sahanamag.com
தொடர்கதைகள்

வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 1) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

மற்ற பகுதிகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

கன் கோபி கிருஷ்ணாவைப் பள்ளியில் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தாள் மஞ்சுளா. மணி எட்டு என்று காரில் இருந்த கடிகாரம் காட்டியது. கலிபோர்னியா மாகாணத்தில் ‘ஸான் ரமோன்’ என்னும் சிறிய ஊரில், தன் மகனோடு வசித்து வந்தாள் மஞ்சுளா

பிள்ளையை நல்ல பள்ளியி்ல் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக, அந்த ஊரில் ஒரு சிறிய வீடு வாங்கி, அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டாள்

அங்கிருந்து நூறு மைல் தள்ளியிருந்த ஒரு புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தின் தமிழ் ஆராய்ச்சிப் பிரிவில், உதவிப் பேராசிரியையாகப் பணிபுரிந்து கொண்டிருந்தாள்.         

வீட்டிற்குப் போய் தன்னைத் தயார் செய்து கொண்டு பணிக்குச் செல்ல வேண்டுமென, அந்த ஆறு வழித் தடத்தில் நூறு மைல் வேகத்தில் வீ்ட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாள்.

அதே நேரம், கைப்பேசி குரலெழுப்பியது. புது எண், ஆனால் கலிபோர்னியா எண் என பார்த்ததும் புரிந்தது

புளூ டூத் வழியாக பேசியை உயிர்ப்பித்து, “ஹலோ…” என்று கேட்டாள். ஆனால் எதிர்தரப்பில் பதில் இல்லாமல் போக, எரிச்சலுடன் அழைப்பைத் துண்டித்தாள்

மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு வர, “இதென்ன நியூசென்ஸ்” என்று  முனகிக் கொண்டே, “யார் பேசுவது? யார் வேண்டும்?” என்றாள் சற்றே கோபத்துடன்

“மஞ்சு… நான் தான் நந்தகோபால், போனைக் கட் செய்து விடாதே ப்ளீஸ்” என்றான் கெஞ்சும் குரலில்

“டாக்டர் நந்தகோபாலா?” என்றாள் மஞ்சுளா அதிர்ச்சியுடன்

“ஆம்… அதே டாக்டர் நந்தகோபால் தான், நம் மகன் கோபி கிருஷணாவின் தந்தை”

மஞ்சுளாவிற்கு ஒரு நிமிடம் மூச்சே நின்று விட்டது. அதிர்ச்சியில் காரை ஓர் ஓரமாக நிறுத்தி, பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து கொஞ்சம் குடித்தாள்

பிறகு, “இந்த போன் நம்பர் உங்களுக்கு எப்படி கிடைத்தது? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்ற மஞ்சுளாவின் குரலில் இருந்த எரிச்சலில், அவன் காதுகள் அதிர்ந்தன

“மஞ்சுளா, உன் கோபம் நியாயமானதே, எனக்குப் புரிகிறது. நான் உன்னையும் நம் குழந்தை கோபி கிருஷ்ணாவையும் பார்க்க வேண்டும், அதற்காகத் தான் மிகவும் கஷ்டப்பட்டு உன் யூனிவர்சிட்டியில் உன் போன் நம்பர் வாங்கி வந்தேன்.

நான் இந்தியா திரும்புவதற்கு இன்னும் இருபது நாட்கள் தான் இருக்கிறது, அதற்குள் நான் நம் மகனிடம் பேச வேண்டும். அவனுடன் ஊரெல்லாம் சுற்ற வேண்டும். அவனைக் காட்டாமல் என்னை ஏமாற்றி விடாதே ப்ளீஸ்” என்றான் கெஞ்சும் குரலில்

“எனக்குக் கொஞ்சம் யோசிக்க அவகாசம் வேண்டும். இப்போது நான் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறேன், இரவு ஏழு மணிக்கு மேல் பேசலாம்” என ‘பட்’டென்று தொடர்பைத் துண்டித்தாள்.

அவ்வளவு குளிரிலும் நெற்றியிலிருந்து காது வரை வழிந்த வியர்வையை ஒரு பேப்பர் டவலால் துடைத்தாள்

‘இவன் எங்கிருந்து வந்தான் திடீரென்று? எவ்வளவு கொடுமைப்படுத்தினான்? பேச்சினாலேயே சாகடித்தானே. நாக்கா அது… முள்ளாலான சாட்டை. இப்போது பார்க்க வேண்டுமாம், ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்றா?’ என்று பலவும் யோசித்துக் கொண்டே, காரைப் பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றாள்

தன்னை அமைதிப்படுத்திக் கொள்ளச் சிறிது நேரம் ஓய்வெடுத்தவள், பிறகு தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டு, மதிய உணவுக்கு கொஞ்சம் ரொட்டித் துண்டுகளும் பழங்களும் எடுத்துக் கொண்டு, மீண்டும் காரை கிளப்பி வேலையிடம் நோக்கி சென்றாள்

சிதம்பரத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவள் தான் மஞ்சுளா. அப்பா, அம்மா இருவரும் அவளுடைய மிகச் சிறிய வயதிலேயே திருவிழாவிற்குச் சென்ற இடத்தில் காவிரி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள் என்று அண்ணா ராகவன் கூறக் கேட்டிருக்கிறாள்

ராகவன் மஞ்சுளாவை விடப் பத்து வயதுப் பெரியவன். தந்தையாய் தாயாய் சகோதரனாய் என எல்லாமுமாய் இருந்து, ஏதோ ஒரு அரிசி மில்லில் வேலை செய்து தானும் படித்துத் தங்கையையும் படிக்க வைத்தான்

வங்கித் தேர்வுகள் எழுதித் தேர்ச்சி பெற்று ஒரு தேசிய வங்கியில் கிளார்க்காகப் பணியில் சேர்ந்தும் விட்டான். இவனுடைய கடின உழைப்பையும், நேர்மையையும் பார்த்து வியந்த உடன் வேலை செய்த சாரதா என்ற பெண் ராகவனை திருமணம் செய்துக் கொள்ள விரும்பினாள்

ராகவன் முதலில் தயங்கினான். ஆனால் அவள் ராகவனைச் சமாதானப்படுத்தி பெற்றோரின் முழுச் சம்மத்ததுடன் மஞ்சுளாவின் அண்ணியாக வீட்டிற்குள் நுழைந்தாள்.

மஞ்சுளாவைத் தங்கையாக மகளாக பாவித்துப் பிரியம் காட்டினாள், நன்றாக கவனித்துக் கொண்டாள். அதற்காக தன் கர்ப்பத்தையே அழிக்கத் துணிந்தாள் .

அப்போது மஞ்சுளா சற்று விவரம் தெரியும் பெண்ணாக வளர்ந்து இருக்க, தன் அண்ணா அண்ணியிடம் கெஞ்சி அந்த குழந்தை வேண்டும் என்று அடம் பிடித்தாள்.

தன் அம்மாவே அண்ணியின் வயிற்றில் வந்து பிறப்பாள் என்று நம்பினாள். அவள் விருப்பப்படி அண்ணி பெண் மகவை ஈன்றெடுக்க தன் தாயின் பெயரான ஜானகியையே அந்தப் குழந்தைக்கு வைத்தாள்.

அந்த குட்டிப் பாப்பாவும்’ ஜானு’ என்று அவள் விருப்பப்படி அண்ணி பெண் மகவை ஈன்றெடுக்க அழகாகத் திரும்பிப் பார்த்துச் சிரித்தது

மஞ்சுளா பள்ளியிலிருந்து திரும்பி வந்தால், குழந்தை ஜானுவுடன் கொஞ்சி விளையாடி விட்டுத் தான் வீட்டுப் பாடங்கள் செய்வாள்

உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போதே எல்லாப் பேச்சுப் போட்டிகளிலும் கலந்து முதல் பரிசைத் தட்டிக் கொண்டு வருவாள். அவள் வளர வளர அவள் அறிவும் அழகும் வளர்ந்தது

நல்ல உயரமும், செக்கச் சிவந்த நிறமும், செதுக்கி வைத்தாற் போன்ற அங்கங்களும், சுருண்டு நீண்ட கூந்தலுமாக, கடைந்தெடுத்த  தங்கப் பதுமை போல் இருந்தாள்

அவள் அழகைப் பார்த்து ராகவனுக்கும் சாரதாவிற்கும் பெருமையாக இருந்தாலும், பயமாகவும் இருந்தது. கிடைத்தற்கரிய பொக்கிஷமாக அவளைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயமும் இருந்தது

ராகவனின் கடின உழைப்பும், சாரதாவின் தியாக புத்தியும், அவர்கள் இருவரின் அன்பும் தான் மஞ்சுவின் மனதிற்கும் கண்களுக்கும் தெரிந்தது. பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளியில் முதலாவதாகவும், மாநிலத்தில் இரண்டாவதாகவும் தேறினாள்.

ராகவனும் சாரதாவும் சந்தோஷத்தில் துள்ளினார்கள். தெரிந்தவர்கள் எல்லோருக்கும் இனிப்பு வழங்கி மஞ்சுளாவின் வெற்றியை கொண்டாடினார்கள்

கேப்பிடேஷன் பீஸ் இல்லாமலே டாக்டருக்குப் படிக்க வைக்கலாம் என்று பேசிக் கொண்டனர். ஆனால் மஞ்சுளா மறுத்து விட்டாள். அவளுடைய சின்ன வயதிலிருந்தே அவள் ஊரிலேயே கம்பீரமாக கொலுவீற்றிருந்த அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் மேல் ஓர் பிரேமை இருந்தது அவளுக்கு

அந்தப் பல்கலைகழகத்தில் இருந்து வரும் பெரும் தமிழ் பேரறிஞர்களைப் பற்றிய செய்திகளை வாசிப்பாள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பட்டிமன்றங்களிலும், கம்பன் கழகங்களிலும் அவர்கள் வாதத்தினை ரசித்தாள்

அதனால் ராகவனிடமும் சாரதாவிடமும் அவர்கள் மனம் புண்படாதவாறு தன் கருத்தினை தெரிவித்தாள்

“அண்ணா, எனக்குச் சின்ன வயசிலிருந்தே இந்த அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் தமிழ் படித்து, அங்கேயே பேராசிரியராகப் பணிபுரியவும் ஆசை. எனக்கு விருப்பமான துறையில் என்னைப் படிக்க அனுமதியுங்கள். நம் ஜானுக் குட்டியை  நாம் டாக்டருக்குப் படிக்க வைக்கலாம். தயவு செய்து என்னை புரிந்து கொள்ளுங்கள். உங்களை எதிர்த்துப் பேசுவதாக நினைக்காதீர்கள்” என்றாள் பணிவுடன்

அவர்களுக்குத் தான் அவள் விருப்பத்தை மறுத்தே பழக்கம் இல்லையே, ஆகையால் அரைகுறை மனதுடன் ஒத்துக் கொண்டார்கள்

மஞ்சுளாவின் மதிப்பெண்களுக்கு உடனே அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பி.லிட். இடம் கிடைத்து சேர்ந்து விட்டாள்.

“தமிழ் மொழியின் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் இவ்வளவு பைத்தியமா” என்று அனைவரும் வியக்கும் வண்ணம், வள்ளுவனும் கம்பனும் இளங்கோவும் பாரதியும் அவள் நுனி நாக்கில் விளையாடினார்கள்

கம்பனையும் கண்ணதாசனையும் ஒப்பிட்டு நிறைய கட்டுரைகள் எழுதினாள். அவை புகழ் பெற்ற வார இதழ்களிலும், மாத இதழ்களிலும் வெளயாகின. வருமானம் குறைவாக இருந்தாலும், அவளுடைய எழுத்து அவளைத் திரும்பிப் பார்க்க வைத்தது

எம்.ஏ.வும் எம்.பில்லும் அங்கேயே முடித்து, உதவிப் பேராசிரியராகவும் பணியில் சேர்ந்தாள். மஞ்சுளாவுக்கு கல்வெட்டு ஆராய்ச்சியிலும் அதிக ஆர்வம் ஏற்பட்டது. மேடைப் பேச்சுகளிலும், பட்டிமன்றப் பேச்சுகளிலும் நிறைய கலந்து கொண்டாள்.

தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பாகிய மஞ்சுளாவின் அறிவு சால் பேச்சையும், வார இதழ்களில் வெளியான அவள் கட்டுரைகளையும் படித்துத் தான் டாக்டர். நந்தகோபால் அவளிடம் ஆர்வம் கொண்டான்

அவள் கலந்து கொள்ளும் பட்டிமன்றங்களில், நேரில் வந்து ரசிக்க ஆரம்பித்தான். முதலில் அவள் பேச்சுக்கு அடிமையானவன், பின் அவள் அழகுக்கும் அடிமையானான். வேண்டும் என்றே வலியப் பேசத் தொடங்கினான். ஆனால் மஞ்சுளா இதையெல்லாம் விரும்பவில்லை என்பதை முகத்தில் அடித்தாற் போல் நேருக்கு நேர் சொல்லி விட்டாள்.

ழைய நினைவுகளில் மூழ்கியதில், கார் பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்ததைக் கூடக் கவனிக்கவில்லை மஞ்சுளா. அனிச்சை செயலாக காரைப் ‘பார்க்’ செய்து விட்டுத்  திரும்பிய போது, அவளுடைய ஸீனியர் ப்ரபஸர் டாக்டர். மார்ட்டின் அவளைப் பார்த்து கையசைத்து சிரித்தார்.

“கங்கிராட்ஸ் மிஸ்ஸ் மஞ்சுளா. ஸான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து  வெளிவரும் ஒரு தமிழ் பத்திரிகையில் தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்ற தலைப்பில் நீங்கள் தொடராக எழுதி வருவதை, சிக்காகோவில் ஒருவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டு ஒரு பத்திரிகையில் எழுதியிருக்கிறார் தெரியுமா?

அவருடைய ஆங்கிலத் திறமையை யாரும் அதிகமாகப் பாராட்டவில்லை, அந்தக் கட்டுரையின் சாராம்சத்தைத் தான் எல்லோரும் வியந்து பாராட்டி கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். அதை அப்படியே நம் பல்கலைகழகத்தில் உங்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள். நம்முடைய ஓய்வு அறையில் அந்தத் தபால்களை உன் இடத்தில் வைத்திருக்கிறேன். வா போய் பார்க்கலாம்” என்று மஞ்சுளா பின் தொடர மார்ட்டின் முன்னால் சென்றார்

ஏதோ சில கடிதங்கள் இருக்கும் என்று கப்போர்டைத் திறந்தால், ஒரு ஐந்து கிலோ காக்கிப்பை வெளியே வந்து விழுந்தது. பை நிறைய கடிதங்கள். ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்து நின்றாள் மஞ்சுளா.

“நாங்கள் கூட இதே போல் தான் வாய் பிளந்து நின்றோம்” என்ற மார்ட்டின் கலகலவென்று சிரித்தார்.

அந்த இலாக்காவைச் சேர்ந்த நான்கு உதவிப் பேராசிரியர்கள், அந்த கடிதங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக பொறுக்கி எடுத்துப் படித்தனர். அவள் கட்டுரையை வியந்து பாராட்டியே நிறைய கடிதங்கள்

ஆனால் மஞ்சுவிற்கு எதிலும் மனம் ஓடவில்லை. நந்தகோபால் இத்தனை வருடங்கள் கழித்து ஏன் தங்களைப் பார்க்க விரும்ப வேண்டும்? என்ற கேள்வியே மனதை குடைந்து கொண்டிருந்தது

மற்ற பகுதிகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

(தொடரும் – புதன் தோறும்)

Similar Posts

7 thoughts on “வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 1) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை
  1. அருமையான தொடர் அழகான எழுத்து நடை..அடுத்த யுடி காக்கா நானும் காத்திருக்கிறேன்..நந்து என்ன சொல்ல போகிறான்.மஞ்சுவிடம்.

  2. அருமையான எழுத்து நடை. விறுவிறுப்பாகச் செல்கிறது. தொடரக் காத்திருக்கேன்.

  3. அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம். அருமையான நடை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!