலும், தலையில் அடிபட்டிருபதால் அதையும் ஸ்கேன் செய்ய வேண்டும். தலையில் பிரச்சினை ஏதும் இருக்காது இருந்தாலும் ஸ்கேன் செய்வது நல்லது என்று சொன்னார்.
உடனே சரி சார் பண்ணுங்க என்றான் சக்தி.
மருத்துவர் உடனே பில்லை வரவேற்பில் கட்டிவிடுங்கள் என்று சொல்லி சென்றார்.
வரவேற்பிற்கு சென்ற சக்தி எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்று கேட்டான். அதற்கு ஒரு லட்சம் என்று காசாளர் சொல்ல அதிர்ந்தான் வெற்றி. பின் சக்தி பாதி இபொழுது கட்டி விடுகிறேன் மீதி கிளம்பும்போது கட்டி விடுகிறேன் என்றான்.
மச்சி எப்படிடா யாருனே தெரியாத இந்த அம்மாக்கு ஒரு லட்சம் செலவு பண்றது என்று வெற்றி கேட்க
பாத்துக்கலாம் என்ற சக்தி சற்று மௌனமாக யோசித்தான்
இந்த பணத்தை எப்படி ஈடுகட்டுவது என்று. காலையில் அலுவலகத்திற்கு சுப்பிரமணியன் என்று ஒரு நபர் தொலைபேசியில் அழைத்தது இரண்டு லட்சம் சுவரொட்டிகள் அடிக்க சுவரொட்டிக்கு இருபது பைசா குறைவாக கேட்டது நினைவுக்கு வந்தது.
உடனே யோசித்தான் இந்த வியாபாரத்தை எடுத்து செய்தால் இதை ஈடு கட்டிவிடலாம் என்று. இருவரும் மருத்துவமனையில் விடியும் வரை இருந்தனர். காலை ஆறு மணி அலாரம் சக்தியின் அலைபேசியில் அடித்தவுடன் சட்டென்று விழித்து நேற்று அழைத்திருந்த சுப்பிரமணியன் என்பவருக்கு போன் செய்தான்.
முதல் அலைபேசியை அவர் எடுக்கவில்லை. மீண்டும் சிறுது நேரம் கழித்து அடித்தான். அப்பொழுது எடுத்த அவர் யார் பேசுறது என்று கேட்க, நான் தான் சார் சக்தி பேசுகிறேன்… சக்தி பிரிண்டர்ஸ். என்று சொல்ல
சொல்லுப்பா என்ன இவ்ளோ சீக்கிரமா போன் பண்ணிருக்க என்றார்.
நேத்து நீங்க சொன்ன ஆர்டர் நான் எடுத்து பண்ணுறேன் சார். நீங்க சொன்ன விலையே எனக்கு ஓகே தான் என்றான் சக்தி.
அப்படியா சரிப்பா..! அட்வான்ஸ் எவ்ளோ வேணும் என்று கேட்க பாதி குடுங்க சார்… மற்ற தகவல்களை என்னோட மின்னஞ்சலுக்கு அனுப்பி விடுங்கள் என்றான்.
அதெல்லாம் சரிப்பா இவ்ளோ காலையில எதுக்குப்பா போன் பண்னுன என்று சுப்பிரமணியன் கேட்க… நீங்கள் வேறு யாருக்காவது இந்த ஆர்டர் கொடுத்துவிட்டால் அதற்காக தான் நான் முந்திவிடேன்.
இந்த வயசுல உன்னோட உத்வேகம் எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு இதற்காகவே உனக்கு நான் ஆர்டர் தரேன் என்றார் சுப்பிரமணியன்.
சரி சார் ரொம்ப நன்றி.. என்று சிரித்தபடியே அலைபேசியை பாக்கெட்டில் வைத்தான் சக்தி.
வெற்றி நீ இங்கயே இரு.. நான் வீட்டிற்கு போயிட்டு குளித்துவிட்டு வரேன் என்று சொல்லிச் சென்றான் சக்தி.
இரண்டு மணிநேரம் கழித்து வந்து வெற்றி நீ வீட்டுக்கு போயிட்டு வா… நான் இங்க இருக்கேன் என்றான்.
சரி சக்தி… போயிட்டு வந்துடுறேன்…என்று கிளம்பிச் சென்றான் வெற்றி.
நோயாளி கூட வந்தவங்க யாரு … என்று செவிலியர் கத்த.. நான் தான் என்று எழுந்தான் சக்தி.
அந்த அம்மா கண் முளிச்சுட்டாங்க போய் பார்க்கலாம் என்றார்.
உடனே சக்தி அந்த அறைக்கு சென்றான்.
வா பா…நீ தான் என்ன காப்பாத்தி இங்க சேர்த்தியா …?
அமாம் மா … நான் தான்.. ஆமா.. நீங்க யாரு ? எந்த ஊரு ? உங்க வீட்ல இருக்கவங்க போன் நம்பர் இருந்த குடுங்க என்றான் சக்தி.
எனக்கு யாரும் இல்லப்பா… என் பசங்க எல்லாம் என்ன கைவிட்டுட்டாங்க என்றாள்… என்ன எதாச்சும் முதியோர் இல்லத்துல சேத்திருப்பா என்றாள்.
சற்று யோசித்த சக்தி .. முதியோர் இல்லம் எல்லாம் வேணாம் .. உங்களுக்கு என்ன வேலை தெரியும் என்றான்.
எனக்கு எந்த வேலையும் பெருசா தெரியாதுப்பா… நான் முன்னாடி கூலி வேலைதான் செஞ்சுட்டு இருந்தேன் என்றாள்.
உடனே சக்தி உங்களுக்கு சமைக்க தெரியுமா என்று கேட்டான்.
உடனே ஆர்வமுடன் நல்லா சமைப்பேன் பா என்றாள்.
அப்ப சரி.. நீங்க என் அலுவலகத்துல வேலை செய்ற எல்லாருக்கும் சமைச்சு தரனும்… அதுதான் உங்களோட வேலை. அதுக்கு உங்களுக்கு ஒரு சம்பளம் தரேன்…. தங்குவதற்கும் இடம் தருகிறேன் என்றான்.
ஆனந்தத்தில் கண்களில் கண்ணீருடன் ரொம்ப சந்தோசம்பா. நீ சும்மா என்ன தங்க வெச்சு எனக்கு சாப்பாடு போட்டாலும் எனக்கு நெருடலா தான் இருந்திருக்கும் …இப்ப நீ சொன்னது தன்மானத்தோடு வாழவைக்கும் பா… என்றாள்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings