sahanamag.com
சிறுகதைகள்

தாத்தாவின் வெற்றிலை பெட்டி (சிறுகதை) – ✍ விவேக், அமெரிக்கா

ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“தாத்தா வாயில கொஞ்சம் பால ஊத்து சாமி” என்று அஞ்சம்மா கிழவி  அவனை கொஞ்சி அழைத்தாள். 

தாத்தாவின் முறுக்கு மீசை மீது படாமல், நாலு சொட்டு பால் ஊற்றினான் குமார். அவனுக்கு வயது ஒன்பது.  இதுவரை ஆறு நாள் பால் ஊற்றியும் உயிரை விடாமல் பிடித்து வைத்திருந்தார் அவனது தாத்தா. 

வெளியே வந்து அந்த பெட்டியை  தேட ஆரம்பித்தான் குமார். அவன் தேடுவது  ஒன்றும் சாதாரண பெட்டி அல்ல. தாத்தாவின் ரகசியங்களை அடக்கிய வெற்றிலை பெட்டி. அதற்குள் என்ன இருக்கும் என்பது அவரை தவிர யாருக்கும் தெரியாது

தாத்தாவின் நண்பர்கள் பலர் அலுமினிய பெட்டி வைத்திருக்க, இவர் மட்டும் கம்பீரமாக தேக்கு பெட்டியுடன் வலம் வருவார். அந்த ஊரிலேயே அப்படிப்பட்ட மரப்பெட்டி வைத்திருந்தது தாத்தா மட்டும் தான் என்று பாட்டி அடிக்கடி கூறுவாள்.   

இதையெல்லாம் தாண்டி  அந்த பெட்டிக்கு அப்பாவை விட வயது ஜாஸ்தி என்ற தகவல்,  குமாருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது . 

தாத்தாவிற்காக எவ்வளவோ முறை செட்டியார் கடைக்கு ஓடி, வெற்றிலை பாக்கு வாங்கி வந்திருக்கிறான். பல முறை இனாமாக ஐந்து  பைசா மிட்டாய் கூட கிடைத்திருக்கிறது.  சில சமயம் அதீத ஆர்வத்தில் சீவள்,  சுண்ணாம்பை சுவைத்து நாக்கில் பட்டுக் கொண்டதும் உண்டு . 

வழக்கமான இத்யாதிகளை தாண்டி , அந்த பெட்டியில் என்ன தான் வைத்திருக்கிறார்  என்று பார்க்க குமாருக்கு ஆசை. எத்தனை முறை  கேட்டாலும் அந்த பெட்டியை தொடவே விட மாட்டார். 

கடைவீதிக்கு போகும் பொழுது கூட ஒரு கையில் அவனையும், மறு கையில் பெட்டியையும் பிடித்தபடியே வலம் வருவார். ஒரு முறை வேட்டியை இறுக்கிக் கட்டும் போது இவனிடம் பெட்டியை கொடுத்தார்.  திறந்து பார்க்கும் முன்னரே வாங்கிக்கொண்டார்.

இதையெல்லாம் மனதில் அசை போட்டபடியே அந்த பெட்டியை தேட ஆரம்பித்தான். 

வாசலில் அப்பா கயிற்று கட்டிலில் சித்தப்பாவுடன் பேசிக் கொண்டிருந்தார்.

பெட்டி அங்கு இல்லை என புரிந்ததும், தொடர்ந்து ரயில் பெட்டி போல நீளமாக இருந்த அந்த வீட்டின் ஒவ்வொரு அறையாக தேடினான். ரேழியில் தேடி பார்த்து சோர்ந்து போனான். அங்கிருந்தே பார்வையால் தேடினான். 

அப்பொழுது அங்கே இருந்த குதிரின் கீழே அந்த  பெட்டி அவன் கண்ணில் பட்டதும், படபடப்பு  அதிகமானது. விருட்டென எழுந்து, ஓடி அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு கொல்லைக்கு ஓடினான்.

கிணற்றின் பின்னால் அமர்ந்து யாரும் இருக்கிறார்களா என்று ஒரு நிமிடம் நோட்டம் விட்டான்.  சுற்றும் முற்றும் பார்த்தபடியே லேசாக திறந்தான். புகையிலை நாற்றம் குப்பென்று  அடித்தது. 

அதே நேரம் “அய்யய்யோ” என்ற சத்தம் கேட்டு திகைத்தான் . பெட்டியை மூடி,  சத்தம் வந்த இடத்தை  நோக்கி ஓடினான்.

அங்கே தாத்தா  வாய் பிளந்தபடி கிடந்தார். அவனை அறியாமல் கண்களில் நீர் நிரம்பியது. பெட்டியை அவர் அருகில் வைத்து விட்டு வெளியே ஓடினான்.

அந்த பெட்டியை தாத்தாவின் அருகிலேயே வைத்து கொள்ளி வைத்தார்கள். கடைசி வரை குமாருக்கு அந்த பெட்டிக்குள் என்ன இருந்தது என தெரியவில்லை. 

அந்த பெட்டியில் தாத்தாவின் உயிர் இருந்ததாகவே அவன் நம்பினான்.

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!