கரகரத்த ரேடியோவில் தேன் குரலில் பாடல் ஒன்று ஒலித்துக் கொண்டிருந்தது. லடக் லடக்கெனச் சுற்றும் காற்றடியால் கான்க்ரீட் கூரையின் மூலையில் ஆடிக் கொண்டிருந்த ஒட்டடையை வாய்ப் பிளந்து பார்த்தவாறு, விரல்களால் தொடையில் தாளம் போட்டபடி உட்கார்ந்திருந்தார், அந்த மருத்துவமனையின் கம்பவுண்டர் ராமசாமி.
இமைகள் இரண்டும் ஒட்டாமலிருக்க போராடிக் கொண்டிருந்தன. அந்த நள்ளிரவில் கொட்டிக் கொண்டிருந்த பேய்மழையோ, ரேடியோவின் இசையை விழுங்கி விடும் போல் உறுமிக் கொண்டிருந்தது
‘தடால்ல்’ – பேய்மழையின் இரைச்சலையும் விழுங்குவது போல், தூரத்திலிருந்து எழுந்தது ஒரு பெருஞ்சத்தம்
அந்த பேரொலியில், அறையின் ஜன்னல்கள் அதிர்ந்தன. அரைத் தூக்கத்திலிருந்த கம்பவுண்டர் தூக்கி வாரிப் போட எழுந்தார். எழுந்த வேகத்தில், என்ன நடந்ததென புரியாத பதற்றத்துடன், குடையை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினார்.
சத்தம் கேட்டு, பலர் அந்த மருத்துவமனை வாயிலில் திரண்டிருந்தனர். வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸுகள், காதைக் கிழிக்கும் சைரன் சத்தத்தோடு சிட்டாய்ப் பறந்தன
சற்று நேரத்தில் திரும்பி வந்த ஆம்புலன்ஸுகளில் இருந்து, நான்கு நபர்கள் அவசர சிகிச்சை பிரிவினுள் கொண்டுச் செல்லப்பட்டனர்.
“விபத்துல அடிபட்டவங்க இவ்வளவுதானா?” சந்தேகத்துடன் கேட்டார் மருத்துவர்
“இல்ல மேடம், இவங்க மட்டுந்தான் முழுசா இருந்தாங்க” என்றார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.
ஐசியூ-வில் அல்லாடிக் கொண்டிருந்த நால்வரில், இரண்டு நபர்களின் நாடித் துடிப்பு அடுத்தடுத்து நின்று போனது
மீதமிருந்த இருவரில் ஒருவர் நிலைமை படுமோசமாய் இருந்தது. இரவு தாண்டுவதே சந்தேகம் தான். கடைசியாக இருந்தது ஒருவன் மட்டுமே. அவனும் சுயநினைவின்றிக் கிடந்தான
எப்பாடுபட்டாவது, இவனையாவது காப்பாற்றிவிட வேண்டுமெனக் கங்கணம் கட்டிக் கொண்டது போல் செயல்பட்டனர் மருத்துவர்கள்.
அவன் காதிலிருந்து எட்டிப் பார்த்தக் கருஞ்சிவப்புக் குருதி, மூக்கிலிருந்து எத்தடையுமின்றி வழிந்தோடி அவன் கழுத்திற்குக் கீழே குட்டை போலத் தேங்கியது. முகமோ தீயால் தீண்டப்பட்டு ஆங்காங்கே வெந்து போய்க் கொத கொதவென இருந்தது.
சில மணி நேர தீவிர சிகிச்சைக்குப் பின், அவனிடமிருந்து நழுவிப் போய்க் கொண்டிருந்த உயிரைப், போராடி அவன் உடலோடு இழுத்துக் கட்டினர் மருத்துவர்கள்
ஆனாலும் அவனது சுயநினைவு என்னவோ இன்னும் திரும்பிய பாடில்லை. அவன் தற்காலிக கோமாவில் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
பிறகு, கம்பவுண்டர் ராமசாமி கோமாவில் கிடந்தவனை லாவகமாகப் பிடித்து அவனது கைகளை உயர்த்தி, முதுகைத் திருப்பி, பிட்டத்தை நிமிர்த்தி, அவன் உடலில் எந்தத் தையலும் பிரியாதவாறு, நோயாளிகளுக்கே உரித்தான வெண்ணிற ஆடையை அவனுடலில் உடுத்தினார்.
“இந்தருப்பா இடுப்புச் சுருக்குல கத்தியெல்லாம் வெச்சிருக்காப்ல” ராமசாமி சொல்லிக் கொண்டே, அதை அருகிலிருந்த பிளாஸ்டிக் தட்டில் வைத்தார்.
“காடுவெட்டியா இருந்துருப்பாரு போல, ஆளப் பாத்தா அப்புடித்தான் தெரியுது” என இன்னொரு காம்பவுண்டர் பதிலளித்தார்
“கையக் காலப் பாத்தாலேத் தெரியிலே? எப்புடிக் காச்சிப் போயி முறுக்கேறிக் கெடக்குப் பாரு.”
அவனது உடல் ஏறக்குறைய பாதி மெத்தையை தான் ஆக்கிரமித்திருந்தது. உயரம் ஐந்தடி இருந்தாலேப் பெரிது
சதையென்று சொல்லிக் கொள்ளும்படி உடலில் ஏதுமில்லை என்றாலும், தசைகள் இறுகி நரம்புகள் புடைத்திருந்தது
அவன் உடலைப் பார்த்தால், ஒரே மூச்சில் தலை மேல் நான்கு மணல் மூட்டைகளுடன், முழங்காலளவுச் சேற்றில் மூச்சிரைக்காமல் இறங்கி சர்வ சாதாரணமாக நடப்பவன் போலிருந்தான்
வயதோ நாற்பதுகளின் மத்தியில் இருக்குமென தோன்றியது. வயதுக்கேற்ற நரைமுடி, தலை மயிரிலும் முட்புதர் போன்ற தாடியிலும் மண்டியிருந்தது.
சட்டென்று எங்கிருந்தோ உள்ளே நுழைந்த, சுமார் முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மருத்துவர், “இவரோட கொண்டு வந்த பையில ஏதும் பேரு, போன் நம்பர் இருக்காப் பாருங்க, சம்பந்தப்பட்டவங்களுக்குத் தெரிவிக்கணும்” என்றார்.
அந்தப் பையோ தீயில் கருகி மழையில் நனைந்து உருமாறி இருந்தது. அதனுள் சேதத்துக்கு தப்பிய சில துணிமணிகளும், உள்பக்கமாய் ஒரு டைரியும் இருந்தது. ஓரங்கள் கருகியிருந்தத் தாள்களைப் புரட்டி, ஏதாவது போன் நம்பர் இருக்கிறதா என தேடினார் கம்பவுண்டர் ராமசாமி
“ஏதாவது முகவரி இருந்தாலும் பாருங்கண்ணே, தபாலாவது அனுப்பலாம்” என்றார் மருத்துவர்.
கவனமான தேடுதலுக்குப் பின், “அந்த மாதிரி எதுவுமில்ல மேடம். டைரி முழுக்க ஏதேதோ எழுதி வெச்சிருக்காரு, பாவம், அடிபட்டு இப்புடி ஆஸ்பிட்டல்ல கெடப்போம்னு கண்டாரா என்ன!” என நொந்துக் கொண்டார் ராமசாமி.
படுக்கையில் கிடந்தவனின் பெயரும் முகவரியும் மட்டும் தான் டைரியில் இல்லையே தவிர, அவனது மொத்த வரலாறே டைரியின் காய்ந்த பக்கங்களில் கொப்பளித்துக் கொண்டிருந்தது
ஆனால் அது அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை. அந்த டைரி, கேட்பாரின்றி அனாதையாய் பிளாஸ்டிக் தட்டில் கிடந்தது
பரிதாபமாய், வந்து பார்க்கக் கூட ஆளில்லாமல் கிடந்தவனின் உண்மையான முகம், டைரியின் அட்டையால் மூடப்பட்டிருந்தது
தூரத்து நகரத்திலிருந்து வந்த மெயின் ரோடு, மணியடித்ததும் சிதறியோடும் பள்ளிச் சிறுவர்களைப் போல எட்டுத் திசையிலும் பல குறுஞ்சாலைகளாகப் பிரிந்து சென்றது
அப்படிச் சென்ற குறுஞ்சாலைகளிலிருந்து, மேலும் சில பல கிளைச்சாலைகள் தோன்றி, ஒவ்வொரு கிளையின் முடிவிலும், ஒரு கிராமம் நின்று அதனை வரவேற்றது
ஒரு ஐம்பதடி உயரத்திலிருந்து பார்த்தால், ஏதோ நகரம் தனது ராட்சத நாவைக் கொண்டு, அதிலிருந்து பிரிந்த பல நாக்குகளால் கிராமங்களை இழுத்துப் பிடித்து விழுங்கக் காத்திருப்பதாகத் தோன்றும்.
அப்படிப் பல கிராமங்களை இணைக்கும் ஒரு கூட்டு ரோட்டின் அருகில் இருந்தது அந்த மருத்துவமனை
அது ஒட்டு மொத்த கிராமங்களின் ஆனந்தப் பூங்காவாகவும், துக்கம் அடைக்கும் வீடாகவும், பிணியால் நோகும் உயிர்கள் வாழும் காடாகவும், மரணத்தை வென்றோமென்ற மகிழ்ச்சித் ததும்பும் இடமாகவும் திகழ்ந்தது
அங்கே பல உயிர்கள் பிறந்து பல உயிர்கள் மடிந்து, அக்கட்டிடமே ஒட்டு மொத்த உலக வாழ்க்கையின் பேசும் சித்திரமாய் விளங்கியது
ஆனால் என்ன தான் அங்கே உயிர்கள் பல காவு வாங்கப்பட்டாலும், அது நம்பிக்கையின் ஊற்றாய் மானுட மனதில் எப்போதும் கசிந்துக் கொண்டிருப்பது மாத்திரம், புதிராகவே உள்ளது.
ஒரு மாபெரும் திடல் போலான நிலத்தைப் பிளந்து, வேரூன்றி நின்று கொண்டிருந்தது அந்த மருத்துவமனை
சுற்றுவட்டாரத்தில் இருந்த ஒரே கான்க்ரீட் கட்டிடம் அது தான். சுற்றிலும் பூவரசம், வேம்பு, மா, அரசம் போன்ற பலவகை மரங்கள் காற்றுக்கேற்றபடி சலசலவென இலைகளாலும், நறநறவென கிளைகளாலும் இசை பாடிக் கொண்டிருந்தன
வீசும் காற்றினால் மரமசைகிறதா அல்லது மரத்தின் அசைவால் காற்று வீசுகிறதா என, பார்ப்பவர்கள் பல நேரம் குழம்பிப் போய் நின்றதுமுண்டு.
மருத்துவமனையில் சுமார் ஏழெட்டு மருத்துவர்களும், செவிலியர்களும், சில மருத்துவ உதவியாளர்களும் ஷிப்டு முறையில் பணியாற்றி வந்தனர்
அங்கு முதன்மை மருத்துவர்களில் ஒருவராக இருந்தார் தேன்மொழி. அவரோடு எப்போதும் மூன்று மருத்துவர்கள் இருப்பார்கள், அதிலொருவர் பயிற்சி மருத்துவர். அந்தக் குழு தான், உயிர் பிழைத்த அந்த பெயர் தெரியா ஜீவனுக்கு சிகிச்சையளித்து வந்தது.
#ad
Harry Potter Collection In Amazon.in 👇
நாட்கள் நகர்ந்தன. அந்த மருத்துவமனை வளாகத்தில், சுமார் ஏழு உயிர்கள் பிறந்தும், நான்கு உயிர்கள் மடிந்துமிருந்தன. ஆனால் படுக்கையில் கிடந்தவனின் கோமா மாத்திரம் இன்னும் தெளியவில்லை.
வாழவும் விடாமல் சாகவும் விடாமல் அவனைக் கட்டிலிலேயே கட்டிப் போட்டிருந்தது. மருத்துவர்களும் ஏதேதோ சிகிச்சையளித்துப் பார்த்தார்கள், பெரிதாய் பலனேதுமில்லை
காயங்கள் ஆறி வடுக்கள் ஆனதே தவிர, சுயநினைவு மாத்திரம் திரும்பிய பாடில்லை.
பொதுவாக இரவு நேரப் பணியில் சில செவிலியர்களும், இரண்டு மூன்று கம்பவுண்டர்களும், உள் வளாகத்தில் இருப்பது வழக்கம்
கோமாவில் கிடந்தவனுக்கு வேண்டிய சிக்ஷைகளை செய்தபின், அவனை போர்வையால் போர்த்தி விட்டு வெளியேறினார் கம்பவுண்டர் ராமசாமி.
அறையின் விளக்கை அணைக்க மறந்த அவர், மீண்டும் அறைக்குள் சென்ற போது, கண்ணில் பட்டது அந்த டைரி
தீயினால் ஆங்காங்கே கருகியிருந்த டைரியின் மேல் ராமசாமிக்குப் பெரிதாக ஈர்ப்பில்லையென்றாலும், அன்றைய பொழுதின் கால்வாசியையாவது அதைப் படித்துக் கழிக்கலாமே என்ற எண்ணத்தில் கையில் எடுத்தார்
கையில் டைரியுடன் சாவகாசமாய்ப் ஓர் இருக்கையில் சென்று அமர்ந்தார். டைரியின் கரிய பக்கங்கள், அன்று அவரால் திறக்கப்பட்டது.
முதல் சில பக்கங்கள், கோடுகளாலும் கிறுக்கல்களாலும் நிரம்பியிருந்தன. சிலப் பக்கங்களுக்குப் பிறகு, கிறுக்கல்கள் எழுத்துக்களாயின
அவ்வெழுத்துக்களே கிறுக்கல்களின் கிரீடமாய்த் திகழ்ந்தது. முதலில் அதைப் படித்த ராமசாமிக்கு ஒன்றும் புரியவில்லையென்றாலும், போகப் போக காரிருளில் கண்கள் பார்க்கப் பழகிக் கொள்வது போல, கிறுக்கல்களே கையெழுத்தானது
எதற்கும் மனம் பழகிவிடுவது உண்மை தான் போல. டைரியின் பக்கங்களினுள் அவர் கண்கள் உள்ளிறங்கிச் சென்றன.
இது என்னடே ரோதனயாப் போச்சு… வயல்லே ஒதுங்க முடியாம, கொளத்துக் கரையிலே பல்லு வெலக்க முடியாம… அப்பிடியே அன்னிக்கு சிரிச்சப் பயலுவ மொவரையில துப்பிருக்கணும்.
மாடு மேக்கப் பய, முன்னாடி மேயிற மாட்டப் பாப்பானா, என்னைய பாத்து இளிச்சிக்கிட்டே நடக்குறான். அவ்வளோ துளிர்விட்டுப் போயிடிச்சுதே.
எம்ப்டே முருகேசா நானாடே பூக்கண்ண! ஒம்மொவரையக் கண்ணாடியிலேக் கண்டுருக்கியானு அன்னிக்கிக் கேட்டிருக்கணும், என்னவோ தோணாம போச்சு சனியென்
வெட்டிப் போட்டாலுங் கேக்க நாதியில்லாதப் பய, இவன் என்னைய பூகண்ணங்குறான். ஏதோ கைகலப்பு வந்துச்சுன்னா, எங்கிட்ட வாங்குன மெதிக்கு ‘எனக்குஞ் சூடு சொரணையெல்லாமிருக்கு’னு காட்ட பதிலுக்கு ரெண்டு கொடுத்துப்புட்டு போயிருக்கணும். அதென்ன பேர நாசஞ் செய்யிறது?
அன்னிக்குப் பஞ்சாயத்துல அந்தக் கெழட்டுப் பயலுவ நாட்டாமை செய்யாம இருந்துருந்தா, அங்கனவே வுட்டுப் பொரட்டிப் போட்ருப்பேன் அந்தப் பயல. நானாடே பூக்கண்ணன்? கொப்புறானே ஒம்பொண்டாட்டியத் தாலியறுக்க வெக்கிலென்னாதாடே நா பூக்கண்ணன்.
இப்படிக்கு,
அன்பு பேரன்
டைரியை வாசித்ததும், சட்டென்று எழுந்து அறையில் படுத்திருந்தவனின் இமைகளைத் திறந்துப் பார்த்தார் ராமசாமி. அவன் இடது கண்விழியில் வெள்ளையாய், பூவொன்று விழுந்ததைப் போல சிறிய வடு ஒன்று இருந்தது
வெளியே வந்த ராமசாமிக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. பட்டைப் பெயர் வைத்துச் சண்டையிடும் சிறுவர்கள் போலும் முருகேசனும் பூக்கண்ணனும் என டைரியில் படித்ததில் இருந்து புரிந்து கொண்டார்
ஆம், அவனின் பெயர் பூக்கண்ணனாகவே அவர் மனதில் பதிந்துவிட்டது. டைரியின் பக்கங்களைப் தொடர்ந்து புரட்டினார்.
காட்டாத்துக் கரையிலே எளங்கொழுந்தையும் வேப்பங்குச்சியவும் ஒடிக்க கெளமேல ஒக்காந்திருக்கேன். முந்தா நேத்திப் பேஞ்ச மழையில நொரதள்ள ஓடிக்கிட்டுருக்குக் காட்டாத்துத் தண்ணி.
காலையிலே பச்சமொளகா வெச்சுக் கஞ்சியக் குடிச்சிப்புட்டு, மாட்டக் கட்டிக்கிட்டு வயல்ல ஒரு ஏழெட்டு ரவுண்டு உழுதுபோட்டுபுட்டு மாட்டோட வந்திருக்கானுவப் பயலுவ
என்னத்தான் அவனுவ பேசுவானுவலோத் தெரியில, எப்பா கொஞ்ச நஞ்சக் கூத்தா அடிக்குறானுவ. தண்ணிலேயுஞ் சேத்துலேயும் வுழுந்துப் பொரளுறானுவ.
அப்போ அங்க ரெண்டுக்கு குட்டிங்க வருது. அதுல ஒண்ணு வெளுப்பாச் சுமாராயிருந்தாலும், கூட வர்றது நல்ல கருப்பா மூக்கும்முழியுமா இருக்கு. மொகம் நல்லா சான புடிச்ச ஈட்டி போல கூரா இருக்குது
சிரிப்பாடே அது, சீமச்சிருப்பு! இப்புடி ஒருத்தி ஊருக்குள்ள இருக்கான்னேத் தெரியாமத் போச்சே! மாடுங்களே தண்ணியப் பாத்தா மெரளுதுங்க. இந்தப் புள்ளைங்களோ ஏதோ பம்பு செட்டுல எறங்குறது போல அவ்வளோ அலட்சியமா எறங்குதுங்க!
இந்தப் புள்ளைங்களும் மாட்டுக்கார பயலுவலுந் தெரிஞ்சவய்ங்கப் போல… ஏதேதோ பேசிக்கிறானுவ. அப்போ அரசல் புரசலா அவபேருக் காதுல வுழுந்திச்சு, பொன்னம்மான்னு
சரி அவளப் பொண்ணு கேட்டுக் கலியாணங் கட்டிக்கிடலானு நெனக்கயில, பண்ணையாரு காட்டுல வேலக்கிக் கூட்டு வுட்டுருக்காரு.
வேற எவங்கூப்பிட்டு வுட்டுருந்தாலும், போடானு போயிருப்பேன். எங்கப்பஞ் செத்ததுக்கு அப்புறம், அவருதான அப்பப்ப சாப்பாடும் போட்டு துட்டுங் கொடுத்துருக்காரு
அந்தத் துட்டுல தான எங்காத்தாவுக்குக் கஞ்சியெல்லாம், அவுரு கூப்புட்டுப் போவலன்னா நல்லாவாயிருக்கும்? சரினுப் போயிட்டேன்
மூணு மாசங்கிட்ட ஆயிடிச்சு. எந்த எழவெடுத்தவன் மண்டையக் கொழப்பினானோத் தெரியிலே, பொன்னம்மாங்குறப் பேரு காலப் போக்குலக் கண்ணம்மானுப் பதிஞ்சிடுச்சு
நானுங் கண்ணம்மா கண்ணம்மானுக் காட்டுக்குள்ளச் சுத்திகிட்டுக் கெடந்தேன்
வேல முடிஞ்சி ஊருக்குள்ள வந்தப் பெறவு, கண்ணம்மா வூடு எங்கனு விசாரிச்சுப், படுக்கையிலக் கெடந்த ஆத்தாவயெழுப்பிக் கூட்டியிட்டுப் பொண்ணு கேக்கப் போனேன்
உள்ளப் போயி பாத்தா, அன்னிக்கு ஆத்தங்கரையிலே பாத்த அதே மொவம், சொவத்துல மாட்டியிருந்தப் போட்டோல இருக்குது.
ஒரு வாழப்பழத்த உள்ள தள்ளிட்டு, கண்ணம்மாவ பொண்ணு கேக்க வந்தோமுனு எங்காத்தா சொல்ல, அவனுவ என்னமோ குசுகுசுனு பேசிட்டுப், பொண்ண வரச் சொல்லிப்புட்டானுவ
என்னடா எல்லாம் வசமா முடிஞ்சிட்டேனு நெனைக்கயிலே, ஒருத்தி வந்தா காப்பித் தண்ணிய எடுத்துக்கிட்டு. யாருடா இதுனுப் பாக்குறேன், அன்னிக்குப் பாத்த மாதிரி இல்லையே!
கண்ணம்மா சாயல் இருக்குத் தான். ஆள் வேற லேசா வெளுத்துருக்கா, கட்டையா வேறப் போயிட்டா! நாலு மாசத்துக்குள்ள இப்புடியா உருவமெல்லா மாறும்?
அப்பக் கூட கேக்கறேன் “இது கண்ணம்மாதானா”னு. எல்லாப் பயலுவலும் ஆமாமுன்னு மண்டையாட்டினானுவ. சரி நம்ம கண்ணுதான் அவிஞ்சிப்புடுச்சுன்னு நெனச்சி, காப்பியக் குடிச்சிப் போட்டு சம்மதஞ் சொல்லிப்புட்டேன்.
எழுந்துப் போவையில மறுபடியும் அந்தப் போட்டோ கண்ணுலப் பட்டுது. போட்டோல இருக்கறதவிட இப்போக் கலராயிட்டா ஒங்க மவன்னு வூட்டாளுவலப் பாத்துச் சொல்லுறேன்.
எல்லோரும் வுழுந்து வுழுந்துச் சிரிக்கிறானுவ. என்னடான்னுக் கேட்டதுக்குச் சொல்றானுவ, அந்த போட்டோவுல இருக்கறது பொன்னம்மாவாம். இவளோட அக்காக்காரியாம்
மூனு மாசத்துக்கு முன்னாலேயே கண்ணாலம் முடிச்சி அவப் புருசங்காரனோடப் போயிட்டாளாம். இவ தான் கண்ணம்மானு தலைக்குப் பின்னால இருந்த போட்டோவக் காட்டுறானுவ.
கருமம்புடிச்சப் பய, பொன்னம்மாக்குத் தங்கச்சியக் கண்ணம்மான்னா பேரு வெப்பான்? அவ்வளதான். பொன்னம்மா கண்ணம்மான்னு ஆயி கண்ணம்மா எம்பொண்டாட்டியும் ஆயிட்டா. இப்போ ஏழு மாசம் முழுகாமயிருக்கா.
இப்படிக்கு,
அன்பு பேரன்.
டைரியை மூடி வைத்துவிட்டு, விழுந்து விழுந்துச் சிரித்தார் கம்பவுண்டர் ராமசாமி. ‘அட லூசுப் பயலே, கண்ணம்மாவுக்கும் பொன்னம்மாவுக்கும் வித்தியாசம் கூடத் தெரியாம பொண்ணு பாத்து, அதுக்குச் சம்மதம் வேறச் சொல்லிருக்கியே! இவ்வளோ ஏமாளியாவாப்பா இருப்ப!’ என மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.
#ad
South Indian Cook Books In Amazon.in 👇
மேலும் சில பக்கங்களைப் புரட்டினார். அனைத்திலும் ‘அன்பு பேரன்’ எழுதியக் கடிதங்களாகவே இருந்தன
பூக்கண்ணன் கோயில் திருவிழாவில் பந்தக்கால் நட்டதையும், வயலில் பிடித்த நண்டுகளை வாய்க்காலில் தவற விட்டதையும், சாராயம் தலைக்கேறிப் புதரில் விழுந்துக் கிடந்ததையும் எழுதியிருந்தான்
அதுமட்டுமின்றி, மாட்டுச் சந்தையில் மறுபடி முருகேசனோடு தகராறு ஏற்பட்டு அதே போல் ‘உன் பொண்டாட்டித் தாலியை அறுப்பே’னென்று வசைபாடியதையும், பண்ணையார் நான்கு மூட்டை நெல் வழங்கியதையும், கண்ணம்மாவுக்குப் பண்ணையாரைத் துளிகூடப் பிடிக்கவில்லை என்பதையும், அதனால் இருவருக்கும் பேச்சறுந்துப் போனதையும், மறுபடி பண்ணையாரின் காட்டு வேலைக்கு மூன்று மாதம் போனதையும், அவனுக்கே உரிய, எடுத்தெறிந்து ஏளனமாய்ப் பேசும் நடையோடு எழுதியிருந்தான் பூக்கண்ணன்.
ராமசாமிக்கோ பொழுது போவதேத் தெரியவில்லை. ஏதோ நாவல் படிப்பது போன்று, பூக்கண்ணனின் நிஜவாழ்வுக் கதை மாந்தர்களோடு ஒன்றி விட்டார்.
என்ன தான் பூக்கண்ணன் எல்லோரையும் ஏசிக் கொண்டே இருந்தாலும், அவனை ஏனோ ராமசாமிக்குப் பிடித்துப் போய்விட்டது
அது அவன் கதை சொல்லுமிடத்தில் இருந்ததாலா, உள்ளதை உள்ளபடியேச் சொல்கிறானே என ராமசாமி எண்ணியதாலா, அவன் அப்பாவியாக இருக்கிறானே என்று நம்பியதாலா, அல்லது டைரியில் அத்தனைப் பெயர்களிருந்தும், வந்து பார்க்க ஆளின்றி அனாதையாய்ப் படுக்கையில் கிடக்கிறானே என்ற பரிதாப உணர்வாலா என்பது சரியாகத் தெரியவில்லை.
ஏதோ பிடித்திருந்தது. கிழக்கு வெளுக்கச் சில மணிநேரமிருக்க, உடலை முறித்துச் சோம்பலெடுத்துக் கண்களை மூடினார் கம்பவுண்டர்.
அன்று, வழக்கமான மருத்துவச் பரிசோதனையின் போது, பூக்கண்ணனின் கால் விரல் அசைவதைக் கண்டனர் மருத்துவர்கள்
(தொடரும்…அக்டோபர் 21, 2020)
இந்த குறுநாவலை முழுதும் வாசித்ததும், நான் கதாசிரியரிடம் பகிர்ந்த வார்த்தைகள் இது தான் “Mark my words, you will go places”
ஏனெனில், இது போன்ற கனமான கதைக்களன் எடுத்து, அதை தொய்வின்றி கொண்டு செல்வது மட்டுமின்றி, வாசிப்பவர்களுக்கு அடுத்து என்ன என்ற சுவாரஷ்யத்தை ஏற்படுத்துவது சுலபமல்ல. அதை எழுத்தாளர், சிறப்பாய் செய்திருக்கிறார்
உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், இது போன்ற கனமான கதைகள் எனது விருப்பமாய் இருந்ததில்லை. Light Reading வகை கதைகளே பெரும்பாலும் எனது புத்தக அலமாரியில் இருக்கும்
ஆனால், இந்த குறுநாவல் அதை உடைத்து விட்டது என்றே சொல்லலாம். இது முதல் பகுதி தான், மூன்று பகுதிகளையும் வாசித்த பின், நீங்களும் நான் சொல்வதை ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன். நன்றி
உங்கள் எழுத்தை சஹானா இணைய இதழுக்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க கார்த்திக்
எழுத்துத் துறையில் மென் மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
கதாசிரியர் பற்றி:
இந்த குறுநாவலை எழுதியவர், வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர் கார்த்திக். இவரின் இயற்பெயர் ஸ்ரீராம், சென்னையைச் சேர்ந்தவர். I’m passionate about writing என்கிறார், குறிப்பாய் நாவல்கள் எழுதுவதில் விருப்பம் இவருக்கு
பள்ளி நாட்களில், ஜோனல் லெவல் கவிதை போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து பல சிறுகதைப் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்
சிறந்த நாவலாசிரியராய் வர வேண்டுமென்ற முனைப்புடன், தேர்ந்தெடுத்த கதைக்களங்களில், படைப்புகளை கொடுத்து வருகிறார்
அந்த வகையில், “பூக்கண்ணன்” என்ற இந்த குறுநாவல், தன் படைப்புகளில் முக்கியம் வாய்ந்த ஒன்று என்கிறார் கார்த்திக்
Good story.
Thank you
தொடரக் காத்திருக்கேன்.
Thank you