in ,

நாமளும் கலப்படந்தேன்! (சிறுகதை) – ஜெயலக்ஷ்மி

எழுத்தாளர் ஜெயலக்ஷ்மி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

தோழிகள் புடை சூழ கோயிலில் மகிழ்ச்சியும், பயமும்  கலந்த படபடப்புடன் மணப்பெண் சந்தியா நின்று கொண்டிருந்தாள். சற்று தள்ளி நண்பர்கள் புடைசூழ அவளை ரசித்துக் கொண்டிருந்தான் சங்கர்.

“போதுண்டா ரசிச்சது. ராவுலருந்து முழுசா ரசிச்சுக்கோ. ரெஜிஸ்ட்ரேஷனுக்கு முதல் திருமணம்தாங்ற சர்டிஃபிகேட், ஆதாரு, ஃபோட்டோவலாம் எங்க வச்சிருக்க? கனவுல மெதந்துகிட்டு, மறந்துருக்க கெறந்துருக்கப் போற?”

சும்மா இருடா. அந்த பேக்லதேன் இருக்கு

ந்தியாவும், சங்கரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். சந்தியா ஒரு செல்வாக்கு மிக்க குடும்பத்தின் வாரிசு. சங்கரோ தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவன்.

சங்கர், அவனுடைய நண்பன் சுந்தரைச் சந்திக்க பேருந்து நிலையத்தருகே நின்று கொண்டிருந்தான். பள்ளி முடிந்து, தன் கிராமத்திற்கு செல்லும் பேருந்தைப் பிடிக்க அவசரமாக வந்து கொண்டிருந்தாள், சந்தியா.

அவள் சாலையைக் கடக்குமுன் பேருந்து வர, இவள் அவசரமாகச் சாலையை கடக்க முயல, வேகமாக, கிட்டத்தட்ட இவளை உரசிக் கொண்டு கடந்த சிறிய லாரியின் பின்புறம் அளவுக்கதிகமாய் பாரம் ஏற்றப்பட்டிருந்ததால், கதவை மூட பிணைக்கப் பட்டிருந்த சங்கிலியின் கயிறு அறுந்து, சங்கிலி இவள்மேல் உரசிக் கொண்டு செல்ல, கொக்கி சரியாக இவள் சுடிதாரின் கழுத்துப் பகுதியில் மாட்டி, அப்படியே கிழித்துக் கொண்டு செல்ல, தடுமாறிக் கீழே விழுந்தாள்.

பார்த்துக் கொண்டிருந்த சங்கர், சற்றும் யோசிக்காமல், சட்டையை கழற்றிக் கொண்டே மின்னல் போல் ஓடி வந்து, அவள் மேல் மூடினான். “தயவுசெஞ்சு கூட்டம் போடாதீங்க“ என்று அருகில் வந்தவர்களை களைத்துவிட்டு, “நல்ல வேளை, பெருசா அடி இல்ல.கை, கால்ல லேசா செராய்ச்சிருக்குனு நெனைக்குறேன். ஹாஸ்பிடலுக்கு போலாங்களா?“

“இல்ல, பரவால்ல“  என்றவாறு எழுந்து அவனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே பேருந்து நிலையம் சென்றாள். அதன்பிறகு அனுதினம் அவள் கண்கள் அவனைத் தேடினாலும், அவனைக் காண இயலவில்லை.

ல்லூயில் சேர்ந்து ஆறு மாதங்கள் கழித்து ஒரு நாள் நூலகத்துக்கு சென்றுவிட்டு வெளியில் வந்தவள் படியில் இறங்குகையில் எதிரே சங்கர் படியில் ஏறிக் கொண்டிருப்பதைப் பார்த்து,  தன் கண்களையே நம்ப முடியாமல் தடுமாறி, அரைப்படியில் காலை வைக்க, படிகளில் உருண்டாள். சங்கர் தடுத்து நிறுத்தினான்.

“நீங்க எப்டி இங்க?“ என்று கேட்டாள் சந்தியா, நாணத்துடன்.

“ஓ… நீயா? நான் இங்கதான் செகண்ட் இயர் மெக்கானிக்கல் படிக்கிறேன். நீ என்ன பண்ற? ஆமா நீ எப்பயுமே இப்டி உருண்டுகிட்டேதேன் திரிவியா?“ என்றான் சிரித்துக் கொண்டே.

“நான் ஃபர்ஸ்ட் இயர், கம்ப்யூட்டர் சயின்ஸ். உசிலம்பட்டில எங்கனயாவது உங்களப் பாத்திறலாம்னு தேடித் தேடி அலுத்துப் போய்ட்டேன். எதிர்பாக்காம திடீர்னு உங்கள இங்க பாத்ததில தடுமாறிப் போயிட்டேன்“ என்றாள் வெட்கப் புன்னகையுடன். அவளைச் சுற்றி ஒரு மின்காந்தப் புலமே சுழன்று கொண்டிருந்தது.

“என்ன எதுக்கு தேடுன?“

“நாளைக்குச் சொல்றேன்“

என்ன சொல்லப் போறான்னு அவனுக்கும், மறுபடியும் அவனைப் பார்த்த சந்தோஷம் ஒருபுறமும், பார்த்த நொடியிலிருந்து நடைபெற்ற நிகழ்ச்சிகள் மறுபுறமும், நாளைக்கு பேசப் போகும் வார்த்தைகளின் ஒத்திகை மற்றொரு புறமுமாக மூளையின் ஹிப்போகாம்பஸில் எழும்பிய அலைகள், மின் காந்த அதிர்வுகளை உடல் முழுவதும் பரவச் செய்து கொண்டேயிருந்ததில் அவளுக்கும் உறக்கம் தழுவ மறுத்தது.

மறுநாள் ஒரு அட்டைப் பொட்டலத்தை நீட்டினாள். இப்போது அவளைச் சுற்றியிருந்த மின்காந்தப் புலம் அவனையும் சுற்றிக் கொண்டது.

“என்ன இது?“

“பிரிச்சிப் பாருங்க“

பிரித்துப் பார்த்தால் அவள் உடை கிழிந்த அன்று கொடுத்த அவனது சட்டை, நன்கு துவைத்து, இஸ்திரி போடப்பட்டு இருந்தது. “இதக் குடுக்கத்தான் ஒரு வருஷம் தேடுனயாக்கும். ஆமா ஒரு வருஷமா கூடவே வச்சிகிட்டா திரியிற?“

“ம்… மொதல்ல எங்கனயாவது பார்த்தாக் குடுக்கலாம்னு சுமந்தேன். பெறகு கூட வச்சிக்கலாம்னுதேன் சுமக்கிறேன்“ என்றவாறே இன்னொரு  காகிதப் பையை நீட்டினாள்.

இன்ப அதிர்ச்சி இதயத்தைத் தாக்க, அதை வாங்கிப் பிரித்தான். அதனுள் ஒரு புதிய சட்டையும், புதிய அலைபேசியும் இருந்தது. “ஏ லூசு எதுக்கு இதெல்லாம்?“

“லூசாத்தேன் ஆயிட்டேன், உங்க சட்டைய மட்டும் இல்ல, உங்க நெனப்பையும் நெஞ்சுக்குள்ள சொமந்துட்டுதேன் இருந்தேன். வாழ்நாள் பூராஞ் சொமக்கணும்னு ஆசையும் படுறேன்“

ஒரு நிமிடம் அமைதியாயிருந்த சங்கர், “உன்னப் பாக்கையில எம் மனசிலயும் தென்றல் வீசத்தேன் செய்யுது. பேசையில மனசு முழுசும் ஒருவித பரவசம் வந்து தொத்திக் கிடத்தேன் செய்யுது. ஆனா, கூடவே பயமும் வந்து அப்பிக்கிடுது. நாங்க என்ன ஆளுகன்னு தெரியுமா ஒனக்கு?“

“தெரியுமே. நீங்க ஆம்பளயாளு. நான் பொம்பளயாளு. இது போதும்ல? நாம ஒன்னாச் சேறதுக்கு?“ என்றாள் சிரித்துக் கொண்டே.

“வௌயாடாத புள்ள. ஒங்க வீட்ல ஒத்துக்குவாகளா?“

“கஷ்டந்தேன். ஆனா ஒங்களத் தவிர எம்மனசு வேற யாரையும் ஒத்துக்கிடாதே!“

இவர்கள் காதல் நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியுமாய் வளரலாயிற்று. இவன் கடைசி வருடம் படிக்கும் போதே, நேர்காணலில் நல்ல வேலைக்கும் தேர்வாகி, படிப்பு முடிந்ததும் பணியில் சேர்ந்தான்.

சந்தியாவுக்குப் படிப்பு முடியப் போகிறதென்றதும், அவள் வீட்டில் சம்பந்தம் பார்க்க ஆரம்பித்தார்கள்.

இவள் தாயாரிடம் சொல்லவும், “வாயப் பொத்திக்கிட்டு இரு, ஒன் அப்பனுக்கும், சித்தப்பைங்களுக்கும் தெரிஞ்சுது, கொண்டேபுடுவாக“ என்று வாய்க்குப் பூட்டுப் போட்டாள்.

“சீக்கிரமா என்னக் கலியாணம் கட்டிக்கிட்டு கூட்டிகிட்டுப் போங்க. இல்லண்ணா உசிர விட்டுருவேன்“ இவன் அம்மாவிடம் கல்யாணப் பேச்செடுத்தால், வயக்காட்டு மேல கடனு கெடக்கு. 22 வயசு தான செல்லம் ஆவுது. மூணு வருசம் செண்டு பாப்போஞ்சாமி“ என்றாள்.

சந்தியா வீட்டில் கிட்டத்தட்ட நிச்சயம் பண்ணும் நிலைக்குப் போய்விட, வேறு வழியில்லாமல் நண்பர்களின் உதவியுடன் திருமண ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று.

 

ஞ்சாமி, என்ன செஞ்சிபுட்டு வந்திருக்க? இந்தப் புள்ள யாரு? எந்த ஊரு? என்ன ஆளுக?“ 

 “ஜாதில என்னத்தே இருக்கு? இந்தியால மட்டும் 3000 ஜாதிகளும் 25000 உட்பிரிவுகளும் இருக்கு. இத்தன ஜாதியையா கடவுள் படைச்சாரு? ஒரே தாய் தகப்பன்டருந்து பெறந்தவங்கதேன் எல்லாரும். எல்லாரு ரத்தமும் ஒண்ணுதான். கொஞ்சம், கொஞ்சமா மனுஷன் உருவாக்கிக்கிட்டதுதான் இத்தன ஜாதியும்“

“நீ ஏந்த்தா சொல்ல மாட்ட? உங்கூர் காரைங்க, ஒரு காலத்துல எங்க மொத்த வீட்டையும் இடிச்சி, சாமாஞ் சட்டெல்லாம் அள்ளிக்கிட்டுப் போய்ட்டாய்ங்க. டீக்கடையில அவிங்க குடிக்கிற கிளாஸ்ல குடிக்கக்கூடாதுன்னு,  தனியா குவள வச்சிருக்காய்ங்க தெரியுமா? போன மாசம் ஒருத்தரு, பைக்க வேகமா ஓட்டிட்டுப் போனதுக்கு, அவரையும் அடிச்சி, அவரு பொண்டாட்டிய சேலய உருவிருக்காய்ங்க. நியூஸ்ல பாக்கலியா?

ஒருத்தன் கடையில, சாதின்னா என்னென்னே தெரியாத, ஒரு பச்சப் புள்ள முட்டாயி வாங்கப் போனதுக்கு,  எஸ்.சி. பயலுகளுக்கு சரக்கு, சாதி மாறி காதல் கலியாணம் பண்ணிக்கிட்டாய்ங்கன்னு, அவிங்க ஊருலருக்க எல்லா வீடுகளையுமில்ல எரிச்சிருக்காய்ங்க. பள்ளிக் கூடத்தில எஸ்.சி. பய மார்க்கு கூட வாங்குறான்டு, கூட படிக்கிற பயலே, கத்தியால குத்தி கொன்டு போட்ருக்கான். அந்த வயசிலயே சாதி வெறி தல விரிச்சி ஆடுது.

எஸ்.சி. பய நொளஞ்ச கோயிலுக்குள்ள நாங்க போனா தீட்டு ஒட்டிக்கிடும், நொளய மாட்டோமிங்கிறாய்ங்க. இதெல்லாம் பத்தாதுன்னு குடிக்கிற தண்ணில மலத்தக் கலந்துருக்காய்ங்களே. இந்தக் கேடு கெட்டவிங்க, ஒசந்த சா…தீ…. அம்புட்டு தூரம் ஏன் போய்க்கிட்டு? இந்தா பக்கத்தூர்ல சொவரு கட்டி வச்சிருக்காய்ங்கள்ல, தெரு வழியா போனா காத்துல தீட்டு பட்டுரும், சுத்திக்கிட்டுப் போங்கடான்னு. பொணத்தக் கூட நேர் வழியா கொண்டுக்குப்  போகமுடியாம, தண்ணில நீந்திக்கிட்டுப் போறோம். இதுல சம்பந்தங் கொண்டாட முடியுமாத்தா?“

சந்தியாவின் சிற்றப்பன் ஓடி வந்து சங்கரைத் தாக்க,  “ஏஞ் சித்தப்பா ஜாதி, ஜாதினு வெறி பிடிச்சி அலையறீங்க? வெளிநாட்டுக்குப் போனா நாமெல்லாம் ஒரே கருப்பைங்கதேன். காந்தி ஒசந்த ஜாதிதான? அவர கருப்பன்னு ட்ரெயின்லருந்து தள்ளிவிட்டாய்ங்கல்ல? இந்தியாவுலயும் ஜாதிக்குள்ள கல்யாணம் பண்றதே குப்தர் காலத்லருந்துதான் வந்திருக்கு.

பதினெட்டாம் நூற்றாண்டு வரை ஒரு ஜாதிலருந்து இன்னொன்னுக்கு மாறிக்கிற வசதி இருந்திருக்கு. ஏன் ஒனக்கு ஆக்ஸிடெண்ட் ஆனப்ப ரத்தம் கொடுத்தானே என் ஃபிரண்டோட அண்ணன், அவன் எஸ்.டி.தேன். ஒன் ஒடம்புல காட்டுவாசி ரத்தம் எந்த வித்தியாசமும் இல்லாம கலந்துருச்சி. எங்க அம்மாக்கு கூட கொழந்த இல்லண்ணு ட்ரீட்மெண்ட் எடுத்தாகளாமே. விந்தணு தானம் கொடுத்தது ஒரு எஸ்.சி.ன்னு போன மாசந்தேன் தெரிஞ்சிச்சி. அப்ப நாமளும் கலப்படந்தேன்“ என்றாள் சந்தியா.

தலைகுனிந்தபடியே கிளம்பிச் சென்றனர் அவளுடைய உறவினர்கள்.

“நீ சொன்னதெல்லாம் உண்மையா? விந்தணு தானம் பண்ணவங்களெல்லாம் நீ எப்பிடி கண்டுபிடிச்ச?” என்று கேட்டான் சங்கர்.

“ம்ஹூம்… சும்மா கப்சா…” என்றாள் நாக்கை கடித்து கண்ணடித்தவாறே!

எழுத்தாளர் ஜெயலக்ஷ்மி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சந்தேகக் கண்ணாடி! (சிறுகதை) – ஜெயலக்ஷ்மி

    திருப்பங்கள் (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்