ஜூலை 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
“என்னங்க நேரமாச்சே. இன்னும் தூங்காம என்ன படிக்கறீங்க. அட சிலப்பதிகாரமா. உங்களுக்கு இந்த மாதிரி தமிழ் இலக்கியங்கள் கூடப் பிடிக்குமா?”
“என்ன இப்படிப் பாக்கரே. ஒரு தமிழ்ப் பேராசிரியரை கல்யாணம் பண்ணினப்புறம் இந்த மரம் ஏறித்தானே ஆகணும்?”
“அதுக்குள்ளே மதுரைக்காண்டம் வந்தாச்சா?”
“தேரா மன்னா… இதுக்கு மேலே படிக்க முடியலை. பாண்டியன் தீர்ப்பு சரி இல்லைன்னு எடுத்த எடுப்புல கண்ணகி அவனை இப்படி அழைச்சிருக்கா. தப்புன்னு தெரிஞ்ச பின் அவர் உயிர் விட்டுட்டார் இல்லையா?
“அதுல கண்ணகிக்கு என்ன லாபம். அவள் வாழ்க்கை போனது தானே. அவர் செஞ்சது தப்பு தானே. அதுக்கு அவரே தனக்கு தண்டனை கொடுத்துக்கிட்டார். அந்த காலத்தில் அது மாதிரி ஆட்கள் இருந்திருக்காங்க. இப்பல்லாம் யாரு அப்படி இருக்காங்க”
“உண்மை தான். நாங்க நினைக்கிற மாதிரி நீதி வழங்க முடியாது. சட்டப்படி சாட்சி வழக்காடுதல் இப்படி பல விஷயங்கள் இருக்கு”
“அது சரி. அந்த ராமசாமி கேஸ் என்ன ஆச்சு? அவன் குழந்தைகள் எங்கள் பள்ளியில் தானே படிக்கிறாங்க. அவன் சம்சாரம் நாலு வீட்டில் வேலை செய்து கஷ்டப்பட்டு படிக்க வைக்குது. அவ புருஷன் தப்பு செய்யலை. யாரோ செஞ்சி இவனை மாட்டி விட்டுட்டாங்களாம்”
“இருக்கும். ஆனால் அது நிரூபிக்கப்படவில்லை. தவிர காசு பணம் மேலேந்து அடி லெவல் வரை விளையாடி இருக்கு. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இன்று தான் தீர்ப்பானது, அவனுக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை”
“கடவுளே… உங்களால் எதுவும் செய்ய முடியலையா?”
“சட்டம் என் கைகளை கட்டிப் போட்டு விட்டது. எனக்குத் தெரியும். அவன் தப்பு செய்யவில்லை. என்ன செய்வது, அவனது பழைய தப்புகளே அவனைக் கட்டிப் போட்டு விட்டன. பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான்”
“அது எப்படிங்க… இந்த கேஸூக்குத் தானே நீங்க தீர்ப்பு தரணும்”
“அதுதான் சொன்னேனே, என்னால் சட்டப்படி எதுவும் செய்ய முடியாது”
“இது என்னங்க நியாயம்?”
“அப்படிப் பார்க்காதே. என்னை நீ தேரா மன்னா…ன்னு அழைப்பது போல் இருக்கு. எத்தனையோ தீர்ப்பு இதுவரை குடுத்து உள்ளேன். நான் தவறியதே இல்லை. மனம் பாரமாய் இருக்கு”
“கேக்கவே சங்கடமாய் இருக்கு”
“எனக்கும் மனநிம்மதி இல்லை. தப்பு செய்தோம் என உறுத்தல். என்ன செய்வேன், நீ தான் என்னை இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்ற வேண்டும்”
“ஐயோ என்னங்க இப்படி கலங்கறீங்க?”
“நான் தப்பு செஞ்சேன் நீ குடுக்கும் எந்த தண்டனையையும் நான் மனமார ஏற்கிறேன். என்னைக் காப்பாற்று”
“பத்து வருஷமா அவனுக்கு ஜெயில் தண்டனை?”
“ஆமாம்”
“ஒண்ணு செய்யுங்க. அவன் சம்சாரம் எப்படியும் நாலு வீட்டில் வேலை செய்து அந்த குழந்தைகளைக் காப்பாற்றும். ஆனால் இரண்டு பேரையும் படிக்க வைக்க கஷ்டப்படும். அதனால் அவங்களுக்கு படிக்க ஸ்பான்ஸர் செய்யுங்க. அதையும் உங்க பேரில் வேண்டாம். அது வேறு பிரச்சனை தரும். நான் பார்த்துக் கொள்கிறேன். பத்து வருஷம் அவன் ஜெயிலில் இருந்து வெளியே வரும் வரை அந்த குழந்தைகள் படிப்பு உங்கள் பொறுப்பு. என்ன சொல்றீங்க?”
“அப்பா நிம்மதி. சரி அப்படியே ஆகட்டும். சும்மாவா சொன்னாங்க மனைவி ஒரு மந்திரி என”
நிம்மதியாய் படுத்து அமைதியாய் உறங்கும் நீதிபதி செழியனை, பெருமையுடன் பார்த்து சிலப்பதிகார புத்தகத்தை எடுத்து வைத்து இரவு விளக்கைப் போட்டு படுத்தாள் அவர் மனைவி தேவி.
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings