in

மென் தென்றலில் நின் வாசம் ❤ (சிறுகதை) – ✍ விபா விஷா

மென் தென்றலில் நின் வாசம் ❤ (சிறுகதை)

ன்று காலை 5 மணிக்கு எப்பொழுதும் போல, ஆருஹியை அவள் தந்தையின் பண்பலை ரேடியோ தான் எழுப்பிவிட்டது.

இன்று பலரும் செல்போனில்  பாடல்களை பதிவேற்றம் செய்து  கேட்டாலும், ஆருஹியின் தந்தைக்கு பண்பலையின் மீது தான் காதல்

காலை ‘ஆதித்ய ஹிருதயம்’ என்னும் சூரிய பகவானின் ஸ்லோகத்தில் இருந்து அவரது நாளும் அவர் மகளின் நாளும் ஆரம்பமாகும்.

தாயுமானவரான தந்தைக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்த பின்னே கல்லூரிக்கு கிளம்புவாள்.

சிறுவயதில் இருந்தே தந்தையுடன் பண்பலை கேட்டு பழகி இருந்த ஆருஹிக்கு காலை 7-8 ஒலிபரப்பப்படும்  BED COFFEE  நிகழ்ச்சியின் மீது தான் ஆர்வம்

அதிலும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ராகவ் மீது பைத்தியம் என்றே கூறலாம்

என்ன தான் கைகள் அதன் போக்கில் வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்தாலும், அவள் காதுகளும் மனமும் ராகவிடமே வாசம் செய்து கொண்டிருக்கும்.

அன்றும் அது போல் 7 மணி நிகழ்ச்சிக்காக காத்திருந்தவாறே அப்பாவுடன் சமையல் செய்து கொண்டிருந்தாள் அவள்

“நீ போய் குளிச்சுட்டு வாம்மா நான் சமையலை பாத்துக்கறேன்” என்று எல்லா பாசமிகு அப்பாவைப் போல் ஆருஹியின் அப்பா விஸ்வநாதனும் கூற

“இல்லப்பா நான் குளிச்சுட்டு வர்றதுக்குள்ள ராகவ் ஷோ ஆரம்பிச்சுடும். அதனால அவர் நிகழ்ச்சி முடிஞ்சதும் நான் குளிக்க போய்க்கறேன் ப்பா” என்றாள் ஆருஹி

“என்னம்மா நீ, அந்த ஷோ முடியறதுக்கு 8 மணி ஆகிடும். உனக்கு காலேஜ் பஸ் 8.30க்கு. நீ எப்ப குளிச்சுட்டு வந்து எப்ப சாப்பிட்டு கிளம்பப் போற?” என வினவியரிடம், அது இதென்று தாஜா செய்து சமையலை தொடர்ந்தாள்

மணி 7 அடிக்க, “ஹலோ வணக்கம்ஸ் மற்றும் வெல்கம்கள் என் குட்டி மச்சாஸ். குட்டி மச்சீஸ், பேரன்பு கொண்ட நட்பிஸ்… அன்புள்ளம் கொண்ட அங்கிள், ஆண்ட்டீஸ். நான் உங்கள் பாசமிகு  மன்னன், கோதுமை நிற கண்ணன், உள்ளம் கவர் கள்வன் ராகவ் வந்திருக்கிறேன்” என்ற அவனது வழக்கமான குறும்பு துள்ளும் குரலைக் கேட்டதும், ஆருஹியின் இதயம் ஒரு நிமிடம் நின்று பின் துடித்தது

அது நேரலை நிகழ்ச்சியாக இருந்தாலும், மிக சுவாரஸ்யமாக தன்னை புகழ்ந்து பேசுபவர்களிடமும் சரி, தன்னை கிண்டல் செய்பவர்களிடமும் சரி, ஹாஸ்யத்துடன் பேசியே அனைவரின் மனதையும் கவர்ந்து விடுவான் அவன்

ஆருஹிக்கும் என்றாவது ஒருநாள் அவனிடம் பேசிவிட வேண்டும், அவன் மீது தனக்கு இருக்கும் ஆர்வத்தை, அன்பை, காதலா என அறியாத இந்த உணர்வை  அவனிடம் போனிலாவது தெரிவித்து விட வேண்டும் என மனம் கூறினாலும், ஏதோ ஒரு தயக்கம் அவள் மனதை ஆக்கிரமித்துக் கொள்ள, அவனது நிகழ்ச்சிக்கு சாதாரணமாக பேச கூட முயன்றது இல்லை அவள்.

போனில் பேசுவது இருக்கட்டும், இன்னும் ராகவை வெளி ஆட்கள் யாரும் பார்த்தது கூட இல்லை.

FACEBOOK, TWITTER, INSTSA என எதிலும் அவனை பார்க்க முடியவில்லை. எங்கு தேடினும் அவனை பற்றிய எந்த குறிப்பும் இல்லை.

வாழ்நாளில் ஒருமுறையாவது அவனை பார்த்து விட்டால் போதும் என்றிருந்தது ஆருஹிக்கு

தினமும் இந்த ஒரு மணி நேரம் மட்டும்  தன்னையே மறந்து ராகவுடன் தனி உலகில் இருப்பாள் ஆருஹி 

அந்த நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டு தனக்கும் தந்தைக்கு டிபன் பாக்சில் சாப்பாடை எடுத்து வைத்துக் கொண்டே உதட்டில் முறுவலுடன் அவன் குரலை செவிகளால் பருகிக் கொண்டிருந்தாள்.

8 மணி கடந்த பின் சுய நினைவுக்கு வந்தவளை, “என்னம்மா காலேஜ்ல பேராசிரியர் சொல்லி தருவதை கூட நீ இவ்ளோ கவனமா கவனிக்க மாட்ட போல” என கேலி செய்தார் விஸ்வநாதன்.

“என்னப்பா நீங்க? எவ்ளோ பிரில்லியண்டா அதே சமயம் எவ்ளோ சரளமா..  கொஞ்சம் கூட சலிப்படைய வைக்காம பேசறார் பாருங்க. நீங்க அத ரசிக்காம என்ன பார்த்து கிண்டல்  பண்றீங்க…” என குறைபட்டுக் கொண்டாள்

“ஆர்.ஜே ஆக  அவ்வளவு ஆசை இருக்கிறவ கம்யூனிகேஷன் ஜார்னலிசம் படிச்சுருக்கலாம்ல?” என தந்தை கேட்க

“ஹையோ என்னப்பா நீங்க? நான் ஆர்.ஜே ஆகிறத பத்தியா பேசிட்டுருக்கேன்? ராகவோட திறமை பற்றி பேசிட்டு இருக்கேன். எப்படியோ வாழ்க்கைல ஒரு முறையாவது அவர பார்த்துட்டா போதும் ப்பா” என அவருக்கு விடையளித்தாள் ஆருஹி

”இங்க பாரு ஆருஹி… கனவுலயே வாழ்க்கைய வீணாக்கிடக் கூடாது, அவ்ளோ தான் சொல்லுவேன்” என்றதுடன் அறையை விட்டு வெளியேறினார்

“கனவிலேயே வாழக்கையை தொலைக்க போகிறேனா?” என மனத்திற்குள் சிறு கலக்கம் தோன்றினாலும், அதை சற்று தள்ளி வைத்து கல்லூரிக்கு கிளம்பினாள் ஆருஹி

காலேஜ் பஸ் ஏறியதும் ஒரே ஆர்ப்பாட்டம் தான். பயமென்பதே அறியாத, கவலை என்பதே தெரியாத இளம் வயதல்லவா? என்ன தான் பெண்கள் கல்லூரி என்றாலும் கலகலப்புக்கு பஞ்சமில்லை

ஆருஹி உள்ளே ஏறியதும் “ஹே ஆருஹி.. இங்க வாடி உனக்கு சுடச்சுட ஒரு செய்தி தரேன்” என அழைத்தாள் தோழி தன்யா.

“என்னடி அந்த மாரியம்மா உன்ன இன்னைக்கும் ப்ரின்சிய பார்க்க சொல்லிட்டாங்களா?” என தோழியை வம்பிழுத்தாள் ஆருஹி

தன்யாவிற்கும் பேராசிரியை மேரி கிரேஸுக்கும் ஆகாது. நன்றாய் படிக்கும் மாணவியாக இருந்த போதும், ஒரு சின்ன கருத்து வேறுபாடு காரணமாய் சிறு பிரச்சனையை துறைத்தலைவரிடம் எடுத்துச் சென்றால், மேரி மேம் கல்லூரி முதல்வரிடம் கொண்டு செல்வார்

இவர்கள் இருவருக்கும் உள்ள பிணக்கு அனைவருக்கு தெரியுமென்பதால் விஷயம் பெரிதாகாமல் அப்படியே விடுவர்

அந்த மேரி தான் மாரி ஆகி, இறுதியில் மாரியம்மாவாகி விட்டார், எப்படியோ எல்லாமே கடவுள் பெயர் தானே?

“ஏய் ஏய் ஏண்டி காலங்காத்தல வந்ததும் இப்டி சபிக்கற? ஒரு குட்நியூஸ் தான்டி சொல்லப் போறேன்” என பதற்றத்துடன் பதில் வந்தது தன்யாவிடமிருந்து

“அப்படியாங்க மேடம்? தாங்கள் கூறப் போகும் அந்த அதி முக்கியமான குட் நியூஸ் தான் யாதோ?” என ஆருஹி கிண்டலுடன் கேட்க

“அதாகப்பட்டது மகாஜனங்களே… இத்தன நாளா இந்த அதி புத்திசாலி தன்யாக்கும்…” என்று அவள் ஆரம்பிக்க

“ஆமா யாரு உன்ன அதி புத்திசாலினு சொன்னாங்க?” என்று இடையிட்டாள் மற்றொருத்தி

“யாரும் சொல்ல மாட்டாங்க அதான் நானே சொல்லிக்கிட்டேன்” என் கடுப்புடன் பதிலுரைத்துவிட்டு, விட்ட இடத்திலிருந்து துவங்கினாள் தன்யா

“ஏய் மொக்க போடாம சொல்ல வந்தத சொல்லுடி” என்று ஆருஹியும் அவசரப்பட

“அப்போ நடுவுல தொந்தரவு பண்ணாம நான் சொல்றத கேளுங்க. இல்ல ரோபோ சங்கர் மாதிரி அன்னைக்கு காலைல 6 மணி இருக்கும்னு ஆரம்பிச்சுடுவேன்” என அவர்களை தன்யா பயமுறுத்த

“ஹய்யயோ ஆள விடு சாமி… நீ எதுவும் சொல்ல வேண்டாம்” என அலறி விட்டாள் ஒருத்தி

“ம்ம்ம்… அந்த பயம் இருக்கட்டும். இப்போ ஒழுங்கா என்ன சொல்ல விடறீங்களா?” என தன்யா கெத்துடன் கேட்க

“வேணாம்னா விடவா போற? சொல்லும்… சொல்லித் தொலையும்…” என சலிப்புடன் கூறினாள் ஆருஹி.

“இந்த தன்யாவுக்கும் மேரி மேமுக்கும் இருந்த பனிப்போர் முடியப் போகிறது” என்று ஆனந்தத்துடன் கூவினாள் 

“ஹே என்ன டி சொல்ற?? எப்படி டி??” என மற்றவர்கள் வினவ

“நம்ம மேரி மேடம் இருக்காங்கல்ல மேரி மேடம்” என்று மீண்டும் தன்யா முதலிலிருந்து ஆரம்பிக்க 

“ஆமா” என்றனர் மற்றவர்கள் (கடுப்பான கோரசுடன்)

தோழிகள் ஆமாம் போட்ட தொனியியில், “கொஞ்சம் ஓவரா தான் போய்ட்டு இருக்கமோ? சரி போவோம். என்ன தான் பண்ணிடுவாளுங்க..” என்று எண்ணிய தன்யா

“சரி பத்ரகாளிகளா சொல்றேன், மேரி மேமுக்கு கல்யாணமாம். அடுத்த மாசத்திலிருந்து காலேஜுக்கு வர மாட்டாங்க” எனவும்

எல்லாரும் “ஹேஏஏஏஏ..” என கத்தலானார்கள்

உடனே அவர் கல்லூரியை விட்டு விலகுவதால் ஏற்படும் சாதக பாதகங்களை அடுக்கினார்கள்.

அதில் அதி முக்கியமானது என்னவென்றால், மேரி மேம் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் என்றாலும் அருமையாக பாடம் நடத்துவார். அது எவ்வளவு கடினமான பாடமாக இருந்தாலும் எளிமையாக புரிய வைத்து விடுவார்.

சற்று நேரம் மேரி மேம் புகழ் பாடிக் கொண்டிருந்த தன்யாவின் கவனம் ஆருஹியிடம் வந்தது

தன்யா மட்டுமே ஆருஹியின் மனதை முழுக்க அறிந்தவள். தோழிக்கு ராகவ் மேல் இருக்கும் ஈர்ப்பு அர்த்தமற்றது என அறிந்தாலும், அவள் மனம் வருந்தாமல் நிதர்சனத்தை எடுத்துக் கூறுவாள்

ஆருஹியின் சிரிப்பு சுரத்தில்லாமல் இருப்பதைக் கண்டு அருகில் சென்று அமர்ந்து அவள் கைகளை பற்றிக் கொண்டாள் 

இது தான் நட்பு, மனத்துயரை வாய் விட்டு சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதேப் போல் நட்புக்கு என்ன பிரச்சனை என அறியாத நிலையிலும் கூட, உனக்கு நான் இருக்கிறேன் என்ற ஆறுதலை தந்தாலே போதுமானது.

தன்யாவாக எதுவும் கேட்காத போதும், மதிய உணவு இடைவேளையின் போது ஆருஹியே ஆரம்பித்தாள் 

”அப்பா சொல்ற மாதிரி வெறும் கனவைத் தான் துரத்திட்டு இருக்கனா தனு” என்றாள் கலக்கத்தோடு

அதற்கு கொஞ்சமும் தயக்கமின்றி, ஆனால் அன்பும் கலந்து தன்யாவிடமிருந்து பதில் வந்தது

“நானும் அப்பா மாதிரியே சொல்றேனு நினைக்காத அரு… நீ கனவை இல்ல, கானலை துரத்திட்டு இருக்கனு எனக்குத் தோணுது”

“எனக்கும் கொஞ்சம் அப்டி தான்பா தோணுது, அவர ஓரே ஒருமுறை பார்த்துட்டா போதும். அவர் இப்டி தன்னை வெளிப்படுத்திக்காம இருக்கறது தான் அவர் மேல எனக்கு இருக்கற ஆர்வத்த அதிகப்படுத்துது” என்றாள் ஆருஹி

“அதுக்கு என்னடி பண்ண முடியும்? அவர் என்ன காரணத்துக்காக தன்னை வெளிப்படுத்திக்காம இருக்காரோ தெரியலயே? நீ நல்லா படிக்கற, இன்னும் ரெண்டு மாசத்துல கேம்பஸ் இன்டர்வியூ வேற வருது. அதனால மனச அலைபாய விடாம படிப்ப முடிச்சமா வேலைய வாங்கினோமா லைஃப்ல செட்டில் ஆனோமானு யோசி” என தன்யா நிதர்சனத்தை எடுத்துரைக்க,  கொஞ்சம் இறங்கி வந்தாள் ஆருஹி

”சரி தனு, ஆனா இன்னும் ஒரே ஒரு முறை கடைசியா அவர் ஆபிஸுக்கே போய் பாக்கறேன். அப்பவும் முடியலனா நான் இந்த முயற்சிய விட்டுறேன்” என ஆருஹி முடிவாகக் கூறவும்

”நீ சொன்னா கேக்க மாட்ட” என சலித்தவள், “சரி… நீ அங்க போறப்போ நானும் உன் கூட  வரேன்” என்றாள் தன்யா வேறு வழியின்றி 

ந்த வார இறுதியில் தோழிகள் இருவரும் ரேடியோ ஸ்டேஷனுக்கு சென்ற போது, என்றும் இல்லாத திருநாளாக அன்று தான் அந்த வாட்ச்மேன் வாரா வாரம் வரும் ஆருஹியின் மீது இரக்கப்பட்டு “சரி உள்ள போய்  ரிசப்ஷன்ல விசாரிங்க” என்றார் 

இது நல்லதா இல்லை கெட்டதா என தன்யா யோசிக்க, அவர் உள்ளே செல்ல அனுமதித்ததையே நல்ல சகுனமாக நினைத்தாள் ஆருஹி

ஆகவே, எப்படியாவது ராகவை பார்த்தே தீரவேண்டுமென்ற உறுதி அவள் மனதில் அதிகமானது 

வரவேற்பில் இருந்த பெண், இவர்கள் கூறுவதை காதுக் கொடுத்து கேட்கக் கூட தயாராக இல்லை

“தன்னை தேடி ரசிகர் என எவராவது வந்தால் அவர்களிடம் தன்னை பற்றி எதுவும் சொல்லக் கூடாது” என கூறியிருந்தான் ராகவ்

அதன் காரணமாய், எவ்வளவு கெஞ்சியும் ராகவ் பற்றிய எந்த விவரமும் தெரிவிக்க மறுத்து விட்டாள் அந்த பெண் 

தைத் தொடர்ந்த வாரத்தில், கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ நடைபெற்றது 

ஆருஹி தன்யா இருவருக்கும் ஒரே கம்பெனியில் வேலை கிடைக்க, இருவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர் 

இதற்கிடையே வாராவாரம் ராகவ் பற்றிய விவரம் அறியும் முயற்சியை மட்டும் ஆருஹி விடவில்லை

ஆருஹி ராகவ் பற்றிய தேடலில் இருப்பது விஸ்வநாதனுக்கு தெரிய வர, “என்னம்மா நீ… ஏதோ விளையாட்டா அந்த ராகவ் பத்தி பேசறனு  நினைச்சுட்டுருந்தா, இவ்ளோ முனைப்பா இருக்க” என கோபமாய் கத்தினார் 

“அப்பா… அவரை பார்த்ததுக்கு அப்பறம் நானே உங்ககிட்ட இதைப் பத்தி விளக்கமா சொல்லலாம்னு இருந்தேன் ப்பா…” என சற்று அழுத்தத்துடன் வந்து விழுந்தது அவளது பதில்

அந்த அழுத்தத்தில் விஸ்வநாதனின் அங்கமெல்லாம் பதற, அதை மறைத்தபடி, “என்ன நீ விளக்கமா சொல்லப் போற?” என்றார் இன்னும் கோபம் குறையாமல் 

“நா.. நான் வந்து ராகவ தேடறது அவர் மேல் எனக்கு இருக்கற விருப்பத்துனால தான். அவரைப் பார்த்து என் விருப்பத்தை சொல்லணும்னு தான் இவ்ளோ கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்” என்றாள் தீர்க்கமாய் 

அதைக் கேட்டதும் எரிமலையின் சீற்றம் வந்தது விஸ்வநாதனுக்குள்

“என்ன பேசறனு புரிஞ்சு தான் பேசறயா? இந்த மாதிரி எங்கயாவது நடக்குமா? இங்க பாரு ஆருஹி… இதெல்லாம் சினிமாவுக்கு வேணும்னா நல்லாருக்கும். நாம எல்லாம் சாதாரண ஆளுங்க. நீ நல்ல பையனா பார்த்து காதலிச்சுருந்தா ஒருவேளை நான் உனக்கு சாதகமா யோசிக்க வாய்ப்பிருக்கு. அத விட்டுட்டு, இந்த மாதிரி முகம் தெரியாத ஒருத்தன, அதுவும் அவனைப் பத்தி எந்த விவரமும் தெரியல அவன போய் விரும்பறேனு சொல்ற. நீ புத்திசாலினு நினைச்சேன். ஆனா இப்படி உன் வாழ்க்கைய கெடுத்துட்டு பைத்தியம் மாதிரி சுத்திட்டுருக்க” என பெற்ற மனம் தாளாமல் கத்தினார் விஸ்வநாதன்

அதைக் கேட்ட ஆருஹி, “அப்பா” என அலறியவள், “நான் பைத்தியம் இல்லப்பா….  நீ..நீங்களே என்ன புரிஞ்சுக்கலேனா நான் என்னப்பா பண்ணுவேன். ப்ளீஸ் ப்பா… எனக்கு.. கொ..கொஞ்ச நாள் டைம் குடுங்க. நான்  அவரை எப்படியாவது பார்த்து…. பேசி அவருக்கு என் மனச புரிய வச்சுடறேன். ப்ளீஸ் ப்பா” என கதறினாள் 

மகளின் கதறலில் தானும் உடைந்தவர், “ஐயோ… அவன் தான் யாரையும் பார்க்க தயாரா இல்லையேம்மா. ஒருவேளை அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருந்தா என்ன பண்ணுவ” என விஸ்வநாதன் கேட்கவும்

அதிர்ச்சியில் உறைந்தவள், “செத்து விடுவேன்” என மனதிற்குள் தனக்கு தானே கூறி கொண்டாள்.

தான் நிஜமாகவே நல்ல மனநிலையில் தான் இருக்கிறோமா? அல்லது தந்தையே கூறுவது போல தனக்கு ஏதாவது ஆகிவிட்டதா என்ற பயத்தில் மேலும் பதறினாள்

பின் ஒரு முடிவுக்கு வந்தவளாக, “அப்பா இன்னும் ஒரு மாசம் மட்டும் டைம் குடுங்க. அதுக்குள்ள அவரை பாக்க முடிஞ்சா பாக்கறேன். இல்லனா அந்த கடவுள் விட்ட வழி” என்றாள்  பெருமூச்சுடன்.

அதைக் கேட்டு சற்று ஆசுவாசமானவர், “சரி ஆருஹி,  உனக்கு இன்னும் ஒரே மாசம் தான் டைம். அதுக்குள்ள நீ அவனை பார்ப்பயோ, பேசுவையோ எனக்குத் தெரியாது. இல்லனா, அதுக்கு மேல எதுவும் கேக்காத. ஆனா சும்மா அட்ரஸ் தெரியாத ஒருத்தன தேடறேனு உன் வாழ்க்கையை வீணாக்கிட்டு இருக்கறத பாத்துட்டு என்னால  சும்மா இருக்க முடியாது” என இறுக்கமாய் உரைத்தவர், அங்கிருந்து அகன்றார் 

தந்தை இந்த அளவுக்காவது இறங்கி வந்தாரே என நிம்மதியானாள் ஆருஹி

என்ன தான் இன்னும் ஒரு மாதம் என மகளுக்கு கெடு விதித்த போதும், தந்தையாக விஸ்வநாதனின் மனம் அடித்துக் கொண்டது 

றுநாள் காலை வழக்கம் போல் அவளை எழுப்பியது ஆதித்ய ஹிருத்யம் அல்ல. அவள் தந்தையின் மொபைலில் இருந்த சுப்ரபாதம் தான்.

அன்று மட்டும் அல்ல, அதற்கு அடுத்து வந்த நாட்களிலும் அந்த வீட்டில் ரேடியோ ஒலிக்கவில்லை.

ஏன் என்று ஆருஹியும் கேட்கவில்லை. தந்தை மகளுக்கிடையே இனம் புரியாத சோகமும் விலகலும் வந்துவிட்டிருந்தது.

தன்யாவிடம் நடந்ததை கூறுகையில் ஆருஹியின் மனம் வேதனையுற்றது.

“அப்பா சொல்றது சரினு தான் எனக்கும் தோணுது தனு, ஆனா நான் கண்டிப்பா ராகவ பார்ப்பேன்னு என் உள்  மனசு சொல்லுது. அதான் கடைசியா இந்த ஒரு மாசம் டைம் கேட்டிருகேன்” எனவும் 

“உனக்கே தெரியுதுல்ல அப்பா சொல்றது சரினு, அது போதும் எனக்கு. ஆனா எந்த சூழ்நிலைலயும் உனக்காக நாங்க இருக்கோம்னு நீ மறக்காம இருந்தா அது போதும்டி” என தோழியை சமாதானம் செய்தாள் தன்யா 

அதைக் கேட்டதும் ஆருஹியின் மனம் நெகிழ்ந்து விட்டது.

“கண்டிப்பா மறக்கமாட்டேன், என் மேல நீ வச்சுருக்கற அன்புக்கு நான் எப்படி கைமாறு செய்யப் போறேன்னு தெரிலடி” என உணர்ச்சிவயப்பட்டாள்

“நீ கைமாறும் செய்ய வேணாம், கால்மாறும் செய்ய வேணாம், இப்படியே இருந்தா போதும். சரி சொல்லு, இந்த வாரமும் நாம அந்த ஆபீஸ் போய் பாக்கலாமா?” என்று அவளிடம் தயக்கத்துடன் தன்யா வினவ

“ஆமா தனு, இந்த வாரம் எப்டியாவது நாம ராகவ பாத்துடனும்” என்றாள் உறுதியாய் 

“கண்டிப்பா பார்த்துடலாம்டி,நீ கவலைப்படாம இரு” என தைரியம் கூறினாள் மற்றவள்

அந்த வார இறுதியும் வந்தது. இருவரும் ரேடியோ ஸ்டேஷனுக்கு சென்று எத்தனை கெஞ்சியும், அந்த ரிசெப்ஷனிஸ்ட் மசிவதாக இல்லை

“மேடம் நீங்க அவரை பார்க்க கூட அனுமதிக்க வேண்டாம். ஆனா இப்படி ஒருத்தி அவரை பார்க்க துடிச்சுட்டு இருக்கேன்னாவது அவருக்கு தெரியுமா?” என வருத்தத்துடன் கேட்டாள் ஆருஹி 

“சரியாப் போச்சு போம்மா, இப்படி ஒவ்வொரு வாரமும் ஒரு பொண்ணு அவரைப் பத்தி விசாரிக்குதுனு நான் சொன்னா என் வேலைக்கு தான் ஆப்பு. முதல் முதலா அவரைத் தேடி ஒரு ரசிகை வந்தப்ப, அவரை பாக்காமயே அனுப்ப சொல்லிட்டாரு. அப்போ தான் என்கிட்ட சொன்னாரு. இனி யாராவது ரசிகன் ரசிகைனு என்னைப் பார்க்க வந்தா, அவங்கள உள்ளேயே விடக்கூடாது, என்கிட்ட அந்த விஷயத்தையும் கொண்டு வரக்கூடாது. வேணும்னா அவங்ககிட்ட ராகவுக்கு ரசிகர்கள்னா பிடிக்கவே பிடிக்காதுனு கூட சொல்லிக்க. ஆனா யாராவது என்ன பார்க்க வந்துருக்காங்கனு சொன்னா, நீ அவ்ளோ தான்னு  மிரட்டிட்டு போய் இருக்கார். அதனால தயவு செஞ்சு இங்கிருந்து போய்டு’ம்மா” என ரிசப்ஷனிஸ்ட் கூற, தனுவிற்கு கோபம் வந்ததென்றால் ஆருஹிக்கு கண்ணீர் தான் வந்தது

கலங்கிய கண்களுடன் அந்த பெண்ணின் கைகளை பிடித்துக் கொண்டு, “மேடம் ப்ளீஸ் மேடம்… இந்த மாறி ஒரு பொண்ணு அவர பக்க அடிக்கடி வருதுனு மட்டும் சொல்லுங்க மேடம்.. அவர் கண்டிப்பா என்னை பார்க்க ஒத்துப்பார்” எனக் கெஞ்சினாள் ஆருஹி

“என்னம்மா நீ இப்படி அழுகற? சரி சரி நா அவர்கிட்ட உன்னப் பத்தி சொல்றேன். ஆனா உன்ன பாக்கறதும், பாக்காததும் அவர் இஷ்டம். நீ மறுபடியும் அடுத்த வாரம் வா” எனக் கூறி அனுப்பினாள்    

வெளியே வந்ததும் தன்யா பொரிந்து தள்ளினாள் 

“ஹேய் அந்த ராகவுக்கு மனசுல என்ன கடவுள்னு நினைப்பா. ரொம்ப ஓவரா பண்றான். அடுத்த வாரம் வந்து அவனை பேசிக்கறேன்” எனக் கறுவினாள்

“ப்ளீஸ் தனு ரொம்ப சாரிடி… என்னால் தான நீயும் அவமானப்படற, என்ன மன்னிச்சுடுடி” என்றாள் ஆருஹி குற்ற உணர்வுடன் 

“ஹேய் என்னடி நீ? நீ அவமானப்பட்டா மட்டும் எனக்கு கஷ்டமில்லயா? விடு நான் வேற உன் மனச கஷ்டப்படுத்தல, வா நாம அந்த கடைக்கு போய் எதாவது ஜூஸ் குடிச்சுட்டு போலாம்” என அழைத்துச் சென்றாள்  தன்யா.

“சார் அந்த பொண்ணு ஆறு மாசமா இங்க வந்துட்டு இருக்கு சார் உங்கள பார்க்க. அவ என்னமோ சாதாரண ரசிகை மாதிரி தெரியல. உங்க மேல ரொம்ப சீரியஸா இருக்கற மாதிரி தெரியுது. சோ ப்ளீஸ், ஒருவாட்டி பாத்துடுங்க சார்” என ஆருஹிக்காக ராகவிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தாள், ரிசெப்ஷனிஸ்ட்

அவளை ஏற இறங்க பார்த்தவன், “இங்க பாருங்க ரம்யா, எனக்கு இந்த மாதிரி ரசிகர்களை பார்க்கிறதுல எல்லாம் இன்டரஸ்ட் இல்ல. இதப் பத்தி உங்ககிட்ட நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்னு நினைக்கறேன்” என்றான் ராகவ் கோபமாய் 

“என்ன சார் நீங்க தான் இந்த உலகத்திலேயே ரொம்ப பெரிய இவருனு நினைச்சுட்டு இருக்கீங்களா? ரசிகர்கள் இல்லனா நீங்க ஒண்ணுமே கிடையாது சார், அத மனசுல வச்சுக்கோங்க. அந்த பொண்ணு உங்கள பார்க்கணும்னு எவ்ளோ கெஞ்சுது தெரியுமா? முதல்ல மனுஷங்களோட மனச புரிஞ்சுக்கோங்க. காசு, பணம், பேர், புகழ் இதெல்லாத்தையும் விட மனுஷங்க தான் முக்கியம் தெரியுமா?” என  தள்ளினாள் ரம்யா 

“நீ ரொம்ப பேசற ரம்யா. இந்த காசு பணத்தை விட மனுஷனுக்கு அவனுக்கு பிடிச்ச தொழில் செய்வது தான் முக்கியம். எனக்கு இன்னும் ரெண்டு மாசத்துல வெளிநாட்டுல வேலை ரெடியா இருக்கு. உனக்கே தெரியும்ல? நான் இங்க முதல்ல கம்ப்பூட்டர் சிஸ்டம் டிபார்ட்மென்ட் ‘க்கு தான் வந்தேன். சந்தர்ப்ப சூழ்நிலையால் RJ ஆகற மாதிரி ஆகிடுச்சு. இப்போ என் கனவு வேலை என் கைக்கு எட்டற தூரத்துல இருக்கு. அதனால தான் எனக்கு முதல்ல இருந்து fans வர்றது பிடிக்கல. இதெல்லாம் உன்கிட்ட சொல்லணும்னு எனக்கு அவசியம் கூட இல்ல. ஆனா நீ ரொம்ப உணர்ச்சிவசப்படுற, அதுதான் உனக்கு எல்லாம் நான் விளக்கி சொன்னேன். இனிமே அந்த பொண்ணு வந்தா தயவு செஞ்சு உள்ள விடாத. அது தான் எனக்கும் என் வாழ்க்கைக்கும் நல்லது” என்றான் ராகவ், கோபத்தை இழுத்துப் பிடித்தவனாய் 

அதை கேட்டதும் பற்றிக் கொண்டு வந்தது ரம்யாவிற்கு

“சே எவ்ளோ சுயநலமா இருக்கீங்க நீங்க? அந்த பொண்ணு உங்க குரலை கேட்டே உங்கள அவ்ளோ காதலிக்கறா. அவளை பார்க்கறதுக்கு கூட விருப்பம் இல்ல உங்களுக்கு. உங்க மறுப்பை சொல்ற அளவுக்கு கூட அவ நேசத்தை நீங்க மதிக்கல இல்ல? அவ்வளவு உதாசீனம், நல்லா இருப்பீங்க சார் நீங்க..” என்று ஆதங்கத்துடன் கூறினாள் ரம்யா.

“ஆமாம்மா உங்களுக்கு அம்மா அப்பா இருக்காங்க, உங்களுக்குனு ஒரு குடும்பம் இருக்கு. எனக்கு வீட்டுல அவமானம் மட்டும் தான் காத்துட்டு இருக்கு. அம்மா அப்பா இல்லாம இன்னொருத்தங்க வீட்டுல வேலைக்காரனா வளர்றது எவ்ளோ கொடுமை தெரியுமா? அவங்க முன்னாடி அவங்க தொட முடியாத உயரத்துல இருக்கணும். அது தான் என் வாழ்க்கையோட லட்சியமே. இதுக்கு நடுவுல எனக்கு வேற எந்த உணர்ச்சியும் இல்ல” என்றவன் அவளின் பதிலுக்கு கூட காத்திராமல் வெளியேறினான் 

அடுத்த வாரம் அவள் வந்தால் ராகவுடைய சுயநல குணத்தை எடுத்துக் கூறி மனதை மாற்ற வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.

டுத்த வாரமல்ல… அடுத்த நாளே வந்து நின்றாள் ஆருஹி

தன்யாவிடம் கூறினால், அவள் கோபப்படுவாளோ என்றெண்ணி அவளிடம் கூட சொல்லாமலே வந்து விட்டாள்.

அங்கு வந்தவள் ரம்யாவிடம் ராகவ் பற்றிக் கேட்க, “இங்க பாரு ஆருஹி, அந்த ராகவ் சரியான சுயநலவாதி” என அவனுடன் நடந்த உரையாடலை விவரித்தாள் 

அப்போதும் மனம் சமாதானமாகாமல், “மேடம் அவர் எங்க இருக்கார்னு மட்டும் சொல்லுங்க. நான் எப்படியாவது அவரை பார்த்து பேசிக்கறேன்.” என வேதனை நிறைந்த குரலில் கேட்டாள் ஆருஹி

“அவரை பத்தி இவ்ளோ சொல்றேன், ஆனாலும் நீ புரிஞ்சுக்கவே மாட்டேங்கற. உன்னோட காதலுக்கு அவருக்கு தகுதியே இல்ல” என ரம்யா சிடுசிடுக்க

“எது எப்படி இருந்தாலும் பரவாயில்ல, ப்ளீஸ் மேடம் அவர் எப்போ கிளம்புவார்னாவது  சொல்லுங்க, நான் பார்த்து பேசிக்கறேன்.. ப்ளீஸ் மேடம்” எனக் கூறி அவள் கால்களிலேயே விழுந்து விட்டாள்.

பதறிப் போன ரம்யா, “ஐயோ மேல எழுந்திரு ஆருஹி” என  கூறிக் கொண்டிருக்கையில், ராகவ் வெளியே வந்தான்.

அப்பொழுது அவனை பார்த்த ரம்யா, “அங்க பாரு ஆருஹி, ராகவ் போறாரு. நீயே அவரை பார்த்து பேசி உன் மனச அவருக்கு புரிய வை..” என்றாள் வேறு வழியின்றி 

ஆருஹி திரும்பவும், ராகவ் வெளியே செல்லவும் சரியாக இருந்தது. ஆருஹி பார்த்தது ராகவின் முதுகையே. ரம்யாவிற்கு நன்றி கூறி வெளியேறுவதற்குள், அவன் தனது பைக்கை கிளப்பி வெளியேறியிருந்தான் 

ஆனாலும் விடாமல் தனது ஸ்கூட்டியில் பின் தொடர்ந்தாள்

அவன் ஒரு சிக்னலை விரைவாக கடந்து செல்ல,சிக்னல் சிகப்பாக மாறியதை கவனிக்காமல் ஆருஹி கடக்க முயற்சிக்க, லாரியில் மோதி தூக்கி எறியப்பட்டாள்.

அருகில் இருந்தவர்கள் அவளை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தவள், ஒரு மாத காலத்திற்குப் பிறகு ஓரளவு உடல் தேறினாள்.

உடல் மட்டும் தான் நலமடைந்தது, மனம்…

லாரியில் இருந்து தூக்கியெறிந்த போது தலையில் அடிபட்டதாலும் ராகவை காணாது தவித்த விரக்தியாலும், ஆருஹியின் மனம் மிகவும் பாதிப்படைந்து விட்டிருந்தது.

எந்நேரமும் ரேடியோவை எடுத்து, “ராகவ் பேசு ராகவ்… ஏன் என்கிட்ட பேசமாட்டேங்கற? என்கிட்ட ஒரு வாட்டியாவது பேசு” என புலம்பிக் கொண்டிருந்தாள்

ராகவை ஒருமுறையாவது பார்த்து விட்டால் அவள் மனம் கொஞ்சமாவது தேறும் என எண்ணிய டாக்டர், “அந்த ராகவ ஒரு முறை பார்த்துட்டா ஆருஹி சீக்கிரம் குணமாக வாய்ப்பிருக்கு” என்றார் 

ரிசப்னிஸ்ட் ரம்யாவின் உதவியுடன் அவன் வீட்டிற்கு சென்றார் ஆருஹியின் தந்தை விஸ்வநாதன்

ஆருஹியின் நிலையை விஸ்வநாதன் கூறக் கேட்ட ராகவ் அதிர்ச்சிக்குள்ளானான்

“ஐயோ என்ன சார் சொல்றீங்க? என்னால ஒரு பொண்ணுக்கு இப்படி ஆகிடுச்சா? ரம்யா சொன்னப்ப கூட நான் பெருசா எடுத்துக்கல. இவ்ளோ சீரியஸா இருக்காங்கனு எனக்குத் தெரியல, உடனே அவங்கள பார்க்கணும்” என அவருடனே கிளம்பினான் 

ருஹியை பார்த்த கணம் உயிர் அதிர்ந்தது ராகவிற்கு. ரேடியோவை வைத்துக் கொண்டு “ராகவ் ராகவ்” என்று புலம்பிக் கொண்டிருந்தாள் அவள்

விரைந்து அவளருகே சென்றவன், “ஆருஹி…  நான் ராகவ் மா. உன்ன பாக்க வந்துட்டேன், ப்ளீஸ் இங்க பாரு மா” என குற்ற உணர்வுடன் பேசினான் 

அவனை புரியாத பார்வை பார்த்தவள், “ராகவ் என்கிட்ட பேசவே மாட்டேங்கறான், பாரு எதுமே பேச மாட்டேங்கறான். நீயாவது அவன என்கிட்ட பேச சொல்றியா ப்ளீஸ்?” என ராகவிடமே கேட்டாள் .

இதைக் கேட்ட அனைவருமே அதிர்ந்தனர், டாக்டர் உட்பட. ராகவை பார்த்து விட்டால் ஆருஹி  சரியாகி விடுவாள் என நினைத்தவர்களுக்கு, இப்பொழுது அவள் ராகவை கண்டும் பொருட்படுத்தது அதிர்ச்சியளித்தது 

“உங்கள ஆருஹி இதுவரைக்கும் நேர்ல பார்த்தது இல்ல இல்லையா, அதனால தான் உங்கள ஆருஹியால உணர முடியல” என்றார் டாக்டர் 

“அப்ப ஆருஹி  என்னை உணராமயே போய்டுவாளா டாக்டர்” என தவித்தான் ராகவ்.

“இல்ல ராகவ்.. அவங்களுக்கு இதுக்கு முன்னாடி எப்படி உங்கள தெரியுமோ அப்டியே நீங்க அவங்கள மாத்த முயற்சி செஞ்சு பாருங்க” என்றார்.   

ரு நாட்களுக்கு பின்…

ஆருஹியின் ரேடியோவில்.. “ஹலோ வணக்கம்ஸ் மற்றும் வெல்கம்கள் என் குட்டி மச்சாஸ்.. குட்டி மச்சீஸ், பேரன்பு கொண்ட நட்பிஸ்.. அன்புள்ளம் கொண்ட அங்கிள் ஆண்ட்டீஸ்.. நான் உங்கள் பாசமிகு மன்னன், கோதுமை நிற கண்ணன், உள்ளம் கவர் கள்வன் ராகவ் வந்திருக்கிறேன்” என்ற  ஒலித்தது.

அவன் குரல் கேட்ட கணம், ஆருஹியின் முகம் மகிழ்ச்சியில் விரிந்தது

தன்யாவை அழைத்து “இங்க பாருடி மறுபடி ராகவ் பேச ஆரம்பிச்சுட்டார்” என விழிகளில் வழியும் நீருடன் உரைத்தாள் 

“இப்பவாவது அவருக்கு கால் பண்ணி பேசுடி” என்று தன்யா ஊக்க, சிறிது தயக்கத்துடன் அவனுக்கு அழைக்க முயன்ற ஆரூஹி, இணைப்பு கிடைத்ததும்  மகிழ்வுடன் அவனிடம் பேசினாள் 

பேசி முடித்ததும் தன் தந்தையை அழைத்தவள், “அப்பா ராகவ்கிட்ட நான் பேசிட்டேன் ப்பா. அவரை ஒருநாள் பாக்கணும்னு கேட்டேன், கூடிய சீக்கிரம் சந்திக்கலாம்னு சொன்னார் ப்பா” என மகிழ்வுடன் மகள் கூறக் கேட்டதும், விஸ்வநாதனுக்கு கண்ணில் நீர் பனித்தது 

மகள் முன் கண்ணீரை மறைத்து சமாளித்தவர், “ரெம்ப சந்தோசம் ‘ம்மா”என்றவர், வெளியே சென்று ராகவின் எண்ணுக்கு அழைத்தார் 

“தம்பி நீ செஞ்ச உதவிக்கு நான் என்ன கைமாறு செய்யப் போறேன்னு தெரில ப்பா. நீ நேர்ல இருந்திருந்தா உன் கால்’லயே விழுந்திருப்பேன், ரொம்ப ரொம்ப நன்றி ப்பா” என்று நா தழுதழுக்க தனது நன்றியை தெரிவித்தார்

“ஐயோ சார், என்ன நீங்க பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க? நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்” என்றான்.

“அது இல்ல தம்பி, நீங்க என் பெண்ணுக்காக உங்க லட்சியத்தையே விட்டுட்டு இங்க இருக்கீங்க… அது எவ்ளோ  பெரிய விஷயம்..” என்று அவர் மேலும் பேசிக் கொண்டே போக

இடையிட்ட ராகவ், “என்ன சார் நீங்க, அவனவன் தான் லவ் பண்ற பொண்ணு தன்னை திரும்ப லவ் பண்ணினா போதும்னு  நினைக்கறாங்க. ஆனா உங்க பொண்ணு என்னை எவ்ளோ விரும்பறா? அவளோட காதலை  புரிஞ்சுக்கலைனா நான் மனுஷனே இல்ல சார். அவ யாரு என்னனு தெரியாதப்பா அவளை தவிர்த்தது நிஜம் தான், ஆனா இப்ப அவ என் மேல வெச்சுருக்கற கள்ளமில்லா அன்பை உணர்ந்தப்புறம், ஆருஹிக்காக எத்தனை ஆண்டுகள் நான் காத்திருந்தாலும் தப்பில்ல சார்” என்றான் ராகவ் உணர்ச்சிவயப்பட்டவனாய் 

யார் சொன்னது பெண்கள் மட்டும் தான் கருவை சுமப்பவர்கள் என்று? அன்பு கொண்ட ஆண்களும் கூட தன் மனதுக்கு பிடித்தவளை காலத்திற்கும் நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கின்றனர்

அது போலவே அங்கு ஆருஹியும் மென் தென்றலில் வாசம்’  செய்து கொண்டிருக்கும் தன் ராகவுடனே வாழ்ந்து கொண்டிருந்தாள்

  #ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                

எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

(முற்றும்)

Contact us for your Advertising Needs. Low Cost Customized Ads

                                               

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. இம்மாதிரிக் கதைகள் நிறையவே வந்திருக்கின்றன. படிச்சிருக்கோம். அவற்றில் இதுவும் ஒன்று. தமிழ் சினிமாக் கதைக்கரு! சரளமான நடையாக இருப்பதால் படிக்கத் தூண்டுகிறது. மற்றபடி கதையின் கருவோ ,முடிவோ புதிது இல்லை.

Photo Prem (போட்டோ காதல்) – மராத்தி திரைப்பட விமர்சனம் -✍ மீரா ஜானகிராமன்

பெண்ணே (கவிதை) – ✍ காமாக்ஷி வெங்கட்ராமன்