தைத்திங்கள் முதல் நாள்
உழவர்களுக்கான நாளாம்!
உழவுக்கு வந்தனம் செய்யும் நாளாம்!
தமிழர்களின் ஆழ வேரூன்றிய திருவிழாவாம்!
தித்திக்கும் செங்கரும்பு
திருந்திய நெல்மணிகள்
மங்கலத்தின் அடையாளமாய் மஞ்சள்,
புதுப்பானை பொங்கல்!
அறுவடை அனைத்தும்
ஆதவனுக்கு அர்ப்பணிப்பாய்…
அண்டம் பிண்டம் இரண்டிற்கும்
ஆதாரமே அவன் தான்!
மன நிறைவுடன்
மக்கள் இணைந்து
ஊர் செழிக்க
குலவைக் குரலோடு
சமுதாய பொங்கல்!
விடலைகளுக்கு விருந்தாய்
தாவணியும் வேட்டியும்
உரியடியில் ஆண்மையும்
உற்சாகப்படுத்துதலில் பெண்மையின் காதலும்
வெளிப்பட்டு மகிழ்ச்சி பொங்கும் நாள்!
உரித்தானவர்க்கு கிடைக்கவில்லை
என்பதே ஆதங்கம்…
உழுதவனை விட
உரிமைக்காரனை பார்த்தே சிரிக்கிறது
அறுவடைக்கு காத்திருக்கும் நிலம்;
பசி ஆற்றுபவனை விட
பன்னாட்டுக்காரனையே நிமிர்த்தி விடுகிறது
இந்த மக்கள் கூட்டம்;
உலகம் சுற்றும் ஆளுமைக்கு
உள்ளூர் விவசாயிகளின் கூக்குரல் கேட்க நேரமில்லை!
பருவ மாற்றம் கூட வஞ்சிக்கிறது!
சிந்திய கண்ணீர் துளிகளே
சில சமயங்களில் தண்ணீராய்…
அவர்கள் உழைப்புக்கு உபகரணங்கள் கைகூப்பும்!
தன்னை வருத்தி நமக்காய் உணவளிக்கும் கரங்கள்!
அவர்கள் ஆநிரைகளின் மூக்கணாங்கயிரே
அவர்கள் கழுத்தை நெரிப்பதும்,
கருகிய பயிரை கண்ட பொழுதில் வந்த மாரடைப்பும்
வேதனையின் உச்சம்!!!
பஞ்சத்தில் மட்டுமே வெளிச்சமாகும் உம் உன்னதம்.
இதோ…
பஞ்சத்திற்காய் என் பிரார்த்தனைகள்!!!
ஆம் பஞ்சம் வேண்டுமென்றே என் பிரார்த்தனைகள்.
எனில் மட்டுமே அடுத்த யுகம்
கணினியை தட்டாமல் கலப்பையை தூக்கும்!