in

வண்ணப்பெட்டி (சிறுகதை) – ✍ குணா, கோவை  

வண்ணப்பெட்டி (சிறுகதை)

ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

மாலை நான்கு மணி. மழை மெல்லத் தூற ஆரம்பித்து வேகமெடுத்தது. தூரத்து வானில் மின்னலுடன் கூடிய இடிச்சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. பெரிய  பள்ளத்தின் அருகில் சரிவான பகுதியில் கட்டப்பட்டிருந்தது அந்த குடிசை வீடு.

எப்பொழுது வேண்டுமானாலும் மழைநீர் வீட்டுக்கு வரலாம் என்ற நிலையில் அந்த குடிசை வீடு இருந்தது. வீட்டின் முன்புற விளக்குகள் எரிய தொடங்கின.

அந்த குடிசையின் கதவைத் திறந்து, சற்று தடித்த கருத்த தேகத்தோடு வெள்ளை புடவையில் வெளியே  வந்த வள்ளியம்மாள், “ஏம்புள்ள… மழை வேற பெருசா வருது, சீக்கிரம் அந்த கோணிச் சாக்கை எடுல” என்றாள்.

“போம்மா அடுப்புக்கு பக்கத்துல மட்டுமில்ல, எல்லா பக்கம்மும் ஒழுகுது. இருக்கிற சாக்கே பத்தல, நீ வேற சாக்கு கேட்கற, எங்க போறது” என்றாள் துளசி.

“ம்… இல்லைனா மட்டும் எடுத்து கொடுத்துடுவ பாரு, சோம்பேறிக் கழுத. மொதல்ல எந்திருச்சுப் போயி அந்த சாமி படத்துக்கு பக்கத்துல ஒழுகுது பாரு, அங்க எதாவது பாத்திரத்தை எடுத்து வை” என்று சொல்லி விட்டு வாசலுக்கு உள்ளேயே நின்று கைகளை மட்டும் வெளியே நீட்டி, மழையின் வேகத்தை ஆராய ஆரம்பித்தாள்.

“என்னை ஏதாவது சொல்லலினா உனக்கு தூக்கமே வராதே”  என்று சொல்லிக் கொண்டே பாத்திரத்தைத் துழாவினாள் துளசி. நேரம் செல்லச் செல்ல மழையின் வேகம் அதிகரிக்க தொடங்கியதே தவிர குறையவில்லை. வள்ளியம்மாளின் மனம் அதை விட வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.

வள்ளியம்மாளின் கணவர் ஆறுமுகம், ஒரு தள்ளு வண்டி வியாபாரி. வள்ளியம்மாளின் நகைகளை அடகு வைத்து வாங்கிய வண்டியில் காய்கறிகளை  தெருத்தெருவாக விற்றுக் குடும்பத்தை காப்பாற்றி கொண்டிருந்தார்.

அவருடைய வருமானமே அந்த குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக இருந்தது. ஆறுமுகமும் தன் குடும்பத்திற்காக ஓடி ஓடி உழைத்தான். அப்படி ஓடி ஓடி உழைத்ததன் விளைவோ என்னவோ, அந்த ஓட்டமே அவனுக்கு எமனாக அமைந்தது.

ஆம், கொரானாவால் குடும்பத்தில் உள்ளவர்களையும், வாழ்வாதாரத்தையும் இழந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் வள்ளியம்மாளின் குடும்பமும் ஒன்றாகிப் போனது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி இறந்தார். அதன்  பின், குடும்பத்தின் மொத்த பாரமும் வள்ளியம்மாள் மேல் விழுந்தது.

வள்ளியம்மாளின் ஒரே மகள் துளசி, பக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறாள். தற்போது பள்ளிகள் திறக்காத சூழலில், வீட்டில் இருந்து கல்வி கற்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேலும் கல்வித்  தொலைக்காட்சி  வாயிலாகவும் மாணவர்கள் கல்வியை கற்றுக் கொண்டிருந்தனர். ஆனால் வள்ளியம்மாள் வீட்டிலோ தொலைக்காட்சி பெட்டி  கிடையாது, பிறகெப்படி துளசி கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை கற்க முடியும்

மகளின் கல்வி வீட்டுச் சூழ்நிலை இரண்டும் சேர்த்து வள்ளியம்மாளை  நெறிக்க, வேறு வழியின்றி பக்கத்திலுள்ள இரண்டு மூன்று வீடுகளில் பாத்திரம் துலக்கியும், கிடைக்கும் வேலையை செய்தும், வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தாள்

மழை இன்னும் பெய்து கொண்டிருந்தது

“ஏம்மா… குழந்தை மாதிரி மழைத் தண்ணில கைய வெச்சிட்டு என்ன யோசிட்டு இருக்கற” என்ற துளசியின்  குரலை கேட்டு சுய நினைவுக்கு வந்தாள் வள்ளியம்மாள்.

“அதுவா… அது ஒன்னும் இல்ல, எல்லாம் உன்னோட படிப்ப பத்தி தான். இன்னும் ரெண்டு மூணு நாள்ல வேலை செஞ்ச காசு வந்துரும், வந்த உடனேயே ஒரு நல்ல டிவியா வாங்கிரலாம்”

“சரி சரி” என்று தலையை ஆட்டிய துளசி, தன் தாயின் முகத்தில் தெரிந்த பரிதவிப்பை உணர்ந்தவளாய், “என்னம்மா உடம்புக்கு ஏதாவது சரியில்லையா?” என்று கேட்டாள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா, இத இப்ப வந்துடறேன்” என்று சொல்லி தன் சேலை தலைப்பை தலையில் போட்டுக் கொண்டு மழையில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

இருந்த கொஞ்ச வெளிச்சமும் கருமேகங்களால் கபளீகரம் செய்யப்பட்டு இருள் சூழ்ந்தது. குடிசையை ஒட்டிய சரிவின் வழியாக இறங்கி பள்ளத்தினுள் நடக்க ஆரம்பித்தாள்.

மழை காரணமாக பள்ளத்தில் நீர் அவளுடைய கெண்டைக்கால் அளவு உயர்ந்திருந்தது. பள்ளத்தில் சற்று  தூரம் சென்றவள், திடீரென நின்று சுற்றிலும் பார்த்தாள். பின் குனிந்து எதையோ தேட ஆரம்பித்தாள்.

‘இங்க தானே பார்த்தேன், ரெண்டு நாளா இங்க தான் கெடந்துச்சு, எங்க போச்சுன்னு தெரியலயே?’ என்று அவசரமாக தேடிக் கொண்டிருக்க

“ஏன்மா உனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு? இந்த பள்ளத்தில அதுவும் இந்த இருட்டில என்னத்த  தேடிட்டு இருக்க?”  என்று திட்டிக் கொண்டே அங்கு வந்தாள் துளசி

“வா துளசி சீக்கிரம், நீயும் வந்து அம்மாவுக்கு கொஞ்சம் ஒத்தாசை பண்ணு” என்று துளசியை அழைத்தாள் வள்ளியம்மாள்.

துளசிக்கு கோபம் சுர்ரென்று ஏறியது

“நானும் பாத்துட்டு தான் இருக்கேன், அப்படி என்னத்த போய் தேடிட்டு இருக்க. புதையலா இருக்கு இப்படித் தேட?” என்றவளை  ஏறிட்டுப் பார்த்த வள்ளியம்மாள்

“புதையலா இருந்தால் கூட இப்படி தேட மாட்டேன், இது அதுக்கும் மேல”  என்று சொல்லிக் கொண்டிருந்த வள்ளியம்மாளின் கண்கள், எதையோ கண்டு அகல விரிந்தன

அந்தப் பள்ளத்தின் பக்கவாட்டுச் சுவரில் கசங்கிய ஒரு துணி மூட்டை கிடந்தது. வள்ளியம்மாள் உடனே ஓடிச் சென்று அந்த துணி மூட்டையை எடுத்துக் கொண்டாள்.

பள்ளத்தின் மேட்டுப்பகுதியில் நின்று கொண்டிருந்த துளசிக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் தன் தாயின் முகத்தில் தெரிந்த தெளிவு அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

மறுநாள் காலை துளசி எழுந்து பார்த்த போது, வீடு முழுவதும்  துணிகள் இறைந்து கிடந்தன. எல்லாம் அவளுடைய தந்தையின் பழைய துணிகள். இந்த துணிகள் எல்லாம் அவளுடைய தந்தையின் இறப்புக்குப் பின்பு மூட்டையாகக் கட்டப்பட்டு பள்ளத்தில் தூக்கி எறியப்பட்ட அதே துணிகள்.

இந்தப் பழைய துணிகளையா அம்மா நேற்று அங்கிருந்து எடுத்து வந்தாள். எதற்காக? ஏன்? என்று நிறைய கேள்விகள் துளசியின் மண்டையை குடைந்து கொண்டிருந்தன. ஆனால் எல்லாவற்றிற்கும் விடை வள்ளியம்மாளுக்கு மட்டுமே தெரியும் என்பது அவளுக்கு தெளிவாக தெரிந்தது.

அவள் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே கதவைச் சட்டென திறந்து கொண்டு உள்ளே வந்தாள் வள்ளியம்மாள்.

“த்தே சீக்கிரம் இந்த துணியெல்லாம் எடுத்து போடு”  என்று சொல்லி விட்டு கதவை இன்னும் அகலமாக திறந்து வைத்து விட்டு வெளியே ஓடினாள். துளசியும் பின்னாலேயே ஓடி வந்து பார்த்தாள்.

வீட்டு வாசலில் இரண்டு பேர் டெம்போவில் இருந்து கலர் டிவி பெட்டியை இறக்கி கொண்டு இருந்தார்கள்.

“பார்த்து பார்த்து மெதுவா மெதுவா இறக்குங்க” என்று பக்கத்திலிருந்து சொல்லிக் கொண்டிருந்த வள்ளியம்மாள், துளசியின் பக்கம் திரும்பினாள்.

“என்னமா பாக்குற, எல்லாம் உனக்காகத் தான் துளசி. எல்லாத்து வீட்டிலேயும் டிவி இருக்குது. எல்லா பிள்ளைகளும் அதை பார்த்து படிக்குதுக, ஆனால் எம் புள்ள மட்டும்…”  என்று சொல்லும் பொழுதே வள்ளியம்மன் குரல் கரகரத்து, கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

“அது சரிமா, இதெல்லாம் வாங்க காசு…” என்று இழுத்தாள் துளசி

பீறிட்டு வந்த அழுகையை சேலையால் அடக்கிக் கொண்டு பேச ஆரம்பித்தாள் வள்ளியம்மாள்

“உங்க அப்பன் என் நகை எல்லாத்தையும் வித்து தான் வண்டி வாங்கியிருக்கார்னு இது வரைக்கும் நெனச்சுட்டு இருந்தேன். ஆனா நேத்து வேலை செய்ற வீட்டு பக்கத்துல அவர் வண்டி கூடவே சுத்திட்டு இருந்த குப்புசாமியை பார்த்தேன். அப்பத் தான் அவர் சொன்னார்.

உங்கப்பா  நகைய விக்காம அடமானத்துல வெச்சி எல்லா பணத்தையும் வட்டியும் முதலுமாக கட்டியிருக்கிறாருனு. அவசரமா ஆஸ்பத்திரிக்கு போற அன்னைக்கு கூட, பணத்தை கட்டிட்டு தான் வந்திருக்காருனு குப்புசாமி சொன்னாரு.

பாவி மனுஷன் எந்த கஷ்டத்தையும் வாய் திறந்து சொல்ல மாட்டாரு, இதையும் சொல்லாம விட்டுட்டாரு. நல்லவேளை குப்புசாமி மூலமா தெரிஞ்சுது, அதான் அவர் சட்டை பைல இருந்த ரசீதை எடுக்க அவர் துணி மூட்டையை தேடி எடுத்தேன்” என்றாள் வள்ளியம்மாள்

அதைக் கேட்டதும், துளசி ஓடிச் சென்று வள்ளியம்மாவின் கால்களை இறுக கட்டி அணைத்துக் கொண்டு, “அம்மா எனக்கு ஞாபகம் தெரிஞ்சதிலிருந்து உன் கழுத்துல ஒரு பொட்டு நகையைக் கூட நான் பார்த்ததில்லைமா, எங்கே அந்த நகையை எனக்காக போட்டு காமிம்மா” என்று ஆர்வமாய் கேட்டாள்

“அடிப்போடி கிறுக்கு புள்ள, அந்த ரசீதை காட்டித்தா அந்த நகைக்கு மேல இன்னும் கொஞ்சம் கடன் வாங்கி உனக்கு இந்த டிவி பெட்டிய வாங்கி வாங்குனேன். ஒழுங்க படிச்சுக்கோ” என்று வெள்ளந்தியாக சிரித்தாள் வள்ளியம்மாள்.

“இன்று ஆறாம் வகுப்பில் நாம் பார்க்கப் போகும் தலைப்பு ‘பெண் கல்வியும் பெண்கள் முன்னேற்றமும்’” என்று வண்ணப்பெட்டியில் பாடங்கள் படங்களாக ஓடிக் கொண்டிருக்க, மனதில் உறுதியும் கண்களில் நம்பிக்கையும் மிளிர, அந்த டிவியையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாள் துளசி.

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. “Ezhaik kudumbangaLin veettuthalaivan mElulagam chenRa piRagu eppadippatta thunbanGaLai antha kudumbathaar anbavakkinRaarGaL enbathai azhaghaaga ‘GUNA’ enRa inthak chiRukathaiyin moolam kathaiyin aasiriyar chiththariththuLLaar. Ithap padiththa piRagu vaasaGarGaLukku nalla manaththeLivu ERpattaal athaRku inthach chiRu katai ezhuthiya “Kovai GuNa” avarGaLukkE pOich chErum. Avarukku nanRi.

    – “Mandakolathur Subramanian.”

    {Pl. bear my inability to write the message in Tamil now though I wish to do.}

குளறுபடி (சிறுகதை) – ✍ Writer JRB, Chennai

அப்பாவின் டார்ச் லைட் (கவிதை) – ✍ கண்ணன், சேலம்