எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
காலையிலேயே பிரியாவிடம் சொல்லிவிட்டான் ரவி, இன்றைக்கு பிரியாணி செய்தே தீர வேண்டுமென்று.
அவளோ, ‘இட்லி, தோசை, உப்புமா எல்லாம் செஞ்சிடுவேன். பொங்கல் கூட செஞ்சிருக்கேன், பிரியாணி எப்படிங்க… ‘ என்று சிணுங்கினாள். அத்துடன், ‘ ஏங்க… முன்னூறு ரூபா கொடுத்தா பிரியாணி வீடு தேடி வந்துடப் போவுது… எதுக்குங்க என்னை பிரயாணி செய்யச் சொல்லி வற்புறுத்தறீங்க… ‘ என்றும் அலுத்துக் கொண்டாள்.
‘ எனக்குத் தெரிஞ்சு எல்லா கடைகள்லேயும் டேஸ்ட் பார்த்தாச்சு… இன்னிக்கு உன் கைப்பக்குவமும்தான் எப்படி இருக்குன்னு பார்க்கலாமே…. ‘ என்றான் அவன்.
‘ ஏங்க… நான் முன்னே பின்ன பிரியாணி செஞ்சதே இல்லைங்க… எங்கம்மா செஞ்சு போட்டா மூக்குப் பிடிக்க சாப்பிடுவேன் அவ்ளோதான் தெரியும்… ‘ என்றாள்.
‘ சரி… அவங்ககிட்டே ரெசிபி கேட்டா… ‘ என்றான் இவன்.
யோசித்துவிட்டு, ‘ வேண்டாம் வேண்டாம்… ஒன்னும் கேட்கவேண்டாம்… போன மாசம் ஒரு புக்ல ரெசிபி வந்து படிச்சிருக்கேன்… நீங்க இருக்கீங்கள்ல… கூட மாட ஒத்தாசை செய்ங்க போதும்… பிரியாணி செஞ்சு போட்டோ போட்டு ‘ பிரியா(ணி) ‘னு ஹெட்டிங் குடுத்து ஒரு போஸ்ட் போடறேன்… இன்ப அதிர்ச்சி அடைஞ்சு அம்மா பாராட்டுவாங்க… ‘ என்றாள்.
பதினோரு மணி போல பையை எடுத்துக்கொண்டு, ‘ சரி… என்னென்ன வேணும் சொல்லு… ‘ என்றான்.
‘ எனக்குத் தெரிஞ்ச வரை, தக்காளி, பெரியவெங்காயம், இஞ்சி, பூண்டு, மசாலாப்பொடி, எண்ணெய்… ‘
குறுக்கிட்டு, ‘ ஊம்.. உப்பு, தண்ணி… அடுப்பு, கியாஷ்… ‘ என்று சிரித்தான்.
சட்டென கோபம் கொண்ட அவள், ‘ தோ பாருங்க… கேலி பண்ணினீங்க… அப்புறம் அவ்ளோதான்… ‘ என்றவள், ‘ சரி சொல்றேன் எழுதிக்கங்க… ‘ என்றாள்.
‘ அரை கிலோ தக்காளி, அரை கிலோ பெரிய வெங்காயம், நூறு கிராம் இஞ்சி, மல்லி கறிவேப்பிலை, கறிமசாலாப்பொடி ஒரு பாக்கெட்… ‘ என்றுவிட்டு யோசித்தவள், ‘ ஊம் மறந்துட்டேன்… முக்கியமா புதினா வேணும்… ‘ என்று நிறுத்தினாள்.
மறுபடியும் குறுக்கிட்டவன், ‘ ஏன் சிக்கன் முக்கியமில்லையா… இல்லே அதுவும் வீட்டுலே இருக்கா… ‘ என்று சிரித்தான்.
‘ தோ பாருங்க…. பிரியாணி வேணுமானா சொன்னதெல்லாம் வாங்கிட்டு வாங்க… இல்லையா ஆர்டர் போட்டுக்கங்க… நான் போயி படுத்துக்கறேன்… ‘ என்றுவிட்டு உர்ர்ர் என்று முகத்தை வைத்துக்கொண்டாள்..
‘ ஸாரி டார்லிங்… ஒரு தமாசுதான்… ‘ என்றான்.
‘ அவ்ளோதான்… ‘ என்றுவிட்டு நகர்ந்துவிட்டாள், அவள்.
அவன் கிளம்பியவுடன் ஓடிப்போய் டீப்பாய் அடியில் கிடந்த வாராந்திர புத்தகங்களை எடுத்து வெளியே போட்டாள். ரொம்ப நேரம் தேடி அலசி அந்த புத்தகத்தைப் பிடித்து… அந்தப் பக்கத்தையும் புரட்டி… செயல்முறையை ஒன்றுக்கு இரண்டு முறை படித்து… மனதில் ஏற்றிக் கொண்டாள்.
‘ இவ்ளோதானே… இதென்ன பெரிய கம்பச் சித்திரமா… கிளறி அசத்திட வேண்டியதுதான்… ‘ சொல்லிக்கொண்டே கிச்சனுக்குள் போனாள்.
அதற்குள் கடையிலிருந்து திரும்பி வந்த ரவி, ‘ எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக்கோ… ‘ என்றான் பையை மேடை மேல் வைத்தபடி.
பையைத் திறந்து பார்த்து திருப்திப் பட்டுக்கொண்டு, அரிசியை எடுத்து கழுவி தண்ணீர் விட்டு ஊற வைத்தாள். சிக்கனைக் கழுவினாள். வெங்காயத்தையும் பூண்டையும் அள்ளிப்போட்டு அவனை உறிக்கச் சொன்னாள். இஞ்சியை எடுத்து தோலை சீவிவிட்டு பொடியாக்கினாள். தேவையான தக்காளிகளை எடுத்துக் கழுவி விட்டு துண்டாக்கிக் கொண்டாள். புதினாவையும் மல்லித்தழையையும் கழுவி ஓரமாய் வைத்தாள். குக்கரை அடுப்பில் ஏற்றினாள். அதற்குள் அவன் தோலுரித்தவைகளை மேடை மேல் வைத்தான். அவைகளையும் நறுக்கிக் கொண்டாள்.
எண்ணையை ஊற்றி மசாலா ஐட்டங்களை ஒவ்வொன்றாய் போட்டு வதக்கிவிட்டு, கடைசியாய் சிக்கனையும் போட்டு வதக்கிவிட்டு, தேவையான உப்பையும் போட்டு தண்ணீர் விட்டு கிண்டிவிட்டு பிறகு மசாலாப் பொடியை கொட்டி கலக்கி, மூடி போட்டு விசிலைச் செருகினாள்.
விசில் ஒரு சவுண்டு கொடுத்ததும், கொஞ்சம் ஆறவிட்டு, மூடியைத் திறந்து, கணவனைக் கூப்பிட்டாள்..
‘ ஏங்க… கறி ஓரளவுக்கு வெந்திருக்கா… இப்போதைக்கு உப்பு காரம் போதுமான்னு பார்த்து சொல்லுங்களேன்… ‘ என்றாள்.
ருசி பார்த்துவிட்டு சொன்னான். ‘ கறி இன்னும் கொஞ்சம் வேகனும்… உப்பு காரம் கொஞ்சம் உரைப்பா இருக்கு… ‘ என்று.
‘ சரி… அரிசியைக் கழைஞ்சி போட்டு தண்ணி ஊத்தி வேகவைச்சா கறியும் வெந்துக்கும்… உரைப்பும் ந்யூட்ரலாகிடும்… ‘ என்று சிரித்தபடியே அரிசியைக் கழுவி அள்ளிப்போட்டு டம்ளரை எடுத்து தண்ணீர் ஊற்றினாள். அன்னக் கரண்டியால் நன்றாக மேலும் கீழுமாக கிளறிவிட்டு மூடியைப் போட்டு மூடிவிட்டுத் தணலை ஏற்றினாள்.
‘ ஏங்க… ஒரு நாலு சவுண்டு வரணும்… நீங்க எண்ணிக்கங்க… ‘ என்றுவிட்டு படுக்கையறைப் பக்கம் நகர்ந்தாள்.
ரவி கூப்பிட்டான், ‘ ஏ… நாலு சவுண்டு ஆச்சு… ‘ என்றான் சோபாவில் உட்கார்ந்தபடியே.
ஓடி வந்தவள் மூடியைத் திறந்தாள். அதிர்ந்தாள்.
‘ என்னாச்சு… ‘ என்று குரல் கொடுத்தான் அவன்.
‘ என்னங்க இன்னும் தலபொலனு கொதிக்குது… ‘ என்று இழுத்தாள்.
எழுந்து வந்து பார்த்தவன், ‘ ஏய்… பிரியாணிதானே பண்ணச் சொன்னேன்… வேறே ஏதோ பண்ணியிருக்கே… ‘ என்று சிரித்தான்.
அவனை முறைத்துவிட்டு பிறகு யோசித்துப் பார்த்தாள்.
‘ புக்ல படிச்சிட்டுதாங்க செஞ்சேன்… அதெப்படி இவ்ளோ தண்ணியா இருக்கு… ‘ என்றவள் லேசாய் முறைத்தபடி, ‘ ஏங்க… நாலு சவுண்டு வரணும்னு சொன்னேன்… ஒரு சவுண்டுலேயே கூப்பிட்டிட்டீங்களா, என்ன… ‘ என்றாள் கோபத்துடன்.
‘ அய்யய்யே…நாலு சவுண்டு எண்ணிட்டுத்தான் கூப்பிட்டேன்… என்னை நம்பு… ‘ என்றான்.
‘ புக்லே நாலு சவுண்டு விட்டா போதும்னு போட்டிருந்ததே… ‘ என்றபடியே மறுபடியும் மூடிவிட்டு தணலை ஏற்றி வைத்தாள்.
‘ நீங்க போங்க… நானே எண்ணிக்கறேன்… ‘ என்று அவனை அனுப்பிவிட்டு ஸ்டவ் பக்கத்திலேயே நின்றுகொண்டாள்.
நான்கு சவுண்டு வந்ததும், எதற்கும் இருக்கட்டும் என்றும் இன்னும் ஐந்து நிமிடம் காத்திருந்து மூடியைத் திறந்தவள் மறுபடியும் அதிர்ந்தாள்.
தண்ணீர் குறைந்திருந்தது. ஆனால் களி போல நின்றிருந்தது.
சத்தம் கேட்டு அங்கே வந்த ரவி, ‘ என்ன பிரியாணி ரெடியா… ‘ என்று சிரித்தபடி எட்டிப் பார்த்துவிட்டு, ‘ பொங்கல் சூப்பரா வந்திருக்கு… ‘ என்றான். அவள் மறுபடியும் முறைத்தாள்.
‘ ஸாரி… தமாஸுக்கு… ‘ என்றவன், ‘ சரி சரி… செம பசி… போய் தட்டைக் கழுவி எடுத்து வை… ‘ என்றான். அவள் வாடிய முகத்துடன் அசையாமல் நின்றிருந்தாள். அவன் போய்விட்டான்.
திடீரென்று தானாகவே புலம்ப ஆரம்பித்தாள். ‘ நாலு கிளாஸ் ஊத்தச் சொன்னாங்க… நாலுதானே ஊத்தினேன்… இல்லை அஞ்சா… இல்லை ஆறா… எண்ணிக்கைல மிஸ் பண்ணிட்டேனோ… பெரிய கிளாஸ்ல ஊத்திட்டோமோ… அதனால தண்ணி கூடப் போயிடுச்சோ… ‘ தனக்குள் புலம்பிக்கொண்டாள்.
திரும்பி வந்து, ‘ சரி… தயிர் பச்சடி செஞ்சியா….? ‘ என்றான்.
‘ ஏங்க… பிரியாணிக்கே வழிய காணோம்… இதுல உங்களுக்கு தயிர் பச்சடி வேற கேட்குதோ… ‘ எறிந்து விழுந்தாள் அவள்.
‘ சரி சரி… செம பசி… சாப்பிடலாம் தட்டை எடுத்து வை…’ என்றான்.
‘ என்னத்தை சாப்பிட…’ என்றவள், ‘ இந்தப் பொங்கலையா… ‘ என்று குக்கரைக் காண்பித்தாள்.
அதற்குள் காலிங் பெல் அடித்தது. வேக வேகமாய் போய் கதவைத் திறந்தான். இவள் கஞ்சிபோலிருந்த பிரியாணியை ‘ ஞே ‘ என்று முகத்தை வைத்துக்கொண்டு அன்னக்கரன்டியால் கிண்டிக் கொண்டிருந்தாள்.
‘ கொழ கொழன்னு இருக்கே… எப்படித்தான் சாப்பிடறது… இவர் வேற தட்டை எடுத்துவைனு சொல்றாரே… பச்சடி வேற கேட்கிறாரே… இந்த லட்சணத்துல அம்மாவுக்கு போஸ்ட் போட்டு பாராட்டு வாங்கலாம்னெல்லாம் சொல்லிட்டிருந்தேனே… ‘‘
‘ தட்டை இன்னுமா எடுத்து வைக்கலை… ‘ என்று கேட்டபடியே திரும்பி வந்தான். கையில் ஒரு பொட்டலம்.
‘ என்ன…’ என்றாள்.
‘ பிரியாணி… ‘ என்றவன் புன்னகைத்துவிட்டு, ‘ நீ முதல்ல மூடியைத் திறந்ததுமே புரிஞ்சுபோச்சு… இன்னிக்கு பிரியாணி இல்லைன்னு… அதான், ‘ நீங்க போங்க… நானே எண்ணிக்கறேன்… ‘ ன்னு நீ சொன்னதுமே போயி புட் டெலிவரி ஆப்ல ஆர்டர் போட்டுட்டேன்… பதினஞ்சு நிமிஷத்துல டெலிவரியும் பண்ணிட்டான்… சரி வா சாப்பிடலாம்… ‘ என்றபடி டப்பாவைத் திறந்தான்.
வாசனை குபீர் என்று அவளது நாசிக்குள் ஏறியது. அவசர அவசரமாய் தட்டுகளை எடுக்க ஓடினாள்…!!!
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings