in

ஒரு மூங்கில் புல்லாங்குழல் ஆனது (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

ஒரு மூங்கில் புல்லாங்குழல் ஆனது (சிறுகதை)

ஜூலை 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ந்தியா    சென்னை விமான நிலையத்தில் கால்களை வைத்தவுடன் ஒரு வினோத உணர்ச்சி அவளைத் தாக்கியது. சந்தோஷமா, துக்கமா? அவளுக்கே புரியவில்லை.

இந்த மண் எவ்வளவு சந்தோஷங்களையும், எதிர்பார்ப்புகளையும் கொடுத்ததோ, அவ்வளவு ஏமாற்றங்களையும் கொடுத்து அவளை ஊரை விட்டே விரட்டி விட்டது.

பத்து வயதில்  சித்தியின் கொடுமையிலிருந்து காப்பாற்ற அப்பா அவளைப் பாட்டி, தாத்தாவிடம் ஒப்படைத்தார்.  அங்கே மூன்று மாமாக்கள் மூன்று மாமிகள் அவர்கள் பிள்ளைகள் என்று பெரிய கூட்டுக் குடும்பம். எப்போதும் கல்யாண வீடு போல் கலகலப்பாக இருக்கும்.

வீடு என்னவோ பழைய காலத்து நாட்டு ஓடு போட்ட வீடு தான். ஆனால் தற்போதைய நாகரிக வசதிகளுடன் இருந்தது. மூன்று மாமாக்களுமே தாத்தாவிடமும் பாட்டியிடமும் மரியாதையுடன் நடந்து கொண்டார்கள். ஆனால் இவளிடம் யாரும் அன்பாக இல்லை என்பது நன்றாக தெரிந்தது.

மூன்று மாமிகளும் சில சமயங்களில் கூடிக் கூடிப் பேசுவார்கள். ஒரு நாள் அவர்கள் பேசுவது தற்செயலாக சந்தியாவின் காதில் விழுந்தது. ‘

“இந்த அநாதைப் பெண் வளர வளர நல்ல அழகாகிறாள், நாமோ காலேஜில் படிக்கும் ஆண் பிள்ளைகளை வைத்திருக்கிறோம். வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வாழ  வேண்டி இருக்கிறது” என்று ஒரு மாமி சொல்ல, மற்ற இருவரும் தலையாட்டினர்.

நிஜமாகவே சந்தியாவின் இதயத்தில் யாரோ நெருப்பை அள்ளி கொட்டியது போல் இருந்தது. இதற்குள் ஐந்து வருடங்கள் ஓடி விட்டன.

திடீரென்று பரவிய விஷ ஜுரத்தில் தாத்தா பாதிக்கப்பட்டார். இரண்டே நாட்களில் கை கால் எல்லாம் இழுத்துக் கொண்டு எல்லோரையும் தவிக்க விட்டு போய் சேர்ந்து விட்டார்.

தாத்தாவின் அந்த வீடு அவர் காலத்திற்குப் பின்னர் பாட்டிக்கு சேர வேண்டும் என்று எழுதி வைத்ததுமல்லாமல், அவள் உயிர் உள்ள வரை அதை விற்கக் கூடாது என்றும் உயில் எழுதி வைத்திருந்தார்.

மூன்று பிள்ளைகளும் அப்பாவின் காலத்திலேயே தெரிந்தும் தெரியாமலும் காலி மனைகள் வாங்கி வைத்திருந்தனர்.

அவர்கள் ஒரு நாள் தங்கள் தாயிடம், “அம்மா, சந்தியாவை அவள் அப்பாவிடம் அனுப்பி விடு. நாங்கள் மூவரும் புதிய வீடு கட்டிக்  கொண்டிருக்கிறோம். இந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு புதிய வீட்டிற்குப் போய் விடலாம். நீ எங்கள் மூவரிடமும் மாறி மாறி இருக்கலாம்” என்றனர்.

“இந்த குழந்தை இத்தனை வருடங்கள் நம்மோடு இருந்து விட்டாள். இப்போது எப்படி அவளைப் பிரிந்து இருப்பது? இளம் வயதிலேயே ஒரு குழந்தையைப் பெற்றுப் போட்டு விட்டு போய் சேர்ந்த என் மகளை நான் இவள் உருவத்தில் பார்த்து ஆறுதல் அடைகிறேன். இரண்டும் கெட்டானாக இப்போது அவளை எங்கும் அனுப்ப முடியாது” என்றாள் அம்மா திட்டவட்டமாக.

அவர்களும் பிடிவாதமாக சந்தியாவை சேர்த்துக் கொள்ள மறுத்ததுடன், எந்தப் பணவசதியும் செய்ய முடியாது என்று நிர்தாட்சண்யமாகக் கூறிவிட்டனர். ஆனால் சந்தியாவின் பாட்டி இதற்கெல்லாம் அஞ்சவில்லை.

சந்தியாவும் பள்ளி இறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்கி நான்கு ஆண்டு தொழில் நுட்பக் கல்லூரியில் அட்மிஷன் வாங்கி விட்டாள். எல்லாம் முன்னின்று செய்தது பாட்டி தான்.

இதற்கெல்லாம் நிறைய செலவாகும்; சாதாரண ஆசிரியர் பயிற்சி படித்தால் இரண்டு வருடங்களில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்து  விடலாம் என்று சந்தியா கூறியும், பாட்டி நிராகரித்து விட்டாள்.

பணத்திற்கு என்ன செய்வது என்று யோசிப்பதற்குள், பாட்டி ஒரு சிறிய போர்ஷனை அவர்களுக்கென்று வைத்துக் கொண்டு மற்ற இடத்தை வாடகைக்கு விட்டு, கறாராக பத்து மாத வாடகையை அட்வான்ஸும் வாங்கி கல்லூரி பீஸும் கட்டி விட்டாள்.

பாட்டியின் தைரியமும், பிடிவாதமும், தன்னம்பிக்கையும் சந்தியாவிற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இறுதிஆண்டு கல்லூரி படிப்பின் போது காம்பஸ் இன்டர்வியூ மூலம் பெரிய கணினி கம்பெனியில் வேலையும் வாங்கி விட்டாள்.

வேலையில் சேர்ந்த முதல் மாதம் வங்கியில் போட்டிருந்த சம்பளப் பணம் மொத்தம் எடுத்து வந்து பாட்டியிடம் கொடுத்து காலில் விழுந்து நமஸ்கரித்தாள்.

“பாட்டி, இப்போது நான் மூன்று மாத பயிற்சி திட்டத்தில் இருக்கிறேன். இது முடிந்த பிறகு என்னை அனேகமாக அமெரிக்கா அனுப்பப் போவதாக சொல்கிறார்கள். அதற்கு சம்மதமா பாட்டி?” என்றாள் சந்தியா.

“எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்ற பாரதியாரின் பாடல் மறந்து விட்டதா சந்தியா?”

“அப்படியானால் நான் அமெரிக்கா போவது உனக்கு கஷ்டமாக இல்லையா பாட்டி? நீ எப்படி இங்கு தனியாக இருப்பாய்? டூரிஸ்ட் விசாவில் உன்னை  என்னுடன் அழைத்துக்  கொள்ள ஆறு மாதம் ஆகும் என்று நண்பர்கள் சொல்கிறார்கள் பாட்டி. ஆனால் நான் அமெரிக்கப் பயணத்தை தள்ளிப் போடுவேன் ” என்றாள் பேத்தி.

சந்தியாவிற்கு தன் மேல் இருக்கும் அன்பை நினைத்து பாட்டிக்கு கண்களில் நீர் சேர்ந்தது. நெட்டி முறித்து திருஷ்டி கழித்தாள் பாட்டி.

வேலையில் சேர்ந்த இரண்டு மாதத்தில் யாரோ ஒரு வடக்கத்தி பையனை வீட்டிற்கு அழைத்து வந்தாள் சந்தியா. அவர்கள் பேசுவதும், சிரிப்பதும், நெருக்கமும் பாட்டிக்கு சந்தேகம் ‌ உண்டாகியது.

சந்தியா அவனை ஜவஹர் என்றும் அவளுடைய டீம் லீடர் என்றும் அறிமுகப்படுத்தினாள். பாட்டியின் முகத்தில் இருந்து அவள் உணர்ச்சிகளை சந்தியாவால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை.

“என் மனதில் ஒரு சந்தேகம் ஆனால் அதற்கு எப்படி விளக்கம் கேட்பதெனறு புரியவில்லை?”          

“உங்கள் சந்தேகத்தை தீர்க்க வேண்டியது என் கடமை. கேளுங்கள் பாட்டி” என்று ஊக்கப்படுத்தினாள் சந்தியா.

“நீ அவனை விரும்புகின்றாயா “

“அது எனக்குத் தெரியவில்லை பாட்டி. ஆனால் அவர் என்னுடன் இருக்கும் போது, எனக்கு தைரியமாகவும், மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்றாள் கன்னங்கள் சிவக்க.

“இது வயதுக் கோளாறு. நீ பெரியவளாகவும் இல்லை, குழந்தையும் இல்லை, இரண்டுங் கெட்டான் வயது. இப்போது தான் படிப்பை முடித்து வேலைக்கு சென்றிருக்கிறாய். இப்போது அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதே. மேலும் உன்னை வளர்த்து, படிக்க வைப்பது என் விருப்பமாக இருந்தாலும், உன் திருமணம் உன் அப்பா, மாமாக்கள் கலந்து நடத்த வேண்டும். நீ தனித்து நின்று விடக்கூடாது. என் விருப்பம் போல் நடப்பாயா?” என்றாள் பாட்டி அவள் தலையை ஆதரவாகத் தடவியபடி.

“நிச்சயமாக என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் உன் விருப்பம் போல் தான் அமையும் பாட்டி, இது சத்தியம்” என்றாள் உணர்ச்சி பூர்வமாக.

மூன்று மாதங்கள் முடிந்த பின்னர் கம்பெனியே அமெரிக்க விசாவிற்கு ஏற்பாடு செய்து ஒரு மாதத்தில் கிளம்ப வேண்டும் என்று அதிகாரபூர்வ உத்தரவும் கொடுத்து விட்டது.

ஜவஹர் தான் அவளுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்தான். ஆனால்  சந்தியா அவளுடைய திருமணம் சம்பந்தமாக பாட்டியின் கருத்தை கூறவும். அவன் மிகவும் நெருக்கமாக இல்லாமல் விலகியே நின்று அவளுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்தான். அவனுடைய பெருந்தன்மை சந்தியாவை நெகிழ வைத்தது.

பாட்டியும் பெருமையாக தன் பிள்ளைகளிடம் ஆசை தீர சொல்லிச் சொல்லி ஓய்ந்து போனாள். சந்தியா கூட “என்ன பாட்டி, இந்த காலத்தில் எல்லோரும் தான் அமெரிக்கா போகிறார்கள். ரொம்பவும் பெருமை அடித்துக் கொள்வது போல் இருக்கிறது” என்றாள்.

“பெருமை தான் அடித்துக் கொள்வேன். ஆதரவில்லாத ஒரு மூங்கில், புல்லாங்குழல் ஆகி இசைக்கிறது. கேட்பாரற்று கிடந்த  ஒரு பாறை, அழகிய சிலையாகி நிற்கிறது. இதைக் கொண்டாடாமல் வேறு எதைக் கொண்டாடுவது” என்று தன் பொக்கை வாய் திறந்து சிரித்தாள்.

சந்தியா பாட்டிக்கு ஒரு வங்கிக் கணக்கொன்று ஆரம்பித்து வைத்தாள். “பாட்டி, உன் தேவைக்கான பணம் இதில் எப்போதும் இருக்கும்” என்றாள்.

ஒரு ஆண்ட்ராய்டு போன் ஒன்று வாங்கி அதில் ‘வாட்ஸ்அப்’ பில் பேசவும், செய்திகள் அனுப்பவும் சொல்லிக் கொடுத்தாள்.

சந்தியாவும் அமெரிக்கா கிளம்பி விட்டாள். கம்பெனி காரில் விமானநிலையம் சென்றதால் பாட்டியை வீட்டில் விட்டு தனியே தான் சென்றாள். ஜவஹர் மட்டுமே வழியனுப்ப வந்தான்.

“யாரும் இல்லாத அனாதை போல் தனிய வந்திருக்கிறேன் ஜவஹர்” என்றாள் கண்கள் கலங்க.

“நான் இருக்கும் போது நீ எப்படி அநாதை என்று சொல்வாய்?” என்றவன்,  அவள் கைகளைப் பிடித்து,கண்ணீர் துடைத்து விடைகொடுத்தான்.  சில மாதங்கள் அப்படியே நகர்ந்தன.

ஒரு நாள் பாட்டி, “சந்தியா, உன் மாமாக்கள் என்னை அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள். வயதான காலத்தில் ஏதாவது உடம்பிற்கு வந்தால் தனியாக இருந்தால் எங்களால் என்ன செய்ய முடியும்? என்று அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள்” என்றாள்.

“நல்லது பாட்டி! எனக்குக் கூட உன்னைத் தனியே விட்டு விட்டு வந்து விட்டோமே, என்று கவலையாகத்தான் இருந்தது. இனிமேல் அந்த பயமில்லை. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்று சொல்கிறார்கள் போலும்” சொல்லி விட்டு லேசாக சிரித்தாள் சந்தியா.

“சதை வேகமாக ஆடுகின்றதே, அது தான் பயமாக இருக்கிறது”

“என்ன பாட்டி சொல்கிறாய்? “

“சோழியன் குடுமி சும்மா ஆடாது” என்றாள் பாட்டி.

“எல்லோரும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள்” என்று பாட்டிக்கு ஆறுதல் கூறினாள் சந்தியா.

இரண்டு மாதங்கள் அமைதியாக ஓடியது. ஒரு நாள் இரவு பாட்டி மீண்டும் வாட்ஸ்அப்பில் கூப்பிட்டாள் .

“என்ன பாட்டி இவ்வளவு நேரம் கழித்து கூப்பிட மாட்டாயே? ஏதாவது அவசரமா?”

“அன்றைக்கு நான் சொல்லவில்லையா? சோழியன் குடுமி சும்மா ஆடாதென்று ! அதை உண்மை என்று உன் மாமன்கள்  நிரூபித்து விட்டார்கள்”

“என்ன சொல்லுகிறாய் பாட்டி? “

“நடந்ததைத் தான் சொல்கிறேன். ஒருநாள் மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்து வீட்டில் விருந்து வைத்தார்கள். விருந்து முடிந்தவுடன் அவர்கள், தங்கள் புத்தியை காட்டி விட்டார்கள்.  நாம் இருந்த வீட்டை, அவர்களுக்கு சேர வேண்டும் என்று எழுதித் தர வற்புறுத்தினார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு வற்புறுத்தியதற்கு கூறிய காரணம் தான் எனக்குப் பிடிக்கவில்லை. உனக்கு அந்த வீட்டை நான் கொடுத்து விடுவேன் என்று பயந்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி விட்டார்கள். சுயநலவாதிகள்” என்றாள் பாட்டி கோபமாக.

“பாட்டி, நீ கோபப்படுவதில் அர்த்தம் இல்லை.  தாத்தாவின் வீடு தானே பாட்டி அது . அவர்களுக்கு சேர வேண்டிய வீடு தானே. நீ தேவையில்லாமல் கோபித்துக் கொள்ளாதே! சந்தோஷமாக இரு பாட்டி” என்று அறிவுறுத்தினாள் .

சில நாட்கள் அமைதியாகக் கழிந்தன. ஆனால் சந்தியா மனம் மட்டும் பாட்டி ஏதோ மன நிம்மதியில்லாமல் கஷ்டப்படுகிறாள் என்று நினைத்தது. தன் சொந்த பிள்ளைகளிடம் தானே இருக்கிறாள். மூன்று பிள்ளைகள் இருப்பதால் ஒருத்தர் இல்லாவிட்டால் ஒருத்தர் பார்த்துக் கொள்வார் என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டாள்.

இடையில் பாட்டி பேசினாலும் அவளைப் பற்றி ஒன்றும் பெரிதாகப் பேசுவதில்லை. சந்தியாவைப் பற்றியும், அவள் வேலையைப் பற்றியும் மட்டுமே விசாரிப்பாள்.

சில மாதங்கள் கழித்து பாட்டி ஒரு நாள் அவள் சென்னையில் இல்லையென்றும் , அவளது வீட்டையும் விற்று விட்டார்கள் என்றும். அவளை கோயம்புத்தூரில் ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார்கள் என்றும் துக்கம் தொண்டையை அடைக்கக் கூறினாள்.

“என்ன பாட்டி  இப்படி சொல்கிறாய்?” என்றாள் சந்தியா திகைப்புடன்.

“ஆமாம். அவர்கள் காட்டும் போலி அன்பில் நான் கூட ஏமாந்து விட்டேன்” என்றாள் பாட்டி.

“பாட்டி, நான் சீக்கிரம் உன்னிடம் வருவேன். என்னுடன் கிளம்ப தயாராக இரு”

பாட்டியை விசிட்டர்ஸ் விசாவில் அழைத்துச் செல்ல தேவையான பேப்பர்களுடன் சென்னை வந்து விட்டாள். தன்னை அழைத்துச் செல்ல யாரும் வரப் போவதில்லை என்று சந்தியா நினைத்துக் கொண்டே விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தாள். அங்கே ஜவஹருடன் பாட்டியைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தாள்.

சந்தியா அமெரிக்காவில் இருக்கும் போது பாட்டியைப் பற்றி ஜவஹரிடம் சொல்லி வருத்தப்பட, அவன் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி பாட்டியைத் தன்னுடன் சென்னைக்கு அழைத்து வந்து விட்டான்.

பாட்டிக்கும் சளியும் ஜுரமுமாக இருந்ததால் பாட்டியை அனுப்பி விட்டனர், ஆனால் சந்தியாவிடம் ஏதும் தெரிவிக்கவில்லை. சந்தியா விஷயத்தை மாமாக்களிடம் கூற, அவர்கள் ஒன்றும் பெரிதும் ஆர்வம் காட்டாததால் பாட்டிக்கு விசா ஏற்பாடு செய்தாள்.

பாட்டியோ தான் செய்த மிகப் பெரிய தவறை சரி செய்யப் போவதாகக் கூறி, சந்தியா ஜவஹர் பதிவுத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தாள்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

தவப்புதல்வன் (சிறுகதை) – ✍ கோபாலன் நாகநாதன், சென்னை.

திரிவேணி சம்சார சங்கமம் (சிறுகதை) – ✍ Dr.K.BALASUBRAMANIAN. MD, Chennai