எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அந்த ஆள் வந்து அப்படி சொல்லிவிட்டுப் போனதிலிருந்து ஒரே குழப்பம் மாலதிக்கு. ஆம். ஒரே ஒரு டாக்குமெண்ட்டை காபி எடுத்துக் கொடுத்துவிட்டால் போதும், சுளையாக அவளுக்கு ஐந்து லட்சம் கிடைத்துவிடும்.
அவளது கப்-போர்டில்தான் அந்த பைல் இருக்கிறது. நாளை மதியம் பன்னிரெண்டு மணிக்குள் மொபைலில் ஒரு போட்டோ எடுத்து அனுப்ப வேண்டும்.
அவன் அந்த கம்பெனியின் ஒரு ஸ்டாஃப் என்றும், அந்த கம்பெனியின் ஜி.எம். அவனை அனுப்பினார் என்று மட்டும்தான் சொல்லிவிட்டுப் போயிருந்தான் அவன். அவன் போனபிறகு அவன் கொடுத்த விசிட்டிங் கார்டை பார்த்தாள்.
‘ராமநாதன் அண்ட் அஸோசியேட்ஸ்‘ என்று இருந்தது. மேலே ஆர்.கோபால் எம்.பி.ஏ. என்றும் பெயரை ஒட்டி கீழே ஜி.எம். என்றுமிருந்தது. கார்டைத் திருப்பிப் பார்த்தாள். அந்த ஆளின் நம்பர் இருந்தது.
வீட்டுக்கு வந்ததும் அந்த நம்பரை மொபைலில் ஏற்றினாள். அவனது பெயர் சுந்தரம் என்று சொன்னது ட்ரூ காலர். அவனது நம்பரில் வாட்ஸப் இருக்கிறது என்றும் அதில் அனுப்பி வைத்தால் போதும் என்றுவிட்டுப் போயிருந்தான் அவன். காண்டாக்டை திறந்து பார்த்தாள், வாட்ஸப் இருந்தது.
ஆனால் பதட்டம்…. என்ன செய்வது என்று… நினைவுகள் நிழலாய் ஓடின…
xxxxxxxxx
தனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்று மறுத்துகொண்டே வந்திருந்தாள் மாலதி. யாருக்கும் அதில் உடன்பாடுமில்லை. ஆனாலும் யாருக்கும் எதிர்த்து பேச தைரியமும் இல்லை. அப்பா ஒரு கம்பெனிக்கு வேலைக்குப் போகிறார். தங்கை பி.பி.ஏ. கடைசி வருடம் படிக்கிறாள். அம்மா வீட்டைக் கவனித்துக் கொள்கிறார்.
முன்பு, அப்பா ஒரு மொபைல் கம்பனி நடத்தினார். நஷ்டம் ஆகி இப்போது ஒரு கம்பெனியில் மேனேஜராக வேலை பார்க்கிறார். பத்தாயிரம் சம்பளம். வீட்டுக்கு சொற்ப காசை மட்டும் கொடுத்துவிட்டு மீதத்தைக் கொண்டுபோய் டாஸ்மாக் கடையில் கொட்டுகிறார் அவர்.
எப்போது சொந்த கம்பெனியில் பணவரவு நின்று தடுமாற்றம் உண்டானதோ அப்போதே குடிக்க ஆரம்பித்து விட்டார்.
ஆரம்பத்தில் நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது கடை. பின்னால் மொபைல் வாங்கிய கடைகள் பணத்தை இழுத்தடித்தனர். வரவு குறைய குறைய வேலையாட்களையும் தூக்கிவிட்டு கடைசியில் தான் மட்டுமே தினமும் போய்வந்தார்.
சில நாட்களில் கடையைத் திறப்பதையே விட்டுவிட்டார். பணம் வரவேண்டிய கடைகளுக்கு படை எடுப்பார். கிடைக்கும் பணத்தை பாட்டில் வாங்கி காலி செய்து விடுவார்.
இரண்டு மாதம் வாடகை தரவில்லை. ஓனர் வீட்டுக்கு வந்துவிட்டார். முன்தொகையாக கொடுத்திருந்த ஒருலட்சத்தில் வாடகையைக் கழித்துக்கொண்டு மீதத்தைக் கொடுக்கச் சொல்லி விட்டாள் மாலதி. பணம் அவளது அம்மாவின் கைக்குப் போய்ச் சேர்ந்தது.
அவளது அம்மாதான், ‘கல்யாண வயதில் இரண்டு பெண்களை வைத்துக்கொண்டு இப்படி தினமும் குடித்துவிட்டு படுத்துக் கிடந்தால் அவர்களை கரை சேர்ப்பது எப்படி, முதலாளியாகத்தான் முடியவில்லை. வேலைக்காவது போய் சம்பாதிக்கலாமே… ‘ என்று சொல்லி… சத்தம் போட்டு… சில சமயம் பட்டினி போட்டு… ஒருநாள் வேலை தேடிக் கொண்டார். ஒரு மொபைல் கம்பனியில் மேனேஜர் வேலை. பத்தாயிரம் சம்பளம். ஆனாலும் குடியைத்தான் விடவேயில்லை.
அப்பாவின் பணத்தை நம்பவில்லை, அம்மா. மாலதி கொடுக்கும் பதினைந்தாரத்தைக் கொண்டு, பார்த்து பார்த்து செலவு செய்து குடும்பத்தை நிலைநிறுத்திக் கொண்டிருந்தாள். மாலதிக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டால் பிறகு எப்படி குடும்பத்தை நடத்துவது என்ற கவலையும் ஒருபக்கம் இருக்கத்தான் செய்தது.
ஆனாலும் அதற்காக அவளை கல்யாணம் செய்துகொள்ளாதே என்று சொல்ல முடியுமா, என்ன… சொல்லிவைத்தார்போல, அவளும் தனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டுதானிருக்கிறாள்.
கலா டிகிரி படித்துக் கொண்டிருக்கிறாள். மாலதியை விட கலா நல்ல நிறம், அழகு. அதனால் மாலதிக்கு ஒரு வரன் வந்தால், கலாவுக்கு மூன்று வரங்கள் வந்து கொண்டிருந்தார்கள்.
‘முதல்ல அவளை கரை சேருங்க… என்னைப் பத்தி இப்போ பேசாதீங்க… ‘ என்றுவிடுவாள் இவள்.
போன வாரம் ஒரு வரன் வந்தது. பையன் ஒரு பிரைவேட் பேங்கில் உதவி மேலாளர். இருபத்தைந்தாயிரம் சம்பளம். முப்பது பவுன் போட்டால் போதும். மற்ற சீர்வரிசைகள் தனி என்றார்கள். வரனை எல்லோருக்கும் பிடித்திருந்தது.
நகை, துணிமணிகள், சீர்வரிசைகள், இத்யாதி இத்யாதி. கணக்குப் போட்டுப் பார்த்தால், எப்படியும் ஏழெட்டு லட்சங்களாவது ஆகும் என்று புரிந்தது.
மாலதிக்குத்தான் மண்டைக் காய்ச்சல். அவள்தானே அந்த பாரத்தையும் தாங்கவேண்டும்.
அன்றுதான் ஜி.எம்.மிடம் பேசினாள், கம்பெனியில் ஐந்து லட்சம் கடன் வாங்கித் தர முடியுமா என்று கேட்டிருந்தாள். விவரம் கேள்விப்பட்டு அவரும் முயற்சிப்பதை சொல்லியிருந்தார்.
சாயங்காலம் ஆபீஸ் விட்டு வெளியே வந்து ஸ்கூட்டியை எடுக்கும்போதுதான் அந்த ஆள் முன்னால் வந்து நின்றான்.
அவளது கம்பெனி ஒரு இன்ஜினீயரிங் கம்பெனி. அரசாங்கத்துக்கு ரோடுகளை போடுவது, கட்டிடங்கள் கட்டிக்கொடுப்பது, பாலங்கள் கட்டிக்கொடுப்பதுதான் அவளது கம்பெனியின் வேலை. கடந்த பத்து வருடங்களாக இது நடக்கிறது. அரசாங்கத்தின் அனுமதி பெற்ற கம்பெனியும் கூட.
சமீபத்தில் முப்பது கிலோமீட்டர் தூர ரோடை செப்பனிடும் டெண்டரை விட்டது அரசாங்கம். இடையில் வரும் மூன்று பாலங்களையும் நிலைநிறுத்தி ரோடை போடவேண்டும். ஐம்பது கோடி பெறுமான டெண்டர்.
ஜி.எம்.மின் பி.ஏ. என்பதால் அவள்தான் அந்த டெண்டரை தயார் செய்து கொடுத்தாள். இந்தமாதிரி விஷயங்கள் முதலாளியுடன் சேர்த்து மூவருக்கு மட்டுமே தெரியும். எந்த டிபார்ட்மெண்ட்டுக்கும் போகாது. மறுநாள் டெண்டர் முடிகிறது. அன்று சாயங்காலமே டெண்டரும் திறக்கப்படுகிறது.
திடீரென்று அந்த ஆள் சாயங்காலம் வந்து நின்றான். சொன்னான். போய்விட்டான்.
ஒருபுறம் சோறுபோடும் கம்பெனிக்கு துரோகம் செய்வதா என்ற பயம். மறுபுறம், தனக்கு கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் குடும்பம் நடத்துவதே சிரமமாக இருப்பதால், ஜி.எம்.மிடம் சொல்லி கம்பெனியில் கடன் கேட்டிருக்கிறாள். கடன் கொடுத்துவிட்டாலும் பிறகு மாதா மாதம் சம்பளத்தில் பிடித்துக் கொள்வார்கள். குறைவான சம்பளத்தில் குடும்பம் நடத்த வேண்டும்.
அந்த ஆள் அப்படி சொன்னதும், ஒரே ஒரு போட்டோதானே, எடுத்துக் கொடுத்திவிட்டால் சுளையாக பத்து லட்சம் வந்துவிடுமே என்றும் ஒரு நைப்பாசை.
ராத்திரி தூக்கமே வரவில்லை. இரவெல்லாம் யோசித்து யோசித்து மண்டை குழம்பிப் போனதுதான் மிச்சம். அம்மாக்கூட இரண்டு முறை கேட்டாள், ‘ஏண்டி… தூங்கலையா… புரண்டு புரண்டு படுத்துட்டிருக்கே… ‘
‘ ஒண்ணுமில்லேமா… ‘ என்றுமட்டும் சொல்லிவிட்டு தூங்கிப் போனாள் இவள்.
XXXXXXX
காலையில் ஒரு முடிவுடன் எழுந்தாள். ஆபீஸ் போனாள். யாரும் கவனித்துவிடாதபடி அந்த பைலை எடுத்தாள். முக்கியமான பக்கத்தை போட்டோ எடுத்தாள். ஒன்றும் அறியாதது போல வந்து உட்கார்ந்துகொண்டாள்.
இன்டர்காம் சிணுங்கியது. எடுத்தாள். ஜி.எம். கூப்பிட்டார். ‘அந்த புது டெண்டர் பைலை எடுத்துக்கிட்டு உள்ளே வாங்க… ‘ என்றார். உதறல் எடுத்தது இவளுக்கு.
ஒருவேளை அவர் ஏதும் கவனித்துவிட்டாரோ. இந்த அறையில்தான் சி.சி.டி.வி. காமரா இல்லையே… அப்புறம் ஏன் பயப்படவேண்டும்… என்றது உள் மனது. உஷாராக மொபைலை டேபிலிலேயே விட்டுவிட்டுப் போனாள்.
‘மாலதி… எம்.டி.கூப்பிட்டார். டெண்டரை ரிவிஷன் பண்ணனுமாம். நாளைக்கு ரெண்டு மணி வரை டைம் இருக்கில்லே…‘ என்றவர், ‘ஸாருக்கு ஒரு பி.ஏ. வேணும்ங்கறார்… எனக்கு சட்டுன்னு உங்க சிஸ்டர் நினைவுக்கு வந்தாங்க. நல்ல ஃபேரா இருப்பாங்க இல்லே… இங்கே ரெண்டு மூணு மாசத்துக்கு முன்னே கூட வந்திருந்தாங்களே… பி.பி.ஏ. ஃபைனல் இயர்னு சொன்னீங்க… நீங்க ஏன் அவங்களை கேட்கக் கூடாது… முப்பதாயிரம் சம்பளம் தரலாம்னார் ஸார்… வேணா கொஞ்சம் சேர்த்தும் போட்டுடலாம்… ‘
சட்டென பொறி தட்டியது மூளைக்குள். இப்போது எக்ஸாம் நடந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே எல்லா சப்ஜெக்டிலும் தொன்னூருக்கு மேல்தான் வாங்கிக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை இது உருவாக்கித் தரும். இவளுக்கு இருபதாயிரம்தான் சம்பளம். அவளுக்கு முப்பதாயிரம்.
ஒரு நல்ல வைப்பை நழுவ விடுவானேன். கல்யாணத்தை வேண்டுமானால் இன்னும் ஒரு வருடம் தள்ளிக் கூட போடலாம். அவளும் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால் இன்னும் நல்ல வரனாகப் பார்க்கலாமே… ‘
தனது இருக்கைக்கு வந்தாள். யோசித்தாள்.
நமது குடும்பத்தை தூக்கி நிறுத்தப் போகிறது இந்தக் கம்பெனி. இப்படிப்பட்ட கம்பெனிக்கு நாம் துரோகம் செய்வதாவது…
வேண்டாம்… அந்தப் பணமே வேண்டாம்…
மொபைலைத் திறந்தாள். அந்த போட்டோவை அழித்தாள்.
கலா வேலைக்கு வர ஆரம்பித்துவிட்டாள்.
கலாவின் கல்யாணம் அதே பேங்க் மாப்பிள்ளைக்கு முடிவாகிவிட்டது.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings