ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் விசாலம். கோயிலுக்கு அருகில் வரும் பொழுது, ஊரில் சிலர் பரபரப்பாக சின்னக்குளம் தோக்கி ஓடிக் கொண்டிருந்தனர்.
எதிரே வந்த சிவகாமியிடம், “என்னாச்சு அத்தே? ஏன் எல்லாரும் இப்படிப் பதட்டமா எங்கே ஓடுறீங்க?” என்று விசாலம் கேட்டது தான் தாமதம்
“அதையேன் கேட்கறே, அந்தப் பாவி மக பார்வதி, கிறுக்குச் சிறுக்கி, பிள்ளையைத் தூக்கி ஊரணிக் கிணத்துல போட்டுட்டாளாம். பார்த்தவங்க சொன்னாங்க. பிள்ளையைக் காப்பாத்தத் தான் ஆம்பளைங்க ஓடுறாங்க. ஐயோ என்னாச்சோ, பச்சைப் புள்ளையாச்சே?”
தலையிலடித்துக் கொண்டு ஓடும் சிவகாமி அத்தையைப் பார்த்தபடியே அதிர்ந்து நின்றாள் விசாலம்
ஊரணிக் கேணி அந்த ஊரின் குடிநீர்க் கிணறாக இருந்தது. சின்னக்குளத்தின் நடுவே அமைந்திருக்கும் அக்கிணறு படிகளற்ற ஆழமான வட்டக்கிணறு.
நீர் இறைக்கும் போது வாளி விழுந்தாக் கூட, பாதாள கரண்டியைப் போட்டுத் தேடி எடுப்பாங்க. தண்ணிப்பஞ்சம் அதிகமிருந்த காலமது. ஒட்டுத்தண்ணி காலத்துல அப்பப்ப ஊருற தண்ணிய விடியற்காலையில் போய் இறைக்கிற வழக்கமுண்டு.
அங்கு போய் பார்க்க விசாலத்திற்கும் மனம் துடித்தது. ஆனால் வீட்டுக்குப் போகக் கொஞ்சம் லேட்டானாலும் அம்மா திட்டுவாங்க என்ற பயம் தோன்றியதும், வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்
வீட்டை அடையும் ஐந்து நிமிடத்திற்குள் மனதில் ஆயிரம் கேள்விகள். பார்வதியைப் பற்றிக் கொஞ்சம் தெரியும். மனம் பேதலித்தது போல மண்ணள்ளித் தின்று கொண்டும், தனக்குத் தானே பேசிக்கொண்டும் திரியும் பார்வதி, இப்படிக் கொலைகாரக் குணமுடையவள் என்று நம்ப மறுத்தது விசாலத்தின் பருவ வயது மனம்.
வீட்டின் அருகில் செல்லும் போதே அந்தத் தெருமுனையிலும் நான்கைந்து பேர் கூடி நின்று பேசுவது தெரிந்தது.
கிராமமல்லவா? எந்த விசயமானாலும் அங்காங்கே நின்று கூடிப் பேசி பேனைப் பெருமாளாக்கிக் கதை பேசுவது வழக்கம் தானே? அங்கே கும்பலில் நின்றிருந்த தன் அம்மாவிடம் செல்வது போல அருகில் சென்றாள் விசாலம்.
“அப்பாடா, பிள்ளையைப் உள்ளே தூக்கிப் போடும் போதே பார்த்ததால உடனே குதிச்சுக் காப்பாத்திட்டாங்களாம். பிள்ளை நல்லாத்தான் இருக்குது. இருந்தாலும் ரொம்ப சின்னப் புள்ளையில்லையா, அதான் பதறிப் போய் ஆஸ்பத்திரிக்குப் போயிருக்காங்க” என்று வடிவுப் பெரியம்மா சொன்னது விசாலத்தின் காதில் விழுந்தது.
கூடியிருந்தவங்க ஆளுக்கொன்னா ஏதேதோ பேசிட்டு, எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்குப் போயிட்டாங்க.
வீட்டுக்குள் நுழைந்ததும் அம்மாவிடம், “ஏம்மா அந்தப் பார்வதி அப்படிச் செஞ்சாங்க?” என்று கேட்டாள் விசாலம்
“சக்களத்தியா தங்கச்சியே வந்ததால பைத்தியம் பிடிச்சுத் திரிஞ்சா. தனக்குப் பொறக்காத பிள்ளைத் தங்கச்சிக்குப் பொறந்து, தன் புருசனும் தங்கச்சியும் சந்தோசமா இருக்காங்களேங்கிற கோவம் தான் இப்ப” என்று மிகச் சாதாரணமாகச் சொல்லி விட்டு நகர்ந்தார் அம்மா.
நல்லசிவத்திற்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்த பொழுது ஊரேப் பொறாமைப்படும்படி அமைந்திருந்தது அவர்களின் ஜோடிப் பொருத்தம். பார்க்க இருவரும் சினிமாக் கதாநாயகன் கதாநாயகி போல கச்சிதமான அழகுடன் இருந்தனர்
ஆரம்பத்தில் மிகவும் நேசித்து அன்னியோன்மாகத் தான் வாழ்ந்தனர். பணக்கார வாழ்க்கையில்லையென்றாலும், ராணி போல மனைவியை நடத்தினான் நல்லசிவம்.
திருமணம் முடிந்து இரண்டு மூன்று ஆண்டுகள் மிகவும் மகிழ்ச்சியாகத் தான் வாழ்ந்தனர் எனலாம். மூன்று ஆண்டாகியும் பிள்ளை இல்லையென்ற பேச்சுகளில் மனம் வருந்த ஆரம்பித்தனர்.
அதுவும் வழக்கம் போல, பெண்ணான பார்வதியிடம் குறை இருப்பதாகவே பேசப்பட்டது. ஆரம்பத்தில் தன் மனைவியை விட்டுக் கொடுக்காமல் பேசிய நல்லசிவம், நாளடைவில் உறவுகளின் மனம் மாற்றும் முயற்சியிலும் தனக்கென குழந்தை வேண்டும் என்ற ஆசையிலும் சிறிது தடுமாறத் தான் செய்தான்.
செயற்கை முறைக் கருத்தரிப்புகள் நடுத்தர வர்க்கனத்தினருக்கு எட்டாது இருந்த காலம். உறவுகள் மற்றும் ஊராரின் பேச்சுகளுக்கும் மாமனார், மாமியார் நச்சுச் சொற்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் மெலிந்து போனாள் பார்வதி.
பார்வதியின் பிறந்த வீடு மிகவும் ஏழ்மை நிலையில் இருந்ததாலும், பார்வதியின் தங்கையும் திருமண வயதில் இருந்ததாலும், ஒருவழியாக பார்வதியின் அரைகுறை சம்மத்ததுடன் பார்வதியின் தங்கை மணிமேகலையை நல்லசிவத்திற்கு இரண்டாவதாகத் திருமணம் செய்து வைத்தனர்
தங்கை தான் என்றாலும், தன் கணவனைப் பங்கு போட வந்தவள் என்ற எண்ணம் மணிமேகலையைப் பார்க்கும் போதெல்லாம் பார்வதிக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
கிராமத்தில் இதெல்லாம் சாதாரணம் என்பது போல நடைமுறையில் இருந்த காலத்தில், எதுவும் செய்ய முடியாமல் தன் அன்புக் கணவன் தன் தங்கையுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்வதைப் பார்க்க பார்க்கப், பார்வதியின் மனநிலையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது.
திருமணமான சில மாதங்களிலேயே தங்கை மசக்கையானதும், பத்தாவது மாத இறுதியில் அழகான ஆண்குழந்தையைப் பெற்றெடுத்ததும், பார்வதியை சஞ்சலப்படுத்தியது
குழந்தை பெற முடியாத மலடி என்ற ஊராரின் பார்வையும் பேச்சும் பார்வதியின் வேதனையைக் கூட்டியது. கூடுதலாகத் தங்கை வயிற்றில் குழந்தை உண்டானதும் நல்லசிவம் பார்வதியைப் புறக்கணிக்கப்பதும், எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவதுமாக முற்றிலும் மாறிப் போனான்.
மெல்ல மெல்ல தன் சுயத்தை இழந்த பார்வதியின் ஒரு முட்டாள்தனமான செயல் தான் இரண்டு வயதான குழந்தையைத் தூக்கிக் கிணற்றில் போட்டது.
குழந்தை காப்பாற்றப்பட்டாலும், மனம் பேதலித்த நிலையில் பார்வதி இதைச் செய்திருந்தாலும், அதற்குப் பிறகு நல்லசிவமும் மணிமேகலையும் வெறுப்பின் உச்சத்தை பார்வதியிடம் கொட்டினர்.
மண்ணை அள்ளித் தின்பதும், கிழிந்த ஆடையுடன் தனக்குத் தானே பேசித் திரிவதுமாக இருந்த பார்வதி, சில ஆண்டுகளில் இறந்து போனாள். மகனாகக் கொள்ளியைக் கையிலெடுத்தான் அவளால் கிணற்றில் வீசப்பட்ட பிள்ளை.
சற்றேனும் சூடு தாங்காமல் விம்மியிருக்கலாம், பார்வதியின் புத்தி பேதலித்த தாய்மை மனம்.
GIPHY App Key not set. Please check settings