in

நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 8) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

நீ எனதின்னுயிர் ❤ (பகுதி 8)

பிப்ரவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7

ரீட்சை முடிந்து அன்று நல்ல ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று டின்னரும் வாங்கிக் கொடுத்தான்.

அலுவலகத்தில் கூட எல்லோரும் கிருத்திகாவை “பரீட்சை நன்றாகச் செய்தாயா?” என்று விசாரித்தார்கள்.

ஒரு நாள் கருத்திருமன் ஆபீசில் எல்லோருக்கும் அழைப்பிதழ் கொடுத்தார். அவருடைய பேத்தி சந்தியா குட்டியின் பிறந்த நாள்.

பார்வதியையும், சந்தியாவையும் கிருத்திகாவிற்கு மிகவும் பிடிக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் பழம், குழந்தைக்கு ஏதாவது ஒரு பொம்மை, சாக்லெட்  எல்லாம் வாங்கிக் கொண்டு போய்ப் பார்ப்பது கிருத்திகாவின் வழக்கம்.

கிருத்திகா, வயலட், மும்தாஜ் மூவரும் கிளம்பி சந்தியாவிற்குப் பிடித்த சாக்லெட்ஸ், டாய்ஸ் எல்லாம் வாங்கிக் கொண்டனர்.

பிங்க் கலரில் அழகான ப்ராக் செட் வாங்கினாள் வயலட். மும்தாஜ் நிறைய சம்கி ஒர்க்கோடு சல்வார்கமீஸ் வாங்கினாள்.

கிருத்திகா, நல்ல சிவப்புக் கலரில், மெரூன் கல் பார்டர் வைத்து திக்கான ஜரிகை கரையுடன் ஒரு கட்டம் போட்ட பாவாடையும், அதே நிறத்தில் சட்டையும் வாங்கினாள். அதற்குப் பொருத்தமாக அங்கே விற்ற அழகான ஆர்னமென்டல் நகைகளையும், வரும் வழியில் பூச்சரங்களையும் வாங்கிக் கொண்டாள்.

யாரும் ஒருவர் வாங்கியதை ஒருவர் பார்க்கவில்லை. அலுவலகத்தில் அரை மணி நேரம் தான் அனுமதி கிடைத்தது. சபரீஷ்வர் அனுமதி கொடுத்தாலும், கருத்திருமன் ஆயிரம் கேள்விகள் கேட்டுத்தான் அனுமதி கொடுத்தார். அதனால்தான் அவர்களுக்கு ஒருவர் வாங்கியதை மற்றவர் பார்க்க நேரமில்லை.

சந்தியாவிடம் கொடுக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து விட்டனர். அவர்கள் ஆட்டோவில் போய் இறங்கியவுடன், பார்வதியும் கருத்திருமனும் சந்தியாக்குட்டியும் ஓடி வந்து வரவேற்றனர். டேபிள் மேல் சுமாரான ஸைஸில் ஒரு கேக் வைக்கப்பட்டிருந்தது.

கொஞ்ச நேரத்தில் தன் ஆவ்டி காரில் சபரீஷ் வந்து இறங்கினான். டிரைவர் நிறைய பரிசுகளோடு ஒரு கேக் கொண்டு வந்து வைத்தார்.

சந்தியா “அங்கிள்” என்று ஓடிப்போய் அவன் கால்களைக் கட்டிக் கொண்டாள்.  சபரீஷ் அந்த குழந்தையை அப்படியே வாரி அணைத்துக் கொண்டான்.

“யாரிந்த குட்டிப் பாப்பா? இது தான் பர்த்டே பேபியா?” என்று கொஞ்சினான்

“எதற்கு சார் நிறைய செலவு செய்கிறீர்கள்? சாதாரணப் பிறந்த நாள். வருடா வருடம் வரும் பிறந்த நாள்” என்றார் கருத்திருமன்.

“பரவாயில்லை அங்கிள். நம் சந்தியா குட்டிக்காகத்தானே எல்லாம்” என்றான் சபரீஷ்வர்.

ஜோராக டிரஸ் செய்து கொண்டு பிறந்த நாள் கொண்டாட ரெடியாக நின்றாள் சந்தியா குட்டி.

அப்போது கிருத்திகாவின் செல்போன் அழைத்தது.

ஒரு நிமிடம் போனில் பேசிவிட்டு, “சந்தியா குட்டி, உனக்கு பர்த் டே பிரசன்டேஷன் இன்னும் என்ன வேண்டும்? சொல் பார்க்கலாம்” என்றாள் கிருத்திகா.

ஒரு நிமிடம் தன் அம்மாவை உறுத்துப் பார்த்து விட்டுப் பிறகு, “என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் பிறந்த நாள் கேக் வெட்டும் போது அம்மா, அப்பா இருவருமே உடன் இருக்கிறார்கள். எனக்கோ அம்மா மட்டும் இருக்கிறார்கள்” என்றாள் அந்தப் பிஞ்சு குழந்தை கண்கள் கலங்க.

“ஒரு நிமிடம் கண்ணை மூடு” என்றாள் கிருத்திகா. வயலெட்டும், மும்தாஜும் வெளியே ஓடிப் போய் ஓர் ஆளை இழுத்து வந்தனர்.

“கோபி மாப்பிள்ளை” என்றார் கருத்திருமன் ஆச்சரியமாக.

கண்களை அகலத் திறந்த சந்தியா, “அப்பா” என்று கத்திக் கொண்டே ஓடி வந்தாள். அவளை அப்படியே தூக்கி முத்தமாறிப் பொழிந்து அணைத்துக் கொண்டான் கோபி.

எல்லாவற்றையும் பார்த்து கலங்கிய கண்களுடன் நின்ற பார்வதியிடம் சென்ற கோபி, “என்னை மன்னித்து விடு பார்வதி, உனக்கும், குழந்தைக்கும் நான் தீராத கொடுமைகள் செய்து விட்டேன். நீங்களும் என்னை மன்னித்து விடுங்கள் மாமா” என்றான்.

“இந்த அதிசயம் எப்படி நடந்தது?” எனக் கேட்டார் கருத்திருமன்.

“அவரும் மனிதர் தானே! அவரே மனம் மாறி குழந்தையின் பிறந்த நாளாயிற்றே என்று வந்திருக்கிறார். அவரைப் போய் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டு. சந்தியா குட்டி, அப்பாவிற்கு கேக்கை கொடு செல்லம்” என்றாள் கிருத்திகா.

“பேச்சை மாற்றாதீர்கள் கிருத்திகா. நான் என் மனைவியையும், குழந்தையையும் பணத்திற்காகத் தான் பிரிந்து இருக்கிறேன் என்று தெரிந்து கொண்டு, கிருத்திகா மேடம் தன் வங்கியின் சேமிப்புக் கணக்கிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய்க்கான செக் என் அலுவலகத்தில் கொண்டு வந்து கொடுத்தார். பார்வதி தினம் கண்கலங்கி நிற்பதையும், குழந்தை சந்தியா ‘அப்பா’ என்று அடிக்கடி அழுவதையும் கூறினார்” என்று நிறுத்தினான் கோபி.

“நானும், கருத்திருமன் அங்கிளும் பலமுறை இதைத்தானே உன்னிடம் கூறினோம். அப்போதெல்லாம் உன் மனம் இரங்கவில்லை”  என்றான் சபரீஷ்.

“ஆமாம் சார், நீங்கள் வந்து பலமுறை பேசினீர்கள்.  என் பெற்றோர்கள் பிடிவாதத்தின் முன் என்னால் அப்போது ஒன்றும் சொல்ல முடியவில்லை.  ஆனால் கிருத்திகா மேடம், தன் சேமிப்புக் கணக்கிலிருந்து  இரண்டு லட்ச ரூபாய் கொடுத்தது எனக்குக் கன்னத்தில் அறைந்தாற் போல் இருந்தது. என் பெற்றோரும், யாரோ முன் பின் தெரியாத பெண்ணிற்கு, நம் மருமகள் மேலும், நம் பேரக்குழந்தை மேலும் இருக்கும் அக்கறை எப்படி நமக்கில்லாமல் போயிற்று என்று வருத்தப்பட்டார்கள். இப்போது அவர்களும் என்னுடன் வந்திருக்கிறார்கள், வருவதற்கு அஞ்சி வெளியே காத்திருக்கிறார்கள்” என்றான் தயக்கத்துடன்.

கருத்திருமனும், பார்வதியும் வெளியே ஓடிப்போய்க் காரிலிருக்கும் அவர்களைக் கைகளைப் பிடித்து அழைத்து வந்தனர். சபரீஷ்வர் கோபியுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான்.

“கிருத்திகா சரி, மும்தாஜும், வயலட்டும் எப்படி உங்களுக்குத் தெரியும்?”  என்றான் சபரீஷ்.

“கிருத்திகா மேடம் தான் அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு, சந்தியாவின் பிறந்த நாள் அழைப்பிதழையும் கொண்டு வந்து வீட்டில் கொடுத்தார். அப்போது தான் அம்மா, அப்பாவை அழைத்து உங்கள் மருமகளையும், பேத்தியையும் நீங்கள் வந்து அழைத்துச் செல்லுங்கள் என்றார் கிருத்திகா” என்று முடித்தான் கோபி.

பிறகு கிருத்திகாவிடம், அவள் கொடுத்த செக்கைத் திருப்பிக் கொடுத்தான். கிருத்திகாவோ கொடுத்த செக்கைத் திரும்ப வாங்க மறுத்து விட்டாள்.

“இந்த செக்கைப் பார்க்கும் போதெல்லாம் என் மனசாட்சி என்னை உறுத்துகிறது. நான் செய்த கொடுமைகள் என்னைத் தாக்குகின்றன. ஆகவே தயவு செய்து என்னை மன்னித்து இந்த  செக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் மேடம்” என்று தொந்தரவு செய்து செக்கைத் திருப்பிக் கொடுத்தான். 

மும்தாஜும் வயலட்டும்  பார்வதியை கலாட்டா செய்துக் கொண்டிருந்தார்கள். கோபியின் பெற்றோர் கிருத்திகாவிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

கருத்திருமன் கூல்டிரிங்க்ஸும், டிபனும் கொடுத்து  சம்பந்திகளையும், மாப்பிள்ளையையும் மாறி மாறி உபசரித்துக் கொண்டிருந்தார்.

சபரீஷ்வர், கிருத்திகாவைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவளை நினைத்து அவனுக்கு மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

சபரீஷ்வர் எல்லோருக்கும், ஐஸ்க்ரீமுடன் நல்ல சாப்பாடு வரவழைத்தான். எல்லோரும் சாப்பிட்டப் பிறகு அவரவர் வீட்டிற்கும், ஹாஸ்டலுக்கும் கிளம்பினர்.

“கிருத்திகா, மும்தாஜ், வயலட் நீங்கள் மூவரும் என் காரில் வந்து விடுங்கள். வயலட்டை அவள் வீட்டில் விட்டு விட்டு உங்களை ஹாஸ்டலில் விடுகிறேன்” என்றான் சபரீஷ்வர்.

 

கிருத்திகா தன் கேபினில் தன் ஆடிட் விங்கிலிருக்கும் ஜூனியர்களிடம் அடுத்து இன்ஸ்பெக்‌ஷன் செய்ய வேண்டிய ஆபீஸ் பற்றியும், எடுத்துச் செல்ல வேண்டிய ரெஜிஸ்டர்களையும்  பற்றிக் கூறிக் கொண்டிருந்தாள்.

அப்போது கருத்திருமன் அங்கே வந்தார்.

“நான் கிருத்திகாவுடன் கொஞ்சம் தனிமையில் பேச வேண்டும்” என்று கூறவே, அவர்கள் தங்கள் கேபினுக்குச் சென்றனர்.

கிருத்திகாவின் அருகில் வந்த கருத்திருமன், “உனக்கு நான் எப்படி நன்றி கூறுவேன். சாதாரணமாக விசாரிப்பது போல் என்னிடம் விவரங்கள் கேட்டறிந்து பார்வதியைத் தன் கணவருடனும், குடும்பத்தினருடனும் சேர்த்து விட்டாயே. நிஜமாகவே நீ ரொம்பப் பெரியவள், புண்ணியவதி அம்மா”  என்றார் கண்கலங்க.

“அங்கிள், நீங்கள் இப்படியெல்லாம் உணர்ச்சி வசப்பட, நான் ஒன்றுமே செய்யவில்லை. உங்கள் மாப்பிள்ளையும், அவர் பெற்றோரும் இயற்கையில் நல்லவர்களே. ஏதோ கேட்ட நேரம், இனி எல்லாம் சந்தோஷமாக இருக்கும் கவலைப்படாதீர்கள்” என்றாள் கிருத்திகா.

“எப்படிப் பாட்டியம்மா போல் பேசுகிறாள் பார்த்தீர்களா சார்” என்ற சிரித்தாள் வயலட். கருத்திருமனும் சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டார்.

பார்வதியும் சந்தியாவும் அடிக்கடி கிருத்திகாவுடனும், சில நேரங்களில் வயலட், மும்தாஜுடனும் டெலிபோன் மூலம் பேசுவர். சந்தியாவை அங்கேயே பள்ளியில் சேர்த்து விட்டார்கள் என்றும், தாத்தா தான் அவளைப் பள்ளியில் கொண்டு போய் விடுவதும், அழைத்து வருவதும் என்று பார்வதி தெரிவித்தாள்.

மும்தாஜின் பெற்றோர் அவளை ஒரு வெள்ளிக்கிழமை போல் வரச் சொன்னார்கள். அதனால் அவள் ஆஃபீஸிற்கு ஒருநாள் விடுமுறை கொடுத்து விட்டு வியாழன் மாலையே ஊருக்குக் கிளம்பி விட்டாள். வயலெட்டும் அன்று ஏனோ விடுமுறை எடுத்துக் கொண்டாள்.

மும்தாஜ், வயலெட் இருவருமே இல்லாததால் கிருத்திகாவிற்கு ஆஃபீஸ் ரொம்ப போர் அடித்தது.         இருப்பினும் திங்கட்கிழமை ஆடிட் கிளம்புவதற்கு தன் இரண்டு அஸிஸ்டென்டுகளுடன் டிஸ்கஸ் செய்து, சில பேப்பர்கள் கம்ப்யூட்டரில் டைம் செய்து பிரின்ட் அவுட்டும் எடுத்து தயார் செய்து கொண்டிருந்தாள்.

அன்று ஏனோ சபரீஷும் ஆஃபீஸ் வரவில்லை. மற்ற எல்லோரும் ஆஃபீஸிலிருந்தும் சபரீஷ் ஒருத்தன் இல்லாதது ஆஃபீஸே வெறிச் சென்று இருந்தது போல் தோன்றியது கிருத்திகாவிற்கு.

“என்னம்மா, ஆபீசே காலியாக இருப்பது போல் இருக்கிறதா?” என்றார் கருத்திருமன்.

“ஆமாம் சார், இந்த வயலெட்டும் மும்தாஜும் ஒரே நாளில் லீவ் போட்டு விட்டார்களே” என்றாள் சலிப்புடன்.

“அவர்கள் இல்லாத்தாலா இல்லை சபரீஷ்வர் வராத்தாலா?”

“போங்க சார், நீங்களும் மற்றவர்களைப் போலவே கலாட்டா செய்தால் எப்படி?” என்றாள் கிருத்திகா சிணுங்கிக் கொண்டே.

எப்போதடா மணி ஐந்தாகும் என்று காத்திருந்து தன் ஹேண்ட் பேகை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

“போகலாமா அம்மா?” என்றார் கருத்திருமன்.

“நீங்கள் என்னுடனா வரப்போகிறீர்கள் அங்கிள்?”

“இல்லை, நீ தான் என்னுடன் வரப் போகிறாய் கிருத்திகா. உன்னைக் கொண்டு போய் ஹாஸ்டலில் டிராப் செய்து விட்டுப் பிறகு நான் என் வீட்டிற்கு போகிறேன், அது தான் நம் எம்.டி.யின் உத்தரவு” என்றார் சிரித்துக் கொண்டே.

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் சார். நான் வழக்கம் போல் ஆட்டோவிலோ அல்லது டாக்ஸி போய்க் கொள்கிறேன்” என்றாள்.

“கொஞ்சம் பொறு அம்மா, பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்னது மாதிரி. நமக்கெல்லாம் பெரியவர் நம் எம்.டி. அல்லவா, அவர் வாக்கைப் பெருமாள் வாக்குப் போல் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றவர், வற்புறுத்தி  அவளைக் கொண்டு போய் அவளது ஹாஸ்டலில் விட்டு விட்டுத் தன் வீட்டிற்குச் சென்றார்.

அன்று இரவு டின்னர் முடிந்தபின் தன் படுக்கையில் வந்து உட்கார்ந்தாள். அப்போது அவள் செல்போன் அழைத்தது, சபரீஷ்வரன் தான் கூப்பிட்டான்.

“கிருத்திகா, நாளை காலை நீ என் வீட்டிற்கு வரமுடியுமா?”

“ஏன் சார்?  நாளை ஏதாவது விசேஷமா?”

“நாளை என்‌ அம்மாவின் பிறந்த நாள், அதற்கு ஒரு சின்ன பூஜை. நீ அந்தப் பூஜையில் என்னோடு கலந்து கொள்ள வேண்டும் என்று என் மனம் ஆசைப்படுகிறது, உன்னால் வர முடியுமா கிருத்திகா?” என்றான் கெஞ்சும் குரலில்.

“நானா? பூஜையில் கலந்து கொள்வது சரியாக இருக்குமா?” என்றாள் தயக்கமாக.

“கட்டாயம் சரியாக இருக்கும். ஏழு மணிக்கு ரெடியாக இரு. நானோ இல்லை கருத்திருமன் அங்கிளோ கார் எடுத்துக் கொண்டு வருவோம் சரியா?” என்றான் ஒரு விதத் தோரணையுடன்.

“சரி” என்றாள் தயக்கமாக.

பூஜையில் என்ன செய்ய வேண்டும், என்ன மந்திரங்கள் சொல்வார்கள் ‌என்பது இவளுக்குத் தெரியாது. ஹோமில் சில பக்திப் பாடல்களை அவற்றின் இனிமைக்காகக் கற்றுக் கொண்டாள். அதற்கு இவள் பாடும் ராகம் சரியா தவறா என்று தெரியாது.

கிருத்திகா என்று பெயர் வைத்ததால் சில முருகக் கடவுள் பாடல்கள் தெரியும். எல்லாக் கோயில்களிலும் அந்த அந்த மத வழக்கப்படி கும்பிடுவாளே தவிர, மற்றபடி  பக்தி என்றெல்லாம் தீவிரமாக இல்லை.

‘பச்சை மாமலை போல் மேனி’யும் பிடிக்கும்,  ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ என்ற பாடலும் பிடிக்கும்.  ‘மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்’ என்ற பாடலும் உள்ளத்தில் ஒன்றிய பாடலே.

‘நானே ஒரு அநாதை, தாய் தகப்பன் ‌இல்லாதவள். எங்கோ கண்டெடுக்கப்பட்டவள். நான் கோயிலுக்கு வெளியில் நின்று கும்பிடலாம், உள்ளே சென்று அர்ச்சனை செய்ய முடியுமா? பூஜையில் கலந்து கொண்டால், நம்முடைய பிறந்த நட்சத்திரம் கோத்ரம் என்று ஏதேதோ கேட்பார்களே.

எனக்கு எவருமே கிடையாது. பூஜையில் கலந்து மீண்டும் மீண்டும் அவமானப்படவா?  சபரீஷவருக்கு இது ஏன் புரியவில்லை? அவருக்குத் தான் தெரியவில்லை என்றால், இந்த அங்கிளாக்காவது தெரிய வேண்டாமா? எல்லாம் என்னைப் பெற்றுத் தூக்கி எறிந்து விட்டுப் போனாளே, அவளால் வந்தது’ என்று புலம்பியவாறு ஒரு வழியாகத் தூங்கினாள்.

(தொடரும் – திங்கள் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வைராக்கியம் ❤ (பகுதி 8) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

    மரித்துப் போன மனிதம் (சிறுகதை) – ✍ பெருமாள் நல்லமுத்து