எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தவித்தாள் கமலம்.
இந்திராணி ஐந்து மணி போல வருகிறேன் என்று சொல்லியிருந்தாள். அதுதான் கமலத்தின் தவிப்புக்கு காரணம்.
இந்திராணியின் மகன் இன்ஜினீயரிங் படிக்கிறான். அவசரமாய் காலேஜில் பத்தாயிரம் கட்ட வேண்டுமாம். அதுவும் நாளைக்கு ஒரு மணிக்குள். இரண்டு மூன்று நாளில் பணம் வந்துவிடும், கொடுத்து விடுகிறேன் என்றும் சொல்லியிருந்தாள்.
காலையில் பால் வாங்கப் போகும்போது எதேச்சையாய் பால் பூத் அருகே பார்த்து விட்டுத் தான் அப்படி கேட்டுவிட்டாள் இந்திராணி.
‘ அக்கா… ஒரு தயவு…ஆனா அதை இந்த இடத்துல வச்சு எப்படி கேட்கறதுன்னு… . ‘
அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே ஆயிரம் எண்ணங்கள் உள்ளுக்குள் ஓட ஆரம்பித்து விட்டன கமலத்திற்கு.
‘நாளைக்கு ஒருமணிக்குள்ளே சுந்தருக்கு காலேஜ் பீஸ் கட்டனும்க்கா… ரெண்டு மூணு நாள்ல பணம் கிடைச்சுடும். உடனே கொண்டு வந்து கொடுத்துடறேன்… ஒரு பத்தாயிரம் கைமாற்று கொடுங்களேன்… ‘
கமலத்திற்கு தெரியும், சுந்தர் இரண்டாவது வருடம் படித்துக் கொண்டிருக்கிறான். வருடம் ஒன்னரை லட்சம் பணம் கட்டித்தான் படிக்கிறான். இந்திராணியால் பத்தாயிரம் ரூபாய் கட்ட முடியாமல் போகுமா. என்ன ஆனது.
அதுவும் நம்மிடம் ஏன் கேட்கிறாள். இவளைப் பற்றி நமக்குத் தெரியாதா… சரியான கஞ்சாப் பிசினாறி ஆயிற்றே… கொடுத்துவிட்டு பின்னால் நாம் இவளைத் தொங்க வேண்டுமா…
முதலில் நம்மிடம் அவ்வளவு பணம் ஏது.? அவரிடம் கேட்டால்தான் தெரியும். மாதம் மூவாயிரம் ரூபாய் தருகிறார் தர்மலிங்கம். அதிலிருந்துதான் அவசர செலவுகளை சமாளித்துக் கொள்கிறாள். அதிகப் பட்சம் ஆயிரம் இரண்டாயிரம் போலத்தான் டப்பாவில் கிடக்கும். இவள் கேட்பதோ பத்தாயிரம்.
‘ அக்கா… நான் சாயங்காலம் நாலஞ்சு மணிபோல வீட்டுக்கு வர்றேன்கா… ரோடுல வச்சு கேட்டுட்டேன்னு தப்பா எடுத்துக்காதீங்க… ‘ என்றுவிட்டு மெல்ல நகர்ந்துவிட்டாள் இந்திராணி. கமலமும் இதுதான் சாக்கு… விட்டால் போதும் என்று நகர்ந்துவிட்டாள்.
சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஐந்து. வாசலையும் கடிகாரத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள். ஐந்தரை மணி போல அவர் வந்துவிடுவார். டீ தயாராக இருக்க வேண்டும். அதனால் டீயைக் கொதிக்க வைத்துவிட்டு பாலையும் சூடேற்றிவிட்டு காத்திருந்தாள். திரும்பவும் யோசனைகளை ஓடின.
இந்திராணி வீட்டில் காம்பவுண்டுக்குள் நான்கைந்து தென்னை மரங்கள் வளர்க்கிறார்கள். ஒவ்வொரு தடவையும் நூறு இருநூறு காய்கள் பறிப்பார்கள். ஒரு நாள் ஒரு தேங்காய் கொடுத்தவளில்லை அவள்.
அதே போல கொத்து கொத்தாய் முருங்கைக் காய்கள் தொங்கும். ஏதோ போனால் போகிறது என்பது போல ஓரிரண்டு காய்களை மட்டும் எப்போதாவது பையில் போட்டு கொடுத்தனுப்புவாள் அவள். இது போல நிறைய்ய்ய்ய…
ஒருநாள் ஊரிலிருந்து மகளும் பேத்தியும் வந்திருந்தார்கள். பேத்தியைக் கூட்டிக்கொண்டு இந்திராணியின் வீட்டிற்கு போயிருந்தாள் கமலம். பேசிக் கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் பேத்தி கேட்டாள், ‘ அம்மாச்சி… வீட்டுக்குப் போயிட்டு எனக்கு பிரியாணி செஞ்சு குடு… ’
‘ என்னடி கண்ணு திடீர்னு பிரியாணி… ‘
‘அவங்க வீட்டுல உட்கார்ந்திருக்கும்போது பிரியாணி வாசனை வந்துச்சு… அப்போவே ஆசை வந்திடுச்சு… அம்மாச்சிக்கிட்டே கேட்கனும்னு நினைச்சுக்கிட்டேன்… அதான் கேட்டேன்… ‘
கண்கள் லேசாய் கலங்கின கமலத்திற்கு. அது பிரியாணியாக இல்லாமல் நூடுல்ஸாகக் கூட இருக்கலாம். அதிலும்தானே மசாலா போடுவார்கள். அதை பிரியாணி என்று நினைத்து இவள் ஆசைப்பட்டுவிட்டாள். நல்லவேளை அவர்களது வீட்டில் வைத்தே கேட்காமல் விட்டாளே என்று நிம்மதிபட்டுக்கொண்டாள் கமலா.
அத்துடன், சிறு குழந்தை வந்திருக்கிறாளே என்று இந்திராணி சாப்பிடக் கொடுத்திருக்கலாம். கமலா அப்போது அதை சீரியாசாக எடுத்துக்கொள்ளவில்லை. பேத்தி கேட்டதும்தான் ரொம்பவும் யோசிக்கலானாள். அப்புறம் வீட்டுக்கு வந்து செய்து கொடுத்ததெல்லாம் தனிக்கதை.
இவ்வளவு குறுகிய மனசுள்ள இவளுக்கு உதவத்தான் வேண்டுமா. அவரிடம் கேட்டு பணம் வாங்கி கொடுக்கலாம் என்று ஆரம்பத்தில் யோசனை இருந்தது உண்மைதான். ஆனால் நிறைய யோசித்தபிறகு, இப்போது இல்லை என்று சொல்லிவிடலாம் என்ற முடிவுக்கே வந்து விட்டாள்.
பெல் அடித்தது. ‘வந்துவிட்டாள்…‘ என்று முனகியபடி ஓடிப்போய் கதவைத்திறந்தாள். அவர் நின்று கொண்டிருந்தார்.
‘என்னங்க… டைம் ஆச்சா… ‘
திரும்பி கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஐந்தரை.
‘அவள் வருவாள் என்றல்லவா காத்திருந்தோம்… ‘
‘என்ன யோசிக்கறே… ‘
கொஞ்சம் தடுமாறி… இவரிடம் சொன்னால், ‘நீ ஏன் எப்போவுமே இப்படி அலபமா இருக்கே… ‘ என்று இவர் கேட்டாலும் கேட்பார் என்று சொல்லாமல் விட்டுவிட்டாள்.
வழியில் இந்திராணியைப் பார்த்துவிட்டு இவர் கேட்க… அவள் விஷயத்தைச் சொல்ல, படிப்பு விஷயம் என்பதாலும், இன்னும் மூன்று நாளில் பணம் வந்துவிடும் என்று சொல்கிறாளே என்றும் யோசித்து உடனே ஜீபேயில் பத்தாயிரத்தை போட்டுவிட்டு வந்துவிட்டார் இவர்.
வீட்டுக்கு வந்து கமலத்திடம் சொல்லிவிட்டு வருகிறேன் என்று அவள் சொல்ல, இவர்தான் தான் சொல்லிக்கொள்வதாக அவளுக்கு சமாதானம் சொல்லி அனுப்பிவிட்டு வந்து விட்டார். இப்போது நடந்ததை எப்படி இவளிடம் சொல்லுவது, உடனே, ‘ஏன் முதிரிக்கொட்டையாட்டம் கொடுத்தீர்கள் ‘ என்று எப்போதும் போல கோபித்துக் கொள்வாளோ என்று இவரும் சொல்லாமல் விட்டுவிட்டார்.
அவர்களில் யாராவது ஒருவர் வாயைத் திறந்தால்தான் கதை மேலே நகரும்.
மூடியிருக்கும் கதவுகள் திறக்கும்வரை நான் காத்திருக்கிறேன் !
நீங்கள் ?
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings