in ,

பட்ஜெட் பரிமளா (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

காலையிலேயே சொல்லிவிட்டாள் பரிமளா, இன்றைக்கு ஒட்டடை அடித்தாக வேண்டுமென்று.

ஆனால் ரவிக்கோ, சனி ஞாயிறு என்று வந்துவிட்டாலோ நன்றாகத் தூங்கவேண்டும்.  

‘ ஏங்க… எப்பவும் போல இன்னிக்கும் சால்ஜாப்பு சொல்லக்கூடாது… இன்னிக்கி ஒட்டடை அடிச்சே ஆகணும்… ‘ என்பாள் பரிமளா.

இவனோ, ‘ அடுத்த வாரம் பண்ணிக்கலாமே… ‘ என்று இழுப்பான்.

‘ ஆமாமா இப்படியேத்தான் ஒவ்வொரு தடவையும் சொல்றீங்க, ‘ இன்று போய் நாளை வா ‘ங்கற கணக்கா… இன்னிக்கு அடிச்சேயாகனும்… ‘ கறாராய் சொல்வாள் அவள்.  இன்றும் அப்படியே சொன்னாள்.

சலிப்புடன், ‘ சரி சரி… என்ன… ஹாலு கிச்சன் பெட்ரூம் அவ்ளோதானே… அடிச்சுடலாம் விடு… ‘ என்றான்.

‘ ஊம்… அப்புறம் பாத் ரூம், சிட்டவுட், ஃபேன், ட்யூப் லைட் எல்லாம் யார் அடிக்கறதாம்… உங்களுக்காக புது ஒட்டடைக் குச்சியே வாங்கி வச்சிருக்கேன்… தோ இட்லி ஊத்தப் போறேன்… சாப்பிட்டுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வேலையைப் பாருங்க… உங்களுக்காக புது குச்சியே வாங்கி வச்சிருக்கேன்… கதவு பின்னால வச்சிருக்கேன்… ‘ என்றுவிட்டு சமையலறைக்குள் போய்விட்டாள், அவள்.

‘ சரிங்க மேடம்… ‘ என்றான் இவன் கேலியாய். தனக்குள் சிரித்துக்கொண்டே போய் விட்டாள் அவள்.

குச்சியைப் போய் பார்த்தான். அது இவனைப் பார்த்து சிரிப்பது போலவே இருந்தது.  கொஞ்சம் நீளமாகவும் இருந்தது.

கொஞ்ச நேரத்தில், ‘ ஏங்க…. இட்லி ரெடி, வாங்க… ‘ என்றாள். அவன் வந்ததும், ‘ ஏங்க,  மறந்துடாதீங்க… ஒரு மணிக்கு ட்ரெயின் வந்துடும்… ஞாபகம் இருக்கில்ல… அதுக்கு முன்னாடி ஒட்டடை அடிச்சிட்டு குளிச்சிட்டு போயி அப்பா அம்மாவை பிக்கப் பண்ணிட்டு வந்திடுங்க… அதுக்குள்ளே நானும் வீட்டைத் துடைச்சிட்டு குளிச்சிட்டு சமைக்க ஆரம்பிச்சிடுவேன்… ‘

சாப்பிட்டு முடித்து ஒரு குட்டித் தூக்கம் போட்டு முடித்து, எழுந்து, முண்டாசைக் கட்டிக்கொண்டு மாஸ்க்கையும் அணிந்துகொண்டு, வேலையே ஆரம்பித்தான். முதலில் ஹாலிலிருந்தே ஆரம்பிக்கலாம் என்று குச்சியை எடுத்து டி.வி.ஸ்டேண்ட்க்கு பின்புற சுவற்றின் மேல் மூலையில் இருந்த ஒட்டடையை அடித்தான். அது நகர மாட்டேன் என்றது. கொஞ்சம் கடுப்புடன் வேகமாய் சுழற்றினான். அப்போதுதான் ஆரம்பித்தது அந்த பிரச்சினையே.

இவன் சுழ்ற்றிய வேகத்தில் குச்சியின் அடிப்பகுதி டிவி ஸ்டேண்டின் மேல் வைத்திருந்த உண்டியலில் பட்டு அது கீழே விழுந்து தெறித்தது..

‘ ஐயய்யோ… ‘ என்று அலறிவிட்டான்.

அந்த சத்தம் கேட்டு அவளும் ஓடிவந்துவிட்டாள்.  உண்டியல் உடைந்து கிடந்ததைப் பார்த்ததும் அவளும் அதிர்ந்து போனாள்.

‘ இந்தாங்க… உங்களால உருப்படியா ஒரு வேலை பண்ண முடியுதா…? உண்டியலைப் போட்டு இப்பிடி உடைச்சிட்டீங்களே… ‘ என்றவள் மறுபடியும் அலறினாள்.

உடைந்த உண்டியல் துண்டுகளின் நடுவே கிடந்த இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே கிடந்தன.

‘ ஐயோ…ஐயோ… குழந்தைங்க அவ்ளோ பணம் போட்டாங்களே… நானே அவங்க பணம் போடறதைக் கண்ணால பார்த்தேனே… எங்கேங்க போச்சு அவ்ளோவும்… ‘

குனிந்து உடைந்தவைகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த அவன் பரிதாபமாய் பார்த்தபடி எழுந்து மெல்ல அவளைது கையைப் பற்றியபடி, ‘ ஸாரி பரிமளா… அப்படி முறைக்காதே… நான்தான் பணத்தை எடுத்தேன்… ‘ என்றான்.

அந்தச் சமயம் அவளது பார்வை, மதுரையை ஆண்ட பாண்டியனை எரிப்பது போல் பார்த்த கண்ணகியைப் போல இருந்தது.

‘ நீங்கதான் மாசா மாசம் சம்பளம் வாங்குறீங்கள்ல. அப்புறம் என்னத்துக்கு உண்டியல்ல இருந்து பணத்தை திருடுனீங்க… ‘ என்று கத்தினாள். 

திகைத்தான் இவன். ‘ ஏண்டி… நம்ம பணம்தானே… அதுக்கு ஏன்டி திருடினேன்னு சொல்றே… ‘

‘ திருட்டுதான். யாருக்கும் சொல்லாம எடுத்தா அது திருட்டுத்தான். அது குழந்தைங்க சேர்த்த பணம் தெரியுமா… ‘ என்றவள் பொத்தென சோபாவில் சரிந்தபடி, ‘ இப்போ சொல்லுங்க… உண்டியல்லேர்ந்து பணம் எடுக்கறதுக்கு அப்படி என்ன அவசியம் வந்துச்சு…‘

குற்றம் புரிந்தவனைப் போல நின்றபடியே சொன்னான்.  ‘ வரவுக்கு மேலே செலவு வருதே… நான் என்ன பண்ண… அப்பைக்கப்போ அடிப்பக்கமா திறந்து திறந்து எடுத்துக்குவேன்… ‘

ஒரு பெரிய மூச்சை இழுத்து விட்டவள், ‘ சரி… போன மாசம் சம்பளம் எவ்ளோ வாங்குனீங்க… எவ்ளோ செலவு பண்ணுனீங்க… ‘ என்றாள்.

மேஜை மேல் கிடந்த ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்து அவளிடம் நீட்டினான். சொன்னான். ‘ சம்பளம் நாற்ப்பத்தாறாயிரம் சொச்சம்… ‘

‘ சரி… செலவை யார் சொல்லுவா… சொல்லுங்க… ‘

யோசித்தபடி இவன் சொல்ல சொல்ல அவள் குறித்துக் கொண்டே வந்தாள்.

இவன் லோன் ஈ.எம்.ஐ. மூவாயிரம் என்றதும், ‘ என்னது ஈ.எம்.ஐ.யா… ‘ என்று அதிர்ந்தாள்.

‘ ஆமா சொசைட்டில அப்பைக்கப்போ லோனு எடுப்பேன்… ‘ என்றான்.

‘ என்கிட்டே சொல்லவே இல்ல… சரி எதுக்காகவாவது இருக்கட்டும்… ஆனா இன்னும் எத்தனை ஈ.எம்.ஐ. இருக்கு…. ‘

‘ அனேகமா இன்னும் ரெண்டு இருக்கும்னு நினைக்கிறேன்… ‘

மறுபடியும் பேப்பரைப் பார்த்தவள், ‘ வரவு நாற்பத்தாறாயிரம்… செலவு அம்பத்தோராயிரமா… அப்போ ஐயாயிரம் அதிகப்படிய செலவு. அப்படின்னா அப்போ சைக்கிள் வாங்கின செலவுதான் இடிக்குதோ… ‘ என்றவள், ‘ சரி… கையில காசு இல்லைனா இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே… ‘ என்று அவனைப்பார்த்து முறைத்தாள்.

கொஞ்சம் தைரியம் வந்தவனைப் போல, ‘ எங்கே… நான் பாப்பாவை சமாதானப் படுத்தினாலும் நீதான்  வக்காலத்து வாங்குறியே… வாங்கித்தான் குடுங்களேன்றியே… ‘ என்றான்.

‘ எனக்கென்ன தெரியும் உங்ககிட்ட பணம் இருக்கா இல்லையான்னு…  இப்போதான் முதல்முதலா உங்க சம்பளமே எவ்ளோனு தெரியுது… எப்போவாவது வாயைத் திறந்து சொன்னாத்தானே தெரியும்… ‘ என்றாள்.

இன்னும் கொஞ்சம் தைரியத்துடன் சொன்னான் அவன், ‘ ரெண்டு மாசத்துக்கு முன்னே… தோடு மாத்தணும்னு ஜூவல்லரிக்கு போனோம். சரி ரெண்டாயிரத்துல முடியும்னு பார்த்தா நாலாயிரம் ஆச்சு. அதோட நிறுத்தினியா… திடீர்னு கொலுசையும் மாத்தனும்னே… அதுல மூவாயிரம் ஆச்சு… அந்த மாசம் செலவு எவ்ளோ தெரியுமா  அம்பத்தஞ்சாயிரம்… மூச்சு முட்டிடுச்சு தெரியுமா… ‘

கொஞ்சம் கூலாய். ‘ சரிங்க… நாங்க அப்படித்தான் கேப்போம்… நீங்கதான் கையில இருக்கற காசுக்குத் தகுந்தபடி முடியும், முடியாதுனு சொல்லணும்… விரலுக்கேத்த வீக்கம்தான் இருக்கணும்… இங்கே யானைக்கால் கணக்கால்ல வீங்குது… ‘ என்றவள் பெருமூச்சை இழுத்து விட்டுவிட்டு, ‘ இனிமே இது சரிப் பட்டு வராது… இனிமே செலவு கணக்கை நான் பார்த்துக்கறேன்… என்கிட்டே சொல்லாம நீங்க ஒரு பைசா செலவு பண்ணக் கூடாது. அது மட்டுமில்லை… மாசா மாசம் பட்ஜெட் போடணும்… அதை மீறி செலவு பண்ணக் கூடாது… ‘ என்றவள் மறுபடியும் கையிலிருந்த கணக்கைப் பார்த்தவள், ‘ அப்போ இன்னும் ரெண்டு மாசத்துல செலவு எட்டாயிரம் குறையும். அப்போ அம்பத்தி ஒண்ணுல எட்டு போனா நாற்பத்தி மூனாயிரம்… அப்போ மூவாயிரம் மிஞ்சும்… ‘ என்றவள், மெல்ல உதட்டோரம் புன்னகையைக் கொண்டு வந்து நிறுத்தி, ‘ அந்த மூவாயிரத்தை என்கிட்டே கொடுத்துடுங்க… நான் சேர்த்து வச்சுக்கறேன்… அதுலேர்ந்துதான் மத்த மத்த செலவெல்லாம் சரியா… ‘ என்றாள்.

‘ உத்தரவு மேடம்… ‘ என்றபடி கடைவாயில் சிரிப்பை காட்டியவன் மனதுக்குள் ‘ பூனைக்கிட்டே இருந்து தப்பிச்சு பூதத்துக்கிட்டே மாட்டிக்கிட்டமோ… ‘ என்று நினைத்துக் கொண்டான். 

அப்படியே எழுந்தவள், கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, ‘ டைம் ஆச்சு…. இனிமே நீங்க ஒட்டடை அடிச்சு கிழிச்ச மாதிரிதான்… போய் குளிச்சிட்டு ரெடியாகுங்க.. ஸ்டேஷனுக்கு கிளம்பனும்… ‘ என்றவள் நினைவு வந்தவளாய், ‘ ஊம்… மறக்காம ரம்யா பேன்ஸில இதைப் போலவே ஒரு புது உண்டியல் வாங்கிட்டு வந்திடுங்க… அங்கேதானே போனதடவை இதை வாங்கினோம்… புதுசா இருக்கேன்னு குழந்தைங்க கேட்டா, சோப்பு போட்டு சுத்தம் பண்ணிட்டேன்னு நான் பொய்சொல்லி சமாளிச்சுக்கறேன்… ‘ என்றவள் இவனை முறைத்துப் பார்த்தபடி, ‘ உங்களைக் கட்டிக்கிட்டதுக்கு வேறென்ன செய்ய… பொய்க்குத் துணை போயித்தானே ஆகணும்… ‘ என்றுவிட்டு உள்ளுக்குள்ளும் சிரித்தும் கொண்டாள்.

‘ மிச்சத்தை இவகிட்ட குடுத்துட்டு நாம கெஞ்சனும் போல இருக்கே… ‘ இவகிட்டே கொடுத்துடனுமாமே… ‘ என்று முனுமுனுத்தவன், ‘ சரி… நைஸா பேசிப் பேசி கறந்துக்கலாம்… ‘ என்றும் நினைத்துக் கொண்டான்.

கிச்சனுக்குள் அவள் ஏதோ முனுமுனுப்பது கேட்க, அதை உற்றுக் கேட்டான்.

‘ பணம் சேர்த்துட்டு முதல்ல வளையலை மாத்தணும்… ‘

‘ அடக் கடவுளே… ‘ என்று தலையிலடித்துக்கொண்டு வெளியேறினான் அவன்.

ஆனாலும், பட்ஜெட் போட ஆரம்பித்த பிறகு கடன் வாங்கவுமில்லை… ! உண்டியலை உடைக்கவில்லை… !!  மூச்சும் முட்டவில்லை… !!!

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

 (முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பிரியா(ணி) (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு

    ரிடர்ன் (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு