in

மரித்துப் போன மனிதம் (சிறுகதை) – ✍ பெருமாள் நல்லமுத்து

மரித்துப் போன மனிதம் (சிறுகதை)

பிப்ரவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

சியாவின் மிகப்பெரிய தொழில்பேட்டை அம்பத்தூர். அதிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள வாவின் என்ற இடம் நான்கு ரோடுகளையும் இணைக்கும் இடம் வடக்கே போகும் சாலை அம்பத்தூர், பட்டபிராமையும், தெற்கே போகும் சாலை முகப்பேரையும், மேற்கே போகும் சாலை திருவள்ளூரை நோக்கியும், கிழக்கே போகும் சாலை திருமங்களம், அண்ணா நகரையும் இணைக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது வாவின். நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்சாலைகளில் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.

இதனை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது, அந்தக் கடைகளில் ஒன்றுதான் சுரேஷ் நடத்தும் மணவை சிற்றுண்டி கடை. சுரேஷும் அவன் மனைவியும் காலையிலிருந்து மாலை வரை மாறி மாறி கடையை பார்த்துக் கொள்வார்கள்.

சுரேஷுக்கு இயற்கையாகவே மற்றவரிடம் இனிமையாக பேசும் குணம் உண்டு, அதனாலேயே வாடிக்கையாளர்களை எளிதாக கவர்ந்து விடுவான். தொழில் நிறுவனங்கள் ஏராளமாக இருப்பதால் மக்கள் நடமாட்டம் இருந்துக் கொண்டே இருக்கும்.                                                

அன்று மாலை கருத்த நிறம், சிறுத்த இடை, மஞ்சள் பூசிய முகம் கொண்ட இளம் பெண் கூடவே வாலிப்பான ஆணுடன் கடைக்கு வந்தவள்.                         

“அக்கா டீ ரெண்டு குடுங்கக்கா”ன்னாள்                                                                   

“யோவ் இந்தாயா டீ குடி”ன்னு தன்னுடன் வந்தவனுக்கு கொடுத்தாள். அனேகமாக அவளின் கணவனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் சுரேஷ்.

ஒருவர் தட்டில் பாதி பஜ்ஜியை தின்றுவிட்டு மீதி பஜ்ஜிக்காக சட்னி என்று கேட்க, டீ குடித்துக் கொண்டிருந்த இந்தப்பெண் சட்னி வாளியை எடுத்து வந்து ஊற்றினாள்.

டீயை குடித்துவிட்டு கல்லாவில் அமர்ந்திருந்த சுரேஷின் மனைவியிடம் “இந்தாங்கா காசு”ன்னு இருபது ரூபாயை நீட்டினாள்.

“அப்புறங்கா… நாங்க இஞ்சிபேஸ்ட், உறிச்ச பூண்டு வியாபாரம் செய்றோம். ஒங்களுக்கு வேணும்னாலும் சொல்லுங்கக்கா, நான் தர்றேன்” என்றவளிடம்.                                                           

“அப்படியா இதென்ன புது பிசினெஸ்சா இருக்கு”ன்னாள் சுரேஷின் மனைவி.               

“அக்கா இப்ப நீங்க கடை வச்சிருக்கீங்க, மதியம் சமையலுக்கு பூண்டு, இஞ்சியெல்லாம் எவ்ளோ நேரமா உறிப்பீங்க, நேரத்தை மிச்சப்படுத்தலாம்ல” என்றாள்.                                                                     

“நாளைக்கு ஞாயிறுத்துகிழமை எல்லாருடைய வீட்டிலேயும் நான்வெஜ் சமைப்பாங்க. இப்ப நாளைக்கு ஒரு நாள்தான் லீவுன்னு வச்சிக்கோங்களே, வீட்டை சுத்தம் செய்றது, துணி துவைக்கிறதுன்னு ஆரம்பிச்சி வேலை அடுத்தடுத்து இருக்கும்ல. அப்பப் போய் பசங்க பிரியானிதான் வேணும்னு அடம்பிடிச்சா புள்ளைக்கு செஞ்சித் தறாம இருக்க முடியுமாக்கா. அந்த நேரத்துல பூண்டு உறிக்கனும், இஞ்சி பேஸ்ட் அரைக்கணும்னா அதுவே பெரிய மலைப்பா பெருமூச்சிவிட வச்சிடும், அப்புறமெங்க பிரியானி செய்யறது. உடனே போய் அந்த மொனையில இருக்கிற ஹஜாரிக்கடையில் பிரியாணி வாங்கிடலாம்னு தோணும்ல. என்னத்தான் கடையில வாங்கி கொடுத்தாலும் நம்ம கையால நம்ம புள்ளைக்கு சமைச்சி போடறது மாதிரி இருக்குமா?’ நீங்களே சொல்லுங்க” என்று முடித்தாள்.                                                            

“இந்தாம்ம மூச்சி விடாம பேசிட்ட கொஞ்சம் தண்ணி குடி”ன்னான் சுரேஷ்.                                

“ரொம்ப தேங்ஸ்ண்ணா” என்று வாங்கி குடித்தாள்.  

“நாங்களும் ஒங்க கடை மாதிரிதான், எங்க ஊர்ல கடை வச்சிருந்தோம். ஆனா நேரம் சரியில்ல, அதான் சென்னையில வந்து கஷ்டப்படுறோம்”னாள்.                                                           

கஷ்டமர் “சட்னின்னு கேட்டவுடனேயே ஓடிப்போய் எடுத்து ஊத்தினியே அப்பவே நெனைச்சேன். உழைச்ச கையும், காலும் சும்மா இருக்காதுல்ல” என்றான் சுரேஷ்.

“காலச்சூழல் எங்க நிலமை இப்படி ஆயிடுச்சி”ன்னு கண் கலங்கினாள்.                                              

“சரிம்மா பீல் பண்ணாத, நாங்க உறிச்ச பூண்டு, இஞ்சி பேஸ்ட்ட வாங்கிக்றோம்”னாள் சுரேஷின் மனைவி.  

“ரொம்ப நன்றிங்க்கா, இந்தாங்க உறிச்ச பூண்டு ஒரு கிலோ நூத்தம்பது” என்றாள்.                               

“ஆமா ஒம் பேரென்னமா, எந்த ஏரியா?” என்றான் சுரேஷ். 

“அன்பரசி அண்ணே, ஆனா எந்த ஏரியான்னு மட்டும் கேக்காதீங்க? ஏனா நாங்க ஊரவிட்டு ஓடியாந்துட்டோம். வியாபாரத்தை முடிச்சிட்டு கோயம்பேடு பஸ்டாண்டுல படுத்துப்போம்”னாள்.

“ஏண்டி நம்ம கதையெல்லாம் அவங்கள்ட சொல்லிட்டு இருக்க”ன்னு முதன் முறையாக வாயைத் திறந்தான் அன்பரசியின் கணவன்.

“ஆறுமுகம்ணே, கல்லாவ கொஞ்சம் பாத்துக்கோங்க, ஒரு நிமிஷம் இரும்மா வாரேன்”னு சுரேஷின் மனைவி, சுரேஷை தனியாக அழைத்து சென்றாள்.  

“என்னங்க எனக்கு ஒரு யோசனை வருது, அந்தப் புள்ளைய பார்த்தா நல்ல புள்ளையா தெரியுது. எனக்கும் ஒத்தாளா நின்னு வேலை செய்யறது கஷ்டமா இருக்குங்க, அதனால அந்தப் புள்ளைய வேலைக்கு வச்சிகிடலாம்மா” என்று கேட்டாள்.                   

“ஒனக்கு ஒக்கேன்னா எனக்கும் ஓக்கேதான், ஆனா முன்ன பின்ன தெறியாதவுங்கள எப்படிமா திடீர்னு வேலைக்கு சேர்த்துக்க முடியும்” என்றான் சுரேஷ்.                                  

“ஒங்களுக்கு எப்ப பார்த்தாலும் சந்தேகம்தாங்க, கொஞ்சமாவது மத்தவுங்கள நம்பிக்கை வைங்க” என்று சுரேஷின் வாயடைத்தாள் மலர்.

“சரி சரி, நீ சொன்னா சரியாத்தான் இருகும்”னான் சுரேஷ்.                                                           

மீண்டும் கல்லாவிற்கு வந்த மலர், “ஏம்மா அன்பரசி, நீங்க ரெண்டு பேரும் எங்க கடைக்கு வேலைக்கு வர்றீங்களா?” என்று கேட்டாள்.                                                                                  

“ரொம்ப சந்தோஷம்க்கா, நாங்க நெறைய இடத்துல வேலைக்கு கேட்டுட்டு வேலை கிடைக்காமத் தான் இந்த பூண்டு, இஞ்சின்னு அலஞ்சிட்டு இருந்தோம், ரொம்ப நன்றிக்கா” என்றாள் அன்பரசி.

அடுத்த நாளிலிருந்து அன்பரசியும், வாசனும் பம்பரமாய் கடையில் வேலை செய்ய ஆரம்பித்தார்கள்.  

“அண்ணே வாங்கண்ணே வாங்க என்ன சாப்பிடுறீங்க? இட்லியா, பொங்கலா, பூரியா”ன்னு வந்த கஷ்டமரை வரவேற்று கேட்டாள் அன்பரசி.

“என்ன சுரேஷ் வேலைக்கு ஆட்கள்லாம் போட்டுட்டுட்ட போலிருக்கு”ன்னு வழக்கமான வாடிக்கையாளர்களாகிய பாஸ்கரும், சரவணனும் கேட்டார்கள்.                    

“ஆமாண்ணே கொரோனாவுக்கு அப்புறமா இப்பத்தான் வியாபாரம் மறுபடியும் சூடு புடிக்க ஆரம்பிச்சிருக்கு. ஊருக்குப் போன ரத்னம், இளங்கோ ரெண்டு பேருமே திரும்பி வரல. அதான் இவங்க வந்து கேட்டாங்க வேலைப் பார்க்க சொல்லியிருக்கேன்”னான் சுரேஷ்.                                       

“அண்ணே புதினா சட்னி ஊத்தட்டுங்களா”ன்னு அன்பாக கேட்ட அன்பரசி, பாஸ்கரின் இலையில் ஊற்றினாள்.

“சுரேஷ் தம்பி, ஒரு டீயப் போடுப்பா”ன்னு உரிமையாக கேட்டார் பூவண்ணன் என்ற டெகுலர் கஷ்டமர்.

“நான் போட்டு கொடுக்கறேன்”னு டீ போட ஆரம்பித்தான் வாசன்.                                                             

“ஏம்பா நேத்து கோயம்பேடு மார்கெட்டுக்கு போயிருந்தேன், அங்க ஒரு கடையில டீ, டிஃபன் அப்புறமா வெய்யலுக்கு இதமா கூல்ட்ரிங்ஸ், கூல்ட்ரிங்ஸ்னா பெப்சி, கோக் அந்த மாதிரி இல்லப்பா. இந்த கூலர்பாக்ஸ் வச்சி நன்னாரி, ரோஸ்மில்க் அந்த மாதிரி குடுக்கறாங்க. நீயும் ஏன் அதப் போல ட்ரை பண்ணக் கூடாது?”ன்னு கேட்டார் இன்னொரு ரெகுலர் வாடிக்கையாளரான சாலை சிவக்கனி.

“சிவக்கனி அண்ணே, அதுக்கெல்லாம் ஆள் சப்போர்ட் வேணும்னே, அத்தோட பணமும் நிறைய வேணும்ல” என்றான் சுரேஷ்.                                                         

“அதுக்குத்தான் நம்ம பைனான்சியர்ங்க தியாகு, தயாளன் ரெண்டு பேரும் இருக்காங்கள்ள அப்புறமென்ன”

“ம்ம் பாப்பம்ணே என்ன நடக்கும்னு இருக்கோ அது நடக்கத் தானே செய்யும். ஒங்க வாய் முகூர்த்தம் பலிக்குதான்னு பாப்போம்”னான் சுரேஷ்.

நீண்ட நாட்களாக அந்த ஏரியாவிலேயே கடை வத்திருப்பதால் கடைக்கு வரும் பாதி கஷ்டமர்களின் பெயர்கள் அவனுக்கு அத்துப்படி.

நாட்கள் நகர நகர முன்பை விட வியாபாரம் சூடு பிடித்தது. டீ போட்டு கொண்டிருந்த சுரேஷ் கல்லாவில் நிரந்தரமாக உட்கார ஆரம்பித்தான்.

வாசன் கோயம்பேடு சென்று காய்கரிகள், பழங்கள் வாங்கி வர ஆரம்பித்தான், அன்பரசி கடையை தன் சொந்தக்கடை மாதிரி நன்றாக பார்த்துக் கொண்டாள்.

 கடையிலேயே வாசனும் அன்பரசியும் தங்கிக் கொண்டார்கள்.

இரவு கடையை மூடும் நேரத்தில், “அண்ணே ஒங்கள்ட கொஞ்சம் பேசனும்ணே” என்று பவ்யமாக கேட்டான் வாசன்.                 

“யோவ் கடையை அடைச்சிட்டு களைப்பா அண்ணனும், அக்காவும் வூட்டுக்கு கிளம்பும்போது இப்போ வந்து பேசணும், கீசனும்னு சொல்ற. காலையிலயிருந்து கடையிலதானே இருந்த அப்ப பேசவேண்டியது தானே?” என்றாள் அன்பரசி. 

“ஏண்டி காலையிலயிருந்து கடைக்கு ஆளுங்கெல்லாம் வந்துட்டு, போயிட்டு இருக்கும் போது அண்ணண்ட எப்படி ஃப்ரீயா பேசமுடியும்”னான் வாசன்.                  

பேசிக் கொண்டிருக்கும் போதே, “அண்ணே என்ன சீக்கிரமா கடையை மூடிட்டிங்களா?”ன்னு கேட்டான் ரெகுலர் கஷ்டமரான கால்டேக்சி ட்ரைவர் ராஜேந்திரன்.

“தம்பி நீதாம்பா லேட்டு”ன்னான் சுரேஷ்.                                                      

“அண்ணே வாங்க, எங்க சாப்பாடு இருக்கு நீங்க சாப்பிட்டு போங்க”ன்னாள் அன்பரசி.                       

“இல்லம்மா லேட்டாயிடும்னு தெறிஞ்சவுடனே நான் எம் ப்ரண்ட் கவுதமன்கிட்ட டிஃபன் வாங்கிட்டு வரச் சொல்லியிருக்கேன். கூட இன்னொரு ப்ரண்ட் ஐடியா மணி வேற இருக்கான்”னான் ராஜேந்திரன்.

அவன் சென்ற பிறகு, “சரி சரி சொல்லுப்பா”ன்னான் சுரேஷ்.

“காலையில கடைக்கு வந்த சார் ஒருத்தர் ஒங்கள்ட பேசிக்கிட்டு இருந்தத நானும் கேட்டுட்டுதாண்ணே இருந்தேன். நானும் எங்க வூர்ல ஹோட்டல்தான் வச்சிருந்தேன். காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டதும் ஊருகுள்ள யாருக்கும் புடிக்கல, அதனாலத்தான் திருச்சியிலருந்து சென்னைக்கு இந்தப் புள்ளய கூட்டிட்டு ஓடியாந்துட்டேன்.

எங்க கடைக்கு பக்கத்துல இன்னொரு கடையும் இருந்துச்சி, அவரு ரொம்ப நல்லவருண்ணே. கொரோனாவுக்கு பிறகு அவரு கடையை திறக்கலன்னு சொன்னாரு, ஆளுங்களும் செட்டாகாததால அவருக்கு ரொம்ப சிரமமாயிடுச்சி.

அதனால அவரு கடையிலவுள்ள கூலர்க்பாஸ், எஸ்யெஸ்ல செஞ்ச டேபிள், சேர்னு உள்ள சாமன்கள பாதி ரேட்டு கிடைச்சாக் கூட வித்திடலாம்னு நேத்து நான் போன் பண்ணினப்ப எங்கிட்ட சொன்னாரு. அதான் நாம அந்த சாமான்களை வாங்கிட்டம்னா நம்ம கடைய நல்லா டெவலப் பண்ணலாம்னு நினைச்சேண்ணே.

ரெண்டு, மூணு லட்சம் மதிப்புள்ள பொருள்கள் ஒரு லட்சத்துக்கு கிடைக்குதுண்ணே. எம்ப்ரண்ட் அழகுராஜ் அங்க லாரிவச்சிருக்கான் நாம போனா எடுத்துட்டு வந்திடலாம். வாழ வழியில்லாத எங்களுக்கு வாழ்க்கை குடுத்த உங்களுக்கு ஏதோ எங்களாலான உதவியா நாங்க செய்யலாம்னு இருக்கோம்”னான் வாசன்.

“சரிப்பா நாளைக்கு யோசிச்சி சொல்றேன்”னான் சுரேஷ். 

இரண்டு நாட்கள் நன்றாக யோசித்து மூன்றாம் நாள் ஒரு முடிவுக்கு வந்த சுரேஷ், வாசனை அழைத்து, “நாளைக்கு நாம ரெண்டு பேரும் திருச்சிக்கு போயிட்டு வந்திடலாம்”னான்.                                           

“அண்ணே நான் ஒன்னு கேட்டா செய்வீங்களா”ன்னு கேட்டாள் அன்பரசி.

“சொல்லும்மா” என்ற சுரேஷிடம்                                                                 

“நான் இங்க வந்து ரெண்டு மாசத்துக்கு மேலானதால எங்கம்மாவ பார்க்கணும் போலயிருக்கு, என்னையும் கூட்டிட்டு போனீங்கன்னா ஒங்களுக்கு கோடி புண்ணியமாயிரும்”னாள்.                           

“அக்காவோட நீ கடைய பாத்துக்கோ” என்றான் சுரேஷ்.                                               

“என்னங்க காலைலப் போய் சாயங்காலம் வந்திடப் போறீங்க, நானும் ஆறுமுகம் அண்ணனும் கடைய பார்த்துக்கறோம், நீங்க மூணுப்பேரும் போயிட்டு வாங்க”ன்னாள் மலர். 

அடுத்த நாள் அதிகாலையிலேயே தனது நண்பன் ரவிவர்மாவின் காரை வாங்கிக் கொண்டு புறப்பட்டான் சுரேஷ்.

“வாசன் இந்த பைசாவ டேஷ் போர்டுல வையி”ன்னு ஒருலட்ச ரூபாயை கொடுத்தான்.  

நான்கு மணி நேரத்தில் திருச்சியையடுத்த கே.கே.நகர் பக்கத்தில் உள்ள சுந்தர் நகர் பஸ் ஸ்டாப்புக்கு அருகே காரை நிறுத்தச் சொன்னான் வாசன்.  

“அண்ணே அதோ பாருங்க, அந்த பில்டிங்குக்கு பின்னாடித் தான் அந்த கடை முதலாளி வீடு. நான் போயிட்டு அவர் இருக்காரான்னு பார்த்துட்டு அப்புறமா ஒங்கள கூப்பிடுறேன்”னு இறங்கிச் சென்றான் வாசன்.                                                                                                            

சிறிது நேரம் கழித்து தெருமுனையிலிருந்து கையசைத்து கூப்பிட்டான் வாசன்.                               

“அண்ணே நீங்க போயிட்டு வாங்க நான் கார்லேயே இருக்கேன்”னாள் அன்பரசி.

ஐம்பது மீட்டர் தூரத்தில் இருந்த வாசனை நோக்கி நடக்க ஆரம்பித்தான் சுரேஷ். சுரேஷ் தெருவின் முனையை நெருங்க ஆரம்பித்த போது நூறுமீட்டர் இடைவெளியில் வேகமாக நடக்க ஆரம்பித்த வாசன், சட்டென்று வேகமாக ஓட ஆரம்பித்தான்.

கலங்கிப்போன சுரேஷ் அவன் பின் ஓட அரம்பித்தான் ஆனால் சற்று பருமனான சுரேஷால் ஓட முடியவில்லை. கண்னிமைக்கும் நேரத்தில் காணாமல் போனான் வாசன்.

சற்று நிதானத்துக்கு வந்த சுரேஷ் காருக்கு திரும்பினான். ஆனால் அங்கே இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது அவனுக்கு. காரிலிருந்த அன்பரசியையும், டேஸ் போர்டில் வைத்திருந்த பணத்தையும் காணவில்லை.

நிலைகுலைந்து நின்ற அவன், சற்றுநேரம் கழித்து நிதானத்துக்கு வந்து திருச்சியில் இருக்கும் தன் நண்பன் ஜீவாவிற்கு போன் செய்து விசயத்தை சொன்னான்.

 “அறிவு கெட்டவனே, நீ சொல்ற இடம் எனக்கு நல்லா தெரிஞ்ச இடம்டா. நாலு வருஷமா நான் அங்க தான் குடியிருந்தேன், நீ சொல்றாமாதிரி எந்த ஹோட்டலும் இல்லடா மாப்ள”ன்னான் ஜீவா.

தான் நன்றாக ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை உணர ஆரம்பித்த சுரேஷ், மனிதம் மரித்து போனதை நினைத்து மனம் கலங்கி நின்றான்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 8) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    மறு ஜென்மம் 2079 (சிறுகதை) – ✍ உமா கிஷோர்