எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அது ஒரு குட்டிச்சேவல்; பெயர் முத்து; அது வளர் இளம் பருவத்தில் இருந்தது.
ஒருநாள் அதனிடம் அம்மா கோழி, அப்பாவுக்கு வயசாயிருச்சு! அதுனால மேற்கூரை மேல தாவி ஏற முடியலை! இனி நீதான் காலையில் கூவி சூரியனை எழுப்பனும்! நீ கூவிப் பழகு! – என்றது.
முத்து அடிப்படையில் ஒரு சோம்பேறி; அது அதிகாலையில் எழுந்து கூவ விரும்பவில்லை. முத்துவின் குரல் வளர்ந்த சேவலின் குரல் போன்று இனிமையாக இருக்காது; கரகரப்பாக இருக்கும். அது கூவிப் பழகவில்லை.
இதை கவனித்த அப்பா சேவல், முதல்ல நீ அவனுக்கு சாப்பாடு கொடுக்குறத நிப்பாட்டு! அவனோட உணவை அவனே தேடிக்கட்டும்! அப்பனாத்தான் வழிக்கு வருவான்! கூவிப் பழகுவான்!, – என்றது.
அம்மா கோழியும் முத்துவிற்கு உணவு அளிப்பதை நிறுத்திக் கொண்டது. முத்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. குப்பைமேட்டைக் கிளறிக் கொண்டிருக்கும் சிறிய கோழிகளை விரட்டி விட்டு அதில் கிடைக்கும் புழுபூச்சிகளைத் தின்று விட்டு சுகமாகப் பொழுதைக் கழித்தது.
இதனால் மனவருத்தம் அடைந்த அம்மாகோழி முத்துவிடம், சேவல்னா கூவனும்! கூவுறதுதான் ஒரு சேவலுக்கு உண்மையான அழகு!, – என்றது.
அப்பா சேவலும் தன் பங்கிற்கு , சேவல் கூவுறதும் சூரியன் உதிக்கிறதும் பிரபஞ்ச நியதி! எது மாறுனாலும் இது மாறாது! மாறவும் கூடாது! பின்சாம நேரம் சேவல் கூவுற நேரம்! கிராமங்கள்ல்ல இதை கோழி கூப்பிடுதும்பாங்க! கடிகாரம் தேவையில்லை! இதைத் தொடர்ந்து உலகமே கண்முழிச்சு இயங்க ஆரம்பிச்சிரும்! , – என்றது.
முத்து மாறவில்லை. இவனுக்கு சொல்புத்தியும் இல்ல! சுயபுத்தியும் இல்ல! இவனை விட இவன் தம்பி நல்லா யோசிக்கிறான்! கறுக்கல்ல சுறுசுறுப்பா எழுந்துக்குறான்! தன்னோட உணவை தானே தேடிக்குறான்! நாம சொல்லாமலே கூவப் பழகுறான்! சூரியனை எழுப்புற பொறுப்பை நாம அவன்கிட்ட ஒப்படைப்போம்! என்றது அப்பா சேவல்.
அப்பாவிடமிருந்து முத்துவிற்குப் பதிலாக கூவும் பொறுப்பை தம்பிசேவல் வாங்கிக் கொண்டது. அது தினமும் அதிகாலையில் கிழக்குப் பக்கம் பார்த்து ;கொக்கரக்கோ…! – என கூவுகிறது.
சூரியனும் உதிக்கிறது. அந்தப் பிராந்தியத்தில் ஒவ்வொரு நாளும் காலைப் பொழுது நன்றாகப் புலர்கிறது.
எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings