in ,

பாவக்கா இனிக்கும் (ஒரு பக்க கதை) – வைஷ்ணவி

எழுத்தாளர் வைஷ்ணவி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“அத்தை! செல்லாயி ஆயா ஊட்டுக்கா போறீங்க?”

“ஆமாத்தா பாத்து ரெண்டு நாளாச்சு. ஒரு எட்டு பாத்துட்டு செத்த நேரத்துல  வந்துடறேன்”

“ம்க்கும் நீங்க செல்லாயாவ பாத்துட்டு வெரசா வர ஆளு?! எப்படியும் மத்யானந்தான் வருவீங்க, உங்க மருந்து மாத்திரையும் எடுத்துட்டு போயிடுங்க”

“சரித்தா, வரப்ப குழந்தைய நானே ஸ்கூல்ல இருந்து கூட்டியாந்துறேன். நீ வெயில்ல அலைய வேண்டாம்” என்றபடி ராமாத்தா செல்லாயி வீட்டை நோக்கி நடந்தாள்.

ராமாத்தா சிறுவயதில் குடியிருந்த லைன் வீட்டின் பக்கத்து வீட்டில் செல்லாயியின் குடும்பம் வசித்தது. அப்போதிருந்தே ராமாத்தா மேலே செல்லாயிக்கு பிரியம். சூட்டிப்பா இருக்கற ராமாத்தாவும் “அயித்த அயித்த” என்றபடி செல்லாயி பின்னேயே சுற்றி வருவாள். 

தொண்டுபட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த செல்லாயி, “ஏன்டி இப்ப தான் வழி தெரிஞ்சதா உனக்கு?”

“என் பேரன் பின்னாடி ஓடவே நேரம் சரியாருக்கு அயித்த” என்றபடி செல்லாயி கைல இருந்த விளக்குமாற்றை வாங்கி சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

“வேணாம் நான் பாத்துக்கறேண்டி, நீ உள்ற போய் உக்காரு”

உள்ளே நுழைந்தவளை, “வா புள்ள! எப்புடி இருக்கிற?” என்ற பழகிய குரல் வரவேற்றது.

டவுனில் இருக்கும் செல்லாயியின் மகன் தங்கராசு தான் அழைத்தான்.

“நான் நல்லாருக்கேன். நீங்க எப்புடி இருக்கீங்க? சம்சாரம் புள்ளைகள கூட்டியா றலையா?”

“நான் மட்டுந்தான் வந்தேன்”

உள்ளே வந்த செல்லாயி அவர்களை சாப்பிட அழைத்தாள்.

“வரப்ப தான் சாப்ட்டேன். எனக்கு வேணாம் அயித்த”

“வா புள்ள! நாம ஒண்ணா சாப்ட்டு எவ்ளோ நாளாச்சு?”

தங்கராசுவின் அழைப்பை மறுக்க முடியாது சாப்பிட அமர்ந்தாள். வாசலில் யாரோ அழைக்க செல்லாயி வெளியே செல்லவும் ராமாத்தாவே இருவருக்கும் வட்டிலில் சோற்றை போட்டாள். வட்டிலில் இருந்த பாவக்காயையும் தங்கராசுவயும் மாறி மாறி பார்த்தாள். 

அவள் கண்கள் கலங்கியிருந்ததை கவனித்த அவன், “என்னாச்சு புள்ள?”

“சின்ன வயசுல எனக்கு பாவக்கானாலே புடிக்காது. உங்களுக்குந்தான். உங்க வட்டல்ல இருக்கற பாவக்காவ எனக்கு போட்டுட்டு பாவக்கா இனிக்கும் புள்ளனு சொல்வீங்க, அதுல இருந்து எனக்கு பாவக்கா புடிக்க ஆரம்பிச்சிருச்சி. எப்ப பாவக்கா சாப்ட்டாலும் அத நினைச்சுப்பேன்” என்றாள். இருவரும் ஒன்றும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

சில நிமிட வெறுமையான அமைதிக்கு பிறகு தன் தட்டிலிருந்த பாவக்காயை அவள் தட்டில் போட்டு விட்டு, “பாவக்கா இனிக்கும் புள்ள, சாப்பிடு” என்றான்.

எழுத்தாளர் வைஷ்ணவி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நெருப்புக்குள் ஈரம் (ஒரு பக்க கதை) – வைஷ்ணவி

    அற்றை நாள் பொங்கல் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்