in

விபத்து (சிறுகதை) – ✍ எஸ். லக்ஷ்மி காந்தன், சேலம்

traffic lights and wet road at night

ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

கிட்டதட்ட நூற்று எழுபதாவது தடவையாக இதே நிகழ்வை வரி மாறாமல் கடந்த பத்து நாட்களாக சொல்லி வருகிறேன். ஆனாலும் கேள்விகள் மட்டும் விதவிதமாய் மாறி மாறி வருகிறது.

“என்னைக்கு ஆச்சு? எப்படி ஆச்சு?”

“போன சனிக்கிழமை ராத்திரி 7½ மணிக்கு பாட்டு கிளாஸ் முடிச்சுட்டு வரும் போது…”

“ஏன் அந்நேரத்தில பாட்டு கிளாஸுக்கு போனீங்க?”

கோபத்தின் முதல் வரி அங்க தான் ஆரம்பமாகும் எனக்கு

“கடந்த எட்டு வருஷமா இதே நேரத்திற்கு தான் பாட்டு கிளாஸ் போய் பொண்ணை கூப்பிட்டுட்டு வரேன்”

“அன்னைக்கி போகாம இருந்திருக்கலாமே… டிவியை பார்த்துக் கொண்டோ இல்லாட்டி சினிமா…”       

‘அப்படி இருந்திருந்தா இன்னிக்கு நாலு ஆப்பிள், நாலு ஆரஞ்சோட கால்கட்டு போட்டு படுத்திருக்கும் என்னை நீங்க பார்க்கவே வந்திருக்க மாட்டீங்களே…’ என்று நினைத்துக் கொண்டு சொல்லாமல் விட்டேன்.

“பார்த்து போயிருக்கலாமே…”

“பார்த்துத் தான் போனேன்”

“சரி.. அப்புறம்?”

“கன்னங்குறிச்சி ரோட்ல எம்.ஜி.ஆர் நகர் தாண்டி வந்து கொண்டு இருந்தேன். ரோடு புதுசா அகலப்படுத்தி போடும் போது ஓரமாக இருந்த ஒரு எலக்ட்ரிக் கம்பத்தை எடுக்கல போல, ராத்திரி நேரமானதால எதிரில் வந்த வண்டிகளோட பளீர் வெளிச்சத்தில் கம்பம் இருந்தது தெரியாமல் அதன் மேலேயே மோதி கீழே விழுந்து இடது கணுக்காலில் எலும்பு முறிந்து…”

“உடனே ஹாஸ்பிடல் போயாச்சா? எப்படி போனீங்க? கூட யார் வந்தா? எந்த டாக்டர்? போன் வொர்க் பண்ணியதா?”

வரிசையாக பதில் சொல்லக் கூட நேரமில்லாத அளவிற்கு தொடர் கேள்விகள்… கேள்விகள்…. கேள்விகள். டாக்டர் பெயரைச் சொன்னேன்.

“அட அவரா… நல்லா தான் பார்ப்பார், ஆனா எதுக்கும் கங்கால ஒரு தரம் பார்த்திடுங்க. சின்ன ப்ராக்ச்ரா இருந்தாலும் செகண்ட் ஒபினியன் நல்லது இல்லையா”

“ஆமா… ஆமா…” என்றபடி மையமாக தலையாட்டுவது அணிச்சை செயலாக வந்து விட்டது.

‘இங்கேயே நல்ல பார்க்கும் போது எதுக்கு கங்கா மாதிரி பெரிய இடத்துக்கெல்லாம் போகணும்?’ இப்படி மாறி மாறி அட்வைஸ்கள் வந்து விழுந்து கொண்டே இருந்தது.

அப்போது தான் தெரிந்தது, என்னை சுற்றியுள்ள பலர் அரைகுறை முழுகுறை அலோபதி, ஹோமியோபதி உட்பட எல்லா டாக்டருக்கும் படித்தவர்கள் என்பது

“மொதல்ல எதுக்கு ஆர்த்தோகிட்ட போனீங்க? நேரா குகை ஏரியாவுல இருக்கும் பூமி செட்டிகிட்டே போயிருந்தா இந்நேரம் சரியா போயிருக்குமே”                 “இதுகெல்லாம் இங்கிலீஷ் வைத்தியம் செட்டாவாது… நல்லம்பள்ளி, இல்லேன்னா புத்தூருக்கு போயி ஒரு கட்டு, இரண்டு கட்டு போட்டுருக்கணும். சூப்பரா செட்டாயிருக்கும்”

“என்ன இருந்தாலும் நம்மூரு பரம்பரை வைத்தியம் தான் பெஸ்ட்”

இப்படி கலர் கலராய் ஆலோசனைகள்

அதை விட, பிரிஸ்கிரிப்ஷன் வாங்கியும், மாத்திரைகளையும் பார்த்தும் சொல்லும் அறிவுரைகள் இருக்கிறதே அடடாடா…

“என்ன மாத்திரை இது? வெறும் கால்சியமும் டைக்ளோபெனாக்கும் தான் தந்திருக்காங்க, இதுக்கு எதுக்கு டாக்டர்கிட்டே செலவழிச்ச.”

அடப்பாவிங்களா…

நான் நடுரோட்டில் விழுந்து கிடக்கும் போது நல்லவேளையாய் இவர்கள் யாரும் இல்லை. நம்பிக்கையாய் எங்கள் டாக்டரிடம் போனதாலே பிழைத்தேன் என நினைத்துக் கொண்டேன்

எக்ஸ்ரே படங்களைப் பார்ப்பதில் தான் எத்தனை விற்பன்னர்கள்?

“இப்ப எல்லாமே டிஜிட்டல் மயம், அதே படம் தான். அவங்களுக்கும் பில் ஏத்தணுமில்லை… ஆர்டினரின்னா இருநூறு, டிஜிட்டலுக்கு நானூறு, எதை விக்கணும்னு அவங்களுக்கு தெரியாதா? படம் சரியா வரலைன்னு ரெண்டு தரம் எடுத்திருப்பாங்களோ”

“நல்லவேளை… க்ராக் இந்த இடத்திலே இருக்கு. கொஞ்சம் தள்ளி கணுக்கால் முட்டியில பட்டிருந்தா அவ்வளவு தான்.. வலி தாங்கியிருக்க முடியாது. நடக்கவே முடியாமல் போயிருக்கும், தப்பிச்சதே தம்பிரான் புண்ணியம்”

இப்படியும் திகிலூட்டும் பேச்சுக்கள் எல்லாம் கேட்க வேண்டி இருந்தது

நான் தப்பித்தற்கு வருத்தமா, வாழ்த்தா என தெரியாமல் குழம்பினேன். இன்னும் இன்னும் எத்தனை விமர்சனங்கள், எத்தனை அறிவுரைகள்…

ஜனவரி ஆரம்பமே சரியில்லை என்பதில் இருந்து, ராகு பெயர்ச்சி கேது பெயர்ச்சி மற்றும் இதர கிரக பெயர்ச்சிகளைக் காரணம் காட்டியும், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்றே என்றும், இன்னும் கொஞ்சம் தள்ளி விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்றும்…

“நீங்க எப்பவும் மெதுவாகத் தானே போவீங்க, அதுக்கே இந்த அடின்னா, வேகமாக போயிருந்தா… அடடா நெனச்சே பார்க்க முடியலை” என்றும்

கேள்விகள் கேள்விகள் எனக்கு சலித்தே போயிற்று…

இதில் இன்னொன்றும் இப்பொழுது தான் தெரிய வருகிறது. என்னை பார்க்க வந்த அனைவரும், அவர்களது தம்பி, தாயார், சுற்றம், நண்பர்கள் எல்லாம் அடிபட்ட கதையை பகிர மறக்கவில்லை

“இப்படித் தான் எனக்கு ஒரு தரம் கட்டைவிரல் நசுங்கி எலும்பு முறிந்து…” என்று தன் மற்றும் சுற்றத்தார், நண்பர்கள், தெரிந்தவர்கள் என அவஸ்தை கதைகளை கேட்டேத் தீரவேண்டிய நிலையில், வலியுடன் நான் படுத்துக் கொண்டும் கொஞ்சமாக புரண்டு கொண்டும் பொழுதை ஓட்டிக் கொண்டு இருந்தேன்.

இன்னும் சில அறிவுரைகள் இருக்கிறதே, அது இன்னும் கஷ்டம்.

எனக்கு இந்த கொடுமைகளை கேட்கும் விதி மட்டும் தான் என்ற நிலையில், என் மனைவி ராஜீக்கு ராத்திரிக்கு சமையல் நேரத்தை கூட்டச் செய்தும், பொருட்களுக்கு அலைய செய்தும் வைத்தனர்.

“தெனமும் பெரண்டை தொவையல் செய்து கொடு, உடம்புக்கு நல்லது. இயற்கை கால்சியம்…” என இலவச அறிவுரை வழங்கினார்

எனக்கு துவையல் அயிட்டங்களே பிடிக்காது என்று அவங்களுக்குத் தெரியாது.

“என்னோட ப்ரெண்ட் ஒருத்தர் ஏற்காட்டில் இருக்கார்… ஒரு மரப்பட்டை தரச் சொல்றேன், அதை பொடி பண்ணி சுட வச்சி அந்த தண்ணியை இரண்டு வேளை குடிச்சா எலும்பெல்லாம் உடனே கூடும்”

சொல்லும் போதே எனக்கு நாக்கு கசந்து போயிற்று, எனினும் அந்த பரிசோதனையில் அரைமணி நேரம் அடுப்பு எரிந்ததும், வீடு பூராவும் நெடியடித்ததும் தான் மிச்சம். அன்று இரவு கொசுக்கடியில் இருந்து மட்டும் விடுதலை கிடைத்தது.

“முட்டையோட வெள்ளைக் கருவை மட்டும் தனியா சாப்பிடணும், ரொம்ப நல்லது. வேக வெச்சு சாப்பிடறதை விட பச்சை முட்டை பெஸ்ட். முட்டை ஓட்டுல ஒரு சின்ன ஓட்டை போட்டு வாயில அப்படியே ஊத்திகிட்டா..” எனக்கு கேட்கும் போதே எனக்கு வயிற்றுக்குள் குபுக் குபுக் என்றது.

நல்லவேளையாக இம்மாதிரி பரிசோதனைகளையெல்லாம் அதிகம் செய்யாமல் விட்டதால், என் நான்கு கொஞ்சம் தப்பித்தது

அதை விட அவர்கள் வாங்கி வந்த ஆப்பிள் ஆரஞ்சு வகையறாக்களை வைக்க முடியாமல், வைத்துக் கொண்டு சாப்பிடவே முடியாமல், அந்தப் பக்கம் வருவதை இந்தப் பக்கம் கொடுத்தும், தீரவே தீராமல் ப்ரிட்ஜ் முழுக்க இடத்தை அடைத்துக் கொண்டு இருந்தது.

இதோட ராசியோ என்னவோ, எவ்வளவு எடுத்துக் கொடுத்தாலும் தொடர்ந்து நிரம்பிக் கொண்டே இருந்தது. இதனால் வழக்கமாக உள்ளே போகும் பொருட்கள் கோவித்துக் கொண்டிருக்க கூடும்.

சில பேர் வாங்கி வந்தததை கண்டிப்பாக சொல்ல வேண்டும். சாக்லெட் பாக்கெட் ஒன்று வந்தது, அடுத்து வரும் இரண்டு பர்த்டேக்களுக்கு செலவாகிற மாதிரி. அதுவும் ஃபாரின் சாக்லெட்டுகளாகவே வந்தது.

அவர்கள் எல்லாம் இதற்கு முன்பே பல தடவைகள் வெளிநாடு சென்று வந்த போதெல்லாம் சாக்லெட்டைத் தர தவிர்க்கவே, வீட்டுப் பக்கம் வராமல் இருந்தனர். நான்  சர்க்கரை சாப்பிடக் கூடாத ஆள் என தெரிந்து , இப்போது பழி வாங்கவே வாங்கி வந்திருப்பார்களோ?

முதல் இருபது நாட்களை விட அடுத்த இருபது நாட்களும், போனில் நேரில் என கேள்விகள் கேள்விகள் கேள்விகள் தான்.

“இப்போ வீக்கம் வத்தியாச்சா?”

“நடக்க ஆரம்பிச்சாச்சா?”

“கட்டு பிரிச்சாச்சா?”

“ஆபிஸ்ல லீவு எல்லாம் பிரச்சனை இல்லையே, எக்ஸாம் டைம் வருது பார்த்துக்கோங்க”

“எப்ப லீவு முடியுது? என்னைக்கு மறுபடி டியூட்டில ஜாயின்? படியேற முடியுமா? லிப்ட் எல்லாம் ஒழுங்கா ஒர்க் பண்ணுதா?”

அப்பாடா என்று ஆகி விடுகிறது எனக்கு எத்தனை முகங்களில், எத்தனை கேள்விகள், எல்லாமே என் மீது கொண்ட அக்கறையாகவே நான் நினைத்தாலும், காலில் எனக்கு வலி இருக்கும் பொழுது தான் கேள்விகள் அநாவசியமாகவே தோன்றுகிறதே?

அவரவர் புத்திசாலித்தனங்களையும், அறிவுரைகளையும் தெரிந்த அறிவுரைகளையும் எனக்கு காட்டுவதற்கென்றே கேள்விகளாக கேட்கிறார்களோ என்றும் தோன்றுகிறது.

என் நிலைமை அப்படி. வேறு வழியில்லாமல் மேலே பார்த்துக் கொண்டே கேட்டுக் கொண்டே இருந்தேன்.

ஏழு வாரங்கள் கழித்து கட்டு பிரித்து, வாக்கருடன் நடந்து, வாக்கர் இன்றி நொண்டி நடந்து, கொஞ்சம் கொஞ்சமாய் நன்றாய் நடந்து, சில நாட்களில் ஆபிஸ் போய் விட்டேன்.

அப்பாடா என்று இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி இரு மாதங்களில் வண்டி ஓட்டவும் செய்தேன்.

அன்று இரவு எட்டரை மணி பாட்டு கிளாஸ் முடித்து பாரதியை கூட்டி வந்து கொண்டிருந்தேன். அதே எம்.ஜி.ஆர் நகரில் மெதுவாகத் தான் வந்து கொண்டிருந்தேன்.

எதிரில் வந்த விளக்குகளின் வெளிச்சம் கூச, வண்டியை சட்டென நிறுத்திக் கொண்டேன். பல விதங்களில் தப்பித்து விட்டேன். இன்னமும் நகர்த்தி வைக்காத அந்த கம்பத்தைத் திட்டிக் கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.

அந்தக் கம்பம் ரொம்ப நாட்களுக்கு அப்படியே இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

6 Comments

  1. ம்ம்ம்ம், சாலையைக் குற்றம் சொல்வதா? நிர்வாகத்தைச் சொல்வதா? யாரேனும் அந்தக் கம்பத்தில் மோதி இறந்த பின்னர் அப்புறப்படுத்துவார்களோ? 🙁

  2. அருமையாக,ஒரு நிகழ்வின். விபரீதத்தை , எழுதப்பட்டுள்ளது

  3. அருமையாக,ஒரு நிகழ்வின். விபரீதத்தை , எழுதப்பட்டுள்ளது

அப்பாவின் டார்ச் லைட் (கவிதை) – ✍ கண்ணன், சேலம்

மண்ணுத்தாயி (சிறுகதை) – ✍ பெருமாள் ஆச்சி, சென்னை