டிசம்பர் 2021 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
‘இலவு காத்த கிளி’
இந்த பழமொழிக்கும் எனக்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு இருப்பதாகவே உணர்ந்தேன். இது ஏதோ சுயசரிதை அல்ல, என் வாழ்க்கையில் நடைபெறாமலே போன சில நல்ல விசயங்கள்
அதை சொல்வதற்கு முன் என்னை பற்றிய சிறு குறிப்பு.
வடிவேலு பாணியில் படிக்கவும் “இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாய்ங்க…”. அந்த அளவிற்கு இல்லையென்றாலும், ஓரளவுக்கு நல்லவன் தான், ரொம்ப கெட்டவனில்லை
அந்தந்த வயதில் நடைபெற வேண்டிய விசயங்கள் ஒருவனுக்கு / ஒருவளுக்கு நடக்கவில்லையெனில், அப்படிபட்ட ஒருவனை தான் நீங்கள் இப்போது படித்து கொண்டிருக்கிறீர்கள்
சராசரி உயரமும் அந்த உயரத்திற்கேற்றார் போல் உடலும், குறிப்பாக நல்ல வசீகரமான முகமும் உள்ளவன் தான் எனினும், என்னை பிடிக்காதென யாருக்கும் சொல்ல பிடிக்காது.
ஆனாலும் என்னை கடந்து சென்றவர்களில் பலர் என்னை திரும்பி பார்த்து செல்வதுண்டு. அப்போதெல்லாம் மனசுக்குள் ஒரு சின்ன சங்கீதம் சீழ்க்கையாய் அடிக்கும்.
ஆட்டம் ஆரம்பம் ஆயிற்று. எனக்கு அப்போது 2 வயதிருக்கும், எல்லோரை போல் நான் பேசவில்லை, ஊமையாய் சுற்றி திரிந்தேன். எனது தந்தையோ, எனது தாயாரின் உறவுகளில் யார் சிறுவயதில் ஊமையாய் திரிந்தார்கள் என புள்ளி விவரம் எடுத்து கொண்டிருந்தார்
குழந்தைக்கு பேச்சு வரவில்லை அது குறித்து யாரும் விசனபடவில்லை. ஆயினும் எனது அம்மா அளவு கடந்த பாசமாக தான் வளர்ந்தார்கள்.
ஒரு சமயம் பேச்சு வாக்கில் அம்மா, அப்பாவின் பரம்பரையில் தான் சிலருக்கு பேச்சு வரவில்லை என ஜாடையாக சுட்டிக் காட்ட, அம்மாவிற்கு அன்று மண்டகாபடி தான். அம்மா தன் விதியை நொந்தவாறே அழுது தீர்த்தாள்.
ஒரு வழியாக பேச்சு வந்தது நான்காம் வயதில். அதற்கு பிறகு தான் எனக்கு பெயரே வைத்தார்கள். அதுவரையில் ஏதோ வீட்டில் செல்ல பிராணிக்கு பெயர் வைப்பது போல் பேர் வைத்து அழைத்தார்கள்.
யார் அழைத்தாலும் செல்வதால் எடுப்பார் கைப்பிள்ளையானேன். என்னை எல்லோருக்கும் பிடித்தது என்று சொல்ல முடியாது. ஆனால் பிடித்ததால் அனைவரோடும் என்னால் இயல்பாய் இருக்க முடிந்தது
அப்பாவிற்கு வேலை பளு அதிகம் இருந்ததால் என்னை பள்ளியில் சேர்ப்பதற்கு ஆர்டலி வந்தார். என் அப்பாவிற்கு கீழே பணிபுரிவதால், அவரை அனுப்பி என்னை பள்ளியில் சேர்த்தார்கள்
அவருக்கு என்னுடைய பிறந்த தேதி வருடம் எல்லாம் தெரிந்தா இருக்கும். ஏதோ வாயில் வந்த தேதி வருடத்தை பள்ளியில் சொல்லி பெயரை சரியாக சொன்னதால் தப்பித்தேன்.
ஜெயராமன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டேன். எனது பள்ளியில் அனைவரோடும் என்னால் இயல்பாய் பழக முடியவில்லை. அய்யாத்துரை, திருப்பதி, வெங்கடாஜலம் இவர்கள் விதிவிலக்கு. அவர்களோடு தான் நான் விளையாடுவேன்.
அதிலும் குறிப்பாக ராமமூர்த்தி என்னோடு எல்லா நேரத்திலும் சுற்றி திரிவான். அவனுடைய தகப்பனாரும் காவல்துறையில் இருப்பதால், எனக்கு வசதியாகப் போனது
பள்ளிக்கு போகும் போதும் சரி, வரும் போதும் சரி, இருவரும் சேர்ந்தே தான் பயணிப்போம். அவனுக்கு என் மீது அலாதி பிரியம் உண்டு.
ஒருமுறை அவனுக்கு காலரா வந்த போது துடித்து போனேன். இப்போது அவன் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை.
சிறுபிராயத்தின் நட்பு தொடர் சங்கிலியாய் இருப்பதில்லை, சில சமயங்களில் அது பொய்த்து போகிறது. இது தான் ஆரம்பம்
நான் யார் கூடயேனும் கொஞ்சம் நட்பாய் பழக ஆரம்பித்தால் அவர்கள் நிரந்தரமாய் நீடிப்பதில்லை. இது ஒரு சாபமா என்று கூட நினைத்ததுண்டு. அவனது தகப்பனாருக்கு கமுதிக்கு மாற்றலானது. கமுதி கலவரபூமி என்று சொல்லி கேட்டத்துண்டு
எனக்கு பொறந்த ஊர் என்றால் அது மதுரை தான். மதுரையில் பிறந்தாலே மோட்சம் என கேள்வி. அதிலும் மதுரை சற்றே அழகான ஊர் தான்
நான்கு தெருக்கள் சுற்றி வந்தாலே மதுரை முடிந்து விடும். ஆனாலும் அந்த நான்கு தெருக்களை சுற்றி வருவதென்பது அவ்வளவு எளிதான விசயம் அல்ல.
ஆவணி மூல வீதிகள் மாசிவீதிகள் இப்படி மீனாக்ஷி அம்மனை சுற்றி சுற்றியே வீதிகள் அமைந்திருப்பது அழகு. வானிலிருந்து பார்த்தால் மதுரை மிக அழகாய் தோன்றும்.
சதுரமாய் அமைந்திருக்கும் தெருக்களாகட்டும், மத்தியில் நான்கு கோபுரங்களோடு அமைந்திருக்கும் மீனாக்ஷி கோயிலின் பிரம்மாண்டமாகட்டும், பெரியார் பஸ் நிலையம் அருகே இருக்கும் கிறிஸ்துவ ஆலயமாகட்டும், தைக்கால் தெருவில் இருக்கும் மசூதியாகட்டும், அனைத்துமே பெரியதாய் இருக்கும்
மதுரைக்காரன் என்பதில் சிலசமயம் கர்வமுண்டு. பாரதி பணிபுரிந்த பள்ளியில் என்னுடைய மேனிலை பள்ளிப்படிப்பை படித்து முடித்து விட்டு, பல சில சிரமங்களுக்கிடையே கல்லூரி வரையில் வந்துவிட்டேன்
நினைத்த படிப்பை தொடர முடியவில்லை, கிடைக்கவில்லை என சொல்ல முடியாது. எடுத்த மதிப்பெண் அப்படி.
மதுரை கல்லூரியில் இடம் கிடைத்தது. பொருளாதாரத்தை சிறப்பு பாடமாக ஆங்கில வழி கல்வியில் தொடர்ந்தேன். புரிந்தது போலும் இருந்தது புரியாத மாதிரியும் இருந்தது.
ஏதோ மந்திரிச்சி விட்ட கோழியாய் திரிந்தேன். அனைத்திலும் எனது பெயர் கொடுத்து வைத்தேன், NCC / NSS / SPORTS இப்படியாக. காரணம் extracurricular activities இருக்கனுமாம்.
அப்போது தான் வேலையில் சேரும் போது நமக்கு அதிகமாய் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என என் அண்ணன் திருவாய் மலர்ந்தான்
நான் தனி ஆள் கிடையாது. என்னோடு சேர்ந்து மொத்தம் 10 பேர் உடன் பிறந்தோர். ஆகையால் எல்லாமே எனக்கு மிக மிக தாமதமாக தான் கிடைத்தது
முதலில் பிறந்தது அக்கா கடைசியில் பிறந்தது தங்கை. ஆகையால் அந்த இருவருக்கு மட்டும் சலுகைகள் கொஞ்சம் அதிகம் தான். அதிலும் குறிப்பாக ஐந்தாவதாய் ஆண்மகவு என்பதால், எனது அண்ணனுக்கும் அந்த சலுகைகள் கிடைத்தது
என் நிலையோ சொல்லி தெரிய வேண்டியதில்லை. எப்போது மாறும் என தெரியாமலே வளர்ந்து விட்டேன்.
எனக்கு நேர் மூத்தவன் முரளி. எங்கள் இருவரையும் ஒரு சேர பார்ப்பவர்கள், எங்களை இரட்டை பிள்ளைகளோ என சந்தேகத்தோடு கேட்டு செல்வார்கள்
என்னை விட இரண்டு வயது அதிகம் அவனுக்கு. அந்த ஒரு விசயத்தை வைத்தே அவன் என்னை அவ்வபோது மிரட்டுவான், அதிகாரம் தூள் பறக்கும்
இதனால் அடிக்கடி சண்டை வரும், நடு இரவிலும் கூட. எங்களுக்கு அளிக்கப்பட்ட போர்வையின் நடுவே ஒரு கோடாய் தையல் போடப்பட்டு இருக்கும். தூக்க கலக்கத்தில் அவன் ஒருபக்கமாக இழுக்கும் போது, நடுவே இருக்கும் கோடு கொஞ்சம் அவன் பக்கம் போனால், இதற்காகவே காத்திருந்து சில இரவுகள் தூங்காமல் விழித்ததுண்டு
நான் எலும்பன், அவன் கொஞ்சம் சதை பிடிப்போடு இருப்பவன். ஆனால் அடி தாங்க மாட்டான். போர்வைக்குள்ளே எங்கள் இருவருக்கும் எல்லைப் போர் நடக்கும்.
கரிய இரவில் நீல விளக்கின் உதவியுடன் நான் செய்த நிழல்யுத்தம் அதுவாய் தானிருக்கும். அந்த இரவுகள் இனி திரும்ப கிடைக்குமா என எத்தனையோ முறை இப்போது ஏங்கி தவிக்கிறேன்.
ஆனந்தமான அந்த வாழ்க்கையில் எங்கள் கர்வம் இறுமாப்பு எதும் இல்லாது கள்ளம் (இது கொஞ்சம் சந்தேகம் தான்) கபடு இல்லாத பிள்ளைகளாய் சுற்றி திரிந்தோம்.
எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லி கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் இப்போது எனக்கு புரிந்தது. விசயத்துக்கு வா வா என மனம் அலை பாய்ந்தது
உலகில் என்னென்ன வேலைகள் உண்டோ அனைத்தையும் பார்ப்பது என்று முடிவெடுத்து விட்டேன். ஆனால் செய்யும் வேலைகள் எல்லாமே அல்பாயுசில் போனது
ஆனாலும் விக்கிரமாதித்தனின் வேதாளமாய் முயற்சித்து கொண்டிருந்தேன். சில சமயங்களில் வீட்டில் நடக்கும் விசேசங்களில் பிரத்யோகமாய் என்னை அழைத்து பேச சொல்வார்கள்
காரணம், அனைவரையும் சிரிக்க வைக்கும் மந்திரச் சொல் என்னிடம் உண்டு. அப்படி இருந்தும் என் வாழ்க்கையில் எதுவுமே எனக்கு பிடித்தமானதாய் நடக்கவில்லை.
திருமணம் மிகவும் தாமதமாய் நடந்தது, அதிலும் ஒரு குளறுபடி தான். எனது மனைவி வேற்று சாதிப் பெண். சாதி மதம் இனம் மொழி கடந்து ஏன் நாட்டை கடந்து (ராஜிவ் காந்தி இருந்திருந்தால் என்னை மெச்சியிருப்பார்), மலேசிய பெண்ணை திருமணம் முடித்தேன்.
வீட்டில் அண்ணன்களின் எதிர்ப்பை மீறி நடந்த திருமணம். என்ன பிரயோசனம்? கல்யாணமாகி அவள் மலேசியாவில் இருக்க நான் இந்தியாவில் சிருங்கார சென்னையில் இருக்க, வாழ்க்கை கைபேசியில் நடக்கிறது.
இன்றைய வரையில் நான் கன்னி கழியாத கல்யாணமானவன்.
இன்றைய தினத்தின் மிகப் பெரிய செய்தியாக அக்கம் பக்கத்தில் உள்ளோர் பேசு பொருளானது. ஆனாலும் எதை பற்றியும் கவலை படக்கூடாது என திட்ட வட்டமாக முடிவு எடுத்துவிட்டேன்
வயது கடந்து எனது வாழ்க்கை அந்தரத்தில் ஆடுகிறது. மலேசியாவுக்கு விமானம் ஏறும் ஒவ்வொரு முறையும், உயிர் ஊசல் குண்டாய் அங்குமிங்குமாய் போய் வருவது கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது
அதற்கும் வந்தது வினை. இதோ கடைசியாக கடந்த முறை போயிட்டு வந்ததோடு சரி. அவளும் மொத்தமாய் இந்தியாவிற்கு வந்து விடுகிறேன் என்று வாக்கு கொடுத்தாள். ஆனால் இன்று வரையில் அது நிறைவேறாமல் தான் இருக்கிறது
ஒரே ஒரு ஆறுதல், பக்கத்தில் இருந்து தொண தொணப்பு இல்லை. ஹாயாக என் இஷ்டத்திற்கு இருந்து வருகிறேன். என்னால் யாருக்கும் எந்தவொரு தொல்லையும் இருக்காதவாறு நடந்து கொள்வதில் சமர்த்தன்.
என்னை பொறுத்தவரையில் யாரையும் காயப்படுத்தாத வரையில் எல்லாம் நலமே. எல்லோரும் நல்லவரே, சிலரை பார்க்கும் போது மட்டும் மனதுக்கு எனது இயலாமையும், அதனால் சிறிது என் மேலே எனக்கு கழிவிரக்கம் வரும்
இப்படியெல்லாம் இருக்க ஆசை தான், ஆனால் அனைத்துமே கானல் நீராய் ஆகும் போது மனம் படும் வேதனையை யாரிடத்தில் சொல்லி அழுவது?
நனைந்து காய்ந்து போன என்னின் தலையணை சொல்லும் ஆயிரம் கதைகள். ஆண்கள் அழலாமா என கேட்பது புரிகிறது. ஏன் ஆண் அழுவதில் என்ன தவறு இருக்கிறது
உணர்வுகளும் உணர்ச்சிகளும் பெண்களுக்கு மட்டும் தானா? ஆண்களுக்கும் இருக்கிறது. எதையும் நுனிப்புல் மேய்ந்தால் இப்படி தான். கொஞ்சம் ஆழமாய் பார்த்தால் தான் புரியும் என் உணர்வுகளும் வறண்டு போன என் உணர்ச்சிகளும்
இப்போதெல்லாம் காதல் பாடல்கள் கேட்கவோ பாடவோப் பிடிக்கவில்லை. வேடதாங்கல் வரும் பறவைகள் கூட ஜோடியாக தான் வருகிறது. ஒருவேளை எனது வாழ்க்கையில் முதுமை தான் நன்றாய் இருக்கும் போலும்
வாழ்ந்து தான் பார்ப்போமே, கலங்கிய குட்டையில் தான் மீன் பிடிக்க முடியும். குழம்பிய மனது தெளிவாகும், குளறுபடிகள் சரியாகும் உலகம் கவித்துவமானது.
ஒவ்வொரு நொடியும் அடுத்து என்ன நடக்கும் என மலைக்க வைக்கும் நிகழ்வுகள் நடக்கும் வரையில் வாழ்க்கை சுவாரஸ்யமானாதே !
“சஹானா” சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் கதைகளை வாசிக்க, இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings