in

பதினைந்தாயிரம் ரூபாய் கே.என்.சுவாமிநாதன், சென்னை

பதினைந்தாயிரம் ரூபாய்

ஏப்ரல் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

த்தாவது முறையாக சுருக்குப் பையில் சேர்த்து வைத்திருந்த பணத்தை எண்ணினாள் பர்வதம்மாள். பதினைந்தாயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தது. இந்த முறை கண்டிப்பாக வடநாட்டு கோவில் யாத்திரை போகலாம் என்று மனம் மகிழ்ந்தாள்.

மருமகள் விமலா, கணவன் திவாகரிடம் பேசிக் கொண்டிருந்தது கேட்டது.

“ஏங்க… இந்த மாதமானும் வாஷிங் மெஷின் வாங்கலாமா? உட்கார்ந்து துணி துவைச்சு, எழுந்து அலசிப் பிழிந்து, உணர்த்தறதுக்குள்ள உசிர் போகுது. துணி எத்தனை துவைக்க வேண்டியிருக்குனு உங்களுக்குத் தெரியுமா? தினமும் குழந்தைங்க யுனிபார்ம் வேறே துவைக்கணும். என் கஷ்டம் எங்கே உங்களுக்குப் புரியுது. நீங்களும் வாங்கலாம் வாங்கலாம்னு நாள் கடத்திட்டு இருக்கீங்க” அலுத்துக் கொண்டாள் விமலா.

“கொஞ்சம் பொறு விமலா. நல்ல வாஷிங் மெஷின் வாங்க குறைஞ்சது பதினைந்தாயிரம் ரூபாயாவது வேணும். தவணை முறையில வாங்கினாக் கூட மாதாமாதம் வட்டியோட கட்டணும். நம்ம மாதச் செலவில துண்டு விழும். இந்த வருடம் போனஸ் பணத்தில கண்டிப்பா வாங்கிடலாம்”

“இதைத் தான் இரண்டு வருஷமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க. வருஷமும் வருது, போனஸும் வருது, வீட்டுக்கு வாஷிங் மெஷின் மட்டும் வரதில்லை. ஏங்க இப்படி பண்ணினால் என்ன? அம்மாகிட்ட பணம் இருந்தா வாங்கிக்கிட்டா என்ன? மாதாமாதம் கொடுத்திடலாம், இல்லை போனஸ் பணம் வந்ததும் கொடுத்திடலாம். என்ன சொல்றீங்க… கேட்டுப் பார்க்கீறீங்களா?”

‘நம்ம மருமகப் பொண்ணு கெட்டிக்காரி. நாம பணம் சேர்த்து வைச்சிருக்கிறதை மோப்பம் பிடிச்சுட்டாளே… திவாகர் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டப் போறானா? என்ன சொல்றான்னு கேட்போம்’ என்று நினைத்துக் கொண்டாள் பர்வதம்மாள்.

“நீ சொல்றது உனக்கே சரின்னு படுதா விமலா? எந்த வீட்லாயானும் விசேஷத்திற்கு சமைக்க கூப்பிட்டா, அடுப்படியில அந்த சூட்டுல உட்கார்ந்து சமைச்சு கொடுத்து அவங்க கொடுக்கிற பணத்தை சேமித்து வைக்கிறாங்க. அப்படியும் மாதக் கடைசியில நமக்கு பணம் முடைன்னா நாம கேட்காமலே அவங்க கறிகாய், பழம் வாங்கிப் போடறாங்க. பண்டிகை வந்தா எல்லாருக்கும் துணி வாங்கிக் கொடுக்கிறாங்க”

“நீங்க சொல்றது புரியுதுங்க, அவசரச் செலவுன்னு தான சொன்னேன்”

“உனக்கே தெரியும், அவங்க எதுக்கு சேமிக்கிறாங்கனு. வடநாட்டு கோவில் யாத்திரை போகணும்னு அவங்களுக்கு ஆசை. நான் கூட்டிக்கிட்டுப் போகணும், அப்படி இல்லைன்னா ஏற்பாடு பண்ணனும். நம்மளை கஷ்டப்படுத்தக் கூடாதுனு அவங்க சேர்த்து வைக்கிறாங்க. அந்தப் பணத்தைக் கேட்கிறது தப்பு இல்லையா, கொஞ்சம் பொறுமையா இரு” என்றான் திவாகர்.

“என்னமோ போங்க, என்னோட கஷ்டத்தை உங்ககிட்ட சொன்னேன்” என்று முணுமுணுத்தபடியே சென்றாள் விமலா.

திவாகர் பர்வதம்மாளின் ஒரே மகன். சுமாரான படிப்பு, ஒரு வாகன தொழிற்சாலையில் வண்டியின் பாகங்கள் பூட்டும் வேலையில் இருக்கிறான். இரண்டு குழந்தைகள், ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடன் வாங்காமல் குடும்ப வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. மருமகள் விமலா பத்தாவது வரை படித்தவள். வீட்டு வேலை எல்லாம் அவள் தான். அவளுக்கு வேலை அதிகம் தான். மருமகளின் கஷ்டம் பர்வதம்மாளுக்குப் புரியாமல் இல்லை.

பர்வதம்மாள் நன்றாக சமையல் செய்வாள். பண்டிகை நாட்களில் இனிப்பு, காரம் ஆகியவை செய்து அக்கம்பக்கத்தில் விற்பாள். வீட்டு விசேஷங்களுக்கு சமைத்துக் கொடுத்துச் சம்பாதிப்பாள். அவசரத் தேவை வரும் போது வீட்டுச் செலவுக்கும் உதவுவாள்.

அவர்கள் வசிக்கும் பகுதியில் சுசீலா என்றொரு பெண்மணி வடநாட்டு கோவில் யாத்திரை நடத்தி வந்தாள். ரயில் பயணம், தங்கும் வசதி, சாப்பாட்டுச் செலவு எல்லாம் சேர்த்து யாத்திரைக்கான கட்டணம் பதினைந்தாயிரம் ரூபாய்.

காசியும் அதைச் சுற்றியுள்ள கோவில்களுக்கும் கூட்டிச் செல்வாள். இந்த யாத்திரைக்குச் செல்ல வேண்டும் என்று பர்வதம்மாளுக்கு ஆசை. குடும்பத்தின் நிதிநிலை அறிந்த அவள் இந்த யாத்திரைக்கு என்று சிறிது சிறிதாகப் பணம் சேர்த்து வருகிறாள்.

மதியம் பன்னிரெண்டு மணிக்கு கறிகாய் விற்கும் அஞ்சலை கறிகாயுடன் வந்தாள். தொலைவிலிருந்து வரும் அவள், கிராமத்திலிருந்து அப்போது பறித்த கறிகாய் கொண்டு வருவாள்.

விமலாவிற்கு இளகிய மனசு. கறிகாய் வாங்கினாலும், வாங்காவிட்டாலும், அஞ்சலை வந்தவுடன் அவளுக்கு காபி அல்லது மோர் கண்டிப்பாகக் கொடுப்பாள். களைத்திருப்பது போலத் தோன்றினால், சாப்பிட்டு விட்டுப் போகும்படி வற்புறுத்துவாள். அஞ்சலையும் கேட்காமலேயே விமலாவிற்கு உதவி செய்வாள்.

“என்ன அஞ்சலை லேட் இன்னிக்கு?” என்று கேட்டாள் விமலா.

“இன்னிக்கு ப்ளஸ்டூ மார்க் வந்ததும்மா. கலா பள்ளிக்கூடத்துக்குப் போய்விட்டு வந்தது, அதான் நேரமாயிடுச்சு”

“கலா நல்லா படிக்கிற பொண்ணு இல்லையா. என்ன மார்க் வாங்கியிருக்கா?” ஆவலோடு கேட்டாள் விமலா.

“கலா அவங்க பள்ளிக்கூடத்தில முதல் மார்க் வாங்கியிருக்காங்க அம்மா” என்றாள் அஞ்சலை.

“ரொம்ப சந்தோஷமான செய்தி அஞ்சலை. உன்னோட குரல்ல சுரத்தே இல்லை. என்ன ஆச்சு? எதைப் பற்றி கவலை உனக்கு”

“கலா மேல படிக்கணும்னு பிடிவாதம் பிடிக்கிறா. எங்க வீட்டுக்குப் பக்கத்தில ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட் இருக்கு. கலாவுக்கு பில் போடற வேலை தரேன்னு சொல்றாங்க, சம்பளமும் நல்லா இருக்கு. கலா இந்த வேலையில சேர்ந்தால் எங்க கஷ்டம் கொஞ்சம் குறையும். அவளோட கல்யாணத்திற்கும் பணம் சேர்க்க ஆரம்பிக்கலாம். கலாவுக்கு வேலைக்குப் போறதில விருப்பம் இல்லை. காலேஜ்ல படிச்சிட்டு டீச்சரா வேலைக்குப் போகணும்னு சொல்லிக்கிட்டு இருக்கா”

“கலா புத்திசாலிப் பொண்ணு, நல்ல மார்க் வாங்கியிருக்கா. சுலபமா காலேஜ்ல சீட் கிடைத்திடும். மூணு வருஷம் கஷ்டப்பட்டா கலாவுக்கு ஒரு நல்ல எதிர்காலம் கிடைக்கும் இல்லையா. ஏதானும் காலேஜ்க்கு அப்ளிகேஷன் போட்டிருக்காளா?” என்று கேட்டாள் விமலா.

“அந்த வேலை கூட எங்களுக்கு இல்லை அம்மா. கலா படிக்கிற பள்ளிக்கூடம் ஒரு காலேஜ் நடத்துறாங்க. பள்ளிக்கூடத்தில முதல் ஐந்து ரேங்க் வாங்கிற மாணவர்களுக்கு சீட் கொடுக்கிறாங்க. சம்பளம் கட்ட வேண்டாம். ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கணும். ஹாஸ்டல் செலவும் காலேஜ் பார்த்துக்கும்”

“இந்த மாதிரிப் பெண்ணைப் பெத்ததுக்கு கொடுத்து வைச்சிருக்கணும். உனக்கு படிக்க வைக்கிற செலவு, சாப்பாட்டுச் செலவுன்னு எதுவும் இல்லை. அப்படின்னா சரி சொல்ல வேண்டியது தானே”

“அதுல ஒரு பிரச்சனை  இருக்கு அம்மா. காலேஜிலே சேரும் போது பதினைந்தாயிரம் கட்டச் சொல்றாங்க. மூன்று வருஷம் படிப்பு முடிந்து வரும் போது அந்தப் பணத்தைத் திரும்பித் தருவாங்க. நடுவுல படிப்பை நிறுத்திட்டா பணம் திரும்ப கிடைக்காது. பணம் கட்டாமப் படிக்கிறவங்க சில பேர் பாதியில படிப்பை நிறுத்தி விட்டுப் போயிடறாங்களாம். அதனால தான் முன்பணம் கட்டணும்னு சொல்றாங்க”

“உன்னோட நிலைமை எனக்குப் புரியுது அஞ்சலை. பணத்துக்கு என்ன பண்ணப் போறே?”

“அதாம்மா புரியலை. பொண்ணோட ஆசை நியாயமாத் தெரியுது. எங்க சாதி சனங்களில இவ தான் காலேஜ் படிச்ச முதல் பெண்ணா இருப்பா. வீட்டு வேலை செய்யறவளாக இருந்தா வேலை செய்யற வீட்டுல முன்பணமா கொடுங்க, மாதச் சம்பளத்தில கழிச்சிக்கிடுங்க அப்படின்னு கேட்கலாம். ஆனா, கறிகாய் விற்கிற என்னை நம்பி யாருமா கடன் கொடுப்பாங்க. அவரு வாடகை ஆட்டோ ஓட்டுறாரு. வரப் பணம் எல்லாம் வீட்டுச் செலவுக்கே போயிடுது. பணமோ, நகையோ சேர்த்து வைக்கலை. சேட் கடையில அடகு வைச்சு பணம் வாங்கறதுக்குக் கூட தங்க நகை இல்லை.

வீட்டுக்காரரோட முதலாளிகிட்ட ஆயிரமோ, இரண்டாயிரமோ கேட்கலாம். பெரிய தொகைன்னா அவர்கிட்டேயும் கிடைக்காது. கலா மேலே படிச்சா எங்க குடும்பம் முன்னுக்கு வரும்னு நல்லா புரியுதும்மா. பணம் கிடைக்கலைன்னா கலாவை சூப்பர் மார்க்கெட் வேலைக்குத் தான் அனுப்பணும். அவ ரொம்பவே மனசு உடைஞ்சு போயிடுவா. ஏழையாப் பிறந்தா எதுக்கும் ஆசைப்படக் கூடாது அம்மா” என்று மனம் நொந்து பேசினாள் அஞ்சலை.

அஞ்சலையும், விமலாவும் பேசுவதை ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டிருந்தாள் பர்வதம்மாள். நன்கு யோசித்த அவள் மனதில் தெளிவு பிறந்தது.

“என்ன அஞ்சலை, எப்படி இருக்கே? கலா பள்ளிக்கூடத்தில் முதல் மாணவி அப்படின்னு கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு” சொல்லிக் கொண்டே வந்தாள் பர்வதம்மாள்.

“அஞ்சலை எனக்கு ஒரு விஷயம் சொல்லு. பதினைந்தாயிரம் ரூபாய் கிடைச்சா, கலாவை கண்டிப்பா காலேஜ்ல படிக்க வைப்ப இல்லையா. கல்யாணம் பண்ணனும்னு சொல்லி படிப்பை பாதியில நிறுத்த மாட்டியே?”

“சத்தியமா படிக்க வைப்பேன் அம்மா. என்னோட பெண்ணுக்கு நல்ல எதிர்காலம் வரும் போது வேண்டாம்னு சொல்வேனா. வழி எப்படின்னு தான் தெரியலை”

“கொஞ்சம் இரு அஞ்சலை” என்று உள்ளே சென்ற பர்வதம்மாள் கையில் தடித்த கவருடன் வந்தாள்.

“அஞ்சலை, இந்த கவரில் பதினைந்தாயிரம் ரூபாய் இருக்கு. நாளைக்கே பணத்தைக் கட்டி கலாவை காலேஜில சேர்த்திடு” என்றாள் பர்வதம்மாள்.

திகைப்புடன் பர்வதம்மாளைப் பார்த்தனர் விமலாவும், அஞ்சலையும். கண்களில் நீர் மல்க பணத்தை வாங்கிக் கொண்ட அஞ்சலை சொன்னாள்.

“உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு அம்மா. கையில பணம் நிறைய வைச்சிருக்கிற பணக்காரங்க கூட கேட்டவுடனே கொடுக்க மாட்டாங்க. அலைய விடுவாங்க. ஆனால், அடுப்படியில வெந்து, கோவிலுக்குப் போகணும்னு சேர்த்து வைச்சிருக்கிற பணத்தை, நீ எப்ப தருவே, எப்படி தருவேனு ஒரு வார்த்தை கேட்காம கொடுத்துருக்கீங்க. நான் கொஞ்சம் கொஞ்சமா உங்கப் பணத்தை கண்டிப்பா திருப்பித் தருவேன் அம்மா. நான் வரேம்மா. இந்த நல்ல செய்தியை கலாவுக்கும், அவருக்கும் சொல்லணும்” என்று சொல்லி சென்றாள் அஞ்சலை.

 “விமலா உன்னோட பணத்தேவை எனக்குத் தெரியும். உன் தேவை தெரிந்தும் கலாவோட படிப்புக்குக் கொடுத்ததில உனக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே?” மருமகள் விமலாவிடம் கேட்டாள் பர்வதம்மாள்

“எனக்கு வருத்தம் இல்லைம்மா. ஆனா வடநாட்டு யாத்திரை போகணுங்கறது உங்களோட ரொம்ப நாள் ஆசை.  நிச்சயமா இந்த வருஷம் நீங்க போயிருக்க முடியும். அப்படியிருந்தும் கலா படிப்புக்குப் பணம் கொடுக்கணும்னு நீங்க நினைச்சுது ரொம்ப பெரிய விஷயம்மா”

“விமலா, கோவில் யாத்திரை போயிட்டு வந்தா, அதனால வர சந்தோஷம் எனக்கு மட்டும் தான். ஆனால் அதே பணத்தை படிப்புக்கு கொடுக்கும் போது அது சமுதாயத்தில பலருக்கும் உதவும் இல்லையா. கலா அவங்க சாதில கல்லூரிக்குப் போகப் போற முதல் பெண். அந்த அக்காவை மாதிரி நானும் படிக்கணும்னு அவளைப் பார்த்து மீதி குழந்தைகளுக்கும் படிப்பில ஆசை வரும். படிப்பவர்கள் அதிகமாக, அது நம்ம நாட்டிற்கு நல்லது இல்லையா

கலா படித்து வேலைக்குப் போய் பணம் நிறைய சம்பாதிக்கணும்னு சொல்லலை. படித்து டீச்சர் வேலைக்குப் போகணும்னு ஆசைப்படறா. இதிலே மற்றவர்களோட அறிவை வளர்க்கணும் அப்படிங்கற சேவை மனப்பான்மை தெரியுது. இந்த மாதிரிப் பெண்கள் படிச்சுட்டு வந்தா நம்ம நாடு இன்னும் வேகமா முன்னேறும். பத்தாவது வரை படிச்ச உன்னை பண வசதி இல்லாததனால், மேலே படிக்க வைக்க முடியலைன்னு உங்க அம்மா சொல்லியிருக்காங்க. அந்த நிலைமை கலாவுக்கு வர வேண்டாம்னு தான் பணம் கொடுத்தேன்”

“இந்த வருஷம் யாத்திரைக்குப் போக முடியாதுங்கிறதில உங்களுக்கு வருத்தம் இல்லையா அம்மா?”

“இல்லைம்மா, நான் சேர்த்து வைத்த பணம் ஒரு ஏழையோட படிப்பு செலவுக்குப் பயன்படப் போகுதுங்கிறதுல மகிழ்ச்சி. நான் எப்போ கோவிலுக்கு வரணும்னு கடவுள் நினைக்கிறாரோ, அப்போ கண்டிப்பா போவேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு”

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சுசீலா வந்தாள்.

“பர்வதம்மா, நீங்க அடுத்த மாதம் எங்க கூட வடநாட்டு யாத்திரைக்கு வர முடியுமா? அங்க எங்களோட சமையல்காரங்க இருக்காங்க, இருந்தாலும் அவங்களுக்கு நம்ம ஊரிலேந்து வரவங்களுக்கு என்ன பிடிக்கும், எப்படி சமைக்கணும் அப்படின்னு சொல்லி கொடுத்தா நல்லா இருக்கும். நீங்க எங்க கூட எல்லா கோவிலுக்கும் வரலாம். உங்களுக்கு ஒரு செலவும் இல்லை. எல்லா செலவும் நான் பார்த்துக்கிறேன்” என்றாள் சுசீலா.   

பெண்கள் கல்வியறிவு பெற்றால் நாடு செழிக்கும் – மைக்கேல் ஓபாமா

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மரணத்தின் சாவி  (அறிவியல் புனைவு சிறுகதை) – ✍ ஹெச்.என்.ஹரிஹரன், சென்னை

    கண்ணி (அறிவியல் புனைவு சிறுகதை) – ✍ ந.சிவநேசன்