in

திரிவேணி சம்சார சங்கமம் (சிறுகதை) – ✍ Dr.K.BALASUBRAMANIAN. MD, Chennai

திரிவேணி சம்சார சங்கமம் (சிறுகதை)

ஜூலை 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ருசக்கர வாகன விபத்தில் சிக்கி, ஆம்புலன்ஸ் ஊர்தியில் பேச்சு மூச்சற்று கிடக்க, அதன் சைரன் மரண ஓலத்தின் இடையே, அவன் வீட்டு எண்ணுக்கு?? (அவன் பர்ஸில் இருந்து எடுத்த விசிட்டிங் கார்டில்  இருந்தது) அலைபேசி அழைப்பு பறக்கிறது…

போனை  எடுத்த  அந்த பெண், “எஸ் சுசர்மி ஸ்பீக்கிங்! என்னது.. விபத்தா? யாருக்கு? என்ன மலர் மருத்துவமனையில சேத்திற்கீங்களா? ஓ அப்டியா..! சரி சரி அதுக்கு என்ன இப்போ? இங்க ஏன் கூப்புர்ரீங்க? ஃபீசோ.. பில்லோ.. எதுவும் எங்களால கட்ட முடியாது. அவன் ஒரு வெப்பாட்டி வச்சிருக்கானே பானுன்னு அவளை கூப்ட்டு சேதி சொல்லுங்க..!  எனக்கும் அவனுக்கும் பந்தம் அறுந்து பல வருசம் ஆச்சி…அவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன? என்ன? அவளோட போன் நம்பரா.. அதெல்லாம்  எனக்கு தெரியாது” என கூறி பட்டென்று ஆத்திரத்துடன் போனை கட் பண்ண…

அவள் பேச்சில் வன்மம், வஞ்சனை, வக்கிரம் அதிகமாக… இல்லை மிக மிக அதிகமாகவே கலந்திருந்தது! அவளுள்  வெற்றி களிப்புடன்.. ஒரு புன்சிரிப்பு பூத்து மறைந்தது!

ஹிஸ்ட்ரி புக் படித்துக் கொண்டே, இதை கேட்டுக் கொண்டிருந்த அவள் 14 வயது மகள் அம்பை, கண்ணில் முட்டிய நீருடன் தாயின் முகம் தவிர்த்து அழுகையை அடக்க  அரும்பாடுபட… 

அவளோ சட்டென்று மகள் பக்கம் திரும்பி, “என்னடீ! அப்பன் பாசம் அதிகமாகி.. அப்டியே பொங்கி வழியுதோ?” என அவளை ஒரு கொடூர முகத்துடனும் தீர்க்கமாய் முறைக்க, அதன் உஷ்ணம் தாங்காமல் டக்கென… டாய்லட்டுக்குள் நுழைந்து  தந்தையை நினைத்து , சத்தம் காட்டாமல் விம்மி விம்மி கண்ணீர் சிந்துகிறாள்! 

அவள் அப்பாவி அப்பாவின்… நினைவுகள் அவளை மேலும் மேலும்  வருத்த …வாய்விட்டு ஓவென்று அழவேண்டும் போல் இருந்தது அம்பைக்கு!

தனக்கு 8 வயதிருக்கும்போது திடீர் என்று  நிற்காமல் வயிற்று வலியுடன் வாந்தி எடுக்க… அப்பா அவளை பூப்போல் வாரி அணைத்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்று, “உயிரை காக்க உடனே அப்பெண்டிக்ஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்” என டாக்டர்கள் அறிவுறுத்த…

‘ஊசி போடவே பயந்து அழுது அடம் பிடிக்கும், என் மகள் இதை எப்படி தாங்குவாள்?’ என்ற நினைவால்… திகிலுற்று…மகளை தேற்றி ஆறுதல் கூறி … அவள் பூரண குணம் அடையும் வரை  …அன்ன ஆகாரம் இன்றி, தூக்கமின்றி… தன்னை அணைத்தபடியே இருந்து… சிரிப்பு காட்டி! கதைகள் சொல்லி! தன்னை காப்பாற்றிய அப்பாவை !!…

அவளை திட்டாமல் அடிக்காமல், பாடம் கற்பித்து ..அனைத்து போட்டிகளிலும் அவளுக்கே..முதல் பரிசுகள் பெற்றுத்தந்து..  ஏதோ தானே ஜெயித்தது போல்.. மகளை தலையில் தூக்கி… தட்டா மாலை சுற்றி… மகிழும் தன் அப்பாவை!!…

 அரை மார்க்கு ..விட்டுபோனாலும் மிஸ்ஸிடம் சண்டைப்பிடித்து… அதை வாங்கி கொடுத்து…முதல் ரேங்க் பெற்று தரும்… தன்னை உயிரினும் மேலாய் நேசித்த தன் ஆருயிர் அப்பாவை!!… நினைத்து நினைத்து!! அழுகிறாள்!

5 ஆண்டுளாய் பிரிந்திருக்கும்… தன் அப்பாவின், சாந்தமான சிரித்த முகம் அவள் கண்முன் தோன்ற… அவள் கேவல் சத்தம், கட்டுக்கு அடங்காமல் போயிற்று…!

“எய் சனியனே! என்னடீ பண்ணின்றிக்க பாத்ரூம்ல!” என்ற தாயின் அதட்டல் கேட்டு, அத்தனை சோகத்தையும் கூட்டி விழுங்கி.. முகம் கழுவி “இதோ வந்துட்டேம்மா!” என்று குரல் மாற்றி, சகஜநிலைக்கு திரும்ப, பிரம்ம பிரயர்த்தனம் பண்ணினாள்… அந்த அபலை சிறுமி…

“இன்னா அழுதையா?” என முறைத்த தாயிடம்.. “இல்லம்மா” என ஈனஸ்வரத்தில் கூற.. 

“சரி சரி! அப்பா கூட போய் .. நேற்று தைக்க கொடுத்த யூனிபார்ம வாங்கிண்டு வா!” என ஆணையிட்டாள் !

இந்த தடியன் எனக்கு அப்பாவா? அவன் மூஞ்சும் மொகரகட்டையும். அவன் என் எதிரிலேயே என் அம்மாவை கட்டி அணைத்து முத்தம் கொஞ்சுவதை பார்த்தால் எனக்கு வெறுப்பும் அழுகையும் வரும்! அவன் என்ன கண்ட கண்ட எடத்ல தொட்ரத இந்த ராட்சஸி கிட்ட சொன்னா, பாசண்டி! அன்புடி..! என்பாள்.. இந்த விவஸ்த கெட்டவ

அதையும் மீறி எதிர்த்து பேசினால்.. மிருகத்தனமா தாக்குதல் நடத்துவா..! சே! இந்த நரகத்ல இருக்கர்த விட செத்துபோறதே மேல்! என நினக்கும் தருணங்களில்…  தன் தந்தை என்றாவது ஒருநாள் நிச்சயம் வந்து தன்னை கூட்டி செல்வார்- என்ற திடமான நம்பிக்கை கொண்டு, அவள் தன் மனதை மாற்றி கொள்வாள்.! 

அவள்  தன் நினவுகளை.. மேலும் சிலபல ஆண்டுகள் பின்னோக்கி செலுத்தினாள்!

தன் மகிழ்ச்சி, எழுச்சி, அன்பு, பாசம், நேசம் கனவு அனைத்தும், 5ஆண்டுகளுக்கு முன் …..

குடும்பநல நீதிபதியான அந்த வயதான அம்மையாரிடம், அவள் “எனக்கு அப்பாதான் வேணும்! அம்மா வேணாம்.!!.. என்ன எங்க அப்பாகிட்ட இருந்து பிரிச்சிடாதீங்க. பிளீஸ் பிளீஸ்” எனகெஞ்சி கூத்தாடி அழுது புரண்டு, தன் அப்பாவின் கால்களை அழுத்தமாக கட்டி பிடிச்சி கதறி அடம்பிடித்தவளை….    ஈவிரக்கமின்றி வலுக்கட்டாயமாக பிரிச்சி…

“பெண் குழந்தைகள்… அவர்கள் மேஜர் ஆகும் வரை தாயிடம் வளர்வதே சாலச்சிறந்தது!” என்று அந்த நீதியரசர்(அரசி)

தத்துவம் பேசி உத்தரவு பிறப்பித்த அந்த நொடியில், எல்லாமே … வானவில்  வண்ணங்கள் போல்  அந்த பிஞ்சு மனதில் இருந்து மறைஞ்சு போச்சி….!

ஒருநாள்…. அவளுக்கு 9வயது இருக்கும்போது, தன் டேடி (அப்பாவை டேடி, என்று செல்லமாக அழைப்பது அவள் வழக்கம்) அவர் கல்லூரி தோழி “பானு”வை.. அகஸ்மாத்தாக சந்தித்ததை, தன் தாயிடம் “அப்பா, நானு, அப்பா கிளாஸ் மேட் ஆண்டி… மூணு பேரும் சரவணபவன் ஓட்டலில், டிஃபன் சாப்பிட்டோம் அம்மா” என வெள்ளந்தியாய் ஒரு நாள் சொல்லப் போய்…  அன்று ஆரம்பித்தது, அவர்களுக்குள் சந்தேக பிணக்கு ….

அது நாளொரு சண்டையும் பொழுதொரு  சச்சரவுமாய், காட்டுதீ …போல் அதிகரித்து! அதிகரித்து! இறுதியில் விவாகரத்தில் சோகமாய் முடிந்தது,..!

 இதை அம்மாவிடம் ஏன் தான் சொன்னோமோ..? என ஒவ்வொரு நாளும் வருந்தி வருந்தி! தன்னை தானே நொந்து கொள்வாள் அவள்!

சுசர்மி… ஆத்திரம், அகங்காரம் அச்சமின்மை.. மிக மிக அதிகம் கொண்டவள்….

பணக்கார தந்தையின் ஒரே மகளாய் பிறந்து, சமாதானம், சகிப்புதன்மை, மறத்தல், மன்னித்தல் போன்ற சொற்களின் அர்த்தத்தை சற்றும்   விளங்கிகொள்ள, சந்தர்ப்பமே கிட்டாத, ஒரு வாழ்க்கை சூழலில் வளர்ந்த அவளால்… ஒரு சிறு ஏமாற்றத்தை கூட தாங்கிக்கொள்ள இயலாத சுயநல சந்தேக பிராணியாய் மாறியதில், எந்தவித வியப்பும் இல்லை.!

கர்ணா – அவளிடம் தன் கல்லூரி தோழியான பானுதான் தன்னை விரும்பியதாகவும்! தான் அவளிடம் அந்த கண்ணோட்டத்தில், என்றுமே பழகியதில்லை! எனும் உண்மையை, எவ்வளவு சொல்லியும்.. எத்தனை தெய்வங்கள் மேல் சத்தியம் செய்து கொடுத்தும்… அவள் கேட்காமல்.. அவனை நம்பாமல் அலட்சியம் செய்து… அவனிடம் இருந்து விவாகரத்தை தன் தந்தையின் உதவியுடன் வலுக்கட்டாயமாக வாங்கி கொண்டு விட்டாள்…! 

ஒரிரு மாதங்களில் தன்னுடன் பணிபுரிந்த “அர்ஜுன்” என்பவனை மறுமணம் செய்து கொண்டு…. கர்ணாவை…பழிக்கு பழி வாங்கி விட்டது போல் பெருமிதம் கொண்டாள்…!!

பாவம்… ஏதும் அறியாத, அந்த அப்பாவி சிறுமியையும், ஒழுக்கத்தில் சொக்க தங்கமான கர்ணாவையும்… பிரித்து , அவர்களை ஒரு சேர.. சோகக்கடலில் மூழ்கடித்தாள்!

மாதம் ஒருமறை மகளிடம் பேச அனுமதி அளித்து,  கோர்ட் உத்தரவிட்டு இருந்தும்.. அதை அலட்சியம் செய்து… நிரந்தரமாக அப்பனையும் மகளையும் பிரித்து களிப்புற்றாள்! 

கர்ணா தன் மகளை காண்பதற்கு எடுத்துக் கொண்ட எல்லா முயற்சிகளையும் முறியடித்து, அவனை  கெட்ட வார்தைகளால் வைதும், ஸ்பஷ்ட்டமாய் முகத்தில் காரித் துப்பியும்.. அவமானப்படுத்தியும் அகமகிழ்ந்தாள்..

பாவம் மெத்தாதி மனம் கொண்ட சாதுவான கர்ணா.. துயரமே உருவாய் மெலிந்து களையிழந்து ஒடுங்கிபோக.. அவன்  போராதகாலம் இன்று விபத்தில் வேறு சிக்கி… உயிருக்கு எமனுடன் போராடி கொண்டிருந்தான்.

அம்பை, இரவெல்லாம தூக்கமின்றி தந்தை நினைவில்…  அவன் இறந்துவிடுவது போலவும், அவன் உடலை ஊர்வலமாக எடுத்து செல்வது போலவும்.. கெட்ட கெட்ட கனவுகள் பல கண்டு… விழித்து கொண்டு வெகுநேரம் அழுது கொண்டே அமர்ந்திருந்தாள்….

மறுநாள் காலையில், ‘மலர் மருத்துவமனைக்கு சென்று தன் தந்தையை கண்டே தீருவது’ என முடிவு செய்து, பள்ளிக்கு செல்வது போல் டிமிக்கி காட்டிவிட்டு, அந்த மருத்துவமனைக்குதன் உற்ற தோழி வத்சலாவுடன் சென்று அவசர சிகிச்சை அரையில்… தாடிமீசையுடன், ஒல்லியாய் கிழிந்த துணி போல் துவண்டு, பேச்சு மூச்சற்று  களையிழந்து பல மருத்துவ உபகரணங்கள் உதவியோடு எமனுடன் போராடிக்கொண்டு இருந்த தன் அப்பாவின் முகத்தை கண்டு ஓவென்று கதறியழ,… 

அவர் மகள் என்று அறிந்த வார்டு  நர்ஸ்…இவளை தேற்றி ஆறுதல் கூறி… “ஏனம்மா இவரை தேடி யாருமே இதுவரை வரவில்லை! இன்னும் 24 மணி நேரம் கழித்து தான் எதையும்  உறுதியாக சொல்ல முடியும்! உன் அம்மாவை கூட்டிகொண்டு வா..  பில் பணம் வேறு கட்டவேண்டியிருக்கு..! நானும் உனக்காக சேசுவிடம் பிரார்த்தனை செய்கிறேன்! நிச்சயம் அவரை, பரமபிதா! கைவிடவே மாட்டார்!!” என்று ஜபம் செய்து சிலுவை இட்டு, அவளுக்கு ஆறுதல் சொல்லி அனுப்ப…

உடனே அவள்… அப்பாவின் கல்லூரி தோழி “பானு” பற்றியும்…, அவள் வீட்டு விலாசம் பற்றியும் அப்பா அரசல் புரசலாக சொல்லியிருந்ததை நினைவில் வைத்து, எப்படியோ விசாரித்து அங்கு சென்று… அவளிடம் நிலமையை எடுத்து கூற…. பானு அழுது புரண்டு உடனே உதவிக்கு வருகிறாள்.

அன்றிரவு முழுதும் அம்பையும், பானுவும் செய்த பிரார்த்தனை வீண்போகவில்லை… அடுத்த நாள் கர்ணன் கண்விழித்தான்! 

அவன் விழிகள்..  சுசர்மியையும்.. மகளையும்  ஏக்கத்துடன் எதிர்பார்த்து தேடியது.  ஆனால் அவன் கண்டதோ பானுவைதான்!!

ஒருதலை காதலால் இன்றுவரை மணம் செய்யாமல் தனித்து, துன்பித்து, சோகமாய் நின்ற அவளை பரிதாபமாய் நோக்கினான்…. !!

தன் தந்தை “காதல் ஒரு மாயை… அதை நம்பி நாசமாய் போகாதே…! இன்று உன்னை காதலித்தவள் நாளை உன்னை விட அழகான வசதியான  வேறொருவனை காதலிக்க மாட்டாள் என்பது என்ன நிச்சயம்?.. வேண்டாம் அப்பா காதல்! நான் நன்கு விசாரித்து நம் சொந்தத்தில் நல்ல பெண்ணாய் பார்த்து உனக்கு கட்டி வைக்கிறேன்” என்ற அவர் அறிவுரையை கேட்டு அதை ஏற்றுக் கொண்டான்!  

அவள் காதலை அலட்சியபடுத்தி “பானு…,! பிளீஸ்…காதல் எல்லாம் வேண்டாம்.. நாம் நல்ல நண்பர்களாய் இருப்போமே” என்று அவளை சமாதானப்படுத்த.. 

அவளோ, “நான் உன்னை மட்டுமே இறுதிவரை நேசிப்பேன்! இது சத்தியம்!” என்று கலங்கிய விழிகளுடன் சூளுரைத்து, விடுவிடுவென சென்று விடுகிறாள்.. 

இன்று அதை நினைத்துப் பார்த்து, அவளை ஏற்காததால் கடவுள் தனக்கு விதித்த கொடும் தண்டனையை எண்ணி.. அவன் கண்கள் கலங்கின.

சற்று நேரத்தில் அங்கு வந்த அம்பை.. தந்தையை கண்டு ஓவென்று அழுதபடி, “அப்பா! இந்த  ஆன்ட்டிதான்ப்பா, உங்களை நன்கு கவனிச்சு, உங்கள காப்பாத்தி மொத்த பில்லையும்  “பே” பண்ணிட்டாங்கப்பா, அவங்க இல்லன்னா நீங்க பொழச்சே இருக்க மாட்டீங்கப்பா! பாவம்ப்பா அந்த ஆன்ட்டி..!  இனிமே நான் உங்க கூடவே இருக்கேன்பா! என்னை விட்டுட்டு எங்கேயும் போய்டாதீங்கப்பா! பிளீஸ்! பிளீஸ்! பிளீஸ்!” என அழுகையுடன் கெஞ்ச… வார்டு நர்ஸ் அவளை அதட்டி  ஆறுதல் சொல்லி  வெளியேற்றினாள்…!

அவன்  பார்வை நன்றியொழுக,. பானுவின் விழிகளின் மேல் “குற்ற”உணர்ச்சியுடன் பதிந்து… சாஹர சங்கமம் போல் இரண்டற கலந்தது.

ஒரிரு மாதங்களில்…  அவன் உடல்நலம் நன்கு தேறி… மீண்டும், குடும்ப நல நீதிமன்றத்தில் “மகளை தன்னுடன் சேர்த்துவைக்குமாறு” மேல்முறையீடு செய்கிறான்.. !

இம்முறை வழக்கை விசாரித்ததோ ஒரு இளம் பெண் நீதிபதி….  சுசர்மியின், பிரபல வக்கீலோ, கோர்ட்டில் சிம்ம கர்ஜனை செய்ய… தந்தையும் மகளும் தாரை தாரையாக கண்ணீர் வடித்தபடி… பெண் நீதிபதி தங்களுக்கு சாதகமாய் தீர்ப்பு அளிப்பது.. சாத்தியமற்றதே என நம்பிக்கை இழந்து நின்றனர் … !!

நீதிபதி அம்மையார்.. அம்பையை அருகில் அழைத்து.. “பாப்பா! நீ என்ன கூற விரும்புறியோ! அதை பயப்படாம தைரியமா சொல்” என கூறியதும்

 அம்பை தன் அழுகையை அடக்கியபடி உரத்த குரலில் தெளிவாய்.. நீதிபதியை பார்த்து, “ஜட்ஜ் மேடம்… உங்க அப்பாவ உங்களுக்கு எவ்வளவு பிடிக்குமோ..? அதுமாரி கோடி மடங்கு எனக்கு என் அப்பாவ பிடிக்கும்…!! யாரோ ஒருவர என் அப்பாவா! என்னால் ஏத்துக்கவே முடியாது. அவர் சீண்டலும் செய்கையும் எனக்கு அருவருப்பான சங்கடம் தருது..!. அவர் நிச்சயமா நல்லவரில்ல…. என்னையும் எங்கப்பாவையும்  பிரிச்சிடாதீங்க… எனக்கு என் அப்பா தான் வேணும் .. ! எனக்கு என் அப்பாதான் வேணும்…! அம்மா எனக்கு தேவையே இல்லை! பிளீஸ்! பிளீஸ் !”என தேம்பி தேம்பி அழுதபடி.

சட்டென்று தன் தந்தையிடம் ஓடி சென்று அவர் கால்களை அழுந்த கட்டிகொண்டு… “அப்பா! அப்பா! யார் என்ன சொன்னாலும் என்னை விட்டுட்டு போய்டாதீங்கப்பா…!” என காண்போர் நெஞ்சை பதரவைத்த காட்சியால் நீதிமன்றமே ஒரு மயான சோகத்தின் நிசப்தத்துள் மூழ்கியது.

எதிர் கட்சி வக்கீல் “ஐ அப்ஜெக்ட் யுவர் ஹானர்!” என கடும் ஆட்ஷேபத்துடன் எழுந்து நிற்க.

நீதிபதி அம்மையார் “அப்ஜெக்ஷன் ஓவர் ரூல்ட்! நீங்கள் அமரலாம்” என அதிகார சாட்டையை சொடுக்க.. அவர் பொட்டி பாம்பாய் அடங்கி போனார்! எங்கும் நிசப்தம் நிலவியது!

அந்த அமைதியை கலைத்து நீதிபதி தன் தீர்ப்பை வாசித்தார்,

“இந்த பிஞ்சு உள்ளத்தின் மனநிலையை கருத்தில் கொண்டும்.. மேலும் சுசர்மி இரண்டாம் திருமணம் செய்து கொண்டபடியாலும்.., அந்த ஆணின் நெருக்கம் குழந்தையின் நிம்மதியை குலைப்பதாலும்… அவள் தந்தையாகிய கர்ணாவிடமே குழந்தையை ஒப்படைத்து.. அவர் பராமரிப்பில் வாழ்ந்து வளர இந்த கோர்ட் உத்தரவு பிறப்பிக்கிறது.!. இனி குழந்தையின் விருப்பத்தின் பேரில் மட்டுமே அவள் தாய் அவளை சந்திக்க இயலும்.. விவாகரத்து எனும் சமூக அவலத்தால்.. இங்கு நிகழ்ந்த கொடுமை.. வேறு எவருக்கும் ஏற்படாதவாறு பெற்றோர்கள் சகிப்பு தன்மையை வளர்க்க வேண்டும் என் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்! “என தன் நீண்ட தீர்ப்பை வாசிக்க..

“கோர்ட்” என்றும் தயங்காமல், அங்கு குழுமி இருந்தவர்களின் கைதட்டல் ஒலி வானை பிளந்தது…!

அன்பு வென்றது… தந்தை பாசம் ஜெய்த்தது!!

அம்பை.. சற்று தொலைவில் அழுது கொண்டிருந்த பானுவிடம்.. மெல்ல நடந்து சென்று அவள் கண்களை துடைத்து, கரம் பற்றி.. “அம்மா! நம்ம வீட்டுக்கு போகலாம் வாங்கம்மா!” என அழைக்க, கர்ணா இன்பத்தால் பேச்சற்று  மௌனமானான்! 

அந்த மூன்று உயிர்களும் “திரிவேணி சங்கமம்” போல், சம்சார சாகரத்தில்… அன்பால் கலந்தன! இனி எந்த சக்தியாலும் அவர்களை பிரிக்க இயலாது!!

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. “பெண் குழந்தையை அவள் அப்பாவிடமே ஒப்படைத்து அவருடைய பராமரிப்பிலேயே வளர இந்த கோர்ட்டின் உத்தரவு பாராட்டுதல்களுக்கு உரியதே. இப்படிப்பட்ட தீர்ப்புக்களை பொது மக்கள் வரவேற்கின்றார்கள் என்பதை மட்டும் நான் உறுதியாகச் சொல்வேன்.

    — “ம.கி. சுப்ரமணியன்”, B.Com., LL.B.,
    ஜூலியட் கோர்ட், சேப்பல் ஹில்,
    வடக்கு கரோலினா,
    யு.எஸ்.

ஒரு மூங்கில் புல்லாங்குழல் ஆனது (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

காக்க! காக்க! ❤ (பகுதி 3) – ✍ விபா விஷா, அமெரிக்கா