in ,

விருது நாயகன் (சிறுகதை) – ✍ அசோக் குமார், சிங்கப்பூர்

விருது நாயகன் (சிறுகதை)

ந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 106)

ழை கொட்டித் தீர்த்தது. மழைக்காலத்தில் சென்னையில் எப்போது மழை வருமென்பது வருண பகவானுக்கே அறியாத ஒன்று. ஓடி ஒழிந்த பறவைகளின் கீச்சு குரல் அங்கும், இங்கும் இசைத் தொகுப்பாய் மிகவும் ரம்யாமாக இருந்தது. 

ஒரு வீட்டின் மாடத்தில் இரண்டு புறாக்கள் ஓன்றை ஒன்று தன் மீது பட்ட மழைத்துளியை துவட்டிய வண்ணம் சிறகை சிலிப்பிக் கொண்டிருந்தது. நிலத்தடியில் சேர்ந்த நீர் கசிந்து சிறு, சிறு வாய்க்கால்களில் சலசலவென சத்தத்துடன் வடிந்து பெருவாய்க்காலை விரட்டிப் பிடித்து மடை திறந்த வெள்ளமாய் ஒன்று சேர்ந்தது. 

‘மீண்டும் மழை வருமோ’ என்ற அச்சத்தில் ஓடிக் கொண்டிருந்த சிலர் உடற்பயிற்சி செய்து, அன்றைக்கான வியர்வையை நிலத்தில் கரைத்தனர். 

பெரியசாமி இவற்றையெல்லாம் பார்த்தவாறே மின்னல் வேகத்தில் நடந்து வந்தார்.நேர் எதிரே ஒரு வாலிபன் மிதிவண்டி ஒட்டி வந்தவன், கையில் மணியை பார்த்துக் கொண்டே நொடிப் பொழுதில் அவரை இடிப்பதைப்போல கடந்து செல்ல, செல்லும் வேகத்தைக் கண்டு பெருமூச்சு விட்டுத் தள்ளி நின்று கொண்டார். 

மரங்களில் போர்த்தியிருந்த பச்சை, மாலையை வேகமாக இரவாக்கி இருந்தது. பதினைந்து நிமிட நடைப்பயணத்தை முடித்து சாவியை திறந்து உள்ளே நுழைந்தவர், மழையில் சாய்ந்திருந்த வாழைக் கன்றுகளுக்கு சிறு கழிகளை முட்டு கொடுத்து நிறுத்தினார். 

“வணக்கம்” என்று உள்நுழைந்த மூதாட்டி அங்கம்மாள் மழையைப் பற்றி சிலாகித்து சாமியிடம் கூறி (பெரியசாமியை அந்த ஏரியா மக்கள் சாமி என்று செல்லமாக அழைப்பதுண்டு), தன் பங்கிற்கு விளக்குமாரை எடுத்து சிதறி, தரையுடன் ஒட்டிக் கிடந்த இலை, தலைகளை கூட்டத் தொடங்கினார். 

ஒன்றன் பின் ஒன்றாக வந்த சாமியின் நண்பர்கள் மொத்தம் எட்டு பேர் 

“ஹாய் சாமி, ஹாய் சாமி” என்று அவரவர் வேலைகளை பிரித்துக் கொண்டு சுறுசுறுப்பாக இயங்கினர், அனைவரும் அறுபது வயதைக் கடந்தவர்கள். 

அடுத்த பத்து நிமிடத்தில் அங்கம்மாள், தன் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த தேநீரை அனைவருக்கும் கொண்டு வந்து கொடுத்தார். ஒவ்வொருவராக நன்றி கூறி வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியுடன் குடித்து, கழுவிய கோப்பைகளை அந்த குடிலின் மேஜையில் இருந்த கூடைத்தட்டில் கவிழ்த்து வைத்தனர். 

“இது சூரியன் எப்.எம், மணி இப்ப ஆறாகுது. வாங்க இன்னிக்கு ‘டீ கடை ஷோல’ எதைப் பத்தி பேசப் போறோம்னு பார்ப்போம். நான் உங்கள் விமலா, நான் உங்கள் காதர்” என ரேடியோ அலற, அதை அணைத்து விட்டு கைகால்களைக் கழுவிய அனைவரும் வட்டமாக உட்கார்ந்து, சிறிது பேசி விட்டு கிளம்பினர். 

கடைசியாக கிளம்பிய நம்ம சாமி, கேட்டைப் பூட்டிவிட்டு ஓட்டமும் நடையுமாக வீட்டை வந்தடைந்தார். 

தன் மருமகள் வீட்டிற்கு வரும் முன்னர் எப்போதும் சாமி வந்து விடுவார், இன்று மழையின் காரணமாக சற்று வேலை கூடுதல் என்பதால் தாமதமாகி விட்டது. 

பயந்து கொண்டே காலிங் பெல்லை அழுத்த, திறந்தது ஆறு வயது பேரப்பிள்ளை ஷாம்

“என்ன தாத்தா இவளோ லேட்டா வர? நல்லவேளை அம்மா இன்னும் வரல” என பெரிய மனுசன் போல் பேரன் பேச

“அப்படியா” என்று அவனை அலேக்காக தூக்கி இரண்டு கன்னத்திலும் முத்தமிட வும், கதவை திறந்து கொண்டு மருமகள் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. 

அவர்கள் கொஞ்சிக் கொள்வதை புதிதாக பார்ப்பது போல பார்த்துக் கொண்டே தனது அறையில் நுழைந்து கதவை சாத்திக் கொண்டாள். 

தாத்தாவும், பேரனும் சத்தம் வராமல் ‘ஹய் பை’ கொடுத்து சோபாவில் அமர்ந்து, “ஏன் லேட்டு?” என்று குகுசுவென பேசிக் கொண்டிருந்தனர். 

உடை மாற்றி வெளியே வந்த மருமகள், சமையல் கட்டினுள் நுழைந்து பணிப்பெண் கொடுத்த காபியை வாங்கிக் கொண்டு திரும்ப, மறுபடியும் அவள் அறைக்கதவு கதறியது. 

நம்ம பெரியசாமி, 1947-ல் சுதந்திர தினத்தன்று எல்லோரும் வெடிவெடித்துக் கொண்டாடிய சத்தத்தில், அம்மாவின் அடி வயிற்றை உதைத்துக் கொண்டு பிறந்தார்

சின்னசாமி மற்றும் மங்களம் தம்பதிக்கு பிறந்த அவரின் படிப்பு, தொடக்க நிலைக்கு மேல தொடர முடியாம நின்றது. அவங்க அப்பா எவ்வளவோ சொல்லியும் மேல படிக்க அவருக்கு மனம் உடன்படவில்லை

அப்பாவோட  பால் வியாபாரத் தொழிலில் இறங்கிட்டாரு. படிப்பு தான் பாதியிலேயே போச்சே தவிர, தமிழ் மற்றும், ஆங்கிலமும் எழுதுவதும், படிப்பதும் இப்ப அத்துப்படி. 

அவருக்கு பதினைந்து வயதாகும் போது அவரோட தந்தை விபத்துல இறந்திட்டாரு, அதுனால குடும்ப பாரம் அவர் மேல ஏறிடுச்சு. அனைத்தையும் தாங்கிக் கொண்டு அயராது உழைத்த அவர், தனது இருபத்தி ஏழாம் வயதில் மரிக்கொழுந்தை கரம் பிடித்தார்.  

இருவருக்குமான வயது வித்யாசம் பத்து, இருந்தாலும் ரொம்ப பாசமான தம்பதியா வாழ்ந்ததற்கு இரண்டு மகன்களையும், ஒரு மகளையும் பெற்றெடுத்தனர். 

காலம் வெகுவேகமாக சுழல, பிள்ளைகள் அனைவரும் வளர்ந்து கல்யாணம் பண்ணிக் கொண்டு வெவ்வேறு இடத்தில குடியிருந்தாங்க. 

தனது மனைவியின் மறைவுக்கு பின்னர் மகளின் வீட்டில் இருந்தால் அவ்வளவு நல்லா இருக்காதுன்னு சொல்லி, இரண்டு மகன் வீட்டுக்கும் பந்தாடப்பட்டாரு. இறுதியா பெரிய மருமகளை விட, சின்னவ தேவலாம் என்று தன்னை ஷாமின் தந்தையான குமரேசுடன் ஐக்கியமானார் 

குமரேஷ் வேலை செய்வதோ ‘புரூனேயில்’. ஆண்டுக்கு ஒருமுறை விடுமுறையில் ஒரு மாத காலம் வந்து போவதோடு சரி. பெற்ற கடனுக்கு, தினமும் தொலைபேசியில் “அப்பாவை நல்லா கவனிச்சுக்க” என்று தன் மனைவியிடம் சொல்வதுடன் முடிந்தது. 

அந்த காலத்து பெரியவங்க தான், எந்த வேலையும் செய்யாம சும்மா இருக்க முடியாதே. அப்படி பெரியசாமி செய்யும் உதவிகள், தன் மருமகளுக்கு உபாத்திரவமாக முடிந்து விடும்.

அதனால் அவரிடம் கடுகடுவென பொறித்துக் கொண்டே இருப்பாள். பெரியசாமிக்கு வெளியில் யாரைப் பார்த்தாலும் மரியாதையை நிமிர்த்தம் சிரித்து வணக்கம் சொல்வது அவரது சுபாவம் 

அதனை இக்காலத்து பிள்ளைகள் புரிந்து கொள்வதில்லை, என்ன செய்றது? 

சில நேரம் மகனின் காதுக்கு செல்லும் புகார்கள், அப்படியே திரும்பி விடுவதால், தானே கண்டிக்கத் தொடங்கினாள் மருமகள்

74 வயதாகியும் இளைஞராகவே சுற்றிக் கொண்டிருக்கிறார், சாமி எனும் பெரியசாமி

அந்த வட்டாரத்தில் அவரைத் தெரியாதவர்களே இல்லை எனும் அளவுக்கு, பெரியவர்கள் முதல் சிறிய குழந்தை வரை அவரைக் கண்டாலே சிரித்து கைகாட்டி விட்டுத் தான் செல்லும்

ஆனால் மருமகளுக்குத் தான் இது போன்ற காரியங்கள் பிடிப்பதில்லை

“ஏன் அவங்களோட பேசுறீங்க? ஏன் அவங்க வீட்டுக்கு போனீங்க?” என்று சதா மருமகளின் அர்ச்சனைக்கு நடுவில் வாழ்ந்து வந்தார்

இரண்டு வருடங்களுக்கு முன், ஒரு நாள் நடைபயிற்சிக்காகச் சென்றவர், பார்க்கில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, ஒருவர் கூறிய கருத்து சட்டென பெரியசாமிக்குள் பொறி தட்டியது. 

மறுநாளே தன்னுடன் நடைப்பயிற்சிக்கு வரும் கூட்டாளிகள் எட்டு பேருடன் கலந்து ஆலோசித்து, அந்த ஏரியாவிலேயே சும்மா கிடக்கும் அரசாங்க நிலத்தை சுத்தப்படுத்தி தோட்டம் அமைத்து பொழுதைக் கழிக்கத் திட்டமிட்டனர். 

மாநில அரசாங்கம் இந்த மாதிரி விஷயங்களுக்கு முன்னுரிமை தருவாங்கன்னு எல்லாருக்கும் தெரியுமே, அதுனால எப்படியோ யாரையோ பிடித்து நல்ல பெரிய இடமாகவே தேர்ந்தெடுத்து அதற்கு அரசாங்க செலவிலேயே வேலியும் அமைத்து கட்டுப்பாடுகள் அனைத்தையும் கூற, “நாங்க பார்த்துக்குறோம்” என எட்டு பேருமா கையெழுத்துப் போட்டு தோட்டத்தை அமைச்சாங்க. 

நம்ம பெரியசாமி தான் தலைமை, அதனால் கடந்த இரண்டு வருடமாக நான்கு மணிக்கெல்லாம் கையில் பை ஒன்றை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார். 

பதினைந்து நிமிட நடையில் தங்களது தோட்டத்தை எட்டி விடுவார். அவரது உறுப்பினர்களும் தங்களால் முடிந்த அன்று வந்து விடுவார்கள். அவரது குழுவில் பெரியசாமி தான் எல்லாரையும் விட மூத்தவர் 

அதன் பிறகு  “அங்கம்மாள்”   என்ற பெண்மணி, தொடர்ந்து “ஜமீலா” மற்றும் வடிவம்மாளும் ஒத்த வயதுடையவர்கள். 

அதனையடுத்து “சென்ராயன்” தாத்தா, “ஜகஜித் சிங்” என்ற சீக்கியரும் அவரது மனைவி “பிங்கியுடன்” மற்றுமொரு பெண்மணியாக  நமது “ஜூலியட்” மேடம், வயது 58 அவர்களது குழுவில் ஏற்றம் மிகக் குறைந்த வயதுடையவர். 

இவர்கள் எட்டு பெரும் தினமும் அந்த தோட்டத்தில் சந்தித்துக் கொள்வார்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாக தங்களால் இயன்ற பணிகளை செய்து  கேலியும் கிண்டலுமாக பேசிக் கொண்டு இருட்டும் நேரம் வீட்டிற்கு செல்வார்கள். 

தினமும் ஒருவர் காபியோ, டீயோ அல்லது காய்கறிகள் சூப்போ கொண்டு வருவது வழக்கம். நம்ம பெரியசாமி மட்டும், மருமகளுக்கு பயந்து இங்கு வந்து செல்வதால், வெறுங்கையுடன் வருவார். 

அதனால் பல முறை, “என்னால் தான் எதுவும் கொண்டு வர இயலவில்லை”  என்று ஆதங்கப்படுவார் 

ஆனால் மற்றவர்கள், “யாரு கொண்டு வந்தா என்ன? இல்ல போகும் போது என்னத்த கொண்டு போபோறோம்” என்று அவரை தேற்றுவர்

தற்போது தோட்டத்தில் நிறைய காய்கறிகள், கீரைகள் ,வாழை மரங்கள்,பப்பாளி மரம் என பலதரப்பட்ட மரங்களும் அதன் தொடர்ச்சியாக மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளும், அனைவரும் தனக்கு தெரிந்தவர்களிடமிருந்து வாங்கிக் கொண்டு வந்து ஒருங்கிணைந்த தோட்டமாக மாற்றி விட்டனர்.  

அவ்வப்போது பெரியசாமியும் கீரைகளை பறித்து வீட்டிற்கு கொண்டு செல்வார். மருமகள் கேட்டால், நண்பன் தந்ததாக சொல்வார்.ஷாம் கண்ணடித்து சிரித்துக் கொள்வான். 

பிறகு யாருமில்லாத நேரத்தில் தன் தாத்தாவிடம் கேட்பான்

 “என்னைய பொய்  சொல்ல  கூடாதுன்னு சொல்லிட்டு நீ சொல்லுறியா? இரு இரு அம்மாட்ட சொல்றேன்” என்று வம்புக்கிழுப்பான். 

அதை இதை சொல்லி சமாளிப்பார் நம்ம பெரியசாமி. வாழ்க்கை இவ்வாறாக சுழல, திடீரென்று வந்தது பெரிய ஆபத்து.

எதேர்சையாக அந்த வட்டார அமைச்சர் வீடுகளுக்கு பயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்தவரிடம், யாரோ இது போல வயதானவர்கள் சேர்ந்து உருவாக்கிய தோட்டம் பற்றி ஞாபகப்படுத்தி விட்டனர்.

ஆச்சர்யத்துடன் கேட்ட அமைச்சர், “உடனடியாக நான் பார்க்க வேண்டும்” என்று அடம் பிடிக்க,  அக்கம் பக்கம் விசாரிச்ச அமைச்சரின் உதவியாளர்கள் பெரியசாமியின் தலைமையில் தான் செயல்படுகிறது என்று அவர் வீட்டிற்குச் செல்ல,  பெரியசாமிக்கு பகீரென்றது

ஏன்னா அன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை. மருமகள் வீட்டிற்குள் அறையில் வழக்கம்போல கதவடைத்து யாரிடமோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள். 

வந்தவர்களுடன் அமைதியாக பேசி, “நீங்க முன்னாடி போங்க, நான் பின்னால் வருகிறேன்” என்று கூறி அனுப்பி விட்டார். 

வெளியில் வந்த மருமகள், “ஏதோ பேச்சு குரல் கேட்டுச்சே, யாரு ஷாம்?” என்றதும்

“யாரோ சேல்ஸ் பண்றவங்க சோப்பு பவுடர் வேணுமான்னு கேட்டாங்க, தாத்தா வேண்டாம்னு அனுப்பிட்டாங்க” என்று இருவருமாக சமாளித்தனர். 

திடீரென்று நெஞ்சைப் பிடித்த பெரியசாமி “அப்பா” என்று சோர்வாக அமர,

“என்னாச்சு மாமா?” என்று அருகில் வந்த மருமகளிடமும், பணிப்பெண்ணிடமும் 

“நெஞ்ச கரிக்கிற மாதிரி இருக்கு, கொஞ்சம் வெந்நீர் குடும்மா” என்று வாங்கிக் குடித்து விட்டு, ஐந்து சிமிடம் கண்களை மூடி இருந்தவர்

“கொஞ்சம் நடந்து போயிட்டு வந்தா தேவலை போல இருக்கு” என்று நைசாக கிளம்பினார். 

“இப்ப தானே நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னீங்க, கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுங்க, எல்லாம் சரியாயிடும்” என்றாள் மருமகள். 

“இல்ல முதுகு பிடிக்கிற மாதிரி இருக்கு, நான் நடந்துட்டு வரேன்” என்று கூற

“சொன்னா கேட்கவா போறீங்க? இருங்க, அப்ப ஷாமையும் கூட்டிட்டு போங்க” என்று அனுப்பினாள். 

தப்பித்தோம் பிழைத்தோம் என்று, தாத்தாவும் பேரனுமாக குடுகுடுவென்று ஓடி தோட்டத்தை அடைந்தனர். 

சும்மா சொல்ல கூடாது, இந்த வயசிலும் நம்ம பெரியசாமி என்னா ஒரு வேகம், எல்லாம் சிறுவயதிலிருந்தே கடின உழைப்பில் தேர்ந்த தேகம், அதனால் தான் இன்னும் ஈடுகொடுக்க முடிகிறது

“வணக்கம்” என்று சொன்ன அமைச்சருக்கு பதில் வணக்கம் போட்டு விட்டு, தோட்டத்தை சுற்றிக் காட்டினார் சாமி. அதற்குள் சாமியின் நண்பர்கள் கேள்விப்பட்டு அவருடன் சேர்ந்துக் கொண்டனர். 

பின்னர் அனைவரையும் அழைத்து தேநீர் விருந்து ஏற்பாடு செய்த அமைச்சர், விளக்கமாக தெரிந்து கொண்டது மட்டுமல்லாமல், வயதானவர்களால் நீர் ஊற்ற, உரம் வைக்க சிரமமாக இருக்கும் என்று கருதி, “ஹைட்ரொபோனிக்ஸ்” என்று சொல்லக்கூடிய இரசாயன உணவு கொண்டு நீரில் வளரும் செடிகள் வைக்கும் ஏற்பாட்டை செய்து தர நிதி ஒதுக்குவதாகவும் சொல்லவும், அனைவரும் குதூகலித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். 

அவர்களிடம் இருந்து விடைபெற்ற அமைச்சர், அடுத்த இருபது நாளில் சொல்லிய வண்ணம் துரித நடவடிக்கையாய் அனைத்தையும் செய்து கொடுத்தார்.

“வேறு எந்த ஊரிலும் இல்லாதது போல்,  நம் சென்னையை முன் மாதிரியாக கொண்டு மற்ற ஊர்களிலும் இது போல செய்ய வேண்டும்” என்று என்னமோ தானே எல்லாம் செஞ்ச மாதிரி வழக்கமான மேடைப் பேச்சுடன் முடித்துக் கொண்டார் அமைச்சர்

சும்மா சொல்லிகிட்டே இல்லாம ஏதோ நிதி ஒதுக்கி இந்த ஏற்பட்ட செய்ததே பெரிய விஷயம் என்றெண்ணி, அனைவரும் கைதட்டி அமைச்சரை வழி அனுப்பி வைத்தனர். 

ஆரம்பத்தில் புது டெக்னாலஜிக்கு கொஞ்சம் சிரமப்பட்ட நம்ம சாமி டீம், அதன் பிறகு சும்மா… இறங்கி வேலை பார்த்து, இப்ப நிறைய பயிர் செய்கிறார்கள். அது மட்டுமல்லாமல் “உழவர் சந்தை” போன்ற மார்கெட்டுகளுக்கு சப்ளையும் செய்கிறார்கள். 

நான்கு மாதங்கள் கடந்த நிலையில், அத்தனையும் கமுக்கமாகவே வைத்து சமாளித்துக் கொண்டிருந்த சாமிக்கு, மறுபடியும் சோதனை வந்தது. 

ஆமாங்க! இந்த முறை எப்படியும் தப்பிக்க முடியாது, ஏன்னா அவரின் தோட்ட பாதுகாப்புமுறை வெற்றிகரமாக செயல்பட இதனை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த எண்ணிய அமைச்சர், நாடாளுமன்றத்தில் இதற்கான அறிக்கையையும் தாக்கல் செய்து, அதனை வெற்றிகரமாக கையாண்ட நமது முன்னோடி சாமிக்கு விருது ஒன்றை வழங்குவதாகவும் தெரிவித்தார். 

விஷயத்தைக் கேள்விப்பட்ட மேடம் ஜமீலா, தொலைபேசியில் அழைத்துக் கூற, சாமிக்கு சந்தோஷத்தில் சிரிப்பதா? அல்லது தனது மருமகளுக்கு இது தெரிந்தால் அவள் ஆடும் ஆட்டதைக் கண்டு கவலைப்படுவதா? என்று தலையில் இடி விழுந்தது போல் இருந்தார். 

சரி எத்தனையோ சமாளிச்சுட்டோம், இதையும் சேர்த்தே சமாளிப்போம் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டு பேரனிடம் யோசனை கேட்டவாறு இருந்தார். 

அப்போது “காலிங் பெல்” கதற, பணிப்பெண் ஓடிச் சென்று கதவைத் திறக்கவும் மருமகளின் என்ட்ரி

அப்பறம் நடந்ததை நான் என் வாயால என்னத்த சொல்ல, உங்களுக்கே  தெரியுமே 

அவசரமா உள்ள வந்த மருமகள் மாதங்கி, வக்கீல் அங்கியை சோபாவின் ஓரம் வைத்து விட்டு, திடீரென்று நம்ம சாமியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள் 

பின் எழுந்து, வாங்கி வந்திருந்த இனிப்பை எடுத்து ஷாமின் வாயில் திணித்து, மாமனாருக்கும் கொடுத்து தானும் உண்டாள். 

ஒன்றை எடுத்துக் கொண்ட சாமி, “நீ ஏதாவது சொல்லப் போறியோன்னு பயந்துட்டேம்மா, நானே ரொம்ப நாளா  சொல்லணும்முன்னு நெனச்சிட்டே இருந்தேன். இப்ப உனக்கே தெரிஞ்சுருச்சு” என்றார்

“உங்களுக்கு எப்பிடி தெரியும் மாமா, எனக்கு ப்ரோமோஷன் கெடைக்குனு” என்றவளை ஏறிட்டு பார்த்தவர் 

“ப்ரோமோஷனா?” என்று மென்ற லட்டை நிறுத்தினார்

“நீங்க வேறென்ன நினைச்சீங்க?”  என்றவளிடம், திருதிருனு முழிக்க, ஷாமும் முழிக்க,  ரெண்டு பேருமா ஏதோ திருட்டு வேலை செய்திருக்காங்கன்னு புரிஞ்சுக்கிட்டா மருமகள் 

அப்பறம், வேற வழி இல்லாம நடந்ததெல்லாம்  சாமி  சொல்ல, அப்படியே அதிர்ந்து போய் அமர்ந்தாள். 

மறுபடியும் காலில் விழுந்த மாதங்கியை தூக்கி விட்டு, “இப்ப எதுக்கு?” என்று கேட்க

“உங்கள புரிஞ்சுக்காம இவ்வளவு வருஷமா ரொம்ப கொடும படுத்திட்டேன். என்னை மன்னிச்சுருங்க மாமா” என்றவளைப் பார்த்து 

“அப்ப என்ன திட்டப் போறதில்லையா?” என்றார். 

“எதுக்கு மாமா திட்டனும், நீங்க ஒன்னும் தப்பு செய்லையே” என்றாள்.  

மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கிய நம்ம சாமி அன்று தான் நிம்மதி பெருமூச்சு வாங்கினார்  

தனக்கு கிடைத்த விருதை விட, தன் மருமகளிடம் தான் தோட்டத்திற்கு சென்று வருவது தெரியப்படுத்தியதே மிகப் பெரிய விருதாக நினைத்த சாமி, கையில் பையுடன் “கூலிங் கிளாஸ்” ஒன்றை மாட்டிக் கொண்டு “வரட்டா மருமகளே” என்று, சுதந்திர காற்றை சுவாசித்து தன் தோட்டத்திற்கு புறப்பட்டார். 

அடுக்களையில் பணிப்பெண்ணின் வானொலிப் பெட்டியில்…. தகிட தகிட தகிட தகிட கத்தால கண்ணால குத்தாத நீ என்ன… ஒலித்துக் கொண்டிருந்தது. 

ஆமாங்க… தன்னை மட்டும் பாராமல், தன்னால் சமூகத்திற்கும் ஏதாவது உபயோகமா இருந்தா, நம்ம பெரியசாமி மட்டும் இல்லங்க, நாம் எல்லோருமே விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நாயகர் நாயகிகள் தான், சரிதானே

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

யார் நீ? (சிறுகதை) – ✍ சாரு கீர்த்தனா, கோவை (கல்லூரி மாணவி)

இல் ❤ (சிறுகதை) – ✍ இன்பா, சென்னை