டிசம்பர் 2021 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாள் தாமரை. தன் மேல் கால் போட்டு ஒருக்கணித்து படுத்திருந்த குழலி, பார்க்க அப்படியே பாலாவின் முகம்
நடை, பாவனை, பேச்சு எல்லாம் அவன் சாயல். எப்போதும் போல் பழைய நினைவுகளில் மூழ்கினாள் தாமரை.
தாமரைக்கு பள்ளியில் படிக்கும் வரை, காதல் என்றால் தப்பு என்று வீட்டில் சொன்னவையே மனதில் ஒலித்துக் கொண்டிருந்தது. கல்லூரி வந்தவுடன் கொஞ்சம் எண்ணங்களில் மாற்றம். அவளுக்கும் கொஞ்சம் பட்டாம்பூச்சிகள் பறந்ததாக தோன்றியது
பாடல்களில் உள்ள அர்த்தங்கள் புரியத் தொடங்கியது. எதை வீட்டில் பேசலாம், பேசக்கூடாது என்பது தெரிந்தது.
‘மாமா மகன்’ என்ற உரிமையில் ‘பாலா’ விளையாட்டாய் வம்பு செய்த போது, வெட்கம் வந்தது. இதை வீட்டில் ஒத்துக் கொள்வார்களா என்று உள்ளூர பயம். தன் தோழி கண்மணியிடம் இதை சொல்ல, “இது இனக்கவர்ச்சி இந்த வயதில் இப்படிதான் தோன்றும்” என்றாள் அவள்
“இல்லை” என்று மறுத்தாள் தாமரை
“அப்ப இரண்டு வருடம் இதை பற்றி பேசாதே, அவரிடமும் சொல்லாதே” என்று சொன்னாள்
நானும் இரண்டு வருடம் இதை யாரிடமும் தெரிவிக்கவில்லை. கல்லூரி கடைசி வருடம் முடிக்கும் போது, நாங்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றோம்.
விளையாட்டாய் பேசிக் கொண்டு இருந்தோம். கண்மணியிடம் “இரண்டு வருடம் முடிந்து விட்டது, இப்போதும் எனக்கு அவர் மேல் விருப்பம் உள்ளது” என்றேன்
அவள் சிரித்து விட்டு, “சரி… நீ அவரிடம் பேசு” என்றாள்.
“இல்லை… அவராகவே சொல்லட்டும்” என்றேன்.
அவர் தன் தங்கையின் மூலமாக கேட்டார். எல்லாம் பேசி, சமாளித்து ஒரு வருடம் காத்திருந்து திருமணம் செய்தோம்
முதல் பரிசு எனக்கு புடவையும், “எண்ணங்கள்” புத்தகமும் தந்தார். அடுத்த பரிசு ஒரு ரோஜாவை திறக்கும் போது அது “ஐ லவ் யூ” என்று சொன்னது. அதில் ஒரு மோதிரம் இருந்தது. இப்படி நிறைய பரிசுகள்.
அவருக்கும் இசை, புத்தகங்கள் மீது நிறைய பிரியம். அவருக்கு ஜேசுதாஸ் என்றால் அவ்வளவு பிடிக்கும். திருமணம் செய்யும் போது அவர் ஒரு வீடியோ போட்டோ எடுக்கும் தொழில் செய்து வந்தார். படிப்படியாக முன்னேறி வந்தார்.
ஒரு கேசட் முழுவதும் ஒரு நாளும் உனை மறவாத எஜமான் பாடல் சேமித்து வைத்து இருந்தார். நான் கொஞ்சம் சுமாராக பாடுவேன். முன்பு என்னை பாடச் சொல்லி ரசிப்பார்
அழகிய நிலாக்காலம் அது. சில நினைவுகள் நம்மை வாழ வைக்கும். சில நேசங்கள் நம்மை உயிர்ப்பிக்கும். எதையாவது இழந்தது போல் தோன்றினால், நான் திருமண ஆல்பம் பார்ப்பேன். மனம் லேசாகி விடும்.
எங்கள் காதலின் பரிசாக வந்தாள் குழலி. என்னையும் பொறுப்பான அம்மாவாக மாற்றினாள்.
நினைவுகளில் கலந்தவள் எப்போது தூங்கினாள் என்று தெரியாது. நல்ல வெளிச்சம் வந்தவுடன் எழுந்தாள்.
சமையல் முடித்து, குழலியை எழுப்பி, பள்ளிக்கு கிளப்பினாள். தன் வண்டியில் குழலியை பள்ளிக்கு அழைத்து சென்றாள்.
பாலா குழலிக்கு இரண்டு வயதானவுடன் வேலை தேடி சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டான். இதோ மூன்று வருடம் சென்று விட்டது, இன்னும் வரவில்லை.
“தாமரை” என்று அழைத்தவாறே உள்ளே வந்தான் பாலா.
“தாமரை இங்க இல்ல, அவ அம்மா வீடு வரை சென்று இருக்கிறாள்” என கூறினாள் கண்மணி.
தாமரையின் அம்மா வீடும் இதே ஊரில் தான் இருக்கிறது. அவள் தன் தோழி கண்மணியிடம் வீட்டைப் பார்த்து கொள்ள சொல்லி போய் இருக்கிறாள். உடனே வந்துவிடுவேன் என்று கூறி சென்றதாக கண்மணி பாலாவிடம் கூறினாள்.
“அண்ணா… நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. உங்க கல்யாணத்தை நேரில் பார்த்தவங்க எல்லாரும் உங்க ஜோடிப் பொருத்தம் பார்த்து மூக்கில் விரல் வைத்து பேசினார்கள்”
“இப்ப மட்டும் என்ன?” என்றான் பாலா.
“நீங்க வேறொரு பெண்ணுடன் பழகறது அவளுக்குத் தெரியும் அண்ணா. பாவம் அவ எவ்வளவு அழறா தெரியுமா?”
“ … “
“சரி, நீங்க வந்ததா சொல்லி நான் அவளை கூப்பிட்டு வருகிறேன்”
தலையணை அடியில் அவள் எழுதி இருந்த நோட்டுப் புத்தகத்தில் இருந்த கவிதையை படித்தான் பாலா.
அன்பு பாலா,
காதலித்த போது
செய்த பிழை
எல்லாம் கவிதையானது
கல்யாணம் செய்தபோது
செய்கிற காதல்
எல்லாம் பிழையானது
அழைப்பின் மகிழ்வில்
செல்பேசி இருந்தது
உன் நெஞ்சில் நானும்
என் நெஞ்சில் நீயும்
அப்போது இருந்தோம்
பேசாமலே அலைபேசி
காதருகே மூச்சுசத்தம்
கேட்ட காலமது
அலைபேசி ஒலித்தால்
சொல்லு வேலையிருக்கு
என ஆரம்பிக்கும்
போதெல்லாம்
காதல் மட்டுமே
செய்து இருந்திருக்கலாம்
கல்யாணம் செய்து
காதலை தொலைத்த கதையை
எங்கேயும் கூற முடியாமல்
சொந்தங்களுக்கு நடுவே
ஆதர்ச தம்பதி
என பெயரெடுத்ததை
எண்ணி பெருங்காரணத்தோடு
சிரிக்கிறேன் நான்
தொலைத்த காதலை
தேடுவோமா நாம்
மகளின் நெற்றியில்
நீ முத்தமிடும் போதெல்லாம்
ஏதோவொன்று அடைத்திட
எழுதிக் கழிக்கிறேன்.
தீராக் காதலுடன்
தாமரை”
படித்து விட்டு அப்படியே வைத்தான்.
“வாங்க… எப்ப வந்தீங்க? இப்ப தான் போனேன். கண்மணி சொன்னவுடன் ஓடி வரேன். அம்மாக்கு உடம்பு சரியில்லை என்று போன் பண்ணினாங்க, அதான் போனேன். இருங்க… காபி போட்டு எடுத்து வரேன்” என்று அடுப்படிக்கு ஓடும் மனைவியை பாவமாக பார்த்தான் பாலா.
மகள் குழலிக்கு இரண்டு வயது ஆன போது, வேலை நிமித்தம் பிரிந்து சென்றவன் இப்போது தான் வருகிறான். குழலிக்கு இப்போது 5 வயது. பள்ளிக்கு சென்று இருக்கிறாள்.
காபியுடன் வந்த தாமரையை அருகில் உட்கார சொன்னான்.
“தாமரை… எனக்கு தெரியும், நான் இல்லாம நீ ரொம்ப கஷ்டப்பட்டு இருப்ப” என்றவனை இடைமறித்து
“குழலி தான் அப்பா எங்கே? என்று கேட்டுக் கொண்டே இருப்பாள். 4 மணிக்கு பள்ளியில் இருந்து வந்திடுவாள்” என பேச்சை மாற்றினாள் தாமரை
கிட்டத்தட்ட மூன்று வருடம் கழித்து வந்திருக்கிறான். இப்போது எதையும் பேசி குழப்ப வேண்டாம். குழலி வரட்டும், அவளுடன் அவன் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று யோசித்து, அவனைத் தவிர்த்து வேலையில் ஆழ்ந்தாள் தாமரை.
அவனுக்கு பிடித்த வெங்காய சாம்பாரும், முட்டைப் பொறியலும் செய்தாள்.
குழலிக்கு விளையாட்டு சாமான்கள் வாங்கி வந்திருந்தான். இவளுக்கும் புடவை, சென்ட் பாட்டில், தைலம் பாட்டில் எல்லாம் வாங்கி பெட்டியில் வைத்து இருந்தான்.
‘சிங்கப்பூரில் இவன் வேறொருப் பெண்ணுடன் நட்பில் இருந்தது தெரியும் என்று காட்டிக் கொள்ள கூடாது’ என்று நினைத்தாள் தாமரை.
பாலா, அவன் நண்பன் கண்ணன் வீட்டுக்கு சென்றான். நெடுநாள் கழித்து பார்த்த அவனை அன்புடன் வரவேற்றான் கண்ணன்.
“எங்களை எல்லாம் நியாபகம் இருக்கா? ஒரு போன் கூட பண்றது இல்ல” என்று கடிந்து கொண்டான்
“அதான் இப்ப வந்துட்டேன்ல, இனி தினமும் நேரில் பார்த்து பேசுவோம்” என்றான் பாலா
சிங்கப்பூரில் அவன் வேலை பார்த்து வந்த கம்பெனி நஷ்டம் அடைந்து மூடப்பட்டதாக கூறினான்.
“அங்க உனக்கு வேற பொண்ணு கூட பழக்கம் என்று கேள்விப்பட்டேன்” என்றான் கண்ணன்.
மறுக்க முடியாமல் தலை குனிந்து உட்காருந்திருந்தான் பாலா.
“காசு இருந்தப்ப கூட இருந்தா… காசு போனவுடன் வேண்டாம்னு சொல்லிட்டா” என்றான்
“சரி போனது சனின்னு விட்டுத் தொலை. இங்க தாமரையும், குழலியும் உனக்காகவே இருக்கிறார்கள்”
அவனிடம் விடைபெற்று, வீட்டுக்கு வந்தான். தாமரை தலைகுளித்து, ஊதா நிற சேலை அணிந்து இருந்தாள். அதற்கு பொருத்தமாக ஊதா நிற ரவிக்கையும் போட்டு இருந்தாள். அவள் அறியாமல் அவளை ரசித்தான்.
‘ஓடி ஓடி காதலித்தோம், பொருளாதார சிந்தனையில், கெட்ட சகவாசத்தால் இத்தனை நாள் கவனிக்காமல் இருந்து விட்டேன்’ என வருந்தினான்
“வந்துட்டீங்களா? வாங்க சாப்பிடலாம். ரொம்ப நாள் கழித்து நாம சேர்ந்து சாப்பிட போறோம்” என்று கூறி சாப்பாட்டை எடுத்து வந்தாள்.
இருவரும் அமைதியாக சாப்பிட்டனர். சாப்பாடு பற்றி எப்போதும் பாராட்டி சொல்ல மாட்டான், தாமரையும் ஒன்றும் கேட்கவில்லை.
“கொஞ்சம் ஓய்வு எடுங்க” என அவள் விலக
‘தாமரைக்கு எல்லாம் தெரிந்தும் நம்மிடம் எதுவுமே கேட்கவில்லை. அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என நினைத்தான்.
சற்று நேரத்தில் அப்பா வந்திருப்பதாக குழலியிடம் கூறி, அழைத்து வந்தாள் தாமரை.
“எப்ப அம்மா வந்தார்? நீ ஏன் முன்னாடியே எனக்கு சொல்லல? இனிமே இங்க தான் இருப்பாரா? தினமும் வண்டியில் அவர் கூட தான் ஸ்கூலுக்கு போவேன்” என்று ஏதேதோ பேசிக் கொண்டே வந்தாள் குழலி.
வீட்டுக்குள் நுழைந்தவுடன் “அப்பா” என்று கத்திக் கொண்டே ஓடினாள்
அவனும் ஓடி வந்து “செல்லக்குட்டி” என்று தூக்கிக் கொண்டான்
இரண்டு கன்னங்களிலும் முத்தமழை பொழிந்தான். இருவரும் இதுவரை பேசாத அத்தனை கதைகளையும் பேசித் தீர்த்தார்கள். இரவில் அவன் மடியிலேயே தூங்கினாள் குழலி
“நான் அங்கே எல்லாத்தையும் முடித்து விட்டு வந்துட்டேன் தாமரை. இங்கே தான் தொழில் தொடங்கனும்” என பாலா கூற
“இப்ப தான் எனக்கு நிம்மதியாக இருக்கு. பழசு எதுவும் பேச வேண்டாம், உங்கள் தோள் திரும்ப கிடைத்ததே போதும்” என்றாள் தாமரை
அப்படியே பூப்போல் அவளை அள்ளி கைகளில் ஏந்தி, நெற்றியில் முத்தமிட்டான். “என்னை மன்னித்துவிடு” என்று கண்ணீர் விட்டான்.
எப்போதும் அவளுக்கு பிடித்த பாடலை முணுமுணுத்தாள்
“வசந்தங்கள் வாழ்த்தும் போது உனது கிளையில் பூவாவேன்,இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்”
நாட்கள் ஓடியது. பாலா தொழில் தொடங்கினான். பாலாவுக்கும், தாமரைக்கும் திருமணமாகி இன்றோடு பதினாறு வருடம் முடிந்து விட்டது. குழலி பத்தாம் வகுப்பு படிக்கிறாள்
தாமரை தன் டைரியில் இவ்வாறு எழுதினாள்…
‘தனிமையான நேரங்கள் கிடைப்பது அரிது ஆன போதிலும், குழந்தை, தொழில் என்று பல முன்னேற்றம் வந்த போதிலும், நிறைய விட்டுக் கொடுத்தல், உடல் கோளாறு எல்லாம் பழகிய போதும், உந்தன் ஒற்றை புன்னகை என்றும் என்னை வாழ வைக்கும், ஆள வைக்கும்
நமக்காக மட்டுமே ஒரு ஜீவன் இருக்கிறது, அது நம்மை நேசிக்கும், நமக்காவே உழைக்கும் என்பது தான் திருமண வாழ்வில் உன்னதம். நான் துவளும் நேரம் இறுக்கி பிடித்த கைகளில் உன் அன்பை சொல்லி விடுவாய்!
சில குறைகள், பல நிறைகள் கலந்தது தான் வாழ்க்கை. என்னுடைய குறைகளை அவர் அனுசரித்தும், அவருடைய குறைகளை நான் அனுசரித்தும் தான் வாழ்கிறோம். எங்கள் திருமணம் புதுப்புது அர்த்தங்களைத் தருகிறது!
என் உறவுகளின் மொத்தமாக அவர் இருக்கிறார். சில சுதந்திரம் இழந்து இருக்கிறேன் உண்மை தான்
தீராக்காதலுடன்
தாமரை
ஆமாம்… காதல் என்றும் தீர்வதில்லை. அது கொடுக்க, கொடுக்க ஊற்றெடுக்கும் அட்சயப்பாத்திரம்!
“சஹானா” சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் கதைகளை வாசிக்க, இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
தீராக் காதல்,ஆசிரியர், ஜெயா சிங்காரவேலு, கரூர்.
அடடா என்ன ஒரு அற்புதம்.என்னங்க ரொம்ப அனுபவிச்சி எழுதி இருக்கிங்க போல இந்த சிறு கதை.
அவ்வளவு அழகான அற்புதம் கண்டேன் கதையில்.எனக்கு வாசித்த உடன் ,உடைந்து அழத் தோன்றியது.ஏனென்றால் இதேக் காரணங்களால் எத்தனை மணங்கள் உடைந்து மனங்களும் உடைந்து மரணங்களை தழுவிக் கொள்கிறது பெண் எனும் பூக்கள்.சருகாக காய்ந்தும் அல்லவா உதிர்த்து.விடுகிறது. என்னவோ தெரியவில்லை தோழி இக்கதைக்கு பரிசு கொடுத்திருக்கலாம் என்பது என் எண்ணம்.அத்தனை ஆழமான தீர்க்காதல்..நட்புடன் எழுத்தாளர்.ஆர்த்தி.