ஆன்மீகம் நவராத்திரி

நவராத்திரி வழிபாடு உருவான கதை (நவராத்திரி பதிவு 1)  – எழுதியவர்: கீதா சாம்பசிவம்

சாகாவரம் பெற்ற அசுரர்கள்

பல யுகங்களுக்கு முன் வாழ்ந்த சும்ப, நிசும்பர்கள் என்னும் அரக்கர்கள், தங்கள் படைத்தளபதிகளான சண்டன், முண்டன், ரக்தபீஜன் ஆகியோருடன், மிகுந்த பலம் கொண்ட அரசர்களாக விளங்கினார்கள்.

ஈசனை நோக்கிக் கடுந்தவம் புரிந்து வந்த அவர்கள் சாகாவரம் வேண்ட, ஈசன் அதனைக் கொடுக்க மறுத்தார்.

அதற்கு அவர்கள், இந்த உலகிலேயே பெண்கள் தான் பலம் குறைந்த பலஹீனர்கள். ஆண்களைச் சார்ந்து இருப்பவர்கள். ஆகவே எங்களுக்குப் பெண்ணால் மரணம் ஏற்படட்டும் என வரம் கேட்டனர்

இதன் மூலம் தாங்கள் சாகாவரம் பெற்று வாழலாம் என்பது அவர்கள் எண்ணம்.

ஈசன் வழங்கிய வரம்

ஈசனை ஏமாற்ற முடியுமா?

இந்த உலகும், அதன் மக்களும் மற்றும் தேவாதி தேவர்களும், சில காலம் இந்த அரக்கர்களின் அட்டகாசத்தைச் சகித்துக் கொள்ள வேண்டியது தான். இதற்கு முடிவு கட்ட வேண்டியவள் ஆதி பராசக்தியே என எண்ணிக் கொண்டு, அவர்கள் கேட்ட வரத்தைக் கொடுத்து மறைந்தார் ஈசன்.

கேட்ட வரம் கிடைத்ததும், அசுரர்களின் அட்டகாசம் தொடர்ந்தது.

பெண்களையும், குழந்தைகளையும் அதிகம் துன்புறுத்தினார்கள். சொல்ல முடியாத துன்பங்களை மக்கள் அனுபவித்தனர்.

பூமியில் பெண்ணினத்தையே அழித்து விடுவார்களோ என்னும் கலக்கம் அனைவருக்கும் ஏற்படவே, மும்மூர்த்திகளும் தேவி ஆதி பராசக்தியைப் போற்றித் துதித்தனர்

வேண்டியவர்கள் கண் முன் அன்னை காட்சி அளிக்க, அவளிடம் மக்கள் படும் பாட்டை எடுத்துரைத்தனர்.

அபயக்கரம் நீட்டிய அன்னை

“இவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” என வாக்களித்த அன்னை, போர்க்கோலம் பூண்டு அசுரர்களை அழிக்கக் கிளம்பினாள்.

அப்போது மும்மூர்த்திகளும் தேவர்களும், தங்கள் அம்சமாக சப்த கன்னிகைகளை உருவாக்கினார்கள்.

அவர்கள் பிராமி, வைஷ்ணவி, வாராஹி, மாஹேஸ்வரி, இந்திராணி, நாரசிம்ஹி, சாமுண்டி ஆகியோர் ஆவர். அந்த சப்த கன்னிகைகள், அன்னையின் படைக்குத் தளபதிகள் ஆயினர்.

ஒரு சிலர் நாரசிம்ஹிக்குப் பதிலாகக் கௌமாரி என்றும் கூறுவார்கள். இப்படி தேவாதி தேவர்களும், மும்மூர்த்திகளும் தங்கள் சக்தியை சப்த கன்னிகைகள் வடிவில் அம்மனிடம் கொடுத்துவிட்டபடியால், எதுவும் செய்யச் சக்தியின்றி சிலை போல் நின்றனர்

இப்படி அனைவரும் சிலைகளாக நின்ற நிகழ்வை குறித்தே, இவர்களை பொம்மைகளாகக் கொலுவில் வைக்கும் பழக்கம் ஏற்பட்டது.

போருக்கு அழைப்பு விடுத்த திரிபுரசுந்தரி

அன்னையின் தளபதிகள் போரிட இருந்த போதும், போருக்குச் செல்லும் முன் போர் தொடங்கப் போவதாக அறிவிக்க வேண்டும் அல்லவா?

அது தானே தர்மம். உலக நாயகியே ஆனாலும்,   உலக தர்மத்தை மீற முடியுமா?

ஆகவே அன்னை திரிபுரசுந்தரியாக அவதாரம் எடுத்து, தன் தங்க முகத்தில் சூரியனே திலகமாக விளங்க, உடலில் பல்வேறுவிதமான ஆபரணங்களைப் பூண்டு அமர்ந்தார்

அவளைக் கண்ட சும்ப, நிசும்பர்களின் தளபதிகளான சண்ட, முண்டர்கள், அன்னையின் பேரில் ஆசை கொண்டு, அவளைத் தங்களுடன் வருமாறும், சும்ப / நிசும்பர்களிடம் தாங்கள் அவளைக் கொண்டு சேர்ப்பதாகவும் கூறினார்கள்

அதைக் கேட்ட அன்னை, தன்னை வெல்பவர்களுடனேயே தான் வருவேன் என்றும், அவர்களை தான் கரம் பிடிப்பேன் என சபதம் செய்திருப்பதாகவும் மந்தகாசச் சிரிப்புடன் சொன்னாள்

தன்னைப் போரிட்டு வெல்லும்படி சும்ப, நிசும்பர்களிடம் போய்ச் சொல்லும்படி, அவர்களின் தளபதிகளிடம் சொல்கிறாள் அன்னை. அவர்களும் தங்கள் அரசர்களிடம் போய் அன்னையின் கருத்தைத் தெரிவிக்கிறார்கள்.

சும்ப  / நிசும்பர்களின் ஏளனம்

சொன்னபடி வந்த சும்ப / நிசும்பர்கள், பூங்கொடியை ஒத்த அன்னையைக் கண்டு, ஏளனமாய் சிரித்து நின்றனர்

“இவளா நம்மைப் போருக்கு அழைத்தாள்” என மனதினுள் நகையாடினர்

“ஏ பெண்ணே, பூங்கொடியைப் போலிருக்கும் உன்னால் எங்களுடன் சரிக்குச் சரி போரிட முடியாது! அநாவசியமாக நீயும் உன்னைத் துன்புறுத்திக் கொண்டு எங்களையும் துன்புறுத்தாதே! எங்கள் இருவரில் யாரை வேண்டுமானாலும் நீ தேர்ந்தெடுத்து மணந்து கொள்!” என்று கூறினர்

ஆனால் அன்னை தன் கருத்தில் பிடிவாதமாக இருந்தாள்

அசுர வதம் புரிந்த அம்பிகை

அதன் பேரில், அவர்கள் இருவரும், அலட்சியமாக அன்னையை எளிதில் வென்று விடலாம் என்னும் எண்ணத்துடன், போரிட ஆரம்பித்தனர்.

ஆனால் போகப் போக, அன்னையின் சக்தியை உணர்ந்து, அவளுடன் முழு மூச்சுடன் போரிட்டனர்

அந்தப் போர், ஒன்பது நாட்கள் நடந்தது.

ரக்த பீஜன், சண்டன், முண்டன் என எதிர்படையின் தளபதிகள் ஒவ்வொருவராக அந்தப் போரில் வீழ்ந்தனர்.

இறுதியில் பத்தாம் நாளான விஜயதசமியன்று, அம்பிகை சும்ப / நிசும்பர்களைக் கொன்றொழித்து, உலக மக்களுக்கு ஏற்பட்டிருந்த தீராத துன்பத்தைக் களைந்தாள்.

வெற்றி முழக்கங்களோடு அன்று கொலுவிருந்து, அனைவருக்கும் மஹாசக்தியாகக் காட்சி தந்தாள் அன்னை

நவராத்திரி பெயர்க் காரணம்

போர் பகலில் தானே நடக்கும்? அப்புறம் ஏன் நவராத்திரி எனப் பெயர் வந்தது என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறது அல்லவா?

பகலில் பொம்மைகளைப் போல் தங்கள் சக்தியை எல்லாம் இழந்து சிலைகளாகக் காட்சி கொடுக்கும் மும்மூர்த்திகளுக்கும் / தேவாதி தேவர்களுக்கும், அவர்கள் இழந்த சக்தி, இரவில் அவர்களிடம் வந்து சேரும்.

அதாவது, காலை அருணோதயத்தில் துவங்கும் போர், சூரியாஸ்தமனம் வரை நடைபெறும்

அதன் பின்னர், இரவில் சக்திகள் எல்லாம் அவரவர் இருப்பிடம் சென்றதும், அனைவரின் உற்சாகமும் குறையா வண்ணம், ஆடல்கள் / பாடல்கள் மூலம், ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்திக் கொண்டு, களைப்பைப் போக்கி, மறுநாள் போருக்குத் தயாராவார்கள்.

இவ்விதம், இரவில் தினம் தினம் அம்பிகையைப் போற்றி ஆடல் பாடல்களோடு வழிபட்ட ஒன்பது இரவுகளே, நவராத்திரி என மாலை நேரக் கொண்டாட்டமாக மாறியது.

ராத்திரி என்றால் மங்களம் என்னும் பொருளும் வரும். ஒன்பது ராத்திரிகளிலும் அம்பிகையைப் பூஜித்து வந்தால், ஒன்பது வகையான மங்களங்களையும் பெறலாம்.

இதன் காரணமாகவே, நவராத்திரி மாலை வழிபடும் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

அன்னை அனைத்து சக்திகளாகவும் இருக்கிறாள் என்பதால், அதை விளக்கும் வண்ணம், அனைத்து உயிரினங்களையும் பொம்மையாக இந்தக் கொலுவில் வைத்து வணங்குகிறோம்.

இந்த வருடம் நவராத்திரி கொலு வழிபாடு, அக்டோபர் 17 முதல் 25 வரை நடைபெற இருக்கிறது

தொடர்ந்து நவராத்திரி சிறப்புகள், கொலு படிகள் அமைப்பது, ஒன்பது நாட்கள் பூஜை செய்ய வேண்டிய முறைகள் பற்றி, தனித்தனி பதிவுகள் வெளியிடப்படும்

#ad

 Amazon இணைய தளத்தில் உள்ள ஆன்மீக புத்தங்களை பெற, இங்கு கிளிக் செய்யவும்

(பதிவுகள் தொடரும் – நவராத்திரி முடியும் வரை தினமும்)

கீதா சாம்பசிவம் அவர்கள் பற்றி :-

நவராத்திரி பதிவுகளை, சஹானா இணைய இதழுக்கு பகிர்ந்து கொண்டமைக்கு, முதலில் கீதா மாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

கீதா சாம்பசிவம் அவர்கள், சஹானா இணைய இதழுக்கு  புதியவர் அல்ல. நம் இதழின் முதல் பதிப்பில் வந்த ஆன்மீகப் பதிவே அவரது தான்

அதோடு, இங்கு வரும் பெரும்பாலான நட்புகளுக்கும் அவர் பரிச்சியமானவரே. புதியதாய் வருபவர்களுக்காக, அவரின் வலைப்பூ பற்றிய விவரம் கீழே கொடுத்துள்ளேன்

கீதா சாம்பசிவம் அவர்களின் எண்ணங்கள் வலைப்பூ மிகவும் பிரசித்தி வாய்ந்தது. இன்னும் சில வலைப்பக்கங்களும் அவருக்கு இருக்கின்றன. அதில் சமையல், ஆன்மிகம், பயணம், புகைப்படங்கள் இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. வாசித்து மகிழுங்கள் / பயன் பெறுங்கள்

மீண்டும் ஒரு முறை, உங்கள் பங்களிப்புக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த்

 

Similar Posts

2 thoughts on “நவராத்திரி வழிபாடு உருவான கதை (நவராத்திரி பதிவு 1)  – எழுதியவர்: கீதா சாம்பசிவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: