in , ,

திருத்தெள்ளேணம் (நாவல் பகுதி 5) – பாலாஜி ராம்

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

மரம், செடி, கொடி என்று எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று காணும் மலை. 4000 அடிக்கும் மேல் உயரம் கொண்ட கம்பீரமான மலை. மாய, மந்திர, தந்திர வித்தைகள் எல்லாம் அரங்கேறும் மலை. காணும் இடமெல்லாம் அஷ்டாமா சித்து வேலை செய்யும் சித்தர்களும், தவம் புரியும் முனிவர்களும் சூட்சும உருவில் வலம் வரும் மலை.

அமானுஷ்யத்திற்கும் மர்மத்திற்கும் பெயர் போன மலை. காவல் தெய்வம் கொல்லிப்பாவையால் பாதுகாக்கப்படும் மாபெரும் மலை தான் கொல்லிமலை. அந்த மலையின் அடிவாரத்தில் தான் எங்கள் குடும்பம் வசித்து வந்தது.

பிறந்த உடனேயே பெற்ற தாயைப் பறிகொடுத்த இந்த பாவியை என் தந்தை, தாய் இல்லாத குறையை தெரியாமல் என்னை சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தார். போன ஜென்மத்தில் செய்த ஊழ்வினையோ தெரியவில்லை, நான் பருவம் அடைவதற்கு முன்னே பாதுகாப்பாய் இருந்த எனது தந்தை, தாய் சென்ற இடம் நோக்கி சென்று விட்டார்.

கடைசியாக எனக்கு இருந்த ஒரே ஆதரவு எனது தாத்தா தேவராசன் தான். என் தாத்தா என் தந்தையை விட என்னை பல மடங்கு கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார். உண்ணும் உணவிலும், உடுத்தும் உடையிலும், அணியும் நகையிலும், சொல்வாக்கிலும், செல்வாக்கிலும் எந்த ஒரு குறையில்லாமல் என்னை வளர்த்து வந்தார். இருந்தாலும், அவர் மனதில் ஒரு பெருத்த குறை ஒன்று உளவிக்கொண்டிருந்தது.

அவருக்கு பின்னால் என்னை யார் பார்த்துக் கொள்வார் என்ற குறை தான். இந்தக் குறைக்கு தீர்வு காண அவர் ஒரு முடிவு எடுத்தார். எனக்கு 15 வயது கூட முழுமையாக நிரம்பவில்லை, இருப்பினும் திருமணம் செய்ய வரன் தேட ஆரம்பித்தார். இந்த நிலையில் தான் கொல்லிமலை உச்சியில் தவம் செய்வதற்காக மகா சித்தர் ஒருவர் சென்று கொண்டிருந்தார்.

கொல்லிமலை அடிவாரத்திலிருந்து உச்சிக்கு செல்ல வேண்டும் என்றால் எங்கள் வீட்டை தாண்டிதான் செல்ல வேண்டும். அவர் எங்கள் வீட்டை நோக்கி நடந்து வந்தார். அந்த நேரம் அதிகாலை என்பதால் வாசல் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்தேன்.

யாரோ வருவதை உணர்ந்த நான் நிமிர்ந்து பார்த்தேன். பரந்த நெற்றியில் சீராக பூசப்பட்ட திருநீறு, ருத்ராட்ச மாலையால் அலங்கரிக்கப்பட்ட கழுத்து, அந்த ஈசனைப் போல காணப்பட்ட சடாமுடி, எளிமையான காவியுடை என இவையெல்லாம் ஒருங்கே அமையப்பெற்ற மகாசித்தர் என்னை நோக்கி நடந்து வந்தார்.

அவர் என்னை நெருங்கி வர வர என் ஐம்புலன்கள் தன் வேலைகளை மறந்து அடங்கி போயின. மனதிற்குள் ஆழ்ந்த அமைதி நிலவியது. கண்களிலிருந்து நீர் பெருகி ஓடியது. அவரை இரு கரங்கள் கூப்பி வணங்கி நின்றேன். 

என் அருகே வந்த அவர் என்னை பார்த்து, “வித்யா காத்திருக்கிறாள்… கரம் கொடுக்க நான் இருக்கிறேன்… கலங்காமல் காளியிடம் வா…” என்று சொன்னவர் ஒரு நொடி கூட நிற்காமல் வேகமாக சென்றுவிட்டார்.

அவர் சொன்னது எனக்கு சாதாரண வார்த்தையாக தோன்றவில்லை தெய்வத்தின் வேதவாக்காக தான் தெரிந்தது. சிறிது நேரம் மெய் மறந்து போன நான் அவர் போன திசையை திரும்பிப் பார்த்தேன் என்ன மாயம் என்று தெரியவில்லை கண் எட்டிய தூரத்திற்கு அவரை காணவில்லை. 

உடனே வேகமாக வீட்டிற்குள் சென்று தாத்தாவிடம் நடந்தவற்றையெல்லாம் கூறினேன். சிறிது நேர ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு, “சித்தர்கள் எல்லாம் தெய்வத்திற்கு சமமானவர்கள் அவர்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தைகளும் அதிசக்தி வாய்ந்தது. அவர்கள் கூறும் வார்த்தையை புரிந்து கொள்ளும் சக்தி நம்மிடம் ஏதம்மா… இன்று பூரண பௌர்ணமி நாகங்கள் கொல்லிமலை உச்சியில் வீற்றிருக்கும் சிவனுக்கு குடை பிடிக்கும் நாள். இந்நாளில் நமக்கு உறுதுணையாக இருக்கும் அந்த நாகதேவி ஆலயத்திற்கு சென்று வந்தாள் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும். அது மட்டும் இல்ல, அந்த சித்தர் சொன்ன கடைசி வார்த்தை காளியிடம் வா என்று தானே சொன்னாய், நாக தேவியின் கோவிலுக்கு கிழக்கு திசையில் உள்ள கொல்லிப்பாவை என்று எல்லோராலும் போற்றப்படும் எட்டுக்கை காளி கோவிலுக்கு செல்வோம், நிச்சயம் சித்தர் சொன்ன வார்த்தைக்கும் உன் எதிர்காலத்திற்கும் ஒரு தெளிவு கிடைக்கும்” என்றார். 

என் தாத்தா சொன்னபடியே நாங்கள் இருவரும் காலை கதிரவனின் ஒளி கீற்றுக்கள் பரவும் வேளையில் பூஜைக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு கொல்லிமலை உச்சியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அரைமணி நேர நடை பயணத்திற்கு பிறகு எங்கள் காவல் தெய்வம் நாகதேவி சன்னதியை அடைந்தோம். பசும் பாலும், முட்டையும் வைத்து நாகதேவியின் மனதை குளிர வைத்தோம்.

பிறகு, அங்கிருந்து கிழக்கு திசையில் உள்ள கொல்லிப்பாவை ஆலயத்திற்கு நடக்க ஆரம்பித்தோம். கொல்லிப்பாவை ஆலயத்தை நாங்கள் அடையும் போது உச்சி வேலை ஆகிவிட்டது. கொல்லிப்பாவையின் எதிரே அமைக்கப்பட்டு இருந்த அவளின் சூலாயுதத்திற்கு முன் ஒரு சூடத்தை ஏற்றிவிட்டு, கொல்லிப்பாவை சன்னதிக்குள் நுழைந்தோம். 

“ஆண்டு ஆண்டு காலமாக கொல்லிமலையில் காவல் புரிபவளே! காளியே… சூலியே… அன்று மன்னர்களின் வெற்றிக்கு துணை போனவளே! இன்று எங்களுக்கு துணையாக வா…” என்று என் தாத்தா கொல்லிப்பாவையை அழைத்தார். அந்த நேரத்தில் கணீர் குரலில் பயங்கரமான சிரிப்பு சத்தம் கேட்டது. 

“வித்யா காத்திருக்கிறாள்.. கரம் கொடுக்க நான் இருக்கிறேன்…” என்ற சித்தனின் வாக்கு அசரீதியாய் ஒலித்தது. 

“தாத்தா… தாத்தா… இது அந்த சித்தரின் குரல் தான், இது அவர் சொன்ன வார்த்தை தான், அவர் இங்கே தான் இருக்கிறார்” என்று கூறி கொண்டே சுற்றும் முற்றும் தேடினேன்.

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    திருத்தெள்ளேணம் (நாவல் பகுதி 4) – பாலாஜி ராம்

    தடாகத்தின் அழகு…! (சிறுகதை) – பிரபாகரன்.M