in ,

தனிவளை (சிறுகதை) – ✍ ம.தாட்சாயனி, திண்டுக்கல்

தனிவளை
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 53)

“போகலாம் வாங்க” இந்த முறையும்  என்ன உணர்ச்சி என்று தெரிந்து கொள்ள முடியாத முகத்துடன் கூறுகிறாள் அம்மா

அவளது கைகளில் ஒன்று கனமான பெட்டியையும் மற்றொன்று என் தம்பியையும் இறுகப் பற்றியிருக்கிறது. அவனுக்கு ஒன்றும் கை பிடித்து நடக்கும் வயதல்ல, விட்டால் இன்றும் கூட அக்கம் பக்கத்து வீடுகளுக்கு விளையாட போய்விடுவான் என்று, அம்மா அவனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறாள்

“வேற ஒண்ணும் எடுக்க வேண்டியதில்லயே” சில இன்றியமையாத பாத்திரங்களைத் திணித்து வைத்திருந்த சாக்குப் பையைத் தூக்கிக் கொண்டே கேட்கிறார் அப்பா

“மூணு பேரால இன்னும் எவ்வளவு சாமான தூக்க முடியும்?” அம்மா வேண்டுமென்றே அப்பாவை சீண்டுவதாகப் பட்டது எனக்கு

“சரி சரி விடு, அப்பறமா லாரி எடுத்துட்டு வந்துட்டு பாத்துக்கலாம்“ அட நடக்கவே ஆரம்பித்து விட்டாரே

நானும் என் பங்குக்கான சாமான்களைத் தூக்கிக் கொண்டேன். ம்…நான் நினைத்தது போல சுலபம் ஒன்றுமில்லை, சரியான கனம் தான்..தூக்கவே முடியவில்லை..இரண்டெட்டு வைப்பதற்குள் மூச்சு வாங்கியது.

எனக்கே இப்படியென்றால் அம்மா..திரும்பிப் பார்க்கிறேன். அவளும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு சிரமப்பட்டு மெதுவாக நடந்து வருகிறாள்… இதில் இந்த சுட்டிப் பயலை வேறு சமாளிக்க வேண்டும்..

“இன்னுமா அங்கயே நிக்கறீங்க..அட அவன் கைய விட்டுட்டு நீ வேகமா நடந்து வா..என்னமோ அவனுக்கு நடக்கத் தெரியாத மாதிரி…” அப்பாவின் சிடுசிடுப்பு..

“டேய் கைய விட்டுட்டா ஓடிற கூடாதுடா..அக்கா கூடவே வா“

ஐயோ..சரிதான்.. இவனைச் சமாளிக்கும் பொறுப்பு எனக்கா..அதுசரி..

நினைத்தபடியே இரண்டெட்டு வைப்பதற்குள்ளேயே என் பொறுமையைச் சோதிக்கத் தொடங்குகிறானே..

“டேய்..கொஞ்ச நேரம் வாய மூடிட்டு சும்மா வாடா” இருந்த உணர்ச்சியெல்லாம் அது கோபமா, சோகமா, வருத்தமா, எனக்கே தெரியாத உணர்ச்சியை வார்த்தையில் கொட்டுகிறேன் அவனிடம்..

கொட்டாமல் என்ன செய்ய? அவன் எப்படி என்னிடம் அப்படி கேட்கலாம்?

“ஏண்டி இங்க சஞ்சய், நவீன், பிரவீனாலாம் இருக்காங்கல்ல.. அவங்க எப்ப நம்ம போற எடத்துக்கு வருவாங்க?”

“அவங்க இங்க தான்டா இருப்பாங்க..எங்கயும் வர மாட்டாங்க..”

“அப்ப நம்ம மட்டும் ஏன் போணும்..ம்..சொல்லுடி..”

இதற்கு நான் என்ன விடை சொல்ல? அதனால் தான் விடை தெரியாத கேள்விகளை அவன் கேட்கும் போது என்ன செய்வேனோ..அதையே செய்தேன்..எரிந்து விழுந்தேன்..ஆனால் அவனா இதற்கெல்லாம் சலித்து விடுவான்…

என்னை விட்டுவிட்டு அம்மாவை நோக்கி ஓடுகிறான். அதற்குள் நாங்கள் தெருவின் மத்திக்கு வந்து விட்டோம். ஆகா.. எதிர் வீட்டு வனிதா அத்தை.. வீட்டில் இல்லை என்று நினைத்தேன்.. ஆமாம்..கடைக்குப் போய் விட்டு திரும்பிக் கொண்டிருக்கிறாள்

எதிர்பட்டவுடன்,“என்ன அருளம்மா..கௌம்பியாச்சா?” என்றாள் சம்பிரதாயமான வருத்தத்தை வரவழைத்துக் கொண்டு…

“ஆமாம்மா… நாங்க வரோம்”

“ஏழு வருஷமா இங்கனயே இருந்தீ்ங்க.. இனி இங்க யார் வரப் போறாங்கன்னு தெரியல..எங்கள எல்லாம் மறந்திடாம அடிக்கடி வரப் போக இருங்க..என்னடா அருளு..சரிதான..“

ஒன்றும் புரியாமல் தலையாட்டி விட்டு அம்மாவைப் பாரக்க..அவன் ஏதாவது கேட்பதற்குள் கிளம்பி விட வேண்டும் என்று “நாங்க கௌம்புறோம் அத்த..அப்பா..ஆட்டோக்குப் போயிட்டாரு” என்று கத்தரித்தேன்

மனதுக்குள் இல்லாத கரிசனத்தை மனிதர்களால் எப்படி உதட்டில் கொண்டு வர முடிகிறது..என்னமோ வெகுதூரம் நடந்தது போல இருக்கிறது. தெருமுனையில் ஆட்டோ ஸ்டாண்டில் அப்பா ஒரு ஆட்டோவை ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.. கையில் வைத்திருந்த பொருட்களை ஒருவழியாக ஏற்றி விட்டு நாங்களும் ஏறியதும்  அருள் ஆரம்பித்து விட்டான்..

“அம்மா நாம இங்க திரும்பி வருவம்ல..அப்ப..”

“டேய் நாம இனிமே இங்க வரமாட்டோம்.”

“ஊகூம்..அப்ப நவீனு,சஞ்சய், பிரவீனா..”அழுது விடுவான் போல இருந்தது..அவனுக்கு சொல்லி புரிய வைப்பதெல்லாம் இப்போதைக்கு நடக்கக் கூடியதல்ல…அவனைச் சமாளிக்க அம்மா பட்ட பாடெல்லாம் எனக்குள் ஏறவில்லை..

எனக்கு என்னவோ இதே போல ஒரு கையில் பெட்டியையும் இன்னொரு கையில் இன்று அருளைப் போல என்னையும் பிடித்துக் கொண்டு இந்த வீட்டிற்கு… நுழைந்த அந்த நாள்…நினைவுக்கு வருகிறது. இதோ ஆட்டோவும் கிளம்பி விட்டது..

இங்கிருந்து பார்க்கிறேன்..உத்தேசமாக அந்த வீட்டை நான் பார்க்க முடிகிறது..என்னை அறியாமல் துளிர்த்த கண்ணீர் பார்வையை மறைக்கிறது…அதில் அந்த பழைய காட்சி விரிகிறது..

ப்போது எனக்கு ஏழெட்டு வயது தான் இருக்கும்… இந்த வீட்டிற்குள் அம்மா நுழைந்த போது  அவளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி…சாமான்களால் அடைக்கப்படாத காலி வீட்டை அவள் சுற்றி சுற்றி வந்ததிலிருந்து தெரிந்தது. அவளுக்கு மட்டுமென்ன எனக்கும் கூடத் தான்…

இதுவரை இவ்வளவு பெரிய வீட்டை நான் பார்த்தது கூட இல்லை…டைல்ஸ் தரை அதுவரை அனுபவிக்காத ஏதோ ஒரு அனுபவத்தைக் கொடுத்தது…அந்த வயதிற்கு அது ஏதோ புதுமையாக..தரையில் படுத்து படுத்து புரண்டதெல்லாம்..நினைக்கும் போதே இலேசாக சிரிக்கிறேன்..நல்லவேளை யாரும் கவனிக்கவில்லை…

அப்புறம்  அந்த வீட்டில்..என்ன இது ஆட்டோ நின்று விட்டதா..அதற்குள்ளாகவா வந்து விட்டோம்..இல்லை.. மளிகை கடை முன்னால் ஆட்டோ நிற்கிறது..ஏதோ வாங்குவதற்காக அப்பா இறங்கி போயிருக்கிறார்…

நான் பிறந்து எனக்கு நான்கு வயது வரை என்னைப் பொறுத்தவரை வீடு என்றால்  ஒரு அறை ஒரு கழிவறை….அறையின் கதவை ஒட்டியே அடுத்த வீடு.. அங்கே தான் வீட்டுச் சொந்தக்காரர்கள்… பிறகு அங்கிருந்து ஏன் கிளம்பினோம் என்பதெல்லாம் நினைவில் இல்லை..

அங்கிருந்து கொஞ்சம் பெரியதான ஓட்டு வீட்டிற்குக் குடியேறினோம்..அப்போது நான் ஆடிய ஆனந்தக் கூத்தெல்லாம் இப்போதும் எப்படி நினைவில் இருக்கிறது..ஏன் நிற்கிறது தெரியவில்லை..

ங்கு பால் காய்ச்சுவதற்கு முதல் நாள் பழகியவர்களிடம் சொல்லி விடைபெற்றுக் கொள்ள அம்மா சென்றாள். கூடவே நானும் ஓடினேன். அவர்களை எல்லாம் பிரியும் நினைவே இல்லாமல்  “அத்த..மாமா…புது வீட்டுல வராண்டால்லாம் இருக்கே..அங்க பெரிய பெரிய்ய ரூம்லலாம் இருக்கே…ம்ம்..பின்னாடி தோட்டம்லாம் தெரியுமா…“ என்று ஏதோ சொந்த வீட்டிற்குப் போவது போல கதையளந்தது இன்னும் மறக்கவே இல்லை..

அன்று போல குழந்தையாகவே இருந்திருந்தால்..இருக்கும் வீடெல்லாம் சொந்த வீடென்று நினைத்திருக்கலாம்..என்ன செய்ய..அப்புறம் அந்த வீட்டிலும் அதிக நாள் நிலைக்கவில்லை..ஊருக்குக் கடைசியில் ஓரு பாழடைந்த ஒண்டிக் குடித்தன வீட்டிற்குச் சென்றோம்..

பிறகு அந்த ஒண்டிக் குடித்தன வீட்டில் எல்லாத்துக்கும் முறை வைத்துக் கொண்டு….அவசரம் ஆத்திரம் என்றால் கூட அந்த வழியில் ஊருக்குள் வருவது பிரம்மப் பிரயத்தனம் தான்…ஆனால் என்ன செய்ய …அன்றைய தேதியில் எங்கள் அவசரத்திற்கும் நாங்கள் நினைத்த வாடகைக்கும் அங்கு தான் கிடைத்தது….ஆனால் அங்கு அதிக நாள் தாக்குப் பிடிக்க முடியவில்லை….

பிறகு தான் இங்கு குடியேற்றம்.. ரொம்ப தூரம் ஆட்டோ வந்துவிட்டது போல..இனி மேல் அந்த வீடு என்று தான் சொல்ல வேண்டும்…

அழகிய வாசல்…சிறிய  இரும்புக் கதவு..இருபுறம் கதவளவிற்கே குட்டைச்சுவர்.. அமைப்பான வராண்டா…அதன் மூலையில் கழிவறை…வாசலை ஒட்டிய மண்தரையில் இருந்த புங்க மரம் கிளை தாழ்ந்து அந்த குட்டைச்சுவரில் சாய்ந்து  எட்டிப்பார்க்கும் அழகே அழகு தான்…

அந்த வராண்டாவின் மத்தியில் வாசற்படிகள் முன்னறையில் நுழைவதற்கு…அந்த முன்னறை வரவேற்பு அறை போலவே அமைந்திருந்தது. அந்த அறையில் இருந்து உள்ளாக சென்றால்  சாதாரண அறையை விட கொஞ்சம் பெரிதான கூடம்..அதிலிருந்து நேராக படுக்கையறை. வலப்புறம் சமையல் அறை… அதன்  நேரெதிரில் சுவாமி அறை.

அதற்கு இடையிலான இடைவெளியும் ஒரு தனியறை போன்ற நேர்த்தி பெற்றிருந்தது..கூடத்தின் வலப்புறம் ஒரு கதவு இருக்கும்… அதைத் திறந்தால் இடதுபக்கம் மொட்டைமாடி படிகள்.. வலப்பக்கம்.. விசாலமான சிமெண்ட் தரை சிறிய மைதானம் போல இருக்கும். அதன் ஓரத்தில் வீட்டின் சொந்தக்காரர்கள் வெளியூரிலிருந்து வரும் போது தங்கிக் கொள்வார்கள்…

பார்த்து பார்த்து இந்த வீட்டை கட்டியவர்களுக்கு  விருதுதான் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் வியந்து கொண்டே உள்ளே நுழைந்த போதே ஏதோ ஒரு உந்துதலில் கேட்டேன்.

“அம்மா..இனிமே இதுதான் நம்ம வீடாம்மா..”

“அவள் சற்று அமைதியாக இருந்தாள்..பின்பு புன்னகையை முகத்தில் தவழவிட்டு “ஆமா..இனிமே இது தான் நம்ம வீடு..கடவுள் மனசு வச்சா..நாம எப்பவும் இங்கயே இருக்கலாம்”

கொஞ்சம் விவரம் புரிய ஆரம்பித்தவுடன் தான், என்றாவது ஒருநாள் இ்ங்கிருந்து கிளம்பித் தான் ஆக வேண்டும் என்று புரிந்தது..

அது தான் கிளம்பியாச்சே..ஆனால் அதற்குக் காரணம் ஏதோ புகைமண்டலத்தில் பார்க்கும் காட்சிகள் போல தெளிவாகவும் தெளிவற்றும் இருந்தது…7 வருடங்கள் …

..அந்த வீட்டிற்குச் சொந்தக்காரர்களான தாத்தாவும் பாட்டியும் எப்போதாவது இந்த ஊரில் இருக்கும் சொந்தக்காரர்களைப் பார்க்க வரும் போது எங்கள் வீட்டில் சே..பழக்க தோசம்..அவர்கள் வீட்டில் அந்த தனியறையில் தான் தங்கிக் கொள்வார்கள்…..

அந்த பாட்டியும் தாத்தாவும் எங்களை அவர்களின் பேரன் பேத்தி போல பாசம் காட்டுவதாக அம்மா நெகிழ்ந்து போய் அப்பாவிடம் சொல்வாள்..அந்த பாட்டி ஒருமுறை அம்மாவிடம் சொன்னதை நான் கேட்டு எவ்வளவோ சந்தோஷப்பட்டேன்.

“நீங்க இங்க வந்து அஞ்சாறு வருசம் இருக்குமில்ல..இருந்தா என்ன..இத்தன வருஷமா நீங்க தான் ஒங்க வீடாட்டம் பராமரிக்கிறீங்க…எத்தன வருஷம் வேணும்னாலும் சந்தோஷமா நீங்களே இருங்க…இப்போதைக்கு நாங்க வந்து இங்க இருக்கப் போறதில்ல“… இதை நினைக்கும் போது தான் பழைய சம்பவம் ஒன்றும் நினைவுக்கு வருகிறது.

ப்போது தான் பள்ளி விட்டு வந்து உள்ளே நுழைந்தேன். அம்மா அப்பாவிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்..

“ஏங்க எப்பவும் வருஷத்துக்கு இருநூறு கூட்டுவாங்க..நாமலும் பதில் பேசாம குடுப்போம்..இப்ப திடீர்னு ரெண்டு மடங்கு வாடக கேட்டா என்ன பண்றது?”

“என்னத்த பண்றது..கொஞ்ச வருஷம் நிம்மதியா இருந்தோம்..ம்…இப்ப மறுபடியும் வீடு தேட வேண்டியது தான்..”

“வேண்டாங்க..இங்க..விட்டுட்டு வேற எங்க போனாலும்…சரியா வருமா தெரியல…என்னமோ இங்க அப்படி ஒரு..என்னமோ எனக்குச்  சொல்லத் தெரியல.. ஒருவேள இங்க வந்ததுக்கு அப்பறம் தான் நமக்கு நல்லதா நடக்குது..அதுனால கூட இருக்கலாம்…பேசாம அவங்க கேக்குற வாடகய குடுத்துரலாம்..கஷ்டந்தான்..ஆனா ஏதாவது செலவ கொறச்சு சரி கட்டிக்கலாம்..இப்ப வேற வீடு தேட ஆரம்பிச்சாலும் வாடகை அதிகமாத் தான இப்பெல்லாம் கிடைக்குது..அதுக்கு பேசாம அவங்க கேக்கறத குடுத்துட்டு இங்கயே இருக்கலாம்னு தோணுது…நீங்க என்ன சொல்றீங்க?“

தவிப்போடு பதிலுக்குக் காத்திருந்தது அம்மா மட்டுமல்ல … நானும் தான்….

அப்பா சம்மதத்திற்கு அறிகுறியாய் தலையசைத்ததும் நான் நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

ஆனால் ஒரு மாதத்திற்குள்ளாக மறுபடியும் நான் மூச்சை உள்ளிழுக்க வேண்டியது வரும் என்று எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

“என்னங்க இது… கொஞ்ச நாளைக்கு முந்தி தான இப்போதைக்கு அவுங்க இங்க குடிவர எண்ணமில்லனாங்க…இப்ப ஒரு மாசத்துல குடி வரப் போறாம்..காலி பண்ணுங்கன்னா என்ன அர்த்தம்..“

“வாடகய கூட்டுனப்ப நாமளே காலி பண்றேன்னு சொல்லுவோம்னு நெனச்சிருப்பாங்க..நாம ஒத்துக்கவும் இப்ப அடுத்த விஷயத்த சொல்றாங்க..அவங்க நோக்கம் நம்மள காலி பண்ண வைக்கிறது தான்.. ஆனா..ஏன் இப்ப திடீர்னு என்ன வந்ததுன்னு புரியல“

“உங்களுக்குப் புரியல…புரியாது..இந்த தடவ இவங்க வந்ததும் அந்த வனிதா சம்பந்தமில்லாம ஓடி வந்து விழுந்து விழுந்து கவனிக்கிறாளேன்னு நெனச்சேன்..ஆனா இவ வேல இப்பிடி இருக்கும்னு நான் நெனக்கல“

“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?“

“ஏங்க இது கூடவா புரியல…எப்பவும் அவுங்க வாரப்போ அவ வீட்டு வாசல்ல நின்னுட்டு இருந்தா வாங்கன்னு கேப்பா…ஆனா இந்த தடவ அவங்க வந்ததில இருந்து அடிக்கடி இவ அவுங்கள போய் பாக்குறா…அவ தங்கச்சிய இந்த ஏரியாவுல குடி வைக்கணும்னு ரொம்ப நாளுக்கு முன்னாடி சொல்லல..”

“அதுக்கு நம்மள பத்தி இல்லாதத பொல்லாதது போயி சொல்றான்றியா”

“இல்லாதது இல்ல..இருக்கத தான்..இந்த வீட்டுக்கு இருக்க கிராக்கியத் தான்..இவ்வளோ கம்மி வாடகயில இவ்வளோ நல்ல வீடு இந்த ஊருலயே கெடைக்காதுன்னுருப்பா..நாம தான் இத்தன வருஷம் கம்மி வாடக குடுக்குறோம்னுருப்பா..நீங்க ரொம்ப அப்பாவின்னு சொல்லிருப்பா அவுங்கள பாத்து,“

“அவ தங்கச்சிய குடி வைக்க நாம தானா கெடச்சோம்”

“அது மட்டுமில்ல, அவளுக்கும் அவங்க மச்சான் சம்சாரத்துக்கும் அவங்க இப்ப இருக்கற அந்த பூர்விக வீட்டப் பத்தி சொத்து தகராறு வந்தப்போ…சாட்சிக்கு நம்மள கூப்டா..நீங்க இது குடும்பத்தகராறுன்னு மாட்டேன்னிங்க.. அது மனசுல இல்லாமயா  எப்பவும் இளிச்சு இளிச்சு பேசுறவ..கொஞ்ச நாளா நேராப் பாத்தா கூட சுளுச்சிட்டு போறா..அதான் ஏதேதோ பத்த வச்சுட்டா போல”

“சரி விடு..இதுக்கெல்லாம் நாம என்ன பண்ண முடியும்..நம்ம தலயெழுத்து..நான் புரோக்கருக்குச்  சொல்லி வீடு பாக்க சொல்றேன்”

“சொல்லுங்க..எங்கயாவது யாருமே இல்லாத தீவா பாக்க சொல்லுங்க…எந் தலையெழுத்து…இப்பிடியே பொட்டிய தூக்கிட்டு அலயணும்னு இருக்கு..இங்க இருந்து வெளியேறத்துக்குள்ளயாவது சொந்த வீடு கட்டுப் போவோம்னு நெனச்சேன்..எங்க  ஆசப்பட்டா மட்டும் நடந்துருமா…அதுகெ்கெல்லாம் குடுப்பன வேணும்..அவ சொந்த வீட்டுக்காரி..அடுத்த வீட்டுல நெருப்பள்ளி போடுறா..நாம அப்டியா..இதுக்குத் தான் பேங்க்ல லோன் போட்டாவது கஷ்டப்பட்டு நமக்குன்னு ஒரு வீடு கட்டுங்கனு சொன்னா அது உங்க காதுல ஏறவே ஏறாது….”

“ஏய்..வழக்கம் போல அதே பேச்ச ஆரம்பிக்காத….கடன வாங்கி வீட்ட கட்டிட்டு வாங்குற சம்பளம் மொத்தத்தையும் அத கட்டறதுக்கே அழணும்…அப்பறம் புள்ளங்க படிப்புக்கு என்ன பண்றது..என்னமோ சுலபமா நடக்கற விஷயத்த நான் செய்யாம தள்ளி போடற மாதிரி…உனக்கென்னடி தெரியும் என்னோட கஷ்டம்” அப்பாவின் குரலில் சூடேறியது.

“ஆமா…இதையே சொல்லி என் வாய அடைங்க…இனி போகப் போற வீட்ல இந்த வனிதா மாதிரி யார் இருப்பாங்களோ…எவ்வளவு தான் ஒதுங்கி இருந்தாலும் நமக்குன்னே பிரச்சன பண்றதுக்கு யாரவது வந்திடறாங்க…யார சொல்லியும் குத்தம் இல்ல…எல்லாம் என் தலையெழுத்து”

பேச்சாக ஆரம்பித்து புலம்பலாக மாறி அழுகையாக தொடர்ந்த அம்மாவின் குரல் எனக்கு இன்னும் கேட்கிறது…ம்ம் ஏக்கப் பெருமூச்சு வெளிபட்டது

இந்த வீட்டில் தான் அருள் பிறந்தான்..அவன் நடை பழகியது இந்த சிமெண்ட் மைதானத்தில் தான்.. விடுமுறை நாட்களில் அக்கம் பக்கத்தில் இருக்கும் வானர பட்டாளங்கள் அனைத்தும் தவறாமல் இங்கு ஆஜராகி விடும்…எல்லா விளையாட்டுகளும் விளையாட ஏற்ற  இடம் இந்த மைதானம்….

அவ்வளவு ஏன்  இந்த தரையைச் சுற்றி சுற்றி தான் நானும் அருளும் சைக்கிள் ஓட்டி பழகியது எல்லாம்….. இப்போது இருக்கும் தயக்கம்  இந்த பழைய நினைவுகளுக்காகவா. …அல்லது புதிய  இடம் இத்தனை  வசதிகள் கொண்டிருக்குமா என்று புரியாததாலா …அதுவும் தற்காலிகம் என்னும் உணர்வு வந்துவிட்டதாலா என்று தெரியவில்லை..

ஆனால் ஒன்று மட்டும் உறுதி….அம்மாவின் சொந்த வீடு குறித்த ஏக்கம் இது போன்று பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பும் சமயங்களில் தான் பன்மடங்கு பல்கிப் பெருகும்..அதை சமாளிக்கும் ஆயுதம் அப்பாவின் சிடுசிடுப்பு….

என்றாவது ஒருநாள் போக வேண்டியது என்று தெரியும்…ஆனால் எந்த காரணமும் இல்லாமல் யாரோ ஒருவர் நினைத்த மாத்திரத்தில் இதை நடத்திவிட முடியும் என்று தெரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு உலக அனுபவம் போதவில்லை…

உதட்டில் இருக்கும் புன்னகை உள்ளத்திலும் இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு தான் என் அறிவும் தெளிவும்…என்ன செய்ய…

மாடியின் பலகணி வழியாக நீண்டிருக்கும் புங்க மரத்தின் கிளைகளுக்கடியில் தான் …நேரம் போவது தெரியாமல் எப்போதும் நான் நின்று கொண்டிருப்பேன்.. அப்படி ஒருமுறை போன போது ஒரு  காகம் என்னை வந்து கொத்தப் பார்த்தது.. அப்போது தான் அதில் ஒரு கூடு கட்டி முட்டை வைத்திருப்பதைப் பார்த்தேன்…

அடுத்த நாள் நான் பள்ளி விட்டு வரும்போது அந்த மரத்தை ஒருவர் வெட்டிக் கொண்டிருந்தார். அது அவர்களுடைய அறை வரை வேர் விடுகிறதென்று வீட்டுக்கார பாட்டி வெட்டச் சொன்னார்களாம்..எனக்கு அந்த கூட்டின் நினைவு வந்து மாடிக்கு ஓடினேன்.

அங்கு காகம் இல்லை..கூடும் இல்லை…ஆனால், என் தலைக்கு அருகில் தாழப்பறந்த காகத்தைப் பார்த்தேன். வாயில் ஏதோ குச்சியைக் கவ்விக் கொண்டிருந்தது…அதை தன் புதிய வீட்டில் சேர்ப்பித்து விட்டு மீண்டும் குச்சி எடுக்க பறந்து கொண்டிருந்தது..வீட்டின் அருகில் இருந்த காலியிடத்தில் அடர்ந்து வளர்ந்திருந்த ஏதோ ஒரு மரத்தில் தன் முட்டையைப் பாதுகாப்பாக வைத்து விட்டு மறுபடியும் தன் வீட்டை அது கட்டிக் கொண்டிருந்தது..

அப்போது நினைத்தேன்..பாவம்..இப்படி திடீரென்று அது தன் இருப்பிடத்தை இழந்து விட்டதே..எலி வளையானாலும் தனிவளை வேண்டுமென்று இதற்குத் தான் சொல்வார்கள் போல..அது தொடர்பில்லாமல் இப்போது நினைவு வந்து, அது காகத்திற்குச் சொன்னதல்ல என்று உணர்த்துகிறது..ஆனால், காகம் தன் அடுத்த இடத்தைத் தேடிக்கொண்டதே அதுதான் எதார்த்தம்..

ஆட்டோ நின்றது..எங்கள் புதிய வீட்டின் முன்..அன்று அந்த வீட்டில் நுழையும் போது இருந்த பரபரப்பு எங்கள் யாருக்கும் இல்லை..அமைதியாக நுழைந்தோம்..ஆனால் அருள் மட்டும் அடங்கா ஆர்வத்துடன் அந்த காலி வீட்டில் அங்குமிங்கும் ஓடினான். கடைசியில் அம்மாவிடம் கேட்டான்..“ஏம்மா ..இனிமே இதான் நம்ம வீடா”

நான் அன்று கேட்ட அதே கேள்வியை அவனும் கேட்கிறான்…ஆனால்  இன்று அம்மாவை முந்திக் கொண்டு நான் பதில் சொன்னேன்.

“ஆமாடா அருள்..இனிமே கொஞ்ச வருஷத்துக்கு மட்டும் இது தான் நம்ம வீடு”

அவனுக்குப் புரியவில்லை..அவனுக்கும் புரியும் போது அந்த காக்கை தன் புதிய இருப்பிடத்தைத் தேடி மறுபடியும் சென்று கொண்டிருக்கும்.

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads – Deals in Amazon👇

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    புலி…புலியாகவே இருக்கட்டும் (சிறுகதை) – ✍ முகில் தினகரன், கோவை

    ஆழியின் காதலி ❤ (பகுதி 17) -✍ விபா விஷா, USA