in ,

பாசமெனும் வேர்கள் படர்ந்தால்… (சிறுகதை) – ✍ பவானி உமாசங்கர்

பாசமெனும் வேர்கள் படர்ந்தால்... (சிறுகதை)
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 72)

மார்கழி மாதப் பனிக்காற்று, வாசலில் பூத்திருந்த பவளமல்லி வாசத்துடன், ஆழ்ந்த தூக்கத்திலிருந்த மாலாவின் முகத்தைத் தொட்டு எழுப்பியது.

குளிர் காற்றின் சிலிர்ப்பில் விழித்தவள், அருகில் டேபிள்  மேலிருந்த மொபைல் போனை அழுத்தி மணி பார்த்தாள். கைபேசி காலை 5.20 என்று  காண்பித்தது

முதல் நாள் இரவு அவள் கணவன் ராஜன், “நாளை ஆபீஸில் ஆடிட்டிங் நடப்பதால் மதியம் வீட்டுக்கு வர முடியாது. அதனால் எனக்கும் லன்ச் கொடுத்து விடு” என்று கூறியது நினைவில் வந்ததும், வரிசை கட்டி நிற்கும் வேலைகளின் அணிவகுப்பு அவளை வாரிச்சுருட்டி எழ  வைத்தது

ராஜனுக்கு சாதம், சாம்பார் பொறியல், ரசம், தயிர் என அனைத்தையும் தனித்தனியாகப்  பேக் செய்து கொடுக்க வேண்டும். அவனே வேண்டாம் என்றாலும் மாலாவின் மாமியார் லக்ஷ்மி விடமாட்டாள்

“பிள்ளைங்களுக்குத் தான் ஒண்ணுமே கொடுக்காம  பழக்கியாச்சு, அவனுக்காவது எல்லாம் ஒழுங்கா கொடுத்து அனுப்பு” என்பாள்.

மாலா அவள் மாமியார் கடிந்து சொல்வதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாள். ஏனெனில் லக்ஷ்மி மாலாவின் ஒன்று விட்ட அத்தை தான். சிறு வயதிலிருந்து பார்ப்பதால், அத்தையின் சாடல் அவளுக்கு ஒன்றும் புதிதல்ல

“மனிதர்களை குறை நிறையோடு ஏற்றுக் கொள்ள பழக வேண்டும்” என்ற அவள் அப்பாவின் வார்த்தைகள் மனதில் பளிச்சிட, மாலாவின் முகத்தில் புன்னகை அரும்பியது.

அதற்குள் அவள் மூளை, உன் நினைவலைகளில் நேரம் மூழ்கி விடும், என அவளை எச்சரித்தது.

மாலா பரபரவென காலைக் கடன்களை முடித்தவள், பாத்ரூமில் கீசரை  ஆன் செய்து விட்டு வாசல் கதவைத் திறந்து இன்னும் இருள்பிரியாத அந்த புதிய காலையின்  துவக்கத்தை சில விநாடிகள் ரசித்தாள்.

அதன் பின் வீட்டின் பெரிய முன் வாசலைக் கூட்டி நீர் தெளித்துக் கோலமிட்டாள். அத்தையின் பெருமைகளில் ஒன்று அவர்கள் வீடு.

அடுக்குமாடிக் குடியிருப்புக்களுக்கு மத்தியில் இரண்டு கிரவுண்ட் இடத்தின் நடுவில் பெரிய வீடும், அதைச் சுற்றி பழ மரங்கள், பூச்செடிகள் என சோலையாக இருந்தது அவர்கள் வீடு. 

லக்ஷ்மியும் அடிக்கடி, “இது என் பிறந்த வீட்டுச் சீரு, என் மஞ்சக்காணி சொத்தாக்கும்” எனப் பெருமை அடித்துக் கொள்வாள். ஆனால் இந்த வீட்டை லக்ஷ்மியின் அண்ணன்களிடமிருந்து வாங்கிக் கொடுத்தது என்னவோ மாலாவின் தந்தை தான்

அந்த நன்றி உணர்ச்சியில் தான் மாலாவை தன் மருமகளாக்கிக் கொண்டாள் லக்ஷ்மி. எது எப்படியோ மாலாவுக்கு வீட்டு வேலைகளுடன், தோட்ட வேலையும் சேர்ந்து கொண்டது. 

கணவன், பிள்ளைகளை அலுவலகம், பள்ளி, கல்லூரி என அனுப்பியதும் வீட்டைச் சுற்றி கிடக்கும் இலை தழைகளை அகற்றி செடிகளுக்கு நீர் ஊற்றி விட்டு மாலா மதிய சமையலை ஆரம்பிக்க பதினோரு மணிக்கு மேல் ஆகி விடும்.

அதன் பின் ராஜன் லன்ச்சுக்கு வருவதற்குள் அவள் சமையலைச்  செய்து முடிக்க வேண்டும். லக்ஷ்மி மனமிருந்தால், காய் நறுக்குதல், கீரை ஆய்தல் போன்ற வேலைகளைச் செய்து தருவாள். இல்லையென்றால் பக்கத்து வீட்டுப் பாட்டியுடன் கோவிலுக்கு சென்று விடுவாள். 

அவள் என்றாவது வேலையில் சிறிது சுணங்கினாலும், “ம்.. அந்தக் காலத்தில நாங்க எல்லாம் எத்தனை வேலை செய்வோம். எமராஜன்  வந்தாலும், ‘இருடாப்பா இந்த கை வேலையை முடிச்சுட்டு வந்து ரதமேறிக்கறேம்பா கிழவி கூட’. ஆனா இந்த காலத்துப் பொண்ணுங்களுக்கு வீட்டு வேலை செய்ய உடம்பு வணங்க மாட்டேங்குது” என்று நீட்டி முழக்குவாள் லக்ஷ்மி

ராஜன் கூட மாலாவிடம், “நீ எவ்வளவு செஞ்சாலும் அம்மாவுக்கு ஏன் திருப்தியே வர மாட்டேங்குது. அவங்களுக்கு என்ன பிரச்சனைன்னு நான் கேட்கிறேன்” என்பான் பொறுக்க முடியாமல்

“நீங்க எதுவும் அவங்கள கேட்க வேண்டாம். அந்தக் காலத்தில அத்தை உடம்பை வருத்திக்கிட்டு வேலை செய்திருக்காங்க. சிறு வயதிலேயே  கணவரை இழந்ததால  மாமியார் கொடுமைக்கு ஆளாகி மனதளவிலேயும் ரொம்ப சிரமப்பட்டு இருக்காங்க. அத்தை எப்போதுமே கொஞ்சம் படபடன்னு  பேசுவாங்க, ஆனா மனசுல ஒண்ணும் வைச்சுக்க  மாட்டாங்க, அதனால இதையெல்லாம் பெரிசு படுத்தாதீங்க” என மாலா அவனைத் தடுத்து விடுவாள்

னைத்து வேலைகளையும் முடித்து தன்னை ஆசுவாசப்படுத்த அமர்ந்த மாலா, முதல் நாள் அவள் அண்ணன் மாதவன் போனில் கூறிய விஷயத்தைக் குறித்து யோசித்தாள்.

அடுத்த ஆறு மாதங்களுக்கு தன் அம்மா இந்த வீட்டில் தங்கியிருக்க அத்தை சம்மதிப்பார்களா?

“அண்ணா நீ கவலைப்படாமல் யூ.எஸ் போயிட்டு வா, நான் அம்மாவை நல்லாப் பார்த்துக்கறேன்” என போனில் மாதவனிடம் சொன்னவள், அவள் அம்மா அங்கு வந்து தங்குவதைப் பற்றி தன் கணவனிடமே சற்றுத் தயக்கத்துடன் தான் கூறினாள்.

ஆனால் ராஜன், “இது நம்ம கடமையில்லையா? இதுக்கு ஏன் இப்படித் தயங்கற, நான் அம்மாகிட்ட சொல்லிக்கறேன்” என்றான் பொறுப்புடன்

மாலாவுக்கும் மாதவனுக்கும் இடையில் அவர்கள் அம்மாவுக்கு இரண்டு குறைப் பிரசவங்கள் ஆனதால், இருவருக்கும் எட்டு வயது வித்தியாசம். அதனால் மாலாவுக்கு மாதவன் பாசத்தில்  இன்னொரு தந்தையாகத் தான் இருந்தான்

அண்ணன் தன்னிடம் உதவி எனக் கேட்டதும், அதைத் தன் கடமையாகத் தான் கருதினாள் மாலா. அத்தை என்ன சொன்னாலும் அதை மனதில் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது என முடிவு செய்து கொண்டாள்

மாலாவின் அம்மா பாக்யா, தன் கணவர் இறந்த பின் உடல் நலம் குன்றி நோயாளியாக மாறிப் போனார். அவர் எப்போதாவது மாலாவின் வீட்டுக்கு வந்து இரண்டொரு நாள் அங்கு தங்கிச் செல்வதுண்டு. ஆனால் அப்போதும் லக்ஷ்மி ஏதாவது சொல்லி அவள் அம்மா மன வருத்தத்தில் தான் திரும்பிச் செல்வார்

அத்தை நல்லவர் தான், மனசுல பட்டதைப் பேசுவாங்க, ஆனால் பேச்சுத் தான் சற்றுக்  காரமாக இருக்கும் என மாலா நினைப்பாள்

அவள் பயந்து போல் மாலை லக்ஷ்மியிடம் காப்பி கொடுக்கும் போது, “ஏன் மாலா உங்க அண்ணனும் அண்ணியும் அமெரிக்கா போறீங்களாமே? அவங்க திரும்பி வர வரைக்கும் உங்க அம்மா இங்கதான் இருப்பாங்கன்னு ராஜன் சொன்னான். மாதவன் போன் செய்தான்னு நீ ஒரு வார்த்தை கூடச் சொல்லவே இல்லையே” என்றாள் லக்ஷ்மி நிஷ்டூரமாக

“அவர் தான் நானே அம்மா கிட்ட சொல்லிக்கறேன்னாரு அத்தை, அதான்” என்றாள் மாலா மென்மையாக

“சொன்னான் சுரைக்காய்க்கு உப்பில்லேன்னு” என்று கடுகடுத்த லக்ஷ்மி, “உங்க அண்ணனுக்கு என்ன, பெரிய கம்பெனியில நல்ல வேலை பார்க்கறான். பெரிய போஸ்ட்ல இருக்கான். நல்ல சம்பளம். போதாக்குறைக்கு உங்க அண்ணி மஞ்சுளாவும் ஏதோ பிஸினஸ் பண்றா, அவங்க எங்க வேணும்ன்னாலும் போவாங்க. ஆனா இங்க அப்படியா? ராஜன் ஒருத்தன் சம்பாத்தியத்தில பசங்க ஸ்கூல், காலேஜ் ஃபீஸ் எனக்கு மருத்துவச் செலவுன்னு எவ்வளவு இருக்குது” என்று அலுத்துக் கொண்டாள்

மாலாவின் அண்ணன் மாதவனின் மகள் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அமெரிக்கா சென்று விட்டாள். இரண்டு மாதங்களுக்கு முன் தான் அவளுக்கு குழந்தை பிறந்திருந்தது.

இதுவரை துணையாக இருந்த அவள் மாமியார் இந்தியா வர இருப்பதாலும், மாலாவின் அண்ணன் மாதவனுக்கு கம்பெனியின் டெப்டேஷனுக்காக யூ.எஸ். செல்ல வேண்டியிருப்பதால், அவரோடு அண்ணியும் மகளுக்கு உதவலாம் என அங்கு செல்கின்றனர்

“என்ன செய்யறதுங்க அத்தை, அண்ணனுக்கும் கம்பெனி வேலையாக அங்கே போக வேண்டிய கட்டாயம். அண்ணிக்கும்  அவங்க பேரனைப் பார்க்க ஆசை, அவங்க மகன் அருணும் அங்கேயே பக்கத்து ஊருல தான் படிக்கறான். அதான் மகள்,மகன் இரண்டு பேரையும் பார்த்துட்டு வந்திடலாம்ன்னு போறாங்க” என்றாள் மாலா தயக்கத்துடன

“ஆமா, ரொம்ப பெருமை தான் போ, ஆயா வேலை பார்க்கத் தான் அமெரிக்கா போறாங்க ” என்ற லக்ஷ்மி, “ஆறு மாசம் வீட்டுச் செலவெல்லாம் எப்படி சமாளிக்கறது, ம்… ஆள் ஏற நீர் ஏறும். ஆமா, உங்க அம்மாவுக்குத் தான் எங்க அண்ணனோட டெபாசிட் பணத்தில  வட்டி வருமே. பேசாம அந்தப் பணத்தை ஆறு மாசத்துக்கு நீ வாங்கிக்கோ, உங்க அம்மாவுக்கும் பொண்ணு வீட்ல இருக்கறதுக்கு கூச்சமா இருக்காது” என்றாள் கடுமையாக. 

மாலாவுக்கு மனம் வலித்தது. இங்கு ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி தான். திருமணமான பெண்ணுக்கு பெற்ற தாயை தன் வீட்டில் ஒரு ஆறு மாதங்கள் வைத்துப் பராமரிக்க உரிமை இல்லையா?

மாலாவும் திருமணத்திற்கு முன் வேலைக்குச் சென்று கொண்டிருந்தவள் தான்.

ஆனால் குழந்தைகள்  பிறந்த பின்னர்  ராஜன், “நீ இவ்வளவு சிரமப்பட்டு வேலைக்கெல்லாம் போக வேண்டாம்” என்றதால் வேலையில் இருந்து நின்று விட்டாள்.

ராஜனும்  அரசு வேலையில் நல்ல சம்பளம் வாங்குபவன் தான். அத்தை இப்படி கணக்குப் பார்க்கறாங்களே என வருத்தம் இருந்தாலும், கணவன் ராஜன் ஆதரவாக இருப்பதால் அத்தையின் பேச்சுக்கள் மாலாவை அதிகம் பாதிப்பதில்லை.

ஆனால் ஆறு மாதங்கள் அம்மாவையும் வைத்துக் கொண்டு அத்தையை எப்படி சமாளிப்பது என்று இருந்தது மாலாவுக்கு

ன்று ஞாயிற்றுக்கிழமை, மாதவன் தனது அமெரிக்கப் பயணத்தைக்  குறித்த விபரத்தைக் கூறுவதற்காக மாலாவின் வீட்டுக்கு வந்திருந்தான். ஹாலில், ராஜனும் மாதவனும் ஏதோ பேசிச் சிரித்தபடி அமர்ந்திருந்தனர்.

தனது அறையிலிருந்து லக்ஷ்மி அவர்களை கவனித்தபடியே வாயில் ஏதோ ஸ்தோத்திரத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். 

மாலா இருவருக்கும் காப்பி கொண்டு வந்து கொடுத்தாள். மாதவன் காப்பியை கையில் வாங்கியவன் லக்ஷ்மியின் அறையை எட்டிப் பார்த்து, “அத்தை நீங்களும் வாங்க,  ஒரு முக்கியமான விஷயமா பேசணும் ” என அழைத்தான்

“என்கிட்ட என்ன பேசப் போற? எல்லாம் உன் மாப்பிள்ளைகிட்டேயே சொல்லியிருப்பயே” என்றபடியே லக்ஷ்மி எழுந்து ஹாலுக்கு வந்தாள்.

மாதவன் லக்ஷ்மியைப் பார்த்து, “அத்தை நானும்  மஞ்சுளாவும் வெளிநாடு போற விஷயம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், அதனால அம்மாவை  ஒரு ஆறு மாசம் நீங்க தான் பார்த்துக்கணும் அத்தை” என்றவன்

ராஜனைப் பார்த்து, “ராஜன் நீங்க தவறா நினைக்கக் கூடாது. இந்தப் பையில் அம்மாவோட செக் புக் பாங்க் பாஸ் புக், எஃப் டி எல்லாம் இருக்கு. அம்மாவுக்கு ஹெல்த் இஷ்யூஸ் இருக்கறதால, பாங்க்லேந்து வர வட்டியை, நீங்க அவங்களுக்கு மாதந்திர மருந்துகள் வாங்க தயவு செய்து உபயோகப்படுத்திக்கோங்க” எனவும்

அவனை இடைமறித்த ராஜன், “மச்சான், என்ன நீங்க  இதுக்கு நான் அத்தையின் வட்டிப் பணத்தை எதுக்கு யூஸ் செய்யணும்?” என்றான் சற்று சங்கடத்துடன்

மாதவன் ராஜனின் தோளில் தட்டி, “இதுக்கு நீங்க சங்கடப்பட வேண்டாம் ராஜன், இது யதார்த்தம். போகப் போக உங்களுக்குப் புரியும். ஸப்போஸ் எமர்ஜென்சியா ஏதாவது மருத்துவச்  செலவு ஏற்பட்டா, அம்மாவோட பெயரில் எஃப்.டி இருக்கு, அதை உபயோகப்படுத்திக்கோங்க. நாம போன், ஸ்கைப்ன்னு பேசிக் கலாம், வேற எதுன்னாலும் நீங்க என்னை தொடர்பு கொண்டு பேசுங்க”என்று கூறியவன்

லக்ஷ்மியின் கைகளை அன்புடன் பற்றிக் கொண்டு, “அத்தை… வட்டிப் பணத்தைக் கொடுத்து நான் உங்களை அந்நியமாக்கிட்டதா நினைக்க வேண்டாம். நீங்க அந்தக் காலத்து மனுஷி, ஆள் ஏற நீர் ஏறும். நான் சொல்வது உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன் அத்தை” என்றான் மெல்லிய குரலில்.

இதை சற்றும் எதிர்பார்க்காத லக்ஷ்மிக்கு, மாதவனின் பெருந்தன்மையான குணத்தின் முன் தான் சிறுமைப்பட்டு நிற்பது போல் இருந்தது.

அவளையுமறியாமல் கண்ணீர் மல்க, “நீ எதுவும் சொல்ல வேண்டாம்ப்பா, நான் பார்த்துக்கறேன் அம்மாவை” என்றாள் தழுதழுத்த குரலில்

உலக நடப்பைப் புரிந்து கொண்டு யாரும் மனம் வருந்தாமல் ஒரு விஷயத்தை இனிமையாக்க அண்ணாவினால் தான் முடியும்.

உறவுகளின் குறைகளைப் புறம் தள்ளி, அன்பு எனும் பாலத்தால் தங்களை இணைத்துக் கொண்ட மாதவனின் உயர்ந்த குணத்தின் முன், மலை போல் தோன்றிய  பிரச்சனை பனி போல் கரைந்து விட்டதென  உளம் மகிழ்ந்தாள் மாலா. 

 

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. பாத்திர படைப்பு அருமை. மாமியார் மனதை புரிந்து கொள்கிற மருமகள். சூழ்நிலையை மாதவன் கையாண்டவிதம் அருமை. ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.

  2. உறவுகளில் உள்ள நெளிவு சுழிவுகளை உணர்த்தும் அருமையான கதை .. எழுத்தாளருக்கு பாராட்டுக்கள்… சஹானாவிற்கு நன்றி

  3. கதை மிக அருமை. ஆசிரியர் பவானி உமாசங்கர் அவர்களுக்கு ௭மது
    பாராட்டுக்கள்.

கொசுவா (சிறுகதை) – ✍ உடுமலை கி. ராம்கணேஷ்

தெய்வம் (சிறுகதை) – ✍ பெரணமல்லூர் சேகரன்