sahanamag.com
Science Fiction Story Contest 2021 Entries சிறுகதைகள்

மரணத்தின் சாவி  (அறிவியல் புனைவு சிறுகதை) – ✍ ஹெச்.என்.ஹரிஹரன், சென்னை

அறிவியல் புனைவு  சிறுகதைப் போட்டி கதைகள்

 

2032 

கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ்ஏஞ்சலிஸ் நகரில் தலைமையகத்தைக் கொண்டிருந்தது ஆய்ரா இன்டர்நேஷனல். ஆய்ரா ஒரு இராணுவ ஆயுதம் தயாரிக்கும் பன்னாட்டு கம்பெனி என்று எளிதில் புரிகிற மாதிரி இப்போதைக்கு வைத்துகொள்வோம். 

கம்பெனியை ஆரம்பித்தவர் வியட்நாம் போரில் பங்கெடுத்த தரைப்படை வல்லுனர். இப்போது அவரது பேரன் கம்பெனியில் கோலோச்சிக்கொண்டிருக்கிறார். பல வருடங்களின் மகோன்னத உழைப்பிலும், அர்ப்பணிப்பிலும்தான் ஆய்ரா இன்டர்நேஷனல் இன்று பல மாடிக் கட்டிடமாக உயர்ந்து நிற்கிறது.  

அன்றைக்கு காலையிலிருந்தே அதன் ட்ரோன்காப்டர் இறங்குதளம் எப்போதுமில்லாத பரபரப்புடன் காணப்பட்டது. காரணமில்லாமல் இல்லை.. அந்த நூற்றாண்டின் மகத்தான படைப்பொன்று அறிமுகப்படுத்தப்படுகிறது என்று ரகசியம் கசிந்து கொண்டிருந்தது. 

நூறாண்டுகளுக்கும் மேலாக போர்களில் ஆட்சி செய்து கொண்டிருந்த இயந்திரத் துப்பாக்கிகளுக்கு புதுவடிவமும் அர்த்தமும் கொடுத்து, அதன் உலகளாவிய வர்த்தகத்தை முற்றிலும் மாற்றவிருக்கும் அந்த ரகசியக் கசிவு தான்  பரபரப்பிற்கு காரணம். 

நேரமில்லை, சட்டென்று இருபத்தைந்தாம் மாடியிலிருக்கும் கான்ப்ரன்ஸ் அறைக்கு செல்லலாம். பலநாட்டு இராணுவ தளபதிகள் வந்து தமது இருக்கைகளில்  காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  

கம்பெனியின் பிரதிநிதியான ஒரு சுறுசுறுப்பு இளைஞன் அனைவரையும் வரவேற்றபடி தன்னுடைய பேச்சைத் தொடங்கினான்.  

“1885ம் ஆண்டில் ஆட்டோமாடிக் ரைபிளுக்கான முன்னோடி பிறந்தது. அதைத் தொடர்ந்து 1900ல் செய்-ரிகோட்டி மாடல். ஆனால் 1907ல் முதன்முதலாக உருவாக்கப்பட்டு முதல் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டது தான் முதல் ஆட்டோமாடிக் ரைபிள். அதற்கப்புறம்…” சற்றே இடைநிறுத்தினான்.  

“சாரி சீப்ஸ், உங்களுக்கு பழங்கால பாடம் எடுக்க நான் யார்? டிஷ்யூம்…” விளையாட்டாக விரலை மடக்கித் துப்பாக்கியாக மாற்றித் தன் நெற்றிப் பொட்டில் வைத்துக் கொண்டு சுட்டுக் கொள்வது  போல் பாவனை செய்தான். 

“இதோ… ஆய்ரா இன்டர்நேஷனலின் பெருமைமிக்க  லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு- டிஎஸ்32. இதுவும் இன்னுமொரு ஆடோமாடிக் ரைபிள் என்று சொல்லி ஒதுக்கி வைத்து விடாதீர்கள்… இது ஒரு யுனிவர்சல் ரைபிள். உலகில் இருக்கிற அனைத்துரக புல்லட்டுகளையும் 4 மில்லிமீட்டரிலிருந்து  12 மிமீ வரை இதில் உபயோகப்படுத்த முடியும்அப்போது பழைய ரைபிள்களை என்ன செய்வது?”  மேசையைத் துடைத்தெறிவது போல் கைகளால் சைகை செய்தான்.  

அதுவரை மௌனமாக இருந்த  அவர்களது மேசைகள் ஒளித்திரைகளாக உயிர் பெற்றன. பல்வேறு ரக துப்பாக்கிகள் அவனது சைகையில் தூரப் பறந்து விழுவது போல் கிராபிக்ஸ் தோன்றியது. 

“அவற்றையெல்லாம் தூக்கிப் போடுங்கள். “ 

“எல்லாவற்றிற்கும் மாற்றாக இதோ டிஎஸ்32 உங்களுக்காக..” 

புதியதாக ஒரு துப்பாக்கி வரையோவியமாகத் தோன்றி முப்பரிமாணத்தில் உருவம் கொண்டு சுழன்றது. அதன் தோள்பட்டைப் பகுதியில் ஒரு பை வித்தியாசமாகத் தென்பட்டது. 

சிரித்தான்

“இந்த பையை உங்களது உடல் உறுப்போடு குழப்பிக் கொள்ளாதீர்கள்.இது ஒரு சிலிக்கான் பை அவ்வளவு தான்..  உங்களிடம் இருக்கும் அனைத்து விதமான புல்லட்டுகளையும் இதில் நிரப்ப முடியும். இதன் கூட  இணைத்திருக்கிற நானோ கம்ப்ரெஸ்ஸர் வெளிக் காற்றை உறிஞ்சி சிலிக்கான் பையை நிரப்பும். 

அதன் அழுத்தத்தில் குழல் வழியாக, புல்லட்டுகள் இலக்கை நோக்கி எய்யப்படும். புல்லட்டின் அளவிற்கு ஏற்றமாதிரி ரைபிள் குழல் நொடிப்பொழுதில் சுருங்கி விரியும். அது ஒரு லேட்டஸ்ட் எலாஸ்டி ப்ளாஸ்டிக் ஆனால் உறுதியான மெட்டீரியல்.. அதனால் சுடுவதில் பிரச்சனை இருக்காது. 

சம்திங் மோர் டு திஸ்… மற்ற துப்பாக்கிகளைப் போல் இதில் பயரிங் நிகழாது. ஸோ..  அமைதியாக எதிரிகளை வேட்டையாடலாம். இதன் ரேஞ்ச் இப்போதைக்கு 300 மீட்டர்கள். கூடிய சீக்கிரம் இந்த தூரத்தை அதிகப்படுத்துகிற மாதிரி புதிய மாடல்கள் வரவிருக்கின்றன. இதன் டெமோ இப்போது வீடியோவில் பாருங்கள். உங்களுக்காக அறிமுகப்படுத்துகிறோம் டிஎஸ்32 … மரணத்தின் சாவி..” 

பலத்த கைதட்டல்களுக்கிடையே ஒளித்திரையில் டெமோ காட்சிகள் தோன்றி பின்னர் மங்கி மறைந்தன.  அறையினுள் மெலிதாக வெளிச்சம் பரவியது. 

“கேள்விகள் இப்போது கேட்கலாம்”  

இரு கைகள் உயர்ந்தன… ஒருவர் அனுமதிக்கப்பட “அதென்ன மரணத்தின் சாவி என்று டேக்லைன்? ” என்று கேட்டார். மற்றவரும் அதே கேள்வியைத்தான் யோசித்திருக்க வேண்டும். கையை இறக்கினார். 

இளைஞன் சிரித்தான். 

“அது மிகவும் ரகசியம்.. அதை நான் லெட்டர் ஆப் இன்டெண்ட் தருகிறவர்களுக்கு மட்டுமே சொல்ல முடியும்” 

கூட்டம் சிறு முணுமுணுப்புடன்  முடிந்தது. பல்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு அவர்களது தூக்க நேரம் கடந்திருக்க வேண்டும். கொட்டாவிகளுடன் வெளியேறினர்

பணக்கார நாடுகள் மட்டுமே அவற்றையெல்லாம் வாங்கி சோதித்துப் பார்க்க முடியும் என்று சில நாட்டு இராணுவ தளபதிகள் நினைத்துக் கொண்டனர். 

விருந்து கூடத்தில் கூட்டம்  நிரம்பி வழிந்தது. கூடவே வலம் வந்த தட்டுகளில் மது நிரம்பி வழிந்த கண்ணாடிக் குப்பிகள். வர்த்தக சந்திப்பிற்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறையில் அமெரிக்காவின் தலைமை ராணுவ அதிகாரி ஏற்கனவே அமர்ந்திருந்தார்.  

கம்பெனி அதிகாரி உள்ளே நுழைந்ததில் இருவரும்  கைகுலுக்கிக் கொண்டனர். 

“யெஸ் சீப்… நீங்க நேரா இங்கதான் வருவீங்கன்னு தெரியும்..” 

“இன்ட்ரஸ்டிங் உங்களோட ப்ராடக்ட். நமது நாட்டின் எல்ஓஐ இன்னும் ஐந்து நிமிடங்களில் உங்களிடம் வரும்.. முதலில் ஐந்தாயிரம் ரைபிள்.. அதன்பிறகு இன்னுமொரு ஐந்தாயிரம்.. ஆனால் அதற்கு முன்னால்..” 

“மரணத்தின் சாவி பற்றித் தானே கேட்கிறீர்கள் சீப்.. சொல்கிறேன்..” சுவிட்ச் ஒன்றின் இயக்கத்தில்,  லக்டோக்ரோமிக் கண்ணாடிச் சுவர்கள் அவர்களை மற்றவர்களின் பார்வையிலிருந்து  அப்புறப்படுத்தின. 

@ @ 

2035 

“செய்திகள் நிஜமாகிக் கொண்டு வருகின்றன போலிருக்கிறது” தூதரக அதிகாரி ஸ்டீவ் கவலையை வெளிப்படுத்தியபடி, கைக்கு அடக்கமான ஒளித்திரையில் அல்ஜீரா செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். 

‘அல்ஜீரா விஷன்’ பெர்கிஸ்தானின் மலைப்பிரதேசங்கள் தீவிரவாதிகளின் கைப்பிடிகளில் சிக்கியிருப்பதைக் காட்சிகளாக ஊர்ஜிதப்படுத்திக் கொண்டிருந்தது. 

அந்த நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, பல ஆண்டுகளாக, அமெரிக்கா பல பில்லியன் டாலர்களும் பல்லாயிரக்கணக்கான போர் வீரர்களையும் செலவழித்திருந்தது. 

பெர்கிஸ்தானில் சோதித்துப் பார்ப்பதற்கென்றே கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து வகையான ஆயுதங்களையும் தன்னுடைய நாட்டில் உற்பத்தி செய்து கொண்டிருந்தது. 

கம்பளத்தை உதறி விரிப்பது போல , நூற்றுக்கணக்கான அடி நீள அகலத்திற்கு குண்டு வீசும் உத்தி, இந்நாட்டிற்காகக் கண்டுபிடித்தது தான். செயற்கைக்கோள் வழியாக ஜிபிஎஸ் குறியிட்டு எதிராளியின் போர் நிலைகளை  ஒரு வரைபடக் கட்டத்திற்குள் இருத்தி குண்டு வீசும் முறை. 

அட்வான்ஸ் லென்ஸ் வழியாக, கட்டிடங்களை ஊடுருவி, சுவர்களைத் துளைத்து மனிதர்களைக் கண்டு சுட்டுக் கொல்லும் துப்பாக்கி குண்டுகள்.. அனைத்தும் மனிதர்களின் மரணங்களை வெவ்வேறு விதங்களில் தீர்மானம் செய்பவை. 

ஆனாலும் என்ன? தீவிரவாதம் எங்கே அழிந்தது? தவறு எங்கே நிகழ்கிறது? நூற்றுக்கணக்கான இடங்களில் ஆயிரக்கணக்கில் தீவிரவாதிகளை அழித்தால், அதை விடப் பலமடங்காக அவர்கள் உருவாவது எங்ஙனம்? 

40 வருடங்களுக்கும் மேலாக அன்னிய சக்திகளின் கைகள் ஓங்கவிடாமல் செய்யும் மனஉறுதியா? அவர்களது மதப் பற்றுதலா.. எதுதான் காரணம்? 

அல்ஜீராவின் ட்ரோன் காமிராக்கள் தெருவில் நடப்பவர்களை இன்னமும் அதிநெருக்கத்தில் காட்டிக் கொண்டிருந்தன. உடலின் ஒரே ஒரு அங்குலம் வெளியில் தெரிந்த குற்றத்திற்காக ஒரு பெண் தெருவில் மண்டியிட்டு அமர்ந்திருக்க, ஒரு தீவிரவாதி அவளது தலைக்குள் துப்பாக்கிக் குண்டைச் செலுத்தி கொலை செய்து கொண்டிருந்தான். 

அதை நேரலையாக உலகெங்கும் காட்டுவதைப் பற்றிக் கவலை ஒன்றுமில்லை அவர்களுக்கு. மதச்சட்டங்களை மீற நினைக்கும் மற்றப் பெண்களுக்கு அது ஒரு எச்சரிக்கை. 

அதைப் பார்த்த ஸ்டீவ் தலையில் கையை வைத்தபடி இருக்கையில் அமர்ந்து கொண்டார். ‘இனி இதுபோன்ற சம்பவங்கள் தினமும் நிகழப்போகின்றன’. 

ஸ்மார்ட் கடிகாரம் , அவனது மனைவி மரியா மியாமியிலிருந்து அழைப்பதைக் காட்டியது. போனும் அதுவேதான். இவ்வகை போன் கடிகாரங்கள் ஒலிகளை, முன்கையில் உள்ள ரேடியஸ் எலும்பின் மூலம் கடத்தவல்லவை. 

சுட்டுவிரலை காதுக்குள் வைத்துக் கொண்டால் அதுவே ஸ்பீக்கர் போல வேலை செய்யும். மணிக்கட்டில் இருக்கும் கடிகாரத்தின் மைக்ரோபோன் அவர்களது உரையாடலைக் கவனித்துக் கொள்ளும். 

‘டார்லிங்.. நான் ஒளித்திரையில் பார்ப்பதெல்லாம் உண்மைதானா?.. நீங்கள் பத்திரமாக இருக்கிறீர்களா?’ மரியாவின் குரல் உடைந்துதான் இருந்தது. 

“ஹனி.. நாங்கள் எல்லோரும் பத்திரம்தான்.. இப்போது எங்களை காலி செய்து கொண்டு ஊரைவிட்டுக் கிளம்பும்படி சொல்லிவிட்டார்கள்.. ஸோ… பிரச்சனை இன்னும் முற்றுவதற்கு முன்னரே நான் அங்கு வந்துவிடுவேன்.. ஒரு பெரிய நீண்ட இரவிற்குத் தயாராக இரு..” என்று ஸ்டீவ் சிரித்தார்.  

மெல்லிய அழுகையினூடே  வெட்கத்துடன் அவளும் சிரித்தாள். “நான் காத்திருப்பேன் உனக்காக.” போனில் முத்தச் சத்தத்தை அளித்துவிட்டு அழைப்பை துண்டித்தாள். 

ஸ்டீவ் சட்டென்று செயலில் இறங்கினார். அனைத்து அதிகாரிகளும் பொதுக்கூடத்தில் ஒன்று  கூடினர். இது போன்ற உள்நாட்டுப் போர் அல்லது கலக சமயங்களில் அமெரிக்கத் தூதரகங்கள் செய்யவேண்டியவை குறித்த செயல்முறைத் திட்டங்கள் ஏற்கனவே அவர்கள் அறிவார்கள். 

சாதாரண சூழ்நிலைகளில், ஒரு வெளிநாட்டு தூதரகம் அமைந்திருக்குமிடம் அந்த நாட்டு மண்ணாகக் கருதப்படும். அத்துமீறி நுழைபவர்கள் அவரவர் நாட்டுக்குரிய  சட்டத்திட்டங்களின்படி தண்டிக்கப்படுவார்கள்.. 

ஆனால், சட்டமும் ஒழுங்கும் காற்றில் பறந்து கொண்டிருக்க, யார் யாரைக் கட்டுப்படுத்த.. ? அம்மாதிரியான சூழ்நிலைகளுக்குத்தான் இந்த செயல்முறைகள். கையிலிருக்கும் குறைந்த நேர இடைவெளியில், அலுவலகத்தில் இருக்கும் கணினி ஹார்ட் டிஸ்க்கை அழிக்கவேண்டும்

அனைத்து தரவுகளையும் ஷ்ரெட்டர் இயந்திரங்களுக்குள் திணித்து கீறிப் போடவேண்டும்…. சிசிடிவி பதிவுகளை அழிக்கவேண்டும் என்று நீண்ட பட்டியலாய் உத்தரவுகள்.  

அனைவரும் அழித்தல் பணிகளில் ஈடுபட ஆரம்பித்தனர்.  அரை மணி நேரத்தை ஸ்டீவ் அவர்களுக்கு ஒதுக்கி இருந்தார். 

‘தூதரகத்தில் பணிபுரியும் அனைவரும் அணிந்திருக்கும் உடையுடன் புறப்படத் தயாராக இருக்கவேண்டும். கையில் பாஸ்போர்ட்டும், அமெரிக்க டாலர்களும் மட்டுமே இருக்கலாம்.’ எனும் உத்தரவுடன் விமானப் படையின் தலைமையிடத்திருந்து அனைவருக்கும் செய்தி வந்தடைந்திருந்தது. 

ஸ்டீவிற்கு நன்றாகவே புரிந்துவிட்டது. . போட்டது போட்டபடி அப்படியே கிளம்பிவிடவேண்டும். அவ்வளவுதான். அப்படியென்றால் சூழ்நிலை முற்றிலும் மோசமாக இருக்கிறது என்றர்த்தம். 

ஸ்டீவ் பெர்கிஸ்தான் ஆபரேஷன் கமாண்டரை அழைத்தார். “ இங்கே புது ரக துப்பாக்கிகள் நிறைய இருக்கின்றன. இதுவரை நாம் உபயோகிக்கக்கூட இல்லை. இதெல்லாம் நாம் அவர்களுக்கு விட்டுப் போகிற பரிசுகளா என்ன?’ என்று விரக்தியுடன் கேட்டார். 

“ஸ்டீவ். உங்களுக்கு தெரிந்தவரையில் துப்பாக்கிகள் மட்டுந்தான்.. ஆனால், ஆர்டிலரி டாங்குகள், இராணுவ ட்ரக்குகள், ராக்கெட் லாஞ்சர்கள், அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இன்னும் எவ்வளவோ ஆயுதங்களையும் நாம் இங்கே விட்டுச் செல்கிறோம்.. அதெல்லாம் பார்க்கவில்லை நீங்கள்… நேரமில்லை இப்போது.. கிளம்புங்கள் ..’ என்று அவசரமாகத் துண்டித்தார் இணைப்பை. 

ஸ்டீவ் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். கடந்த 30 வருடங்களாக, வெளிநாட்டு அரசாங்க கட்டுப்பாடுகளினால் ஏதோ ஒருவிதமான ஜனநாயக அரசு ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது. 

இனி, பழையபடி காலஇயந்திரத்தில் பின்னோக்கி பயணித்து, கட்டுப்பாடுகளேதுமின்றி, தீவிரவாதிகளின் பழமையான மடத்தனமான எண்ணங்களுக்கேற்ப இந்நாட்டு மக்கள் அடிபணிந்து போகவேண்டும். 

அதற்கு பயந்துகொண்டுதான் கூட்டம் என்ன செய்வது என்றறியாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.. எங்கே ஓடுவது? யாரிடமிருந்து தப்பி ஓடுவது என்கிற குழப்பம் வேறு. 

தூதரக அதிகாரிகளை அழைத்து செல்லப்போகும் கார்களுக்கு துணையாக வாசலில் கவச வாகனங்கள் தயாராக நின்று கொண்டிருந்தன. 

தூதரகத்தின் அனைத்து கார்களும் குண்டு துளைக்காத அளவு உறுதியுள்ளவைதான். ஆனாலும் ராணுவவீரர்களின் பாதுகாப்பில் வெளியேறுவது இன்னமும் மனோதைரியத்தைக் கூட்டும். 

சொல்லிவைத்தமாதிரி, ஒருமணி நேரத்தில் அனைவரும் கட்டிடத்திலிருந்து வெளியேறினர். தலை கணக்கெடுப்பு நடத்தி எல்லாம் சரியானபின் கார்களில் ஏறிச் செல்ல ஆரம்பித்தனர்.

தூதரகத்தின் உயரமான சுவர்களில் குரங்குகள் போல் ஏறி உள்ளே குதிப்பதற்கு மக்கள் முயற்சித்தபடி இருந்தனர். தூதரகமே காலியானபிறகு சுவரேறி உள்ளே குதிப்பதற்கு என்ன இருக்கிறது..?  

கார்கள் ஒவ்வொன்றாக சீரான வேகத்துடன் வெளியில் எகிறிச் செல்ல ஆரம்பித்தன. கடைசியாக , ஸ்டீவ் தலையைத் திரும்பி கட்டிடத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டார்.  

கண்ணாடிக் கதவுகளைத் தட்டியபடி கூடவே ஓடிவந்த மக்கள், கார்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்தங்கினர். 

ஸ்டீவ் தனக்குள்ளேயே கேள்விகளை எழுப்பியபடி இருந்தார்

“எதற்காக பக்கத்து நாடான ரஷ்யாவை விரட்டியடிக்கவேண்டும்? எங்கிருந்தோ வந்த நமது நாடு எதற்கு பெர்கிஸ்தானைக் காப்பாற்றுகிறேன் என்று இவ்வளவு காலமும், பணமும், உயிர்களும் செலவழித்துவிட்டு இப்போது பாதியில் விட்டுச் செல்லவேண்டும்?” 

ஸ்டீவின் உதவியாளன் மார்க் அதே கேள்வியைத்தான் அவனிடம் கேட்டான்.” பாஸ்.. இத்தகைய தீவிரவாதிகளின் தாக்குதலை நம்மால் சமாளிக்க முடியாதா..? ஏனிப்படி நாம் இந்நாட்டை விட்டு ஓடிப் போகவேண்டும்?” 

ஸ்டீவ் அவனை உற்றுப் பார்த்தார். “என்னுடைய ஊகமும் உன்னுடையதைப் போன்றதே.. இப்போதைக்கு ஊருக்கு போய்ச் சேரும் வழியைப் பார்க்கலாம்.” என்றார். 

உள்வட்டச்சாலையிலிருந்து விலகி, தூதரக கார்கள் இப்போது நெடுஞ்சாலையை அடைந்தன. சாலை சந்திப்பில், கார்களின் மீது ஏறி நின்றுகொண்டிருந்த தீவிரவாதிகள் தம் கைகளில் இருக்கும் இயந்திரத் துப்பாக்கிகளை வானில் சுட்டபடி, ஏதோ கட்டளைகளைச் சொல்லிக்கொண்டிருந்தனர். 

சாலையில் நின்றுகொண்டிருந்த தீவிரவாதிகளில் ஓரிருவர், கவச வாகனங்களைப் பார்த்ததும் துப்பாக்கிகளை நீட்டி நிறுத்தச் செய்தனர். நெஞ்சம் பதைபதைக்க சில நிமிடங்கள் கழிந்தன. 

தீவிரவாதிகள் ஒவ்வொரு காராக நெருங்கி கண்ணாடிகளை இறக்கச் சொல்லி, அமெரிக்கர்களைத் தவிர வேறு யாரேனும் இருக்கிறார்களா என்று சோதனை செய்தனர். யாருமில்லையென்று உறுதியான பின்னர் வண்டிகளை தொடர்ந்து செல்ல அனுமதித்தனர். 

அந்த பரபரப்பான நொடிகளிலும், மார்க் அவர்களது கைகளிலிருந்த துப்பாக்கிகளைக் கவனித்திருந்தான். 

“ஸ்டீவ்.. அவர்கள் கைகளில் இருந்த துப்பாக்கிகளைக் கவனித்தீர்களா. சமீபத்தில் தயாரிக்கப்பட்ட எஸ்டி வகை லேட்டஸ்ட் மாடல்.. இதெப்படி இவர்கள் கைகளுக்கு போயிற்று ?” என்று வினவினான் மார்க். 

உதட்டைப் பிதுக்கினார் ஸ்டீவ்.  

“எனக்கும் புதிராகவே இருக்கிறது.. புதுவகைத் துப்பாக்கிகளை ஏற்றிக் கொண்டு வந்த லாக்ஹீட் கேலக்சி விமானம் சவுதியிலிருந்து புறப்பட்டு பெர்கிஸ்தான் தலைநகர் போகும் வழியில் எப்படி சரியாக மரணப்பாலைவனத்தில் விபத்துக்குள்ளானது? விபத்திற்கு முன்னால் அதன் விமானிகள் தப்பித்து விட்டார்களாம். ஆனால் அவர்களைப் பற்றிய தகவல் நம்மிடம் ஏதுமில்லை.

விமானம் விழுந்த இடம் தீவிரவாதிகளின் கோட்டை. அதனால் விமான கன்டெய்னர்களிலிருந்த துப்பாக்கிகளை எளிதாகக் கொள்ளையடித்துப் போக முடிந்தது அவர்களால்.  இம்மாதிரி துப்பாக்கிகளில் எல்லாவிதமான குண்டுகளையும் நிரப்பிச் சுடலாம் என்பது மட்டுந்தான் எனக்கு தெரியும். 

அவர்களுக்கு எல்லாம் தெரியும் போல. அதனால் அவர்கள் அனைவரும் பழைய துப்பாக்கிகளைத் தூக்கிப் போட்டுவிட்டு இவற்றைத் தூக்கிக் கொண்டு அலைகிறார்கள். எனக்கென்னவோ பெர்கிஸ்தான் மக்கள் பாவம் என்றுதான் தோன்றுகிறது.” 

“ஆமாம் ஸ்டீவ்.. இருபது கன்டெய்னர்கள்.. சுமார் ஐயாயிரம் துப்பாக்கிகள் இருக்கும் என்று சொல்கிறார்கள்.. இன்டெலிஜன்ஸ் தோல்வி .. நமது நாட்டிற்கு எவ்வளவு பெரிய அவமானம்..” மார்க் தலையைக் கவிழ்த்துக் கொண்டான். 

அவனது உடல் குலுங்கியது. சின்னப் பையன் அழுகிறான். உலக அனுபவம் போதாது.. மன்ஹாட்டன் பக்கத்திலிருந்து வந்த பையன்…வாரஇறுதி நாட்களில் , அரை குறை வெளிச்ச அறைகளில் ஆடிக் கொண்டு இளமையைக் கொண்டாட வேண்டிய வயதில் இப்போது உண்மையின் வெளிச்சத்தில் ஞானி ஆகிக் கொண்டிருக்கிறான். 

ஸ்டீவ் சிரித்தார். அவற்றையெல்லாம் கடந்து வந்தவர்தானே.. 

“மார்க் .. ஊருக்குப் போ.. உன்னுடைய கனவுக் கன்னியைக் கண்டுபிடி.. கல்யாணம் செய்துக்கோ.. கூடிய சீக்கிரம் அப்பா ஆகிவிடு” என்றார். 

மார்க் சீரியசாக அவரைப் பார்த்தான். “எதற்கு பாஸ்? ஒவ்வொரு நாடாகச் சென்று நான் செய்யும் இதே வேலையை என் மகனும்  செய்ய வேண்டுமா?” 

ஸ்டீவ் பதிலொன்றும் பேசாமல் வெளியில் நோக்கினார். கார்கள் இப்போது விமான நிலையத்தை அடைந்திருந்தன. பெர்கிஸ்தான் நாட்டு மக்கள் சிலர் எப்படியாவது விமானநிலையத்திற்குள் புகுந்து, விமானத்தில் ஏறி எங்கேயாவது தப்பிப் போகவேண்டும் எனும் வெறியில் குழுமியிருந்தனர். 

அவர்களை உள்ளே வரவிடாமல் அமெரிக்க இராணுவ வீரர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிக் கொண்டிருந்தனர். நிலைமை அத்துமீறிப் போனால் அவர்களை சுட்டு விரட்டவேண்டியது என்று தலைமை ஏற்கனவே சொல்லிவிட்டது.  

ஸ்டீவ், மார்க் மற்றெல்லோரும் நேரடியாக விமான ஓடுதளத்தில் போய் இறங்கினர். பத்து , பதினைந்து ராட்சத இராணுவ விமானங்கள், லாக்ஹீட் சி-25 காலக்ஸி விமானங்கள் கிளம்புவதற்கு தயாராக இருந்தன. 

அவற்றினால் டாங்குகள், ஆயுத ஜீப்புகள், ஹெலிகாப்டர்களை சுலபமாக ஏற்றிச் செல்ல முடியும். ஆனால் அவற்றில் இப்போது மனிதர்கள் மட்டுமே ஏறிச் செல்லப் போகின்றனர். 

அனைவரும் ஏறியதை உறுதி செய்தபின்னர், விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வானில் ஏறிச் செல்ல ஆரம்பித்தன. 

‘அமெரிக்கர்கள் அனைவரும் பத்திரமாக பெர்கிஸ்தானிலிருந்து புறப்பட்டுவிட்டனர்’ என்கிற செய்தி அனைத்து அமெரிக்க சானல்களிலும் கடைசி வரியாக கீழே ஓடிக்கொண்டிருந்தது. 

பெரிய அளவில் இல்லையென்றாலும், இங்கிலாந்து பிரான்ஸ் படை வீரர்களும் புறப்பட்டுவிட்டனர் என்ற செய்தியும்  உறுதிப்பட்டவுடன்  தீவிரவாதிகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான். 

பெர்கிஸ்தான் நாட்டு பிரதமர் ஏற்கெனவே நாட்டை விட்டு ஓடிப்போய்விட்டார். சிரசு இல்லாத அரசு. தீவிரவாதிகள் கண்ணில் பட்ட வண்டிகளையெல்லாம் எடுத்துக் கொண்டு வெற்றி ஊர்வலம் வர ஆரம்பித்தனர்.

உடலை மூடிக்கொண்டிருந்த பெண்கள் தாம் இழந்த சுதந்திரத்தை எண்ணி அவர்களை நோக்கி முறைத்துக் கொண்டிருந்தது தீவிரவாதிகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதற்கெல்லாம் அவர்கள் கவலைப்படப்போவதுமில்லை.  

மெல்லிய ஒலிகளின் பின்னணியில்  வானில் சுட்டுக்கொண்டு, அவர்களது இறை தூதரைத் துதித்தபடி கொண்டாட்ட ஊர்வலம் தொடர்ந்தது. அவர்களது கைகளில் இருந்த டிஎஸ்32 துப்பாக்கிகளில் அனைத்து வகை தோட்டாக்களும் இட்டு நிரப்பமுடியும் என்பதில் தனி உற்சாகம் வேறு. 

## 

பெர்கிஸ்தான் நாட்டுப் பறவைகளில் இரண்டு பிரசித்தி பெற்றவை. ஒன்று கோல்டன் ஈகிள் மற்றது வெல்வெட் ஸ்காட்டர். இறக்கைகளை விரித்து பறந்தால் இரண்டடி நீளத்திற்கு குறையாமல் இருக்கும். 

அமெரிக்க விஞ்ஞானிகள் அப்பறவைகளின் வடிவில் சிறுவகை விமானங்களை வடிவமைத்திருந்தனர். சூரிய ஒளியை உறிஞ்சிக்கொண்டு அதன் சக்தியில் சத்தமின்றி தலைக்கு மேல் பறப்பவை. பெரும்பாலும், உயிருள்ள பறவைக்கூட்டங்களின் ஊடே சேர்ந்து பறப்பதினால் அவற்றைக் கண்டுபிடிப்பது சிரமம். 

அவற்றின் கால்களில் சக்திவாய்ந்த காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. பூமியில் நடக்கும் மனிதர்களையும், அவர்களது கைகளில் இருக்கும் ஆயுதங்களையும் அவைகள் எளிதில் அடையாளம் கண்டு கட்டுப்பாட்டு அறைக்கு உடனுக்குடன் செய்தி அனுப்பிவிடும்.  

முக்கியமாக, தீவிரவாதிகளின் கைகளில் தவழும் புதுவகைத் துப்பாக்கிகளை அந்த உலோகப்பறவைகள் கணக்கெடுத்துக் கொண்டிருந்தன. 

பெர்கிஸ்தானிலிருந்து ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் நெவாடா பாலைவனத்தின் நடுவில் க்ரீச் விமானப்படைத் தளம். உலகம் முழுவதும் வானில் பறக்கும் அமெரிக்க உலோகப்பறவைகளை  இருபத்தி நான்கு மணி நேரமும் கண்காணிப்பு செய்வதும் இங்கிருந்து தான்.  

கண்ட்ரோல் ரூமின் ஒளித்திரையில் பெர்கிஸ்தான் நாட்டு வரைபடத்தில் மீது  குறுக்கும் நெடுக்குமாக நீல வண்ணத்தில் ஊசிபோன்ற வடிவங்கள் தோன்ற ஆரம்பித்தன. 

புதுவகைத் துப்பாக்கிகள் காணப்படும் இடங்களை அவை குறித்தன.  உடனே அவற்றைக் கவனித்த நோக்கர்கள், ‘திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்யவேண்டும்?’ என்று மேலிடத்திற்கு அவசரச் செய்தி அனுப்பி அவர்களின் பதிலுக்காக காத்திருந்தனர். 

@@ 

2032 

“மரணத்தின் சாவி பற்றித் தானே கேட்கிறீர்கள் சீப்.. சொல்கிறேன்..” சுவிட்ச் ஒன்றின் இயக்கத்தில், எலக்டோக்ரோமிக் கண்ணாடிச் சுவர்கள் அவர்களை மற்றவர்களின் பார்வையிலிருந்து  அப்புறப்படுத்தின. 

ஆய்ரா இன்டர்நேஷனல் அதிகாரி அவரது மேஜையிலிருந்த பிரத்யேகமான ஒளித்திரையை இயக்கினார். 

“சீப்… இந்த புதிய தலைமுறை துப்பாக்கிகளின் அம்சங்களை ஏற்கனவே சொல்லிவிட்டோம்.. நீங்கள் என்டிஏ ஒப்பந்தத்தில் டிஜிட்டல் கையெழுத்து இட்டால் இதன் யுஎஸ்பி ரகசியத்தைச் சொல்லுவது எங்களது கம்பெனிக்கு எளிதாகும்.” 

அமெரிக்க ராணுவ அதிகாரி தனது ஐரிஸ் ஸ்கேன்களை அனுமதித்தார். 

“ஓகே.. இனி எமது ரகசியத்தைச் சொல்வதற்கு எவ்வித தடையுமில்லை. துப்பாக்கியின் சிலிகான் பையில் உள்புற லைனிங்குகளில் செம்டெக்ஸ் எனும் ப்ளாஸ்டிக் வெடிமருந்துகளைவிட சக்தியுள்ளவை இருக்கின்றன. 

குறிப்பிட்ட அலைவரிசையில் ரேடியோ சிக்னல்கள் அவற்றைத் தொந்தரவு செய்யாதவரை அவற்றினால் ஒன்றும் ஆகாது. அனால் வானத்திலிருந்து சாட்டிலைட் அல்லது ட்ரோன்கள் மூலமாக ட்ராக் செய்யப்படும் அவை தூண்டப்பட்டால் உடனே துப்பாக்கிகள் வெடிக்கும்.. நாம் எப்படி இறக்கிறோம் என்று அறிவதற்கு முன்னாலேயே   துப்பாக்கிகளைக் கையில் வைத்திருப்பவர்கள் வெடித்து சிதறிப் போவார்கள்..” 

அவர் சொல்லச் சொல்ல, பின்னணியில்  கிராபிக்ஸ் இயங்கின.  

இராணுவ அதிகாரி யோசனையுடன் சிரித்தார். “அவரவர்களின் மரணத்திற்கான சாவியை அவர்களிடமே கொடுத்து வைக்கிறோம்.. இல்லையா?  அப்படியென்றால் இந்த மாதிரி துப்பாக்கிகளை நாம் பயன்படுத்துவதற்கு பதிலாக எதிரிகளின் கைகளில் போய்ச் சேருகிறமாதிரி  நாம் செய்தாலே போதும். அவர்களை அழித்துவிடலாம் .. அப்படித்தானே..?” 

“யாரை அழிப்பது என்று முடிவே செய்துவிட்டீர்கள் போலிருக்கிறதே..?” என்றார் ஆய்ரா இன்டர்நேஷனல் கம்பெனியின்  அதிகாரி. 

பெர்கிஸ்தானின் தீவிரவாதிகளை எப்படி விட்டுப் பிடிப்பது என்கிற நெடுங்கால வினாவிற்கு விடை கிடைத்துவிட்டதாகவே அமெரிக்க ராணுவ அதிகாரி உணர்ந்தார். சரியாகத் திட்டமிட்டால் இன்னும் ஓரிரு வருடங்களில்,  அதைச் சாதிக்கமுடியும் என்று தோன்றியது. 

அமெரிக்க காங்கிரஸ், செனட் உறுப்பினர்களிடம் தமது திட்டத்தை விளக்கி எப்படி அனுமதி வாங்குவது என்கிற யோசனையுடன் அறைக் கதவைத் திறந்து வெளியில் வந்தார். 

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!