in ,

பார்க்கர் பேனாவும் பாரத்வாஜ கோத்திரமும் (பகுதி 1) – வைஷ்ணவி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அழகான ரம்யமான செப்டம்பர் மாத காலை. வெளியில் எப்போது வேண்டுமென்றாலும் மழையாக பெய்துவிடுவேன் என கருமேகங்கள் மிரட்டிக் கொண்டிருந்தன. அம்மழை மேகங்களுக்கும் சூரியனுக்கும் இடையே ஏதோ ஊடல் நாடகம் நடந்து கொண்டிருந்தது.

சில்லென்ற மார்பிள் தரை. இரண்டு மர ஷெல்ப் முழுக்க அடுக்கி வைக்கப்பட்ட ரெடி ரெக்கனர்களும் சட்ட புத்தகங்களும் அது ஒரு ஆடிட்டர் ஆபிஸ் என சொல்லாமல் சொல்லியது. செப்டம்பர் மாதம் என்பதால் அலுவலகம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

அப்போது  ஒரு இளம் பெண்ணும் அவளுடன் ஒரு மூதாட்டியும் உள்ளே வர தயங்கி வெளியில் நிற்பதை பார்த்த மேனேஜர் வடிவேல் “உள்ளே வாங்க! யாரைப் பார்க்கணும் என்றார்?”

அந்த சிறு பெண் தன்னை அன்னபூரணி என்றும் இவர் என் பாட்டி பங்கஜம் என்று அந்த மூதாட்டியையும் அறிமுகப் படுத்திக் கொண்டாள்.

அந்த மூதாட்டி ஆடிட்டரை பார்க்கணும் என்றார். என்ன விஷயமாக பார்க்க வேண்டும் என்று மேனேஜர் விசாரித்துக் கொண்டே, இருக்கையில் அமர சொன்னார்.

மூதாட்டி, இவ என் பேத்தி. இவளுக்கு ஏதாவது வேலை கிடைக்குமா என கேட்டு போக வந்ததாக சொன்னார்.

மேனேஜர்,”ஆடிட்டர் வர ஒரு அரை மணி நேரம் ஆகும். நீங்க வெயிட் பண்ணுங்க” என்று கூறி விட்டு ப்யூன் விஜியிடம் காபி கொடுக்க சொன்னார்.

அந்த இடத்தை சுற்றியும் முற்றியும்  அன்னபூரணி பார்வையிட்டாள். ஒரு வீட்டை அலுவலகமாக மாற்றியிருக்கின்றனர் என நினைத்தாள். உள்ளே நுழைந்ததும் முதல் இருக்கை மேனேஜர் வடிவேல் சாருடையது. அடுத்தடுத்து இரு இருக்கைகளில் நடுத்தர வயது ஆண்கள் இருந்தனர்.

மற்றவர்கள் பேசிக் கொண்டதிலிருந்து அதில் ஒருவர் சண்முகம் எனவும் ஒருவர் குகன் எனவும் அறிந்து கொண்டாள்.அவர்கள் ஒருவருக்கொருவர் 3 CB,3CD, அசசி, சரள் பார்ம் என பேசிய வார்த்தைகள் எதுவும் அன்னபூரணிக்கு  தமிழ் போலவும் இல்லை இதற்கு முன் கேட்டதும் இல்லை. மலங்க மலங்க விழித்தாள்.

ஒண்ணும் புரியலயே இவங்க பேசறது. நாம இந்த இடத்துக்கு செட் ஆவோமா? நமக்கு வேலை கிடைக்குமா? என யோசித்துக் கொண்டிருந்தாள்

திடிரென யாரோ தன்னை பார்ப்பது போல உணரவே அலுவலகத்தின் சற்று உள்ளே எட்டி பார்த்தாள். ஒரே வரிசையாக இருக்கைகள் இருந்ததால் எதுவும் தெரியவில்லை. ஆனாலும் மனதிற்குள்ளே ஏதோ வித்யாசமாக தோன்றியது.

அன்னபூரணி உட்கார்ந்திருந்த இடத்திற்கு நேரே இருந்த பகுதி 3 சிறு சிறு கேபின்களாக தடுக்கப்பட்டிருந்தன. அந்த கறுப்பு நிற கண்ணாடி சுவரில் பூரண சந்திரன் போன்ற ஒரு முகத்தையும் அந்த முகத்தில் உள்ள இரு கண்கள் தன்னையே பார்ப்பதையும் ஒரு சேர கண்டாள். தன்னைத் தான் அந்த கண்கள் பார்க்கின்றனவா? என இருமுறை அவனறியாமல் பார்த்தாள்.

அதே நேரம் அவன் எப்படியிருப்பான் என பார்க்கவும் எழுந்த ஆர்வத்தை சிரமப்பட்டு அடக்கி கொண்டாள். இவளின் மன ஓட்டத்தை அறிந்தது போல் அவனும் அந்த இருக்கையிலிருந்து எழுந்து நேரே இவளருகே வந்தான்.

அன்னபூரணிக்கு குப்பென்று வியர்த்து விட்டது.கொஞ்சம் தள்ளி உட்கார்ந்துக்கோங்க, புக் எடுக்கனும் என்றான்.அவள் அந்த மர ஷெல்ப்பிற்கு அருகே உட்கார்ந்திருந்ததால் அவனால் மர ஷெல்பின் கதவை திறக்க இயலவில்லை. இவள் நகர்ந்து உட்கார்ந்து கொண்டாள்.

அவனும் கதவை திறந்து ஏதோ  தேடுவது போல் இவளையே பக்கவாட்டில் பார்த்துக் கொண்டிருந்தான். ஒல்லியான உடல்வாகு.பச்சை கலர் சுடிதார். சந்தன கலரில் துப்பட்டா. வட்ட முகம், பரந்த நெற்றி,நீண்ட புருவங்கள், மையிடாமலேயே கரிய பெரிய கண்கள் என மொத்தத்தில் களையாகத்தான் இருக்கிறாள் என நினைத்தான். இருப்பதிலேயே பெரிய புத்தகம் ஒன்றை எடுத்து கொண்டு இவளை விழுங்கி விடுவது போல பார்த்து சென்றான்.

அன்னபூரணி அவனை பார்க்காதது போல இருந்தாலும், முழுதாக கவனித்து விட்டாள். சராசரிக்கு சற்று மேலான உயரம். கொஞ்சம் பூசின உடல்வாகு. உருண்டை முகம். நல்ல சிவப்பு நிறம், கட்டையான மீசையும் இரண்டு நாள் தாடியும் சிறிது அல்லு அர்ஜுனை நினைவுபடுத்தியது.  சீராக வெட்டப்பட்டிருந்த நகங்கள் அவனது புற ஒழுங்கை பறைசாற்றின.

 டார்க் ப்ளு பேன்ட்டும் ஃபேண்டா கலர் அரைக்கை  சட்டையும் அணிந்திருந்தான்.  கையில் கட்டியிருந்த கருப்பு ஸ்டிராப் வாட்ச், அவனின் நிறத்தை இன்னும் கூட்டி காண்பித்தது. வெடிப்பில்லாத குதிகால்கள் இவன் கடினமான வேலைகள் இதுவரை செய்திருக்க மாட்டான் என எண்ண வைத்தன.

ஐயோ! வேலை கிடைக்கலனா என்ன செய்வது என முதன் முறை கவலைப்பட்டாள். இதெல்லாம் அறியாத அந்த பாட்டி, ஆடிட்டர் எப்போது வருவார் என வாசலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி காட்டன் புடவையில் எளிமையான அலங்காரத்தில் உள் நுழைந்தார்.சிறிது நேரத்தில் ப்யூன் விஜி , ஆடிட்டர் அழைப்பதாக சொன்னவுடன் பாட்டியும் பேத்தியும் எழுந்தனர். அந்த மூன்று கேபின்களில் உள்ளிருந்து முதலாவது கேபினை நோக்கி சென்றனர். கதவில் சுபாஷிணி கிருஷ்ணமூர்த்தி FCA என்று பித்தளை பெயர் பலகை இருந்தது. கதவை திறந்தவுடன் பெரிய இராஜ அலங்கார முருகன் படம். அதற்கு கீழே சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த  ஆடிட்டர் சுபாஷிணி மேடம் புன்னகையுடன் வரவேற்று இருவரையும் அமர சொன்னார்

பாட்டி  ஆடிட்டரிடம் தன்னைப் பற்றி கூறத் தொடங்கியிருந்தார்.

“நமஸ்காரம் மேடம். நான் பங்கஜம் ஜட்ஜ் சீதாராமன் ஆத்துல 20 வருஷமா சமையல் வேலை பார்த்துண்டுருக்கேன். சின்ன வயசுலயே எங்காத்துக்காரர்  தவறிட்டார்.  எனக்கு ஒரே பொண்ணு. எப்படியோ நாலு வீட்ல வேலை பார்த்து பொண்ண ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணிகொடுத்துப்பிட்டேன்.அவாள்க்கு பிறந்த குழந்தைதான் இவோ என பேத்தியை கைகாட்டினார்.எனக்கு சமையல தவிர ஒன்னும் தெரியாது. அதான் இவளுக்கு அன்னபூரணி னு பேர் வெச்சேன்.”

“போறாத காலம் என் பொண்ணும் மாப்பிள்ளையும் இந்த குழந்தைக்கு ரெண்டு வயசாகறச்ச அடுத்தடுத்து போய் சேர்ந்துட்டா.நாந்தான் இவளை பன்னெண்டாவது வரை படிக்க வெச்சேன்.அதுக்கு மேல என்னால படிக்க வெக்க முடியாது. ஒரு நாலஞ்சு வருஷம் வேலைக்கு போய் வெளி உலகம் தெரிஞ்சிக்கட்டும். அப்றம் இவள ஒருத்தன் கைல புடிச்சுக் கொடுத்துட்டு நான் பகவானண்ட போய் சேர்ந்துடுவேன்.”

“ஜட்ஜ் ஆத்து மாமி உங்கள பத்தி சொன்னா, ஆடிட்டர் மாமிய பார்த்து பேசினேள்ன்னாக்கா உங்க பேத்திக்கு வேலை கிடைச்சுடும்னா. அதான் உங்கள பார்க்க வந்தேன்னு அந்த மூதாட்டி தன் பூர்வாசிரமத்திலிருந்து இன்று வரை மூச்சிரைக்க பேசினார்.”

அனைத்தும் பொறுமையாக கேட்ட சுபாஷினி, பேத்தியை விசாரித்தார். “எந்த ஸ்கூல்ல மா நீ படிச்ச?”

“கேர்ள்ஸ் ஹையர் செகண்ட்ரி ஸ்கூல்.”

“எந்த க்ரூப் ?என்ன மார்க்?”

“ஆர்ட்ஸ் குருப் மேம். மொத்தம் 988 மார்க்.காமர்ஸ், அக்கவுண்ட்ஸ்ல சென்டம்” என பெருமை பொங்க கூறினாள் அன்னபூரணி. அதே நேரத்தில் மேலே படிக்க முடியவில்லை என்ற ஆதங்கமும் அவளது கண்களில் தெரிந்தது.

அதை கவனித்த ஆடிட்டர், “ஏன் மாமி இவ்ளோ நல்ல மார்க் எடுத்திருக்காளே, இவ படிக்கட்டுமே, பூரா செலவும் நான் ஏத்துக்கறேனே” என்றார். அதற்கு பாட்டி திட்டவட்டமாக மறுத்து விட்டார். “நீங்க இப்படி சொன்னதே சந்தோஷம். நிறைய படிச்சுட்டா அதுக்கேத்தாப்ல வரன் பார்க்கனும். இதுவே போதும். நீங்க வேலை கொடுத்தா சௌர்யமா இருக்கும்” என்றார்.

 பாவம்! அந்த சிறு பெண்ணை பார்த்தார் சுபாஷினி. கண்களில் படிக்கும் ஏக்கமும் பாட்டியின் நிலையறிந்ததால் தன் ஆசையை கட்டுப்படுத்தும் வைராக்கியமும் ஒரு சேர தெரிந்தது. இந்த பெண்ணுக்கு நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என மனதிற்குள் நினைத்தார்.

“சரிம்மா. நாளைக்கு வியாழன். குருவாரம் . நாளைலயிருந்து வேலைக்கு வந்துடு. காலை 9.30. சாயந்திரம் 5.30 க்கு கிளம்பிக்கலாம். வேலை கிடைச்சிடுச்சுனு இத்தோட தேங்கி நின்றக் கூடாது. கரஸ்பான்டன்ஸ் கோர்ஸ் ஒன்னுல சேர்த்து விடறேன். விட்டுப் போன படிப்ப தொடரலாம். ஆல் த பெஸ்ட்”  என்று கை குலுக்கினார்.

பாட்டியிடம் திரும்பி “இந்த ஆபிஸ்ல நாங்க ஒரு குடும்பமா பழகறோம். எல்லாம் என்ட்ட ரொம்ப வருஷமா வேல பாக்கறவாதான். நீங்க புது இடம்னு பயப்பட வேண்டாம் மாமி” என்றார்.

பாட்டியும் பேத்தியும் நன்றி கூறி விட்டு விடைபெற்றனர். வெளி வந்ததும் அன்ன பூரணியின் கண்கள் அவனைத்தான் தேடின.அய்யோ அவன காணோமே? அவன் பேரு கூட தெரியாதே என யோசித்துக் கொண்டே மேனேஜரிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப எத்தனித்த போது, தூரத்தில் அவன் ப்யூன் விஜியிடம் சத்தமாக பேசிக் கொண்டிருந்தான்.”விஜிண்ணா! என் பேர் ரகு பிரசாத், சுருக்கமா ரகுனு கூப்பிடுவாங்கனு உனக்கு தெரியாதா?” என்றான்.

விஜி, ” ஏன்டா இவ்ளோ நேரம் நல்லா தான பேசிட்டுருந்த, இப்ப என்ன சம்பந்தமில்லாம பேசறே?” என்றான்.

 “அதெல்லாம் உனக்கு புரியாது போ அண்ணா” என்றான்.அவனை கடந்து செல்லும் போது எனக்கு புரிந்தது என்று கண்களாலேயே பதில் சொன்னாள் அன்னபூரணி.

யப்பா எமகாதகன் இவன்.நாம மனசுல நினைக்கறத கரெக்டா கண்டுபிடிச்சுட்டானே. இவன்ட்ட ரொம்ப ஜாக்கிரதயா நடந்துக்கனும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. சுவராசியமான தெளிவான எழுத்து நடை தொடர்ந்து படிக்க தூண்டுகிறது. அருமை ஜி

    • மிக்க நன்றி ஜி. அடுத்தடுத்த அத்தியாயங்களில் நிறைய சுவாராசியங்கள் எதிர்பார்க்கலாம்.
      C. வைஷ்ணவி

மன்னிக்க வேண்டுகிறேன் (பகுதி 2) – சுஶ்ரீ

இதோ! புதிய மன்னவர்கள் (சிறுகதை) -இரஜகை நிலவன்