sahanamag.com
சிறுகதைகள்

சம்சார வீணை❤ (சிறுகதை) – ✍ பாலா ஆனந்த்

ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

டுப்படியைப் பார்த்தபடியே ஆவலோடு மரகதத்தின் வருகைக்காகக் காத்திருந்தார் சுந்தரம். சமையலறையில் இருந்து வரும் தாளிப்பு வாசனை மூக்கைத் துளைத்து

“மரகதம், இன்னும் எவ்வளவு நேரம் தான் ஆகும்?” என்று பசியில் கூவினார்

“ஐயோ கடவுளே, ஏங்க இப்படி பறக்குறீங்க? எனக்கென்ன பத்து கையா இருக்கு?” என்று சொல்லியபடியே பாத்திரங்களோடு வெளியே வந்தாள் மரகதம்

“இன்னைக்கு என்ன செஞ்சுருக்க?” என சுந்தரம் கேட்க 

“கோதுமை உப்புமா” என்று பதிலுரைத்தாள் மரகதம்

கோதுமை உப்புமா என்றவுடன் சுந்தரத்தின் முகத்தில் ஏமாற்றம் பொங்கி வழிந்தது

அதை உணர்ந்து கொண்டவளாக மரகதம், “ஏன் ஐயாவிக்குக் கோதுமை உப்புமானா உள்ள போகாதா? எட்டு மணியில் இருந்தே பசி பசினு ஆடுனீங்க, இப்ப என்ன முகம் சுருங்குது. வயசான காலத்துல நாக்குக்கு முக்கியத்துவம் கொடுத்தா அவ்வளவு தான்” என்று வசைபாடிக் கொண்டிருக்க, அதற்கிடையே சுந்தரம் உப்புமாவைச் சாப்பிட தொடங்கினார்.

“மரகதம் இங்க பாரேன், கோதுமை உப்புமாவா இருந்தாலும் நீ செஞ்சதால எவ்வளவு நல்லா இருக்கு தெரியுமா?” என்று சுந்தரம் சொன்ன மாத்திரத்தில், மரகதத்தின் முகத்தில் ஓடிய கோப ரேகைகள் மறைந்து சுருங்கிக் கொண்டிருக்கும் கன்னங்களில்  சிரிப்பு மலர்ந்தது.

இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை மரகதம். 

சலனமற்று இருக்கும் மரகதத்தைப் பார்த்து, “ஆமா மரகதம் உனக்கு வயசாயிருச்சுனு யாரும் சொன்னா? நான் உன்ன முதல்நாள் பாத்த மாதிரியே இப்பவும் இருக்க” என்றார் சுந்தரம்

உதட்டோரமாகச் சிரித்து விட்டு, “பிள்ள இல்லாத வீட்டில கெழவன் துள்ளிக் குதிச்சானாம் என்ற கதையால இருக்கு” என்று சொல்லியபடியே மீண்டும் அடுப்படிக்குப் போகப் போன மரகதத்தைப் பார்த்து 

“ஏமா நீ சாப்பிடலயா?” என்று கேட்டார் சுந்தரம்

“இந்தக் கோதுமை உப்புமாவை நான் சாப்பிட மாட்டேன்” என்றாள் மரகதம் நக்கலாக

“அடிப்பாவி, உனக்கு மட்டும் தனியா நல்லா சமைச்சு இருக்கியா?” என்றார் சுந்தரம் அதே தொணியில் 

“உங்களுக்கு உப்புமாவைக் கொடுத்துட்டு நான் மட்டும் வேறு ஏதாச்சும் சமைச்சு சாப்பிடுற அளவுக்கு நான் ஒன்னும் கல்நெஞ்சக்காரி இல்ல. இன்னைக்குப் புரட்டாசி சனிக்கிழமை, அதனால நான் விரதம் இருக்கேன்” என்றாள் மரகதம். 

சாப்பிடுவதை நிறுத்தி விட்டு, “ஏய் உனக்கென்ன பைத்தியமா பிடிச்சுருக்கு? விரதம் இருக்கும் வயசான இது?” என்று கோபமாகக் கேட்டார் சுந்தரம். 

“இப்பத் தான் வயசான மாதிரி தெரியலனு சொன்னீங்க, அதுக்குள்ளயும் இப்படி மாத்தி பேசுறீங்க. விரதம் இருக்க வயசு முக்கியமில்ல, மனசுருந்தா போதும்” என்றாள் மரகதம்

“அம்மாடி… உன்கிட்ட வாய் கொடுத்து ஜெயிக்க இந்தக் கிழவனகிட்ட வார்த்தையும் இல்ல, உடம்புல தெம்பில்ல” என்று சுந்தரம் சொல்ல

“ஆமா தமிழ்ப்பேராசிரியருக்கு நான் தான் வார்த்தை கத்துத் தரணும் போல” என்றாள் மரகதம்

“சரிமா, மாசம் தவறாம நமக்கு ஓய்வூதியம் வருது. நாம பெத்த பெண்ணுக்கும் பையனுக்கும் கல்யாணம் செஞ்சு வைச்சு பேரன் பேத்தி பாத்தாச்சு. அவுங்களுக்கு பாரமா இருக்க வேணானு நீ சொன்னனால தான் நாம ரெண்டு பேரு மட்டும் இங்க இருக்கோம். அவுங்களும் நம்மகிட்ட நல்லா தான் பேசுறாங்க? பின்ன  என்ன வேண்டுதல்? எதுக்காக விரதம்?” என்று கேட்டார் சுந்தரம். 

“அதெல்லாம் உங்களுக்குச் சொன்னா புரியாது” என்று சொல்லியபடியே மீண்டும் அடுப்படிக்குப் போனாள் மரகதம். 

சாப்பிட்டு முடித்து விட்டு தட்டோடு உள்ளே வந்த சுந்தரம், பாத்தரம் கழுவிக் கொண்டிருக்கும் மரகதத்திடம், “நான் வேணா பாத்திரம் கழுவித் தரவா?” எனக் கேட்டார்

“அப்பா சாமி, நீங்க செத்த நேரம் பேசாமா போய் உக்காருங்க” என்று தட்டைப் பிடுங்கினாள் மரகதம். 

“உத்தரவு மகாராணி” என்று சிரித்தார் சுந்தரம். 

செல்லமாக அவரை முறைத்தாள் மரகதம். வெளியே வந்து நாற்காலியில் உட்கார்ந்தார். 

தட்டைக் கழுவிப் போட்டுவிட்டு, அருகில் இருந்த தேங்காய் துவயலைப் பார்த்து, தன் மறதியை எண்ணி தனக்குள்ளையே சிரித்துக் கொண்டே வெளியே வந்து சுந்தரத்திடம் தன் மறதி பற்றி  சொல்ல, “வர வர நீ எல்லாத்தையும் மறக்குற, பாத்து என்னைய மறந்துறாதம்மா” என்று  அவரும் சிரித்தார். 

வேலையெல்லாம் முடித்து விட்டு நாற்காலியில் உட்கார்ந்த மரகதத்திடம், “நான் இப்ப உனக்காக வீணை வாசிக்கவா? செவிக்குணவு இல்லாதப் போது…” என்று அந்தக் குறளைச் சொல்லி முடிப்பதற்குள் 

“ஐயா வாத்தியாரே, இது வீடு வகுப்பறை இல்ல” என்றாள் மரகதம்

சிரித்துக் கொண்டே வெகு நாட்களாக துணியால் மூடி வைத்திருந்த வீணையை எடுக்கப் போனார் சுந்தரம். 

கடைசியாக அவர் வீணை வாசித்த போது  தந்தி அறுபட்ட விசயமே அப்போது தான் அவர்  ஞாபகத்துக்கு வந்தது.

‘ஐயையோ சும்மா இருந்த இவகிட்ட வீணை வாசிக்கிறேனு சொல்லிட்டோம் .தந்தி அறுபட்ட விசயமே இவளுக்குத் தெரியாதே’ என்று அவர் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே

“என்னாங்க, வீணை எடுக்க இவ்வளவு நேரமா?” என்று பின்னால் வந்த மரகதம் வீணையை எடுத்து வரவேற்பறையில் வைத்தாள்

துணி விலக்கப்பட்டது. வீணையைப் பார்த்த சுந்தரத்தின் கண்கள் மிளிர்ந்தன, கூடவே புதிதாக மாட்டப்பட்டிருக்கும் தந்தியும் தான். மரகதத்தின் முகத்தைப் பார்த்து சிரித்தார் சுந்தரம்.  

“வாத்தியாரே… வீணையில் தந்தி அறுந்தத மறந்த மாதிரி தாரத்தையும் மறக்கப் போறீங்க” என்று சிரித்தாள் மரகதம். கூடவே சுந்தரமும் சிரித்தார். 

“என்னாங்க வாத்தியாரய்யா, வாசிக்கப் போறீங்களா இல்ல இப்படியே வேடிக்கை பாக்க போறீங்களா?” என்றாள் மரகதம்

முதலில் சரிகமபதநிச வாசித்துவிட்டு மரகதத்திற்குப் பிடித்த,  ‘வளர்ந்த கலை மறந்து விட்டால் ஏனடா கண்ணா’ என்றப் பாடலை இசைக்கத் தொடங்கினார் சுந்தரம்.

வீணையின் நாதம், அவருக்கு பழைய நினைவுகளை கிளறியது.

‘இரண்டு பேரும் வேறு வேறு சாதினு சொல்லி பொண்ணு தர மாட்டேன்னு அவளோட அப்பா சொன்னதும்,  பெத்தவுங்க சொந்தமுனு  எல்லாத்தையும் விட்டு, யாருமில்லாத தன்னையே நம்பி வந்து, இன்பம் துன்பம் இரண்டுலயும் தன்னோடவே நின்று, இன்னைக்கு நாலு பேருக்கு முன், தான் நல்ல மரியாதையோட இருக்க காரணம்  மரகதம் தான்’ என்று நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கையில் 

‘அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா, நான் அடைக்கலமாய் வந்தவள் தான் கூறடா கண்ணா’ என்று மரகதம் பாடிய பாடல் வரிகள், மீண்டும் சுந்தரத்தை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது

பழசை எல்லாம் பேசி நேரம் போனதே தெரியவில்லை. மதியம் சுந்தரமும் சாப்பிடவில்லை. மாலையில் இருவரும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குப் போகத் தயாரானார்கள்

“ஏம்மா வா சீக்கிரம், கூட்டம் வந்திடும். நீ வேற இன்னும் சாப்பிடாமா இருக்க” என்று கூச்சலிட்டார் சுந்தரம். 

“வரேன் வரேன்” என்று அவசர அவசரமாக மகன் வாங்கிக் கொடுத்திருந்த கட்டம் போட்ட நூல் சேலையைக் கட்டி வெளியே வந்தாள் மரகதம்

சுருக்கம்  விழுந்த தோல், நரை முடி, மஞ்சள் பூசிய முகம், நெற்றி நிறைய குங்கமப் பொட்டு என மரகதம் நடந்து வரும் போது, பாரதிதாசனின் ‘புதுமலர் அல்ல அவள்’ என்ற கவிதை வரிகள் சுந்தரத்தின் நினைவலையில் வந்து சென்றன

“போலமாங்க?” என்று மரகதம் கேட்க, சுந்தரம் உள்ளே சென்று இருவருக்கும் முகக்கவசம் எடுத்து வந்தார். 

“ஆமாங்க, நான் மறந்தே போயிட்டேன்” என்றாள் மரகதம்

‘கோயில் பக்கத்துல தான இருக்கு, நடந்தே போகலாம். ஆனால் இவ என்ன சொல்லுவா?’ என்று யோசித்துக் கொண்டே  இருசக்கர வண்டியை எடுக்கப் போக

“பக்கத்துல இருக்கிற கோயிலுக்கு நடந்தே போகலாமே” என்று மரகதம் சொன்னதைக் கேட்டு,  நெகிழ்ந்து போனார் சுந்தரம் 

இருவரும் பேசிக் கொண்டே போனதில் கோயில் வந்ததே தெரியவில்லை. கோயில் வாசலில் உள்ள கடையில், துளசி, தாமரைப் பூ, இரண்டு நெய்விளக்கு வாங்கிக் கொண்டு இருந்தாள் மரகதம்.  

அதோடு இருபது ரூபாய்க்கு முல்லைப்பூவைச் சேர்த்து வாங்கினார் சுந்தரம். வாங்கியப் பொருட்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று தேடிய போது தான் தெரிந்தது, இருவரும் பணம் எடுத்து வரவில்லை என்று. இருவரும்  ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்

பின் அச்சூழலை உணர்ந்த கடை உரிமையாளர், “அதனால என்னங்க ஐயா?  முன்ன பின்ன தெரியாத ஆளா? அடுத்த தடவ கோயிலுக்கு வரப்ப தாங்க” என்று சொல்ல, இருவரும் நிம்மதி அடைந்தனர்

தன் கையில் இருக்கும் முல்லைப்பூவை மரகதத்திடம் கொடுக்க, அவளையும் அறியாமல் வெட்கம் வந்தது. முல்லைப்பூ தலையில் வைத்துக் கொண்டு உதட்டோரமாகச் சிரித்தாள் மரகதம்

இருவரும் கோயிலுக்குள்ளே போனார்கள். அங்கே திருமகளைத் தன் மடியில் அமர்த்தியிருந்த திருமால் சிலையைப் பார்த்து, மனைவி அருகில் இருந்தால் தான் இறைவனுக்கே மரியாதை என்று நினைத்துக் கொண்டார் சுந்தரம். 

நெய்விளக்கு ஏற்றி இருவரும் பெருமாளைத் தரிசனம் செய்தனர். மரகதம் தான் என்ன வேண்டுதலுக்காக விரதம் இருந்தாள் என்பதையே மறந்து போனாள். 

‘மரகதத்தின் மனதில் ஏதோ ஒரு வேண்டுதல் இருக்கு போல, எனக்குத் தெரிஞ்சு இப்போ அத அவளே மறந்திருப்பா. அதை நீதான் நடத்திக் கொடுக்கனும்” என்று வேண்டிக் கொள்ள சுந்தரம் மறக்கவில்லை.   

கோயிலில் கொடுக்கப்பட்ட பிரசாதத்தோடு, பிரகாரத்தில் உட்கார்ந்தார்கள். 

“உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? இந்தக் கோயில்ல கொடுக்குற பிரசாத்துல உப்பே இருக்காது. இங்க இருக்கிற பெருமாள் மனைவிக்காக சாப்பாட்டுல உப்பே வேண்டாமுனு சொல்லிட்டாரம்” என்றாள் மரகதம். 

“அவராவது உப்பு மட்டும் தான் வேணானு சொன்னாரு, நான் இன்னைக்கு மதிய சாப்பாடே வேணானு சொல்லிட்டேன்” என்று சுந்தரம் சொன்ன போது தான், மரகதத்திற்குச் சுந்தரம் மதியம் சாப்பிடவில்லை என்று நினைப்பே வந்தது. 

மதியம் தன் கணவனுக்குச் சாப்பாடு கொடுக்க மறந்ததை நினைத்த போது, அவளையும்  அறியாமல் வந்த கண்ணீர்த் துளிகள், மரகதத்தின் கன்னத்தில் இருந்து சுந்தரத்தின் பெருவிரலில் பட்டுத் தெரித்தது.  

“அடுத்த முறை கோயிலுக்குப் வரும் போது அந்தக் கடைக்காரரிடம் வாங்கிய பொருட்களுக்குக் காசு கொடுக்கனும், மறக்காம ஞாபகப்படுத்து” என்று மரகதத்திடம்   சிரித்தவாறே சொன்னார் சுந்தரம் 

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!