in ,

கொலுப்படிகள் அமைத்தல் மற்றும் அலங்காரங்கள் (நவராத்திரி பதிவு 2) – எழுதியவர்: கீதா சாம்பசிவம்

கொலுப்படி அமைத்தல் மற்றும் அலங்காரங்கள்

கொலுப்படிகள் அமைப்பது பற்றிப் பார்க்கும் முன், நவராத்திரி வகைகள் பற்றி சில தகவல்கள்

மூன்று வகை நவராத்திரி

நவராத்திரி மூன்று வகைப்படும்

 1. ஆஷாட நவராத்திரி என்பது, ஆடி மாதம் அமாவாசையிலிருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும்.
 2. சாரதா நவராத்திரி என்பது, புரட்டாசி மாதம் மஹாலய அமாவாசையிலிருந்து, அடுத்து வரும் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும்.
 3. வசந்த நவராத்திரி என்பது, வசந்த கால ஆரம்பத்தில், பங்குனி மாத அமாவாசைக்குப் பின்னர் கொண்டாடப்படுகிறது

இந்த மூன்றில், பொதுமக்களால் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி, அல்லது சரத் நவராத்திரி எனப்படும், புரட்டாசி மாத நவராத்திரியே ஆகும்.

புரட்டாசி மாத அமாவாசையிலிருந்து, அடுத்து வரும் ஒன்பது நாட்கள் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

நவராத்திரிக்குத் தனிச் சிறப்பு உண்டு. இது முழுக்க முழுக்கப் பெண்களுக்கான பண்டிகை என்றாலும் ஆண்களின் பங்களிப்பு இல்லாமல் நிறைவேறுவது இல்லை

மூன்று வகை சக்திகள்

தேவியின் சக்தி, மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவை ஆகும்

 1. அசுர சக்தி மேலோங்கும் சமயம், மக்கள் மனதில் ஏற்படும் பீதியைப் போக்கும் துர்கா பரமேஸ்வரிக்காக, நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது.
 2. மக்கள் மனதில் பயம் நீங்கியதும், செல்வத்தை அடைய அடுத்த மூன்று நாட்கள் மஹாலக்ஷ்மிக்காகக் கொண்டாடப்படுகிறது.
 3. கடைசி மூன்று நாட்களோ, அறிவைப் பெருக்கி ஞானம் அடைவதற்காக, சரஸ்வதிக்காகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஒன்பது நாட்களிலும் ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஒவ்வொரு பருவம் உள்ள பெண் குழந்தையாக நினைத்து ஆராதித்து வழிபடுவார்கள்.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையாகக் கொண்டாடினாலும் கடைசி நாட்கள் சரஸ்வதி பூஜை, விஜயதசமி எனத் தென்னாட்டிலும் துர்கா பூஜை, தசரா என வட மாநிலங்களிலும் கொண்டாடுகிறார்கள்.

கொலு படிகள் அமைத்தல்

ஒன்பது படிகள் – அவற்றில் வைக்க வேண்டிய பொம்மைகள் குறித்து பார்க்கலாம்

 1. கீழிருந்து மேலாக உள்ள முதல் படியில், ஓரறிவு கொண்ட உயிரினம், தாவர வகைகள் வைக்க வேண்டும்
 2. இரண்டாம் படியில், ஈரறிவு கொண்ட உயிரினங்களான புழு, பூச்சி, சங்கு, நத்தை, மீன் போன்றவை.
 3. மூன்றாம் படியில், மூன்றறிவு கொண்ட உயிரினங்களான நிலம், நீரை நம்பி வாழும் எறும்பு, கரையான், பாம்பு போன்றவை
 4. நான்காம் படியில், நாலறிவு கொண்ட உயிரினங்களான ஊர்வன மற்றும் பறப்பனவும், நண்டு, குளவி, வண்டு, போன்றவை இடம் பெற வேண்டும்
 5. ஐந்தாம் படியில், ஐந்தறிவு கொண்ட மிருகங்கள், நீரில் வாழும் ஆமை, முதலை, தவளை போன்றவற்றோடு, நிலத்தில் வாழும் யானை, புலி, சிங்கங்கள். இவற்றோடு வீட்டு மிருகங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
 6. ஆறாம் படி, ஆறறிவு கொண்ட மனிதர் பொம்மைகள்
 7. ஏழாம் படி, சித்தர்கள், தெய்வீக முனிவர்கள், ரிஷிகள், மஹான்கள் புத்தர், மஹாவீரர், ஆதிசங்கரர் போன்றவர்கள்
 8. எட்டாம் படி, தேவர்கள், மஹாவிஷ்ணுவின் திரு அவதாரங்கள், அவற்றை ஒட்டிய பொம்மைகள், சிவன், பார்வதி போன்றோரின் உருவச் சிலைகள்
 9. ஒன்பதாம் படி, நடுவில் ஆதி பராசக்தி, சுற்றிலும் சப்தமாதாக்கள், அஷ்ட லக்ஷ்மிகள் போன்ற தெய்வாம்சம் நிறைந்த உருவ பொம்மைகள்.

பொம்மைகளை வைத்தபின் மாற்றலாமா?

இப்போ எல்லாப் படிகளையும் முறைப்படி கட்டி, பொம்மைகளையும் அந்தந்தப் படிகளில் வைச்சாச்சு இல்லையா?

இனிமேல், இதைப் பத்து நாட்களும் தொடக் கூடாது. பத்தாம் நாளான விஜயதசமி அன்று இரவில், ஏதேனும் ஒரு பொம்மையைப் படுக்கப் போடும் போது மட்டும், கொலுப்படிகளைத் தொடலாம்.

பொம்மைகளை இடமும் மாற்றுவது உசிதம் இல்லை. முதலிலேயே முடிவு செய்து வைத்து விட வேண்டும்.

புது பொம்மைகள் வைக்கணும் எனில், பக்கத்திலே சின்ன மேஜை போட்டு அவற்றில் முடிந்தவரை வைக்கலாம். அல்லது படிகளில் இடம் இருந்தால் பகல் நேரத்தில் வைக்கலாம்.

கலச ஸ்தாபனம்

கொலுப்படியில் சிலர் கலசம் வைப்பார்கள்.

ஒரு வெண்கலம், வெள்ளி அல்லது பித்தளைச் செம்பில், உள்ளே ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டு, அரிசியால் நிரப்ப வேண்டும்

அதன் மேல், மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து, சுற்றிலும் மாவிலைகளால் அலங்கரிக்க வேண்டும்

அப்படி அலங்கரித்த அந்தக் கலசத்தை, கொலுவின் மேல் படியில், அம்பிகைக்கு எதிரே அல்லது பக்கத்தில் வைக்க வேண்டும்

இம்மாதிரிக் கலசம் வைத்துவிட்டால் பத்து நாட்களும் கொலுப்படிகளைத் தொடவே கூடாது.

சிலர் அரிசிக்குப் பதில் நீர் ஊற்றுவார்கள். தினசரி பூஜை செய்பவர்கள் இருக்கும் வீடு எனில் அன்றாடம் அந்த நீரை மாற்றலாம்.

அப்படி இல்லாதவர்கள் அரிசியால் நிரப்புவதே சரியானது. கலசத்தை ஒரு தாம்பாளத்தில் அரிசியைப் போட்டு அதில் வைப்பதும் உண்டு.

இதற்குக் கலச ஸ்தாபனம் என்று பெயர். இதைக் காலை வேளை தான் செய்ய வேண்டும்.

நிவேதனம்

கொலு வைத்தால் தினம் தினம் இரு வேளையும் நிவேதனம் செய்தாக வேண்டும்.

ஸ்வாமி அலமாரி இருக்கும் இடம் ஒன்றாகவும், கொலு வைக்கும் இடம் ஒன்றாகவும் இருந்தால், இரண்டிற்கும் தனித்தனியாக விளக்கேற்றித் தனித்தனியாக நிவேதனம் செய்ய வேண்டும்.

கலசம் கொலுவிலேயே இருக்க வேண்டும். ஸ்வாமி அலமாரியில் வைக்கக் கூடாது. இரண்டும் அருகருகே இருந்தாலும் கூட, கலசத்தைக் கொலுவில் வைப்பது தான் கட்டாயமானது.

எந்த நேரத்தில் கொலு வைப்பது நல்லது?

அமாவாசை அன்றே கொலு வைத்து விடலாம். அன்று காலையே நல்ல நேரம் இருந்தால் கொலு வைக்கலாம்.

காலையில் நேரம் ஒதுக்க முடியாதவர்கள், மாலை வைக்கலாம்

மாலை /  இரவு நேரங்களில், அதாவது சூரிய அஸ்தமனத்திற்குப் பின், பொதுவாக நல்ல நேரம் என்பது பார்ப்பதில்லை.

ஆகவே, அமாவாசை அன்று மாலை ஏழுமணிக்கு மேல், கொலு வைக்கலாம்

ஆனால் மாலை நேரத்தில் கலசம் வைக்கக் கூடாது என்பதால், கொலுவை மட்டும் அன்றே வைத்து விட்டு, மறுநாள் காலை குளித்து முடித்து சுத்தமாகப் பூஜை செய்யும் முன்னர், கலசம் வைத்து விட்டுப் பூஜையை ஆரம்பிக்கலாம்.

வித விதமான அலங்காரம்

இப்போதெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு விதம் என அலங்கரிக்கிறார்கள்.

எங்க வீடுகளில் அம்பிகையின் பொம்மைகளையே வைத்து ஒரு நாள் துர்கை, ஒருநாள் ராஜராஜேஸ்வரி, ஒரு நாள், மீனாக்ஷி, ஒரு நாள் மஹாலக்ஷ்மி, என்று வைப்போம்.

ப்ளாஸ்டிக்குகளில் வீடுகள், வீட்டு உபயோகப் பாத்திரங்கள் கிடைக்கும். அவற்றால் வீடுகள் கட்டி, மணலால் மலைகள் கட்டி, கூழாங்கற்களால் பாறைகளை அமைத்து, மலைக் கோயிலுக்குப் படிகளை அட்டைகளைக் கொண்டு அமைத்து, அதில் செடி, கொடிகள் எனப் ப்ளாஸ்டிக்கில் கிடைக்கும் செயற்கைச் செடிகளை வைக்கலாம்.

தெப்பக்குளம் கட்டக் களிமண் கிடைத்தால், ட்ரே அல்லது தாம்பாளத்தை நடுவில் வைத்து, சுற்றிலும் களிமண்ணால் கெட்டியாக மூடி, நாலாபுறமும் அவற்றிற்குப் படிகள் அமைத்து, அவற்றில் காவி இட்டு நடுவே நீராழி மண்டபம் மாதிரி ஏதேனும் பொம்மையை வைத்து, சின்னச் சின்னப் ப்ளாஸ்டிக் மீன், தவளைகள் ஆகியனவற்றை மிதக்க விட்டு அலங்கரிக்கலாம்.

தீம் டெகரேஷன்

இப்போதெல்லாம், ஒரு நாளைக்கு ஒரு முக்கியமான விஷயம் பற்றிய கருவை எடுத்துக் கொண்டு, அதற்கேற்ற பொம்மைகளால் அலங்கரித்து அந்த விஷயத்தின் முக்கியத்துவத்தைப் புரிய வைக்கின்றனர்.

இப்போது திருமணம் என்னும் கருவை எடுத்துக்கொண்டால் திருமண செட்டால் கீழே அலங்கரித்து, திருமணத்தின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வாசகங்கள், அதற்கேற்ற பொம்மைகள் என வைக்கலாம்

வீட்டுக்குள் குளம் கட்டிய அன்றைய நாட்கள்

முன்னெல்லாம் வீடுகளில் செங்கற்களால் ஆன தளமே தரையாக இருக்கும்.

அப்போதெல்லாம் கொலு வைக்கும் இடத்தின் முன்னே படிகள் அமைத்தால், அவற்றிற்கு வரும் இடத்தை விட்டுக் கொஞ்சம் தள்ளி, சுமார் எட்டுச் செங்கற்களைப் பெயர்த்து எடுக்கும்படி வைத்து விடுவார்கள்.

உள்ளே சிமென்ட் / அல்லது காரையால் பூசி அரை அடி ஆழத்துக்கு வெற்றிடமாக அமைத்திருப்பார்கள்

நவராத்திரி சமயம் அந்தச் செங்கற்களைப் பெயர்த்து எடுத்து விட்டால், சதுர / வட்ட / நீள் சதுர வடிவில், தெப்பக்குளம் அமைக்கும்படியாக உள்ளே வெற்றிடத்துடன் கிடைக்கும்

அதில் நீர் வாழ் உயிரினங்களை பொம்மை வடிவில் மிதக்க விடுவார்கள். உலகம் முதலில் நீரால் சூழ்ந்திருந்ததை அது நினைவூட்டும்.

பள்ளத்தில் நீரை அன்றாடம் நிரப்பி, சுற்றிலும் அலங்காரம் செய்வார்கள்.

இப்போதெல்லாம் அந்த மாதிரி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. எல்லாம் டைல்ஸ் மயம்!

#ads

‘நவராத்திரி கையேடு’ போல் அமைந்த, ‘சஹானா’வின் 2020 நவராத்திரி சிறப்பிதழை வாங்க. கீழே கொடுத்துள்ள படத்தை கிளிக் செய்யவும்👇

இந்த புத்தகத்தில் உள்ள நவராத்திரி சிறப்பு பதிவுகள் பின் வருமாறு

 • நவராத்திரி வழிபாடு உருவான கதை
 • கொலுப்படி அமைத்தல் மற்றும் அலங்காரங்கள்
 • நவராத்திரி பூஜைக்கு செய்யவேண்டிய முன்னேற்பாடுகள்
 • நவராத்திரி ஒன்பது நாட்கள் மற்றும் விஜயதசமி அன்று பூஜை செய்யும் முறைகள் (தனித்தனியே விளக்கமாக)
 • நவராத்திரி ஒன்பது நாளுக்கான நிவேதன செய்முறைகள் (26 Recipes)
 • நவராத்திரிக்கான பாமாலை
 • நவராத்திரி நாட்களுக்கான தேவியின் நாமங்கள் (விளக்கத்துடன்)
 • லலிதா சஹஸ்ர நாம விளக்கங்கள் 
 • அம்பாளின் கேசாதி பாத வர்ணனைக்கான விளக்கங்கள் 
 • அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள்

கொலு பொம்மைகள் / ஸ்டாண்ட் வாங்க Amazon இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

நவராத்திரி தொடர்பான அனைத்து பதிவுகளும் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

நவராத்திரி வழிபாடு உருவான கதை (நவராத்திரி பதிவு 1)  – எழுதியவர்: கீதா சாம்பசிவம்

பூஜைக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் (நவராத்திரி பதிவு 3) – எழுதியவர்: கீதா சாம்பசிவம்